அர்மகெதோன் மக்களின் கருத்து
“எபிரெய மொழியில் அர்மகெதோன் என்றழைக்கப்பட்ட இடத்தில் . . . அவர்களைக் கூட்டிச்சேர்த்தன.” —வெளிப்படுத்துதல் 16:16.
“அர்மகெதோன்” என்ற வார்த்தையைக் கேட்டதும் உங்கள் மனத்திரையில் என்ன காட்சி வருகிறது? ஒருவேளை, பயங்கரமான பேரழிவுகள் உங்கள் கண்முன் வரலாம். இந்த வார்த்தை பைபிளில் ஒருமுறைதான் வருகிறது, ஆனால் மீடியாக்களாலும் மதத் தலைவர்களாலும் பலமுறை பேசப்படுகிறது.
அர்மகெதோனைப் பற்றிய மக்களின் கருத்து பைபிளோடு ஒத்துப்போகிறதா? இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்வது முக்கியம். ஏனென்றால், அர்மகெதோனைப் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ளும்போது தேவையில்லாத பயத்திலிருந்து விடுபடுவோம், ஒளிமயமான எதிர்காலம் நம் கண்முன் தெரியும், கடவுள் உண்மையில் எப்படிப்பட்டவர் என்று புரிந்துகொள்வோம்.
அடுத்து வரும் மூன்று கேள்விகளைப் பாருங்கள். அர்மகெதோனைப் பற்றி மக்கள் சொல்லும் கருத்தையும் பைபிள் சொல்லும் உண்மையையும் ஒப்பிடுங்கள்.
1. அர்மகெதோன்—மனிதர்கள் கொண்டுவரும் பேரழிவா?
பத்திரிகையாளர்களும் ஆராய்ச்சியாளர்களும், மனிதர்கள் கொண்டுவரும் பேரழிவுகளை விவரிக்க அர்மகெதோன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு, முதல் உலகப் போரையும் இரண்டாம் உலகப் போரையும் அர்மகெதோன் என்று சொன்னார்கள். இந்தப் போர்களுக்குப் பிறகு, ஐக்கிய மாகாணங்களும் சோவியத் யூனியனும் குண்டு மழையால் ஒன்றையொன்று அழித்துவிடும் என்று எல்லாரும் பயந்தார்கள். அதை “அணுகுண்டு அர்மகெதோன்” என்று மீடியாக்கள் விளம்பரப்படுத்தின. இன்று, சுற்றுச்சூழல் மாசு பூமியின் சீதோஷ்ணத்தை படுபயங்கரமாக பாதிக்கும் என்றும், அதனால் “சீதோஷ்ண அர்மகெதோன்” ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் பயப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து: இந்த உலகமும் அதிலுள்ள ஒவ்வொரு உயிரின் எதிர்காலமும் மனிதனின் கையில்தான் இருக்கிறது. அரசாங்கங்கள் ஞானமாகச் செயல்பட்டால் இந்த உலகத்தைக் காப்பாற்ற முடியும், இல்லாவிட்டால் இந்தப் பூமி பூண்டோடு அழிந்துவிடும்.
பைபிளின் பதில்: மனிதர்கள் பூமியை நாசமாக்க கடவுள் ஒருபோதும் விடமாட்டார். யெகோவாa இந்தப் பூமியை “வெறுமையாயிருக்க” படைக்காமல் அதில் மக்கள் ‘குடியிருப்பதற்காக’ படைத்தார் என்று பைபிள் வாக்களிக்கிறது. (ஏசாயா 45:18) அதுமட்டுமா, ‘பூமியை நாசமாக்குபவர்களை [கடவுள்] நாசமாக்க’ போகிறார்.—வெளிப்படுத்துதல் 11:18.
2. அர்மகெதோன்—இயற்கை பேரழிவா?
பயங்கரமான பேரழிவுகளுக்கு “அர்மகெதோன்” என்று பத்திரிகையாளர்கள் பெயர் சூட்டுகிறார்கள். உதாரணத்திற்கு, 2010-ல் “ஹெய்டியில் ‘அர்மகெதோன்’” என்ற தலைப்பில் ஓர் அறிக்கை வெளியானது. அந்த நாட்டையே பதம்பார்த்த பூமியதிர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட கஷ்டத்தையும், சேதத்தையும், உயிரிழப்பையும் அந்த அறிக்கை விவரித்தது. நிருபர்களும் சினிமா தயாரிப்பாளர்களும், நடந்து முடிந்த சம்பவங்களை மட்டுமல்ல நடக்குமென எதிர்பார்க்கும் பயங்கரமான சம்பவங்களையும் அர்மகெதோனோடு சம்பந்தப்படுத்தி பேசுகிறார்கள். உதாரணத்திற்கு, குறுங்கோள் பூமியைத் தாக்கினால் படுநாசகரமான விளைவுகள் ஏற்படுமென்று ஊகித்து அதை “அர்மகெதோன்” என்று விவரிக்கிறார்கள்.
மக்கள் கருத்து: அர்மகெதோன் என்பது ஓர் எதிர்பாராத நிகழ்வு; நல்லவர்கள் கெட்டவர்கள் என்று வித்தியாசம் பார்க்காமல் எல்லாரையும் வாரி சுருட்டிக்கொள்ளும் ஓர் அழிவு. நீங்கள் என்ன செய்தாலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது.
பைபிளின் பதில்: அர்மகெதோன், மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் திடீர் சம்பவம் அல்ல. மாறாக, அது கெட்ட மக்களை மட்டுமே அழிக்கும். “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை” என்று பைபிள் வாக்களிக்கிறது.—சங்கீதம் 37:10.
3. அர்மகெதோன்—பூமியின் அழிவா?
நன்மைக்கும் தீமைக்கும் எதிராக ஒரு கடைசி போர் நடக்கும், அதில் பூமி ஒரேயடியாக அழிந்துவிடும் என்று மத நம்பிக்கையுள்ள அநேகர் நம்புகிறார்கள். அமெரிக்காவில் பிரின்ஸ்டன் சர்வே ரிசர்ச் அசோஸியேட்ஸ் நடத்திய ஒரு சுற்றாய்வில், “அர்மகெதோன் என்ற போரில்” இந்தப் பூமி சுவடுதெரியாமல் அழிந்துவிடும் என்று 40 சதவீதத்தினர் நம்புவதாகத் தெரியவந்தது.
மக்கள் கருத்து: மனிதர்கள் என்றென்றும் இந்தப் பூமியில் வாழமாட்டார்கள், பூமியும் சீக்கிரத்தில் அழிந்துவிடும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மனித இனமே அழிந்துவிட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் கடவுள் அவர்களைப் படைத்தார்.
பைபிளின் பதில்: கடவுள் இந்த ‘பூமியை அதன் அஸ்திபாரங்களின் மீது ஸ்தாபித்தார், எனவே அது ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை’ என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (சங்கீதம் 104:5, ஈஸி டு ரீட் வர்ஷன்) பூமியில் வாழப்போகும் மக்களைப் பற்றியும் சொல்கிறது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:29.
இதுவரை பார்த்ததிலிருந்து அர்மகெதோனைப் பற்றிய மக்களின் கருத்தும் பைபிளின் பதிலும் முற்றிலும் முரண்படுகிறது. அப்படியென்றால், அர்மகெதோன் என்றால் என்ன? (w12-E 02/01)
[அடிக்குறிப்பு]
a பைபிளில் கடவுளுடைய பெயர் யெகோவா.