பைபிளின் கருத்து
பரதீஸ்
பரதீஸ் என்றால் என்ன?
மக்களின் பதில்
அப்படியொரு இடமே இல்லை, அது வெறும் கட்டுக்கதை எனச் சிலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலர், பரதீஸ் ஒரு சொர்க்கலோகம், அங்கு நல்லவர்கள் என்றென்றும் வாழ்வார்கள், சந்தோஷமாக வேலை செய்து, அதன் பலனை அனுபவிப்பார்கள் என்று நம்புகிறார்கள்.
பைபிளின் பதில்
முதல் மனிதத் தம்பதியைக் கடவுள் ஏதேன் தோட்டத்தில் குடிவைத்தார். (ஆதியாகமம் 2:7-15) அதைத்தான் “பரதீஸ்,” அதாவது பூஞ்சோலை, என்று பைபிள் குறிப்பிடுகிறது. அதுவொரு நிஜமான இடம் என்றும், அதில் முதல் மனிதத் தம்பதி வியாதியோ மரணமோ இல்லாமல் வாழ்ந்தார்கள் என்றும் பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:27, 28) அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் அந்தப் பரதீஸை இழந்தார்கள். ஆனால், இந்தப் பூமி திரும்பவும் பரதீஸாக மாறப்போகிறது என பைபிளிலுள்ள ஏராளமான தீர்க்கதரிசனங்கள் சொல்கின்றன.
பதில் தெரிந்துகொள்வது உங்களுக்கு ஏன் முக்கியம்?
கடவுள் உண்மையிலேயே அன்பானவர் என்றால், தம்முடைய உண்மை ஊழியர்களை பரதீஸ் போன்ற ஒரு நல்ல இடத்தில் வாழ வைப்பார், அல்லவா? தம்முடைய அங்கீகாரத்தைப் பெற என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரிவிப்பார், அல்லவா? அவருடைய அங்கீகாரத்தைப் பெற வேண்டுமானால், அவரைப் பற்றி நன்றாக அறிந்துகொண்டு அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென பைபிள் சொல்கிறது.—யோவான் 17:3; 1 யோவான் 5:3.
“தேவனாகிய [யெகோவா] . . . ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.” —ஆதியாகமம் 2:8.
பரதீஸ் எங்கே இருக்கிறது?
மக்களின் பதில்
பரதீஸ் பரலோகத்தில் இருக்கிறதெனச் சிலர் சொல்கிறார்கள். வேறு சிலர், எதிர்காலத்தில் இந்தப் பூமி பரதீஸாக மாறுமெனச் சொல்கிறார்கள்.
பைபிளின் பதில்
ஆரம்பத்தில் கடவுள் படைத்த பரதீஸ், பூமியில் இருந்தது. மனிதர்கள் பூமியில் நிரந்தரமாகக் குடியிருக்க வேண்டும் என்பதுதான் கடவுளுடைய நோக்கம். பூமி என்றென்றும் நிலைத்திருப்பதற்காகவே அதை அவர் படைத்தார் என பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (சங்கீதம் 104:5) “வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்” என்றும் அது சொல்கிறது.—சங்கீதம் 115:16.
அப்படியானால், எதிர்காலத்தில் பூமி பரதீஸாக மாறப்போகிறது என்பதில் ஆச்சரியமே இல்லை! அதில் மனிதர்களைக் கடவுள் என்றென்றுமாக வாழ வைப்பார். அங்கு ஒற்றுமையும் சமாதானமும் நிலவும். வலி, வேதனை இருக்காது. பூமியில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளங்களை மனிதர்கள் ரசித்து, அனுபவித்து மகிழ்வார்கள்.—ஏசாயா 65:21-23.
“கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், . . . இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
பரதீஸ் பூமியில் வாழப்போவது யார்?
மக்களின் பதில்
பரதீஸில் நல்லவர்கள் மட்டும்தான் வாழ்வார்கள் என அநேக மதங்கள் கற்பிக்கின்றன. ஆனால், என்ன செய்தால் ஒருவர் “நல்லவராக” முடியும்? அதற்கு, மத சம்பிரதாயங்களிலும் சடங்காச்சாரமான ஜெபங்களிலும் ஈடுபட்டாலே போதும் எனச் சிலர் நினைக்கிறார்கள்.
பைபிளின் பதில்
“நீதிமான்கள்” பரதீஸில் வாழ்வார்கள் என பைபிள் சொல்கிறது. ஆனால், கடவுளுடைய கண்களில் யார் நீதிமான்? அவருடைய சித்தத்தை நிராகரித்துவிட்டு மத சடங்குகளில் ஈடுபடுகிறவர்கள் அல்ல. ஏனென்றால், ‘கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலே உத்தமம்’ என்று பைபிள் சொல்கிறது. (1 சாமுவேல் 15:22) சுருங்கச் சொன்னால், பைபிளிலுள்ள கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள்தான் “நீதிமான்கள்,” அவர்கள்தான் பரதீஸில் என்றென்றும் வாழ்வார்கள்.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
மத சடங்குகளில் ஈடுபடுவது கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதைக் குறிக்காது. உங்களுடைய அன்றாட செயல்கள் கடவுளைப் பிரியப்படுத்தலாம் அல்லது அவரைக் கோபப்படுத்தலாம். பைபிளைக் கவனமாக ஆராய்ந்தால் கடவுளை எப்படிப் பிரியப்படுத்தலாம் எனக் கற்றுக்கொள்வீர்கள். அவரைப் பிரியப்படுத்துவது கடினமல்ல. ஏனென்றால், “அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 5:3) நீங்கள் கீழ்ப்படிந்தால் பரதீஸில், அதாவது பூஞ்சோலை பூமியில், என்றென்றும் வாழும் வாழ்வைக் கடவுள் உங்களுக்குப் பரிசாகக் கொடுப்பார்.
“நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” —சங்கீதம் 37:29.◼ (g13-E 01)