நேரத்தைக் கடைப்பிடிப்பது ஏன் முக்கியம்?
நேரத்தைக் கடைப்பிடிப்பது எப்போதுமே சுலபமல்ல. நீண்ட தூரப் பயணம், போக்குவரத்து நெரிசல், ஏராளமான வேலைகள் போன்றவை நம் நேரத்தைக் கறந்துவிடுகின்றன. ஆனாலும், நேரத்தைக் கடைப்பிடிப்பது முக்கியம். உதாரணத்திற்கு, வேலை பார்க்கும் இடத்தில் நேரத்தைக் கடைப்பிடிக்கிற ஒரு நபர் பொதுவாக நம்பகமானவராகவும் கடினமாய் உழைப்பவராகவும் கருதப்படுவார். மறுபட்சத்தில், ஒருவர் வேலைக்குத் தாமதமாய் வருவதால் மற்றவர்களுடைய வேலை பாதிக்கப்படும்; தயாரிக்கப்படுகிற பொருள்களின் தரமும் அளிக்கப்படும் சேவைகளும் பாதிக்கப்படும். பள்ளிக்குத் தாமதமாய் வரும் ஒரு பிள்ளை சில வகுப்புகளைத் தவறிவிட நேரிடும்; அது அவனுடைய முன்னேற்றத்துக்கு தடைக்கல்லாக ஆகிவிடும். ஒரு நோயாளி மருத்துவமனைக்குத் தாமதமாகச் சென்றால், அவர் தகுந்த சிகிச்சை பெற முடியாமல் போய்விடும்.
சில இடங்களில், நேரத்திற்கு அந்தளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில், தாமதமாய் வருவது நம்முடைய பழக்கமாகிவிடலாம். அப்படியானால், நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை நமக்குள் வளர்ப்பது அவசியம். நேரத்தோடு வருவதன் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டால், நாம் நேரத்தை நிச்சயம் கடைப்பிடிப்போம். நேரத்தைக் கடைப்பிடிப்பதற்கான சில காரணங்கள் யாவை? நேரத்தைக் கடைப்பிடிப்பதன் சவாலை எப்படிச் சந்திக்கலாம்? என்ன நன்மைகளை எதிர்பார்க்கலாம்?
யெகோவா—காலம் தவறாதவர்
நாம் நேரத்தைக் கடைப்பிடிக்க விரும்புவதற்கு அதிமுக்கிய காரணம் நாம் வழிபடுகிற கடவுளைப் பின்பற்ற விரும்புவதே. (எபே. 5:1) காலம் தவறாமைக்கு யெகோவா மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார். அவர் ஒருபோதும் காலம் தாழ்த்துவதில்லை. அவர் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் காலத்தைத் துல்லியமாகக் கடைப்பிடிக்கிறார். உதாரணத்திற்கு, தேவபக்தியற்ற உலகத்தைப் ஜலப்பிரளயத்தால் அழிக்கத் தீர்மானித்தபோது அவர் நோவாவிடம், “நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு” என்று கூறினார். அழிப்பதற்கான சமயம் நெருங்கியபோது பேழைக்குள் செல்லும்படி நோவாவிடம் யெகோவா சொன்னார்; அடுத்து, “இன்னும் ஏழுநாள் சென்ற பின்பு, நாற்பது நாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம் பண்ணுவேன்” என்று தெரிவித்தார். அவர் சொன்னபடியே “ஏழுநாள் சென்ற பின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று.” (ஆதி. 6:14; 7:4, 10) நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் சரியான நேரத்தில் பேழைக்குள் சென்றிருக்காவிட்டால் அவர்களுடைய கதி என்னவாகியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். தாங்கள் வழிபட்ட கடவுளைப் போல அவர்களும் நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது.
பெருவெள்ளத்திற்கு சுமார் 450 வருடங்கள் கழித்து, முற்பிதாவான ஆபிரகாமிடம் அவருக்கு ஒரு மகன் பிறப்பார் என்றும் அந்த மகன் மூலமாய் வாக்குப்பண்ணப்பட்ட வித்து வருவார் என்றும் யெகோவா சொன்னார். (ஆதி. 17:15-17) “வருகிற வருஷத்தில் குறித்த காலத்திலே” ஈசாக்கு பிறப்பான் என்று கடவுள் சொன்னார். அவர் சொன்னபடி நடந்ததா? ஆம், ‘ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்’ என பைபிள் சொல்கிறது.—ஆதி. 17:21; 21:2.
கடவுள் காலம் தவறாதவர் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் பைபிளில் உள்ளன. (எரே. 25:11-13; தானி. 4:20-25; 9:25) யெகோவா நியாயந்தீர்க்கப்போகும் நாளை எதிர்பார்த்திருக்கும்படி பைபிள் நமக்குச் சொல்கிறது. மனிதருடைய பார்வையில் அந்த நாள் ‘தாமதிப்பதுபோல்’ தெரிந்தாலும், “அது தாமதிப்பதில்லை” என பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.—ஆப. 2:3.
வழிபாட்டில் காலந்தவறாமை
இஸ்ரவேல் ஆண்கள் அனைவரும் ‘தம்முடைய பண்டிகை நாட்களுக்காக’ குறித்த நேரத்தில், குறித்த இடத்தில் கூடிவர வேண்டுமென யெகோவா சொல்லியிருந்தார். (லேவி. 23:2, 4) பலிகளை எந்தெந்த சமயங்களில் செலுத்த வேண்டுமென்றும் அவர் நிர்ணயித்திருந்தார். (யாத். 29:38, 39; லேவி. 23:37, 38) வழிபாட்டில் தம்முடைய ஊழியர்கள் நேரத்தைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டுமென கடவுள் விரும்புவதை இது காட்டுகிறது, அல்லவா?
முதல் நூற்றாண்டில், சபை கூட்டங்கள் எப்படி நடத்தப்பட வேண்டுமென கொரிந்தியர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் சொல்கையில், “எல்லாக் காரியங்களும் கண்ணியமாகவும் ஒழுங்காகவும் நடைபெற வேண்டும்” என்று அறிவுறுத்தினார். (1 கொ. 14:40) அந்த அறிவுரையின்படி, வழிபாட்டுக்கான கிறிஸ்தவக் கூட்டங்களை அவர்கள் சரியான நேரத்தில் துவங்க வேண்டியிருந்தது. ஏனென்றால், நேரத்தைப் பற்றிய யெகோவாவின் கண்ணோட்டம் மாறவில்லை. (மல். 3:6) அப்படியானால், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு நேரத்துடன் செல்ல நாம் என்ன படிகளை எடுக்க வேண்டும்?
நேரத்தைக் கடைப்பிடிப்பதில் வெற்றி சிறக்க
முன்கூட்டியே திட்டமிடுவது பலனளிப்பதாகச் சிலர் கண்டிருக்கிறார்கள். (நீதி. 21:5) உதாரணமாக, ஓர் இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் போய்ச் சேருவதற்கு கொஞ்ச தூரம் பயணிக்க வேண்டுமென்றால், வெறுமனே அங்கு போய்ச் சேருவதற்கான நேரத்தை மட்டும் கணக்கிட்டு கிளம்புவது ஞானமான செயலாக இருக்குமா? போகும் வழியில் ‘எதிர்பாராத சம்பவம்’ நடந்தாலும்கூட, தாமதமின்றி போய்ச் சேருவதற்கு ஏற்றார்போல் சில நிமிடங்களுக்கு முன்னதாகவே கிளம்புவது நல்லது, அல்லவா? (பிர. 9:11) “ஓர் இடத்திற்குச் சரியான சமயத்தில் போய்ச் சேர எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதைக் கணக்கிட்டு கொள்வது ஒருவருக்கு பெரிதும் உதவும்” என்று நேரத்தை எப்போதும் கடைப்பிடிக்கிற இளைஞரான ஹோஸே சொல்கிறார்.a
சிலருக்கு, கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் சீக்கிரமாக வந்துசேர வேலை பார்க்கும் இடத்திலிருந்து முன்னதாகவே கிளம்ப வேண்டியிருக்கலாம்; அதற்காக சில ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கலாம். எத்தியோப்பியாவிலுள்ள ஒரு சாட்சி, வேலையில் தன்னுடைய ‘ஷிஃப்ட்’ மாறுவதால் கூட்டங்களுக்கு 45 நிமிடங்கள் தாமதமாகச் செல்ல நேரிடும் என்பதை உணர்ந்தபோது இதைத்தான் செய்தார். கூட்டங்கள் நடக்கும் நாட்களில் அடுத்த ஷிஃப்டில் வேலை செய்யும் சக பணியாளர் ஒருவரை சீக்கிரமாக வரும்படி கேட்டுக்கொண்டார். அதற்குக் கைமாறாக, ஏழு மணிநேரம் அவருக்காகக் கூடுதல் வேலை செய்ய ஒத்துக்கொண்டார்.
வீட்டில் சிறு பிள்ளைகள் இருந்தால், கூட்டங்களுக்குச் சரியான நேரத்தில் வருவது இன்னும் பெரிய சவாலாக இருக்கலாம். பொதுவாக, பிள்ளைகளைக் கூட்டத்திற்காகத் தயார்படுத்தும் பொறுப்பு அம்மாவின் தலையில் விழுகிறது, ஆனாலும் வீட்டிலுள்ள மற்றவர்களும் உதவலாம், உதவவும் வேண்டும். மெக்சிகோவிலுள்ள எஸ்பெரான்சா என்ற ஒரு தாய் தன்னுடைய எட்டு பிள்ளைகளை தன்னந்தனியாகவே கவனித்துக்கொண்டார். அவருக்கு இப்போது 5 வயதிலிருந்து 23 வயதுவரையான பிள்ளைகள் இருக்கிறார்கள். தன்னுடைய குடும்பத்தினர் நேரத்தைக் கடைப்பிடிக்க என்ன செய்கிறார்கள் என்பதை அவர் விளக்குகிறார்: “என்னுடைய மூத்த மகள்கள் அவர்களுடைய தம்பி தங்கைகளைக் கிளப்புவதற்கு உதவுகிறார்கள். இது என்னுடைய வீட்டுவேலைகளை முடிக்கவும் கூட்டங்களுக்கு ரெடியாகி குறித்த நேரத்தில் கிளம்புவதற்கும் உதவுகிறது.” இந்தக் குடும்பத்தார் வீட்டிலிருந்து கிளம்புவதற்கு ஒரு குறித்த நேரத்தை நிர்ணயித்திருக்கிறார்கள்; அதைக் கடைப்பிடிக்க எல்லாரும் ஒத்துழைக்கிறார்கள்.
நேரத்தோடு கூட்டங்களுக்குச் செல்வதால் வரும் பயன்கள்
கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு நேரத்துடன் செல்வதால் நமக்குக் கிடைக்கிற ஆசீர்வாதங்களைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது, எப்படியாவது நேரத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்ற நம் விருப்பத்தையும் தீர்மானத்தையும் பலப்படுத்தலாம். கூட்டங்களுக்கு நேரத்துடன் செல்லும் பழக்கத்தை வளர்த்துக்கொண்ட சான்றா என்ற இளம் பெண் இவ்வாறு சொல்கிறார்: “சீக்கிரம் போவது எனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்றால், சகோதர சகோதரிகளை நலம் விசாரித்து அவர்களுடன் பேசுவதற்கும் நன்கு பழகுவதற்கும் முடிகிறது.” நாம் ராஜ்ய மன்றத்துக்குச் சீக்கிரமாக வரும்போது, சகிப்புத்தன்மையோடும் உண்மையோடும் கடவுளுக்குச் சேவை செய்திருப்போரின் அனுபவத்தைக் கேட்டு பயனடைய முடியும். நாம் கூட்டங்களில் ஆஜராயிருப்பதும் உற்சாகமூட்டும் விதத்தில் உரையாடுவதும்கூட நம் சகோதர சகோதரிகள்மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி, ‘அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் தூண்டியெழுப்பும்.’—எபி. 10:24, 25.
கூட்டத்தின் ஆரம்பமாக பாடப்படும் பாடலும் ஜெபமும் வழிபாட்டின் முக்கிய அம்சங்களாகும். (சங். 149:1) நம் பாடல்கள் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கின்றன, அவை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய குணங்களை நமக்கு நினைப்பூட்டுகின்றன, அதோடு ஊழியத்தில் சந்தோஷமாய் ஈடுபட நம்மை உற்சாகப்படுத்துகின்றன. ஆரம்ப ஜெபத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? முற்காலங்களிலிருந்த ஆலயத்தைத் தம்முடைய “ஜெபவீடு” என்று யெகோவா அழைத்தார். (ஏசா. 56:7) இன்று, கூட்டங்களில் கடவுளிடம் ஜெபம் செய்வதற்காக நாம் ஒன்று கூடிவருகிறோம். ஆரம்ப ஜெபத்தில் யெகோவாவின் வழிநடத்துதலுக்காகவும் சக்திக்காகவும் விண்ணப்பம் செய்யப்படுகிறது; அதுமட்டுமல்லாமல், கூட்டத்தில் சிந்திக்கப்படவிருக்கும் விஷயங்களைக் கைக்கொள்ள நம் மனதையும் இருதயத்தையும் அது தயார்படுத்துகிறது. ஆகவே, கூட்டங்களின் ஆரம்பப் பாட்டிற்கும் ஜெபத்திற்கும் ஆஜராவதற்கு நேரத்தோடு வர தீர்மானமாயிருக்க வேண்டும்.
கூட்டங்களுக்குச் சீக்கிரமாய் வருவதற்கான காரணத்தைப் பற்றி பேசுகையில் 23 வயது ஹெலன் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாமீது எனக்கு அன்பு இருப்பதைக் காட்டுவதற்கான வழியே அது என நான் நினைக்கிறேன்; ஏனென்றால், அங்கு பாடப்படுகிற பாடல்கள், ஆரம்ப ஜெபம் உட்பட எல்லாத் தகவல்களையும் அளிப்பவர் அவரே.” நாமும்கூட அதேபோல் கருத வேண்டும், அல்லவா? ஆம், அதில் சந்தேகமே இல்லை. ஆகவே, நம்முடைய எல்லாச் செயல்களிலும், முக்கியமாக உண்மைக் கடவுளை வழிபடுவதோடு சம்பந்தப்பட்ட காரியங்களில் நேரத்தைக் கடைப்பிடிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள முயலுவோமாக.
[அடிக்குறிப்பு]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 26-ன் படம்]
முன்கூட்டியே தயாராகுங்கள்
[பக்கம் 26-ன் படம்]
‘எதிர்பாராத சம்பவத்திற்காகவும்’ நேரம் ஒதுக்குங்கள்
[பக்கம் 26-ன் படங்கள்]
கூட்டங்களுக்குச் சீக்கிரமாக வருவதன் நன்மைகளை அனுபவியுங்கள்