வரவு குறைந்தால் எப்படிச் சமாளிப்பது?
ஓபெத்திற்கு இரண்டு பிள்ளைகள். ஆப்பிரிக்காவில் ஒரு ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் 10 வருடங்களாக வேலை செய்து வந்தார். குடும்பத்திற்காகப் பணத்தைத் தண்ணீர் போல செலவு செய்தார். அவ்வப்போது குடும்பத்தோடு சேர்ந்து ஆடம்பரமாகப் பொழுதைக் கழித்தார். இதெல்லாம் ஒரே நாளில் தலைகீழானது. ஓட்டலுக்கு ஆட்கள் வருவது குறைந்துபோனதால் வேலையிழந்தார்.
ஒரு பெரிய வங்கியில் 22 வருடங்களாக வேலை செய்த ஸ்டீஃபன், வங்கியின் நிர்வாக அதிகாரி ஆனார். பெரிய வீடு... கார்... வேலைக்காரர்கள்... பிள்ளைகள் படிக்க வசதியான பள்ளி... என்று எல்லாச் சலுகைகளும் கிடைத்தது. ஆனால், வங்கியில் ஆட்களைக் குறைத்தபோது இவரது வேலை பறிபோனது. “நாங்க அப்படியே நொறுங்கிபோயிட்டோம். கவலை, வெறுப்பு, பயம் எல்லாம் சேர்ந்து, எனக்கு என்ன செய்றதுனே தெரியல” என்று ஸ்டீஃபன் சொல்கிறார்.
இதுபோன்று பாதிக்கப்பட்டவர்கள் ஒருவர் இருவர் அல்ல. உலகெங்கும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கோடியில் புரண்ட லட்சக்கணக்கானோர் இப்போது தெருக்கோடியில் நிற்க வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. வேறு வேலை கிடைத்தாலும் சம்பளம் குறைவாக இருப்பதால், “யானை விலை குதிரை விலை” என்று எகிறிக்கொண்டே போகும் விலைவாசியில் காலம் தள்ள கஷ்டப்படுகிறார்கள். வளர்ந்த நாடுகள், பின்தங்கிய நாடுகள் என்று எல்லா நாடுகளையும் இந்தப் பிரச்சினை ஆட்டிப்படைக்கிறது.
நடைமுறையான ஞானம் தேவை
வேலை பறிபோனாலோ, சம்பளம் குறைந்துபோனாலோ வேண்டாத எண்ணங்கள் மனதைக் கவ்விக்கொள்வது இயல்பு. கொஞ்சம்கூட கவலைப்படாமல் யாருமே இருக்க முடியாதுதான். ஆனால், “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” என்று ஒரு ஞானி சொன்னார். (நீதிமொழிகள் 24:10) எனவே, இதுபோன்ற நேரங்களில் சோர்ந்துபோய் மூலையில் முடங்கிவிடக்கூடாது. கடவுளுடைய வார்த்தைச் சொல்வதைப் போல ‘நடைமுறையான ஞானத்தை வளர்த்துக்கொள்ள’ முயற்சி செய்ய வேண்டும்.—நீதிமொழிகள் 2:7.
பைபிள் பணப் பிரச்சினையைச் சரிசெய்ய உதவும் புத்தகமல்ல. ஆனாலும் அதில் இருக்கும் நடைமுறையான ஆலோசனைகள் லட்சக்கணக்கானோருக்கு உதவியிருக்கிறது. பைபிள் தரும் சில முக்கிய நியமங்களைப் பார்க்கலாம்.
கணக்கிட்டுப் பாருங்கள். லூக்கா 14:28-ல் இயேசு சொன்னார்: “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், அதைக் கட்டி முடிக்கப் போதுமான வசதி தனக்கு இருக்கிறதா என்று முதலில் உட்கார்ந்து செலவைக் கணக்கிட்டுப் பார்க்காமல் இருப்பானா?” இந்த நியமத்தின்படி பட்ஜெட் போட்டு அதை அப்படியே பின்பற்ற வேண்டும். இது அப்படி ஒன்றும் சுலபமல்ல என்று ஓபெத் சொல்கிறார்: “வேலை பறிபோறதுக்கு முன்னாடி, சூப்பர் மார்க்கெட் போனா கண்டதையும் வண்டி வண்டியா அள்ளிட்டு வருவோம். நாங்க ஆசப்பட்டதை எல்லாம் வாங்கறதுக்கு தாராளமா பணம் இருந்தது, அதனால பட்ஜெட் போட்டதே இல்ல.” பட்ஜெட் போட்டால், குறைந்த சம்பளமாக இருந்தாலும் குடும்பத்தின் தேவையைக் கவனித்துக்கொள்ள முடியும்.
எளிமையாக வாழுங்கள். வசதியாக வாழ்ந்துவிட்டு இப்போது எளிமையாக வாழ்வதென்றால் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், வேறு வழியில்லை. ஸ்டீஃபன் சொல்கிறார்: “காசை மிச்சம் பண்றதுக்காக எங்க சொந்த வீட்டுக்கு மாறிப் போயிட்டோம். அது ரொம்ப சின்ன வீடு, உள்ளே வேலையெல்லாம் முடியாம இருந்திச்சி. பிள்ளைகளையும் பணம் கம்மியா வாங்குற, ஆனா நல்லா சொல்லிக்கொடுக்கற ஸ்கூல்ல சேர்த்தோம்.”
எளிமையாக வாழ்வதற்கு குடும்பத்தில் எல்லாரும் மனந்திறந்து பேசுவது முக்கியம். ஒன்பது வருடங்களாக நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து, வேலையிழந்த ஆஸ்டின் சொல்கிறார்: “முக்கியமா என்னென்ன தேவைன்னு நானும் மனைவியும் உக்காந்து லிஸ்ட் போட்டோம். விதவிதமான சாப்பாடு, ஆடம்பரமான விடுமுறை, தேவையில்லாமல் துணிமணி வாங்குறது இப்படி எல்லாத்துக்கும் தடா போட வேண்டியிருந்தது. குடும்பத்துல எல்லாரும் ஒத்துப்போனத நினைச்சி ரொம்ப சந்தோஷமா இருக்கு.” இந்தத் திடீர் மாற்றத்தைப் பிள்ளைகள் புரிந்துகொள்வது கொஞ்சம் கஷ்டம். பெற்றோர்கள்தான் புரிய வைக்க வேண்டும்.
எந்த வேலையானாலும் செய்யுங்கள். சொகுசாக உட்கார்ந்து வேலை பார்த்து பழகிப்போனவர்களுக்கு முதுகொடிய வேலை பார்ப்பதென்றால் மகா கஷ்டம். ஆஸ்டினும் இதை ஒத்துக்கொள்கிறார்: “பெரிய கம்பெனியில எல்லாரையும் வேலை வாங்கிட்டு இப்ப இன்னொருத்தர் கீழ வேலை செய்ய மனசு ஏத்துக்க மாட்டேங்கிது.” நீதிமொழிகள் 29:25-ல் பைபிள் சொல்வதை யாராலும் மறுக்க முடியாது: “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்.” மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தால், இலையில் சோறு தானாக வந்துவிடாது. அப்படியென்றால், தவறான எண்ணங்களை எப்படி விரட்டுவது?
மனத்தாழ்மை முக்கியம். ஓபெத் என்பவரின் விஷயத்திற்கு வரலாம். பெரிய ஓட்டலில் வேலை பறிபோன பிறகு, அவரோடு முன்பு வேலை பார்த்த ஒருவர் வேலை தருவதாகச் சொன்னார். அவர் வண்டிகள் பழுதுபார்க்கும் கடையை நடத்தி வந்தார். அந்த வேலைக்குப் போனால், வண்டிகளுக்குத் தேவையான பெயின்ட், மற்றும் இதர பொருட்களை வாங்க புழுதி படிந்த சாலையில் கால் கடுக்க நடக்க வேண்டியிருக்கும். “அந்த வேலை எனக்கு சரிப்பட்டு வராதுன்னு தோனிச்சி. முன்னால கிடைச்ச சம்பளத்துல கால்வாசிகூட கிடைக்காது. மனத்தாழ்மையா இருத்ததாலதான் அந்த வேலையை ஏத்துக்க முடிஞ்சுது. என் குடும்பத்துக்கு தேவையானத வாங்கறதுக்கு அந்த சம்பளமே போதுமானதா இருந்தது.” உங்களால் இதேபோன்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள முடியுமா?
மனநிறைவுடன் இருங்கள். உள்ளதை வைத்து சந்தோஷமாக, திருப்தியாக இருப்பதே மனநிறைவு. ஆனால், பணத்திற்கு திண்டாடும் நேரத்தில் மனநிறைவோடு இருக்க முடியுமா என்று சிலர் கேட்கலாம். அப்போஸ்தலன் பவுல் இந்த விஷயத்தில் நல்ல முன்மாதிரி வைத்தார்: “எந்தச் சூழ்நிலையிலும் நான் மனநிறைவுடன் இருப்பதற்குக் கற்றுக்கொண்டேன். குறைவான பொருள்களோடும் எனக்கு வாழத் தெரியும், ஏராளமான பொருள்களோடும் எனக்கு வாழத் தெரியும்.”—பிலிப்பியர் 4:11, 12.
நாளைக்கு சூழ்நிலை சரியாகிவிடலாம், அல்லது இன்னும் மோசமாகிவிடலாம். அதனால், பவுல் சொல்லும் ஆலோசனையை மனதில் வைத்தால் பயனடையலாம்: “தேவபக்தி மிகுந்த ஆதாயம் தரும் என்பது உண்மைதான்; ஆனால் தேவபக்தியோடுகூட, போதுமென்ற மனம் உள்ளவர்களுக்கே அது மிகுந்த ஆதாயம் தரும். அதனால், நமக்கு உண்ண உணவும் உடுத்த உடையும் இருக்க இடமும் இருந்தால், அதுவே போதும் என்று திருப்தியுடன் வாழ வேண்டும்.” அதற்காக, சோம்பேறியாக இருக்கச் சொல்லவில்லை. அடிப்படைத் தேவைகளுக்கு மட்டும் கவனம் செலுத்தச் சொல்கிறார்.—1 தீமோத்தேயு 6:6, 8.
நிஜ சந்தோஷம்
ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கிக் குவித்துக்கொண்டு ஆடம்பரமாக வாழ்வது உண்மையான சந்தோஷத்தைத் தராது. “பெற்றுக்கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது” என்று இயேசு சொன்னார். மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும்போதும், அவர்களை உற்சாகப்படுத்தும்போதும்தான் நிஜ சந்தோஷம் ஊற்றெடுக்கும்.—அப்போஸ்தலர் 20:35.
நமக்கு என்னென்ன தேவை என்பது நம்மைப் படைத்த யெகோவா தேவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால், பைபிளில் நல்ல ஆலோசனைகளைத் தந்திருக்கிறார். அவற்றை கடைப்பிடித்த நிறைய பேர் கவலைகளை மறந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், ஒரே ராத்திரியில் ‘ஓகோ’வென ஆகிவிட முடியாதுதான். ‘முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடிக்கொண்டே இருந்தால்,’ அன்றாட தேவைகளை அவர் பார்த்துக்கொள்வார் என்று இயேசு நமக்கு உறுதியளிக்கிறார்.—மத்தேயு 6:33. (w12-E 06/01)