படிப்புக் கட்டுரை 23
பாட்டு 2 யெகோவா என்பதே உங்கள் பெயர்
யெகோவாவின் பெயர்—நமது உயிர்!
“யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருக்கிறீர்கள்.’”—ஏசா. 43:10.
என்ன கற்றுக்கொள்வோம்?
யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்கும், அவருடைய பெயர்மேல் சுமத்தப்பட்ட களங்கத்தை நீக்குவதற்கும் நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
1-2. யெகோவாவுடைய பெயரை இயேசு முக்கியமாக நினைத்தார் என்று எப்படிச் சொல்கிறோம்?
யெகோவாவுடைய பெயர்தான் இயேசுவுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமாக இருந்தது. அவரைப் போல வேறு யாருமே யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்காக உழைக்கவில்லை. போன கட்டுரையில் பார்த்த மாதிரி, யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்காகவும் யெகோவா செய்வது எல்லாமே சரிதான் என்பதை நிரூபிப்பதற்காகவும் இயேசு சாகக்கூடத் தயாராக இருந்தார். (மாற். 14:36; எபி. 10:7-9) தன்னுடைய 1,000 வருஷ ஆட்சிக் காலத்துக்குப் பிறகு, இயேசு தன்னுடைய எல்லா அதிகாரத்தையும் யெகோவாவிடம் மனதார திருப்பிக் கொடுத்துவிடுவார். (1 கொ. 15:26-28) ஏனென்றால், யெகோவாவுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும், எல்லா மகிமையும் அவருக்குத்தான் போக வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம். இயேசுவுக்கு யெகோவாவிடம் எந்தளவு நெருக்கமான பந்தம் இருந்திருந்தால், யெகோவாவின் பெயரை இந்தளவு உயிருக்கு உயிராய் நேசித்திருப்பார்! அந்தப் பெயரை மட்டுமல்ல, அந்தப் பெயருக்குச் சொந்தமான நபரையும் இயேசு உயிருக்கு உயிராக நேசித்தார்.
2 இயேசு, யெகோவாவுடைய பெயரில்தான் பூமிக்கு வந்தார். (யோவா. 5:43; 12:13) தன்னுடைய அப்பாவின் பெயரைச் சீஷர்களுக்குத் தெரியப்படுத்தினார். (யோவா. 17:6, 26) யெகோவாவுடைய பெயரில்தான் அற்புதங்களைச் செய்தார். அவர் கொடுத்த ஞானத்தில்தான் கற்றுக்கொடுத்தார். (யோவா. 10:25) சீஷர்களுக்காக ஜெபம் செய்யும்போது, “உங்கள் பெயரை முன்னிட்டு இவர்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று யெகோவாவிடம் கேட்டார். (யோவா. 17:11) இயேசுவுக்கு யெகோவாவுடைய பெயர் இந்தளவுக்கு முக்கியமாக இருந்திருக்கிறது என்றால், இயேசுவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டு, கடவுளுடைய பெயரே தெரியாமல் அல்லது அதைப் பயன்படுத்தாமல் இருக்கிற ஒருவரை கிறிஸ்தவர் என்று எப்படிச் சொல்ல முடியும்?
3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
3 இயேசுவைப் பின்பற்றுகிற கிறிஸ்தவர்களாக நாம், அவரைப் போலவே யெகோவாவுடைய பெயரை உயிராக நினைக்கிறோம். (1 பே. 2:21) ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய . . . நல்ல செய்தியை’ சொல்கிறவர்களுக்கு யெகோவா ஏன் அவருடைய பெயரைக் கொடுத்திருக்கிறார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். (மத். 24:14) அதோடு, யெகோவாவுடைய பெயர் நம் ஒவ்வொருவருக்கும் எந்தளவு முக்கியமாக இருக்க வேண்டும் என்பதையும் பார்ப்போம்.
‘தன்னுடைய பெயருக்கென்று ஒரு ஜனம்’
4. (அ) பரலோகத்துக்குப் போவதற்கு முன்பு இயேசு தன் சீஷர்களிடம் என்ன சொன்னார்? (ஆ) இயேசு சொன்னதைக் கேட்கும்போது என்ன கேள்விகள் வருகின்றன?
4 பரலோகத்துக்குத் திரும்பிப் போவதற்குக் கொஞ்சம் முன்பு, இயேசு அவருடைய சீஷர்களிடம் இப்படிச் சொன்னார்: “கடவுளுடைய சக்தி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமை பெற்று, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்.” (அப். 1:8) நல்ல செய்தி இஸ்ரவேல் தேசத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் பரவும் என்பது இதிலிருந்து தெரிகிறது. உலகம் முழுவதும் இருக்கிற மக்களுக்கு இயேசுவின் சீஷர்களாக ஆவதற்கு வாய்ப்பு கிடைக்கும். (மத். 28:19, 20) ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? “எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று இயேசு சொன்னார். அப்படியென்றால், புதிதாகச் சீஷர்களாக ஆகிறவர்கள் இயேசுவுக்கு மட்டும் சாட்சிகளாக இருப்பார்களா? அவர்கள் யெகோவாவுடைய பெயரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்காதா? அதற்கான பதிலை அப்போஸ்தலர் 15-வது அதிகாரத்தில் இருக்கிற சம்பவங்களிலிருந்து பார்க்கலாம்.
5. எல்லா மக்களுமே யெகோவாவுடைய பெயரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை அன்று இருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் எப்படிப் புரிந்துகொண்டார்கள்? (படத்தையும் பாருங்கள்.)
5 யூதராக இல்லாதவர்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு விருத்தசேதனம் செய்ய வேண்டுமா என்ற கேள்வி வந்தபோது என்ன நடந்தது என்று பாருங்கள். அதைப் பற்றி முடிவு எடுப்பதற்காக அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் கி.பி. 49-ல் எருசலேமில் கூடிவந்தார்கள். அவர்கள் பேசி முடித்தபோது இயேசுவின் சகோதரர் யாக்கோபு இப்படிச் சொன்னார்: “கடவுள் முதல் தடவையாக மற்ற தேசத்து மக்கள்மேல் தன் கவனத்தைத் திருப்பி, அவர்கள் மத்தியிலிருந்து தன்னுடைய பெயருக்கென்று ஒரு ஜனத்தைப் பிரித்தெடுத்த விதத்தைப் பற்றி சிமியோன் [பேதுரு] நமக்கு நன்றாக விவரித்துச் சொன்னார்.” யாருடைய பெயரைப் பற்றி யாக்கோபு இங்கே பேசுகிறார்? ஆமோஸ் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகளை மேற்கோள் காட்டி, தொடர்ந்து அவர் இப்படிச் சொல்கிறார்: ‘இவர்களில் மிச்சம் இருக்கிற ஆட்கள் எல்லா தேசத்து மக்களோடும் சேர்ந்து, அதாவது என் பெயரால் அழைக்கப்படுகிற மக்களோடு சேர்ந்து, யெகோவாவாகிய என்னை ஊக்கமாகத் தேடுவார்கள் . . . என்று யெகோவா சொல்கிறார்.’ (அப். 15:14-18) அப்படியென்றால், புதிதாக சீஷராக ஆகிறவர்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். அவருடைய ‘பெயரால் அழைக்கப்படுவார்கள்.’ யெகோவாவுடைய பெயர் தாங்கிய மக்களாக இருப்பார்கள்.
முதல் நூற்றாண்டில் நடந்த ஆளும் குழுவின் கூட்டத்தில், கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயருக்கென்ற மக்களாக இருப்பார்கள் என்பதை அந்த உண்மையுள்ள சகோதரர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டார்கள் (பாரா 5)
6-7. (அ) இயேசு எதற்காக பூமிக்கு வந்தார்? (ஆ) வேறு என்ன முக்கியமான காரணத்துக்காகவும் அவர் வந்தார்?
6 மனிதர்களை மீட்பதற்காக இயேசுவைத்தான் யெகோவா பயன்படுத்துகிறார். இயேசு என்ற பெயரின் அர்த்தமே “யெகோவாவே மீட்பு” என்பதுதான். இயேசு பூமிக்கு வந்து மனிதர்களுக்காகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாக கொடுத்தார். (மத். 20:28) இப்படி, மனிதர்கள் மீட்கப்படுவதற்கும் என்றென்றும் வாழ்வதற்கும் வழிசெய்தார்.—யோவா. 3:16.
7 மனிதர்களை மீட்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? போன கட்டுரையில் பார்த்த மாதிரி, ஆதாமும் ஏவாளும் யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்ததால், என்றென்றும் வாழும் வாய்ப்பை இழந்தார்கள். (ஆதி. 3:6, 24) அதனால், அவர்களுடைய சந்ததியில் வந்தவர்களை மீட்பதற்காக இயேசு பூமிக்கு வந்தார். ஆனால், அவர் பூமிக்கு வந்ததற்கு அதுமட்டுமே காரணம் அல்ல. அதைவிட ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அது என்ன? ஏதேன் தோட்டத்தில், யெகோவாவின் பெயர்மீது களங்கம் சுமத்தப்பட்டது ஞாபகம் இருக்கிறதா? (ஆதி. 3:4, 5) அப்படியென்றால், யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவது அவசியமாக இருந்தது. அந்தப் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதில் முக்கியமான நபர் இயேசுதான். ஏனென்றால், அவர் யெகோவாவின் பெயரில் வந்தார், யெகோவா தன்னிடம் எதிர்பார்த்ததை எல்லாம் சரியாகச் செய்து முடித்தார். யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படும்போது, மனிதர்களுக்கு முழுமையான விதத்தில் மீட்பு கிடைக்கும் என்பதும் இயேசுவுக்குத் தெரியும்.
இயேசுவைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொண்டு, கடவுளுடைய பெயரே தெரியாமல் அல்லது அதைப் பயன்படுத்தாமல் இருக்கிற ஒருவரை கிறிஸ்தவர் என்று எப்படிச் சொல்ல முடியும்?
8. இயேசுமேல் விசுவாசம் வைக்கிற எல்லாருமே எதை ஏற்றுக்கொள்ள வேண்டும்?
8 இயேசுமேல் விசுவாசம் வைக்கிற எல்லாருமே—யூதர்களாக இருந்தாலும் சரி, மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி—இயேசுவின் அப்பா யெகோவாவிடம் இருந்துதான் மீட்பு வருகிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். (யோவா. 17:3) இயேசு மாதிரியே அவர்களும் யெகோவாவின் பெயரில் அழைக்கப்படுவார்கள். யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், அதைப் பொறுத்துதான் அவர்களுடைய மீட்பே இருக்கிறது. (அப். 2:21, 22) யோவான் 17-வது அதிகாரத்தில் இருக்கும் இயேசுவின் ஜெபத்தில், அவர் கடைசியாக இப்படிச் சொன்னார்: “நீங்கள் என்மேல் அன்பு காட்டியது போலவே இவர்கள் மற்றவர்கள்மேல் அன்பு காட்டுவதற்காகவும், நான் இவர்களோடு ஒன்றுபட்டிருப்பதற்காகவும் இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்.” (யோவா. 17:26) அப்படியென்றால், இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் அவரைப் பற்றி மட்டுமல்ல, யெகோவாவைப் பற்றியும் தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம் என்று தெரிகிறது.
“நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருக்கிறீர்கள்”
9. யெகோவாவின் பெயரை முக்கியமாக நினைக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
9 இதுவரை பார்த்த மாதிரி, இயேசுவின் சீஷர்களாக இருக்கிற எல்லாரும் யெகோவாவின் பெயரைக் கண்டிப்பாகப் பரிசுத்தப்படுத்த வேண்டும். (மத். 6:9, 10) மற்ற எல்லாவற்றையும்விட யெகோவாவின் பெயரை ரொம்ப முக்கியமாக நினைக்க வேண்டும். அப்படி நினைப்பதை, செயலில் காட்ட வேண்டும். அப்படியென்றால், யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதிலும், அந்தப் பெயர்மீது சுமத்தப்பட்ட களங்கத்தை நீக்குவதிலும் நம்முடைய பங்கு என்ன?
10. என்ன வழக்கு விசாரணையைப் பற்றி ஏசாயா 42-44 அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது? (ஏசாயா 43:9; 44:7-9) (படத்தையும் பாருங்கள்.)
10 யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதில் நமக்கு இருக்கிற பங்கைப் பற்றி ஏசாயா 42-44 அதிகாரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் யெகோவா மக்களை ஒரு வழக்கு விசாரணைக்குக் கூப்பிடுகிற மாதிரி விவரிக்கப்பட்டிருக்கிறது. தன்னை வணங்காத மக்களிடம், அவர்களுடைய கடவுள்கள் உண்மையிலேயே இருந்தால் அதை நிரூபிக்கச் சொல்லி யெகோவா சவால்விடுகிறார். சாட்சிகளைக் கொண்டுவந்து அதை நிரூபிக்கும்படி சொல்கிறார். ஆனால், யாராலும் அதை நிரூபிக்க முடியவில்லை.—ஏசாயா 43:9; 44:7-9-ஐ வாசியுங்கள்.
பல விதங்களில், நாம் யெகோவாவுக்குச் சாட்சி சொல்கிறவர்களாக இருக்கிறோம் (பாராக்கள் 10, 11)
11. ஏசாயா 43:10-12-ல் தன்னுடைய மக்களிடம் யெகோவா என்ன சொல்கிறார்?
11 ஏசாயா 43:10-12-ஐ வாசியுங்கள். “நீங்கள் என்னுடைய சாட்சிகளாக இருக்கிறீர்கள். . . . நான்தான் கடவுள்” என்று யெகோவா அவருடைய மக்களிடம் சொல்கிறார். பிறகு, அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்: “என்னைத் தவிர வேறு கடவுள் உண்டா?” (ஏசா. 44:8) இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிற பெரிய பாக்கியம் இன்று நமக்குக் கிடைத்திருக்கிறது. நாம் எப்படிப் பதில் சொல்கிறோம்? யெகோவா மட்டும்தான் உண்மையான கடவுள் என்றும், மற்ற எல்லா பெயர்களையும்விட அவருடைய பெயர்தான் உயர்ந்தது என்றும் நம்முடைய வார்த்தைகளாலும் செயல்களாலும் பதில் சொல்கிறோம். சாத்தான் எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளைக் கொண்டு வந்தாலும், நாம் வாழ்கிற விதத்தின் மூலம் யெகோவாவை நாம் நேசிக்கிறோம், அவருக்கு உண்மையாக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறோம். இப்படி, யெகோவாவுடைய பெயரை நம்மால் பரிசுத்தப்படுத்த முடிகிறது.
12. ஏசாயா 40:3, 5-ல் சொல்லியிருக்கிற தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது?
12 ஏசாயா சொன்ன ஒரு தீர்க்கதரிசனத்தை இப்போது பார்க்கலாம். ‘ஒருவர், யெகோவாவுக்கு வழியைத் தயார்படுத்துவார்’ என்று அவர் சொன்னார். (ஏசா. 40:3) இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? அந்தத் தீர்க்கதரிசனத்தில் வருகிற ‘ஒருவர்,’ யோவான் ஸ்நானகர். யோவான் ஸ்நானகர், இயேசுவுக்கு வழியைத் தயார்படுத்தி இருந்தாலும், அவர் உண்மையிலேயே யெகோவாவுக்குத்தான் வழியைத் தயார்படுத்தினார். ஏனென்றால் இயேசு, யெகோவாவின் பெயரில் வந்தார்; அவர் சார்பாகத்தான் பேசினார். (மத். 3:3; மாற். 1:2-4; லூக். 3:3-6) அதே தீர்க்கதரிசனத்தில், “யெகோவா தன்னுடைய மகிமையைக் காட்டுவார்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. (ஏசா. 40:5) இது எப்படி நிறைவேறியது? யெகோவாவே பூமிக்கு வந்தால் எப்படி நடந்துகொள்வாரோ அதேமாதிரி யெகோவாவின் பிரதிநிதியாக வந்த இயேசுவும் நடந்துகொண்டார்.—யோவா. 12:45.
13. நாம் எப்படி இயேசு மாதிரியே நடந்துகொள்ளலாம்?
13 இயேசு மாதிரியே நாமும் யெகோவாவுக்குச் சாட்சிகளாக இருக்கிறோம். அவருடைய பெயர் நம்மேலும் இருக்கிறது. அவருடைய அருமையான செயல்களைப் பற்றி எல்லாருக்கும் சொல்கிறோம். ஆனால், யெகோவாவுக்கு ஒரு நல்ல சாட்சியாக நாம் இருக்க வேண்டும் என்றால், யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதில் இயேசுவுக்கு இருந்த பங்கைப் பற்றியும் நாம் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். (அப். 1:8) ஏனென்றால், இயேசுதான் யெகோவாவுடைய ரொம்ப முக்கியமான சாட்சி. (வெளி. 1:5) நாமும் அவரைப் பின்பற்றி யெகோவாவைப் பற்றிச் சாட்சி கொடுக்கிறோம். சரி, யெகோவாவுடைய பெயரை நாம் உயிருக்கு உயிராக நேசிக்கிறோம் என்பதை எப்படியெல்லாம் காட்டலாம்?
யெகோவாவுடைய பெயர் நமக்கு உயிர்—எப்படி?
14. சங்கீதம் 105:3-ல் சொல்லியிருப்பது போல் யெகோவாவுடைய பெயரை நாம் எப்படிப் பார்க்கிறோம்?
14 நாம் யெகோவாவுடைய பெயரை நினைத்து பெருமைப்படுகிறோம். (சங்கீதம் 105:3-ஐ வாசியுங்கள்.) யெகோவாவைப் பற்றி நாம் பெருமையாகப் பேசும்போது அவர் ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுகிறார். (எரே. 9:23, 24; 1 கொ. 1:31; 2 கொ. 10:17) ‘யெகோவாவைப் பற்றி பெருமை பேசுகிறோம்’ என்றால், அவரைக் கடவுளாக வணங்குவதை நினைத்து பெருமைப்படுவதைக் காட்டுகிறோம். யெகோவாவுடைய பெயரை ஆதரித்துப் பேசுவதை ஒரு பெரிய பாக்கியமாக நினைக்கிறோம். நாம் ஒரு யெகோவாவின் சாட்சி என்று கூடவேலை செய்கிறவர்களிடமும் கூடப்படிக்கிறவர்களிடமும் அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களிடமும் சொல்வதற்கு வெட்கப்படவே கூடாது. யெகோவாவைப் பற்றிப் பேசுவதை நாம் நிறுத்த வேண்டும் என்று சாத்தான் நினைக்கிறான். (எரே. 11:21; வெளி. 12:17) சொல்லப்போனால், சாத்தானும் பைபிள் காலங்களில் இருந்த பொய் தீர்க்கதரிசிகளும், கடவுளுடைய பெயரை மக்கள் மறந்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். (எரே. 23:26, 27) ஆனால், நாம் யெகோவாவுடைய பெயரை உயிருக்கு உயிராக நேசிப்பதால் அதை நினைத்து ‘நாளெல்லாம் சந்தோஷப்படுகிறோம்.’—சங். 5:11; 89:16.
15. யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வது என்றால் என்ன அர்த்தம்?
15 நாம் தொடர்ந்து யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்கிறோம். (யோவே. 2:32; ரோ. 10:13, 14) அதற்கு என்ன அர்த்தம்? அவருடைய பெயரைத் தெரிந்துகொண்டு அதைப் பயன்படுத்தினால் மட்டும் போதும் என்று அர்த்தமா? இல்லை. அவர் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும், அவரை நம்ப வேண்டும், உதவிக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் அவரைத் தேடிப்போக வேண்டும். இதைத்தான் நாம் தொடர்ந்து செய்துவருகிறோம். (சங். 20:7; 99:6; 116:4; 145:18) அதுமட்டுமல்ல, அவருடைய பெயரைப் பற்றியும் அவருடைய அருமையான குணங்களைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்கிறோம். அவர்கள் மனம் திருந்தி, யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள அவர்களுக்கு உதவுகிறோம்.—ஏசா. 12:4; அப். 2:21, 38.
16. சாத்தான் பொய் பேசுகிறவன் என்று நாம் எப்படி நிரூபிக்கலாம்?
16 நாம் யெகோவாவுடைய பெயருக்காகக் கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். (யாக். 5:10, 11) கஷ்டங்கள் வரும்போது, நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் சாத்தான் பொய் பேசுகிறவன் என்பதை நிரூபிக்கிறோம். யெகோவாவை வணங்குகிறவர்களைப் பற்றி யோபுவின் நாட்களில் சாத்தான் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்தான்: “ஒரு மனுஷன் தன் உயிருக்காகத் தன்னிடம் இருக்கிற எல்லாவற்றையும் கொடுப்பான்.” (யோபு 2:4, அடிக்குறிப்பு.) வாழ்க்கையில் எல்லாமே நல்லபடியாகப் போய்க்கொண்டிருக்கும்போது மட்டும்தான் மனிதர்கள் கடவுளை வணங்குவார்கள் என்றும், கஷ்டங்கள் வந்தால் கடவுளை விட்டுவிட்டுப் போய்விடுவார்கள் என்றும் சாத்தான் சொன்னான். ஆனால், அவன் சொன்னது பொய் என்பதை யோபு நிரூபித்துக் காட்டினார். சாத்தான் எவ்வளவு பிரச்சினைகளைக் கொண்டுவந்தாலும் நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருப்போம், அவருடைய முதுகில் குத்த மாட்டோம் என்பதை நிரூபிக்க நமக்கும் வாய்ப்பு இருக்கிறது. தன்னுடைய பெயரை முன்னிட்டு யெகோவா நம்மைக் காத்துக்கொள்வார் என்பதில் நூறு சதவீதம் நம்பிக்கையோடு இருக்கலாம்.—யோவா. 17:11.
17. 1 பேதுரு 2:12-ல் சொல்லியிருக்கிற மாதிரி வேறென்ன விதத்தில் நம்மால் யெகோவாவுடைய பெயருக்குப் புகழ் சேர்க்க முடியும்?
17 நாம் யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்க்கிறோம். (நீதி. 30:9; எரே. 7:8-11) யெகோவாவுடைய பெயர் தாங்கிய மக்களாக, நாம் அவருடைய பிரதிநிதிகளாக இருக்கிறோம். நம்முடைய செயல்கள் அவருக்குப் புகழ் சேர்க்கவும் வாய்ப்பு இருக்கிறது, அவரை அவமதிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. (1 பேதுரு 2:12-ஐ வாசியுங்கள்.) அதனால், நம்முடைய பேச்சிலும் நடத்தையிலும் யெகோவாவைப் புகழ்வதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். இப்படிச் செய்வதன் மூலம், குறையுள்ளவர்களாக இருந்தாலும் யெகோவாவுக்கு நிறைவான புகழை நம்மால் சேர்க்க முடியும்!
18. யெகோவாவுடைய பெயர்தான் நமக்கு ரொம்ப முக்கியம் என்பதைக் காட்டுவதற்கு இன்னொரு வழி என்ன? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)
18 நாம் நம்முடைய பெயரைவிட யெகோவாவுடைய பெயருக்குப் புகழ் சேர வேண்டும் என்று யோசிக்கிறோம். (சங். 138:2) இது ஏன் ரொம்ப முக்கியம்? யெகோவாவுடைய பெயரை நாம் நேசிப்பதால் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மைப் பற்றித் தவறாகப் பேசலாம்; நம்முடைய பெயரைக் கெடுக்கலாம்.a இயேசுவைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யெகோவாவுடைய பெயரை மகிமைப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குற்றவாளி என்ற பழியைச் சுமந்துகொண்டு, மோசமான மரணத்தைச் சந்திப்பதற்கும் அவர் தயாராக இருந்தார். அவருக்கு வந்த ‘அவமானத்தைப் பொருட்படுத்தவில்லை.’ மற்றவர்கள் அவரைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. (எபி. 12:2-4) அவருடைய கவனம் எல்லாம் யெகோவாவுடைய விருப்பத்தைச் செய்வதில் மட்டும்தான் இருந்தது.—மத். 26:39.
19. யெகோவாவுடைய பெயரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?
19 யெகோவாவுடைய பெயரை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம். யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்படுவதைக் கவுரவமாக நினைக்கிறோம். அதனால், நம்மைப் பற்றி யார் என்ன சொன்னாலும் அதைச் சகித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஏனென்றால், நம்முடைய சொந்தப் பெயரைவிட யெகோவாவுடைய பெயருக்குப் புகழ் சேருவதுதான் ரொம்ப முக்கியம் என்று நினைக்கிறோம். சாத்தான் எவ்வளவு கஷ்டங்களைக் கொண்டுவந்தாலும், யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். அப்போது, இயேசுவுக்கு யெகோவாவுடைய பெயர் எப்படி உயிருக்கு உயிராக இருந்ததோ, அதே மாதிரி நமக்கும் யெகோவாவின் பெயர் உயிருக்கு உயிராக இருக்கிறது என்பதை நிரூபிப்போம்!
பாட்டு 10 யெகோவாவைப் புகழ்வேன்
a தன்னுடைய பெயருக்கு ஒரு களங்கம் வந்தபோது கடவுளுக்கு உண்மையாக இருந்த யோபுகூட தடுமாறினார். இதை யோசியுங்கள்: தன்னுடைய பிள்ளைகளையும் எல்லா சொத்துப்பத்துகளையும் இழந்த சமயத்தில்கூட, “யோபு பாவம் செய்யவில்லை, கடவுள்மேல் எந்தக் குறையும் சொல்லவில்லை.” (யோபு 1:22; 2:10) ஆனால், அவர் ஏதோ தப்பு செய்துவிட்டார் என்று அவருடைய மூன்று நண்பர்கள் அவரைக் குற்றம் சொன்னபோது அவர் ‘ஏதேதோ பேச’ ஆரம்பித்துவிட்டார். யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதைவிட தன்னுடைய பெயருக்காக வாதாட ஆரம்பித்துவிட்டார்.—யோபு 6:3; 13:4, 5; 32:2; 34:5.