‘அவருடைய நற்செயல்கள் அவரைப் பின்தொடர்ந்திருக்கின்றன’
தியோடர் ஜாரஸ். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினரான இவர், 2010 ஜூன் 9-ஆம் தேதி புதன்கிழமை காலை பூமிக்குரிய சேவையை முடித்தார். இவருக்கு 84 வயது, இவர் தனது மனைவி மலிட்டாவுடன் 53 வருடங்கள் வாழ்ந்திருக்கிறார். இவருக்கு ஓர் அக்கா இருக்கிறார்; அக்காவிற்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் கண்டகியிலுள்ள பைக் கவுன்டியில் 1925-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ல் பிறந்தார்; 1941, ஆகஸ்ட் 10-ஆம் தேதி, அதாவது 15 வயதில், யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்தார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, 17 வயதில் ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பித்தார்; கிட்டத்தட்ட 67 வருடங்கள் முழுநேர சேவையில் ஈடுபட்டார்.
1946-ல் தனது 20-ஆம் வயதில் சகோதரர் ஜாரஸ் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் ஏழாவது வகுப்பில் கலந்துகொண்டார். பட்டம் பெற்ற பிறகு அமெரிக்காவில் ஒஹாயோவிலுள்ள கிளீவ்லாண்டில் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். 1951-ல் ஆஸ்திரேலிய கிளை அலுவலக வேலைகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பைப் பெற்றார். சகோதரர் ஜாரஸைப் பற்றி யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1983 (ஆங்கிலம்) இவ்வாறு குறிப்பிட்டது: “அமைப்பு சார்ந்த காரியங்கள் சீராக நடைபெறுவதில் அவருக்கிருந்த பக்திவைராக்கியத்தையும் ஊழியத்தைச் சிறப்பாக முன்நின்று நடத்தியதையும் பார்த்து அந்த நாட்டு சகோதரர்கள் மிகுந்த உற்சாகம் பெற்றார்கள்.”
சகோதரர் ஜாரஸ் அமெரிக்காவிற்குத் திரும்பிய பிறகு, 1956 டிசம்பர் 10-ல் மலிட்டா லாஸ்கோவைக் கரம்பிடித்தார். திருமணமான கையோடு அவர்கள் இருவரும் பயண ஊழியத்தைத் தொடங்கினார்கள்; அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வட்டார ஊழியத்திலும் மாவட்ட ஊழியத்திலும் ஊக்கமாக ஈடுபட்டார்கள். 1974-ஆம் ஆண்டின் கடைசியில், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினராகச் சேவை செய்வதற்கு சகோதரர் ஜாரஸ் அழைக்கப்பட்டார்.
சகோதரர் ஜாரஸ் யெகோவாவுக்கென்றே தன்னை முழுமையாக அர்ப்பணித்து, முழு இருதயத்தோடு தேவராஜ்ய வேலைகளில் ஈடுபட்ட உண்மை ஊழியர் என்பதை நம்மால் மறக்கவே முடியாது. இவர் அன்பும் அக்கறையுமுள்ள கணவராக விளங்கினார்; தன்னுடைய சொந்த விருப்பங்களைவிட மற்றவர்களுடைய விருப்பங்களுக்கு முதலிடம் தரும் ஆன்மீகச் சிந்தையுள்ளவராகவும் திகழ்ந்தார். (1 கொ. 13:4, 5) எல்லாரிடமும் நியாயத்தோடும் இரக்கத்தோடும் நடந்துகொள்ள வேண்டுமென்ற உள்ளான ஆசை அவருக்கு இருந்ததை இது காட்டுகிறது. அதுமட்டுமல்ல, மக்கள்மீது அளவுகடந்த அன்பும் அக்கறையும் அவருக்கு இருந்ததால் ஊழியத்தில் பக்திவைராக்கியத்துடன் ஈடுபட்டார்.
பெத்தேல் குடும்ப அங்கத்தினரும் உலகளாவிய சகோதர குடும்பத்தில் ஒருவருமான சகோதரர் ஜாரஸ் அயராது உழைத்தார், அன்பிற்குரியவராக இருந்தார்; இவரது இழப்பால் நாம் சோகத்தில் வாடினாலும், இத்தனை காலமாக அவர் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்ததைக் குறித்து சந்தோஷப்படுகிறோம். இவர் ‘சாகும்வரை உண்மையுள்ளவராய் இருந்து . . . வாழ்வெனும் கிரீடத்தை’ பெற்றிருக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. (வெளி. 2:10) ‘அவருடைய நற்செயல்கள் அவரைப் பின்தொடர்ந்திருக்கின்றன’ என்பதிலும் உறுதியாய் இருக்கிறோம்.—வெளி. 14:13.