ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுங்கள்
“அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய் என்றான்.”—அப்போஸ்தலர் 26:28.
1, 2. ஆளுநர் பெஸ்துவுக்கும் இரண்டாம் ஏரோது அகிரிப்பா ராஜாவுக்கும் முன்பாக அப்போஸ்தலன் பவுல் ஏன் அழைத்துவரப்பட்டார்?
செசரியாவிலிருந்த ரோம ஆளுநர் பொர்க்கியு பெஸ்துவைக் காண பொ.ச. 58-ல், இரண்டாம் ஏரோது அகிரிப்பா ராஜாவும் அவருடைய தங்கை பெர்னீக்கேயாளும் வந்தார்கள். ஆளுநர் பெஸ்துவின் அழைப்பை ஏற்று, அவர்கள் “மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து சேனாபதிகளோடும் பட்டணத்துப் பிரதான மனுஷரோடுங்கூட நியாய ஸ்தலத்தில் பிரவேசித்தார்கள்.” பெஸ்துவின் கட்டளைப்படி கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் அவர்கள் முன் அழைத்துவரப்பட்டார். இயேசு கிறிஸ்துவின் சீஷராகிய இந்த பவுல், ஆளுநர் பெஸ்துவினுடைய நியாய சங்கத்துக்கு ஏன் அழைத்துவரப்பட்டார்?—அப்போஸ்தலர் 25:13-23.
2 பெஸ்து தன் விருந்தினரிடம் சொன்ன விஷயம் அந்தக் கேள்விக்கான பதிலை அளிக்கிறது. அவர் சொன்னதாவது: “அகிரிப்பா ராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக் குறித்து யூத ஜனங்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள். இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம் பண்ணினேன். இவனைக் குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல் பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே, இவனை விசாரித்துக் கேட்ட பின்பு எழுதத்தக்க விசேஷம் ஏதாகிலும் எனக்கு விளங்கும்படி, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டு வந்தேன்.”—அப்போஸ்தலர் 25:24-27.
3. மதத் தலைவர்கள் பவுலுக்கு எதிராக ஏன் குற்றஞ்சாட்டினார்கள்?
3 பவுல் தேச துரோகத்தை தூண்டிவிட்டதாக பொய் குற்றம் சாட்டப்பட்டிருந்தார் என்பதை பெஸ்துவின் வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன; இது மரண தண்டனைக்கு ஏதுவான குற்றமாகும். (அப்போஸ்தலர் 25:11) உண்மையில் பவுல் குற்றமற்றவர். எருசலேமிலிருந்த மதத் தலைவர்கள் பொறாமையின் காரணமாகவே அந்தக் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். ராஜ்ய அறிவிப்பாளராக பவுல் செய்து வந்த வேலையை அவர்கள் எதிர்த்தார்கள், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற மற்றவர்களுக்கு அவர் உதவியதால் கோபத்தில் கொதித்தெழுந்தார்கள். எருசலேமிலிருந்து ரோம இராணுவத்தின் தலைமையகமாக இருந்த துறைமுகப் பட்டணமான செசரியாவுக்கு பலத்த காவலுடன் பவுல் அழைத்து வரப்பட்டார்; அங்கு அவர் இராயனுக்கு அபயமிட்டார். அங்கிருந்து அவர் ரோமுக்கு அழைத்துச் செல்லப்படவிருந்தார்.
4. என்ன ஆச்சரியமான குறிப்பை அகிரிப்பா ராஜா சொன்னார்?
4 ரோம சாம்ராஜ்யத்தின் முக்கிய பகுதியின் அதிபதி உட்பட பலர் முன்பு ஆளுநர் அரண்மனையில் பவுல் இருப்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள். அகிரிப்பா ராஜா பவுலிடம் திரும்பி, “நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது” என்றார். பவுல் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் ஓர் அசாதாரண காரியம் நிகழ்கிறது. பவுல் சொல்லும் விஷயங்கள் அந்த ராஜாவை பாதிக்க ஆரம்பிக்கின்றன. சொல்லப்போனால், “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய்” என அகிரிப்பா ராஜா சொல்கிறார்.—அப்போஸ்தலர் 26:1-28.
5. அகிரிப்பாவிடம் பவுல் பேசிய வார்த்தைகள் ஏன் அந்தளவுக்குத் திறம்பட்டவையாக இருந்தன?
5 இதை சற்று யோசித்துப் பாருங்கள்! திறம்பட்ட விதத்தில் பவுல் விவாதித்ததைக் கேட்டு, கடவுளுடைய வார்த்தையின் ஊடுருவும் வல்லமையால் ஓர் அதிபதியே செயல்பட தூண்டப்பட்டார். (எபிரெயர் 4:12) பவுலின் விவாதத்தில் திறம்பட்டதாக இருந்த அம்சங்கள் யாவை? சீஷராக்கும் வேலையில் நமக்கு உதவும் எதை பவுலிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்? அவருடைய விவாத முறையை ஆராயும்போது இரண்டு முக்கிய அம்சங்கள் சிறப்பித்துக் காட்டப்பட்டிருப்பது தெரிகிறது: (1) ஆதாரங்காட்டி இணங்க வைக்கும் விதத்தில் பவுல் பிரசங்கித்தார். (2) கைதேர்ந்த வேலையாள் தன் கருவியை திறம்பட பயன்படுத்துவதைப் போல கடவுளுடைய வார்த்தையிலிருந்து பெற்ற அறிவை அவர் திறம்பட பயன்படுத்தினார்.
ஆதாரங்காட்டி இணங்க வைக்கும் கலையைக் கையாளுங்கள்
6, 7. (அ) பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளபடி, ‘ஆதாரங்காட்டி இணங்க வைப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) பைபிள் போதனையை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள உதவுவதில் ஆதாரங்காட்டி இணங்க வைப்பது என்ன பங்கை வகிக்கிறது?
6 அப்போஸ்தலர் நடபடிகளில், ஆதாரங்காட்டி இணங்க வைப்பது என்பதற்குரிய கிரேக்க சொற்றொடர் பவுலுடைய பிரசங்கம் சம்பந்தமாக அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. சீஷராக்கும் வேலையுடன் இது எப்படி சம்பந்தப்பட்டுள்ளது?
7 கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மூல பாஷையில் “ஆதாரங்காட்டி இணங்க வைப்பது” என்பது “வெல்லுவதை” அல்லது “நியாயங்காட்டி அல்லது தார்மீக காரணங்களை சுட்டிக்காட்டி மனமாற்றத்தை ஏற்படுத்துவதை” அர்த்தப்படுத்துகிறது என வைன் என்பவரின் எக்ஸ்போஸிட்டரி டிக்ஷ்னரி ஆஃப் நியூ டெஸ்டமென்ட் உவர்ட்ஸ் குறிப்பிடுகிறது. அந்த மூலவார்த்தையின் அர்த்தத்தை ஆராய்வது அதைப் பற்றி இன்னும் அதிகம் புரிந்துகொள்ள உதவுகிறது. அது நம்பிக்கை என்ற கருத்தைத் தருகிறது. எனவே ஒருவர் பைபிள் போதனையை ஏற்றுக்கொள்ளும்படி ஆதாரங்காட்டி இணங்க வைக்கையில், நீங்கள் அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரராகிறீர்கள்; அந்தப் போதனை உண்மையானது என அவர் விசுவாசிக்கிறார். ஒருவர் பைபிளை நம்பி, அதற்கேற்ப செயல்படுவதற்கு அதிலுள்ள விஷயங்களை அவரிடம் சொன்னால் மட்டும் போதாது என்பது தெளிவாகிறது. செவிகொடுத்து கேட்பவர் பிள்ளையாக, அண்டை வீட்டுக்காரராக, உடன் வேலை செய்பவராக, பள்ளி தோழராக அல்லது உறவினராக இருந்தாலும் நீங்கள் சொல்வது உண்மை என்பதை அவர் நம்ப வேண்டும்.—2 தீமோத்தேயு 3:14, 15.
8. பைபிள் சத்தியத்தை ஒருவர் நம்பும்படி செய்வதில் என்ன உட்பட்டுள்ளது?
8 கடவுளுடைய வார்த்தையிலிருந்து நீங்கள் சொல்லும் காரியங்கள் உண்மையானவை என ஒருவர் நம்பும் விதத்தில் எப்படி பேசுவீர்கள்? தர்க்க ரீதியிலான விளக்கம், நியாயமான விவாதம், பரிந்து வேண்டுதல் ஆகியவற்றின் மூலம் பவுல் கேட்போருடைய மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முயன்றார்.a எனவே, ஒரு விஷயம் உண்மை என்பதை சொல்லுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் உங்கள் குறிப்பை ஆதரிக்கும் திருப்திகரமான சான்றையும் நீங்கள் அளிக்க வேண்டும். இதை எப்படி செய்யலாம்? சொந்த கருத்தையல்ல அல்ல, ஆனால் முற்றிலும் கடவுளுடைய வார்த்தையை அடிப்படையாக வைத்து பேசுகிறீர்கள் என்பதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மனமார்ந்த வேதப்பூர்வ குறிப்புகளுக்கு கூடுதல் ஆதாரத்தை அளியுங்கள். (நீதிமொழிகள் 16:23, NW) உதாரணமாக, கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் பூங்காவன பூமியில் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வார்கள் என நீங்கள் சொன்னால் அதற்கு லூக்கா 23:43 அல்லது ஏசாயா 65:21-25 போன்ற வேதவசனங்களை ஆதாரம் காட்டுங்கள். உங்கள் வேதப்பூர்வ குறிப்புக்கு எப்படி கூடுதல் ஆதாரத்தை அளிக்கலாம்? கேட்போர் அனுபவத்தில் அறிந்த விஷயங்களையே நீங்கள் உதாரணங்களாக உபயோகிக்கலாம். அழகிய சூரிய அஸ்தமனம், மலரின் நறுமணம், பழத்தின் தெவிட்டாத சுவை அல்லது தாய்ப் பறவை தன் குஞ்சுகளுக்கு உணவூட்டுவதை பார்ப்பதில் பிறக்கும் இன்பம் போன்ற எளிய, செலவில்லாத காரியங்களை நீங்கள் அவருக்கு நினைவுபடுத்தலாம். மகிழ்ச்சி தரும் அத்தகைய காரியங்கள், பூமியில் வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழவே படைப்பாளர் விரும்புகிறார் என்பதற்கு சான்றளிப்பதை அவர் புரிந்துகொள்ள உதவுங்கள்.—பிரசங்கி 3:11, 12.
9. நம் பிரசங்க வேலையில் நியாயத்தன்மையை எப்படி காட்டலாம்?
9 குறிப்பிட்ட ஒரு பைபிள் போதனையை ஒருவர் ஏற்றுக்கொள்ளும்படி ஆதாரங்காட்டி இணங்க வைக்க முயலும்போது உற்சாகத்தில் நீங்கள் சொல்வதே சரியென அடித்துப் பேசாதிருக்க கவனமாயிருங்கள்; ஏனென்றால் கேட்போரின் மனதையும் இருதயத்தையும் அது எட்டாது. ஊழியப் பள்ளி புத்தகம் இந்த எச்சரிக்கையைக் கொடுக்கிறது: “ஒருவர் காலங்காலமாக இருதயத்தில் பொக்கிஷமாய் பேணிவரும் நம்பிக்கையை நேரடியாக தவறென சுட்டிக்காட்டினால், அதை நிறைய வசனங்களின் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டினாலும், பொதுவாக அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். உதாரணமாக, பிரபலமான பண்டிகைகள் புறமதத்திலிருந்து தோன்றியவை என நேரடியாக கண்டனம் செய்வது, அவற்றை குறித்த மக்களின் கருத்தை மாற்றி விடாது. நியாயங்காட்டிப் பேசுவதே பொதுவாக வெற்றியை தருகிறது.” நியாயத்தன்மையை வெளிக்காட்ட பெரும் முயற்சி எடுப்பது ஏன் அவசியம்? அப்புத்தகம் சொல்வதாவது: “நியாயங்காட்டிப் பேசுவது உரையாடலை உற்சாகப்படுத்துகிறது, பிற்பாடு சிந்தித்துப் பார்க்க உதவுகிறது, மீண்டும் ஒருநாள் உரையாடுவதற்கு வழியைத் திறந்து வைக்கிறது. ஒருவரை இணங்க வைக்கும் வலிமை அதற்கு இருக்கிறது.”—கொலோசெயர் 4:6.
ஆதாரங்காட்டி இணங்க வைப்பது இருதயத்தை தூண்டுவிக்கிறது
10. அகிரிப்பா முன்பாக பவுல் தன் விவாதத்தை எப்படி ஆரம்பித்தார்?
10 அப்போஸ்தலர் 26-ம் அதிகாரத்தில் பவுல் தன் விவாதத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளை நாம் கவனமாக ஆராயலாம். அவர் தன் பேச்சை ஆரம்பித்த விதத்தைக் கவனியுங்கள். அகிரிப்பா ராஜா தன் தங்கை பெர்னீக்கேயாளுடன் முறைதகாத உறவு வைத்திருந்தார்; இருந்தபோதிலும் பவுல் தான் சொல்லப்போகும் விஷயத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அந்த ராஜாவைப் பாராட்ட நியாயமான காரணத்தைக் கண்டுபிடித்தார். “அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக் குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். விசேஷமாய் நீர் யூதருடைய சகல முறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக் கொள்ளுகிறேன்” என பவுல் சொன்னார்.—அப்போஸ்தலர் 26:2, 3.
11. அகிரிப்பாவிடம் பவுல் பேசிய வார்த்தைகள் எப்படி மரியாதையை வெளிக்காட்டின, அவை என்ன பலனைக் கொடுத்தன?
11 ராஜா என அகிரிப்பாவை அழைப்பதன் மூலம் அவருடைய உயர் பதவியை பவுல் கருத்தில் கொள்வதைக் கவனித்தீர்களா? இது மரியாதையை வெளிக்காட்டுகிறது, இப்படி வார்த்தைகளை ஞானமாக தேர்ந்தெடுத்து பேசியதன் மூலம் பவுல் அகிரிப்பாவைக் கனப்படுத்தினார். (1 பேதுரு 2:17) அகிரிப்பா ராஜா தனது யூத பிரஜைகளின் சிக்கலான முறைமைகளையும் சட்டங்களையும் நன்கு அறிந்தவர் என்பதை பவுல் ஒப்புக்கொண்டார்; எனவே விவரமறிந்த இந்த அதிபதியின் முன்பு தன் விவாதத்தை எடுத்துரைக்க சந்தோஷப்படுவதாக அவர் சொன்னார். கிறிஸ்தவராக இருந்த பவுல், கிறிஸ்தவராக இல்லாத அகிரிப்பாவைவிட உயர்ந்தவர் என்பதுபோல் நடந்துகொள்ளவில்லை. (பிலிப்பியர் 2:3) தான் பேசுவதை பொறுமையாக கேட்கும்படி ராஜாவிடம் பவுல் வேண்டிக்கொண்டார். இவ்வாறு, அவர் சொல்லவிருந்ததை அகிரிப்பாவும் அங்கிருந்த மற்றவர்களும் கேட்கும்படியான சூழலை பவுல் உருவாக்கினார். தன் தர்க்கத்தை படிப்படியாக விளக்குவதற்கு இருவருக்கும் பொதுவாக இருந்த விஷயத்தை அஸ்திவாரமாக்கினார்.
12. ராஜ்யத்தை அறிவிக்கும் வேலையில் நமக்குச் செவிசாய்ப்பவர்களின் இருதயத்தை நாம் எப்படி தூண்டுவிக்கலாம்?
12 அகிரிப்பாவிற்கு முன்பாக பவுல் பேசியதைப் போலவே நாமும் ராஜ்ய செய்தியை அறிவிக்கையில் ஆரம்பம் முதல் முடிவு வரை இருதயத்தைத் தூண்டுவிக்கும் விதத்தில் பேசுவோமாக. நாம் பிரசங்கிப்பவர்களிடம் உள்ளப்பூர்வமான மரியாதை காட்டுவதன் மூலமும், குறிப்பாக அவருடைய பின்னணியிலும் எண்ணத்திலும் உண்மையான ஆர்வம் காட்டுவதன் மூலமும் இதை நாம் செய்யலாம்.—1 கொரிந்தியர் 9:20-23.
கடவுளுடைய வார்த்தையை திறம்பட்ட விதத்தில் உபயோகியுங்கள்
13. பவுலைப் போலவே உங்களுக்குச் செவிசாய்ப்பவர்களை நீங்கள் எப்படி தூண்டுவிக்கலாம்?
13 நற்செய்திக்கு இசைய செயல்படும்படி கேட்போரை தூண்டுவிக்க பவுல் விரும்பினார். (1 தெசலோனிக்கேயர் 1:5-7) அதற்காக, தூண்டுதலின் பிறப்பிடமான அடையாள அர்த்தமுள்ள இருதயத்தை அவர் எட்ட முயன்றார். அகிரிப்பாவுக்கு முன்பாக பவுல் விவாதிக்கையில், மோசேயும் தீர்க்கதரிசிகளும் சொன்ன விஷயங்களைக் குறிப்பிட்டு, ‘கடவுளுடைய வார்த்தையை சரியாய் பயன்படுத்திய’ விதத்தைக் கவனியுங்கள்.—2 தீமோத்தேயு 2:15, NW.
14. அகிரிப்பாவுக்கு முன்பாக பவுல் எப்படி ஆதாரங்காட்டி இணங்க வைத்தார் என்பதை விவரியுங்கள்.
14 அகிரிப்பா பெயரளவுக்கு மட்டுமே யூதராக இருந்ததை பவுல் அறிந்திருந்தார். யூதேய மதத்தைப் பற்றி அகிரிப்பா அறிந்திருந்த விஷயங்களை சுட்டிக்காட்டி, மேசியாவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி ‘தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தவற்றை’ பற்றியே தான் பிரசங்கித்ததாகவும் ‘வேறொன்றையும் தான் சொல்லவில்லை’ என்றும் பவுல் நியாயங்காட்டி பேசினார். (அப்போஸ்தலர் 26:22, 23) “அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா?” என நேரடியாக அவரைப் பார்த்து பவுல் கேட்டார். இப்போது அகிரிப்பாவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கவில்லை என்று சொன்னால் யூத மதத்தவர் என்ற தன் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும். அதேசமயத்தில் பவுலுடைய நியாய விவாதத்தை அவர் ஒப்புக்கொண்டால் வெளிப்படையாக பவுலை ஆதரிப்பதாக ஆகிவிடும், கிறிஸ்தவர் என அழைக்கப்படும் நிலையும் ஏற்படும். ‘விசுவாசிக்கிறீர் என்று அறிவேன்’ என தன் கேள்விக்கு தானே ஞானமாக பதிலளித்தார். அப்போது அகிரிப்பாவின் இருதயம் என்ன சொல்லும்படி அவரை தூண்டியது? “நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப் பண்ணுகிறாய்” என அவர் சொன்னார். (அப்போஸ்தலர் 26:27, 28) அகிரிப்பா கிறிஸ்தவராகாவிட்டாலும் பவுல் தன்னுடைய செய்தியால் அவருடைய இருதயத்தை ஓரளவு தூண்டுவித்தார் என்பது தெரிகிறது.—எபிரெயர் 4:12.
15. தெசலோனிக்கேயில் பவுல் எப்படி ஒரு சபையை உருவாக்கினார்?
15 பிரசங்கிக்கையில் பவுல் நற்செய்தியை அறிவித்ததையும், ஆதாரங்காட்டி இணங்க வைத்ததையும் நீங்கள் கவனித்தீர்களா? இந்த விதத்தில் பவுல் ‘கடவுளுடைய வார்த்தையை சரியாய் பயன்படுத்தியதால்’ அவர் பேசியதைக் கேட்ட சிலர் கேட்டதோடு விட்டுவிடாமல் விசுவாசிகளாகவும் ஆனார்கள். தெசலோனிக்கேயில் ஜெபாலயத்திலிருந்த யூதர்களிடமும் கடவுள் பயமுள்ள புறதேசத்தாரிடமும் பவுல் பேசியபோது இதுவே சம்பவித்தது. அப்போஸ்தலர் 17:2-4-லுள்ள பதிவு இவ்வாறு சொல்கிறது: ‘பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து, கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், . . . காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினார். அவர்களில் சிலர் . . . விசுவாசிகளானார்கள்.’ பவுல் ஆதாரங்காட்டி இணங்க வைத்தார். பூர்வத்தில் முன்னறிவிக்கப்பட்ட மேசியாதான் இயேசு என்பதை வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டி பேசினார், விளக்கினார், நிரூபித்தார். விளைவு? அநேகர் விசுவாசிகளானார்கள், அதனால் ஒரு சபையே உருவாயிற்று.
16. ராஜ்யத்தை அறிவிக்கையில் பெரும் மகிழ்ச்சியை நீங்கள் எப்படி பெறலாம்?
16 நீங்கள் கடவுளுடைய வார்த்தையை விளக்கும்போது, ஆதாரங்காட்டி இணங்க வைக்கும் கலையில் இன்னும் திறம்பட்டவர்களாக ஆக முடியுமா? அப்படி ஆகும்போது, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மக்களிடம் பிரசங்கிக்கையிலும் கற்பிக்கையிலும் திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைப்பதை நீங்கள் உணருவீர்கள். பிரசங்க வேலையில் பைபிளை அதிகமாக பயன்படுத்தும்படி கொடுக்கப்பட்ட ஆலோசனையைப் பின்பற்றி நற்செய்தியை அறிவிப்பவர்களின் அனுபவம் இதையே காட்டுகிறது.
17. நம் ஊழியத்தில் பைபிளைப் பயன்படுத்துவது பயனுள்ளது என்பதைக் காட்டுவதற்கு உங்கள் அனுபவத்தை அல்லது பாராவிலுள்ள அனுபவத்தின் சாராம்சத்தை சொல்லுங்கள்.
17 உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகளுடைய பயணக் கண்காணி ஒருவர் இவ்வாறு எழுதினார்: “பெரும்பாலான சகோதர சகோதரிகள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையில் பைபிளை கையில் எடுத்து செல்கிறார்கள். இது, தாங்கள் சந்திக்கும் பெரும்பாலோரிடம் ஒரு வசனத்தை வாசித்துக் காட்டுவதற்கு அவர்களுக்கு உதவியாய் இருக்கிறது. இது, பத்திரிகைகளையும் புத்தகங்களையும் மட்டுமல்ல பைபிளையும் ஊழியத்துடன் சம்பந்தப்படுத்திப் பார்க்க வீட்டுக்காரருக்கும்சரி பிரஸ்தாபிக்கும்சரி உதவியிருக்கிறது.” பிரசங்க ஊழியத்தில் பிறர் கண்ணில் படும்படி பைபிளை நாம் வைத்திருக்கிறோமா இல்லையா என்பது உள்ளூர் பழக்கங்களையும் வேறு பல அம்சங்களையும் பொறுத்தது என்பது உண்மைதான். இருந்தாலும் மற்றவர்கள் ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்ளும்படி ஆதாரங்காட்டி இணங்க வைப்பதற்கு கடவுளுடைய வார்த்தையை திறம்பட பயன்படுத்துபவர்கள் என்ற பெயரைப் பெறவே நாம் விரும்புகிறோம்.
ஊழியத்தைக் குறித்த கடவுளின் நோக்குநிலையைப் பின்பற்றுங்கள்
18, 19. (அ) நம்முடைய ஊழியத்தை கடவுள் எப்படி கருதுகிறார், நாம் ஏன் அதே நோக்குநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்? (ஆ) மறுசந்திப்புகள் செய்கையில் வெற்றி காண்பதற்கு எது நமக்கு உதவும்? (பக்கம் 16-ல் “மறுசந்திப்புகள் செய்வதில் எப்படி வெற்றி காணலாம்” என்ற தலைப்பிலுள்ள பெட்டியைக் காண்க.)
18 ஊழியத்தை கடவுளுடைய கண்ணோட்டத்தில் பார்த்து பொறுமையாக இருப்பது கேட்போரின் இருதயத்தை எட்டுவதற்கு மற்றொரு வழி ஆகும். எல்லாரும் “சத்தியத்தை அறிகிற அறிவை அடைய” வேண்டுமென்பது கடவுளுடைய சித்தம். (1 தீமோத்தேயு 2:3, 4) நம்முடைய விருப்பமும் அதுவே அல்லவா? யெகோவா பொறுமையாகவும் இருக்கிறார். அநேகர் மனந்திரும்புவதற்கு அவருடைய பொறுமை வாய்ப்பளிக்கிறது. (2 பேதுரு 3:9) ஆகவே, ராஜ்ய செய்தியைக் கேட்க மனமுள்ளவர்களை நாம் காண்கையில் அவர்களுடைய ஆர்வத்தை வளர்க்க அவர்களை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டியிருக்கலாம். சத்தியத்தின் விதைகள் வளருவதைக் காண நேரமும் பொறுமையும் தேவை. (1 கொரிந்தியர் 3:6) அத்தகைய ஆர்வத்தை வளர்ப்பதற்கு உதவும் ஆலோசனைகளை, “மறுசந்திப்புகள் செய்வதில் எப்படி வெற்றி காணலாம்” என்ற தலைப்பிலுள்ள பெட்டி அளிக்கிறது. ஜனங்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளும் அவர்களுடைய சூழ்நிலைகளும் எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதை மனதில் வையுங்கள். அவர்களை வீட்டில் சந்திப்பதற்கு பல முறை செல்ல வேண்டியிருக்கலாம், ஆனால் அந்த முயற்சி வீண்போகாது. இரட்சிப்பு பற்றிய கடவுளுடைய செய்தியை அவர்கள் கேட்பதற்கு நாம் வாய்ப்பளிக்க விரும்புகிறோம். எனவே, ராஜ்ய செய்தியை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் ஆதாரங்காட்டி இணங்க வைக்கும் திறமையை வளர்த்துக்கொள்வதற்கு ஞானத்தைத் தரும்படி யெகோவா தேவனிடம் ஜெபியுங்கள்.
19 ராஜ்ய செய்தியைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பும் ஒருவரைக் கண்டுபிடித்தவுடன் கிறிஸ்தவ ஊழியர்களாக நாம் வேறென்ன செய்ய வேண்டும்? எமது அடுத்த கட்டுரை அதற்கு பதிலளிக்கிறது.
[அடிக்குறிப்பு]
a ஆதாரங்காட்டி இணங்க வைப்பது சம்பந்தமாக கூடுதல் தகவலுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் புத்தகத்தில் படிப்பு 48, 49-ஐக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• அகிரிப்பா ராஜாவுக்கு முன்பாக பவுல் விவாதித்த விதம் திறம்பட்டதாக இருந்ததற்கு காரணம் என்ன?
• நம் செய்தியை எப்படி மனங்கவரத்தக்கதாக ஆக்கலாம்?
• இருதயத்தை எட்டும் வண்ணம் கடவுளுடைய வார்த்தையைத் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்துவதற்கு எது நமக்கு உதவும்?
• ஊழியத்தை கடவுளுடைய கண்ணோட்டத்தில் நாம் எப்படி பார்க்கலாம்?
[பக்கம் 16-ன் பெட்டி/படங்கள்]
மறுசந்திப்புகள் செய்வதில் எப்படி வெற்றி காணலாம்
• ஜனங்களிடம் உண்மையான அக்கறை காட்டுங்கள்.
• கலந்தாலோசிப்பதற்கு மனங்கவரும் பைபிள் பொருளைத் தேர்ந்தெடுங்கள்.
• ஒவ்வொரு தடவையும் மறுசந்திப்புக்கு அடித்தளம் போடுங்கள்.
• வீடு திரும்பிய பிறகும் அந்த நபரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருங்கள்.
• ஆர்வம் காட்டியவரை ஓரிரு நாட்களிலேயே மீண்டும் போய் சந்தியுங்கள்.
• உங்கள் இலக்கு பைபிள் படிப்பு ஆரம் பிப்பதே என்பதை மனதில் வையுங்கள்.
• அவருடைய ஆர்வத்தை யெகோவா அதிகரிக்க செய்வதற்கு ஜெபியுங்கள்.
[பக்கம் 15-ன் படம்]
ஆளுநர் பெஸ்துவுக்கும் அகிரிப்பா ராஜாவுக்கும் முன் பவுல் அழைக்கப்பட்ட போது ஆதாரங்காட்டி இணங்க வைக்கும் விதத்தில் பேசினார்