உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
கட்டுப்பாடில்லாத பேச்சு எனும் நெருப்பை நாம் எப்படி அணைக்கலாம்?
நம்முடைய இருதயத்தை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒரு சகோதரரைக் குறைசொல்வதற்குப் பதிலாக, அவரைப் பற்றி நாம் ஏன் தவறாக நினைக்கிறோம் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவரைவிட நம்மை எல்லோரும் பாராட்ட வேண்டுமென்ற ஆசை அதற்குக் காரணமாக இருக்கிறதா என்றும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படிக் குறைசொல்வது எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பதுபோல் இருக்கும்.—8/15, பக்கம் 21.
மனிதர்கள் பூமியை அழிப்பதற்குக் கடவுள் அனுமதிப்பாரா?
மனிதர்கள் இந்தப் பூமியை நாசமாக்க யெகோவா ஒருபோதும் விடமாட்டார். பூமியை ‘வெறுமையாயிருப்பதற்காகப் படைக்காமல்,’ அதில் மக்கள் ‘குடியிருப்பதற்காக’ படைத்தார் என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 45:18) மனிதர்கள் இந்தப் பூமியை அழிக்க அனுமதிப்பதற்குப் பதிலாக, ‘பூமியை நாசமாக்குபவர்களை [கடவுள்] நாசமாக்கப்போகிறார்.’—வெளிப்படுத்துதல் 11:18—07/01, பக்கம் 4.
யெகோவாவின் நாள் சீக்கிரம் வரப்போவதால் என்ன சம்பவங்கள் நிகழவிருக்கின்றன?
“இதோ, சமாதானம், பாதுகாப்பு!” என்ற அறிவிப்பு செய்யப்படும். மகா பாபிலோன் தேசங்களால் தாக்கப்பட்டு, அழிக்கப்படும். யெகோவாவின் மக்கள் தாக்கப்படுவார்கள். அர்மகெதோன் போர் நடக்கும். அதன்பின், சாத்தானும் அவனுடைய பேய்களும் அதலபாதாளத்தில் தள்ளப்படுவார்கள்.—9/15, பக்கம் 4.
முடிவு எப்போது வருமென்பது தெரியாதிருப்பது நமக்கு எப்படி நன்மை அளிக்கிறது?
முடிவு வருகிற நாளும் நேரமும் நமக்குத் தெரியாதிருப்பது, நம் இருதயத்தில் உள்ளதை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது. யெகோவாவுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்த வாய்ப்பளிக்கிறது. சுய தியாக வாழ்க்கை வாழ ஊக்குவிக்கிறது. யெகோவாவையும் அவருடைய வார்த்தையையும் முழுமையாகச் சார்ந்திருக்க உதவுகிறது. அதோடு, கஷ்டங்களிலிருந்து கற்றுக்கொள்ளவும் நம் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் வழிசெய்கிறது.—9/15, பக்கங்கள் 24-25.
கடவுளுடைய சட்டங்கள் நம்மை எப்படிப் பாதுகாக்கும்?
மணத்துணையல்லாத ஒருவருடன் உடலுறவு கொள்வதைக் கடவுளுடைய சட்டம் தடைசெய்கிறது. (எபிரெயர் 13:4) இந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிற தம்பதிகளுக்கிடையே நம்பிக்கை அதிகமாகும், அவர்களுடைய பிள்ளைகளும் நல்ல சூழலில் வளருவார்கள். ஆனால், இந்தச் சட்டத்தை மீறுபவர்களுடைய வாழ்க்கையில் வியாதி, விவாகரத்து, சண்டை சச்சரவு, கடும் மனவேதனைதான் மிஞ்சும். அதோடு, பிள்ளைகள் ஒற்றைப் பெற்றோருடன் வாழ வேண்டிய கதி ஏற்படும்.—நீதிமொழிகள் 5:1-9-ஐ வாசியுங்கள்.—07/01, பக்கம் 16.
வெளிப்படுத்துதல் 1:16, 20-ன்படி, இயேசுவின் வலது கையிலுள்ள “ஏழு நட்சத்திரங்கள்” யாரைக் குறிக்கின்றன?
அந்த ஏழு நட்சத்திரங்கள் பரலோக நம்பிக்கையுள்ள மூப்பர்களைக் குறிப்பதாக இருந்தாலும், சபைகளிலுள்ள எல்லா மூப்பர்களையும் குறிக்கின்றன.—10/15, பக்கம் 14.
பேய்த் தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி?
யெகோவாவின் ஆசிபெற விரும்புகிற எல்லோரையும் பைபிள் இவ்வாறு ஊக்குவிக்கிறது: “கடவுளுக்கு அடங்கி நடங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” (யாக்கோபு 4:7, 8) பேய்த் தொல்லையிலிருந்து விடுபட விரும்புகிறவர்களை யெகோவா தேவனால் விடுவிக்க முடியும், நிச்சயம் விடுவிப்பார்.—10/01, பக்கம் 28.
ஏசாயா 50:4, 5-ல் குறிப்பிட்டுள்ளபடி, இயேசு எவ்வாறு மனத்தாழ்மையை வெளிக்காட்டினார்?
‘கல்விமானின் நாவை’ உடையவர் ‘பின்வாங்குவதில்லை’ என்று அந்த வசனங்கள் சொல்கின்றன. இயேசு தம் தகப்பன் கற்றுத்தந்த விஷயங்களுக்குக் கூர்ந்த கவனம் செலுத்துவதன் மூலம் மனத்தாழ்மையை வெளிக்காட்டினார். அப்படிக் கற்றுக்கொள்ள ஆவலுள்ளவராகவும் மனமுள்ளவராகவும் இருந்தார்; பாவப்பட்ட மனிதர்களிடம் யெகோவா எந்தளவுக்கு மனத்தாழ்மையுடன் இரக்கம் காட்டினார் என்பதையும் உன்னிப்பாகக் கவனித்திருப்பார்.—11/15, பக்கம் 11.
உண்மையான சந்தோஷம் எப்போது ஊற்றெடுக்கும்?
ஆசைப்பட்டதையெல்லாம் வாங்கிக் குவித்துக்கொண்டு ஆடம்பரமாக வாழ்வது உண்மையான சந்தோஷத்தைத் தராது. “பெற்றுக்கொள்வதைவிட கொடுப்பதிலேயே அதிகச் சந்தோஷம் இருக்கிறது” என்று இயேசு சொன்னார். ஆம், மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும்போதும், அவர்களை உற்சாகப்படுத்தும்போதும்தான் உண்மையான சந்தோஷம் ஊற்றெடுக்கும்.—அப்போஸ்தலர் 20:35.—10/01, பக்கம் 32.