-
2 நாளாகமம் 35:20-25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 கடவுளுடைய ஆலயத்தை யோசியா ராஜா நல்ல நிலைக்குக் கொண்டுவந்த பின்பு, யூப்ரடிஸ்* ஆற்றோரத்தில் இருந்த கர்கேமிஸ் என்ற இடத்துக்கு எகிப்தின் ராஜாவான நேகோ+ போர் செய்ய வந்தான். அப்போது, யோசியா அவனை எதிர்த்துப் போர் செய்யப் போனார்.+ 21 அதனால் நேகோ தன்னுடைய தூதுவர்களை அவரிடம் அனுப்பி, “யூதா ராஜாவே, நீங்கள் ஏன் என்னோடு சண்டை போட வருகிறீர்கள்? நான் உங்களை எதிர்த்து வரவில்லை. வேறொரு தேசத்தோடு சண்டை போடத்தான் வந்தேன். அந்தத் தேசத்தை உடனடியாகத் தாக்கச் சொல்லி கடவுள் என்னை அனுப்பினார். கடவுள் எனக்குத் துணையாக இருக்கிறார். அதனால் திரும்பிப் போவதுதான் உங்களுக்கு நல்லது. இல்லையென்றால், அவர் உங்களை அழித்துவிடுவார்” என்று சொன்னான். 22 ஆனால், யோசியா அங்கிருந்து போகவில்லை. நேகோவுடன் போர் செய்வதற்காக மாறுவேஷத்தில் போனார்.+ நேகோ மூலம் கடவுள் சொன்ன செய்தியைக் காதில் வாங்காமல், அவனுடன் போர் செய்வதற்காக மெகிதோ சமவெளிக்குப் போனார்.+
23 வில்வீரர்கள் எறிந்த அம்பு யோசியா ராஜாமீது பாய்ந்தது. அப்போது அவர் தன்னுடைய ஊழியர்களிடம், “எனக்குப் பயங்கரமாகக் காயம்பட்டுவிட்டது, உடனே என்னை இங்கிருந்து கொண்டுபோங்கள்” என்று சொன்னார். 24 அதனால், அந்த ரதத்திலிருந்து வேறொரு போர் ரதத்தில் அவரை ஏற்றி எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள். ஆனால், அவர் இறந்துபோனார். அப்போது, அவருடைய முன்னோர்களின் கல்லறையில் அவரை அடக்கம் செய்தார்கள்.+ யூதா, எருசலேம் மக்கள் எல்லாரும் அவருக்காகத் துக்கம் அனுசரித்தார்கள். 25 யோசியாவுக்காக எரேமியா+ புலம்பல் பாடல் பாடினார். பாடகர்கள், பாடகிகள் எல்லாரும்+ புலம்பல் பாடல் பாடும்போது இன்றுவரை யோசியாவைப் பற்றிப் பாடுகிறார்கள். இஸ்ரவேலில் அந்தப் பாடல்கள் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. புலம்பல் பாடல்கள் எழுதப்பட்ட புத்தகத்தில் இந்தப் பாடல்கள் இருக்கின்றன.
-