மாதிரி அணுகுமுறைகளை எப்படிப் பயன்படுத்துவது?
1. எதற்காக மாதிரி அணுகுமுறைகள் கொடுக்கப்படுகின்றன?
1 நம் பத்திரிகைகளையும் பிரசுரங்களையும் வெளி ஊழியத்தில் அளிப்பதற்கு உதவும் மாதிரி அணுகுமுறைகள் நம் ராஜ்ய ஊழியத்தில் தவறாமல் கொடுக்கப்படுகின்றன. வெளி ஊழியத்தின்போது அதை அப்படியே ஒப்பிக்க வேண்டியதில்லை. எப்படிப் பேச வேண்டும் என்பதற்கு மாதிரிதான் அவை. அதையே சொந்த வார்த்தைகளில் பேசினால் இன்னும் நன்றாக இருக்கும். இயல்பாகப் பேசினால் கேட்பவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். பேசும் விஷயத்தில் நமக்கு இருக்கும் நம்பிக்கையையும் அது காட்டும்.—2 கொ. 2:17; 1 தெ. 1:5.
2. ஏன் உள்ளூர் பழக்கவழக்கங்களை மனதில் வைத்து அணுகுமுறைகளைத் தயாரிக்க வேண்டும்?
2 அப்படியே ஒப்பிக்காதீர்கள்: நாம் இருக்கும் இடத்தின் பழக்கவழக்கத்தைப் பொறுத்து பிரசங்கிக்கும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்கள், ஒருவரையொருவர் சந்திக்கும்போது முதலில் ‘வணக்கம்’ சொல்ல வேண்டுமென்று எதிர்பார்ப்பார்களா? அல்லது நேரடியாக விஷயத்தை சொல்ல வேண்டுமென எதிர்பார்ப்பார்களா? இந்தப் பழக்கம் இடத்திற்கு இடம் மட்டுமல்ல ஆளுக்கு ஆளும் வேறுபடும். கேள்விகளைப் பயன்படுத்தும்போது விவேகம் அவசியம். சில இடங்களில் கேள்வி கேட்பது சாதாரண விஷயமாக இருக்கும் ஆனால் சில இடங்களில் அதுவே பிரச்சினையாகிவிடும். எனவே, உங்கள் பிராந்தியத்திற்கு ஏற்றவாறு நன்றாக யோசித்துப் பேசுங்கள்.
3. மக்களின் பின்னணியையும் சிந்திக்கும் விதத்தையும் ஏன் மனதில் வைக்க வேண்டும்?
3 அதோடு, பிராந்தியத்திலுள்ள மக்களின் பின்னணியையும், சிந்திக்கும் விதத்தையும் மனதில் வைத்து தயாரிக்க வேண்டும். உதாரணமாக, மத்தேயு 6:9, 10-ல் உள்ள ‘பரமண்டல ஜெபத்தை’ பற்றி கத்தோலிக்க பக்தரிடம் பேசுவதைப்போல், அதைப் பற்றி ஒன்றுமே தெரியாதவரிடம் பேச மாட்டீர்கள். எனவே, கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மக்களுக்குப் பிரயோஜனமான விதத்தில் அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ளலாம்.—1 கொ. 9:20-23.
4. தயாரிப்பு ஏன் ரொம்ப முக்கியம்?
4 மாதிரி அணுகுமுறையை அப்படியே சொல்ல நினைத்தாலும், தயாரிப்பு ரொம்ப ரொம்ப முக்கியம். ஊழியத்தில் பயன்படுத்த விரும்பும் கட்டுரையைக் கவனமாகப் படித்து, ஆர்வத்தைத் தூண்டும் குறிப்புகளைக் குறித்து வைக்கலாம். அதை ஊழியத்தில் பயன்படுத்தலாம். பிரசுரங்களிலுள்ள தகவல்களை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தால்தான் அதை ஆர்வமாக மற்றவர்களுக்குக் கொடுக்க முடியும்.
5. ஏன் வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தலாம், அவற்றை எப்படித் தயாரிக்கலாம்?
5 வேறு அணுகுமுறைகள்: மாதிரி அணுகுமுறைகளை மட்டும்தான் பயன்படுத்த வேண்டுமா? இல்லை. வேறு ஏதாவது அணுகுமுறை அல்லது வசனத்தை பயன்படுத்தி உங்களால் நன்றாகப் பேச முடியுமென்றால் தாராளமாக அதைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக, பத்திரிகைகளைக் கொடுக்கும்போது உங்கள் பிராந்தியத்திற்கு ஏற்ற வேறு கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். ஊழியக் கூட்டத்தில் நடிப்பின்போதும் இதேபோல் மற்ற அணுகுமுறைகளைப் பயன்படுத்தலாம். இப்படி நாம் எல்லாருமே ராஜ்ய செய்தியைச் சிறப்பாக அறிவிக்கலாம்.