யெகோவாவின் வணக்க ஸ்தலத்திற்கு மரியாதை காட்டுங்கள்
1 யாரேனும் ஒருவர் அவருடைய வீட்டிற்கு விருந்தினராக நம்மை அழைத்திருக்கையில், அந்த நபரின் உடைமைக்கு மரியாதை காட்டுவோம். சேதத்தை ஏற்படுத்தும் எதையும் செய்யாதபடிக்கு கவனமாயிருப்போம். அவ்வீட்டின் நடைமுறை ஒழுங்குக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வோம். யெகோவாவின் விருந்தினராக இருக்கையில் இன்னும் எந்தளவு நன்றாக நடந்துகொள்ள வேண்டும்! அவருடைய வீட்டில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் அறிந்திருப்பது அவசியம். (சங். 15:1; 1 தீ. 3:15) நம்முடைய கிறிஸ்தவ கூட்டங்கள் ராஜ்ய மன்றத்தில், தனிப்பட்டவரின் வீட்டில், அல்லது பொது அரங்கத்தில் எங்கு நடந்தாலும் சரி, அவை யெகோவாவின் வீட்டைப் போலிருப்பதால், நம்மில் அநேகர் எப்போதும் நம்முடைய வணக்க ஸ்தலத்திற்கு மரியாதை காட்டுகிறோம். ஏனெனில், யெகோவாவின் “மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது.”—சங். 148:13.
2 கூட்டங்களில் சில சகோதரர்கள் கூச்சல் போடுவதன் மூலமோ அல்லது அளிக்கப்படும் குறிப்புகள் முக்கியமற்றவை போல் நடந்துகொள்வதன் மூலமோ சரியான மரியாதையைக் காட்ட தவறியிருக்கின்றனர். கூட்டம் நடைபெறுகையில், வராண்டாவிலோ, பத்திரிகை மற்றும் புத்தக இலாகாவைச் சுற்றியோ, கழிவறைகளிலோ அல்லது ராஜ்ய மன்றத்திற்கு வெளியேயோ பெரியவர்களில் சிலர் நின்றுகொண்டு வீணானவற்றை பேசுகின்றனர். பெரிய பிள்ளையின் மேற்பார்வையில் சிறு பிள்ளையைப் பார்த்துக்கொள்ள விடுகையில் இருவரும் சேர்ந்து விளையாட ஆரம்பித்து நிகழ்ச்சியிலிருந்து எந்தப் பலனையும் பெறுவதில்லை. சில இளைஞர்கள், கூட்டங்கள் முடிந்தபிறகு ராஜ்ய மன்றத்திற்கு வெளியே விளையாடுவது கவனிக்கப்பட்டிருக்கிறது. அப்போது பெரும் கூச்சலிடுகிறவர்களாகவும் ஏன், ஒருவருக்கொருவர் கராத்தே செய்கைகளை செய்பவர்களாகவும்கூட இருந்திருக்கின்றனர். சிலர் அயலாருக்கு தொந்தரவு தருபவர்களாகவோ சாலை போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்பவர்களாகவோ இருந்திருக்கின்றனர்.
3 மரியாதையில்லாமல் நடந்துகொள்வதை தவிர்ப்பது எப்படி: நம்முடைய வணக்கத்தின் மதிப்பு மற்றும் பரிசுத்தத் தன்மையின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொள்கையில், சந்தேகத்திற்கிடமின்றி, கிசுகிசுத்தல், சாப்பிடுதல், சூயிங்கத்தை மெல்லுதல், காகிதங்களை சரசரவென கசக்குதல், தேவையின்றி கழிவறைக்கு பலமுறை போய்வருதல், அல்லது எப்போதுமே தாமதமாக கூட்டங்களுக்கு வருதல் ஆகியவற்றின் மூலம் நாம் மற்றவர்களின் கவனத்தை திசைதிருப்ப விரும்ப மாட்டோம். மரியாதையும் போற்றுதலுமிக்க பெற்றோர்கள், ராஜ்ய மன்றத்தில் அல்லது புத்தகப் படிப்பு நடைபெறுகின்ற வீட்டில், தங்கள் பிள்ளைகள் குப்பைகளை தரையில் போடுவதற்கோ நாற்காலிகளையும் சுவர்களையும் அழுக்காக்குவதற்கோ அனுமதிக்க மாட்டார்கள். சந்தேகத்திற்கிடமின்றி, நம்முடைய கூட்டங்களில் எந்த வகையான வெட்கக் கேடான நடத்தை, புத்தியீனமான பேச்சு அல்லது ஆபாசமான ஜோக்குகளுக்கு நிச்சயமாக கொஞ்சமும் இடமில்லை என்பதை நாம் அனைவரும் ஒத்துக் கொள்வோம்.—எபே. 5:4.
4 நம்முடைய கிறிஸ்தவ கூட்டங்களின் நோக்கத்தை நாம் எப்போதும் மனதில் வைத்திருந்தால், நாமும் நம்முடைய பிள்ளைகளும் யெகோவாவின் வணக்கத்தில் ‘காத்திருக்க தெரிந்துகொண்ட’ இடத்திற்கு தகுந்த மரியாதை காட்டுவதை உறுதிசெய்து கொள்வோம்.—சங். 84:10.