வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஜூன் 1-7
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 44-45
“யோசேப்பு தன் அண்ணன்களை மன்னிக்கிறார்”
“நான் கடவுளுக்கு இணையானவனா?”
இப்போது, யோசேப்பு தன் திட்டத்தை செயல்படுத்துகிறார். அவருடைய அண்ணன்களைத் துரத்திப் பிடித்துக் கைது செய்யச் சொல்கிறார். பென்யமீனுடைய பையில் அந்த வெள்ளிப் பாத்திரம் இருப்பது தெரிய வந்தது. பின்பு அண்ணன்கள் எல்லாரும் யோசேப்பிடம் வருகிறார்கள். அவருடைய பாத்திரத்தைத் திருடியதாக யோசேப்பு அவர்கள்மேல் குற்றம் சுமத்துகிறார். அவருடைய அண்ணன் யூதா, மற்ற சகோதரர்களுக்காக இப்போது பேசுகிறார். இரக்கம் காட்டும்படி கெஞ்சிக் கேட்கிறார். ‘நாங்கள் எல்லாரும் உங்களுக்கு அடிமைகளாக இருப்போம்’ என்று சொல்கிறார். ஆனால் பென்யமீன் மட்டும் அடிமையாக இருக்கட்டும், மற்றவர்கள் திரும்பிப் போங்கள் என்று யோசேப்பு சொல்லிவிடுகிறார்.—ஆதியாகமம் 44:2-17.
யூதா தன்னுடைய தம்பிக்காக உணர்ச்சிப் பொங்க பேசுகிறார். “அவன் தாயின் பிள்ளைகளில் அவன் ஒருவனே இருப்பதால், தந்தை அவன் மேல் அதிக அன்பு கொண்டிருக்கிறார்” என்று சொல்கிறார். அந்த வார்த்தைகள் யோசேப்புடைய உள்ளத்தை ஆழமாகத் துளைத்தன. ஏனென்றால் யாக்கோபின் அன்பு மனைவி ராகேல் பெற்ற முதல் மகன்தான் யோசேப்பு. பென்யமீனைப் பெற்றெடுக்கும்போது ராகேல் இறந்துவிட்டார். யாக்கோபைப் போலவே யோசேப்பிற்கும் ராகேலை ரொம்பப் பிடிக்கும். தன்னுடைய அம்மா ராகேலுக்குப் பிறந்த மகன் என்பதால் பென்யமீன் மேல் யோசேப்புக்கு அதிக பாசம் இருந்தது.—ஆதியாகமம் 35:18-20; 44:20, பொது மொழிபெயர்ப்பு.
தன் தம்பியை அடிமையாக்கிவிட வேண்டாம் என்று யூதா மறுபடியும் கதறுகிறார். அதற்குப் பதிலாக, தான் அடிமையாக இருப்பதாக சொல்கிறார். கடைசியாக, மனதைத் தொடும் இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்: “இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன்.” (ஆதியாகமம் 44:18-34) யூதா முழுமையாக மனம் திரும்பியிருந்தார். அதுமட்டுமல்ல அவர் சுயநலமில்லாமல் நடந்து கொண்டார், கரிசனை காட்டினார், அனுதாபம் காட்டினார்.
இதற்குமேல் யோசேப்பால் தன் உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. அவர், வேலைக்காரர்களை எல்லாம் வெளியே போகும்படி சொல்கிறார். அவர்கள் வெளியே போன பின்பு கதறி அழுகிறார். அழுத சத்தம் ராஜாவின் அரண்மனை வரைக்கும் கேட்டது. அதற்குப்பிறகு, “உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்” என்று அவர்களிடம் சொல்கிறார். இதை கேட்ட அவருடைய சகோதரர்கள் மலைத்துப்போனார்கள். அவர்கள் எல்லாரையும் யோசேப்பு கட்டித் தழுவினார். அவர்கள் செய்த தப்பை மனதார மன்னித்தார். (ஆதியாகமம் 45:1-15) இப்படி செய்ததன் மூலம் யெகோவாவைப் போலவே நடந்து கொண்டார். (சங்கீதம் 86:5) நாமும் மற்றவர்களை தாராளமாக மன்னிக்கிறோமா?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 813
உடையைக் கிழிப்பது
யூதர்கள் தங்களுடைய துக்கத்தை வெளிக்காட்டுவதற்கு ஓர் அடையாளமாக இது இருந்தது. கிழக்கு ஆசியாவிலிருந்த சில நாடுகளில் இருந்தவர்களும் இப்படித்தான் தங்களுடைய துக்கத்தை வெளிப்படுத்தினார்கள். முக்கியமாக, சொந்தக்காரர்கள் இறந்ததைப் பற்றிக் கேள்விப்படும்போது அவர்கள் அப்படிச் செய்வார்கள். பெரும்பாலான சமயங்களில், உடையைக் கிழிப்பது என்பது மார்பின் மேல்பகுதி தெரியும் அளவுக்கு கிழிப்பதைத்தான் அர்த்தப்படுத்தியது. அதனால், உடையை மறுபடியும் பயன்படுத்த முடியாத அளவுக்கு முழுமையாகக் கிழிப்பதை இது குறிக்கவில்லை.
பைபிளில் முதன்முதலாக இப்படி உடையைக் கிழித்தது, யாக்கோபுடைய மூத்த மகன் ரூபன்தான். யோசேப்பு தண்ணீர் தொட்டிக்குள் இல்லாததைப் பார்த்தபோது தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டு, “தம்பியைக் காணோமே! ஐயோ! இப்போது நான் என்ன செய்வேன்?” என்று அவர் சொன்னார். மூத்த மகனாக தன்னுடைய தம்பியைப் பார்த்துக்கொள்ளும் முக்கியமான பொறுப்பு ரூபனுக்குத்தான் இருந்தது. யாக்கோபிடம், யோசேப்பு இறந்துவிட்டார் என்று சொல்லப்பட்டபோது அவர் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டு, இடுப்பில் துக்கத் துணியைக் கட்டிக்கொண்டார். (ஆதி 37:29, 30, 34) எகிப்தில் பென்யமீன் ஒரு திருடன் என்று குற்றம் சாட்டப்பட்டபோது, யோசேப்பின் அண்ணன்கள் தங்களுடைய உடையைக் கிழித்துக்கொண்டதன் மூலம் தங்களுடைய துக்கத்தை வெளிக்காட்டினார்கள்.—ஆதி 44:13.
காரணமின்றி பகைக்கப்படுதல்
15 காரணமின்றி நம்மை பகைக்கிறவர்கள் மீது வெறுப்பையும் கசப்பையும் வளர்த்துக்கொள்ளாமல் இருக்க எது நமக்கு உதவும்? நம்முடைய முக்கிய எதிரிகள் சாத்தானும் பிசாசுகளுமே என்பதை மனதில் வையுங்கள். (எபேசியர் 6:12) சில ஆட்கள் நன்கு தெரிந்தே, வேண்டுமென்றே நம்மை துன்புறுத்துகிற போதிலும், மற்ற அநேகர் அறியாமையாலேயே அல்லது பிறர் நயவஞ்சகத்தோடு தூண்டிவிட்டதாலேயே அவ்வாறு நடந்து கொள்கிறார்கள். (தானியேல் 6:4-16; 1 தீமோத்தேயு 1:12, 13) “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” ஒரு வாய்ப்பை பெற வேண்டுமென யெகோவா விரும்புகிறார். (1 தீமோத்தேயு 2:4) சொல்லப்போனால், அன்று நம்மை எதிர்த்தவர்களில் சிலர் நம்முடைய குற்றமற்ற நடத்தையை உற்று கவனித்ததால் இன்று நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களாக ஆகியிருக்கிறார்கள். (1 பேதுரு 2:12) அதுமட்டுமல்ல, யாக்கோபுவின் மகனான யோசேப்புடைய உதாரணத்திலிருந்தும் நாம் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். தன்னுடைய ஒன்றுவிட்ட உடன்பிறந்தோரால் தனக்கு அத்தனை கஷ்டங்கள் நேர்ந்தபோதிலும், அவர்கள் மீது அவர் வெறுப்பை வளர்த்துக் கொள்ளவில்லை. ஏன்? ஏனெனில், இந்தக் காரியத்திற்கு பின்னால் யெகோவாவின் கரம் இருந்ததை, அதாவது தம்முடைய நோக்கத்திற்கிசைய சம்பவங்கள் நடைபெறுமாறு யெகோவா பார்த்துக்கொண்டார் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். (ஆதியாகமம் 45:4-8) அதேவிதமாக, நாம் அநியாயமாய் அனுபவித்து வரும் ஏதோவொரு துன்பம் கடைசியில் தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தும்படி யெகோவா செய்துவிடலாம்.—1 பேதுரு 4:16.
ஜூன் 8-14
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 46-47
“பஞ்சத்திலிருந்து விடுதலை”
பஞ்சத்தின் காலத்தில் ஜீவனைப் பாதுகாத்தல்
2 ஏழுவருட மிகுதியின் நாட்கள் முடிவடைந்தது. யெகோவா முன்னறிவித்த விதமாகவே பஞ்சம் தொடங்கியது. இது எகிப்தில் மட்டும் உண்டான பஞ்சமல்ல, ஆனால் “சகல தேசங்களிலும்” உண்டாயிருந்த பஞ்சம். எகிப்தில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பார்வோனிடம் ஆகாரம் கேட்டபோது பார்வோன் அவர்களைப் பார்த்து: “நீங்கள் யோசேப்பினிடத்துக்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள்,” என்றான். எகிப்தியர் கைகளிலிருந்த பணம் தீர்ந்து போகுமட்டும் யோசேப்பு அவர்களுக்குத் தானியத்தை விற்றான். பின்பு, பணத்திற்கு பதிலாக அவர்களுடைய கால்நடைகளைப் பெற்றுக்கொண்டான். கடைசியில் மக்கள் அவனிடம் வந்து, “நீர் எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு ஆகாரம் கொடுக்க வேண்டும்; நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு ஆதீனமாயிருப்போம்,” என்றார்கள். ஆக, யோசேப்பு எகிப்தியரின் நிலங்கள் யாவையும் பார்வோனுக்காக வாங்கினான்.—ஆதியாகமம் 41:53-57; 47:13-20.
கடவுளுடைய அரசாங்கம் அவருடைய விருப்பத்தைப் பூமியில் நிறைவேற்றுகிறது
11 ஏராளமான உணவு. இந்த உலகம் ஆன்மீகப் பஞ்சத்தில் வாடுகிறது. அதைப் பற்றி பைபிள் ஒரு முன்னெச்சரிக்கை கொடுத்தது. “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘ஒரு காலம் வரப்போகிறது, அப்போது தேசத்தில் பஞ்சத்தைக் கொண்டுவருவேன். அது உணவு கிடைக்காத பஞ்சமோ தண்ணீர் கிடைக்காத பஞ்சமோ இல்லை. அது யெகோவாவின் வார்த்தை கிடைக்காத பஞ்சம்.’” (ஆமோ. 8:11) கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் அந்தப் பஞ்சத்தில் வாடுகிறார்களா? தன்னுடைய மக்களுக்கும் எதிரிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை யெகோவா இப்படி முன்னறிவித்தார்: “என் ஊழியர்கள் சாப்பிடுவார்கள், ஆனால் நீங்கள் பசியில் வாடுவீர்கள். என் ஊழியர்கள் குடிப்பார்கள், ஆனால் நீங்கள் தாகத்தில் தவிப்பீர்கள். என் ஊழியர்கள் சந்தோஷமாக இருப்பார்கள், ஆனால் நீங்கள் அவமானத்தில் கூனிக்குறுகுவீர்கள்.” (ஏசா. 65:13) இந்த வார்த்தைகளின் நிறைவேற்றத்தைக் கவனித்திருக்கிறீர்களா?
12 பைபிள் பிரசுரங்கள், ஆடியோ-வீடியோக்கள், வெப்சைட்டில் வெளிவரும் தகவல்கள், கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றின் மூலம் இன்று நமக்கு ஏராளமான ஆன்மீக உணவு கிடைக்கிறது. அகலமும் ஆழமும் அதிகமாகிக்கொண்டே போகும் ஒரு ஆற்றைப் போல இவை இருக்கின்றன. ஆன்மீக விதத்தில் நாம் தொடர்ந்து உயிர்வாழ இவை உதவுகின்றன. (எசே. 47:1-12; யோவே. 3:18) ஏராளமான உணவு பற்றி யெகோவா கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறுவதைப் பார்த்து சிலிர்த்துப்போகிறீர்களா? யெகோவா தரும் உணவைத் தவறாமல் சாப்பிடுகிறீர்களா?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 220 பாரா 1
மனப்பான்மைகளும் சைகைகளும்
இறந்தவரின் கண்களை மூடுவது. யெகோவா யாக்கோபிடம், “நீ சாகும்போது யோசேப்பு உன் கண்களை மூடுவான்” என்று சொன்னார். (ஆதி 46:4) பொதுவாக, இப்படி கண்களை மூடுவது மூத்த மகன் செய்ய வேண்டிய கடமையாக இருந்தது. மூத்த மகன் உரிமை யோசேப்புக்குதான் போய் சேரவேண்டும் என்று யாக்கோபு புரிந்துகொள்வதற்காக யெகோவா இப்படி சொன்னதாகத் தெரிகிறது.—1நா 5:2.
அப் 7:14-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு
அவர்கள் 75 பேர்: எகிப்தில் குடியேறிய யாக்கோபின் குடும்பத்தில் 75 பேர் இருந்தார்கள் என்று ஸ்தேவான் சொல்கிறார். அவர் இந்த இடத்தில், எபிரெய வேதாகமத்திலிருந்த ஒரு வசனத்தை மேற்கோள் காட்டியதுபோல் தெரியவில்லை. இந்த எண்ணிக்கை எபிரெய வேதாகமத்தின் மசோரெட் பிரதியில் இல்லை. ஆதி 46:26, “யாக்கோபின் மருமகள்களைத் தவிர, அவருடன் எகிப்துக்குப் போன அவருடைய வம்சத்தார் மொத்தம் 66 பேர்” என்று சொல்கிறது. வசனம் 27, “எகிப்துக்கு வந்துசேர்ந்த யாக்கோபின் குடும்பத்தார் மொத்தம் 70 பேர்” என்று சொல்கிறது. இந்த வசனங்களில், யாக்கோபின் குடும்பத்தார் இரண்டு விதங்களில் கணக்கிடப்பட்டிருக்கிறார்கள். யாக்கோபோடு எகிப்துக்குப் போன அவருடைய வம்சத்தார்தான் “66” என்ற எண்ணிக்கையாக இருந்திருக்க வேண்டும். எகிப்தில் குடியேறிய யாக்கோபின் குடும்பத்தாருடைய மொத்த எண்ணிக்கைதான் “70” என்ற எண்ணிக்கை. யாத் 1:5-லும் உபா 10:22-லும்கூட, யாக்கோபின் குடும்பத்தார் “70” பேர் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால், யாக்கோபின் குடும்பத்தாரில் இருந்த இன்னும் சிலரையும் சேர்த்துத்தான் ஸ்தேவான் 75 என்ற எண்ணிக்கையைக் கொடுத்திருக்கலாம். செப்டுவஜன்ட் மொழிப்பெயர்ப்பில், ஆதி 46:20, யோசேப்பின் மகன்களான மனாசே மற்றும் எப்பிராயீமின் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பற்றிச் சொல்கிறது. இவர்களும் ஸ்தேவான் சொன்ன எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர், ஆதி 46:26-ல் இருக்கிற எண்ணிக்கையில் சேர்க்கப்படாத யாக்கோபின் மருமகள்கள்தான் ஸ்தேவான் சொன்ன எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். அதனால், “75” என்பது மொத்த எண்ணிக்கையாக இருக்கலாம். இந்த எண்ணிக்கை, முதல் நூற்றாண்டிலிருந்த எபிரெய வேதாகமத்தின் நகல்களின் அடிப்படையில் இருந்திருக்கலாம். கிரேக்க செப்டுவஜன்டில் ஆதி 46:27-லும் யாத் 1:5-லும், “75” என்ற எண்ணிக்கைதான் இருந்தது என்று பல வருஷங்களாக அறிஞர்களுக்குத் தெரியும். அதோடு, 20-ஆம் நூற்றாண்டில் சவக்கடல் சுருளின் இரண்டு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. யாத் 1:5-ன் எபிரெய மொழி பாகங்கள்தான் அவை. அதிலும்கூட “75” என்ற எண்ணிக்கையைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் பூர்வகால பிரதிகள் ஏதோவொன்றின் அடிப்படையில்தான் ஸ்தேவான் அந்த எண்ணிக்கையைக் குறிப்பிட்டிருக்கலாம். இப்போது நாம் பார்த்த கருத்துகளில் எவை சரியாக இருந்தாலும் சரி, யாக்கோபின் வம்சத்தார் வேறொரு விதத்தில் கணக்கிடப்பட்டிருக்கிறார்கள் என்பதைத்தான் ஸ்தேவான் சொன்ன எண்ணிக்கை காட்டுகிறது.
ஜூன் 15-21
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 48-50
“வயதானவர்கள் ஒரு களஞ்சியம்”
it-1-E பக். 1246 பாரா 8
யாக்கோபு
யாக்கோபு இறப்பதற்குக் கொஞ்சம் முன்பு, தன்னுடைய பேரப்பிள்ளைகளை, அதாவது யோசேப்பின் மகன்களை ஆசீர்வதித்தார். முதல் மகனுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தை மூத்த மகனான மனாசேக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, இளைய மகனான எப்பிராயீமுக்குக் கொடுக்கும்படி யாக்கோபைக் கடவுள் வழிநடத்தினார். அதன்பின், யாக்கோபு யோசேப்பிடம் (மூத்த மகனுக்குக் கிடைக்க வேண்டிய சொத்தில் இரண்டு பாகம் இவருக்குக் கிடைக்கவிருந்தது), “நான் உன் சகோதரர்களுக்குக் கொடுப்பதைவிட ஒரு பங்கு அதிகமான நிலத்தை உனக்குத் தருகிறேன். வாளோடும் வில்லோடும் எமோரியர்களுடன் போராடி நான் பெற்ற நிலம் அது” என்று சொன்னார். (ஆதி 48:1-22; 1நா 5:1) யோசேப்பிடம் யாக்கோபு கொடுத்த இந்த வாக்குறுதி யாக்கோபு எந்தளவு விசுவாசமாக இருந்தார் என்பதைக் காட்டியது. எப்படி? ஏமோருடைய மகன்களிடமிருந்து சீகேமுக்குப் பக்கத்திலிருந்த நிலத்தை யாக்கோபு வாங்கினார்; அதற்காக அவர் எந்தச் சண்டையும் போடவில்லை. (ஆதி 33:19, 20) அப்படியென்றால், தன்னுடைய வாளோடும் வில்லோடும் அந்த நிலத்தைப் பெற்றதாக யாக்கோபு ஏன் சொன்னார்? எதிர்காலத்தில் தன்னுடைய சந்ததி கானானைக் கைப்பற்றப் போவதைதான் ஏற்கெனவே நடந்து முடிந்த ஒரு விஷயம் போல சொன்னார். கைப்பற்றப்படவிருந்த நிலத்தில் எப்பிராயீம் கோத்திரத்துக்கு ஓர் இடமும் மனாசே கோத்திரத்துக்கு ஓர் இடமும் கொடுக்கப்படவிருந்தது. அதுதான் யோசேப்புக்குக் கிடைக்கவிருந்த இரண்டு பாகம்.
it-2-E பக். 206 பாரா 1
கடைசி நாட்கள்
மரணப்படுக்கையில் யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனம். “எல்லாரும் கூடிவந்து நில்லுங்கள். கடைசி நாட்களில் உங்களுக்கு நடக்கப்போவதை நான் சொல்கிறேன்” என்று யாக்கோபு தன்னுடைய மகன்களிடம் சொன்னார். தான் சொல்லப்போகிற விஷயங்களெல்லாம் எதிர்காலத்தில் நடக்கும் என்று அவர் நம்பியதை அவருடைய இந்த வார்த்தைகள் காட்டின. (ஆதி 49:1) இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, யெகோவா யாக்கோபின் தாத்தா ஆபிராமிடம் (அதாவது, ஆபிரகாமிடம்) அவருடைய சந்ததி 400 வருஷங்களுக்கு கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று சொல்லியிருந்தார். (ஆதி 15:13) அப்படியென்றால், யாக்கோபு சொன்ன அந்தக் கடைசி நாட்கள் எந்தக் காலத்தில் ஆரம்பமாகும்? அது, இஸ்ரவேலர்கள் கொடுமைப்படுத்தப்படுகிற 400 வருஷங்கள் முடிகிற வரைக்கும் ஆரம்பமாக முடியாது என்பது தெரிகிறது. இந்தத் தீர்க்கதரிசனம் பிற்காலத்தில் கடவுளுடைய ஆன்மீக இஸ்ரவேலர்களுடைய விஷயத்திலும் நிறைவேறும் என்று எதிர்பார்க்கலாம்.—கலா 6:16; ரோ 9:6.
இளையோருக்கு வரப்பிரசாதமாயுள்ள—முதியோர்
10 முதியோர், சக ஊழியர்கள்மீதும் அருமையான தாக்கத்தை ஏற்படுத்தலாம். யாக்கோபுவின் மகனான யோசேப்பு தனது முதிர்வயதில் ஓர் எளிய செயலின்மூலம் தன் விசுவாசத்தை வெளிக்காட்டினார்; அது அவருக்குப் பின்பு வாழ்ந்த லட்சக்கணக்கான உண்மை வணக்கத்தார்மீது பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. “தன் எலும்புகளைக் குறித்துக் கட்டளைகொடுத்த” சமயத்தில் அவர் 110 வயதானவராய் இருந்தார். என்ன கட்டளை கொடுத்தார்? இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையாகிச் செல்லும்போது, அவருடைய எலும்புகளை அங்கிருந்து கொண்டுபோகும்படியாகக் கட்டளை கொடுத்தார். (எபிரெயர் 11:22; ஆதியாகமம் 50:25) அந்தக் கட்டளை இஸ்ரவேலரது நெஞ்சத்தில் நம்பிக்கைச் சுடராக ஒளிவீசியது; அதனாலேயே, யோசேப்பு இறந்த பின்னர் பல வருடங்களாக அடிமைத்தனத்தில் அகப்பட்டுத் தவித்த அவர்கள், தங்களுக்கு விடுதலை கிடைக்குமென்று உறுதியாக இருந்தார்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
தேவனை மகிமைப்படுத்துகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
4 வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு, இஸ்ரவேலின் காத் கோத்திரத்தார், யோர்தானுக்கு கிழக்கே கால்நடைகளுக்கு ஏற்றதாயிருந்த நாட்டில் குடியேற அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டனர். (எண்ணாகமம் 32:1-5) அங்கே அவர்கள் மிகப் பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. மேற்கேயிருந்த கோத்திரங்களுக்கு யோர்தான் பள்ளத்தாக்கு இயற்கை அரணாக இருந்து படையெடுப்பிலிருந்து காத்தது. (யோசுவா 3:13-17) ஆனால் யோர்தானுக்கு கிழக்கே இருந்த இடங்களைப் பற்றி த ஹிஸ்டாரிக்கல் ஜியோகிராஃபி ஆஃப் த ஹோலி லேண்ட் என்ற புத்தகத்தில் ஜார்ஜ் ஆடம் ஸ்மித் இவ்வாறு விவரித்திருக்கிறார்: அவை “அரேபிய மகா பீடபூமியில் எவ்வித தடுப்பும் இல்லாத தட்டையான, சமதள பரப்பாகவே இருந்தன. ஆகவே எல்லா காலங்களிலும் கோரப் பசியுள்ள நாடோடிகளால் படையெடுக்கப்படும் ஆபத்தில் இருந்தன; சில நாடோடிக் கூட்டங்கள் வருடா வருடம் அவ்வாறு படையெடுக்கின்றன.”
5 அப்படிப்பட்ட ஓயாத தொல்லையை காத் கோத்திரத்தார் எப்படி சமாளித்தார்கள்? பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவர்களுடைய முற்பிதா யாக்கோபு மரணப் படுக்கையில் இவ்வாறு தீர்க்கதரிசனம் சொல்லியிருந்தார்: “காத் என்பவன்மேல் கொள்ளைக்கூட்டம் தாக்கும், ஆனால் அவன் அக்கூட்டத்தின் கடைக்கோடியை தாக்குவான்.” (ஆதியாகமம் 49:19, NW) முதலில் படிக்கும்போது இந்த வார்த்தைகள் நம்பிக்கையற்றவையாக தொனிக்கலாம். ஆனால் உண்மையில் திருப்பித் தாக்க வேண்டும் என்ற கட்டளையே காத் கோத்திரத்தாருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வாறு அவர்கள் தாக்கினால், கொள்ளைக்கூட்டத்தார் அவமானப்பட்டு புறமுதுகு காட்டி ஓடுவார்கள், அவர்களது கடைக்கோடியை இவர்கள் துரத்திச் செல்வார்கள் என யாக்கோபு உறுதியளித்தார்.
it-1-E பக். 289 பாரா 2
பென்யமீன்
தன்னுடைய அருமை மகனான பென்யமீனின் வம்சத்தைப் பற்றி யாக்கோபு தன்னுடைய மரணப்படுக்கையில் தீர்க்கதரிசனம் சொன்னார். “பென்யமீன், ஓநாயைப் போல் எப்போதும் கடித்துக் குதறுவான். காலையில் தன்னுடைய இரையைத் தின்பான்; சாயங்காலத்தில், தான் கைப்பற்றியதைப் பங்குபோடுவான்” என்று பென்யமீன் வம்சத்தாருடைய சண்டைப் போடும் திறனைப் பற்றி சொன்னார். (ஆதி 49:27) பென்யமீன் வம்சத்தைச் சேர்ந்த வீரர்கள் கவண் கல் எறிவதில் திறமைசாலிகளாக இருந்தார்கள். அவர்கள் தங்களுடைய வலது கையாலும் இடது கையாலும் ‘ஒரு மயிரிழைகூட’ தப்பாமல் குறி பார்த்துக் கவண் கல் எறிவதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள். (நியா 20:16; 1நா 12:2) கொடுங்கோலனான எக்லோன் ராஜாவைக் கொன்ற நியாயாதிபதியான ஏகூத் (இவர் இடது கை பழக்கமுள்ளவர்) பென்யமீன் வம்சத்தை சேர்ந்தவராக இருந்தார். (நியா 3:15-21) “காலையில்” அதாவது, இஸ்ரவேலின் அரச வரலாறு உதயமான சமயத்தில் இஸ்ரவேல் கோத்திரங்களிலேயே ரொம்பவும் ‘சின்ன கோத்திரமான’ பென்யமீன் கோத்திரத்திலிருந்துதான் முதல் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார். கீசின் மகனான சவுல்தான் அந்த ராஜா. அவர் பெலிஸ்தியர்களுக்கு எதிராக அஞ்சா நெஞ்சம் கொண்ட வீரராக இருந்தார். (1சா 9:15-17, 21) அதேபோல், “சாயங்காலத்தில்” அதாவது, இஸ்ரவேலின் அரச பரம்பரை அஸ்தமித்த பின்பு, பென்யமீன் வம்சத்தைச் சேர்ந்த எஸ்தர் ராணியும் பிரதம மந்திரி மொர்தெகாயும் பெர்சியர்களின் கையிலிருந்து இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினார்கள்.—எஸ்தர் 2:5-7.
ஜூன் 22-28
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 1-3
“நான் எப்படியெல்லாம் ஆக நினைக்கிறேனோ அப்படியெல்லாம் ஆவேன்”
கடவுளுடைய மகத்தான பெயரைக் கௌரவப்படுத்துங்கள்
4 யாத்திராகமம் 3:10-15-ஐ வாசியுங்கள். மோசேக்கு 80 வயதானபோது, கடவுள் அவருக்கு ஒரு பெரும் பொறுப்பைக் கொடுத்தார்; ‘நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவா’ என்றார். அப்போது மோசே அர்த்தம்பொதிந்த ஒரு கேள்வியைக் கடவுளிடம் பணிவுடன் கேட்டார். ஒரு கருத்தில் பார்த்தால், ‘உங்களுடைய பெயர் என்ன?’ என்பதுதான் அந்தக் கேள்வி. கடவுளுடைய பெயரை மனிதர்கள் வெகு காலமாக அறிந்திருந்தார்களே, அப்படியிருக்கும்போது மோசே எதற்காக இந்தக் கேள்வியைக் கேட்டார்? அந்தப் பெயருக்குச் சொந்தமானவரைப் பற்றி இன்னும் அதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள அவர் விரும்பினார்; அந்தத் தகவல்களை வைத்து, கடவுள் தங்களை நிச்சயம் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை இஸ்ரவேலருடைய மனதில் விதைக்க முடியும் என்று அவர் நினைத்தார். மோசே அப்படி நினைத்தது நியாயம்தான். ஏனென்றால், இஸ்ரவேலர் பல காலமாக அடிமைகளாய் இருந்தார்கள். தங்கள் முன்னோரின் கடவுளால் தங்களைக் காப்பாற்ற முடியுமா என்று அவர்கள் சந்தேகப்பட்டிருக்கலாம். சொல்லப்போனால், அவர்களில் சிலர் எகிப்திய தெய்வங்களை வழிபட்டுவந்தார்கள்!—எசே. 20:7, 8.
kr பெட்டி பக். 43
கடவுளுடைய பெயரின் அர்த்தம்
யெகோவா என்ற பெயர் “ஆகும்படி” என்ற அர்த்தமுள்ள எபிரெய வினைச்சொல்லிலிருந்து வருகிறது. அந்த வினைச்சொல், ஒருவர் ஒன்றைச் செய்வதற்குக் காரணமாயிருப்பதைக் குறிப்பதாக அறிஞர்கள் சிலர் நினைக்கிறார்கள். அதனால், “ஆகும்படி செய்பவர்” என்பதே கடவுளுடைய பெயரின் அர்த்தம் என்று பலர் நம்புகிறார்கள். யெகோவா எல்லாவற்றையும் படைத்தவராக இருப்பதால் இந்த விளக்கம் அவருக்கு நன்றாகப் பொருந்தும். அவர் இந்தப் பிரபஞ்சத்தையும் புத்திக்கூர்மையுள்ள படைப்புகளையும் உண்டாக்கியதோடு, தொடர்ந்து தன்னுடைய விருப்பமும் நோக்கமும் நிறைவேறிக்கொண்டே இருக்கும்படியும் செய்கிறார்.
அப்படியானால், யாத்திராகமம் 3:13, 14-ல் மோசே கேட்ட கேள்விக்கு யெகோவா கொடுத்த பதிலை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? அந்த வசனத்தில் மோசே இப்படிக் கேட்டார்: “இஸ்ரவேலர்களிடம் போய், ‘உங்கள் முன்னோர்களின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பினார்’ என்று சொல்லும்போது, ‘அவருடைய பெயர் என்ன?’ என்று அவர்கள் கேட்டால் என்ன சொல்வது?” அதற்கு யெகோவா, “நான் எப்படியெல்லாம் ஆக நினைக்கிறேனோ அப்படியெல்லாம் ஆவேன்” என்று பதில் சொன்னார்.
மோசே யெகோவாவிடம் அவருடைய பெயரைச் சொல்லும்படி கேட்கவில்லை. மோசேக்கும் இஸ்ரவேலர்களுக்கும் கடவுளுடைய பெயர் ஏற்கெனவே தெரியும். அதனால், யெகோவா தன்னுடைய பெயரின் அர்த்தத்தோடு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்த வேண்டும் என்று மோசே விரும்பியிருக்கலாம். அது தன்னுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தும் என்று மோசே நினைத்தார். “நான் எப்படியெல்லாம் ஆக நினைக்கிறேனோ அப்படியெல்லாம் ஆவேன்” என்று சொன்னதன் மூலம் தன்னைப் பற்றி சிலிர்க்க வைக்கும் ஒரு விஷயத்தை மோசேக்கு யெகோவா வெளிப்படுத்தினார். அதாவது, தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு எப்படியெல்லாம் ஆக வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்படியெல்லாம் ஆவார். உதாரணத்துக்கு, மோசேக்கும் இஸ்ரவேலர்களுக்கும் பாதுகாவலராக, சட்டம் இயற்றுபவராக, பராமரிப்பவராக ஆனார். இப்படிச் செய்ததன் மூலம், தன்னுடைய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எப்படியெல்லாம் ஆக வேண்டும் என்று யெகோவா நினைத்தாரோ அப்படியெல்லாம் ஆனார். அவருடைய பெயருக்கு இந்த அர்த்தம் மட்டுமல்ல, தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகத் தன்னுடைய படைப்புகள் எப்படியெல்லாம் ஆக வேண்டுமோ அப்படியெல்லாம் ஆக வைக்கிறார் என்ற அர்த்தமும் இருக்கிறது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
g04-E 4/8 பக். 6 பாரா 5
மோசே—நிஜமான மனிதரா? கற்பனை கதாபாத்திரமா?
எகிப்திய இளவரசி இப்படி ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது என்பது நடக்க முடியாத விஷயமா? இல்லவே இல்லை. ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஒரு நபர் பரலோகத்துக்குப் போக வேண்டும் என்றால் இதுபோன்ற கருணையான செயல்களைச் செய்ய வேண்டும் என்று எகிப்திய மதம் சொல்லிக்கொடுத்தது. புதைபொருள் ஆராய்ச்சியாளரான ஜாய்ஸ் திஸ்லி தத்தெடுப்பதைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “எகிப்திய பெண்களும் எகிப்திய ஆண்களும் சமமாகக் கருதப்பட்டார்கள். அவர்களுக்கு சமமான சட்ட உரிமைகளும் பொருளாதாரம் சம்பந்தமான உரிமைகளும் இருந்தன, . . . பெண்களால் தத்தெடுக்கவும் முடிந்தது.” எகிப்திய பெண்மணி ஒருவர் தன்னுடைய அடிமைகளைத் தத்தெடுத்ததாக ‘தத்தெடுப்பது சம்பந்தமான பழங்காலத்து நாணற்புல் சுருள்’ ஒன்று சொல்கிறது. தாய்ப்பால் கொடுப்பதற்காக மோசேயின் அம்மாவை சம்பளத்திற்கு அமர்த்தியதைப் பற்றி தி ஆன்கர் பைபிள் டிக்ஸ்னரி இப்படிச் சொல்கிறது: “மோசேயின் அம்மாவை அவருக்கு பால் கொடுப்பதற்காக அமர்த்தியது போன்ற ஏற்பாடுகள், . . . மெசொப்பொத்தாமியாவில் இருந்த தத்தெடுப்பதற்கான ஒப்பந்தங்களிலும் இருந்தன.”
யாத்திராகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
3:1—எத்திரோ எப்படிப்பட்ட ஆசாரியராக இருந்தார்? முற்பிதாக்களின் காலத்தில் குடும்பத் தலைவரே தன் குடும்பத்திற்கு ஆசாரியராக இருந்தார். ஆகவே எத்திரோ மீதியானிய கோத்திரத்து குடும்பத் தலைவராக இருந்திருக்க வேண்டும். இந்த மீதியானியர், கேத்தூராள் மூலம் ஆபிரகாமுக்குப் பிறந்த சந்ததியார் ஆவர்; எனவே யெகோவாவின் வணக்கத்தைப் பற்றி அவர்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம்.—ஆதியாகமம் 25:1, 2.
ஜூன் 29–ஜூலை 5
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 4-5
“நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன்”
தகுந்த காரணங்களும் சாக்குப்போக்குகளும் அவற்றை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
“எனக்கு அந்தளவு தகுதியில்லை.” நற்செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல தகுதியில்லை என ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். முற்காலத்தில் வாழ்ந்த உண்மையுள்ள ஊழியர்கள் சிலர் யெகோவா தங்களுக்குக் கொடுத்த வேலையைச் செய்யத் தகுதியற்றவர்களாக உணர்ந்தார்கள். மோசேயின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவருக்கு யெகோவா ஒரு நியமிப்பை கொடுத்தபோது அவர், “ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கு முன்போ, பேசிய பின்போ நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில், எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்” என்றார். யெகோவா அவருக்கு உறுதியளித்த பின்பும், “வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பி வைப்பீராக!” என்று மோசே சொன்னார். (யாத். [விடுதலைப் பயணம்] 4:10-13, பொது மொழிபெயர்ப்பு) அப்போது யெகோவா என்ன செய்தார்?
“காணமுடியாதவரை” உங்களால் காணமுடிகிறதா?
5 மோசே எகிப்திற்குப் போகும்முன் கடவுள் அவருக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுத்தார். “ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்” என்ற இந்த முக்கிய பாடத்தைப் பிற்பாடு யோபு புத்தகத்தில் மோசே பதிவு செய்தார். (யோபு 28:28) மோசே கடவுளுக்குப் பயந்து ஞானமாய் நடந்துகொள்வதற்காக தமக்கும் மனிதர்களுக்குமுள்ள வித்தியாசத்தை யெகோவா விளக்கிக் காட்டினார். “மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா?” என்று கேட்டார்.—யாத். 4:11.
6 இதிலிருந்து மோசே என்ன கற்றுக்கொண்டார்? அவர் பயப்படுவதற்கான அவசியமே இல்லை. தான் யெகோவாவால் அனுப்பப்பட்டவர் என்பதால், பார்வோனிடம் போய் பேசுவதற்குத் தேவையான சக்தியை அவர் கொடுப்பார் என்பதைக் கற்றுக்கொண்டார். அதுமட்டுமல்ல, யெகோவாவுக்கு முன் பார்வோன் ஒன்றுமே இல்லை என்பதையும் புரிந்துகொண்டார். சொல்லப்போனால், எகிப்தில் கடவுளுடைய ஜனங்கள் இப்படி ஆபத்தான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது முதல் தடவை அல்ல. எகிப்தை முன்பு ஆண்ட ராஜாக்களின் ஆட்சியில் ஆபிரகாம், யோசேப்பு, ஏன் தன்னையும்கூட யெகோவா எப்படிக் காப்பாற்றினார் என்பதைப் பற்றி மோசே யோசித்திருக்கலாம். (ஆதி. 12:17-19; 41:14, 39-41; யாத். 1:22–2:10) ‘காணமுடியாதவர்மீது’ விசுவாசம் இருந்ததால், யெகோவா சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் தைரியமாகப் பார்வோனிடம் அறிவித்தார்.
w10 10⁄15 பக். 14
தகுந்த காரணங்களும் சாக்குப்போக்குகளும் அவற்றை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
அந்த நியமிப்பிலிருந்து மோசேயை யெகோவா நீக்கிவிடவில்லை. என்றாலும், அந்த வேலையில் மோசேக்கு உதவ ஆரோனை நியமித்தார். (யாத். 4:14-17) அதுமட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வந்த வருடங்களில், அவருக்குக் கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளிலும் யெகோவா அவருக்குப் பக்கபலமாக இருந்தார்; அதோடு அவற்றை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்தார். இன்று, உங்களுக்கும் ஊழியத்தில் உதவ அனுபவமுள்ள சக கிறிஸ்தவர்களை யெகோவா தூண்டுவார் என்பதில் நீங்கள் நம்பிக்கையாக இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற வேலையைச் செய்வதற்குத் தேவையான தகுதியை அவர் அளிப்பார் என பைபிள் உறுதியளிக்கிறது.—2 கொ. 3:5; ‘சந்தோஷ வானில் சிறகடித்துப் பறந்த வருடங்கள்’ என்ற பெட்டியைப் பாருங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன்” என சிப்போராள் சொன்னது அசாதாரணமாக தோன்றுகிறது. அது அவளைக் குறித்து என்ன சொல்கிறது? விருத்தசேதன உடன்படிக்கைப்படி செய்ய வேண்டியதை அவள் செய்ததன் மூலம் சிப்போராள் யெகோவாவுடன் ஓர் உடன்படிக்கை உறவுக்குள் வந்திருப்பதை ஒப்புக்கொண்டாள். ஓர் உடன்படிக்கை உறவில் யெகோவா கணவராகவும் மறுதரப்பினர் மனைவியாகவும் கருதப்பட்டதை பின்னான காலத்தில் இஸ்ரவேலருடன் செய்யப்பட்ட நியாயப்பிரமாண உடன்படிக்கை காட்டியது. (எரேமியா 31:32) எனவே யெகோவாவை (அவருடைய பிரதிநிதியான தேவதூதன் மூலம்) “இரத்த சம்பந்தமான புருஷன்” என அழைக்கையில், அந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு சிப்போராள் தன்னுடைய கீழ்ப்படிதலைக் காட்டியதாக தோன்றுகிறது. விருத்தசேதன உடன்படிக்கையில் யெகோவா தேவனை கணவருக்குரிய ஸ்தானத்திலும், தன்னை மனைவிக்குரிய ஸ்தானத்திலும் வைத்துக்கொண்டதாக தெரிகிறது. எப்படி இருந்தாலும், கடவுள் எதிர்பார்த்தவற்றை திட்டவட்டமாக செய்ததன் மூலம் அவள் தன் கீழ்ப்படிதலைக் காட்டியது ஆபத்திலிருந்த அவளுடைய குமாரனின் உயிரைப் பாதுகாத்தது.
it-2-E பக். 12 பாரா 5
யெகோவா
“தெரியும்” என்ற வார்த்தை, ஒரு நபருடைய அல்லது ஒரு பொருளுடைய பெயரைத் தெரிந்துவைத்திருப்பதை குறிக்கவில்லை. முட்டாளான நாபாலுக்கு தாவீதின் பெயர் தெரிந்திருந்தாலும், “யார் அந்த தாவீது?” என்று கேட்டான். இதன் மூலமாக, “அவரைப் பற்றி தெரிந்துகொள்கிற அளவுக்கு அவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?” என்று அவன் கேட்டான். (1சா 25:9-11; 2சா 8:13-ஐ ஒப்பிடுங்கள்.) பார்வோனும் மோசேயிடம், “யார் அந்த யெகோவா? நான் எதற்காக அவருடைய பேச்சைக் கேட்டு இஸ்ரவேலர்களை அனுப்ப வேண்டும்? யெகோவா யாரென்றே எனக்குத் தெரியாது. நான் இஸ்ரவேலர்களைக் கண்டிப்பாக அனுப்ப மாட்டேன்” என்று சொன்னான். (யாத் 5:1, 2) பார்வோன் இப்படிச் சொன்னதன்மூலம், யெகோவா ஓர் உண்மை கடவுள் என்றோ, எகிப்திய ராஜாவாகிய தன்மீதும் தான் செய்கிற விஷயங்களின்மீதும் அவருக்கு அதிகாரம் இருக்கிறது என்றோ, மோசே மூலமும் ஆரோன் மூலமும் யெகோவா சொன்ன அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு அவருக்கு சக்தி இருக்கிறது என்றோ தனக்குத் தெரியாது என்ற அர்த்தத்தில்தான் அப்படிச் சொன்னான். ஆனால் சீக்கிரத்தில், பார்வோனும், எகிப்தியர்களும், ஏன், இஸ்ரவேலர்கள்கூட யெகோவாவுடைய பெயரின் அர்த்தத்தையும் அவர் உண்மையில் யார் என்பதையும் தெரிந்துகொள்வார்கள். எப்போது? யெகோவா மோசேயிடம் சொன்னதுபோல் இஸ்ரவேலர்களுக்கான தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவார். அதாவது, அவர்களை எகிப்திலிருந்து விடுதலை செய்து வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் கொண்டுபோய் சேர்ப்பதன் மூலமாக அவர்களுடைய முன்னோர்களிடம் செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார். இப்படி, “உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்று நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்வீர்கள்” என்று கடவுள் சொன்னது நடக்கும்.—யாத் 6:4-8.