நற்செய்திக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளுங்கள்
1 யெகோவாவின் சாட்சிகளாக நாம் யெகோவாவின் பெயருக்குக் கனத்தைக் கொண்டுவர விரும்புகிறோம். நம்முடைய நடத்தை, பேச்சு, சிகையலங்காரம், உடை ஆகியவை மற்றவர்கள் மெய் வணக்கத்தை நோக்கும் விதத்தை செல்வாக்கு செலுத்தலாம் என்பதை அறிந்திருக்கிறோம். இது நாம் கூட்டங்களில் ஆஜராயிருக்கையில் முக்கியமாக உண்மையாயிருக்கிறது. கூட்டங்களில் சொல்லப்படுகிற மற்றும் செய்யப்படுகிற எல்லா காரியங்களும் நற்செய்திக்குப் பாத்திரமானதாயும் யெகோவாவுக்கு கனத்தைக் கொண்டுவருவதாயும் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்.—பிலி. 2:4.
2 உடை மற்றும் சிகையலங்காரத்துக்கான உலக தராதரங்களில் பெரும்பாலானவை கிறிஸ்தவர்களுக்கு ஏற்கத்தகாதவையாக இருக்கின்றன. நற்செய்தியின் ஊழியர்களுக்கு இந்தக் காரியம் அதிக கவனம் செலுத்தப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. ஜூன் 1, 1989 ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 20-ல் பின்வருமாறு குறிப்பிட்டது: “நம்முடைய உடை விலையுயர்ந்ததாக இருக்கவேண்டியதில்லை, ஆனால் அது சுத்தமாயும், நயமிக்கதாயும், அடக்கமாயும் இருக்கவேண்டும். நம்முடைய காலணிகளும்கூட நல்ல நிலையிலுள்ளவையாயும் நல்ல தோற்றத்தையுடையவையாயும் இருக்கவேண்டும். அதேபோன்றே, சபை புத்தகப் படிப்பு உட்பட எல்லா கூட்டங்களிலும், நம்முடைய உடல் சுத்தமாயிருக்கவேண்டும், நாம் ஒழுங்காகவும் பொருத்தமாகவும் உடை உடுத்தியிருக்கவேண்டும்.”
3 காலந்தவறாமை அன்பான அக்கறைக்கும் யோசனையோடு நடந்துகொள்வதற்கும் அடையாளம். சிலசமயங்களில், தவிர்க்கமுடியாத சூழ்நிலைகள் ஒரு கூட்டத்திற்கு நாம் சரியான நேரத்தில் வருவதைத் தடைசெய்யலாம். ஆனால் காலதாமதமாகவே வரும் பழக்கம் கூட்டங்களின் பரிசுத்த நோக்கத்திற்கு மரியாதை காட்டாமலிருப்பதையும் மற்றவர்களுக்கு இடையூறாக இருப்பதைத் தவிர்க்கவேண்டிய நம்முடைய பொறுப்பைப் போற்றத் தவறுவதையும் வெளிக்காட்டலாம். தாமதமாக வருபவர்கள் மற்றவர்களுடைய கவனத்தை சிதறடித்து, நிகழ்ச்சிநிரலிலிருந்து அவர்கள் முழு பலனையும் பெற்றுக்கொள்வதைத் தடைசெய்கின்றனர். ஆஜராகியிருப்பவர்கள் அனைவருடைய உணர்ச்சிகளுக்கும் அக்கறைகளுக்கும் மரியாதை காட்டுவதைக் காலந்தவறாமை வெளிப்படுத்துகிறது.
4 நம் அயலான்மீதான அன்பு கூட்டங்களின் போது கவனச்சிதறல்கள் ஏற்படுத்துவதைக் கவனமாக தவிர்க்கும்படி நம்மை செய்ய வேண்டும். தாழ்ந்தகுரலில் பேசுதல், சாப்பிடுதல், சுயிங்கத்தை சவைத்தல், காகிதங்களைக் கசக்குதல், தேவையில்லாமல் கழிவறைக்கு போய்வந்துகொண்டிருத்தல் ஆகியவை மற்றவர்கள் கருத்தூன்றி கவனிப்பதைக் கலைத்து, யெகோவாவின் வணக்க ஸ்தலத்திற்குக் கொடுக்கவேண்டிய தகுந்த கனத்தை குலைத்துப்போடலாம். ஏதோ திடீர்த்தேவை ஏற்பட்டால் மட்டுமே சகோதரர்கள் தங்கள் இருக்கைகளிலிருந்து எழுந்துசெல்லலாமே தவிர சபைக் காரியங்களைச் செய்வதோ மற்றவர்களோடு சம்பாஷிப்பதோ யாருக்கும் பொருத்தமற்றதாகும். மற்றபடி, எல்லாரும் அமர்ந்து, தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் பலனடைய நிகழ்ச்சிநிரலுக்கு செவிசாய்க்கவேண்டும். மோசமான நடத்தைமுறைக்கு ராஜ்ய மன்றத்தில் இடமில்லை, ஏனெனில் “அன்பு . . . அயோக்கியமானதைச் செய்யாது.”—1 கொ. 13:3, 4; கலா. 6:10.
5 கூட்டங்களில் நம்முடைய பிள்ளைகளின் சிறந்த நடத்தையும்கூட யெகோவாவின் பெயருக்குத் துதியையும் கனத்தையும் கொண்டுவருகிறது. பெற்றோர்களின் கண்டிப்பான மேற்பார்வை இன்றியமையாதது. பிள்ளைகள் செவிசாய்க்கவும் பங்கெடுக்கவும் உற்சாகப்படுத்தப்படவேண்டும். இளம் பிள்ளைகளையுடைய அநேக பெற்றோர்கள் மற்றவர்களுடைய கவனத்தை சிதறடிக்காமல் தங்களுடைய குழந்தைகளின் தேவைகளைக் கவனிப்பதற்கு எளிதில் வெளியே செல்ல முடிந்த சாதகமான இடங்களில் உட்காருவதைத் தெரிந்துகொள்கின்றனர்.
6 “சுவிசேஷத்திற்குப் பாத்திரராக . . . நடந்துகொள்ளுங்கள்,” என பவுல் புத்திமதி கூறினார். (பிலி. 1:27) எனவே, நாம் கூட்டங்களுக்கு ஆஜராகையில் ஒழுங்குள்ளவர்களாகவும் மற்றவர்களிடத்தில் கரிசனை காட்டுகிறவர்களாகவும் இருக்க முயற்சிசெய்வோமாக. “உங்களிடத்திலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் . . . ஆறுதலடை”வோம் என்பதை நம் எல்லாருடைய ஒத்துழைப்பும் உறுதிப்படுத்தும்.—ரோ. 1:11.