-
யாத்திராகமம் 12:3-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரிடமும் இதைச் சொல்லுங்கள்: ‘இந்த மாதம் 10-ஆம் நாளில் ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்துக்காகவும் அவரவர் வீட்டுக்காகவும் ஒரு ஆட்டைத்+ தேர்ந்தெடுக்க வேண்டும். 4 முழு ஆட்டையும் சாப்பிட முடியாதளவுக்கு அந்தக் குடும்பம் சின்னதாக இருந்தால், பக்கத்து வீட்டில் இருப்பவர்களோடு சேர்ந்து அதைச் சாப்பிட வேண்டும். ஒவ்வொருவரும் எவ்வளவு சாப்பிடுவார்கள் என்பதைக் கணக்குப் போட்டுப் பார்த்து அதைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். 5 அந்த ஆடு எந்தக் குறையும் இல்லாத+ ஒருவயது கடாக் குட்டியாக இருக்க வேண்டும். அது செம்மறியாட்டுக் கடாக் குட்டியாகவோ வெள்ளாட்டுக் கடாக் குட்டியாகவோ இருக்கலாம். 6 இந்த மாதம் 14-ஆம் நாள்வரை அதை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.+ அன்றைக்குச் சாயங்காலம், இஸ்ரவேல் சபையார் எல்லாரும் தங்கள் ஆட்டை வெட்ட வேண்டும்.+ 7 அதன் இரத்தத்தைக் கொஞ்சம் எடுத்து, எந்த வீட்டில் சாப்பிடுகிறார்களோ அந்த வீட்டு வாசலின் இரண்டு நிலைக்கால்களிலும் அவற்றின் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும்.+
8 அதன் இறைச்சியை அன்றைக்கு ராத்திரி சாப்பிட வேண்டும்.+ அதை நெருப்பில் வாட்டி, புளிப்பில்லாத ரொட்டியோடும்+ கசப்பான கீரையோடும் சாப்பிட வேண்டும்.+ 9 இறைச்சியைப் பச்சையாகவோ தண்ணீரில் வேக வைத்தோ சாப்பிடக் கூடாது. அதன் தலை, கால்கள், உள்ளுறுப்புகள் எல்லாவற்றையும் நெருப்பில் வாட்டித்தான் சாப்பிட வேண்டும். 10 இறைச்சி முழுவதையும் அந்த ராத்திரிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அதில் ஏதாவது காலைவரை மீதியாக இருந்தால், தீயில் சுட்டெரிக்க வேண்டும்.+ 11 இடுப்பில் வார் கட்டிக்கொண்டும், கால்களில் செருப்பு போட்டுக்கொண்டும், கையில் தடியைப் பிடித்துக்கொண்டும் அதை அவசர அவசரமாகச் சாப்பிட வேண்டும். அது யெகோவாவின் பஸ்கா.*
-