உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w12 12/15 பக். 14-17
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • இதே தகவல்
  • மானிட ஜீவன் எப்பொழுது ஆரம்பமாகிறது?
    விழித்தெழு!—1991
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • கடவுள் ஏற்படுத்திய திருமண பந்தத்தை மதியுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
w12 12/15 பக். 14-17

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

சத்தியத்திற்கு வரும்முன் நானும் என் மனைவியும் குழந்தை வேண்டுமென்ற ஆசையில் இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் (in vitro fertilization) என்ற செயற்கை கருத்தரிப்பு முறையைத் தேர்ந்தெடுத்தோம். எங்களுடைய கருவுற்ற முட்டைகள் (கருக்கள்) அனைத்துமே பயன்படுத்தப்படவில்லை; அவற்றில் சில உறை நிலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நாங்கள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமா அல்லது களைந்துவிடலாமா?

[பக்கம் 14-ன் படம்]

இன் விட்ரோ ஃபெர்ட்டிலைசேஷன் (IVF) முறையைத் தேர்ந்தெடுக்கும் தம்பதிகளுக்கு இதுவொரு முக்கியமான தார்மீகப் பிரச்சினையாகும். இது சம்பந்தமாக என்ன செய்ய வேண்டுமென்று தம்பதிகள்தான் யெகோவாவுக்குமுன் தீர்மானிக்க வேண்டும். என்றாலும், செயற்கை முறை கருத்தரிப்பு பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வது அவர்களுக்கு உதவலாம்.

1978-ல், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்தான் முதன்முதலாக சோதனைக் குழாய் முறையில் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவளுடைய கருப்பைக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால் அவளால் கருத்தரிக்க முடியாமல் இருந்தது. எனவே மருத்துவர்கள், முழு வளர்ச்சியடைந்த அவளுடைய கருமுட்டையை எடுத்து, ஒரு கண்ணாடிக் குழாயில் வைத்து, அவளுடைய கணவனது விந்தணுவோடு சேர்த்து கருவுறச் செய்தார்கள். இப்படி உருவான கருவுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்தார்கள், பின்பு அவளுடைய கர்ப்பப் பைக்குள் செலுத்தினார்கள். ஒன்பது மாதம் கழித்து அவளுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த முறையும் இதுபோன்ற முறைகளும் இன் விட்ரோ (கண்ணாடிக் குழாயில்) ஃபெர்ட்டிலைசேஷன், அதாவது IVF என்று அழைக்கப்படுகின்றன.

IVF முறை நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும், பொதுவாகப் பின்வரும் படிகள் எடுக்கப்படுகின்றன: ஒரு பெண்ணின் சினைப்பையில் ஏராளமான முட்டைகள் உருவாவதற்காக வீரியமிக்க மருந்துகள் வாரக்கணக்கில் அவளுக்குக் கொடுக்கப்படுகின்றன. சுயபுணர்ச்சி மூலம் விந்துவை எடுத்துத் தரும்படி அவளுடைய கணவன் கேட்டுக்கொள்ளப்படுவார். அந்தப் பெண்ணின் முட்டைகளும் அவளுடைய கணவனின் விந்தணுக்களும் சோதனைக் கூடத்தில் ஒன்றிணைக்கப்படுகின்றன. இவ்விதத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் கருக்களாக உருவாகின்றன. ஓரிரு நாட்களுக்குப்பின், இந்தப் புதிய கருக்களில் குறைபாடுள்ள கருக்கள் எவை, ஆரோக்கியமான கருக்கள் எவை, கருப்பையில் தங்கி நன்கு வளரக்கூடிய கருக்கள் எவை எனக் கவனமாய் ஆராய்ச்சி செய்யப்படுகிறது. பொதுவாக, மிகச் சிறந்த கருக்களில் இரண்டு, மூன்று கருக்களை எடுத்து மூன்றாம் நாள் அந்தப் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படுகின்றன; கர்ப்பமாவதற்கான சாத்தியத்தை அதிகரிப்பதற்காக அப்படிச் செய்யப்படுகிறது. அந்தக் கருக்களில் ஒன்றோ அதற்கு மேற்பட்டவையோ கருப்பையில் தங்கி வளர ஆரம்பித்தால், அவள் கர்ப்பிணியாவாள், குழந்தை பெறுவாள்.

ஆனால், கருப்பையில் செலுத்தப்படாத ஆரோக்கியமான கருக்களும், ஆரோக்கியம் குறைந்த அல்லது குறைபாடுள்ள கருக்களும் என்ன செய்யப்படுகின்றன? அவற்றை அப்படியே வைத்திருந்தால், சீக்கிரத்திலேயே சிதைந்துவிடும். எனவே, அவை நைட்ரஜன் திரவத்தில் உறைய வைக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன. எதற்காக? முதல் தடவை ஒரு பெண்ணுக்கு IVF முறை கையாளப்பட்டு அவள் கருத்தரிக்காவிட்டால், அப்படிச் சேமித்து வைக்கப்படுகிற கருக்களை மீண்டும் அவளுடைய கருப்பைக்குள் செலுத்துவதற்காக! செலவைக் குறைப்பதற்காக! என்றாலும், இதுவொரு தார்மீகப் பிரச்சினையாக இருக்கிறது. மேற்காணும் கேள்வியைக் கேட்ட தம்பதியைப் போலவே, அநேக தம்பதியர் உறை நிலையிலுள்ள தங்கள் கருக்களை என்ன செய்வது எனத் தெரியாமல் திண்டாடுகிறார்கள். மேலுமொரு பிள்ளை வேண்டாமென அவர்கள் தீர்மானித்திருக்கலாம். காரணம்: அவர்களுக்கு வயதாகியிருக்கலாம் அல்லது போதிய வசதிவாய்ப்புகள் இல்லாதிருக்கலாம். கருப்பையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகள் உருவாகிவிடுமோ எனப் பயப்படலாம்.a தம்பதியில் ஒருவர் அல்லது இருவருமே மரணம் அடைந்தால் அல்லது மறுமணம் செய்துகொண்டால் பிரச்சினை அதிகமாகிவிடலாம், ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்படலாம். இந்தக் காரணங்களுக்காக, சில தம்பதியர் உறை நிலையிலுள்ள தங்கள் கருக்களைப் பராமரிக்க வருடக்கணக்கில் கட்டணம் செலுத்திவருகிறார்கள்.

பயன்படுத்தப்படாத கருக்களை என்ன செய்வதென்ற கவலை அநேக தம்பதிகளை வாட்டி வதைக்கிறதென கருவியல் நிபுணர்களின் தலைவர் ஒருவர் 2008-ல் வெளியான த நியு யார்க் டைம்ஸ் செய்தித்தாளில் குறிப்பிட்டார். அந்தக் கட்டுரை இவ்வாறு சொன்னது: “நாடெங்கும் உள்ள மருத்துவமனைகளில் குறைந்தது 4,00,000 கருக்கள் உறை நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன, நாளுக்கு நாள் அந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது . . . அத்தகைய கருக்கள் சரியான உறை நிலையில் வைக்கப்பட்டிருந்தால் பத்து வருடங்களுக்கோ அதற்குப் பின்போகூட அவற்றைப் பயன்படுத்த முடியும்; ஆனால், அவற்றை உறை நிலையிலிருந்து உருகு நிலைக்குக் கொண்டுவரும்போது, எல்லாமே உயிர்பிழைப்பதில்லை.” (தடித்த எழுத்துக்கள் எங்களுடையவை.) இந்த விஷயம் சில கிறிஸ்தவர்களை ஆழ்ந்து யோசிக்க வைக்கிறது. ஏன்?

IVF முறையைத் தேர்ந்தெடுத்ததால் பிரச்சினைகளை எதிர்ப்படுகிற கிறிஸ்தவ தம்பதியர், வேறொரு மருத்துவ சூழ்நிலையில் உட்பட்டுள்ள சில விஷயங்களைச் சிந்தித்துப் பார்க்கலாம். ஒரு கிறிஸ்தவரின் நேசத்திற்குரிய ஒருவர் மரணப்படுக்கையில் ஆக்ஸிஜன் உபகரணங்கள் போன்ற செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு மட்டுமே மூச்சுவிட்டுக்கொண்டிருந்தால், அச்சூழ்நிலையில் அந்தக் கிறிஸ்தவர் ஒரு தீர்மானமெடுக்க வேண்டியிருக்கும். யாத்திராகமம் 20:13 மற்றும் சங்கீதம் 36:​9-ன்படி, உண்மைக் கிறிஸ்தவர்கள் உயிரை மிக உயர்வாக மதிக்கிறார்கள், எனவே மருத்துவ சிகிச்சையைப் புறக்கணிப்பதில்லை. மே 8, 1974 ஆங்கில விழித்தெழு! இவ்வாறு குறிப்பிட்டது: “பைபிள் நியமங்களுக்கு இசைவாக வாழ விரும்புகிறவர்கள், கடவுளைப் போலவே உயிரைப் பரிசுத்தமாகக் கருதுவதன் காரணமாகவும், தங்கள் மனசாட்சியின் காரணமாகவும், அரசின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிவதன் காரணமாகவும், ஒரு நோயாளியைக் கருணைக் கொலை செய்வதில்லை.” ஆனால், செயற்கைக் கருவியின் உதவியோடு மட்டுமே ஒருவர் உயிர்வாழ வேண்டிய சூழ்நிலையில், அவரைப் பராமரிப்பதா வேண்டாமா என அவருடைய குடும்பத்தினர்தான் தீர்மானிக்க வேண்டும்.

உண்மைதான், இந்தச் சூழ்நிலை வேறு, தங்கள் கருக்களைச் சேமித்து வைத்திருக்கும் தம்பதியரின் சூழ்நிலை வேறு. என்றாலும், ஒரு தீர்மானத்திற்கு வர இது உதவும். நைட்ரஜன் திரவத்தில் உறை நிலையிலுள்ள கருக்களை எடுத்து வெளியே வைத்துவிடும்படி சிலர் அந்தத் தம்பதியருக்குச் சிபாரிசு செய்யலாம். ஆனால், அப்படி வெளியே வைக்கப்படுகிற கருக்கள் எதற்கும் பயன்படாத விதத்தில் சீக்கிரத்திலேயே சிதைந்துவிடும். எனவே, இவ்வாறு செய்வதா வேண்டாமா என்பதை அந்தத் தம்பதிதான் தீர்மானிக்க வேண்டும்.​—⁠கலா. 6:⁠7.

குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக IVF சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுத்த ஒரு தம்பதி, உறை நிலையிலுள்ள தங்கள் கருக்களைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவை அல்லது வருங்காலத்தில் மறுபடியும் அவற்றைப் பயன்படுத்துவதற்கு ஆகும் செலவை ஏற்றுக்கொள்ளத் தீர்மானிக்கலாம். ஆனால், மற்றொரு தம்பதி அவற்றைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவை நிறுத்திவிடத் தீர்மானிக்கலாம்; செயற்கை முறையில் மட்டுமே அவற்றை உயிரோடு வைக்க முடியும் என்பதால் அந்த முடிவுக்கு வரலாம். இத்தகைய சூழலில், கிறிஸ்தவர்கள் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின்படி கடவுளுக்குமுன் தீர்மானமெடுக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். குறுகுறுக்கும் மனசாட்சியோடு இருக்க அவர்கள் விரும்புவதில்லை, அதேசமயம் மற்றவர்களுடைய மனசாட்சியை அலட்சியம் செய்யவும் அவர்கள் விரும்புவதில்லை.​—⁠1 தீ. 1:⁠19.

கிறிஸ்தவர்கள் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின்படி கடவுளுக்குமுன் தீர்மானமெடுக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்

அநேக தம்பதிகள் உறை நிலையிலுள்ள “தங்கள் கருக்களை என்ன செய்வதெனத் தீர்மானிக்க முடியாமல் குழம்பிப்போய்த் தவிக்கிறார்கள்” என்று மருத்துவ வல்லுநர் ஒருவர் குறிப்பிட்டார். “ஏராளமான தம்பதிகளால் சரியான முடிவுக்கு வரவே முடிவதில்லை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆக, IVF சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுக்கிற உண்மைக் கிறிஸ்தவர்கள், இதில் உட்பட்டுள்ள முக்கிய விஷயங்களையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது.​—⁠நீதி. 22:⁠3.

Ivf—பிற சிகிச்சை முறைகள்

IVF சிகிச்சை முறை மற்ற சிகிச்சை முறைகளுக்கு வழிவகுத்திருக்கிறது; இத்தகைய சிகிச்சை முறைகளெல்லாம் பைபிளிலுள்ள கடவுளுடைய கருத்துகளுக்கு முற்றிலும் முரணாக இருக்கின்றன. ஏன் அப்படிச் சொல்கிறோம்? ஏனென்றால், சிலசமயம் ஒரு பெண்ணின் கருமுட்டைகள் அவளுடைய கணவனல்லாத ஒருவருடைய விந்தணுவோடு கருத்தரிக்கச் செய்யப்படலாம். அப்படி உருவாகிற கருக்களைத் தன்னுடைய கருப்பையில் வைக்க அந்தப் பெண் சம்மதிக்கலாம். (ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிற பெண்கள் இந்த முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.) அல்லது, ஒரு மனைவி தன் கணவனுடைய விந்தணு வேறொரு பெண்ணின் கருமுட்டைகளோடு சேர்த்து கருத்தரிக்கச் செய்யப்பட்ட பிறகு அவற்றைத் தன்னுடைய கருப்பையில் வைக்க சம்மதிக்கலாம்.

சிலசமயம், ஒரு பெண்ணின் கருமுட்டையிலிருந்தோ அவள் கணவனுடைய விந்தணுவிலிருந்தோ உருவாகாத கருக்கள் அவளுடைய கருப்பையில் வைக்கப்படுகின்றன. சிலசமயம், ஒரு மனைவியின் கருமுட்டைகளும் அவள் கணவனின் விந்தணுவும் IVF சிகிச்சை முறைப்படி கருத்தரிக்கச் செய்யப்பட்டு, ஒரு வாடகைத் தாயின் கருப்பையில் வைக்கப்படுகின்றன; அவள் அந்தத் தம்பதியருக்காகக் குழந்தை பெறுகிறாள். b

குழந்தை பெறுவதற்கான இப்படிப்பட்ட சிகிச்சை முறைகள் கடவுளுடைய ஊழியர்களுக்கு ஏற்றதல்ல. “பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ள வேண்டாம்” என்று கடவுள் சொல்கிற அறிவுரையை அவர்கள் மதிக்கிறார்கள். (லேவி. 18:​20, 29; நீதி. 6:29) திருமண பந்தத்தில் இணையாதவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட கருமுட்டைகளையோ விந்தணுவையோ சேர்த்து கருத்தரிக்க வைப்பது பைபிளின்படி போர்னியாவாக, அதாவது பாலியல் முறைகேடாக, இருக்கிறது. இத்தகைய சிகிச்சை முறைகளில் பாலுறுப்புகள் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றன.​—⁠மத். 5:32; 1 கொ. 5:11; 6:​9, 18; எபி. 13:⁠4.

b மார்ச் 8, 1993 விழித்தெழு! பத்திரிகையில் பக்கங்கள் 26-27-ல் வாடகைத் தாய் பற்றிய முழு விவரம் உள்ளது.

[பக்கம் 17-ன் படம்]

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் ஓர் ஆணும் பெண்ணும் ஞானஸ்நானம் பெற விரும்புகிறார்கள். அந்த ஆண் குடியுரிமை பெறாத வெளிநாட்டவராக இருப்பதால் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்துகொள்ள அந்நாட்டின் அரசாங்கம் அவர்களை அனுமதிக்கவில்லை. இந்தச் சூழலில், இணைபிரியாதிருக்க ஒப்புக்கொள்ளும் உறுதிமொழி பத்திரத்தில் (Declaration Pledging Faithfulness) கையொப்பமிட்டு அவர்கள் திருமணம் செய்துகொண்டால், ஞானஸ்நானம் பெறலாமா?

இது ஒரு நல்ல தீர்வாகத் தெரிந்தாலும், இது வேதப்பூர்வமானதல்ல. இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள இந்த ‘உறுதிமொழி பத்திரம்’ என்பது என்ன, இதை எப்போது பயன்படுத்தலாம் என்பதை முதலாவது சிந்திப்போம்.

திருமணம் செய்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கிற (இதற்கான காரணம் பின்வரும் பாராக்களில் விளக்கப்பட்டுள்ளது) இருவர் சாட்சிகளுக்கு முன்பாகக் கையொப்பமிடும் ஆவணம்தான் இந்த உறுதிமொழி பத்திரம். இதில் கையொப்பமிடுவதன் மூலம் அவர்கள் ஒருவருக்கொருவர் இணைபிரியாமல் இருப்பதாகவும், அரசு அனுமதித்தால் சட்டப்படி திருமணம் செய்துகொள்ளத் தயாராய் இருப்பதாகவும் உறுதிமொழி எடுக்கிறார்கள். அப்போது, அவர்களுடைய திருமணத்தைச் சட்டப்பூர்வ திருமணமாகவே சபையார் கருதுவார்கள்.

இந்த உறுதிமொழி பத்திரம் எப்போது பயன்படுத்தப்படுகிறது? இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள, திருமணத்தையும் விவாகரத்தையும் யெகோவா எப்படிக் கருதுகிறாரென்று நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். யெகோவா திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவர், அதை உயர்வாய் மதிப்பவர். “கடவுள் இணைத்திருப்பதை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும்” என்று அவருடைய மகன் இயேசு சொன்னார். (மத். 19:​5, 6; ஆதி. 2:​22-24) “பாலியல் முறைகேட்டைத் தவிர, வேறெந்தக் காரணத்திற்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்து வேறொரு பெண்ணை மணந்துகொள்கிறவன் தவறான உறவுகொள்கிறான்” என்றும் அவர் சொன்னார். (மத். 19:⁠9) எனவே, ‘பாலியல் முறைகேடு’ மட்டுமே விவாகரத்துக்கான ஒரே காரணமாய் இருக்கிறது; அதுவே ஒரு திருமணத்தை வேதப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரும். உதாரணத்திற்கு, ஒரு கணவர் தன் மனைவிக்குத் துரோகம் செய்து வேறொரு பெண்ணுடன் உறவுகொள்ளும்போது அந்த மனைவி அவரை விவாகரத்து செய்யவோ செய்யாதிருக்கவோ தீர்மானிக்கலாம். ஒருவேளை அவள் விவாகரத்து செய்தால், வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ளலாம்.

என்றாலும், பைபிள் சொல்கிற தெளிவான இந்தக் கருத்தை சில நாடுகளிலிருந்த சர்ச்சுகள் ஒருகாலத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, எந்தக் காரணத்தைக் கொண்டும் விவாகரத்துச் செய்யக் கூடாது என்று அவை போதித்தன. இதனால், சர்ச்சின் செல்வாக்கு வேரூன்றியிருந்த அந்த நாடுகளில் விவாகரத்து செய்வதற்கு​—⁠இயேசு சொல்லியிருந்த காரணத்திற்காகக்கூட விவாகரத்து செய்வதற்கு​—⁠ இன்று சட்டம் இடமளிப்பதில்லை. சில நாடுகளில் சட்டம் அதற்கு இடமளிக்கிறது. என்றாலும், ஏகப்பட்ட காரியங்களை அதற்காகச் செய்ய வேண்டியிருக்கிறது; அது சிக்கலானதாக, பல வருடங்கள் இழுத்தடிப்பதாக இருக்கிறது. கடவுளே அனுமதிக்கும்போது சர்ச் அல்லது அரசாங்கம் அதை ‘தடுப்பது’ போல் இருக்கிறது.​—⁠அப். 11:⁠17.

உதாரணத்திற்கு, விவாகரத்து பெறவே முடியாத அல்லது விவாகரத்துப் பெற படுகஷ்டமாக இருக்கிற, ஒருவேளை பல வருடங்கள் ஆகிற நாட்டில் ஒரு தம்பதியர் வசிக்கலாம். அவர்கள் தங்களுடைய திருமணத்திலிருந்து விடுபட எல்லா முயற்சிகளையும் எடுத்திருந்தால், மறுமணம் செய்துகொள்ள வேதப்பூர்வ தகுதிகளைப் பெற்றிருந்தால், அவர்கள் இந்த உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிடலாம். அத்தகைய நாடுகளிலுள்ள கிறிஸ்தவ சபையில் இது ஓர் அன்பான ஏற்பாடாக இருக்கிறது. ஆனால், விவாகரத்து பெற முடிகிற நாடுகளில் இந்தப் பத்திரத்தைப் பயன்படுத்த முடியாது; விவாகரத்து பெறுவது செலவுபிடித்ததாக, சிக்கலானதாக இருக்கிற நாடுகளில்கூட பயன்படுத்த முடியாது.

விவாகரத்து பெற முடிகிற நாடுகளில் உள்ள சில கிறிஸ்தவர்கள் இந்தப் பத்திரம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளாதிருக்கிறார்கள். விவாகரத்து சம்பந்தமான பிரச்சினைகளையும் சிக்கல்களையும் தவிர்ப்பதற்காக இந்தப் பத்திரத்தில் கையொப்பமிட விரும்புகிறார்கள், அது சரியல்ல.

மேற்காணும் கேள்வியில் குறிப்பிடப்பட்டபடி, மணமாகாமல் சேர்ந்து வாழும் அந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் இருவருமே திருமணம் ஆகாதவர்கள் என்பதால் இப்போது திருமணம் செய்ய வேதப்பூர்வ தகுதிபெற்றிருக்கிறார்கள். என்றாலும், அந்த ஆண் குடியுரிமை பெறாத வெளிநாட்டவராக இருப்பதால் அந்த அரசாங்கம் அவர்களைத் திருமணம் செய்ய அனுமதிக்கவில்லை. (அநேக நாடுகளில் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்களில் ஒருவர் அல்லது இருவருமே குடியுரிமை பெறாத வெளிநாட்டவராக இருந்தாலும் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.) அதோடு, அவர்கள் இருவருமே விவாகரத்து பெற வேண்டிய சூழ்நிலையிலோ விவாகரத்து பெற முடியாத சூழ்நிலையிலோ இல்லை. எனவே, அவர்கள் இந்த உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட முடியாது. அவர்களுடைய விஷயத்தில் விவாகரத்து அவசியமில்லை என்பதால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால், அந்த ஆண் குடியுரிமை பெறாதவர் என்பதால் அவர்கள் எப்படித் திருமணம் செய்ய முடியும்? எந்த நாட்டில் அவர்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள முடியுமோ அந்த நாட்டிற்குப் போய் அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம். அல்லது இப்போதுள்ள நாட்டிலேயே அந்த ஆண் தேவையான படிகளை எடுத்து குடியுரிமை பெற்றால் அங்கேயே திருமணம் செய்துகொள்ளலாம்.

கடவுளுடைய சட்டங்களுக்கும் அரசாங்கத்தின் சட்டங்களுக்கும் இசைவாக மாற்றங்களைச் செய்ய அவர்களால் முடியும். (மாற். 12:17; ரோ. 13:⁠1) அப்படி அவர்கள் செய்வார்கள் என நம்புகிறோம். அதன் பிறகு, அவர்கள் ஞானஸ்நானம் பெற தகுதி பெறலாம்.​—⁠எபி. 13:⁠4.

a வளர்ந்துவரும் கரு குறைபாடுள்ளதாகத் தெரிந்தால் அல்லது ஏராளமான கருக்கள் கருப்பையில் வளரத்தொடங்கியிருந்தால் என்ன செய்வது? கர்ப்பத்தைக் கலைப்பது கருக்கொலையாக இருக்கும். IVF முறையில் இரட்டைக் குழந்தைகள், மூன்று குழந்தைகள், ஏன் சிலநேரம் அதற்கும் அதிகமான குழந்தைகள் கர்ப்பத்தில் உருவாவது சகஜம்; இதனால் குறைப்பிரசவம், தாய்க்கு அளவுக்கதிகமான இரத்தப்போக்கு போன்ற ஆபத்துகள் நேரிடலாம். ஒருவேளை அந்தத் தாயின் கருப்பையில் பல கருக்கள் வளரத்தொடங்கியிருந்தால், ஒன்றையோ அதற்கும் அதிகமானவற்றையோ அழித்துவிடும்படி மற்றவர்கள் அவளை வற்புறுத்தலாம். ஆனால், அப்படிச் செய்வது கொலைக்குச் சமம்.​—⁠யாத். 21:​22, 23; சங். 139:⁠16.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்