பைபிளை மந்திர சக்தியுள்ள புத்தகமாகப் பயன்படுத்தாதீர்கள்
“கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, வல்லமையுள்ளது.” (எபி. 4:12) அப்போஸ்தலன் பவுலுடைய வார்த்தைகள் இவை! மனிதர்களுடைய இருதயங்களைத் தொட்டு அவர்களுடைய வாழ்க்கையை அடியோடு மாற்றும் வல்லமை கடவுளுடைய வார்த்தைக்கு இருப்பதை பவுலின் வார்த்தைகள் சிறப்பித்துக் காட்டுகின்றன.
என்றாலும், அப்போஸ்தலர்களுடைய மரணத்திற்குப்பின், விசுவாசதுரோகம் வேரூன்றியபோது பைபிளின் வல்லமையைப் பற்றிய அந்தத் தெளிவான கருத்து மங்கிப்போனது. (2 பே. 2:1-3) காலப்போக்கில், கடவுளுடைய வார்த்தைக்கு மந்திர சக்தி இருப்பதாக சர்ச் தலைவர்கள் போதிக்க ஆரம்பித்தார்கள். இறையியல் பேராசிரியரான ஹாரி ஒய். கேம்பெல், “பைபிள் வசனங்கள் மாயமந்திர நோக்கத்தோடு பயன்படுத்தப்பட்டன” என்று தன் புத்தகத்தில் எழுதினார். மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சர்ச் ஃபாதரான ஆரிஜனின் வார்த்தைகளை அவர் மேற்கோள் காட்டினார்: “பரிசுத்த வார்த்தைகள் காதில் விழுவதுகூட நன்மைதான்; மாயமந்திர வார்த்தைகளுக்கே சக்தி இருக்கும்போது, பைபிளிலுள்ள தெய்வீக வார்த்தைகளுக்கு இன்னும் எந்தளவு சக்தி இருக்கும்.” நான்காம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த ஜான் க்ரைசோஸ்டம் என்பவர், “பைபிள் இருக்கும் வீட்டை பிசாசு அண்டாது” என்று எழுதிய விஷயத்தையும் கேம்பெல் மேற்கோள் காட்டினார். சிலர் சுவிசேஷ வசனங்கள் அடங்கிய தாயத்துகளைத் தங்கள் கழுத்துகளில் தொங்கவிட்டுக்கொண்டனர் என்றும் அவர் தன் புத்தகத்தில் குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, “ஒருவருக்குத் தலைவலி இருந்தால், யோவானின் சுவிசேஷத்தைத் தலையணைக்கு அடியில் வைத்து தூங்கலாம்” என கத்தோலிக்க இறையியலாளரான அகஸ்டின் கற்பித்தார் என்றும் கேம்பெல் குறிப்பிட்டார். ஆம், பைபிள் வசனங்கள் மாயமந்திர நோக்கத்தோடு பயன்படுத்தப்பட்டன. நீங்கள் எப்படி பைபிளைப் பயன்படுத்துகிறீர்கள்? தீய சக்தியிடமிருந்து பாதுகாக்கும்... அதிர்ஷ்டத்தைத் தரும்... என்ற எண்ணத்தோடு அதைப் பயன்படுத்துகிறீர்களா?
பைபிளைத் தவறாகப் பயன்படுத்தும் மற்றொரு பழக்கம் இன்று மக்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது. அதற்கு ஆங்கிலத்தில் “பிப்ளியோமான்ஸி” என்று பெயர். அதன் அர்த்தம்? தெய்வீக வழிநடத்துதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கண்ணை மூடிக்கொண்டு ஒரு புத்தகத்தை, முக்கியமாக பைபிளை, திறந்து முதலில் தென்படும் வசனத்தை வாசிப்பதாகும். உதாரணத்திற்கு, பக்கத்து வீட்டுக் குழந்தை ஒன்று, “எடுத்துப் படி, எடுத்துப் படி” என்று சொல்கிற சத்தம் ஒருசமயம் அகஸ்டினின் காதில் விழுந்ததாகவும், அதை அவர் தெய்வீகக் கட்டளையாக நினைத்து பைபிளைத் திறந்து முதலில் தன் கண்களுக்குப் பட்ட வசனத்தை வாசித்ததாகவும் பேராசிரியர் கேம்பெல் குறிப்பிட்டார்.
சிலர் கஷ்டங்களை எதிர்ப்படும்போது கடவுளிடம் ஜெபித்துவிட்டு பைபிளைத் திறந்து, கண்ணில் படும் முதல் வசனத்தை வாசிப்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நல்ல நோக்கத்தோடு அவர்கள் அப்படிச் செய்தாலும், கிறிஸ்தவர்கள் அப்படிச் செய்வது சரி அல்ல.
கடவுளுடைய ‘சக்தியாகிய சகாயரை’ தாம் அனுப்பப்போவதாக இயேசு தம் சீடர்களுக்கு உறுதியளித்த பின்பு இவ்வாறு சொன்னார்: “அவர் எல்லாக் காரியங்களையும் உங்களுக்குக் கற்பித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாக் காரியங்களையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.” (யோவா. 14:26) ஆனால், “பைபிளைத் திறந்து கண்ணில் படும் முதல் வசனத்தைப் படிக்கும் பழக்கத்தில், நினைப்பூட்ட வேண்டிய அவசியம் இருக்காதே!
பைபிளை இப்படிக் கண்மூடித்தனமாக, மந்திர சக்தியுள்ள புத்தகமாகப் பயன்படுத்துவது இன்று சர்வசாதாரணமாக இருக்கிறது. ஆனால், இத்தகைய மூடத்தனமான பழக்கவழக்கங்களை பைபிள் கண்டனம் செய்கிறது. (லேவி. 19:26; உபா. 18:9-12; அப். 19:19) “கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, வல்லமையுள்ளது”; ஆனால், அதைத் திறமையாகப் பயன்படுத்த நாம் கற்றிருக்க வேண்டும். பைபிளை மந்திர சக்தியுள்ள புத்தகமாகப் பயன்படுத்துவது மக்களுடைய வாழ்க்கையை வளமாக்காது, பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவே வளமாக்கும். அப்படிப்பட்ட அறிவு ஒழுக்கநெறிகளைக் கடைப்பிடிக்கவும், கேடுகெட்ட வாழ்க்கையை விட்டொழிக்கவும், குடும்ப உறவுகளைப் பலப்படுத்தவும், பைபிளின் நூலாசிரியரான யெகோவாவோடு உள்ள பந்தத்தைப் பேணிக்காக்கவும் அநேகருக்கு உதவியிருக்கிறது.