வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2023 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
ஜூலை 3-9
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எஸ்றா 4-6
“வேலையைத் தடுக்காதீர்கள்”
சகரியா பார்த்ததை நீங்களும் பார்க்கிறீர்களா?
13 ஆலயத்தைக் கட்டும் வேலை தடை செய்யப்பட்டுத்தான் இருந்தது. ஆனாலும், மக்களை வழிநடத்திய தலைமைக் குருவான யெசுவாவும், அதாவது யோசுவாவும், ஆளுநர் செருபாபேலும் “ஆலயத்தைத் திரும்பக் கட்ட ஆரம்பித்தார்கள்.” (எஸ்றா 5:1, 2) அது ஒரு தப்பான தீர்மானமாக யூதர்கள் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். ஏனென்றால் ஆலயத்தைத் திரும்பக் கட்டினால், அது கண்டிப்பாக எதிரிகளுக்குத் தெரியவரும். அந்த வேலையைத் தடுப்பதற்கு அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வார்கள். அதனால், யெகோவாவின் உதவி தங்களுக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை யோசுவாவுக்கும் செருபாபேலுக்கும் தேவைப்பட்டது. யெகோவாவும் அந்த நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்தார். எப்படி?
w86-E 2/1 பக். 29, பெட்டி பாரா. 2-3
யெகோவாவின் “கண் யூத ஜனங்களின் பெரியோர்கள்மேல் இருந்தது”
எதிர்ப்பவர்களுக்கு யூத பெரியோர்கள் என்ன பதில் சொல்வார்கள்? யூத பெரியோர்கள் பயந்துபோயிருந்தால், ஆலய கட்டுமான வேலை அப்படியே நின்றுபோயிருக்கும். அதேசமயத்தில், கேள்வி கேட்ட அதிகாரிகளை கோபப்படுத்தியிருந்தால், கட்டுமான வேலைக்கு தடை வந்திருக்கும். ரொம்ப கவனமாக இருக்க வேண்டிய ஒரு சூழ்நிலையாக அது இருந்தது. அதனால், பதில் சொல்வதற்கு முன்பு ஆளுநர் செருபாபேலிடமும் தலைமை குரு யோசுவாவிடமும் கலந்துபேசிவிட்டு, ஞானமான ஒரு பதிலை சொன்னார்கள். யூதர்கள் மறுபடியும் ஆலயத்தை கட்டலாம் என்று கோரேசு ராஜா கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு கட்டளை கொடுத்திருந்தார்; அந்த கட்டளையை யூத பெரியோர்கள் அதிகாரிகளிடம் ஞாபகப்படுத்தினார்கள். பொதுவாக, பெர்சியர்கள் ஒரு சட்டத்தை போட்டால் அதை மாற்றவே மாட்டார்கள் என்று அந்த அதிகாரிகளுக்கு நன்றாக தெரிந்தது. ஆகவே கோரேசு போட்ட கட்டளையை இந்த அதிகாரிகள் எதிர்க்க துணிய மாட்டார்கள். அதனால், அந்த வேலையும் தடை இல்லாமல் தொடர்ந்து நடந்தது. காலப்போக்கில் தரியு ராஜாவும் சட்டப்பூர்வ அனுமதியை கொடுத்தார்.—எஸ்றா 5:11-17; 6:6-12
சகரியா பார்த்ததை நீங்களும் பார்க்கிறீர்களா?
7 பெர்சிய ஆட்சியில் ஏற்பட்ட ஒரு மாற்றம் ஆலயத்தைக் கட்டிக்கொண்டிருந்த யூதர்களுக்கு நிம்மதியைக் கொடுத்தது. அது என்ன மாற்றம்? முதலாம் தரியு பெர்சியாவின் ராஜாவாக ஆன இரண்டாவது வருஷத்தில், அதாவது கி.மு. 520-ல், ஆலயத்தைக் கட்டுவதற்கு எதிராகப் போடப்பட்ட தடை உத்தரவு சட்டவிரோதமானது என்று தெரிய வந்தது. அதனால், ஆலயத்தைக் கட்டி முடிப்பதற்கு அவர் அனுமதி கொடுத்தார். (எஸ்றா 6:1-3) இந்தச் செய்தியே அவர்களுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அதைவிட இன்னும் ஆச்சரியமான ஒரு செய்தி அவர்களுக்குக் காத்துக்கொண்டிருந்தது. சுற்றியிருந்த ஜனங்கள், ஆலயத்தைக் கட்டும் வேலையில் தலையிடக் கூடாது என்று ராஜா உத்தரவு போட்டார். அதோடு, ஆலயத்தைக் கட்டி முடிப்பதற்குத் தேவையான பணத்தையும் மற்ற எல்லாவற்றையும் கொடுக்கச் சொல்லியும் அவர்களுக்கு உத்தரவு போட்டார். (எஸ்றா 6:7-12) அதனால், நான்கு வருஷங்கள் கழித்து, அதாவது கி.மு. 515-ல், யூதர்கள் ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள்.—எஸ்றா 6:15.
சகரியா பார்த்ததை நீங்களும் பார்க்கிறீர்களா?
16 “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” மூலமாகவும் யெகோவா நமக்கு ஆலோசனை கொடுக்கிறார். (மத். 24:45) சிலசமயங்களில், அவர்கள் கொடுக்கிற ஆலோசனையை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். உதாரணத்துக்கு, இயற்கைப் பேரழிவிலிருந்து தப்பிப்பதற்கு என்ன செய்யலாம் என்பதைப் பற்றி அவர்கள் குறிப்பாக சில ஆலோசனைகளைக் கொடுக்கலாம். ஆனால், நாம் வாழ்கிற இடத்தில் அப்படியொரு பேரழிவு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று நாம் நினைக்கலாம். பெருந்தொற்று சமயத்தில், நம்முடைய அமைப்பு அளவுக்கு அதிகமாக கட்டுப்பாடுகளைப் போடுவதாக நாம் நினைக்கலாம். அமைப்பு கொடுக்கிற ஆலோசனைகள் நடைமுறைக்கு ஒத்துவராதது போல் நமக்குத் தெரிந்தால் என்ன செய்வது? யோசுவாவும் செருபாபேலும் யெகோவா கொடுத்த ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்ததால் இஸ்ரவேலர்கள் எப்படிப் பிரயோஜனம் அடைந்தார்கள் என்று நாம் யோசித்துப்பார்க்கலாம். பைபிளிலிருந்து நாம் படித்த மற்ற பதிவுகளைப் பற்றியும் யோசித்துப்பார்க்கலாம். சிலசமயங்களில், கடவுளுடைய மக்களுக்குக் கிடைத்த ஆலோசனைகள் நடைமுறைக்கு ஒத்துவராத மாதிரி தெரிந்தாலும் அது அவர்களுடைய உயிரைக் காப்பாற்றியிருக்கிறது.—நியா. 7:7; 8:10.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w93 6/15 பக். 32 பாரா. 3-5
நீங்கள் பைபிளை நம்ப முடியுமா?
தென்கிழக்குப் பகுதியிலுள்ள நகரமாகிய தர்சுவில், இன்றைய துருக்கியில் இந்தக் காசு செய்யப்பட்டது. பெர்சியாவின் ஆளும்பிரபு மாஸாவுஸ் ஆட்சிக்காலத்தில், பொ.ச.மு. நான்காம் நூற்றாண்டில், இந்தக் காசு தயாரிக்கப்பட்டது. இது அவரை, “நதிக்கு அப்புறத்தில்,” அதாவது, ஐப்பிராத்து நதிக்கு அப்புறத்தில் மாகாணத்தின் தேசாதிபதி என்று குறிப்பிடுகிறது.
ஆனால் ஏன் அந்தச் சொற்றொடர் அக்கறையைத் தூண்டுவதாயிருக்கிறது? ஏனென்றால், இதே பதிவியின் பெயரை உங்களுடைய பைபிளில் நீங்கள் காண்பதுதான். எஸ்றா 5:6–6:13, பெர்சிய ராஜா தரியுவுக்கும் தேசாதிபதி தத்னாய் என்பவருக்கும் இடையே நடந்த கடிதத்தொடர்பைப்பற்றிப் பேசுகிறது. எருசலேமில் யூதர்கள் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதுதான் பிரச்னையில் இருந்தது. எஸ்றா, கடவுளுடைய சட்டத்தை நகல் எடுப்பதில் திறமைமிக்கவர், எனவே அவர் என்ன எழுதுகிறார் என்பதில் துல்லியமாகவும் சரியாகவும் இருக்கும்படி நீங்கள் எதிர்பார்க்கலாம். நீங்கள் எஸ்றா 5:6 மற்றும் 6:13-ல், (NW) அவர் தத்னாயை “நதிக்கு அப்புறத்தில் தேசாதிபதியாய் இருந்த” என்று குறிப்பிடுவதை நீங்கள் காண்பீர்கள்.
இந்தக் காசு பொறிக்கப்படுவதற்கு ஏறக்குறைய 100 வருடங்களுக்கு முன்பு, எஸ்றா அதைச் சுமார் பொ.ச.மு. 460-ல் எழுதினார். ஆ, பூர்வீக அதிகாரியின் பதவியின் பெயரெல்லாம் சின்னஞ்சிறு விவரப்பதிவு என்று சொல்கிறவர்களும் உண்டே. ஆனால் பைபிள் எழுத்தாளர்மீது நீங்கள் இப்படிப்பட்ட சின்னஞ்சிறு விவரத்திலும் நம்பிக்கை வைக்கலாமென்றால், அவர்கள் எழுதின மற்றக் காரியங்களின்மீது உங்களுடைய நம்பிக்கையை அது அதிகரிக்கவேண்டுமல்லவா?
ஜூலை 10-16
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எஸ்றா 7-8
“எஸ்றா நடந்துகொண்ட விதம் யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தது”
பைபிள் படிப்பு—பயனுள்ளது, இனியது
8 இதயமே நம் உணர்ச்சிகளின் பிறப்பிடம். எனவே யெகோவாவின் வார்த்தையை இதயப்பூர்வமாய் நேசிக்க வேண்டும். பைபிளில் சில பகுதிகளை நிறுத்தி நிதானமாக வாசித்துப் புரிந்துகொள்ள நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆழமான ஆன்மீக விஷயங்களை கருத்தூன்றி கவனத்துடன் படிக்க வேண்டும், நம் மனம் அதில் லயிக்க வேண்டும். இதற்கு தியானிப்பதும் ஜெபிப்பதும் அவசியம். கடவுளுடைய வார்த்தையை வாசிக்கும்போதும் படிக்கும்போதும் எஸ்றாவைப் போல நம் இதயத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். அவரைக் குறித்து பதிவுசெய்யப்பட்டுள்ளது இதுவே: “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.” (எஸ்றா 7:10) எஸ்றா தன் இருதயத்தை மூன்று காரணங்களுக்காக பக்குவப்படுத்தி இருந்தார்: படிப்பது, அதன்படி நடப்பது, மற்றவர்களுக்கு கற்பிப்பது. அவரைப் போலவே நாமும் செய்ய வேண்டும்.
பைபிள் புத்தக எண் 13—1 நாளாகமம்
5 நம்பகமானதும் திருத்தமானதுமான இந்த சரித்திரத்தை தொகுப்பதற்கு எஸ்றாவை பார்க்கிலும் தகுதியுள்ளவர் வேறு யாரும் இல்லை. ‘யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை ஆராயவும் அதின்படி செய்யவும் இஸ்ரவேலிலே நியமங்களையும் தீர்ப்புகளையும் உபதேசிக்கவும் எஸ்றா தன் இருதயத்தை நேராக்கியிருந்தார்.’ (எஸ்றா 7:10, தி.மொ.) தம்முடைய பரிசுத்த ஆவியை அளிப்பதன் மூலம் யெகோவா அவருக்கு உதவி செய்தார். எஸ்றாவிடம் கடவுளுடைய ஞானம் இருப்பதை பெர்சிய உலக வல்லரசின் அரசன் உணர்ந்துகொண்டான். இதன் காரணமாக யூத மாகாண எல்லைக்குள் அதிகமான அதிகாரங்களை அவருக்கு ஒப்புவித்தான். (எஸ்றா 7:12-26) இவ்வாறு கடவுளாலும் அரசனாலும் அதிகாரம் பெற்ற எஸ்றா, கிடைத்த மிகச் சிறந்த ஆதாரப் பதிவுகளிலிருந்து இந்த விவரத்தை தொகுத்திருக்க முடியும்.
it-1-E பக். 1158 பாரா 4
மனத்தாழ்மை
சரியான வழிநடத்துதல் கிடைக்கும். மனத்தாழ்மையாக நடந்துகொள்கிற ஒருவருக்குக் கடவுளுடைய வழிநடத்துதல் கிடைக்கும். பாபிலோனில் இருந்து மக்களை எருசலேமுக்கு வழிநடத்தும் பெரிய பொறுப்பு எஸ்றாவுக்கு இருந்தது. ஆண்கள் மட்டுமே 1500-க்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள். அதுபோக குருமார்களும், நிதனீமியர்களும், பெண்களும், பிள்ளைகளும் இருந்தார்கள். ஆலயத்தை அழுகுபடுத்துவதற்காக எக்கச்சக்கமான தங்கத்தையும் வெள்ளியையும் எடுத்துக்கொண்டு அவர்கள் போனார்கள். அதனால், அவர்களுக்கு நிச்சயம் பாதுகாப்பு தேவைப்பட்டிருக்கும். ஆனால், வழியில் தங்களைப் பாதுகாப்பதற்காக படைவீரர்களை அனுப்பும்படி பெர்சிய ராஜாவிடம் கேட்க எஸ்றாவுக்கு விருப்பம் இல்லை. ஏனென்றால், அப்படிக் கேட்பது மனிதர்களை நம்புவதுபோல் இருக்கும். அதுமட்டுமல்ல, “எங்கள் கடவுள் தன்னைத் தேடி வருகிற எல்லாரையும் காப்பாற்றுவார்” என்று பெர்சிய ராஜாவிடம் எஸ்றா முன்னதாகவே சொல்லியிருந்தார். அதனால், யெகோவாவையே நம்பியிருப்பதைக் காட்டுவதற்காக மக்கள் எல்லாரையும் அவர் விரதமிருக்க சொன்னார். மக்களின் வேண்டுதலை யெகோவா கேட்டு, அவர்களுக்குப் பாதுகாப்பு தந்தார். அந்த ஆபத்தான பயணத்தில் எதிரிகள் அவர்களைத் தாக்காதபடி பார்த்துக்கொண்டார். (எஸ்றா 8:1-14, 21-32) பாபிலோனில் அடிமையாக இருந்த தானியேல் தீர்க்கதரிசியும் மனத்தாழ்மையோடு கடவுளுடைய வழிநடத்துதலையே நம்பியிருந்தார். அதனால், கடவுள் அவருக்குத் தரிசனத்தைக் காட்டினார்; தேவதூரை அனுப்பி பலப்படுத்தினார்.-தானி 10:12.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
எஸ்றா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
7:28–8:20—பாபிலோனில் இருந்த யூதர்கள் பலரும் எஸ்றாவுடன் எருசலேமுக்குச் செல்ல ஏன் தயங்கினார்கள்? முதன்முதலில் யூதர்கள் தங்களுடைய தாயகத்திற்குத் திரும்பி, 60-க்கும் மேலான வருடங்கள் கடந்துவிட்டிருந்தபோதிலும், எருசலேமில் சொற்ப ஜனங்களே குடியிருந்தார்கள். எருசலேமுக்குத் திரும்புகிறவர்கள், கடினமான, ஆபத்தான சூழ்நிலைகளில் தங்களுடைய புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டியிருக்கும். பாபிலோனில் செல்வச்செழிப்புடன் வாழ்ந்த யூதர்களுக்கு அன்றைய எருசலேமின் சூழ்நிலை செழுமையான வாழ்க்கையை அளிப்பதாக இருக்கவில்லை. எருசலேமுக்குப் பயணிப்பதும்கூட ஆபத்தானதாக இருந்தது. திரும்பிச் செல்பவர்களுக்கு யெகோவாமீது பலமான விசுவாசமும், மெய் வணக்கத்திடம் ஆர்வமும், குடிமாறுவதற்கான தைரியமும் தேவைப்பட்டது. யெகோவாவின் கரம் தன்மேல் இருந்ததால், எஸ்றாவும்கூட தன்னைத் திடப்படுத்திக்கொண்டார். எஸ்றாவின் ஊக்கமூட்டுதலால் 1,500 குடும்பத்தினர்—ஒருவேளை 6,000 பேர்—அவருடன் புறப்பட்டார்கள். அவர் கூடுதலான சில நடவடிக்கைகளை எடுத்த பிறகு, 38 லேவியர்களும் 220 நிதனீமியர்களும் அவருடன் புறப்பட்டார்கள்.
ஜூலை 17-23
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எஸ்றா 9-10
“கீழ்ப்படியாததால் வரும் வேதனை”
எஸ்றா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
9:1, 2—தேசத்து ஜனங்களுடன் கலப்புத் திருமணம் செய்தது எந்தளவுக்கு ஓர் அச்சுறுத்தலாய் இருந்தது? திரும்ப நிலைநாட்டப்பட்ட அத்தேசம், மேசியா வரும்வரை யெகோவாவின் வணக்கத்தைப் பொறுப்புடன் பாதுகாக்க வேண்டியிருந்தது. அங்கிருந்த மற்ற ஜனங்களோடு கலப்புத் திருமணம் செய்தது மெய் வணக்கத்திற்கு உண்மையிலேயே ஓர் அச்சுறுத்தலாய் இருந்தது. அதுமட்டுமல்ல, விக்கிரக வணக்கத்தாரைச் சிலர் திருமணம் செய்துகொண்டதால், காலப்போக்கில் முழு தேசமுமே புறமத தேசங்களுடன் இரண்டற கலந்துவிட நேரிட்டிருக்கும். பூமியில் தூய வணக்கமும் அறவே இல்லாமல் போயிருக்கும். அப்படியானால், யாரிடம் மேசியா வருவார்? இதையெல்லாம் பார்த்து எஸ்றா அதிர்ச்சி அடைந்ததில் ஆச்சரியமே இல்லை!
யெகோவா நம்மிடம் எதைக் கேட்கிறார்?
நாம் மனப்பூர்வமாகக் கீழ்ப்படியும்போது ஆசீர்வாதங்களைப் பெறுவோம். “நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளை . . . உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ள வேண்டும்” என்று மோசே சொன்னார். (வசனம் 13) ஆம், யெகோவாவின் ஒவ்வொரு கற்பனையும், அதாவது அவர் நம்மிடம் கேட்கிற அனைத்தும், நம் நன்மைக்கே! இதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஏனென்றால், “கடவுள் அன்பாகவே இருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:8) எனவே, நமக்கு நிரந்தர நன்மை அளிக்கும் கட்டளைகளை மட்டுமே அவர் தந்திருக்கிறார். (ஏசாயா 48:17) யெகோவா நம்மிடம் கேட்கிற அனைத்தையும் நாம் செய்யும்போது, இக்காலத்தில் பல வேதனைகளைத் தவிர்ப்போம், எதிர்காலத்திலும் அவரது அரசாங்கத்தில் முடிவில்லாத ஆசீர்வாதங்களைப் பெறுவோம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
எஸ்றா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
10:3, 44—மனைவிமார்களுடன் பிள்ளைகளும் ஏன் அனுப்பப்பட்டார்கள்? பிள்ளைகளை அனுப்பாமல் வைத்தால், நிராகரிக்கப்பட்ட அந்த மனைவிமார் தங்களுடைய பிள்ளைகளைக் காரணம் காட்டி மறுபடியும் வந்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்ல, பொதுவாக சிறு பிள்ளைகளுக்கு அம்மாவின் கவனிப்பு தேவை.
ஜூலை 24-30
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நெகேமியா 1-2
“உடனடியாக, ஜெபம் செய்தேன்”
யெகோவாவை எப்போதும் உங்கள் முன்பாக வைத்திருங்கள்
5 சில சமயங்களில், கடவுளுடைய உதவிக்காக நாம் சட்டென ஜெபம் செய்ய வேண்டியிருக்கலாம். ஒருசமயம், தன்னுடைய பானபாத்திரக்காரனான நெகேமியாவின் முகத்தில் கவலை ரேகை படர்ந்திருந்ததை பெர்சியாவின் ராஜாவான அர்தசஷ்டா கவனித்தார். “நீ கேட்கிற காரியம் என்ன” என்று ராஜா அவரிடம் கேட்டார். ‘அப்பொழுது அவர் [நெகேமியா]: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணினார்.’ அவரால் மனதுக்குள் சுருக்கமாக மட்டுமே ஜெபம் செய்ய முடிந்தது. அந்த ஜெபத்தையும் கடவுள் கேட்டார். எருசலேமின் மதிற்சுவரை மறுபடியும் கட்டுவதற்கு ராஜாவை உதவச் செய்வதன்மூலம் அவருடைய ஜெபத்திற்கு பதில் அளித்தார். (நெகேமியா 2:1-8-ஐ வாசிக்கவும்.) ஆம், மனதுக்குள் சுருக்கமாகச் செய்கிற ஜெபத்திற்கும்கூட பதில் கிடைக்கும்.
மனதிலிருந்து பேசுதல்
உங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி தயாரிப்பின்றி விளக்கும்படி திடீரென யாராவது உங்களிடம் கேட்கும்போது, திறம்பட பதிலளிப்பதற்கு எது உங்களுக்கு உதவும்? ராஜாவாகிய அர்தசஷ்டா கேட்ட கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்பு மௌனமாக ஜெபம் செய்த நெகேமியாவைப் பின்பற்றுங்கள். (நெ. 2:4) அடுத்து, என்னென்ன சொல்ல வேண்டுமென மனதில் விரைவாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள். எடுக்க வேண்டிய அடிப்படை படிகளை இவ்வாறு பட்டியலிடலாம்: (1) விவரிப்பில் சேர்க்க வேண்டிய ஓரிரண்டு குறிப்புகளைத் தேர்ந்தெடுங்கள் (வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலுள்ள குறிப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம்). (2) அந்தக் குறிப்புகளுக்கு ஆதரவாக எந்தெந்த வேதவசனங்களைப் பயன்படுத்தலாம் என்பதை தீர்மானியுங்கள். (3) கேள்வி கேட்பவர் செவிகொடுத்துக் கேட்கும் விதத்தில் எப்படி சாதுரியமாக விளக்க ஆரம்பிக்கலாம் என்பதை திட்டமிடுங்கள். பின்பு பேச ஆரம்பியுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w86-E 2/15 பக். 25
உண்மை வணக்கம் உயர்ந்திருக்கும்
இல்லை, எருசலேமின் மோசமான நிலைமையை பற்றி கேள்விப்பட்டதிலிருந்து “ராத்திரி பகலாய்” நெகேமியா அதைப் பற்றி ஜெபம் செய்துகொண்டிருந்தார். (நெ 1:4, 6) எருசலேமின் மதில்கள் திரும்பவும் கட்டப்பட வேண்டும் என்று தான் ஆசைப்படுவதை ராஜாவிடம் சொல்ல நெகேமியாவுக்கு திடீரென்று ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்திலும், முன்பு செய்தது போலவே நெகேமியா ஜெபம் செய்தார். அதனால், ‘நீ போய் எருசலேமின் மதில்களை மறுபடியும் கட்டு’ என்று ராஜாவே சொல்லும்படி யெகோவா அவரை தூண்டினார்.
பாடம்: நெகேமியா வழிநடத்துதலுக்காக யெகோவாவையே நம்பி இருந்தார். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு முன்பு நாமும் “விடாமல் ஜெபம்” செய்ய வேண்டும். யெகோவா கொடுக்கிற வழிநடத்துதலின்படி நடக்க வேண்டும்.—ரோ 12:12.
ஜூலை 31–ஆகஸ்ட் 6
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நெகேமியா 3-4
“சில வேலைகளை நீங்கள் தாழ்வாக பார்க்கிறீர்களா?”
நெகேமியா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
3:5, 27. தெக்கோவா ஊர் ‘பிரபுக்களைப்’ போல, மெய் வணக்கத்திற்காக உடலை வருத்தி வேலை செய்வதை நாம் மதிப்புக் குறைவாகக் கருதக் கூடாது. மாறாக, தெக்கோவா ஊர் மக்களைப் போல மனப்பூர்வமாக வேலை செய்ய வேண்டும்.
யெகோவா உங்களை என்னவாக ஆக்குவார்?
11 இப்போது, சல்லூமின் மகள்களைப் பற்றிப் பார்க்கலாம். அபிகாயிலுக்குப் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்தவர்கள்தான் இவர்கள்! எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டுவதற்கு இவர்களையும் யெகோவா பயன்படுத்தினார். (நெ. 2:20; 3:12) இவர்களுடைய அப்பா ஒரு மாகாணத் தலைவராக இருந்தபோதும், மதில்களைக் கட்டுகிற அந்தக் கஷ்டமான, ஆபத்தான வேலையைச் செய்ய இவர்களுக்கு மனம் இருந்தது. (நெ. 4:15-18) ‘வேலை செய்ய மறுத்த’ தெக்கோவா ஊரைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம்! (நெ. 3:5) எருசலேமின் மதில் வெறும் 52 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டபோது, சல்லூமின் மகள்கள் எப்படிப் பூரித்துப்போயிருப்பார்கள்! (நெ. 6:15) அவர்களைப் போலவே இன்றும் நிறைய சகோதரிகள் கடவுளுக்கு விசேஷ சேவை செய்கிறார்கள். யெகோவாவின் சேவையில் பயன்படுத்தப்படுகிற கட்டிடங்களைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் ஆசையோடு முன்வருகிறார்கள். அவர்களுடைய திறமைகளும் உற்சாகமும் உண்மைத்தன்மையும் இந்த வேலையின் வெற்றிக்கு கைகொடுக்கிறது.
மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தையை வளர்த்தல்
16 இளைஞரும் முதியோருமாகிய கிறிஸ்தவர்கள் அனைவரும் மேன்மை பற்றிய கிறிஸ்துவின் சிந்தையை வளர்க்க முயல வேண்டும். சபையில், பல்வேறு வேலைகள் இருக்கின்றன. அற்பமாக தோன்றும் வேலைகளை செய்யும்படி கேட்கப்பட்டால் ஒருபோதும் வெறுப்படையாதீர்கள். (1 சாமுவேல் 25:41; 2 இராஜாக்கள் 3:11) பெற்றோரே, ராஜ்ய மன்றத்திலோ அசெம்பிளி அல்லது மாநாடு நடக்கும் இடத்திலோ கொடுக்கப்படும் எந்த வேலையையும் இன்முகத்தோடு செய்ய உங்களுடைய சிறுபிள்ளைகளையும் டீனேஜ் பிள்ளைகளையும் ஊக்குவிக்கிறீர்களா? அப்படிப்பட்ட வேலைகளை நீங்கள் செய்வதை அவர்கள் பார்க்கிறார்களா? யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் சேவை செய்யும் ஒரு சகோதரர், தன் பெற்றோர் வைத்த முன்மாதிரியை இன்னும் மனதில் பசுமையாக வைத்திருக்கிறார். அவர் இவ்வாறு சொன்னார்: “ராஜ்ய மன்றத்தையோ மாநாட்டு மையத்தையோ சுத்தம் செய்யும் வேலையை என் பெற்றோர் கருதிய விதம், அதை எவ்வளவு முக்கியமானதாக நினைத்தார்கள் என்பதை எனக்கு உணர்த்தியது. அற்பமானதாக தோன்றும் எந்த வேலையையும், சபையின் நன்மைக்காகவோ சகோதரர்களுக்காகவோ செய்ய அவர்கள் எப்போதும் முன்வந்தார்கள். இங்கு பெத்தேலில் எந்த வேலையையும் மனமுவந்து ஏற்றுக்கொள்ள அவர்களுடைய மனப்பான்மை எனக்கு உதவியிருக்கிறது.”
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நெகேமியா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
4:17, 18—ஒரேவொரு கையை மட்டும் பயன்படுத்தி கட்டுமான வேலையை எப்படிச் செய்ய முடியும்? சுமை சுமப்பவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாகவே இருந்திருக்காது. தங்கள் தலையிலோ தோளிலோ சுமை வைக்கப்பட்ட பிறகு, தாராளமாக ஒரே கையினால் அவர்கள் சமாளித்தார்கள், “மறு கையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள்.” இரு கைகளையும் பயன்படுத்தி கட்டுமான வேலையில் ஈடுபட்டிருந்தவர்களோ, “அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலை செய்தார்கள்.” விரோதிகள் ஒருவேளை தாக்கினால் எதிர்ப்பதற்கு அவர்கள் தயாராய் இருந்தார்கள்.
ஆகஸ்ட் 7-13
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நெகேமியா 5-7
“நெகேமியா—சேவை பெற நினைக்காமல், சேவை செய்ய நினைத்தார்”
மெய் வணக்க ஆதரவாளர்கள்—அன்றும் இன்றும்
மெய் வணக்கத்தை ஆதரிப்பதற்காக நெகேமியா தனது நேரத்தையும் நிர்வாக திறமைகளையும் மட்டுமல்ல தனது பொருள் செல்வத்தையும்கூட கொடுத்தார். அடிமைத்தனத்தில் சிக்கிய தனது யூத சகோதரர்களை விடுவிக்க தனது சொந்த பணத்தை செலவழித்தார். அவர் வட்டியில்லாமல் கடன் கொடுத்தார். ஆளுனருக்குரிய படியை பெற உரிமை இருந்தும் அதை வற்புறுத்திக் கேட்காமல் இருந்ததால் அவர் யூதர்கள் மீது ‘பாரம்’ சுமத்தவில்லை. மாறாக, ‘நூற்றைம்பது பேருக்கும், அவர்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளிடத்திலிருந்து அவர்களிடத்திற்கு வந்தவர்களுக்கும்’ உணவளிக்க அவர் வீட்டு கதவு எப்போதும் திறந்திருந்தது. அவருடைய விருந்தினர்களுக்காக ஒவ்வொரு நாளும் ‘ஒரு காளையும், முதல் தரமான ஆறு ஆடும் பட்சிகளும்’ தயாரித்தளித்தார். அதோடு, பத்து நாளைக்கு ஒரு தரம் “நானாவிதத் திராட்சரசமும்” கொடுத்தார்; இவை அனைத்தையும் தனது சொந்த செலவில் செய்தார்.—நெகேமியா 5:8, 10, 14-18.
‘உங்கள் கைகளைத் தளரவிடாதீர்கள்’
16 யெகோவாவின் உதவியால் நெகேமியாவும் மற்ற யூதர்களும் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள். வெறும் 52 நாட்களில் எருசலேமின் சுவர்களைக் கட்டி முடித்தார்கள். (நெ. 2:18; 6:15, 16) மற்றவர்கள் வேலை செய்தபோது நெகேமியா சும்மா நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கவில்லை, அவரும் அவர்களோடு சேர்ந்து வேலை செய்தார். (நெ. 5:16) இன்றும் நிறைய மூப்பர்கள் நெகேமியாவைப் போலவே இருக்கிறார்கள். கட்டுமான வேலையில் உதவி செய்கிறார்கள், ராஜ்ய மன்றங்களைச் சுத்தம் செய்கிறார்கள், அதைப் பராமரிக்கிறார்கள். அதோடு, இந்த அன்பான சகோதரர்கள் சபையில் இருக்கிறவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்கிறார்கள், கவலையில் இருக்கிறவர்களைப் போய் பார்க்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் அவர்களைப் பலப்படுத்துகிறார்கள்.—ஏசாயா 35:3, 4-ஐ வாசியுங்கள்.
யெகோவா உங்களை நினைத்தருள்வது எப்படி?
கடவுளுடைய கருத்தில் ‘நினைப்பது’ என்பது சாதகமான நடவடிக்கை எடுப்பதை அர்த்தப்படுத்துகிறது என பைபிள் காட்டுகிறது. உதாரணமாக, 150 நாட்களுக்கு வெள்ளத்தால் பூமி மூழ்கியிருந்தது. அதன்பின், “தேவன் நோவாவை . . . நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.” (ஆதியாகமம் 8:1) பல நூற்றாண்டுகளுக்குப்பின், பெலிஸ்தியர்களால் குருடாக்கப்பட்டு, சங்கிலிகளால் கட்டுண்ட நிலையில் இருந்த சிம்சோன் இப்படியாக ஜெபித்தார்: ‘இந்த ஒருவிசை மாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, [“யெகோவாவே,” NW], பலப்படுத்தும்.” மனித சக்திக்கு அப்பாற்பட்ட பெலத்தை சிம்சோனுக்கு தந்து யெகோவா அவரை நினைத்தருளினார். அதன்மூலம், கடவுளுடைய எதிரிகளை அவர் பழிவாங்கினார். (நியாயாதிபதிகள் 16:28-30) நெகேமியாவின் விஷயத்தில் நடந்ததும் இதுவே. யெகோவா அவருடைய முயற்சிகளை ஆசீர்வதித்தார். அதனால், எருசலேமில் உண்மை வணக்கம் மறுபடியும் நிலைநாட்டப்பட்டது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
‘தீமையை நன்மையினாலே தொடர்ந்து வெல்லுங்கள்’
15 மூன்றாவது, கடவுளுடைய சட்டத்தை நெகேமியா மீறும்படி செய்வதற்கு இஸ்ரவேலனான செமாயா என்னும் துரோகியை எதிரிகள் பயன்படுத்தினார்கள். நெகேமியாவிடம் அவன் இவ்வாறு சொன்னான்: “நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள்.” நெகேமியாவை கொலை செய்யப் போகிறார்கள் என்றும், ஆலயத்தில் மறைந்து கொள்வதன்மூலம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளலாம் என்றும் செமாயா கூறினான். என்றாலும், நெகேமியா ஓர் ஆசாரியர் அல்ல. கடவுளுடைய ஆலயத்தில் ஒளிந்துகொண்டால் அவர் பாவம் செய்தவராவார். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக கடவுளின் சட்டத்தை மீறுவாரா? நெகேமியா இவ்வாறு பதில் அளித்தார்: “என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை.” தனக்கு விரித்த வலையில் நெகேமியா ஏன் விழவில்லை? ஏனென்றால், செமாயா ஓர் இஸ்ரவேலனாக இருந்தாலும், “தேவன் அவனை அனுப்பவில்லை” என்பதை அவர் அறிந்திருந்தார். மெய் தீர்க்கதரிசி கடவுளுடைய சட்டத்தை மீறும்படி ஆலோசனை கொடுக்க மாட்டார் என்பது உண்மையல்லவா? பொல்லாத எதிரிகள் தன்னை வெல்வதற்கு நெகேமியா மீண்டும் இடங்கொடுக்கவில்லை. பிறகு விரைவிலேயே, “அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந் தேதியிலே முடிந்தது” என்று அவர் கூறுகிறார்.—நெகேமியா 6:10-15; எண்ணாகமம் 1:51; 18:7.
ஆகஸ்ட் 14-20
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நெகேமியா 8-9
“யெகோவா தரும் சந்தோஷம்தான் உங்களுக்குப் பலத்த கோட்டை”
நன்கு தயாரிக்கப்பட்ட ஜெபத்திலிருந்து நமக்குப் பாடங்கள்
2 இந்த விசேஷ நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் யூதர்கள் எருசலேமின் மதில்களை திரும்பக் கட்டி முடித்திருந்தார்கள். (நெ. 6:15) 52 நாட்களிலேயே இந்த வேலையை முடித்துவிட்டார்கள். அதற்குபின் ஆன்மீகத் தேவைகளுக்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். எப்படி? எஸ்றா மற்றும் லேவியர்கள் கடவுளுடைய சட்டத்தை வாசித்து விளக்குவதைக் கேட்பதற்காகப் பொது இடங்களில் கூடிவந்தார்கள். இந்தக் கூட்டம் திஷ்ரி மாதத்தின் முதல் நாளில் நடந்தது. (படம் 1) எல்லாக் குடும்பங்களும் அவர்களுடைய பிள்ளைகளோடு அங்கு கூடிவந்து ‘காலை தொடங்கி மத்தியானமட்டும்’ நின்றுகொண்டே கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், நாம் இன்று பெரும்பாலும் வசதியான ராஜ்ய மன்றங்களில் கூடிவருகிறோம். இருந்தாலும் சிலசமயம் கூட்டத்தின்போது நம்முடைய மனம் அலைபாய்கிறதா? தேவையில்லாத விஷயங்களை யோசிக்கிறதா? அப்படியானால், இஸ்ரவேலர்களின் முன்மாதிரியைக் கவனியுங்கள். அந்த இஸ்ரவேலர்கள் கவனமாகக் காதுகொடுத்து கேட்டார்கள், கேட்டதைச் சிந்தித்துப் பார்த்தார்கள், கடவுளுடைய சட்டத்துக்குக் கீழ்ப்படியாததை நினைத்து அழவும் செய்தார்கள்.—நெ. 8:1-9.
‘ஆவிக்கேற்றபடி நடந்துகொள்வீர்களா’?
9 ஆவியின் கனியாகிய சந்தோஷம், உள்ளத்தில் பொங்கியெழும் மகிழ்ச்சி ஆகும். யெகோவா ‘நித்தியானந்த தேவனாய்’ இருக்கிறார். (1 தீமோத்தேயு 1:11; சங்கீதம் 104:31) தந்தையின் சித்தத்தைச் செய்வதில் குமாரன் இன்பம் காண்கிறார். (சங்கீதம் 40:8; எபிரெயர் 10:7-9) அதுமட்டுமல்ல, ‘யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே நம் பெலன்.’—நெகேமியா 8:10.
10 நெருக்கடியான சமயங்களிலும் துயரமான சூழ்நிலைகளிலும் துன்புறுத்தப்படுகையிலும்கூட அவருடைய சித்தத்தை நாம் செய்யும்போது தேவன் அருளும் சந்தோஷத்தால் பரம திருப்தியைப் பெறுகிறோம். ‘தேவனை அறியும் அறிவும்கூட’ எவ்வளவாய் சந்தோஷத்தைத் தருகிறது! (நீதிமொழிகள் 2:1-5) கடவுள்மீதும் இயேசுவின் பலியின் மீதுமுள்ள விசுவாசத்தின் அடிப்படையிலும், திருத்தமான அறிவின் அடிப்படையிலுமே கடவுளோடு இனிய பந்தத்தை வைத்திருக்கிறோம். (1 யோவான் 2:1, 2) ஒரே உண்மையான சர்வதேச சகோதரத்துவத்தின் பாகமாய் இருப்பது மகிழ்ச்சிக்கு மற்றொரு காரணமாகும். (செப்பனியா 3:9; ஆகாய் 2:7) ராஜ்ய நம்பிக்கையும் நற்செய்தியை அறிவிக்கும் மகத்தான வாய்ப்பும் நம்மை மகிழ்ச்சியுள்ளவர்களாக ஆக்குகின்றன. (மத்தேயு 6:9, 10; 24:14) நித்திய வாழ்க்கை என்ற எதிர்பார்ப்பும்கூட நம்மை மகிழ்ச்சியுள்ளவர்களாக ஆக்குகிறது. (யோவான் 17:3) நமக்கு இத்தகைய அருமையான நம்பிக்கை இருப்பதால், நாம் ‘சந்தோஷமாய்’ இருக்க வேண்டும்.—உபாகமம் 16:15.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 145 பாரா 2
அரமேயிக்
நெகெமியா 8:8 இப்படிச் சொல்கிறது: “எஸ்றாவும் லேவியர்களும் உண்மைக் கடவுளுடைய திருச்சட்ட புத்தகத்திலிருந்து சத்தமாக வாசித்து, அதைத் தெளிவாக விளக்கி, அதன் அர்த்தத்தை ஜனங்களின் மனதில் பதிய வைத்தார்கள். வாசிக்கப்பட்ட விஷயங்களை எல்லாரும் புரிந்துகொள்வதற்கு உதவி செய்தார்கள்.” “தெளிவாக விளக்கி” அல்லது புரியும்படி எடுத்துச் சொல்லி என்று சொல்லும்போது, எபிரெய மொழியில் இருந்த விஷயங்களை அரமேயிக் மொழியில் சுருக்கமாக சொல்வதைக் குறித்திருக்கலாம். எபிரெயர்கள் பாபிலோனில் இருந்தபோது அரமேயிக் மொழியைக் கற்றுக்கொண்டு பயன்படுத்தியிருக்கலாம். “தெளிவாக விளக்கி” என்ற வார்த்தைகள் வேறொரு விஷயத்தையும் குறித்திருக்கலாம்: படித்த விஷயங்களை இன்னும் விவரமாக எடுத்து சொல்வதையும் அர்த்தப்படுத்தியிருக்கலாம். இப்படி செய்ததால், எபிரெய மொழியை நன்றாகத் தெரிந்திருந்த யூதர்களாலும் வாசிக்கப்பட்ட விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்திருக்கும்.
ஆகஸ்ட் 21-27
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நெகேமியா 10-11
“அவர்கள் யெகோவாவுக்காகத் தியாகம் செய்தார்கள்”
பெயருக்கேற்ப திகழ்ந்த எருசலேம்
13 நெகேமியாவின் நாளில் முத்திரையிடப்பட்ட ‘உறுதியான உடன்படிக்கை,’ எருசலேமின் மதிற்சுவர் திறப்பு விழா நாளுக்கு கடவுளுடைய பூர்வ ஜனங்களை தயார்படுத்தியது. ஆனால் மற்றொரு முக்கியமான விஷயத்திற்கும் கவனம்செலுத்த வேண்டியிருந்தது. இப்பொழுது 12 வாயிற்கதவுகளுடன் பெரும் மதிற்சுவரால் சூழப்பட்ட எருசலேமில் வாழ அதிக ஜனங்கள் தேவைப்பட்டனர். இஸ்ரவேலர் சிலர் அங்கு வாழ்ந்துகொண்டிருந்தபோதிலும், “பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது, அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள்.” (நெகேமியா 7:4) இப்பிரச்சினையைத் தீர்க்க, ஜனங்கள் ‘தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்தில் . . . குடியிருக்கப்பண்ண, சீட்டுகளைப் போட்டார்கள்.’ இந்த ஏற்பாட்டிற்கு முழுமனதாய் ஒத்துழைத்ததால், “எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்களையெல்லாம்” வாழ்த்துவதற்கு ஜனங்கள் தூண்டப்பட்டார்கள். (நெகேமியா 11:1, 2) எங்கு முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவர்களுக்கு பெருமளவு தேவை இருக்கிறதோ அங்கு இடம் மாறிச்செல்வதற்கேற்ற சூழ்நிலைமைகளையுடைய இன்றைய மெய் வணக்கத்தாருக்கு இது என்னே ஒரு சிறந்த முன்மாதிரி!
w86-E 2/15 பக். 26
உண்மை வணக்கம் உயர்ந்திருக்கும்
பரம்பரை சொத்துகளை விட்டுவிட்டு எருசலேமுக்குள் குடிமாறி வந்தவர்களுக்கு சில நஷ்டங்கள் ஏற்பட்டிருக்கலாம்; சில அசௌகரியங்களும் இருந்திருக்கலாம். அதுமட்டுமல்ல, நகரத்தில் வாழ்ந்தவர்களுக்கு ஆபத்துகளும் வந்திருக்கலாம். ஆனால் இப்படி மனதார நகரத்துக்குள் குடிமாறி வந்தவர்களை மற்றவர்கள் வாழ்த்தினார்கள். அவர்களை யெகோவா ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஜெபமும் செய்திருப்பார்கள்.
உண்மையாக இருப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்
15 யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்தபோது, இனி என்ன கஷ்டம் வந்தாலும் அவருக்காகத்தான் வாழ்வோம் என்று வாக்குக் கொடுத்தோம். இந்த வாக்கைக் காப்பாற்றுவது எப்போதுமே சுலபம் இல்லை என்று நமக்கு தெரியும். இருந்தாலும் நமக்கு பிடிக்காத ஒன்றை செய்யும்படி யாராவது சொன்னால் நாம் எப்படி நடந்துகொள்வோம்? நமக்கு கஷ்டமாக இருந்தாலும் நாம் யெகோவாவுக்கு கீழ்ப்படியும்போது அவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவோம். நமக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களோடு ஒப்பிடும்போது நாம் செய்யும் தியாகங்கள் ஒன்றுமே இல்லை. (மல். 3:10) ஆனால் யெப்தா கொடுத்த வாக்கை கேட்டபோது அவருடைய மகள் என்ன சொன்னாள்?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நெகேமியா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
10:34—ஜனங்கள் ஏன் விறகு காணிக்கையை அளிக்க வேண்டியிருந்தது? நியாயப்பிரமாணச் சட்டத்தில் விறகு காணிக்கை அளிக்கும்படி கட்டளையிடப்படவில்லை. கட்டாயத் தேவையின் காரணமாகவே இந்தக் காணிக்கை அமலுக்கு வந்தது. பலிபீடத்தில் பலிகளைத் தகனிப்பதற்குப் பெருமளவு விறகு தேவைப்பட்டது. ஆலய அடிமைகளாகச் சேவை செய்த இஸ்ரவேலரல்லாத நிதனீமியர்கள் அப்போது குறைவாக இருந்திருக்கலாம். ஆகவே, தொடர்ந்தாற்போல் விறகு அளிக்கப்படுவதற்குச் சீட்டு போடப்பட்டது.
ஆகஸ்ட் 28–செப்டம்பர் 3
பைபிளில் இருக்கும் புதையல்கள் | நெகேமியா 12-13
“நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள்”
it-1-E பக். 95 பாரா 5
அம்மோனியர்கள்
ஆலயத்தில் இருந்து தொபியாவின் சாமான்களை தூக்கி எறிந்த பிறகு, உபாகமம் 23:3-6-ல் இருக்கிற கட்டளையை வாசித்து அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இஸ்ரவேலர்களின் சபையின் பாகமாக ஆவதற்கு அம்மோனியர்களையும் மோவாபியர்களையும் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று யெகோவா சொல்லியிருந்தார். (நெ 13:1-3) இந்தச் சட்டம், கிட்டத்தட்ட 1000 வருஷங்களுக்கு முன்பே போடப்பட்டிருந்தது. ஏனென்றால், இஸ்ரவேலர்கள் வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்கு வந்தபோது அம்மோனியர்களும் மோவாபியர்களும் அவர்களுக்கு உதவ மறுத்துவிட்டார்கள். இந்தச் சட்டத்துக்கு என்ன அர்த்தம்? அம்மோனியர்களும் மோவாபியர்களும் இஸ்ரவேல் தேசத்தின் சட்டப்பூர்வ அங்கத்தினர்களாக ஆகவே முடியாது. அதாவது, இஸ்ரவேலர்களுக்கு இருந்த சில உரிமைகளும் விசேஷ சலுகைகளும் இவர்களுக்குக் கிடைக்காது. அதேசமயத்தில், இந்த தேசங்களை சேர்ந்த தனிநபர்கள் இஸ்ரவேலர்கள் மத்தியில் வாழ்வதை இந்த சட்டம் தடுக்கவில்லை. யெகோவா தன்னுடைய மக்களுக்குத் தந்த ஆசீர்வாதங்களிலிருந்தும் இவர்கள் பயனடைந்தார்கள். தாவீதின் படையில் இருந்த மாவீரர்களில் ஒருவரான சேலேக் என்பவரும், மோவாப் தேசத்தை சேர்ந்த ரூத் என்ற பெண்ணும் இதற்கு உதாரணம்.—ரூ 1:4, 16-18.
நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்
5 நெகேமியா 13:4-9-ஐ வாசியுங்கள். நம்மைச் சுற்றி கெட்ட ஆட்களும் கெட்ட காரியங்களுமே இருப்பதால் பரிசுத்தமானவர்களாக இருப்பது கஷ்டம்தான். எலியாசிப்பையும் தொபியாவையும் எடுத்துக்கொள்ளுங்கள். எலியாசிப் ஒரு பிரதான ஆசாரியர்; தொபியாவோ (அம்மோனியன்) யூதேயாவிலுள்ள பெர்சிய நிர்வாகத்தில் ஒரு சாதாரண அதிகாரியாக இருந்திருக்கலாம். எருசலேமின் மதில்களைத் திரும்பக் கட்டுவதற்காக நெகேமியா எடுத்த முயற்சியை தொபியாவும் அவனுடைய ஆட்களும் எதிர்த்தார்கள். (நெ. 2:10) அம்மோனியர்களுக்கு ஆலய வளாகத்திற்குள் வர அனுமதியில்லை. (உபா. 23:3) அப்படியிருக்க, தொபியாவை பிரதான ஆசாரியர் எலியாசிப் ஏன் ஆலயத்தின் ஓர் உணவறையில் தங்கவைத்தார்?
6 அதற்கு மூன்று காரணங்கள் உள்ளன: ஒன்று, தொபியாவும் எலியாசிப்பும் நெருங்கிய நண்பர்கள். இரண்டு, தொபியாவும் அவனுடைய மகன் யோகனானும் யூத பெண்களை மணம் முடித்திருந்தார்கள்; யூதர்கள் பலர் தொபியாவைப் பற்றி உயர்வாகப் பேசினார்கள். (நெ. 6:17-19) மூன்று, எலியாசிப்பின் பேரன் ஒருவன், ஆளுநரான சன்பல்லாத்தின் மகளைத் திருமணம் செய்திருந்தான். சமாரியனான சன்பல்லாத், தொபியாவின் நெருங்கிய நண்பன். (நெ. 13:28) பிரதான ஆசாரியரான எலியாசிப், உண்மைக் கடவுளை வழிபடாதவனும் எதிர்ப்பவனுமான தொபியாவின் பேச்சைக் கேட்டு நடந்ததற்கு இவையே காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், நெகேமியா யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக இருந்ததால் அந்த உணவறையிலிருந்து தொபியாவின் தட்டுமுட்டு பொருள்களை எல்லாம் வெளியே எறிந்துவிட்டார்.
w96 3/15 பக். 16 பாரா 6
உண்மைப் பற்றுறுதியின் சவாலில் வெற்றிபெறுவது
6 நாம் யெகோவா தேவனுக்கு உண்மைப் பற்றுறுதியுடன் இருந்தால், அவருக்கு சத்துருக்களாயிருக்கும் எவருடனும் நண்பராவதை நாம் தவிர்ப்போம். ஆகவேதான் சீஷனாகிய யாக்கோபு எழுதினார்: “விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” (யாக்கோபு 4:4) “கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ? முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன்,” என்று தாவீது ராஜா சொன்னபோது அவர் நிரூபணம் செய்த அந்த உண்மைப் பற்றுறுதியை கொண்டிருக்க நாம் விரும்புகிறோம். (சங்கீதம் 139:21, 22) வேண்டுமென்றே பாவம் செய்யக்கூடிய எந்த நபரிடமும் தோழமைகொள்ள நாம் விரும்புவதில்லை, ஏனெனில் அவர்களோடு எதையுமே நாம் பொதுவாக கொண்டிருப்பதில்லை. அப்படிப்பட்ட யெகோவாவின் விரோதிகள் எவருடனும், நேரடியாகவோ அல்லது தொலைக்காட்சி சாதனத்தின் மூலமாகவோ, தோழமைகொள்வதிலிருந்து கடவுளுக்கு காண்பிக்கும் உண்மைப் பற்றுறுதி நம்மை விலகியிருக்கச் செய்யும் அல்லவா?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 452 பாரா 9
இசை
பாடுவது ஆலயத்தில் இருந்த ரொம்ப முக்கியமான ஒரு வேலை. இதை நாம் எப்படி சொல்கிறோம்? நிறைய பாடகர்களை பற்றிப் பைபிள் சொல்கிறது. அதுமட்டுமல்ல, லேவியர்கள் செய்த “மற்ற வேலைகள் இவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை.” பாடும் நியமிப்பை இன்னும் நன்றாக செய்ய இந்த ஏற்பாடு உதவியது. (1நா 9:33) பாபிலோனிலிருந்து திரும்பி வந்தவர்களைப் பற்றி பைபிள் சொல்லும்போது, பாடகர்களை ஒரு தனி தொகுதியாக அது குறிப்பிடுகிறது. லேவியர்களில் ஒரு விசேஷ தொகுதியாக அவர்கள் இருந்தார்கள் என்பதை இது காட்டுகிறது. (எஸ்றா 2:40, 41) பெர்சிய ராஜா அர்தசஷ்டாவும் மற்ற விசேஷ தொகுதிகளைப் போலவே பாடகர்களிடம் இருந்தும் “தலை வரியையோ கலால் வரியையோ சுங்க வரியையோ” வாங்கவில்லை. (எஸ்றா 7:24, அடிக்குறிப்பு) கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, பாடகர்களுக்கு “அந்தந்த நாள் தேவைப்படுவதை கொடுக்க வேண்டும்” என்று ராஜா கட்டளை கொடுத்தார். (நெ 11:23; எஸ்றா 7:18-26) அர்தசஷ்டா ராஜா கொடுத்த அதிகாரத்தின் அடிப்படையில் எஸ்றா இந்தக் கட்டளையைக் கொடுத்திருக்கலாம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பாடகர்கள் லேவியர்களாக இருந்தாலும், பைபிள் அவர்களை ஒரு விசேஷ தொகுதியாகக் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகிறது. ‘பாடகர்கள்’ மற்றும் ‘லேவியர்கள்’ என்று அவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.—நெ 7:1; 13:10.