ஞானமான தீர்மானங்களை நீங்கள் எப்படி செய்யலாம்
தெரிவு செய்யும் சுயாதீனம் கடவுள் தந்த பரிசு. அது இல்லாதிருந்தால் நம்முடைய செயல்கள்மீது எந்தக் கட்டுப்பாடுமின்றி ஏறக்குறைய இயந்திர மனிதனைப் போல் இயங்கிக் கொண்டிருந்திருப்போம். ஆனால், அது இருப்பதால் நாம் சவால்களையும் எதிர்ப்படுகிறோம். தெரிவு செய்யும் சுதந்திரம் நமக்கு இருப்பதால் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தீர்மானங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.
நாம் எடுக்கும் அநேக தீர்மானங்கள் சின்ன சின்ன விஷயங்களுக்குத்தான். ஆனால் என்ன வேலையைத் தேர்ந்தெடுப்பது, கலியாணம் செய்துகொள்ளலாமா வேண்டாமா போன்ற பிற தீர்மானங்கள் நம் எதிர்காலம் முழுவதையுமே பாதிக்கலாம். இன்னும் சில தீர்மானங்கள் மற்றவர்களை பாதிக்கின்றன. பெற்றோர் செய்யும் சில தீர்மானங்கள் பிள்ளைகளின்மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும், நாம் செய்யும் அநேக தீர்மானங்களுக்காக கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்.—ரோமர் 14:12.
உதவி தேவை
தீர்மானங்கள் செய்வதைப் பொருத்ததில் மனிதர்கள் நல்ல பதிவை ஏற்படுத்தவில்லை. பதிவாகியுள்ள மனிதனின் முதன்முதல் தீர்மானமே பெரும் துன்பத்துக்கு காரணமானது. சாப்பிடக் கூடாது என கடவுள் தெளிவாக கட்டளை கொடுத்திருந்த கனியை ஏவாள் சாப்பிட தீர்மானித்தாள். அவளுடைய தெரிவு தன்னல ஆசையால் விளைந்தது; அவளுடைய கணவனும் அவளுடன் சேர்ந்துகொண்டு கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி அது செய்தது. அதன் விளைவு: மனிதகுலம் அனுபவிக்கும் பெரும் துன்பம். அநேக சந்தர்ப்பங்களில், இன்னமும் மனிதர்கள் சரியான நியமங்களை புறக்கணித்து பெரும்பாலும் தன்னல ஆசைகளின் அடிப்படையிலேயே தீர்மானங்களைச் செய்கிறார்கள். (ஆதியாகமம் 3:6-19; எரேமியா 17:9) முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய சமயங்களில், அடிக்கடி நம் வரையறைகளை உணர்கிறோம்.
எனவே முக்கிய தீர்மானங்களைச் செய்கையில், மனிதருக்கு மேலான ஊற்றுமூலங்களின் உதவியைப் பலர் நாடுவதில் ஆச்சரியமேதுமில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் நேபுகாத்நேச்சார் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கையில் தீர்மானம் எடுக்கும் நிலையை எதிர்ப்பட்டதைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. அவர் அரசராக இருந்தபோதிலும், ஆவிகளிடம் தகவல் கேட்டறிய ‘சகுனம் பார்க்க’ விரும்பினார். ஆகவே பதிவு இவ்வாறு சொல்கிறது: “அம்புகளை ஆட்டுகிறான், வீட்டு விக்கிரகங்களை உசாவுகிறான், ஈரலால் குறிபார்க்கிறான்.” (எசேக்கியேல் 21:21, தி.மொ.) அவ்வாறே இன்றும் பலர் ஆவிகளின் உதவிக்காக குறிசொல்லுகிறவர்களையும், சோதிடரையும், மற்ற வழிகளையும் நாடுகின்றனர். ஆனால் இவை ஏமாற்றுபவை, தவறாக வழிநடத்துபவை.—லேவியராகமம் 19:31.
சரித்திரம் முழுவதிலும் ஞானமான தீர்மானங்களை எடுக்க மனிதருக்கு உதவிய, முற்றிலும் நம்பத்தக்க ஒருவர் இருக்கிறார். அவர்தான் யெகோவா தேவன். உதாரணமாக, பூர்வ காலங்களில் கடவுள் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஊரீமையும் தும்மீமையும் கொடுத்திருந்தார். அவை ஒருவேளை பரிசுத்த சீட்டுகளாக, முக்கியமான சந்தர்ப்பங்களில் தீர்மானங்களை எடுக்க அந்த ஜனத்தால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஊரீம், தும்மீம் மூலமாக யெகோவா அவர்களுடைய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்தார், இஸ்ரவேலின் மூப்பர்களுடைய தீர்மானங்கள் தம்முடைய சித்தத்திற்கு இசைவாக இருந்ததை நிச்சயப்படுத்திக் கொள்ள அவற்றின் மூலம் உதவினார்.—யாத்திராகமம் 28:30; லேவியராகமம் 8:8; எண்ணாகமம் 27:21.
மற்றொரு உதாரணத்தைக் கவனியுங்கள். மீதியானியருக்கு எதிராக இஸ்ரவேலரின் படைகளை வழிநடத்தும்படி கிதியோன் அழைக்கப்பட்டார். அத்தகைய மேன்மையான சிலாக்கியத்தை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதை தீர்மானிக்கும் நிலையை அவர் எதிர்ப்பட்டார். யெகோவா தன்னை ஆதரிப்பார் என்பதை மீண்டும் உறுதியளிக்கும்படி அவரிடமிருந்து கிதியோன் அற்புத அடையாளத்தை கேட்டார். இரவில் வெளியே வைக்கப்பட்ட மயிர் தோலில் மட்டுமே பனி பெய்து ஈரமாகும்படியும் சுற்றியிருக்கும் தரை காய்ந்திருக்கும்படியும் ஜெபித்தார். மறுநாள் இரவில், அந்தத் தோல் காய்ந்திருக்கவும் சுற்றியிருக்கும் தரை பனி பெய்து ஈரமாகும்படியும் கேட்டார். கிதியோன் கேட்ட அடையாளங்களை யெகோவா தயவாய் தந்தருளினார். அதனால் கிதியோன் சரியான தீர்மானத்தை எடுத்தார், கடவுளுடைய உதவியால் இஸ்ரவேலரின் சத்துருக்களை முற்றும் முழுக்க முறியடித்தார்.—நியாயாதிபதிகள் 6:33-40; 7:21, 22.
இன்று எப்படி உதவுகிறார்?
இன்று தம்முடைய ஊழியர்கள் முக்கிய தீர்மானங்களை எடுக்க வேண்டிய சமயங்களில் யெகோவா இன்னமும் உதவுகிறார். எப்படி? கிதியோனைப் போல், ‘தோல் பரிட்சைகள்’ மூலம் எது சரியான தீர்மானம் என்பதை நமக்கு காட்டி உதவும்படி யெகோவாவைக் கேட்க வேண்டுமா? ராஜ்ய பிரசங்கிகள் அதிகம் தேவைப்படும் இடத்திற்குப் போவதா வேண்டாமா என்பதைக் குறித்து ஒரு தம்பதியினர் யோசித்து வந்தார்கள். தங்கள் தீர்மானத்திற்கு உதவியாக ஒரு பரிசோதனையை ஏற்பாடு செய்தார்கள். ஒரு குறிப்பிட்ட விலைக்கு தங்கள் வீட்டை விற்க தீர்மானித்தார்கள். குறிப்பிட்ட தேதிக்குள் தீர்மானித்த விலைக்கோ அதற்கு அதிகமாகவோ அந்த வீடு விலைபோனால் தாங்கள் மாறி செல்ல கடவுள் விரும்புகிறார் என்பதற்கு அடையாளம் என முடிவு செய்தார்கள். அந்த வீடு விலைபோகவில்லை என்றால் தாங்கள் செல்வதில் கடவுளுக்கு விருப்பமில்லை என்பதே அர்த்தம் என எண்ணினார்கள்.
அந்த வீடு விலைபோகவில்லை. இந்தத் தம்பதியினர் தேவை அதிகமிருக்கும் இடத்திற்குப் போய் ஊழியம் செய்வதில் யெகோவாவுக்கு விருப்பமில்லை என்பதற்கு அது அடையாளமா? சொல்லப்போனால், தம்முடைய ஊழியர்களுக்கு யெகோவா என்ன செய்கிறார் அல்லது என்ன செய்வதில்லை என ஆணித்தரமாக குறிப்பிடுவது வரம்புக்குமீறிய செயலாக இருக்கும். நமக்கான தம்முடைய சித்தத்தை தெளிவுபடுத்த யெகோவா இன்று ஒருபோதும் தலையிடுவதில்லை என்றும் நாம் சொல்ல முடியாது. (ஏசாயா 59:1) ஆனால் நம் முக்கிய தீர்மானங்களில் அப்படி தலையிடுவதை எதிர்பார்க்க, அதாவது நமக்காக கடவுள் தீர்மானம் எடுக்கும்படி விட்டுவிட நமக்கு உரிமை இல்லை. ஏன், கிதியோனும்கூட தன் வாழ்க்கையில் பெரும்பாலான சமயங்களில், யெகோவாவிடமிருந்து எந்த அற்புத அடையாளங்களையும் பெறாமலே தீர்மானங்களைச் செய்ய வேண்டியிருந்ததே!
என்றபோதிலும், கடவுளுடைய வழிநடத்துதல் கிடைக்கும் என்றே பைபிள் உறுதியளிக்கிறது. நம்முடைய காலத்தைக் குறித்து அது இவ்வாறு முன்னறிவிக்கிறது: “நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்.” (ஏசாயா 30:21) முக்கிய தெரிவுகளை செய்ய வேண்டிய சந்தர்ப்பங்களில் நம்முடைய தீர்மானங்கள் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாகவும், அவருடைய மேம்பட்ட ஞானத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள முயலுவது முற்றிலும் சரியானதே. எப்படி? அவருடைய வார்த்தையை ஆராய்ந்து, அது ‘நம்முடைய கால்களுக்குத் தீபமும், நம் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்க’ அனுமதிப்பதன் மூலமேயாகும். (சங்கீதம் 119:105; நீதிமொழிகள் 2:1-6) இதைச் செய்வதற்கு, பைபிளிலிருந்து திருத்தமான அறிவை பெறுவதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். (கொலோசெயர் 1:9, 10) மேலும் தீர்மானம் எடுக்க வேண்டிய சமயங்களில் அக்காரியத்துடன் சம்பந்தப்பட்ட எல்லா பைபிள் நியமங்களையும் நாம் கவனமாய் ஆராய்வது அவசியம். இத்தகைய ஆராய்ச்சி, ‘அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்ள’ நமக்கு உதவும்.—பிலிப்பியர் 1:9, 10, NW.
மேலும், யெகோவா நமக்கு செவிசாய்ப்பார் என்ற நம்பிக்கையுடன் அவரிடம் ஜெபிக்க வேண்டும். நாம் என்ன தீர்மானம் செய்ய வேண்டியுள்ளது, சிந்தித்து தெரிவு செய்வதற்கு நம்முன் என்னென்ன தெரிவுகள் இருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் நம்முடைய அன்பான கடவுளிடம் விளக்குவது எவ்வளவு ஆறுதலளிக்கும்! பின்பு, சரியான தீர்மானத்தை எடுக்க வழிநடத்தும்படி நாம் நம்பிக்கையுடன் அவரிடம் கேட்கலாம். பொருத்தமான பைபிள் நியமங்களை பரிசுத்த ஆவி பெரும்பாலும் நமக்கு நினைப்பூட்டும் அல்லது நம்முடைய சூழ்நிலையுடன் சம்பந்தப்பட்ட ஒரு வேதவசனத்தை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள அது நமக்கு உதவலாம்.—யாக்கோபு 1:5, 6.
சபையில் முதிர்ச்சியுள்ளவர்களையும் நமக்கு யெகோவா அளித்திருக்கிறார். நம் தீர்மானங்களைக் குறித்து அவர்களுடன் கலந்து பேசலாம். (எபேசியர் 4:12, 13) எனினும், மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்கையில், தாங்கள் எடுக்க விரும்பும் தீர்மானத்தை ஆமோதிப்பவரைக் கண்டுபிடிக்கும் வரை ஒவ்வொருவராக அணுகிக் கொண்டிருப்போரைப் போல் நாம் இருக்கக் கூடாது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் தீர்மானத்தை ஆமோதிப்பவரின் புத்திமதியைத்தான் பின்பற்றுவார்கள். ரெகொபெயாமின் முன்மாதிரியையும் ஒரு படிப்பினையாக மனதிற்கொள்ள வேண்டும். முக்கிய தீர்மானத்தை எடுக்க வேண்டிய கட்டத்தில் அவன் தன் தகப்பனோடு ஊழியம் செய்திருந்த முதியோரிடமிருந்து சிறந்த ஆலோசனையைப் பெற்றான். ஆனால் அவர்களுடைய ஆலோசனையைப் பின்பற்றாமல் தன் வயதுள்ள வாலிபரிடம் ஆலோசனை கேட்டான். அந்த ஆலோசனைக்கு இசைவாக துளிகூட ஞானமில்லாத தீர்மானத்தையே செய்தான். விளைவு? ராஜ்யத்தில் பெரும் பாகத்தை இழந்தான்.—1 இராஜாக்கள் 12:1-17.
வாழ்க்கையில் அனுபவ பாடம் பயின்றவர்களிடமும் வேதவசனங்களைப் பற்றி நன்றாய் அறிந்திருப்பவர்களிடமும், சரியான நியமங்களுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுகிறவர்களிடமும் ஆலோசனையை நாடுங்கள். (நீதிமொழிகள் 1:5; 11:14; 13:20) முடிந்தால், உட்பட்டுள்ள நியமங்களையும் நீங்கள் சேகரித்த எல்லா தகவல்களையும் குறித்து ஆழ்ந்து யோசிக்க நேரமெடுங்கள். யெகோவாவினுடைய வார்த்தையின் அடிப்படையில் காரியங்களை ஆராய்கையில் சரியான தீர்மானம் தெள்ளத் தெளிவாய் தெரியலாம்.—பிலிப்பியர் 4:6, 7.
நாம் செய்யும் தீர்மானங்கள்
சில தீர்மானங்கள் எளிதில் செய்யப்படுகின்றன. சாட்சி கொடுப்பதை நிறுத்தும்படி கட்டளை கொடுக்கப்பட்டபோது, இயேசுவைக் குறித்து தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும் என்பதை அப்போஸ்தலர்கள் அறிந்திருந்தார்கள். எனவே மனுஷருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் கடவுளுக்கே கீழ்ப்படிய வேண்டும் என்ற தங்கள் தீர்மானத்தை உடனடியாக ஆலோசனை சங்கத்துக்கு தெரிவித்தார்கள். (அப்போஸ்தலர் 5:28, 29) மற்ற தீர்மானங்கள் அதிகம் சிந்திக்க வேண்டியவையாய் இருக்கலாம், ஏனெனில் அவற்றின் சம்பந்தமாக நேரடி பைபிள் குறிப்புகள் இருக்காது. இருப்பினும், செய்ய வேண்டிய சிறந்த தீர்மானத்தை பைபிள் நியமங்கள் பொதுவாக சுட்டிக் காட்டும். உதாரணமாக, இன்றைய பொழுதுபோக்கு காரியங்கள் பல இயேசுவின் காலத்தில் இராதபோதிலும், யெகோவாவுக்குப் பிரியமானவை எவை, பிரியமில்லாதவை எவை என்பதைப் பற்றிய தெளிவான பைபிள் குறிப்புகள் உள்ளன. ஆகவே, வன்முறை, பாலுறவு ஒழுக்கக்கேடு அல்லது கலகம் செய்தல் போன்றவற்றை ஊக்குவிக்கும் பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிற எந்த கிறிஸ்தவரும் தவறான தீர்மானத்தை எடுத்தவரே.—சங்கீதம் 97:10; யோவான் 3:19-21; கலாத்தியர் 5:19-23; எபேசியர் 5:3-5.
சில சமயங்களில், இரண்டு தீர்மானங்களும் சரியானவையாக இருக்கலாம். தேவை அதிகமுள்ள இடத்தில் சேவிப்பது அருமையான சிலாக்கியம், அது பெரும் ஆசீர்வாதங்களுக்கு வழிநடத்தலாம். ஆனால் ஒருவர் ஏதோவொரு காரணத்தினிமித்தம் அவ்வாறு செல்லாமலிருக்க தீர்மானித்தால் அவர் இன்னும் அதே சபையில் சிறந்த வேலையை செய்துவரலாம். யெகோவாவிடம் நமக்குள்ள பக்தியின் ஆழத்தை அல்லது நம் வாழ்க்கையில் எதற்கு முக்கிய இடம் என்பதைக் காட்ட வாய்ப்பளிக்கும் தீர்மானத்தை நாம் எப்போதாவது எதிர்ப்படலாம். இவ்வாறு, உண்மையில் நம்முடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை வெளிக்காட்ட தெரிவு செய்யும் சுதந்திரத்தை பயன்படுத்த யெகோவா நம்மை அனுமதிக்கிறார்.
அடிக்கடி, நம்முடைய தீர்மானங்களால் மற்றவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். உதாரணமாக, நியாயப்பிரமாண சட்டங்களின் பல கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெற்றிருப்பதற்காக முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சந்தோஷப்பட்டார்கள். எடுத்துக்காட்டாக, அவர்கள் நியாயப்பிரமாணத்தின்கீழ் அசுத்தமானதாக கருதப்பட்ட உணவை புசிக்கலாம் அல்லது தவிர்க்கலாம். இருப்பினும், இந்த சுதந்திரத்தைப் பயன்படுத்துவதைக் குறித்து தீர்மானிக்கையில் மற்றவர்களுடைய மனசாட்சியை கருத்தில் கொள்ளும்படி அவர்கள் ஊக்குவிக்கப்பட்டார்கள். இதன் சம்பந்தமாக “இடறலற்றவர்களாயிருங்கள்” என பவுல் சொன்ன குறிப்பு நாம் செய்யும் பல தீர்மானங்களுக்கும் பொருந்தலாம். (1 கொரிந்தியர் 10:33) மற்றவர்களை இடறலடைய செய்யக்கூடாது என்ற ஆவல், நாம் செய்யும் தீர்மானங்கள் பலவற்றைக் கட்டுப்படுத்துவதில் உதவும். மேலும், அயலானில் அன்புகூருவது இரண்டாவது பிரதான கட்டளை.—மத்தேயு 22:36, 39.
நம்முடைய தீர்மானங்களின் விளைவு
நல்மனசாட்சியோடு பைபிள் நியமங்களுக்கு இசைவாக செய்யப்படும் தீர்மானங்கள், முடிவில் நல்ல பலனை எப்போதும் பெற்றுத் தரும். கொஞ்ச காலத்திற்கு அவை சில தியாகங்களை உட்படுத்தலாம் என்பது உண்மைதான். இயேசுவைக் குறித்து தொடர்ந்து பிரசங்கிக்கப் போகும் தங்கள் தீர்மானத்தை ஆலோசனை சங்கத்தில் அப்போஸ்தலர்கள் தெரிவித்தபோது அவர்கள் அடிக்கப்பட்டார்கள், பின்பே விடுவிக்கப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 5:40) சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று எபிரெயர்களும் நேபுகாத்நேச்சார் நிறுத்திய பொற்சிலையை வணங்கப் போவதில்லை என தீர்மானித்தபோது, தங்கள் உயிரையே ஆபத்திற்கு உட்படுத்தினார்கள். தாங்கள் எடுக்கும் தீர்மானத்தால் மரணமும் நேரிடலாம் என தெரிந்தும் அவர்கள் அதை சந்திக்க தயாராய் இருந்தார்கள். ஆனால் கடவுளுடைய அங்கீகாரத்தையும் ஆசீர்வாதத்தையும் பெறுவார்கள் என்பதை அறிந்திருந்தார்கள்.—தானியேல் 3:16-19.
மனசாட்சிக்கு இசைய தீர்மானத்தை எடுத்த பிறகு கஷ்டங்களை சந்தித்தால், அந்தத் தீர்மானம் தவறான ஒன்று என்ற முடிவுக்கு வர அது காரணமல்ல. மிகச் சிறந்த நோக்கத்தையுடைய தீர்மானங்களையும்கூட, “சமயமும் எதிர்பாரா சம்பவமும்” மோசமாக பாதிக்கலாம். (பிரசங்கி 9:11, NW) மேலும், நாம் செய்திருக்கும் ஒப்பந்தத்தின் ஆழத்தை அறிய யெகோவா சிலசமயங்களில் துன்பத்தை அனுமதிக்கிறார். ஓர் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு முன்பாக யாக்கோபு இரவு முழுவதும் ஒரு தேவதூதருடன் போராட வேண்டியிருந்தது. (ஆதியாகமம் 32:24-26) நாமும் சரியான காரியத்தைச் செய்யும் போதுகூட துன்பத்தை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம். இருப்பினும், நம்முடைய தீர்மானங்கள் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாய் இருக்கையில், சகித்து நிலைத்திருக்க அவர் நமக்கு உதவி செய்வார் என்றும், முடிவில் ஆசீர்வதிப்பார் என்றும் நம்பிக்கையுடன் இருக்கலாம்.—2 கொரிந்தியர் 4:7.
ஆகையால், முக்கிய தீர்மானம் எடுக்கையில் உங்களுடைய சொந்த ஞானத்தை சார்ந்திருக்காதீர்கள். பின்பற்றத்தக்க பைபிள் நியமங்களுக்காக தேடுங்கள். அந்த விஷயத்தைக் குறித்து யெகோவாவிடம் பேசுங்கள். முடிந்தால், முதிர்ச்சியுள்ள உடன் கிறிஸ்தவர்களிடம் கலந்து பேசுங்கள். பின்பு தைரியமாயிருங்கள். கடவுள் தந்த தெரிவு செய்யும் சுதந்திரத்தை பொறுப்பான விதத்தில் உபயோகியுங்கள். நல்ல தீர்மானத்தைச் செய்து, உங்கள் இருதயம் யெகோவாவுக்கு முன்பாக நேர்மையாய் இருப்பதைக் காட்டுங்கள்.
[பக்கம் 28-ன் படம்]
முக்கிய தீர்மானங்களைச் செய்வதற்கு முன்பு கடவுளுடைய வார்த்தையை ஆராய்ந்து பாருங்கள்
[பக்கம் 28, 29-ன் படங்கள்]
நீங்கள் செய்யவிருக்கும் தீர்மானங்களைக் குறித்து யெகோவாவிடம் பேசுங்கள்
[பக்கம் 30-ன் படம்]
உங்கள் முக்கிய தீர்மானங்களைக் குறித்து முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களுடன் கலந்து பேசலாம்