கடவுளுடைய வீட்டிற்கான போற்றுதலைக் காட்டுங்கள்
1 பைபிள் காலங்களில் யெகோவா தம்முடைய ஜனங்கள் தம்முடைய வீட்டிற்கு ஒழுங்காக ஒன்றுகூடிவரும்படி கட்டளையிட்டார். (லேவி. 23:2) இப்படிப்பட்ட ஒன்றுகூடிவருதல்கள், அவர்கள் தங்களுடைய மனதை கடவுளுடைய வார்த்தையின்மீது வைத்திருப்பதற்கு உதவிசெய்து, தியானிப்பதற்கும் கூட்டுறவுகொள்வதற்கும் யெகோவாவின் நியாயப்பிரமாணத்தைக் குறித்து கலந்தாலோசிப்பதற்கும் நேரத்தையளித்தன. அவர்களுடைய மனங்கள் கடவுளுடைய சிந்தனைகளால் நிறைந்திருந்தன, அவை அபரிமிதமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைக் கொண்டுவந்தன. இவை உண்மையிலேயே மகிழ்ச்சியான சமயங்களாக இருந்தன. இந்த ஏற்பாடு ஐக்கியத்தையும் தூய்மையான வணக்கத்தையும் முன்னேற்றுவித்தது. இன்று கடவுளுடைய வீட்டில் ஒன்றுகூடிவருதல்கள் குறைந்த முக்கியத்துவமுடையவை அல்ல.
2 கூட்டங்களைப் போற்றுகிறோம் என்பதை நாம் எவ்வாறு காண்பிக்கலாம்? கூட்டங்களில் குறைவான ஆஜர் எண்ணிக்கையை சில சபைகள் அறிக்கைசெய்கின்றன. எப்பொழுதாவது ஒரு நபருடைய சூழ்நிலைமை கூட்டத்திற்கு ஆஜராவதிலிருந்து அவரை தடைசெய்யக்கூடும். ஆனால் ஓரளவு சிறிய பிரச்சினைகள் கூட்டத்திற்கு ஒழுங்காக ஆஜராவதைக் குறுக்கிட நீங்கள் அனுமதித்திருக்கிறீர்களா? லேசான தலைவலி இருந்தாலோ அதிக வேலையாயிருந்த ஒரு நாளைக் கழித்தப் பிறகு சோர்வாக இருந்தாலோ வீட்டிலிருக்கும்படி சிலர் தீர்மானிக்கலாம். நம்மை சந்திக்க விரும்புகிற அவிசுவாசியான உறவினர்களை உபசரிப்பதற்குக் கடமைப்பட்டவர்களாக மற்றவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். விருப்பமான டிவி நிகழ்ச்சியையோ ஏதாவது போட்டி விளையாட்டு நிகழ்ச்சியையோ பார்ப்பதற்காகவும்கூட சிலர் கூட்டங்களை தவறவிட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் காட்டப்படுகிற போற்றுதலின் அளவானது, தெளிவாகவே கோராகின் குமாரர்களால் வெளிப்படுத்தப்பட்ட இருதயப்பூர்வமான ஆசையிலிருந்து குறைவுபடுகிறது: “என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது.”—சங். 84:2.
3 கூட்டங்களில் அபரிமிதமான ஆவிக்குரிய உணவு அளிக்கப்பட்டு வருகிறபோதிலும்கூட, ஆஜராகிற சிலர் கவனம்செலுத்துவதில் பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றனர். கூட்டங்களில் அவர்கள் பகற்கனா கண்டுகொண்டிருப்பதாகவும் அந்நாளின் கவலைகளைச் சிந்தித்துக்கொண்டு, அல்லது அரைத்தூக்கத்திலிருந்துகொண்டு இருப்பதாகவும் தங்களைக் காணலாம். சுருக்கமான குறிப்புகள் எடுப்பது, விழிப்புடனிருப்பதற்கும் சொல்லப்படுகிறவற்றின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும் உதவிசெய்கிறது என்பதாக அநேகர் கண்டிருக்கிறார்கள். காரியங்களை எழுதிவைப்பது, தகவலை மனதில் பதியும்படி செய்கிறது. அதோடுகூட, முன்கூட்டியே தயார்செய்வதும் முழுமையாக பயனடைவதற்கு உதவியாக இருக்கிறது. நாம் நன்றாகத் தயார்செய்வோமானால், ‘வழக்கத்திற்கு அதிகமான கவனம் செலுத்துபவர்களாக’ இருக்கமுடியும்.—எபி. 2:1, NW.
4 சிறுவர்களும் பெரியவர்களும் கூட்டங்களில் அளிக்கப்படுகிற போதனையைக் கிரகித்துக்கொள்வது அவசியம். பிள்ளைகளை சத்தமில்லாமலும் அமைதியாகவும் வைத்துக்கொள்வதற்காக, பெற்றோர் அவர்களுக்கு விளையாட்டுப் பொம்மைகளையும் வர்ணம் தீட்டுவதற்கான புத்தகங்களையும் கொடுப்பார்களானால், பிள்ளைகள் கற்றுக்கொள்வது மிகவும் மட்டுப்பட்டதாயிருக்கும். விளையாட, பேச, அழ அல்லது அருகில் அமர்ந்திருப்போருக்கு தொல்லையுண்டாக்குகிற வேறுசில காரியங்களைச் செய்வதற்கு பிள்ளைகள் அனுமதிக்கப்படுகையில், சரியான சிட்சை குறைவுபடுகிறது. கூட்டம் நடைபெறும்போது அடிக்கடியும் தேவையில்லாமலும் தண்ணீர் குடிப்பதற்கு அல்லது கழிவறைக்குச் செல்வது, பெற்றோரில் ஒருவர் எப்பொழுதும் தன்னோடு கூடவருவார்கள் என்பதை பிள்ளை அறிந்திருக்கும்போது சாதாரணமாக குறைக்கப்படுகின்றன.
5 காலந்தவறாமை முக்கியம்: எப்பொழுதாவது, தவிர்க்கமுடியாத சூழ்நிலைமைகள் கூட்டத்திற்கு சரியான நேரத்திற்கு வந்துசேர்வதிலிருந்து நம்மை தடைசெய்யக்கூடும். ஆனால் வழக்கமாக தாமதமாய்—ஆரம்ப பாட்டு மற்றும் ஜெபத்திற்குப் பிறகு—வந்துசேருவது கூட்டங்களுடைய பரிசுத்த நோக்கத்திற்கான மரியாதையிலும் மற்றவர்களை இடையூறு செய்வதைத் தவிர்ப்பதற்கான நம்முடைய உத்தரவாதத்திலும் குறைவுபடுவதைக் காண்பிக்கிறது. சபை கூட்டங்களில் நம்முடைய சகோதர சகோதரிகளோடு பாடுவதும் ஜெபிப்பதும் நம்முடைய வணக்கத்தின் பாகமாயிருக்கிறது என்பதை நினைவிற்கொள்ளுங்கள். வழக்கமான தாமதம், பொதுவாக மோசமான ஒழுங்கமைப்பு அல்லது முன்கூட்டியே திட்டமிடுவதில் தவறுவதன் விளைவாக இருக்கிறது. காலந்தவறாமல் சரியான நேரத்திற்கு இருப்பது, நம்முடைய கூட்டங்களை நாம் மதித்துப் போற்றுகிறோம் என்பதைக் காண்பிக்கிறது.
6 நாட்கள் தொடர்ந்து நெருங்கிக்கொண்டு வருகையில், ஒன்றுகூடிவருவதற்கான அவசியம் அதிகமாகவே ஆகலாம். (எபி. 10:24, 25) ஒழுங்காக ஆஜராதல், முன்கூட்டியே தயார்செய்தல், காலந்தவறாமை, கூர்ந்த கவனம் செலுத்துதல், நாம் கற்றுக்கொள்வதைப் பொருத்திப் பிரயோகித்தல் ஆகியவற்றின் மூலம் நம்முடைய போற்றுதலைக் காண்பிப்போமாக.