யெகோவாவின் வழிகளை அறிதல்
‘நான் உம்மை அறிவதற்கு, . . . உம்முடைய வழியை எனக்கு அறிவியும்.’—யாத்திராகமம் 33:13.
1, 2. (அ) ஓர் எபிரெயனை எகிப்தியன் மோசமாக நடத்தியபோது மோசே ஏன் அப்படி நடந்துகொண்டார்? (ஆ) யெகோவாவின் சேவைக்குத் தகுதியானவராக இருப்பதற்கு மோசே எதைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது?
பார்வோனுடைய வீட்டில் மோசே வளர்க்கப்பட்டார், எகிப்தின் உயர்குடி வர்க்கத்தினரால் உயர்வாக மதிக்கப்பட்ட கல்வி அவருக்குப் புகட்டப்பட்டது. என்றாலும், தான் ஒரு எகிப்தியன் அல்ல என்பதை மோசே அறிந்திருந்தார். அவர் எபிரெய பெற்றோருக்குப் பிறந்தவர். 40-வது வயதில், தனது சகோதரர்களான இஸ்ரவேலரை மேற்பார்வையிட சென்றார். அப்போது, ஓர் எபிரெயனை எகிப்தியன் மோசமாக நடத்துவதைக் கண்டார்; அதைக் கண்டவுடன் மோசேயால் தாங்க முடியவில்லை. உடனே அந்த எகிப்தியனை கொன்றுபோட்டார். யெகோவாவின் மக்களுக்குத் தயவு காட்டவே மோசே விரும்பினார்; தன்னுடைய சகோதரர்களுக்கு விடுதலை வழங்க கடவுள் தன்னை பயன்படுத்துவதாக அவர் எண்ணினார். (அப்போஸ்தலர் 7:21-25; எபிரெயர் 11:24, 25) எகிப்தியனைக் கொன்ற விஷயம் அனைவருக்கும் தெரிய வந்தபோது, அரண்மனையில் இருந்தவர்கள் மோசேயை ஒரு கலகக்காரனாக கருதினார்கள், ஆகவே அவர் தனது உயிரைக் காப்பாற்ற ஓடிப்போக வேண்டியதாயிற்று. (யாத்திராகமம் 2:11-15) மோசேயை கடவுள் பயன்படுத்த வேண்டுமென்றால், அவர் யெகோவாவின் வழிகளை நன்கு அறிந்துகொள்ள வேண்டியிருந்தது. மோசே கற்பிக்கப்படத்தக்கவராக இருப்பாரா?—சங்கீதம் 25:9.
2 அடுத்த 40 ஆண்டுகள், அந்நிய நாட்டில் ஒரு மேய்ப்பராக மோசே வாழ்ந்து வந்தார். எபிரெய சகோதரர்கள் மதிக்காததால் ஏற்பட்ட ஏமாற்றவுணர்வு தன்னை ஆட்டிப்படைக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, கடவுள் விட்ட வழியே நடக்க மோசே அடிபணிந்தார். பல வருடங்கள் உருண்டோடியபோதிலும், தனக்கு எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்காதது போல் தோன்றியபோதிலும், தன்னை யெகோவா வடிவமைக்க மோசே அனுமதித்தார். தன்னைப் பற்றி பெருமையடித்துக் கொள்ளாமல், கடவுளுடைய பரிசுத்த ஆவியின் ஏவுதலால் அவர் பிற்பாடு இவ்வாறு எழுதினார்: “மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவனாயிருந்தான்.” (எண்ணாகமம் 12:3) மோசேயை யெகோவா தனிச்சிறப்புமிக்க வழிகளில் பயன்படுத்தினார். நாமும் சாந்த குணத்தைக் காட்ட முயன்றால், யெகோவா நம்மையும் ஆசீர்வதிப்பார்.—செப்பனியா 2:3, NW.
பொறுப்பளிக்கப்பட்டார்
3, 4. (அ) மோசேக்கு யெகோவா கொடுத்த வேலை என்ன? (ஆ) மோசேக்குத் துணையாக யார் சென்றார்?
3 யெகோவாவின் பிரதிநிதியான தேவதூதர் ஒருவர் சீனாய் தீபகற்பத்தில் அமைந்துள்ள ஓரேப் மலைக்கு அருகில் மோசேயிடம் ஒருநாள் பேசினார். “எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, . . . பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் [போகிறேன்]” என்று மோசேயிடம் சொன்னார். (யாத்திராகமம் 3:2, 7, 8) மோசேக்கு கடவுள் ஒரு வேலை வைத்திருந்தார், ஆனால் அதை யெகோவாவின் வழியில் அவர் செய்ய வேண்டியிருந்தது.
4 “நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா” என்று மோசேயிடம் யெகோவாவின் தூதன் கூறினார். ஆனால் மோசே தயங்கினார். தனக்குத் தகுதி இருப்பதாக அவர் உணரவில்லை, தனது சொந்த திறமையில் சார்ந்திருந்தால் அவரால் தகுதி பெற்றிருக்கவும் முடியாது. என்றாலும், “நான் உன்னோடே இருப்பேன்” என மோசேக்கு யெகோவா உறுதியளித்தார். (யாத்திராகமம் 3:10-12) அவர் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை நிரூபிப்பதற்கு அத்தாட்சியாக அற்புதங்கள் நடப்பிக்க மோசேக்கு யெகோவா வல்லமை அளித்தார். மோசேயின் சார்பாக பேசுவதற்கு அவரது சகோதரனான ஆரோன் அவரோடு செல்வார். என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை யெகோவா அவர்களுக்குக் கற்பிப்பார். (யாத்திராகமம் 4:1-17) மோசே உண்மையுடன் அந்த நியமிப்பை செய்து முடிப்பாரா?
5. இஸ்ரவேலரின் மனப்பான்மை மோசேக்கு ஏன் ஒரு பிரச்சினையாக இருந்தது?
5 இஸ்ரவேலின் மூப்பர்கள் ஆரம்பத்தில் மோசேயையும் ஆரோனையும் நம்பினார்கள். (யாத்திராகமம் 4:29-31) ஆனால் பார்வோனுக்கும் அவனுடைய ஊழியக்காரருக்கும் முன்பு ‘தங்கள் வாசனையைக் கெடுத்ததால்,’ மோசே மீதும் அவருடைய சகோதரர் மீதும் ‘இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்’ குற்றம் சாட்டினார்கள். (யாத்திராகமம் 5:19-21; 6:9) இஸ்ரவேலர் எகிப்தைவிட்டுப் புறப்பட்டபோது, எகிப்தின் இரதங்கள் தங்களைப் பின்தொடர்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்களுக்கு முன்னால் செங்கடல், பின்னால் இரதங்கள், இப்போது கண்ணியில் அகப்பட்டது போல் அவர்கள் உணர்ந்தார்கள், உடனே மோசேமீது குற்றம் சாட்டினார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில், நீங்கள் எப்படி பிரதிபலித்திருப்பீர்கள்? இஸ்ரவேலரிடம் எந்தப் படகுகளும் இல்லை, என்றாலும் யெகோவா சொன்னபடி மோசே அவர்களைத் தயாராகும்படி உந்துவித்தார். செங்கடலின் தண்ணீர் இரண்டாக பிளக்கும்படி கடவுள் செய்தார், உடனே இஸ்ரவேலர் கடந்து செல்ல வசதியாக கடலின் அடிப்பரப்பு வெட்டாந்தரை போலானது.—யாத்திராகமம் 14:1-22.
விடுதலையைவிட மிக முக்கியமான ஒரு விவாதம்
6. மோசேக்குப் பொறுப்பளித்தபோது யெகோவா அவரிடம் எதை வலியுறுத்தினார்?
6 மோசேயிடம் யெகோவா பொறுப்பளித்தபோது, தெய்வீக பெயரின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறினார். அந்தப் பெயரையும் அதைப் பிரதிநிதித்துவம் செய்பவரையும் மதிப்பது இன்றியமையாதது. அவருடைய பெயரைப் பற்றி கேட்டபோது, மோசேயிடம் யெகோவா இவ்வாறு கூறினார்: “நான் என்னவாக ஆவேனோ அவ்வாறே ஆவேன்.” (NW) மேலும், ‘ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய யெகோவா என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப் பிரஸ்தாபம்’ என சொல்லும்படியும் மோசேக்கு கட்டளையிட்டார். (யாத்திராகமம் 3:13-15) இன்றும் யெகோவா என்பதே கடவுளுடைய பெயர், அந்தப் பெயரின் மூலமாகவே பூமியெங்கும் உள்ள தமது ஊழியர்களுக்கு அறியப்பட்டிருக்கிறார்.—ஏசாயா 12:4, 5; 43:10-12.
7. பார்வோன் அகந்தையாக இருந்தபோதிலும் என்ன செய்யும்படி மோசேயை கடவுள் உந்துவித்தார்?
7 மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் சென்று யெகோவாவின் பெயரில் தங்களுடைய செய்தியை சொன்னார்கள். ஆனால் பார்வோனோ, ‘நான் இஸ்ரவேலைப் போகவிட யெகோவாவின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் யெகோவாவை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை’ என்று அகந்தையுடன் கூறினான். (யாத்திராகமம் 5:1, 2) பார்வோன் கல்நெஞ்சக்காரனாகவும் ஏமாற்றுக்காரனாகவும் இருந்தான், என்றாலும் மீண்டும் மீண்டும் அவனிடம் போய் சொல்லும்படி மோசேயை யெகோவா உந்துவித்தார். (யாத்திராகமம் 7:14-16, 20-23; 8:1, 2, 20) பார்வோன் எரிச்சலடைந்ததை மோசேயால் பார்க்க முடிந்தது. திரும்பத் திரும்ப அவனைப்போய் சந்திப்பதில் ஏதாவது பலனுண்டா? விடுதலைக்காக இஸ்ரவேலர் ஆவலாய் காத்திருந்தனர். பார்வோனோ விடுவிக்க மாட்டேன் என்று பிடிவாதமாய் இருந்தான். நீங்கள் மோசேயாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?
8. பார்வோனுடைய விஷயத்தில் யெகோவா நடந்துகொண்ட விதம் என்ன நன்மையை கொண்டுவந்தது, இந்தச் சம்பவங்கள் நம்மை எப்படி பாதிக்க வேண்டும்?
8 மோசே இன்னொரு செய்தியையும் சொன்னார், அதாவது ‘எனக்கு ஆராதனை செய்ய ஜனங்களை அனுப்பிவிடு. . . . நீ பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன். என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன் என்று எபிரெயருடைய தேவனாகிய யெகோவா சொல்கிறார்’ என்று கூறினார். (யாத்திராகமம் 9:13-16) கல்நெஞ்சம் படைத்த பார்வோனுக்கு எதிராக நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதன் மூலம் அவரை எதிர்க்கிற எவருக்கும் ஓர் எச்சரிக்கையாக இருப்பதற்கு யெகோவா தமது வல்லமையை வெளிப்படுத்திக் காட்ட நினைத்தார். இது பிசாசான சாத்தானுக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்கும், இவனைத்தான் “இந்த உலகத்தின் அதிபதி” என இயேசு கிறிஸ்து பின்னர் அழைத்தார். (யோவான் 14:30; ரோமர் 9:17-24) முன்னறிவிக்கப்பட்டபடி, யெகோவாவின் பெயர் பூமியெங்கும் அறிவிக்கப்பட்டது. அவருடைய நீடிய பொறுமையின் காரணமாக இஸ்ரவேலரும் அவர்களுடன் அவரை வழிபடுவதில் சேர்ந்துகொண்ட பெரும் எண்ணிக்கையான பல ஜாதியாரும் பாதுகாக்கப்பட்டார்கள். (யாத்திராகமம் 9:20, 21; 12:37, 38) அதுமுதல், யெகோவாவின் பெயர் அறிவிக்கப்பட்டு வருவதால் மெய் வணக்கத்தைத் தழுவிய லட்சோபலட்சம் பேர் பயனடைந்திருக்கிறார்கள்.
சமாளிக்க கடினமான ஜனங்களுடன் தொடர்புகொள்ளுதல்
9. மோசேயின் சொந்த ஜனங்களே எவ்வாறு யெகோவாவுக்கு அவமரியாதை காண்பித்தார்கள்?
9 எபிரெயருக்குக் கடவுளுடைய பெயர் தெரியும். அவர்களிடம் பேசியபோது மோசே அந்தப் பெயரைப் பயன்படுத்தினார், ஆனால் அந்தப் பெயருக்குரியவருக்கு அவர்கள் எப்போதும் தகுந்த மரியாதை காட்டவில்லை. எகிப்திலிருந்து இஸ்ரவேலரை யெகோவா அற்புதகரமாக விடுதலை செய்த சில நாட்களிலேயே குடிக்க நல்ல தண்ணீர் உடனே கிடைக்காதபோது என்ன நடந்தது? மோசேக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். அடுத்து, உணவைக் குறித்து குறைகூறினார்கள். அவர்களுடைய முறுமுறுப்பு வெறுமனே தனக்கும் ஆரோனுக்கும் விரோதமானது அல்ல, ஆனால் அது யெகோவாவுக்கு விரோதமானது என மோசே அவர்களிடம் எச்சரித்தார். (யாத்திராகமம் 15:22-24; 16:2-12) சீனாய் மலையில், இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாணத்தை யெகோவா கொடுத்தார், இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளையும் வெளிப்படுத்திக் காட்டினார். ஆனால் அந்த ஜனங்கள் அவருக்குக் கீழ்ப்படியாமல் ஒரு பொன் கன்றுக் குட்டியை உருவாக்கி, ‘யெகோவாவுக்குப் பண்டிகை’ என்று சொல்லி அதை வணங்கினார்கள்.—யாத்திராகமம் 32:1-9.
10. யாத்திராகமம் 33:13-ல் உள்ள மோசேயின் விண்ணப்பம் இன்றைய கிறிஸ்தவ கண்காணிகளுக்கு ஏன் விசேஷ அக்கறைக்குரியது?
10 வணங்கா கழுத்துள்ளவர்கள் என யெகோவாவே சொன்ன அந்த ஜனங்களுடன் மோசே எப்படித் தொடர்புகொள்ள வேண்டியிருந்தது? யெகோவாவிடம் மோசே இவ்வாறு விண்ணப்பம் செய்தார்: “உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்.” (யாத்திராகமம் 33:13) யெகோவாவின் நவீனகால சாட்சிகளைக் கவனித்துக்கொள்ளும் விஷயத்தில், கிறிஸ்தவ கண்காணிகள் மிகவும் மனத்தாழ்மையுள்ள மந்தையையே கண்காணிக்கிறார்கள். என்றாலும், “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்” என்றே அவர்களும் ஜெபிக்கிறார்கள். (சங்கீதம் 25:4) கடவுளுடைய வார்த்தைக்கும் அவருடைய ஆளுமைக்கும் இசைவாக காரியங்களைச் செய்ய யெகோவாவின் வழிகளைப் பற்றிய அறிவு கண்காணிகளுக்கு உதவுகிறது.
யெகோவா தமது ஜனங்களிடம் எதிர்பார்ப்பவை
11. மோசேக்கு யெகோவா கொடுத்த வழிகாட்டுக் குறிப்புகள் யாவை, அவற்றில் நாம் ஏன் அக்கறை காட்ட வேண்டும்?
11 யெகோவா தமது ஜனங்களிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் சீனாய் மலையில் வாய்மொழியாக வெளிப்படுத்தப்பட்டன. பிற்பாடு மோசே இரண்டு கற்பலகைகளில் பத்துக் கட்டளைகளைப் பெற்றார். மலையிலிருந்து மோசே இறங்கி வருகையில் இஸ்ரவேலர் வார்ப்பு கன்றுக் குட்டியை வழிபடுவதைக் கண்டார், அப்போது கோபத்தில் அந்தக் கற்பலகைகளை வீசியதால் அவை சுக்குநூறாயின. பிற்பாடு, மோசே செதுக்கிய கற்பலகைகளில் யெகோவா மறுபடியும் அவருக்கு பத்துக் கட்டளைகளை எழுதினார். (யாத்திராகமம் 32:19; 34:1) இந்தக் கட்டளைகள் முதலில் கொடுக்கப்பட்டதிலிருந்து மாறிவிடவில்லை. மோசே அவற்றிற்கு இசைவாக செயல்பட வேண்டியிருந்தது. தாம் எப்படிப்பட்டவர் என்பதையும் வலிமைமிக்க விதத்தில் மோசேக்கு கடவுள் தெளிவுபடுத்தினார்; இவ்வாறு, யெகோவாவின் பிரதிநிதியாக தான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மோசேக்குக் காண்பித்தார். கிறிஸ்தவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணச் சட்டத்தின்கீழ் இல்லை, ஆனால் மோசேக்கு யெகோவா சொன்னவற்றில் அடிப்படை நியமங்கள் பல உள்ளன; அவை இன்றும் மாறிவிடவில்லை, யெகோவாவை வணங்குகிற யாவருக்கும் அவை தொடர்ந்து பொருந்துகின்றன. (ரோமர் 6:14; 13:8-10) அவற்றில் சிலவற்றை நாம் இப்போது ஆராயலாம்.
12. யெகோவா தனிப்பட்ட பக்தியைக் கேட்பது இஸ்ரவேலரை எவ்வாறு பாதித்திருக்க வேண்டும்?
12 யெகோவாவுக்குத் தனிப்பட்ட பக்தியை செலுத்துங்கள். தமக்கு தனிப்பட்ட பக்தியை செலுத்த வேண்டுமென யெகோவா சொன்னதை இஸ்ரவேலர் காதார கேட்டனர். (யாத்திராகமம் 20:2-5) யெகோவாவே மெய் தேவன் என்பதற்கு ஏராளமான அத்தாட்சிகளையும் பார்த்திருந்தனர். (உபாகமம் 4:33-35) பிற தேசத்தார் என்ன செய்தாலும்சரி, தமது ஜனங்கள் மத்தியில் எந்த வகையான விக்கிரக வழிபாட்டிற்கோ ஆவியுலகத் தொடர்பிற்கோ இடமளிக்க முடியாது என்பதை யெகோவா தெளிவாக்கினார். அவருக்கு அவர்கள் செலுத்தும் பக்தி வெறும் சம்பிரதாயமாக இருக்கக்கூடாது. எல்லாரும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பலத்தோடும் அவரிடம் அன்புகூர வேண்டியிருந்தது. (உபாகமம் 6:5, 6) இதை அவர்களுடைய பேச்சிலும் நடத்தையிலும், சொல்லப்போனால் அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் காட்ட வேண்டியிருந்தது. (லேவியராகமம் 20:27; 24:15, 16; 26:1) யெகோவா தனிப்பட்ட பக்தியைக் கேட்கிறார் என்பதை இயேசு கிறிஸ்துவும்கூட தெளிவாக்கினார்.—மாற்கு 12:28-30; லூக்கா 4:8.
13. இஸ்ரவேலர் ஏன் கடவுளுக்கு முற்றிலும் கீழ்ப்படிய கடமைப்பட்டிருந்தார்கள், அவருக்குக் கீழ்ப்படிய எது நம்மை உந்துவிக்க வேண்டும்? (பிரசங்கி 12:13)
13 யெகோவாவுடைய கட்டளைகளுக்குக் கண்டிப்புடன் கீழ்ப்படியுங்கள். இஸ்ரவேலர் யெகோவாவுடன் ஓர் உடன்படிக்கைக்குள் வந்தபோது அவருக்கு முற்றிலும் கீழ்ப்படிவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டதை அவர்களுக்கு நினைப்பூட்ட வேண்டியிருந்தது. அவர்கள் மிகுந்த சுதந்திரத்தோடு வாழ்ந்தார்கள், ஆனால் யெகோவா கட்டளையிட்டிருந்த விஷயங்களுக்கு முற்றிலும் கீழ்ப்படிய கடமைப்பட்டிருந்தார்கள். அப்படி செய்வது கடவுள்மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பிற்கு அத்தாட்சியாக இருக்கும். அதோடு, யெகோவா கொடுத்த கட்டளைகள் அனைத்தும் அவர்களுடைய நன்மைக்கே என்பதால் அவர்களுக்கும் அவர்களுடைய சந்ததியாருக்கும் பயன் தரும்.—யாத்திராகமம் 19:5-8; உபாகமம் 5:27-33; 11:22, 23.
14. ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் தருவதன் முக்கியத்துவத்தைப் பற்றி கடவுள் எப்படி இஸ்ரவேலருக்கு வலியுறுத்தினார்?
14 ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் கொடுங்கள். ஆன்மீக காரியங்களுக்கு கவனம் செலுத்த முடியாதபடி சரீரத் தேவைகளுக்கு இஸ்ரவேலர் அதிக முக்கியத்துவம் கொடுத்துவிடக் கூடாது. அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை உலக நாட்டங்களுக்கு முழுமையாக அர்ப்பணித்துவிடக் கூடாது. பரிசுத்த காரியங்களுக்காக, அதாவது மெய்க் கடவுளை வழிபடுவது சம்பந்தமான காரியங்களுக்காக, வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கி யெகோவா அதைப் பரிசுத்தமாக்கினார். (யாத்திராகமம் 35:1-3; எண்ணாகமம் 15:32-36) பரிசுத்த மாநாடுகளுக்காக ஒவ்வொரு வருடமும் அவர்கள் கூடுதலாக நேரத்தை ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது. (லேவியராகமம் 23:4-44) யெகோவாவின் வல்லமைமிக்க செயல்களைப் பற்றி கலந்தாராய்வதற்கும் அவருடைய வழிகளை ஞாபகப்படுத்துவதற்கும், அவருடைய எல்லா நற்குணத்திற்கும் நன்றி தெரிவிப்பதற்கும் இவை வாய்ப்பளிக்கும். ஜனங்கள் தங்களுடைய பக்தியை யெகோவாவுக்குக் காட்டும்போது, அவர்கள் தேவ பயத்திலும் அன்பிலும் பெருகுவார்கள், அவருடைய வழிகளில் நடப்பதற்கும் உதவி அளிக்கப்படுவார்கள். (உபாகமம் 10:12, 13) அந்தக் கட்டளைகளில் பொதிந்திருந்த ஆரோக்கியமான நியமங்கள் இன்று யெகோவாவின் ஊழியர்களுக்குப் பயனளிக்கின்றன.—எபிரெயர் 10:24, 25.
யெகோவாவின் பண்புகளைப் புரிந்து அவற்றிற்கு நன்றியுணர்வு காட்டுதல்
15. (அ) யெகோவாவின் பண்புகளைப் புரிந்து, நன்றியுணர்வு காட்டுவது ஏன் மோசேக்கு பயனுள்ளதாக இருந்தது? (ஆ) யெகோவாவின் ஒவ்வொரு பண்புகளையும் ஆழ்ந்து சிந்திக்க என்ன கேள்விகள் நமக்கு உதவலாம்?
15 யெகோவாவின் பண்புகளைப் புரிந்து அவற்றிற்கு நன்றியுணர்வு காட்டுவதும்கூட ஜனங்களை நடத்த மோசேக்கு உதவும். மோசேக்கு முன்பாகக் கடவுள் கடந்து செல்கையில் இவ்வாறு அறிவித்ததாக யாத்திராகமம் 34:5-7 குறிப்பிடுகிறது: “கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவர்.” இந்த வார்த்தைகளைத் தியானிக்க நேரம் ஒதுக்குங்கள். உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஒவ்வொரு பண்பும் எதை குறிக்கிறது? அதை யெகோவா எப்படி வெளிப்படுத்தினார்? இந்தப் பண்பை கிறிஸ்தவ கண்காணிகள் எப்படி வெளிக்காட்டலாம்? கடவுளுடைய குறிப்பிட்ட ஒரு குணத்தை நம் ஒவ்வொருவருடைய செயலிலும் எப்படிக் காண்பிக்கலாம்?’ சில உதாரணங்களை இப்பொழுது ஆராயலாம்.
16. கடவுளின் இரக்கத்தைப் பற்றி நாம் எப்படி ஆழமாகப் புரிந்துகொள்ளலாம், இது ஏன் முக்கியம்?
16 யெகோவா ‘இரக்கமும் கிருபையுமுள்ளவர்.’ வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) புத்தகம் உங்களிடம் இருந்தால், “இரக்கம்” (“மெர்ஸி”) என்ற தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளதை ஏன் வாசித்துப் பார்க்கக் கூடாது? அல்லது உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸை அல்லது உவாட்ச்டவர் லைப்ரரி (சிடி-ரோம்)a கம்ப்யூட்டர் புரோகிராமை பயன்படுத்தி இந்தப் பொருளில் ஆராய்ச்சி செய்து பாருங்கள். இரக்கத்தைப் பற்றி குறிப்பிடும் வேதவசனங்களைக் கண்டுபிடிக்க கன்கார்டன்ஸைப் பயன்படுத்துங்கள். யெகோவா சில சமயங்களில் தண்டனையைக் குறைக்க அனுமதிப்பதையும், அவருடைய இரக்கத்தில் கனிவான உணர்ச்சி உட்பட்டிருப்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். தமது ஜனங்களுக்கு விடுதலையளிக்க இது கடவுளை உந்துவிக்கிறது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு இஸ்ரவேலர் பயணம் செய்தபோது சரீரப் பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் கடவுள் அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுத்தது இதற்கு ஓர் அத்தாட்சியாகும். (உபாகமம் 1:30-33; 8:4) தவறுகள் செய்தபோது இரக்கத்துடன் அவர்களை மன்னித்தார். தமது பண்டைய மக்களிடம் அவர் இரக்கத்தைக் காண்பித்தார். அப்படியென்றால், அவருடைய தற்கால ஊழியர்கள் ஒருவருக்கொருவர் எந்தளவு அதிகமாக இரக்கத்தைக் காண்பிக்க வேண்டும்!—மத்தேயு 9:13; 18:21-35.
17. யெகோவாவின் கிருபையைப் பற்றி நாம் புரிந்துகொள்வது எவ்வாறு மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்கிறது?
17 யெகோவாவின் இரக்கத்தோடு அவருடைய கிருபையும் சேர்ந்துள்ளது. உங்களிடம் ஓர் அகராதி இருந்தால், “கிருபை” என்ற வார்த்தையை எடுத்துப் பாருங்கள். யெகோவாவை கிருபையுள்ளவராக வர்ணிக்கும் வேதவசனங்களை அதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். யெகோவாவின் பங்கில் கிருபை என்பது தமது ஜனங்கள் மத்தியில் வசதிவாய்ப்பற்ற நிலையில் வாழ்பவர்கள் மீது அவர் காட்டும் அன்பான அக்கறையையும் உட்படுத்துகிறது. (யாத்திராகமம் 22:26, 27, NW) எந்தவொரு நாட்டிலும், அந்நியர்களும் மற்றவர்களும் வசதிவாய்ப்பற்ற நிலையில் இருப்பதைப் பார்க்கலாம். இப்படிப்பட்டவர்களிடம் பாரபட்சமின்றி நடந்துகொள்ளும்படியும் அவர்களுக்குத் தயவு காட்டும்படியும் தமது ஜனங்களிடம் போதித்தபோது, அவர்களும் எகிப்தில் அந்நியர்களாக இருந்ததை யெகோவா அவர்களுக்கு நினைப்பூட்டினார். (உபாகமம் 24:17-22) இன்று கடவுளுடைய ஜனங்களான நம்மைப் பற்றியென்ன? நம்முடைய பங்கில் கிருபையுள்ளவர்களாக இருப்பது நம்மை ஒன்றுபடுத்துகிறது, யெகோவாவை வணங்கும்படி மற்றவர்களையும் கவர்ந்திழுக்கிறது.—அப்போஸ்தலர் 10:34, 35; வெளிப்படுத்துதல் 7:9, 10.
18. பிற தேசத்தாருடைய வழிகள் சம்பந்தமாக இஸ்ரவேலருக்கு யெகோவா கற்பித்த கட்டுப்பாடுகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
18 என்றாலும், பிற நாட்டவர்மீது அன்பான அக்கறை காட்டுவதற்காக, யெகோவா மீதும் அவருடைய ஒழுக்க நெறிமுறைகள் மீதும் வைத்திருந்த அன்பை இஸ்ரவேலர் விட்டுவிடக் கூடாதிருந்தது. இதனால், சுற்றியிருந்த தேசத்தாருடைய வழிகளையும் அவர்களுடைய மத பழக்கவழக்கங்களையும் ஒழுக்கயீனமான வாழ்க்கை பாணிகளையும் பின்பற்றாதிருக்கும்படி இஸ்ரவேலர் கற்பிக்கப்பட்டார்கள். (யாத்திராகமம் 34:11-16; உபாகமம் 7:1-4) இதுவும் நமக்கு இன்று பொருந்துகிறது. நம் கடவுளாகிய யெகோவா பரிசுத்தராக இருப்பதால், நாமும் பரிசுத்த ஜனமாக இருக்க வேண்டும்.—1 பேதுரு 1:15, 16.
19. தவறிழைப்பது சம்பந்தமாக யெகோவாவின் நோக்குநிலையைப் புரிந்துகொள்வது எப்படி அவருடைய ஜனங்களைப் பாதுகாக்கும்?
19 யெகோவா கோபிப்பதில் தாமதிப்பவராக இருந்தாலும், பாவத்தை தாம் ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை என்பதை மோசே தெளிவாக புரிந்துகொள்ள உதவினார். தமது கட்டளைகளைக் கற்றுக்கொண்டு அவற்றிற்கு இசைய நடக்க ஜனங்களுக்கு அவர் காலத்தை அனுமதிக்கிறார். மனந்திரும்பினால் பாவத்தை யெகோவா மன்னிக்கிறார், ஆனால் வினைமையான தவறு செய்தவர்களுக்குத் தகுந்த தண்டனை கொடுக்காமல் விட்டுவிடுவதில்லை. இஸ்ரவேலருடைய செய்கைக்கு தக்கதாக அவர்களுடைய சந்ததியார் நல்ல பலனையோ தீய பலனையோ பெறுவார்கள் என மோசேக்கு அவர் எச்சரித்தார். கடவுளுடைய ஜனங்கள் யெகோவாவின் வழிகளைப் புரிந்துகொண்டு அதற்கு நன்றியுணர்வு காட்டினால், தங்கள்மீது தாங்களே வருவித்துக் கொண்ட சூழ்நிலைகளுக்கு கடவுளைக் குற்றப்படுத்த மாட்டார்கள் அல்லது அவர் தாமதிக்கிறார் என்ற முடிவுக்கு வந்துவிட மாட்டார்கள்.
20. சக விசுவாசிகளையும் ஊழியத்தில் நாம் சந்திக்கும் ஆட்களையும் தகுந்த முறையில் நடத்த எது உங்களுக்கு உதவும்? (சங்கீதம் 86:11)
20 யெகோவாவையும் அவருடைய வழிகளையும் பற்றிய உங்களுடைய அறிவை ஆழமாக்க நீங்கள் விரும்பினால், தொடர்ந்து ஆராய்ச்சி செய்யுங்கள், பைபிளை வாசித்து தியானியுங்கள். யெகோவாவின் பல்வேறு பண்புகளைப் பற்றிய மனதைக் கவரும் அம்சங்களைக் கவனமாய் ஆராய்ந்து பாருங்கள். கடவுளை எப்படி பின்பற்றலாம், அவருடைய நோக்கத்திற்கு இசைய இன்னும் அதிக நெருக்கமாக எப்படி வாழ்க்கையை அமைக்கலாம் என்பதற்கு ஜெப சிந்தையுடன் கவனம் செலுத்துங்கள். படுகுழிகளைத் தவிர்ப்பதற்கும், சக விசுவாசிகளைத் தகுந்த முறையில் நடத்துவதற்கும் இது உங்களுக்கு உதவும். அதோடு, மற்றவர்களும் நம் மகத்தான கடவுளைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் அவரை நேசிப்பதற்கும் கற்றுக்கொடுக்க உங்களுக்கு உதவும்.
[அடிக்குறிப்பு]
a எல்லாமே யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• மோசேக்கு ஏன் சாந்தகுணம் அவசியமாக இருந்தது, அது ஏன் நமக்கும் முக்கியம்?
• பார்வோனை திரும்பத் திரும்ப சந்தித்து யெகோவாவின் வார்த்தையைச் சொன்னதால் என்ன நன்மை விளைந்தது?
• மோசேக்கு கற்பிக்கப்பட்ட, இன்று நமக்கும்கூட பொருந்துகிற, குறிப்பிடத்தக்க நியமங்கள் சில யாவை?
• நாம் எவ்வாறு யெகோவாவின் பண்புகளை ஆழமாகப் புரிந்துகொள்ளலாம்?
[பக்கம் 21-ன் படம்]
யெகோவாவின் வார்த்தையை பார்வோனுக்கு மோசே உண்மையுடன் தெரிவித்தார்
[பக்கம் 23-ன் படம்]
யெகோவா தாம் எதிர்பார்ப்பவற்றை மோசேக்கு வெளிப்படுத்தினார்
[பக்கம் 24, 25-ன் படம்]
யெகோவாவின் பண்புகளைப் பற்றி தியானியுங்கள்