படிப்புக் கட்டுரை 32
பாட்டு 44 சோகத்தில் தவிப்பவரின் ஜெபம்
எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்
“ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று [யெகோவா] விரும்புகிறார்.”—2 பே. 3:9.
என்ன கற்றுக்கொள்வோம்?
மனம் திருந்துவது என்றால் என்ன... அது ஏன் அவசியம்... எல்லா விதமான ஆட்களும் மனம் திருந்துவதற்கு யெகோவா எப்படி உதவியிருக்கிறார்... என்றெல்லாம் கற்றுக்கொள்வோம்.
1. மனம் திருந்துகிற ஒருவர் என்ன செய்வார்?
தவறு செய்தால் மனம் திருந்துவது ரொம்ப ரொம்ப முக்கியம். பைபிளைப் பொறுத்தவரை, மனம் திருந்துகிற ஒரு நபர் தான் செய்த தவறை வெறுப்பார். அதைச் செய்வதை நிறுத்திவிடுவார். இனிமேலும் அதைச் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்.—சொல் பட்டியலில், “மனம் திருந்துதல்” என்ற குறிப்பைப் பாருங்கள்.
2. நாம் எல்லாருமே ஏன் மனம் திருந்துவதைப் பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டும்? (நெகேமியா 8:9-11)
2 இன்று வாழும் ஒவ்வொருவருமே மனம் திருந்துவதைப் பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏன்? ஏனென்றால், நாம் எல்லாருமே தினமும் பாவம் செய்கிறோம். ஆதாம் ஏவாள் வம்சத்தில் வந்ததால், நமக்குப் பாவ இயல்பு இருக்கிறது, மரணமும் வருகிறது. (ரோ. 3:23; 5:12) யாருமே இதற்கு விதிவிலக்கல்ல. அப்போஸ்தலன் பவுல் மாதிரி விசுவாசத்துக்குப் பேர்போனவர்கள்கூட பாவ இயல்போடு போராடினார்கள். (ரோ. 7:21-24) அப்படியென்றால், நம்முடைய பாவங்களை நினைத்து நினைத்து வாழ்க்கையே சோகமயமாக ஆகிவிட வேண்டுமா? அவசியம் இல்லை. நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றுதான் யெகோவா ஆசைப்படுகிறார். ஏனென்றால், அவர் இரக்கமுள்ளவர்! உதாரணத்துக்கு, நெகேமியாவின் காலத்தில் இருந்த யூதர்களை எடுத்துக்கொள்ளுங்கள். முன்பு செய்த பாவங்களை நினைத்து அவர்கள் நொந்துபோனார்கள். ஆனால், அவர்கள் சோகத்தில் மூழ்கிவிடக் கூடாது என்றும் தன்னைச் சந்தோஷமாக வணங்க வேண்டும் என்றும் யெகோவா விரும்பினார். (நெகேமியா 8:9-11-ஐ வாசியுங்கள்.) மனம் திருந்தினால் சந்தோஷம் கிடைக்கும் என்று யெகோவாவுக்குத் தெரியும். அதனால், அதைப் பற்றி நமக்குச் சொல்லிக்கொடுக்கிறார். நாம் மனம் திருந்தும்போது, இரக்கமுள்ள நம் அப்பா நம்மை மன்னிப்பார் என்பதில் உறுதியாக இருக்கலாம்.
3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?
3 மனம் திருந்துவதைப் பற்றி இப்போது இன்னும் நிறைய தெரிந்துகொள்ளலாம். இந்தக் கட்டுரையில், மூன்று விஷயங்களைப் பார்க்கலாம். (1) மனம் திருந்துவதைப் பற்றி இஸ்ரவேலர்களுக்கு யெகோவா என்ன சொல்லிக்கொடுத்தார்? (2) மனம் திருந்துவதற்குப் பாவம் செய்தவர்களை யெகோவா எப்படித் தூண்டினார்? (3) மனம் திருந்துவதைப் பற்றி இயேசுவின் சீஷர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள்?
மனம் திருந்துவதைப் பற்றி இஸ்ரவேலர்களுக்கு யெகோவா என்ன சொல்லிக்கொடுத்தார்?
4. மனம் திருந்துவதைப் பற்றி யெகோவா இஸ்ரவேல் தேசத்துக்கு என்ன சொல்லிக்கொடுத்தார்?
4 யெகோவா இஸ்ரவேலர்களை ஒரு தேசமாக்கியபோது, அவர்களோடு ஒப்பந்தம் செய்தார். அவர்களுக்குக் கட்டளைகளைக் கொடுத்தார். “நான் இன்று உங்களுக்குக் கொடுக்கிற இந்தக் கட்டளை, நீங்கள் கடைப்பிடிக்க முடியாத அளவுக்குக் கஷ்டமானது இல்லை, கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தூரத்திலும் இல்லை” என்று அவர் சொன்னார். (உபா. 30:11, 16) அந்தக் கட்டளைகளுக்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படிந்தால், அவர்களைப் பாதுகாப்பதாகவும் ஆசீர்வதிப்பதாகவும் சொன்னார். கீழ்ப்படியாமல் போய் அவருக்கு எதிராகச் செயல்பட்டால்—உதாரணத்துக்கு, வேறு கடவுள்களை வணங்கினால்—அவருடைய ஆசீர்வாதத்தை அவர் எடுத்துவிடுவார். அதனால் அவர்கள் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும். அவர்கள் கீழ்ப்படியாமல் போனாலும், அவர்களை ஒரேயடியாக அவர் ஒதுக்கிவிட நினைக்கவில்லை. அவர்கள் தன்னிடம் ‘திரும்பி வரும்’ வாய்ப்பை யெகோவா திறந்து வைத்திருந்தார். வேறு வார்த்தைகளில் சொன்னால், அவர்களால் மனம் திருந்த முடியும். அப்போது, யெகோவா அவர்களை மறுபடியும் சேர்த்துக்கொள்வார். அவருடைய ‘கட்டளைகளைக் கேட்டு’ நடந்து அவருடைய பிரியத்தையும் அவர்களால் சம்பாதிக்க முடியும்.—உபா. 30:1-3, 17-20.
5. தன்னுடைய மக்களைக் கைவிட்டுவிடவில்லை என்பதை யெகோவா எப்படிக் காட்டினார்? (2 ராஜாக்கள் 17:13, 14)
5 இஸ்ரவேலர்கள் திரும்பத் திரும்ப யெகோவாவுக்கு எதிராகச் செயல்பட்டார்கள். சிலை வழிபாடு மட்டுமல்ல, வேறுசில கேவலமான விஷயங்களையும் செய்தார்கள். அதனால் கஷ்டப்பட்டார்கள். இப்படித் தறிகெட்டுப்போன மக்களை யெகோவா அம்போவென்று விட்டுவிட்டாரா? இல்லை. தீர்க்கதரிசிகளை மறுபடியும் மறுபடியும் அனுப்பி, தன்னுடைய மக்களை மனம் திருந்துவதற்கும் தன்னிடம் திரும்பி வருவதற்கும் தூண்டினார்.—2 ராஜாக்கள் 17:13, 14-ஐ வாசியுங்கள்.
6. மனம் திருந்துவது எவ்வளவு முக்கியம் என்பதை, தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி யெகோவா எப்படிச் சொல்லிக்கொடுத்தார்? (படத்தையும் பாருங்கள்.)
6 தன்னுடைய மக்களை எச்சரிப்பதற்கும் திருத்துவதற்கும் யெகோவா தீர்க்கதரிசிகளைத் தொடர்ந்து பயன்படுத்தினார். உதாரணத்துக்கு, எரேமியா மூலமாக யெகோவா இப்படிச் சொன்னார்: “சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பி வா . . . நான் உண்மையோடு நடக்கிற கடவுள், அதனால் உன்மேல் கோபப்பட மாட்டேன் . . . நான் என்றென்றும் பகை வைத்திருக்க மாட்டேன். நீ உன் குற்றத்தை மட்டும் ஒத்துக்கொள். ஏனென்றால், உன் கடவுளான யெகோவாவுக்கு நீ அடங்கி நடக்கவில்லை.” (எரே. 3:12, 13) யோவேல் மூலம் யெகோவா இப்படிச் சொன்னார்: “முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்.” (யோவே. 2:12, 13) ஏசாயா மூலமாக இப்படிச் சொன்னார்: “உங்களைத் தூய்மையாக்குங்கள். என் கண் முன்னாலேயே நீங்கள் அக்கிரமங்கள் செய்தது போதும். அதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்.” (ஏசா. 1:16-19) எசேக்கியேல் மூலம் இப்படிச் சொன்னார்: “பொல்லாதவன் சாக வேண்டும் என்றா நான் ஆசைப்படுகிறேன்? அவன் கெட்ட வழிகளைவிட்டுத் திருந்தி உயிர்வாழ வேண்டும் என்றுதானே ஆசைப்படுகிறேன்? . . . யாரும் சாக வேண்டும் என்று நான் ஆசைப்படுவதே இல்லை. அதனால் திருந்தி வாழுங்கள்.” (எசே. 18:23, 32) மக்கள் மனம் திருந்தும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார். ஏனென்றால், அவர்கள் என்றென்றும் வாழ வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். பாவம் செய்தவர்கள் தாங்களாகவே திருந்தி வரும்வரை அவர் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருப்பதில்லை. அதற்குச் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.
தறிகெட்டுப்போன தன்னுடைய மக்களை மனம் திருந்த வைப்பதற்கு யெகோவா அடிக்கடி தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தினார் (பாராக்கள் 6-7)
7. ஓசியா தீர்க்கதரிசி மற்றும் அவருடைய மனைவி பற்றிய பதிவிலிருந்து யெகோவா தன்னுடைய மக்களுக்கு என்ன சொல்லிக்கொடுத்தார்?
7 ஒரு நிஜ சம்பவத்தை வைத்து யெகோவா தன்னுடைய மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். அதைப் பற்றிப் பார்க்கலாம். ஓசியா தீர்க்கதரிசியின் மனைவி கோமர். அவள் தன் கணவருக்குத் துரோகம் செய்தாள். பிறகு, அவரை விட்டுவிட்டு வேறு ஆண்களுக்கு ஆசை நாயகியாக ஆகிவிட்டாள். அவள் மனம் திருந்த வாய்ப்பே இல்லையா? இதயத்தை ஆராய்கிற யெகோவா ஓசியாவிடம் இப்படிச் சொன்னார்: ‘இஸ்ரவேல் ஜனங்கள் மற்ற தெய்வங்களை வணங்குகிறார்கள். . . . ஆனாலும், யெகோவாவாகிய நான் அவர்கள்மேல் அன்பு காட்டுகிறேன். அதைப் போல நீயும், உனக்குத் துரோகம் செய்து இன்னொருவனின் ஆசைநாயகியாக மாறிவிட்ட பெண்ணை மறுபடியும் கூட்டிக்கொண்டு வந்து அவளிடம் அன்பு காட்டு.’ (ஓசி. 3:1; நீதி. 16:2) இதில் ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? மோசமான பாவம் செய்வதை அவள் இன்னமும் நிறுத்தவில்லை என்றாலும், யெகோவா ஓசியாவை அவளிடம் போகச் சொன்னார். அவளை மன்னித்து திரும்பவும் தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொள்ளச் சொன்னார்.a அதேமாதிரிதான், அடங்காமல் போன இஸ்ரவேல் மக்களிடம் யெகோவாவும் நடந்துகொண்டார். அவர்களை அவர் அப்படியே அம்போவென்று விட்டுவிடவில்லை. அவர்கள் படுமோசமான பாவங்களைச் செய்துகொண்டு இருந்தாலும், அவர்கள்மேல் யெகோவாவுக்கு இன்னமும் அன்பு இருந்தது. அவர்கள் மனம் திருந்துவதற்கும், வாழ்க்கையை மாற்றிக்கொள்வதற்கும் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டினார். இதிலிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்? ‘இதயத்தை ஆராய்கிற’ யெகோவாவுக்கு ஒருவரைப் பற்றிய எல்லாமே தெரியும். (நீதி. 17:3) அந்த நபர் படுமோசமான பாவத்தை இன்னமும் செய்துகொண்டு இருந்தாலும், அவரை மனம் திருந்தத் தூண்டுவார், அதற்கான முயற்சியையும் எடுப்பார். இதைப் பற்றிக் கூடுதலாக இப்போது பார்க்கலாம்.
மனம் திருந்துவதற்குப் பாவம் செய்தவர்களை யெகோவா எப்படித் தூண்டினார்?
8. மனம் திருந்துவதற்கு யெகோவா எப்படி காயீனைத் தூண்டினார்? (ஆதியாகமம் 4:3-7) (படத்தையும் பாருங்கள்.)
8 ஆதாம் ஏவாளுடைய முதல் மகன் காயீன். அவனுடைய அப்பா அம்மாவிடமிருந்து அவனுக்கும் பாவ இயல்பு வந்தது. அதோடு, பாவ ஆசைகளை அவனும் கட்டுப்படுத்தவில்லை. “அவனுடைய செயல்கள் பொல்லாதவையாக இருந்தன” என்று பைபிள் சொல்கிறது. (1 யோ. 3:12) ஒருவேளை அதனால்தான், காயீன் பலி கொடுத்தபோது ‘[அவனையும்] அவன் காணிக்கையையும் [யெகோவா] ஏற்றுக்கொள்ளாமல்’ போயிருக்கலாம்! காயீன் தன்னை மாற்றிக்கொள்வதற்குப் பதிலாக, ‘பயங்கரமாக கோபப்பட்டான், . . . முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டான்.’ அடுத்து யெகோவா என்ன செய்தார்? அவனிடம் பேசினார். (ஆதியாகமம் 4:3-7-ஐ வாசியுங்கள்.) அவனுக்கு அன்பாகப் புரிய வைக்க முயற்சி செய்தார். அவன் நல்லது செய்தால் அவனை ஆசீர்வதிப்பதாகவும் சொன்னார். அதேசமயத்தில், பாவப் படுகுழியில் விழாமல் இருக்க எச்சரிப்பும் கொடுத்தார். ஆனால் யெகோவா சொன்ன எதையுமே காயீன் காதில் வாங்கவில்லை. அவனை மனம் திருந்த வைக்க யெகோவா எடுத்த முயற்சியை அவன் உதறித் தள்ளிவிட்டான். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, பாவிகளை மனம் திருந்த தூண்டுவதையே யெகோவா நிறுத்திவிட்டாரா? இல்லவே இல்லை!
யெகோவா காயீனுக்கு அன்பாகப் புரிய வைக்க முயற்சி செய்தார். நல்லது செய்தால் அவனை ஆசீர்வதிப்பதாகவும் சொன்னார். அதேசமயத்தில், பாவம் என்ற படுகுழியில் அவன் விழாமல் இருப்பதற்கு எச்சரிப்பும் கொடுத்தார் (பாரா 8)
9. மனம் திருந்துவதற்கு யெகோவா எப்படி தாவீதைத் தூண்டினார்?
9 தாவீது ராஜாவை யெகோவா ரொம்ப நேசித்தார். அவன் ‘என் இதயத்துக்குப் பிடித்தமானவன்’ என்றுகூட சொன்னார். (அப். 13:22) ஆனால் தாவீது, ஒழுக்கக்கேடு, கொலை உட்பட படுமோசமான பாவங்களைச் செய்தார். திருச்சட்டத்தின்படி அவருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். (லேவி. 20:10; எண். 35:31) ஆனால், தாவீதுக்கு உதவ யெகோவா முன்வந்தார்.b மனம் திருந்தியதற்கான அறிகுறிகள் எதுவும் தாவீதிடம் தெரியாதபோதுகூட யெகோவா அப்படிச் செய்தார். நாத்தான் தீர்க்கதரிசியை அனுப்பினார். தாவீது எவ்வளவு மோசமான பாவத்தைச் செய்திருக்கிறார் என்பதைப் புரிய வைக்க நாத்தான் ஒரு உதாரணத்தைப் பயன்படுத்தினார். அது தாவீதுடைய மனதைக் குத்திக் கிழித்தது. அதனால், அவர் மனம் திருந்தினார். (2 சா. 12:1-14) மனதுருகி ஒரு சங்கீதத்தையும் எழுதினார். அவர் செய்த பாவத்தை நினைத்து எவ்வளவு மனம் வருந்தினார் என்பதை அது தெளிவாகக் காட்டுகிறது. (சங். 51, மேல்குறிப்பு) இன்று அந்தச் சங்கீதம், பாவம் செய்த நிறைய பேருக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கிறது. மனம் திருந்துவதற்கும் அவர்களைத் தூண்டுகிறது. யெகோவா தாவீதை மனம் திருந்த தூண்டியதை நினைக்கும்போது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!
10. பாவமுள்ள மனிதர்களிடம் யெகோவா பொறுமையாக இருப்பதையும், அவர்களை மன்னிப்பதையும் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?
10 யெகோவா பாவத்தை வெறுக்கிறார். அது எப்படிப்பட்ட பாவமாக இருந்தாலும் சரி! (சங். 5:4, 5) ஆனாலும், நாம் எல்லாருமே பாவிகள் என்று அவருக்குத் தெரியும். நம்மேல் இருக்கிற அன்பினால், பாவத்துக்கு எதிரான போராட்டத்தில் நமக்கு உதவ நினைக்கிறார். பாவிகளிலேயே படுபாவிகள்கூட மனம் திருந்துவதற்கு அவர் எப்போதுமே உதவுகிறார். அவர்கள் தன்னிடம் நெருங்கி வருவதற்கும் அவர் உதவுகிறார். இதைத் தெரிந்துகொள்வது மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது! யெகோவா காட்டும் பொறுமை, மன்னிப்பைப் பற்றியெல்லாம் யோசிக்கும்போது அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு வருகிறது. அப்படியே பாவம் செய்துவிட்டாலும் உடனடியாக மனம் திருந்த வேண்டுமென்ற எண்ணமும் வருகிறது. இப்போது, மனம் திருந்துவதைப் பற்றி இயேசுவின் சீஷர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்று பார்க்கலாம்.
மனம் திருந்துவதைப் பற்றி இயேசுவின் சீஷர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள்?
11-12. யெகோவாவின் மன்னிக்கும் குணத்தைப் பற்றி இயேசு என்ன சொல்லிக்கொடுத்தார்? (படத்தைப் பாருங்கள்.)
11 கி.பி. முதல் நூற்றாண்டில், மனம் திருந்துவது எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்குச் சொல்லிக்கொடுக்க, யோவான் ஸ்நானகரையும் இயேசு கிறிஸ்துவையும் யெகோவா பயன்படுத்தினார்.—மத். 3:1, 2; 4:17.
12 பாவம் செய்தவர்களைத் தன்னுடைய அப்பா மன்னித்து ஏற்றுக்கொள்வதற்கு எவ்வளவு ஆசையாக இருக்கிறார் என்பதை இயேசு சொல்லிக்கொடுத்தார். அதற்கு ஒரு உதாரணம்தான் காணாமல்போன மகனைப் பற்றி அவர் சொன்ன அழகான கதை. அந்தக் கதையில் வருகிற மகன், வீட்டைவிட்டு வெளியே போய் மோசமான வாழ்க்கை வாழ்கிறான். பிறகு அவனுக்கு ‘புத்தி வருகிறது.’ அவன் திரும்பவும் வீட்டுக்கு வருகிறான். அப்போது அவனுடைய அப்பா என்ன செய்தார்? “அவன் ரொம்பத் தூரத்தில் வந்துகொண்டிருந்தபோதே அவனுடைய அப்பா அவனைப் பார்த்துவிட்டார். உடனே அவருடைய மனம் உருகியது, ஓடிப்போய் அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.” தன்னுடைய அப்பாவின் கூலியாட்களில் ஒருவனாக இருந்துகொள்ளலாம் என்றுதான் அந்த மகன் நினைத்தான். ஆனால் அவனுடைய அப்பா, அவனை “என்னுடைய மகன்” என்று சொல்லி, திரும்பவும் குடும்பத்தில் சேர்த்துக்கொண்டார். அவன் “காணாமல் போயிருந்தான், இப்போது கிடைத்துவிட்டான்” என்று சொன்னார். (லூக். 15:11-32) இயேசு பரலோகத்தில் இருந்தபோது, மனம் திருந்திய எத்தனையோ பாவிகளை யெகோவா எப்படிக் கரிசனையாக நடத்தினார் என்பதைக் கண்ணாரப் பார்த்திருப்பார். அதனால்தான், அவருடைய அப்பா யெகோவா எவ்வளவு இரக்கமுள்ளவர் என்பதைக் காட்டுவதற்கு மனதை உருக வைக்கும் இந்தக் கதையைச் சொன்னார்.
இயேசு சொன்ன கதையில் வருகிற அப்பா, காணாமல்போன தன் மகன் திரும்பி வந்தபோது அவனைக் கட்டியணைக்க ஓடோடி வருகிறார் (பாராக்கள் 11-12)
13-14. மனம் திருந்துவதைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு என்ன கற்றுக்கொண்டார், அதைப் பற்றி மற்றவர்களுக்கு என்ன சொல்லிக்கொடுத்தார்? (படத்தையும் பாருங்கள்.)
13 மனம் திருந்துவதைப் பற்றியும் மன்னிப்பைப் பற்றியும் இயேசுவிடமிருந்து அப்போஸ்தலன் பேதுரு முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொண்டார். பேதுரு நிறைய தவறுகள் செய்தார். அதனால், நிறைய தடவை அவருக்கு மன்னிப்பு தேவைப்பட்டது. இயேசுவும் பேதுருவைத் தாராளமாக மன்னித்தார். உதாரணத்துக்கு, இயேசுவைத் தெரியாது என்று மூன்று தடவை சொன்ன பிறகு, குற்ற உணர்ச்சியால் பேதுரு தவித்தார். (மத். 26:34, 35, 69-75) உயிர்த்தெழுந்த பிறகு இயேசு பேதுருவைச் சந்தித்தார். அப்போது பேதுரு தனியாக இருந்திருப்பார். (லூக். 24:33, 34; 1 கொ. 15:3-5) அந்தச் சமயத்தில், இயேசு அவரை அன்பாக மன்னித்திருப்பார், மனம் திருந்திய தன்னுடைய நண்பனைப் பலப்படுத்தியிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.—மாற். 16:7.
14 மனம் திருந்திய அனுபவமும் மன்னிப்பைப் பெற்ற அனுபவமும் பேதுருவுக்கு இருந்தது. அதனால், அதைப் பற்றி மற்றவர்களுக்கு அவரால் கற்றுக்கொடுக்க முடிந்தது. பெந்தெகொஸ்தே பண்டிகைக்குப் பிறகு யூதர்களுக்கு அவர் ஒரு பேச்சு கொடுத்தார். அதில் அவர்கள் மேசியாவைக் கொலை செய்ததைப் பற்றிப் பேசினார். ஆனாலும் அவர்களிடம் அன்பாக இப்படிச் சொன்னார்: “மனம் திருந்தி, உங்கள் வழியை மாற்றிக்கொள்ளுங்கள்; அப்போதுதான் உங்களுடைய பாவங்கள் துடைத்தழிக்கப்படும், யெகோவாவிடமிருந்து புத்துணர்ச்சி கிடைத்துக்கொண்டே இருக்கும்.” (அப். 3:14, 15, 17, 19) பாவம் செய்த ஒருவர் மனம் திருந்தியதைக் காட்ட வேண்டுமென்றால், தன்னுடைய வழியை மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது, தன்னுடைய தப்பான யோசனைகளையும், செயல்களையும் மாற்ற வேண்டும். பிறகு, கடவுளுக்குப் பிடித்த புதிய வழியில் போக ஆரம்பிக்க வேண்டும். இதைத்தான் பேதுரு அர்த்தப்படுத்தினார். அதோடு, யெகோவா அவர்களுடைய பாவங்களைத் துடைத்தழித்துவிடுவார் என்றும், அதை இல்லாமல் செய்துவிடுவார் என்றும் சொன்னார். பல வருஷங்களுக்குப் பிறகு, கிறிஸ்தவர்களுக்கு பேதுரு இப்படி எழுதினார்: “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று [யெகோவா] விரும்புகிறார். அதனால்தான் உங்கள்மேல் பொறுமையாக இருக்கிறார்.” (2 பே. 3:9) பாவம் செய்தவர்களுக்கு, அதுவும் மோசமான பாவம் செய்தவர்களுக்கு, இந்த வார்த்தைகள் எவ்வளவு ஆறுதலாக இருக்கும்!
மனம் திருந்திய தன்னுடைய நண்பனை இயேசு அன்பாக மன்னித்தார், பலப்படுத்தினார் (பாராக்கள் 13-14)
15-16. (அ) மன்னிப்பைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் எப்படிக் கற்றுக்கொண்டார்? (1 தீமோத்தேயு 1:12-15) (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
15 தர்சு பட்டணத்தைச் சேர்ந்த சவுல், பெரும் பாவியாக இருந்தார். இயேசு கிறிஸ்துவின் அன்பு சீஷர்களைக் கொடூரமாகத் துன்புறுத்தினார். ‘அவரெல்லாம் மனம் திருந்த வாய்ப்பே இல்லை’ என்று அன்றிருந்த கிறிஸ்தவர்களில் நிறைய பேர் நினைத்திருப்பார்கள். ஆனால், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, மனிதர்கள் யோசிக்கிற மாதிரி தவறாக யோசிக்கவில்லை. அவரும் அவருடைய அப்பா யெகோவாவும் சவுலுடைய நல்ல குணங்களைப் பார்த்தார்கள். சொல்லப்போனால், சவுலை “ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். (அப். 9:15) சவுலை மனம் திருந்த தூண்டுவதற்கு இயேசு அற்புதத்தையும் செய்தார். (அப். 7:58–8:3; 9:1-9, 17-20) ஒரு கிறிஸ்தவராக, அப்போஸ்தலன் பவுலாக ஆன பிறகு, தனக்குக் காட்டப்பட்ட இரக்கத்துக்காகவும் கருணைக்காகவும் ரொம்ப நன்றியோடு இருப்பதை அவர் அடிக்கடி சொன்னார். (1 தீமோத்தேயு 1:12-15-ஐ வாசியுங்கள்.) “கடவுள் தன்னுடைய கருணையால் உங்களை மனம் திருந்தத் தூண்டுகிறார்” என்று சொல்லிக்கொடுத்தார்.—ரோ. 2:4.
16 கொரிந்து சபையில், பாலியல் முறைகேடு பற்றி ஒரு பெரிய பிரச்சினை வந்ததை பவுல் கேள்விப்பட்டார். அதை அவர் எப்படிக் கையாண்டார்? அவர் அதைக் கையாண்ட விதம் யெகோவா எப்படி அன்பாகக் கண்டித்து திருத்துகிறார் என்பதைப் பற்றியும், அவருடைய இரக்கத்தைப் பற்றியும் நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறது. அதைப் பற்றி விவரமாக அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
பாட்டு 33 யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு
a இந்தச் சம்பவத்தில் மட்டும்தான் யெகோவா இப்படிச் சொன்னார். இன்று ஒருவர் மணத்துணைக்குத் துரோகம் செய்துவிட்டால், குற்றம் செய்யாத துணை துரோகம் செய்த துணையோடு தொடர்ந்து வாழ வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பது இல்லை. சொல்லப்போனால், யெகோவா ஒரு அன்பான ஏற்பாடு செய்தார். குற்றம் செய்யாத கணவனோ, மனைவியோ குற்றம் செய்த தன்னுடைய துணையை விவாகரத்து செய்துகொள்ளலாம் என்று தன்னுடைய மகன் மூலமாகச் சொன்னார்.—மத். 5:32; 19:9.
b நவம்பர் 15, 2012 காவற்கோபுரத்தில் பக். 21-23-ல் “யெகோவாவின் மன்னிப்பைப் பெற...” என்ற கட்டுரையில் பாரா. 3-10-ஐ பாருங்கள்.