மாம்சத்திலிருந்த முட்களை பொறுத்துக்கொண்டார்கள்
“நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; . . . அது என்னைக் குட்டும் [“அறைந்துகொண்டே இருக்கும்,” NW] சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.”—2 கொரிந்தியர் 12:7.
1. இன்று ஜனங்கள் எதிர்ப்படும் பிரச்சினைகள் சில யாவை?
தீராத பிரச்சினையுடன் நீங்கள் போராடுகிறீர்களா? உங்களைப் போலவே அநேகர் போராடிக்கொண்டிருக்கிறார்கள். ‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களில்,’ கடும் எதிர்ப்பு, குடும்பப் பிரச்சினைகள், நோய்நொடிகள், பணக் கஷ்டங்கள், மனவேதனைகள், பிரியமானவர்களை மரணத்தில் பறிகொடுத்தல் போன்ற பல சவால்களை உண்மை கிறிஸ்தவர்கள் சமாளித்துக்கொண்டிருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1-5, NW) சில நாடுகளில், உணவுக் குறைபாடுகளாலும் போர்களாலும் பலருடைய உயிர் ஆபத்தில் இருக்கிறது.
2, 3. நாம் எதிர்ப்படும் முட்களைப் போன்ற பிரச்சினைகளால் எதிர்மறையான என்ன மனப்போக்கு ஏற்படலாம், அது எப்படி ஆபத்தானதாக இருக்கலாம்?
2 இப்படிப்பட்ட பிரச்சினைகளால் ஒருவர் அப்படியே இடிந்து போகலாம், அதுவும் இடிமேல் இடிபோல பல பிரச்சினைகள் ஒரே சமயத்தில் தாக்குகையில் சொல்லவே வேண்டாம். “ஆபத்துக் காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” என நீதிமொழிகள் 24:10 சொல்கிறது. ஆம், சோதனைகளை சந்திக்கையில் நாம் சோர்வடைந்துவிட்டால், தேவைப்படும் பலத்தை இழந்துவிடுவோம், அதோடு முடிவுபரியந்தம் சகித்து நிலைத்திருப்பதற்குரிய நம் உறுதியும் ஆட்டங்கண்டுவிடும். எப்படி?
3 நாம் நம்பிக்கை இழந்து சோர்வடைகையில் நம் குறிக்கோள் மீது கவனத்தை ஊன்றாமல் திசைமாறிவிடலாம். உதாரணமாக, நம்முடைய பிரச்சினைகளை பூதாகரமாக கருதி, நம்மீதே நாம் பரிதாபப்பட தொடங்கலாம். “இது எனக்கு ஏன் வந்தது?” என்று கடவுளிடம்கூட முறையிடலாம். இத்தகைய எதிர்மறையான மனப்போக்கு இருதயத்தில் வேர்கொண்டால் அது சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் அரித்துவிடலாம். கடவுளுடைய ஊழியர் ஒருவர் ‘விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராடுவதை’ நிறுத்திவிடும் அளவுக்கும் சோர்வடைந்துவிடலாம்.—1 தீமோத்தேயு 6:12.
4, 5. சில சந்தர்ப்பங்களில், நம்முடைய பிரச்சினைகளுக்கும் சாத்தானுக்கும் என்ன சம்பந்தம் உண்டு, என்றாலும் நமக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
4 நிச்சயமாகவே, நாம் படும் துன்பங்களுக்கு யெகோவா தேவன் காரணரல்ல. (யாக்கோபு 1:13) அவருக்கு உண்மையோடு இருப்பதற்கு நாம் பிரயாசப்படுகிற ஒரே காரணத்திற்காக சில சோதனைகள் நமக்கு நேரிடுகின்றன. மேலும், யெகோவாவை சேவிப்போர் அனைவரும் அவருடைய பிரதான பகைஞன் பிசாசாகிய சாத்தானுடைய தாக்குதலுக்கு இலக்காகிறார்கள். மீந்திருக்கிற கொஞ்ச காலத்தில், “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுளாகிய” அந்தப் பொல்லாங்கன், யெகோவாவை நேசிப்போர் எவரும் அவருடைய சித்தத்தைச் செய்யாதபடி தடுக்க முயலுகிறான். (2 கொரிந்தியர் 4:4, NW) உலகம் முழுவதிலுமுள்ள நமது முழு சகோதர கூட்டத்தாருக்கும் தன்னால் இயன்ற அனைத்து துன்பத்தையும் சாத்தான் தருகிறான். (1 பேதுரு 5:9) இதனால் நமக்கு நேரிடும் எல்லா பிரச்சினைகளுக்கும் அவனே நேரடி காரணம் என சொல்லிவிட முடியாது; ஆனால் நாம் எதிர்ப்படும் பிரச்சினைகளை அவன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, நம்மை இன்னமும் பலவீனப்படுத்த முயலலாம்.
5 சாத்தானோ அவனுடைய போராயுதங்களோ எவ்வளவு பயங்கரமாக இருந்தாலும்சரி, நம்மால் அவனை வெல்ல முடியும்! நாம் எப்படி இதை உறுதியாக நம்பலாம்? ஏனெனில் யெகோவா தேவனே நம் சார்பாக போரிடுகிறார். அவருடைய ஊழியர்களாகிய நாம் சாத்தானுடைய தந்திரங்களை அறிந்திருக்கும்படி பார்த்துக்கொள்கிறார். (2 கொரிந்தியர் 2:11) மெய் கிறிஸ்தவர்களை வாட்டியெடுக்கும் பிரச்சினைகளைக் குறித்து கடவுளுடைய வார்த்தை நமக்கு நிறைய சொல்கிறது. அப்போஸ்தலன் பவுலைப் பற்றி பேசுகையில், “மாம்சத்திலே ஒரு முள்” என்ற சொற்றொடரை பைபிள் பயன்படுத்துகிறது. ஏன்? இந்தச் சொற்றொடரை கடவுளுடைய வார்த்தை எவ்வாறு விளக்குகிறது என்பதை நாம் பார்க்கலாம். அப்போது, பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிக்க யெகோவாவின் உதவியை நாடுவதில் நாம் தனியாக இல்லை என்பதை புரிந்துகொள்வோம்.
சோதனைகளை ஏன் முட்கள் என்கிறோம்
6. “மாம்சத்திலே ஒரு முள்” என பவுல் எதைக் குறிப்பிட்டார், அந்த முள் என்னவாக இருந்திருக்கலாம்?
6 பயங்கர துன்பத்தை அனுபவித்த பவுல், இவ்வாறு ஆவியால் ஏவப்பட்டு எழுதினார்: “நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் [“அறைந்துகொண்டே இருக்கும்,” NW] சாத்தானுடைய தூதனாயிருக்கிறது.” (2 கொரிந்தியர் 12:7) பவுலின் மாம்சத்திலிருந்த இந்த முள் என்ன? ஒரு முள் ஆழமாக குத்திவிட்டால் நிச்சயமாகவே வலியெடுக்கும். ஆகையால் இந்த உருவகம், உடல் ரீதியிலோ உணர்ச்சி ரீதியிலோ அல்லது இரண்டிலுமே பவுலுக்கு வேதனையைத் தந்த ஒன்றை குறிக்கிறது. ஒருவேளை கண்ணில் ஏற்பட்ட தொந்தரவால் அல்லது வேறெதாவது உடல்நலக் குறைவால் பவுல் அவதியுற்றிருக்கலாம். அல்லது, அவர் அப்போஸ்தலனாக இருப்பதற்கு தகுதியுடையவரா என்பதை விவாதித்து அவருடைய பிரசங்கத்தையும் போதனையையும் குறித்து கேள்வி எழுப்பியவர்களை முள் என அடையாளப்படுத்தியிருக்கலாம். (2 கொரிந்தியர் 10:10-12; 11:5, 6, 13) எதுவாயினும், அந்த முள் பவுலை விடுவதாக இல்லை, அவரால் அதை களைந்தெறிய முடியவில்லை.
7, 8. (அ) ‘அறைந்துகொண்டே இருந்தது’ என்ற சொற்றொடர் குறிப்பதென்ன? (ஆ) இப்போது நமக்கு வேதனை தரும் எந்தவொரு முட்களையும் சமாளிப்பது ஏன் முக்கியம்?
7 அந்த முள் பவுலை அறைந்துகொண்டே இருந்தது என்பதை கவனியுங்கள். பவுல் இங்கு பயன்படுத்தின கிரேக்க வினைச்சொல் “கைமுஷ்டிகள்” என்பதற்கு பயன்படுத்தும் வார்த்தையிலிருந்து வருவது கவனிக்கத்தக்கது. அந்தச் சொல், மத்தேயு 26:67-ல் சொல்லர்த்தமாகவும், 1 கொரிந்தியர் 4:11-ல் அடையாள அர்த்தத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வசனங்களில், கைமுஷ்டிகளால் சரமாரியாக அடிப்பதைக் குறிக்கிறது. யெகோவாவின் மீதும் அவருடைய ஊழியர்கள் மீதும் சாத்தானுக்கு இருக்கும் கடும் பகையைப் பொறுத்ததில், ஒரு முள் பவுலை இவ்வாறு அறைந்துகொண்டே இருந்தது பிசாசின் மனதை குளிர்வித்தது என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம். இன்று நாமும் மாம்சத்திலுள்ள முள்ளால் வேதனைப்படுகையில் சாத்தான் அவ்வாறே உச்சி குளிர்ந்துபோகிறான்.
8 ஆகையால் அத்தகைய முட்களை எப்படி சமாளிப்பது என்பதை பவுலைப்போல் நாமும் அறிந்துகொள்ள வேண்டும். அதில்தான் நம்முடைய வாழ்க்கையே இருக்கிறது! நாம் புதிய உலகில் என்றுமாக வாழ வேண்டுமென்றே யெகோவா விரும்புகிறார் என்பதை நினைவில் வையுங்கள், அங்கு முட்களைப் போன்ற பிரச்சினைகளின் இம்சையே நமக்கு இருக்காது. நாம் இந்த அருமையான பரிசைப் பெற கடவுள் தமது பரிசுத்த வார்த்தையாகிய பைபிளில் பல முன்மாதிரிகளை பதிவு செய்திருக்கிறார்; அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் தங்கள் மாம்சத்திலிருந்த முட்களை எப்படி வெற்றிகரமாய் சமாளித்தார்கள் என காட்டியிருக்கிறார். அவர்கள் நம்மை போலவே சாதாரண மனிதர்கள், அபூரணர்கள். ‘மேகம்போன்ற’ இந்த திரளான ‘சாட்சிகளில்’ சிலரைப் பற்றி சிந்திப்பது, “நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓட” உதவும். (எபிரெயர் 12:1) அவர்கள் எதை சகித்தார்கள் என ஆழ்ந்து சிந்திப்பது, சாத்தான் நமக்கு விரோதமாக எந்த முட்களை பயன்படுத்தினாலும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தலாம்.
மேவிபோசேத்தைக் குத்தின முட்கள்
9, 10. (அ) மேவிபோசேத்திற்கு எப்படி மாம்சத்தில் முள் குத்த ஆரம்பித்தது? (ஆ) தாவீது ராஜா மேவிபோசேத்துக்கு எவ்வாறு தயவு காட்டினார், தாவீதின் மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
9 தாவீதின் நண்பனாகிய யோனத்தானின் குமாரன் மேவிபோசேத்தைக் கவனியுங்கள். மேவிபோசேத் ஐந்து வயதாய் இருந்தபோது, அவனுடைய அப்பா யோனத்தானும் அவனுடைய தாத்தா சவுல் அரசனும் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வந்தது. அவனுடைய தாதி பதற்றமடைந்தாள். பிறகு, “அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள்; அவள் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவனானான்.” (2 சாமுவேல் 4:4) மேவிபோசேத் வளருகையில் இந்த ஊனம் சகிக்க முடியாத பெரும் முள்ளாக இருந்திருக்கும்.
10 சில ஆண்டுகளுக்குப் பின் தாவீது ராஜா, தனக்கு யோனத்தானிடம் இருந்த மிகுந்த அன்பின் காரணமாக, மேவிபோசேத்துக்கு அன்புள்ள தயவைக் காட்டினார். சவுலின் சொத்து முழுவதையும் அவனுக்குக் கொடுத்து, சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அந்த நிலத்தின் பராமரிப்பாளனாக தாவீது நியமித்தார். மேலும், “நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய்” என்றும் மேவிபோசேத்திடம் சொன்னார். (2 சாமுவேல் 9:6-10) தாவீது காட்டிய அன்புள்ள தயவு மேவிபோசேத்துக்கு ஆறுதலளித்து, அவனுடைய ஊனத்தின் வேதனையைக் குறைக்க உதவியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எத்தகைய சிறந்த பாடம்! மாம்சத்தில் ஒரு முள்ளோடு போராடுகிறவர்களுக்கு நாமுங்கூட அன்புள்ள தயவைக் காட்ட வேண்டும்.
11. மேவிபோசேத்தைப் பற்றி சீபா என்ன சொன்னான், அது பொய் என்று நமக்கு எப்படி தெரியும்? (அடிக்குறிப்பை காண்க.)
11 அதற்குப் பிறகு, தன் மாம்சத்தில் ‘தைத்த’ மற்றொரு முள்ளோடு மேவிபோசேத் போராட வேண்டியிருந்தது. அவனுடைய வேலைக்காரனாகிய சீபா, தாவீது ராஜாவிடம் அவனைப் பற்றி பொய் சொல்லி பழிதூற்றினான். அப்போது தாவீது தன் குமாரனாகிய அப்சலோமின் கலகத்தினிமித்தம் எருசலேமிலிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தார். மேவிபோசேத் அரச பதவியைப் பெறும் நம்பிக்கையுடன் உண்மையற்றவனாய் எருசலேமிலேயே தங்கிவிட்டானென்று சீபா சொன்னான்.a சீபா சுமத்தின வீண்பழியை நம்பிய தாவீதும் மேவிபோசேத்தின் சொத்து முழுவதையும் அந்தப் பொய்யனுக்கு உடைமையாக கொடுத்துவிட்டார்!—2 சாமுவேல் 16:1-4.
12. மேவிபோசேத் தான் எதிர்ப்பட்ட சூழ்நிலையில் எவ்வாறு செயல்பட்டான், அவன் எவ்வாறு நமக்கு சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறான்?
12 எனினும், கடைசியில் மேவிபோசேத் தாவீதை சந்தித்தபோது, உண்மையில் நடந்ததை விளக்கினான். தாவீதோடு சேர்ந்துகொள்ள தான் தயாராகிக் கொண்டிருந்ததையும், சீபா தனக்குப் பதிலாக போவதாக சொல்லி வஞ்சித்ததையும் விளக்கினான். நடந்த தவறை தாவீது சரிசெய்தாரா? ஓரளவு சரிசெய்தார். சொத்தை அந்த இருவருக்கிடையில் பகிர்ந்தளித்தார். அப்படியானால், இவ்விஷயத்திலும் மேவிபோசேத்தின் மாம்சத்தில் மற்றொரு முள் குத்தியது. அவன் பெருத்த ஏமாற்றமடைந்தானா? தாவீதின் தீர்மானம் சரியல்லவென்று எதிர்ப்பு தெரிவித்தானா? இல்லை, அரசனின் விருப்பத்திற்கு அவன் மனத்தாழ்மையுடன் இணங்கினான். நல்ல அம்சத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தி, இஸ்ரவேலின் அரசர் சுகமாய் திரும்பிவந்ததைக் குறித்து சந்தோஷப்பட்டான். ஊனம், பொய்க் குற்றச்சாட்டு, ஏமாற்றம் ஆகியவற்றை சகித்ததன் மூலம் மேவிபோசேத் நிச்சயமாகவே சிறந்த முன்மாதிரியை வைத்தான்.—2 சாமுவேல் 19:24-30.
நெகேமியா தன் பிரச்சினைகளை சமாளித்தார்
13, 14. எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டுவதற்கு நெகேமியா திரும்பிவந்தபோது, என்ன முட்களை அவர் சகிக்க வேண்டியிருந்தது?
13 நெகேமியா சகித்த அடையாளப்பூர்வமான முட்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில் மதிலிடிந்த எருசலேம் நகரத்திற்கு அவர் திரும்பி வந்த சமயம் அது. அந்த நகரம் எவ்வித பாதுகாப்புமின்றி இருப்பதை அவர் கண்டார். நாடு திரும்பிய யூதர்கள் ஒழுங்கமைக்கப்படாமலும், மனச்சோர்வுற்றும், யெகோவாவின் பார்வையில் அசுத்தமாகவும் இருந்தார்கள். எருசலேமின் மதில்களைத் திரும்பப் புதுப்பித்துக் கட்டும்படி அரசன் அர்தசஷ்டாவிடமிருந்து அதிகாரம் பெற்றிருந்தபோதிலும், அருகிலிருந்த நாடுகளின் அதிபதிகளுக்கு தன் பணி வெறுப்புக்குரியதாக இருந்ததை நெகேமியா சீக்கிரத்தில் தெரிந்துகொண்டார். “இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது.”—நெகேமியா 2:10.
14 நெகேமியாவின் வேலையை நிறுத்துவதற்கு அந்த அயல்நாட்டு எதிரிகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தார்கள். அவர் சோர்வடைந்து பணியைக் கைவிடும்படி செய்ய வேவுகாரர்களை அனுப்பினார்கள்; அவர்களுடைய இந்தச் செயலும், மற்ற எல்லா பயமுறுத்தல்களும், பொய்களும், அவதூறுகளும், மிரட்டல்களும் அவருடைய மாம்சத்தில் முட்களாக குத்திக்கொண்டே இருந்திருக்கும். அந்த எதிரிகளின் தந்திரங்களுக்கு அவர் அடிபணிந்தாரா? இல்லை! கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்து சோர்வுறாமல் இருந்தார். இவ்வாறு, எருசலேமின் மதில்கள் கடைசியாக கட்டி முடிக்கப்பட்டபோது, நெகேமியாவை யெகோவா அன்போடு ஆதரித்ததற்கு அவை நிலையான சாட்சியத்தை அளித்தன.—நெகேமியா 4:1-12; 6:1-19.
15. யூதர்களுக்குள் நிலவிய என்ன பிரச்சினைகள் நெகேமியாவுக்கு பெரும் வேதனை அளித்தன?
15 நெகேமியா ஆளுநராக இருந்ததால் கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் நிலவிய பல பிரச்சினைகளோடும் போராட வேண்டியிருந்தது. இவை ஆழமாய்க் குத்தும் முட்களைப்போல் அவருக்கு இருந்தன; ஏனெனில் யெகோவாவுடன் அந்த ஜனங்களுக்கு இருந்த உறவை அப்பிரச்சினைகள் பாதித்தன. செல்வந்தர்கள் தங்களுடைய ஏழை சகோதரர்களிடம் அதிக வட்டி வாங்கினார்கள். அவர்களுடைய ஏழை சகோதரர்கள் தங்கள் கடன்களை அடைப்பதற்கும் பெர்சிய அரசின் வரிகளை செலுத்துவதற்கும் நிலத்தை இழக்க வேண்டியிருந்தது; தங்களுடைய பிள்ளைகளையுங்கூட அடிமைகளாக விற்க வேண்டியிருந்தது. (நெகேமியா 5:1-10) யூதர்கள் பலர் ஓய்வுநாளை கடைப்பிடிக்காமல் மீறிக்கொண்டிருந்தார்கள், லேவியர்களையும் ஆலயத்தையும் ஆதரிக்க தவறினார்கள். மேலும் “அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளை” சிலர் விவாகம் செய்திருந்தார்கள். இது நெகேமியாவை எவ்வளவாய் வேதனைப்படுத்தியது! ஆனால் இந்த முட்கள் எதுவும் அவரை செயலிழக்க செய்யவில்லை. கடவுளுடைய நீதியுள்ள சட்டங்களை வைராக்கியத்தோடு கடைப்பிடிப்பவராக, அவர் மீண்டும் மீண்டும் ஊக்கமாக பிரயாசப்பட்டார். நெகேமியாவைப் போல், மற்றவர்களுடைய உண்மையற்ற நடத்தை யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்வதிலிருந்து நம்மை விலகிச் செல்ல அனுமதியாதிருப்போமாக.—நெகேமியா 13:10-13, 23-27.
உண்மையுள்ள வேறு பலரும் சமாளித்தார்கள்
16-18. குடும்ப பிரச்சினை எவ்வாறு ஈசாக்கையும் ரெபெக்காளையும், அன்னாள், தாவீது, ஓசியா ஆகியோரையும் முள்ளாக தைத்தது?
16 முட்களைப் போன்ற வேதனையான நிலைமைகளை சமாளித்த வேறு பலரின் முன்மாதிரிகளும் பைபிளில் உள்ளன. குடும்பப் பிரச்சினைகள் அத்தகைய முட்களுக்கு ஒரு பொதுவான காரணமாக இருந்தன. ஏசாவின் இரண்டு மனைவிகள் அவரது பெற்றோரான “ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.” அந்தப் பெண்களோடு வாழும் வாழ்க்கை வெறுப்பாயிருப்பதாகவும் தன் உயிரே தனக்கு வெறுப்பாயிருப்பதாகவும் ரெபெக்காள் சொன்னாள். (ஆதியாகமம் 26:34, 35; 27:46) அன்னாளையும் சிந்தித்துப் பாருங்கள். அவள் மலடியாக இருந்ததால், அவளுடைய கணவரின் மற்றொரு மனைவியாகிய பெனின்னாள் ‘அவளை மிகவும் விசனப்படுத்தினாள்.’ ஒருவேளை வீட்டில் இந்த ஏளனத்தை பெரும்பாலும் அன்னாள் அனுபவித்திருக்கலாம். மற்றவர்களுக்கு முன்பும் பெனின்னாள் அவ்வாறு குத்தலாக பேசினாள்; சீலோவிற்கு அந்தக் குடும்பம் பண்டிகைக்குச் சென்றிருக்கையில் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் அவ்வாறே பேசினாள். இது அன்னாளின் மாம்சத்திலிருந்த முள்ளை இன்னும் ஆழமாக அழுத்தியதைப்போல் இருந்தது.—1 சாமுவேல் 1:4-7.
17 தன் மாமனாராகிய சவுல் அரசனுடைய பொறாமை வெறியால் தாவீது சகித்த துன்பங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள். உயிர் தப்புவதற்கு தாவீது என்கேதியின் வனாந்தரத்திலுள்ள குகைகளில் வாழ வேண்டியிருந்தது. அங்கு செங்குத்தாகவும் ஆபத்தாகவும் இருந்த மலைப்பாறைகளில் ஏற வேண்டியதாக இருந்தது. சவுலுக்கு விரோதமாக அவர் எந்தத் துரோகமும் செய்யாததால், இந்த அநீதி அவரை கசப்புற செய்திருக்கலாம். இருப்பினும் தாவீது புகலிடம் தேடி பல ஆண்டுகள் இவ்வாறே ஓடிக்கொண்டிருக்கவும், சவுலுடைய பொறாமையால் இந்த எல்லாவற்றையும் சகிக்கவும் வேண்டியதாயிற்று.—1 சாமுவேல் 24:14, 15; நீதிமொழிகள் 27:4.
18 தீர்க்கதரிசியாகிய ஓசியா எதிர்ப்பட்ட குடும்ப பிரச்சினையை சிந்தித்துப் பாருங்கள். அவருடைய மனைவி விபசாரியானாள். அவளுடைய ஒழுக்கக்கேடு அவர் நெஞ்சை குத்திய முட்களைப்போல் இருந்திருக்க வேண்டும். வேசித்தனத்தால் முறைகேடாக இரண்டு பிள்ளைகளை அவள் பெற்றெடுத்தபோது மேலும் எவ்வளவு மனவேதனை அடைந்திருப்பார்!—ஓசியா 1:2-9.
19. தீர்க்கதரிசியாகிய மிகாயாவை வேதனைப்படுத்திய துன்புறுத்துதல் என்ன?
19 துன்புறுத்துதல் மாம்சத்தில் மற்றொரு முள்ளாகும். தீர்க்கதரிசியாகிய மிகாயாவின் அனுபவத்தைக் கவனியுங்கள். பொல்லாத அரசனாகிய ஆகாப், பொய்த் தீர்க்கதரிசிகள் சூழ இருந்ததையும் அவர்களுடைய அப்பட்டமான பொய்களை நம்பினதையும் கண்டு நீதியுள்ள மிகாயா நிச்சயமாகவே வேதனைப்பட்டிருப்பார். பின்பு அந்தத் தீர்க்கதரிசிகள் யாவரும் ‘பொய்யின் ஆவியால்’ பேசுகிறார்கள் என்று ஆகாபுக்கு மிகாயா சொன்னபோது, அந்த வஞ்சகர்களின் தலைவன் என்ன செய்தான்? ‘மிகாயாவைக் கன்னத்தில் அடித்தான்’! அதைவிட, கீலேயாத்திலுள்ள ராமோத்தைத் திரும்ப கைப்பற்றுவதற்கு தொடுக்கும் போர் தோல்வியுறும் என்ற யெகோவாவின் எச்சரிக்கையை கேட்டபோது ஆகாப் நடந்துகொண்ட விதம் இன்னும் வேதனைக்குரியது. அவன் மிகாயாவை சிறைச்சாலையில் தள்ளி சொற்ப உணவே கொடுக்கும்படி கட்டளையிட்டான். (1 இராஜாக்கள் 22:6, 9, 15-17, 23-28) எரேமியாவையும் கொலைபாதகர்கள் அவரை துன்புறுத்திய விதத்தையுங்கூட நினைத்துப் பாருங்கள்.—எரேமியா 20:1-9.
20. என்ன முட்களை நகோமி சகிக்க வேண்டியிருந்தது, அவள் எவ்வாறு பலனளிக்கப்பட்டாள்?
20 பிரியமானவர்களை பறிகொடுப்பது, மாம்சத்தில் ஒரு முள்ளைப் போல இருக்கும் மற்றொரு கசப்பான அனுபவம். கணவரையும் இரண்டு குமாரரையும் பறிகொடுத்த நகோமி அந்தப் பெரும் இழப்பை சகிக்க வேண்டியிருந்தது. அந்தப் பேரிடிகளால் நிலைகுலைந்தவளாக பெத்லெகேமுக்குத் திரும்பினாள். தன்னை நகோமி என்றல்ல, மாராள் என்று அழைக்கும்படி தன் உறவினர்களிடம் சொன்னாள். மாராள் என்ற பெயர் அவளுடைய அனுபவங்கள் ஏற்படுத்திய மனக்கசப்பைக் குறித்தது. எனினும் முடிவில், யெகோவா ஒரு பேரனைக் கொடுத்து அவளுடைய சகிப்புத் தன்மைக்கு பலனளித்தார். அவன் மேசியாவின் வம்சாவளி ஆனான்.—ரூத் 1:3-5, 19-21; 4:13-17; மத்தேயு 1:1, 5.
21, 22. எவ்வாறு யோபு பெரும் இழப்புகளுக்கு ஆளானார், அவற்றிற்கு அவர் எவ்வாறு பிரதிபலித்தார்?
21 யோபு தன் எல்லா கால்நடைகளையும் ஊழியக்காரரையும் இழந்ததை மட்டுமல்லாமல், தன் அருமை பிள்ளைகள் பத்து பேரையும்கூட திடீரென்று கொடிய மரணத்தில் பறிகொடுத்ததைக் கேள்விப்பட்டபோது எவ்வளவாய் அதிர்ச்சியில் உறைந்திருப்பார் என்பதை சிந்தித்துப் பாருங்கள். திடீரென்று அவருடைய உலகமே நொறுங்கிவிட்டதைப் போல தோன்றியது! இடிமேல் இடியாக வந்த துயரங்களால் யோபு நிலைகுலைந்திருக்கையில், சாத்தான் அவரை நோயினாலும் வாதித்தான். இந்தக் கொடிய நோய் தன் உயிரைக் குடித்துவிடுமென யோபு நினைத்திருக்கலாம். வேதனையை தாங்க முடியாமல், மரணமே தனக்கு விடிவைத் தரும் என நினைத்தார்.—யோபு 1:13-20; 2:7, 8.
22 இவையெல்லாம் போதாது என்பதுபோல் அவருடைய மனைவியும் பொறுக்க முடியாத துயரத்தாலும் வேதனையாலும் அவரிடம் வந்து “தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும்” என்றாள். புண்பட்டிருந்த அவருடைய மாம்சத்தில் எத்தகைய முள்ளாக இது தைத்தது! அடுத்தபடியாக யோபின் மூன்று தோழர்கள் அவருக்கு ஆறுதலாக நாலு வார்த்தை சொல்வதற்குப் பதிலாக, போலி நியாயம் பேசி, அவர் செய்திருந்த இரகசிய பாவங்கள்தான் அவருடைய துன்பத்திற்குக் காரணம் என்று அவர்மீதே பழிசுமத்தினார்கள். அவர்களுடைய தவறான விவாதங்கள் அவருடைய மாம்சத்திலிருந்த முட்களை மேலும் மேலும் ஆழமாக குத்தின. அதோடு, இந்தப் பயங்கர துன்பங்கள் தனக்கு ஏன் சம்பவிக்கின்றன என்பதை யோபு அறியாதிருந்ததையும் நினைவில் வையுங்கள்; தன் உயிருக்கு ஆபத்து நேரிடாது என்பதையும் அவர் அறியவில்லை. எனினும், “இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப் பற்றிக் குறைசொல்லவுமில்லை.” (யோபு 1:22; 2:9, 10; 3:3; 14:13; 30:17) ஒரே சமயத்தில் பல முட்கள் தைத்தபோதிலும், தன் உத்தம போக்கை அவர் ஒருபோதும் கைவிடவில்லை. இது எத்தனை ஊக்கம் அளிக்கிறது!
23. நாம் சிந்தித்த உண்மையுள்ளவர்கள், மாம்சத்தில் பல்வேறு முட்களை எப்படி சமாளிக்க முடிந்தது?
23 இதுவரை பார்த்த முன்மாதிரிகளை மட்டுமல்ல, இன்னும் ஏராளமான முன்மாதிரிகளையும் பைபிள் குறிப்பிடுகிறது. உண்மையுள்ள இந்த ஊழியர்கள் அனைவரும் அடையாளப்பூர்வ முட்களோடு போராடினார்கள். எத்தனை விதவிதமான பிரச்சினைகளை அவர்கள் எதிர்ப்பட்டார்கள்! இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு விஷயம் உண்டு. அவர்கள் யாரும் யெகோவாவின் சேவையை விட்டு விலகவில்லை. வேதனைமிகுந்த சோதனைகள் அனைத்தின் மத்தியிலும், யெகோவா அருளிய பலத்தால் சாத்தானை சமாளித்தார்கள். எப்படி? அடுத்த கட்டுரை இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும்; நம்முடைய மாம்சத்தில் ஒரு முள்ளைப்போல் இருக்கிற எதையும் நாமுங்கூட எப்படி சமாளிக்கலாம் என்றும் காட்டும்.
[அடிக்குறிப்பு]
a நன்றியுணர்வும் மனத்தாழ்மையுமே உருவான மேவிபோசேத் அப்படிப்பட்ட ஒரு பேராசைமிக்க சதித் திட்டத்தை தீட்டியிருக்கவே முடியாது. தன் தகப்பனாகிய யோனத்தான் எவ்வாறு உண்மையுள்ளவராக வாழ்ந்தார் என்பதை அவன் நன்றாகவே அறிந்திருப்பான். அரசனாகிய சவுலின் குமாரனாக யோனத்தான் இருந்தபோதிலும், இஸ்ரவேலின்மீது அரசனாக இருக்கும்படி யெகோவாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தாவீதே என மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொண்டார். (1 சாமுவேல் 20:12-17) மேவிபோசேத்தின் தேவபயமுள்ள தகப்பனாகவும் தாவீதின் உண்மைப் பற்றுறுதியுள்ள நண்பனாகவும் இருந்த யோனத்தான், அரசதிகாரத்தை ஆர்வத்துடன் நாடும்படி தன் இளம் குமாரனுக்குக் கற்பித்திருக்க மாட்டார்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• நாம் எதிர்ப்படும் பிரச்சினைகளை ஏன் மாம்சத்திலுள்ள முட்களுக்கு ஒப்பிடலாம்?
• மேவிபோசேத்தும் நெகேமியாவும் சகிக்க வேண்டியதாயிருந்த முட்கள் சில யாவை?
• மாம்சத்தில் பல்வேறு முட்களைச் சகித்த பலருடைய வேதப்பூர்வ உதாரணங்களில் எது உங்கள் நெஞ்சை மிகவும் நெகிழ வைக்கிறது, ஏன்?
[பக்கம் 15-ன் படங்கள்]
மேவிபோசேத் ஊனத்தையும் வீண் பழியையும் ஏமாற்றத்தையும் சமாளிக்க வேண்டியிருந்தது
[பக்கம் 16-ன் படம்]
நெகேமியா எதிர்ப்பின் மத்தியிலும் தொடர்ந்து செயல்பட்டார்