உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 மார்ச் பக். 14-19
  • இயேசுவைப் போல் ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்யுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசுவைப் போல் ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்யுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதிலேயே கவனம் வைத்தார்
  • தீர்க்கதரிசனங்களைப் புரிந்துவைத்திருந்தார்
  • யெகோவாவை நம்பியிருந்தார்
  • நம்பிக்கையோடு இருந்தார்
  • ஊழியத்தை இன்னும் சந்தோஷமாக செய்யுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • ஊழியம் செய்ய அன்பு உங்களைத் தூண்டட்டும்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 மார்ச் பக். 14-19

படிப்புக் கட்டுரை 11

பாட்டு 57 எல்லாவித மக்களுக்கும் பிரசங்கிப்போம்!

இயேசுவைப் போல் ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்யுங்கள்

“இயேசு . . . தான் போகவிருந்த ஒவ்வொரு நகரத்துக்கும் இடத்துக்கும் அவர்களைத் தனக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்.” —லூக். 10:1.

என்ன கற்றுக்கொள்வோம்?

இயேசுவைப் போல் ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்வதற்கு உதவுகிற நான்கு வழிகளைக் கற்றுக்கொள்வோம்.

1. பொய்க் கிறிஸ்தவர்களுக்கும் உண்மைக் கிறிஸ்தவர்களுக்கும் இருக்கிற ஒரு வித்தியாசம் என்ன?

யெகோவாவை வணங்குகிறவர்கள் ஊழியத்தை ரொம்ப ஆர்வத்துடிப்போடு செய்கிறார்கள். பொய்க் கிறிஸ்தவர்களிலிருந்து உண்மைக் கிறிஸ்தவர்களை வித்தியாசப்படுத்திக் காட்டும் ஒரு முக்கியமான விஷயமே இந்த ஆர்வத்துடிப்புதான். (தீத். 2:14) ஆனால், சிலசமயங்களில் ஊழியம் செய்வதில் நமக்கு இருக்கிற ஆர்வம் குறைந்துவிடலாம். சபைக்காகக் கடினமாக உழைக்கிற ஒரு மூப்பர் இப்படிச் சொன்னார்: “சிலசமயத்தில், நன்றாக ஊழியம் செய்ய வேண்டுமென்ற ஆர்வமே எனக்கு இருக்காது.” உங்களுக்கும் அப்படித் தோன்றியிருக்கிறதா?

2. ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்வது சிலசமயம் ஏன் கஷ்டமாக இருக்கலாம்?

2 ஊழியம் செய்வதைவிட, யெகோவாவின் சேவையில் இருக்கிற மற்ற விஷயங்களைச் செய்வது ஒருவேளை நமக்கு ரொம்ப பிடித்திருக்கலாம். ஏனென்றால் அவற்றில் பலன்கள் உடனடியாக கண்ணுக்குத் தெரியலாம். எதையோ சாதித்த உணர்வுகூட நமக்கு ஏற்படலாம். உதாரணத்துக்கு, கட்டுமான வேலையிலோ பேரழிவு நிவாரண வேலையிலோ ஈடுபடும்போது அல்லது சகோதர சகோதரிகளை உற்சாகப்படுத்தும்போது பலன்களை உடனடியாகப் பார்க்க முடிகிறது. சகோதர சகோதரிகளோடு ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்யும்போது நமக்கு ரொம்ப சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கும். அதுமட்டுமல்ல, அவர்களுக்காக நாம் எடுக்கும் முயற்சிகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளும்போது இன்னும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஆனால், ஊழியத்தைப் பொறுத்தவரை விஷயமே வேறு. பல வருஷங்களாக நாம் ஒரு இடத்தில் ஊழியம் செய்தும் நம் செய்தியை யாரும் கேட்காமல் இருக்கலாம். அல்லது, மக்கள் நல்ல செய்தியை எதிர்க்கலாம். முடிவு நெருங்க நெருங்க, எதிர்ப்பு அதிகமாகிக்கொண்டுதான் போகும். (மத். 10:22) இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், ஊழியத்தில் நமக்கு இருக்கிற ஆர்வத்துடிப்பை எப்படி அதிகரிக்கலாம்?

3. ஊழியத்தில் இயேசுவுக்கு இருந்த ஆர்வத்துடிப்பைப் பற்றி லூக்கா 13:6-9-லிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?

3 ஊழியத்தை ஆர்வத்துடிப்போடு செய்வதற்கு இயேசுவுடைய உதாரணம் நமக்குக் கைகொடுக்கும். ஊழியத்தில் அவருக்கு இருந்த ஆர்வம் தணியவே இல்லை. சொல்லப்போனால், பூமியில் அவர் இருந்த நாட்கள் குறைய குறைய ஊழியத்தை இன்னும் அதிகமாகச் செய்தார். (லூக்கா 13:6-9-ஐ வாசியுங்கள்.) தான் செய்த ஊழியத்தைப் பற்றி இயேசு ஒரு கதையில் விளக்கினார். அந்தக் கதையில் வருகிற தோட்டக்காரர் ஒரு அத்தி மரத்தை மூன்று வருஷம் பராமரித்தார். ஆனால் அது ஒரேவொரு பழத்தைக்கூட கொடுக்கவில்லை. அதேமாதிரி இயேசுவும் சுமார் மூன்று வருஷம் யூதர்களுக்குப் பிரசங்கித்தார். ஆனாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் அவருடைய சீஷர்களாக ஆகவில்லை. அந்தக் கதையில் வந்த தோட்டக்காரர், அத்தி மரத்தின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. அதேமாதிரி, இயேசுவும் மக்கள்மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கவில்லை. ஊழியத்தில் அவருக்கு இருந்த ஆர்வமும் தணிவதற்கு விடவில்லை. மனதைத் தொடும் விதத்தில் நல்ல செய்தியைச் சொல்ல அவர் முயற்சி செய்துகொண்டே இருந்தார்.

4. இயேசுவின் உதாரணத்திலிருந்து எந்த நான்கு விஷயங்களைக் கற்றுக்கொள்வோம்?

4 இயேசு எப்படி ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்தார் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். முக்கியமாக, அவர் ஊழியம் செய்த கடைசி ஆறு மாதங்களைப் பற்றிப் பார்ப்போம். இயேசு சொல்லிக்கொடுத்ததிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அவர் செய்த மாதிரியே நாமும் செய்யும்போது ஊழியத்தில் ஆர்வத்துடிப்போடு செயல்பட முடியும். இயேசு எப்படி, (1) யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதிலேயே கவனம் வைத்தார், (2) பைபிள் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துவைத்திருந்தார், (3) உதவிக்காக யெகோவாவையே நம்பியிருந்தார், (4) கொஞ்சம் பேராவது நல்ல செய்தியைக் கேட்பார்கள் என்று நம்பிக்கையோடு இருந்தார் என்பதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதிலேயே கவனம் வைத்தார்

5. கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதுதான் வாழ்க்கையில் முக்கியம் என்பதை இயேசு எப்படிக் காட்டினார்?

5 “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை” இயேசு ஆர்வத்துடிப்போடு சொன்னதற்கு காரணம், இந்த வேலையை அவர் செய்ய வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பம் என்பதைத் தெரிந்துவைத்திருந்தார். (லூக். 4:43) ஊழியம் செய்வதுதான் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமான குறிக்கோளாக இருந்தது. பூமியில் அவர் வாழ்ந்த கடைசி சில மாதங்களில்கூட “நகரம் நகரமாகவும் கிராமம் கிராமமாகவும்” போய் எல்லாருக்கும் சொல்லிக்கொடுத்தார். (லூக். 13:22) இந்த வேலையைச் செய்வதற்கு இன்னும் நிறைய சீஷர்களுக்கும் அவர் பயிற்சி கொடுத்தார்.—லூக். 10:1.

6. கடவுளுடைய அமைப்பில் இருக்கிற மற்ற வேலைகளோடு பிரசங்க வேலை எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது? (படத்தையும் பாருங்கள்.)

6 இன்றும்கூட, பிரசங்க வேலைதான் முக்கியமான வேலை. இதைச் செய்ய வேண்டும் என்றுதான் யெகோவாவும் இயேசுவும் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள். (மத். 24:14; 28:19, 20) பிரசங்க வேலைக்கும் யெகோவாவின் சேவையில் இருக்கிற மற்ற வேலைகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது. உதாரணத்துக்கு, ராஜ்ய மன்றங்களை ஏன் கட்டுகிறோம்? ஊழியத்தில் சந்திக்கிற ஆட்கள் அங்கே வந்து யெகோவாவை வணங்குவதற்காக. பெத்தேலில் செய்யப்படும் வேலைகளும் ஊழியத்துக்குத்தான் உதவியாக இருக்கிறது. நிவாரண வேலையை ஏன் செய்கிறோம்? பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மட்டுமல்ல, அவர்கள் கடவுளுடைய சேவையை மறுபடியும் தொடங்குவதற்காகவும்தான். அதில், பிரசங்க வேலையும் ஒன்று. பிரசங்க வேலை எவ்வளவு முக்கியம் என்று இதிலிருந்து தெரிகிறது. இதைச் செய்ய வேண்டும் என்றுதான் யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிறார். இதைப் புரிந்துகொண்டால் ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்வோம். ஹங்கேரியில் இருக்கிற யானோஸ் என்ற மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “கடவுளுடைய சேவையில் இருக்கிற மற்ற வேலைகளைச் செய்கிறோம் என்பதற்காக பிரசங்க வேலையை விட்டுவிட முடியாது. இதுதான் நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை என்பதை நான் அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்வேன்.”

படத்தொகுப்பு: 1. அமைப்பின் கட்டுமான வேலையை ஒரு சகோதரர் செய்கிறார். 2. இன்னொரு சகோதரர், ரிமோட் வாலண்டியராக பெத்தேல் சேவை செய்கிறார். 3. பிறகு, இரண்டு சகோதரர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஊழியம் செய்கிறார்கள்.

இன்று நாம் முக்கியமாக, பிரசங்க வேலையை செய்ய வேண்டும் என்றுதான் யெகோவாவும் இயேசுவும் எதிர்பார்க்கிறார்கள் (பாரா 6)


7. நாம் தொடர்ந்து பிரசங்கிக்க வேண்டும் என்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்? (1 தீமோத்தேயு 2:3, 4)

7 மக்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறாரோ அதேமாதிரி நாமும் நினைத்தால் ஊழியத்தில் நம்முடைய ஆர்வம் குறையாமல் இருக்கும். நிறைய பேர் நல்ல செய்தியைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று யெகோவா நினைக்கிறார். (1 தீமோத்தேயு 2:3, 4-ஐ வாசியுங்கள்.) அதனால்தான், உயிர்காக்கும் இந்தச் செய்தியைத் திறமையாகச் சொல்ல நமக்குப் பயிற்சி கொடுக்கிறார். உதாரணத்துக்கு, அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள் புத்தகத்தில் சீஷராக்கும் குறிக்கோளோடு மக்களிடம் பேச நல்ல நல்ல ஆலோசனைகள் இருக்கின்றன. ஒருவேளை, மக்கள் இன்று மாற்றங்கள் செய்யவில்லை என்றாலும், மிகுந்த உபத்திரவம் முடியும்வரை அவர்களுக்கு வாய்ப்பிருக்கிறது. அதனால், எதிர்காலத்தில் அவர்கள் மனம் மாற வேண்டுமென்றால், இன்று நாம் பிரசங்க வேலையை விடாமல் செய்துகொண்டே இருக்க வேண்டும்.

தீர்க்கதரிசனங்களைப் புரிந்துவைத்திருந்தார்

8. தீர்க்கதரிசனங்களைப் பற்றித் தெரிந்துகொண்டது, நேரத்தை ஞானமாகப் பயன்படுத்த இயேசுவுக்கு எப்படி உதவியது?

8 தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேறும் என்பதை இயேசு புரிந்துவைத்திருந்தார். அவர் மூன்றரை வருஷம்தான் ஊழியம் செய்வார் என்று சொல்லப்பட்ட தீர்க்கதரிசனத்தை அவர் தெரிந்துவைத்திருந்தார். (தானி. 9:26, 27) அவர் எப்போது, எப்படி இறப்பார் என்ற தீர்க்கதரிசனமும் அவருக்குத் தெரிந்திருந்தது. (லூக். 18:31-34) அதனால் அவருக்கு இருந்த நேரத்தை ஞானமாகப் பயன்படுத்தினார். அவருக்கிருந்த கொஞ்ச நேரத்தைப் பயன்படுத்தி யெகோவா கொடுத்த வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்தார்.

9. பைபிள் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துவைத்திருப்பது எப்படி ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்யத் தூண்டுகிறது?

9 நம் காலத்தில் நிறைவேறிவரும் தீர்க்கதரிசனங்களை ஆழமாக யோசித்துப் பார்த்தால் நம்மாலும் ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்ய முடியும். இந்த உலகத்தின் முடிவுக்கு இன்னும் கொஞ்ச காலம்தான் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். கடைசி நாட்களைப் பற்றிய பைபிள் தீர்க்கதரிசனங்கள் இன்று நிறைவேறி வருவதைப் பார்க்கிறோம். அதில் சொல்லப்பட்ட மாதிரியே உலக சம்பவங்களும், மக்களுடைய குணங்களும் இருக்கிறது. ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசுக்கும் ரஷ்யா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் நடுவில் இருக்கிற பகை வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. “முடிவு காலத்தில்” தென்திசை ராஜாவும், வடதிசை ராஜாவும் சண்டைக்கு நிற்பார்கள் என்ற தீர்க்கதரிசனம் இவர்களுடைய விஷயத்தில் நிறைவேறுவதைக் கவனிக்க முடிகிறது. (தானி. 11:40) தானியேல் 2:43-45-ல் சொல்லப்பட்டிருக்கிற சிலையின் பாதங்கள் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசைக் குறிக்கிறது என்பதை நாம் புரிந்துவைத்திருக்கிறோம். இந்தத் தீர்க்கதரிசனம் சொல்கிற மாதிரி, சீக்கிரத்தில்—ரொம்ப சீக்கிரத்தில்—கடவுளுடைய அரசாங்கம் மனித அரசாங்கங்களை அடித்து நொறுக்கப் போகிறது. அதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த எல்லா தீர்க்கதரிசனங்களும் கால ஓட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதைக் காட்டுகின்றன. இதைப் புரிந்துவைத்திருப்பது, அவசர உணர்வோடு ஊழியம் செய்ய நம்மைத் தூண்டுகிறது.

10. ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்ய வேறெந்த விதங்களில் தீர்க்கதரிசனங்கள் நம்மைத் தூண்டுகிறது?

10 மனதைத் தொடும் செய்திகள் தீர்க்கதரிசனங்களுக்குள் புதைந்திருக்கின்றன. அவற்றை நாம் மற்றவர்களிடம் சொல்ல ஆசைப்படுகிறோம். டொமினிகன் குடியரசில் இருக்கிற கேரி என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “எதிர்காலத்தைப் பற்றி யெகோவா கொடுத்திருக்கிற வாக்குறுதிகளை யோசிக்கும்போது, அதை மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு வருகிறது. மக்கள் படுகிற அவஸ்தையைப் பார்க்கும்போது, இந்த வாக்குறுதிகள் எனக்கு மட்டுமல்ல, அவர்களுக்கும்தான் என்று எனக்குத் தோன்றுகிறது.” நம்முடைய ஊழிய வேலைக்குப் பின்னால் யெகோவா இருப்பதையும் தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன; ஊழியத்தை ஆர்வமாக செய்ய இதுவும் நம்மை உற்சாகப்படுத்துகிறது. ஹங்கேரியில் இருக்கிற லைலா என்ற சகோதரி சொல்கிறார்: “சிலரைப் பார்த்தால் நல்ல செய்தியைக் கேட்க மாட்டார்கள் என்று தோன்றும். ஆனால் அப்படிப்பட்டவர்களிடமும் நல்ல செய்தியைச் சொல்ல ஏசாயா 11:6-9 என்னைத் தூண்டுகிறது. ஏனென்றால், யெகோவாவின் உதவி இருந்தால் எப்படிப்பட்ட ஆட்களாலும் தங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அந்த வசனங்கள் கொடுக்கின்றன.” ஜாம்பியாவில் இருக்கிற கிறிஸ்டோஃபர் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “மாற்கு 13:10-ல் சொல்லியிருக்கிற மாதிரி இன்று உலகம் முழுவதும் நல்ல செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.” ஆர்வத்துடிப்போடு தொடர்ந்து ஊழியம் செய்ய எந்தெந்த தீர்க்கதரிசனங்கள் உங்களுக்கு உதவுகிறது?

யெகோவாவை நம்பியிருந்தார்

11. தொடர்ந்து ஊழியம் செய்ய இயேசு ஏன் யெகோவாவை நம்பியிருக்க வேண்டியிருந்தது? (லூக்கா 12:49, 53)

11 ஆர்வத்துடிப்போடு தொடர்ந்து ஊழியம் செய்ய யெகோவாவின் உதவியை இயேசு நம்பியிருந்தார். ஊழியத்தை இயேசு சாதுரியமாக செய்தார் என்பது உண்மைதான். இருந்தாலும், அவர் சொல்கிற செய்தியைக் கேட்டு நிறைய பேர் பயங்கரமாகக் கோபப்படுவார்கள் என்றும், கடுமையாக எதிர்ப்பார்கள் என்றும் அவருக்குத் தெரியும். (லூக்கா 12:49, 53-ஐ வாசியுங்கள்.) ஊழியம் செய்ததால், மதத் தலைவர்கள் அவரைக் கொலை செய்யக்கூட திரும்பத் திரும்ப முயற்சி செய்தார்கள். (யோவா. 8:59; 10:31, 39) ஆனாலும் தன்னோடு யெகோவா இருக்கிறார் என்று தெரிந்திருந்ததால், இயேசு தொடர்ந்து தைரியமாக ஊழியம் செய்தார். “நான் தனியாக இல்லை, என்னை அனுப்பிய தகப்பன் என்னோடு இருக்கிறார். . . . நான் எப்போதும் அவருக்குப் பிரியமான காரியங்களையே செய்வதால் அவர் என்னைத் தனியாக விட்டுவிடவில்லை” என்று சொன்னார்.—யோவா. 8:16, 29.

12. எதிர்ப்பு வந்தாலும் தொடர்ந்து பிரசங்கிக்க இயேசு எப்படித் தன்னுடைய சீஷர்களைத் தயார்படுத்தினார்?

12 உதவிக்காக யெகோவாவை நம்பியிருக்க இயேசு தன் சீஷர்களுக்கு ஞாபகப்படுத்தினார். துன்புறுத்தல் வந்தாலும் யெகோவா அவர்களுக்கு உதவுவார் என்று அவர் அடிக்கடி நம்பிக்கை கொடுத்தார். (மத். 10:18-20; லூக். 12:11, 12) இருந்தாலும், அவர்களை ஜாக்கிரதையாகவும் இருக்கச் சொன்னார். (மத். 10:16; லூக். 10:3) நல்ல செய்தியைக் கேட்க விருப்பமில்லாத ஆட்களிடம் அதைத் திணிக்க வேண்டாம் என்று ஆலோசனை கொடுத்தார். (லூக். 10:10, 11) ஒருவேளை யாராவது அவர்களைத் துன்புறுத்தினால் அந்த இடத்தைவிட்டு தப்பித்து போகும்படியும் சொன்னார். (மத். 10:23) இயேசுவும்கூட, யெகோவாவை நம்பி ஆர்வமாக ஊழியம் செய்தாலும் தேவையில்லாமல் ஆபத்தில் போய் சிக்கிக்கொள்ளவில்லை.—யோவா. 11:53, 54.

13. யெகோவா உங்களுக்கு உதவி செய்வார் என்று நீங்கள் ஏன் உறுதியாக நம்பலாம்?

13 எதிர்ப்பையும் தாண்டி இன்று ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்ய யெகோவாவுடைய உதவி தேவை. (வெளி. 12:17) யெகோவா உங்களுக்கு உதவுவார் என்பதில் நீங்கள் ஏன் உறுதியாக நம்பலாம்? யோவான் 17-வது அதிகாரத்தில் இருக்கும் இயேசுவின் ஜெபத்தை யோசித்துப் பாருங்கள். தன் அப்போஸ்தலர்களைப் பாதுகாக்கும்படி யெகோவாவிடம் இயேசு வேண்டினார். அந்த ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்தார். துன்புறுத்தல் வந்தாலும் ஆர்வத்தோடு பிரசங்கிக்க சீஷர்களுக்கு யெகோவா எப்படி உதவினார் என்று அப்போஸ்தலர் புத்தகத்தில் பார்க்கிறோம். அந்த ஜெபத்தில் இயேசு இன்னொரு விஷயத்தையும் கேட்டார். அப்போஸ்தலர்களுடைய வார்த்தையைக் கேட்டு விசுவாசம் வைக்கிறவர்களை பாதுகாக்க சொல்லியும் கேட்டார். அந்த ஜெபத்துக்கு யெகோவா இன்றுவரை பதில் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். அப்படி விசுவாசம் வைத்தவர்களில் நீங்களும் ஒருவர். உங்களை நிச்சயம் பாதுகாப்பார்.—யோவா. 17:11, 15, 20.

14. கஷ்டமான சமயங்களிலும் ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்ய முடியும் என்று ஏன் உறுதியாக இருக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)

14 முடிவு நெருங்க நெருங்க நல்ல செய்தியை ஆர்வத்தோடு பிரசங்கிப்பது இன்னும் கஷ்டமானாலும், நிச்சயம் நமக்கு உதவி கிடைக்கும். (லூக். 21:12-15) யெகோவாவைச் சார்ந்திருப்பதால், நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருக்கிற இடங்களில்கூட சகோதரர்களால் தொடர்ந்து பிரசங்கிக்க முடிகிறது. முதல் நூற்றாண்டில் இருந்தவர்களுக்கு யெகோவா சக்தி கொடுத்தது போலவே இன்று நமக்கும் சக்தி கொடுக்கிறார். அதனால், அவர் போதுமென்று சொல்லும்வரை ‘பிரசங்க வேலையை முழுமையாக’ நம்மால் செய்ய முடியும். (2 தீ. 4:17) ஆனால் இதையும் நாம் ஞாபகம் வைத்துக்கொள்கிறோம்: இயேசுவையும் அவருடைய சீஷர்களையும் போலவே நாமும் யாரிடமும் வாக்குவாதம் செய்வதில்லை; நல்ல செய்தியைக் கேட்கலாமா, வேண்டாமா என்ற முடிவை மக்களிடமே விட்டுவிடுகிறோம்.

நம் வேலைக்குக் கட்டுப்பாடுகள் போடப்பட்டிருக்கும் நாடுகளில்கூட சகோதர சகோதரிகள் நல்ல செய்தியைச் சாதுரியமாக சொல்லிவருகிறார்கள் (பாரா 14)a


நம்பிக்கையோடு இருந்தார்

15. இயேசுவுக்கு நம்பிக்கையான மனப்பான்மை இருந்ததை எது காட்டுகிறது?

15 நல்ல செய்தியைக் கேட்கும் ஆட்கள் கண்டிப்பாக இருப்பார்கள் என்று இயேசு நம்பிக்கையோடு இருந்தார். அதனால் அவர் சந்தோஷமாக ஊழியம் செய்தார், கடினமாக உழைத்தார். உதாரணத்துக்கு, கி.பி. 30-ன் கடைசியில், நல்ல செய்தியைக் கேட்பதற்கு நிறைய பேர் தயாராக இருந்ததை இயேசு பார்த்தார். அவர்களை அறுவடைக்குத் தயாராக இருக்கிற வயலோடு அவர் ஒப்பிட்டார். (யோவா. 4:35) சுமார் ஒரு வருஷத்துக்குப் பிறகு தன் சீஷர்களிடம், “அறுவடை அதிகமாக இருக்கிறது” என்று சொன்னார். (மத். 9:37, 38) இன்னொரு சமயம், “அறுவடை அதிகமாக இருக்கிறது . . . அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பச் சொல்லி அறுவடையின் எஜமானிடம் கெஞ்சிக் கேளுங்கள்” என்றார். (லூக். 10:2) மக்கள்மீது இருந்த நம்பிக்கையை இயேசு இழக்கவில்லை. அவர்கள் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டபோது அவர் சந்தோஷப்பட்டார்.—லூக். 10:21.

16. நம்பிக்கையோடு ஊழியம் செய்ய இயேசு சொன்ன உதாரணங்கள் எப்படி உதவுகிறது? (லூக்கா 13:18-21) (படத்தையும் பாருங்கள்.)

16 ஊழியத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்தால், உற்சாகமாக ஊழியம் செய்ய முடியும் என்று இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். இயேசு சொன்ன இரண்டு உதாரணங்களைக் கவனியுங்கள். (லூக்கா 13:18-21-ஐ வாசியுங்கள்.) ஒன்று, கடுகு விதையைப் பற்றிய உதாரணம். ஒரு கடுகு விதை வளர்ந்து பெரிய மரமாக ஆவதுபோல் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தி கிடுகிடுவென்று பிரமாண்டமாக வளர்ச்சி அடையும் என்று சொன்னார். இரண்டாவது, புளித்த மாவைப் பற்றிய உதாரணம். மாவில் இருக்கும் புளிப்புத்தன்மை எப்படி மாவு முழுவதும் பரவுமோ, அதே மாதிரி நல்ல செய்தி உலகம் முழுவதும் பரவும். மாவு புளிப்பது, நம்முடைய கண்ணுக்கு வெளிப்படையாக எப்படித் தெரியாதோ, அதே மாதிரி மக்கள் மனதில் ஏற்படும் மாற்றங்களும் நமக்கு உடனடியாகத் தெரியாமல் போகலாம். இந்த உதாரணங்களைச் சொன்னதன் மூலம், ஊழிய வேலை நிச்சயம் பலன் தரும் என்பதைச் சீஷர்கள் புரிந்துகொள்ள இயேசு உதவினார்.

நிறைய பேர் நடந்துபோய்க்கொண்டிருக்கும் ஒரு நடைபாதையின் ஓரமாக நின்றுகொண்டு இரண்டு சகோதரிகள் வீல் ஸ்டாண்டு ஊழியம் செய்கிறார்கள். வீல் ஸ்டாண்டை யாருமே கவனிக்கவில்லை.

சிலராவது நல்ல செய்தியை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு இயேசு மாதிரியே நாமும் பிரசங்கிக்கிறோம் (பாரா 16)


17. நம்பிக்கையோடு ஊழியம் செய்ய என்ன நல்ல காரணங்கள் இருக்கின்றன?

17 உலகம் முழுவதும் பிரசங்க வேலை என்ன சாதித்திருக்கிறது தெரியுமா? ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான ஆட்கள் நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். லட்சக்கணக்கான ஆட்கள் நம்மோடு பைபிளைப் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். வருஷாவருஷம் பல ஆயிரக்கணக்கான ஆட்கள் ஞானஸ்நானம் எடுத்து நம்மோடு பிரசங்க வேலையில் சேர்ந்துகொள்கிறார்கள். இன்னும் எத்தனை பேர் வந்து சேர்ந்துகொள்வார்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால், திரளான கூட்டத்தை யெகோவா சேர்த்துக்கொண்டிருக்கிறார் என்பது மட்டும் தெரிகிறது. இந்தத் திரள் கூட்டம், மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்கும். (வெளி. 7:9, 14) நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ள விரும்பும் ஆட்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அறுவடையின் எஜமான் யெகோவாவுக்கு இருக்கிறது. அதனால், நாம் இன்னும் மும்முரமாக ஊழியம் செய்ய வேண்டும்!

18. மக்கள் நம்மைப் பார்க்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

18 இயேசுவின் உண்மையான சீஷர்கள் எப்போதுமே மும்முரமாக ஊழியம் செய்திருக்கிறார்கள். பயமில்லாமல் ஆர்வத்துடிப்போடு அவர்கள் செய்த ஊழியத்தைப் பார்த்து அன்றிருந்த ஆட்கள், ‘அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதைப் புரிந்துகொண்டார்கள்.’ (அப். 4:13) அதேபோல் இன்றும் மக்கள் நம்மைப் பார்க்கும்போது என்ன சொல்ல வேண்டும்? ‘இவர்கள் இயேசு மாதிரியே ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்கிறவர்கள்’ என்று சொல்ல வேண்டும். சொல்வார்களா?!

நாம் எப்படி இயேசு மாதிரியே...

  • ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்யலாம்?

  • யெகோவாவை நம்பியிருக்கலாம்?

  • நம்பிக்கையான மனப்பான்மையைக் காட்டலாம்?

பாட்டு 58 நல்லவர்களைத் தேடுவோம்

a படவிளக்கம் : பெட்ரோல் பங்க்கில் வேலை செய்யும் ஒருவரிடம் ஒரு சகோதரர் ரொம்ப சாதுரியமாக நல்ல செய்தியைச் சொல்கிறார்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்