மணல், என்ணெய், மற்றும் மதத்தின் மீது கட்டப்பட்ட ஒரு ராஜ்யம்
மேற்கு ஐரோப்பாவைப் போன்று அத்தனை பெரியதாக, 1 கோடி 20 லட்சம் மக்கள் தொகையை மாத்திரமே உடைய, ஏறக்குறைய எல்லாமே பாலைவனமாக இருக்கும் தேசம் எது? 1932-ல் ஏற்படுத்தப்பட்டு, 1938-ல் மிகப் பெரிய அளவில் எண்ணெய் கண்டுபிடித்து, உலகின் பதப்படுத்தப்படாத-எண்ணெய் உற்பத்தியில் மூன்றாவது இடத்தைப் பெற்ற ராஜ்யம் எது? குரானை அதன் அரசமைப்புச் சட்டமாக அமைத்துக்கொண்டு இஸ்லாமியர் மிக உயர்வாக மதிக்கும் இரண்டு நகரங்களையும் மசூதிகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ராஜ்யம் எது?
இந்தக் கேள்விகள் அனைத்துக்கும் பதில், ஃபகீத் பின் அப்துல் அசீஸ் அரசரால் ஆளப்படும் சவூதி அரேபியா ராஜ்யமாகும். மேற்கே செங்கடலும், தெற்கே அரபிக் கடலும், கிழக்கே அரேபிய வளைகுடாவும் சூழ்ந்திருக்க 22,40,000 சதுர கிலோமீட்டரைக் கொண்ட இது பெரும்பாலான அரேபிய தீவகற்பத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
இந்த அரேபிய தேசத்தில் எனக்கு அக்கறை எப்படி ஏற்பட்டது? நியு யார்க் நகரில் சவூதி அரேபிய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கண்காட்சிக்கான அழைப்பை நான் செய்தித்தாளில் பார்த்தேன். வித்தியாசமான இந்தக் கலாச்சாரத்தையும் வாழ்க்கை முறையையும் பற்றி தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. சவூதி அரேபியாவுக்கு என்னால் ஒருவேளை ஒருபோதும் செல்ல முடியாது போனாலும், சவூதி அரேபியா என்னிடம் வரும்படியாக ஏன் அனுமதிக்கக்கூடாது?
சவூதி அரேபியா—பழையதும் புதியதும்
கண்காட்சி இடத்தினுள் காலெடுத்து வைத்தவுடன், பொதுமக்கள் இந்த அரேபிய தேசத்தைப் பற்றி நல்லவிதமாக உணரும்படி செய்வதற்காகவே அனைத்தும் வடிவமைக்கப்பட்டிருந்ததை நான் உணர்ந்தேன். எல்லா இடங்களிலும் ஐ.மா.-வில் தங்கியிருக்கும் சவூதி பல்கலைக்கழக மாணவர்கள் தகவலறிந்த வழிகாட்டிகளாக செயலாற்றிக்கொண்டிருந்தனர். அனைவரும் பாதம் வரை தொங்கும் ஓர் அங்கியை போன்றிருக்கும் நீளமான வெள்ளை உடையான அசல் தோபியை அணிந்திருந்தனர். ஒவ்வொருவரும் மாறி மாறி வரும் சிவப்பு வெள்ளை கட்டங்கள் போட்ட குத்ரா அல்லது தலைப்பாகையையும்கூட அணிந்திருந்தனர். இது இரண்டு சுற்று கறுப்பு நூல் கயிற்றினால் பொருத்தி வைக்கப்பட்டிருந்தது. அனைவருமே நல்ல ஆங்கிலம் பேசினர். நானோ அல்லது வேறு எவரோ கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கையில் மிகவும் பண்போடு நடந்துகொண்டனர்.
சவூதி அரச குடும்பத்தின் புகைப்படங்களையும் சவூதி அரேபியாவின் பல்வேறு படக்காட்சிகளையும் கொண்டிருந்த மங்கலான வெளிச்சமுள்ள பெரிய அறையைத் தொடர்ந்து, அடுத்து பாரம்பரிய அரேபிய மற்றும் கூடார வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டிய இடத்தைச் சென்று பார்த்தேன். கறுப்பு கூடாரமொன்று, அவர்களுடைய நாடோடி வாழ்க்கையின் போரணிகளோடுகூட காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. என்றபோதிலும் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக அந்நியர்களை விருந்தோம்பும் பாரம்பரியமான கூடார வாழ்க்கைப் பாணி மறைந்துகொண்டிருக்கிறது.
சுற்றுலாவின் அடுத்த பிரிவு, சவூதி அரேபிய வாழ்க்கையை இயக்கிக் கட்டுப்படுத்தும் மத சக்தியை—முகமதிய சமயம்—நினைப்பூட்டுவதாக இருந்தது.a
மெக்கா, கஅபா மற்றும் குரான்
இஸ்லாமின் பரிசுத்த புத்தகமாகிய குரான், “அதன் [சவூதி அரேபியாவின்] அரசமைப்புச் சட்டமாக கருதப்படுகிறது, மேலும் இது ஒழுக்கநெறி மதிப்பீடுகளையும் வழிநடத்துதலையும் அளிக்கிறது,” என்று அதிகாரப்பூர்வமான ஒரு சிற்றேடு குறிப்பிடுகிறது. துண்டுப்பிரதி ஒன்று சொல்கிறது: “ராஜ்யம், அதன் சமுதாய, அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை இஸ்லாமிய போதகங்களின் வெளிச்சத்தில் உருவாக்குகிறது.” கையால் எழுதப்பட்ட குரானின் பல பிரதிகள் காட்சியில் வைக்கப்பட்டிருக்கையில், மிகப் பெரிய மசூதியையும் நடுவில் கஅபாவையும் கொண்டிருக்கும் மெக்கா (அரேபிய மொழியில், மக்கா) புனித யாத்திரை நகரமே இந்தப் பகுதியின் முக்கியப் பொருளாக இருந்தது. பெரிய அளவு மாதிரிப்படிவங்களால் அவை விளக்கமாக வருணிக்கப்பட்டிருந்தன.
கல்லால் செய்யப்பட்டு, கனமான கறுப்பு நிற துணியால் மூடப்பட்ட மாபெரும் கனசதுர வடிவ கட்டிடமான கஅபா “கடவுள் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆபிரகாமையும் இஸ்மவேலையும் கட்டும்படியாகக் கட்டளையிட்டிருந்த வணக்கத்துக்குரிய இடம்,” என்பதாக ஓர் இஸ்லாமிய பிரசுரம் விளக்குகிறது.b இவ்விதமாக (தீர்க்கதரிசியான முகமதுவால் பொ.ச. ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்ட) இஸ்லாம் யூதேய மதத்துக்கும் கிறிஸ்தவத்துக்கும் முன்னோடியாக இருந்த கோத்திர தகப்பனாகிய ஆபிரகாமோடு பிணைக்கப்பட்டிருப்பதாக உரிமைப்பாராட்டுகிறது. ஆகவே ஒரு-கடவுள் கோட்பாடு கொண்ட மூன்று முக்கிய மத அமைப்புகளில் இது ஒன்றாக இருக்கிறது.
உண்மையில் கஅபா, மெக்காவிலுள்ள மிகப் பெரிய மசூதியின் பாகமாக இருக்கும் பிரமாண்டமான திறந்த வெளி சதுக்கத்தின் நடுவில் அமையப்பெற்றிருக்கிறது. வருடாந்தர புனித யாத்திரை (ஹஜ்) சமயத்தில், பத்து லட்சத்துக்கும் மேலான முகமதியர்கள் தொழுவதற்கும் கஅபாவை ஏழு முறை சுற்றி வருவதற்கும் இங்கே கூடிவருகிறார்கள். திடகாத்திரமாக இருக்கும் ஒவ்வொரு முஸ்லீமும் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்தப் பயணத்தைச் செய்ய கடமைப்பட்டவராக உணருகிறார். கண்காட்சியில், முகமதுவின் கல்லறை, மிகப்பெரிய மதினா, (அராபிக், மதீனா) மசூதியின் மாதிரிப்படிவமும் இடம் பெற்றிருந்தது.
விசேஷமாக அக்கறையூட்டுவதாய் இருந்தது காட்சியில் வைக்கப்பட்டிருந்த கனமான கஅபாவின் அணிசெய்யப்பட்டிருந்த கதவுகளாகும். சாதாரணமாக, முஸ்லீம்கள் மாத்திரமே இவைகளை காண முடியும். ஏனென்றால் அவர்கள் மாத்திரமே மெக்கா மசூதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். 1982-ல் புதிய கதவுகள் பொருத்தப்படும் வரை, 1942-லிருந்து 1982 வரை பயன்படுத்தப்பட்ட அதே கதவுகளே அவை என்பதை ஒரு வழிகாட்டி விளக்கும்வரை அதை நம்புவது கடினமாக இருந்தது. அவை பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்டு, அரேபிய மொழியில் குரானிலிருந்து எடுக்கப்பட்ட வசனங்களைக் கொண்ட பொன் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அருகேயிருந்த சுவரில் கஅபாவை மூட பயன்படுத்தப்பட்ட கிஸ்வா அல்லது கனமான கருப்பு நிற திரைச்சீலை தொங்கிக் கொண்டிருந்தது, தையல் பூவேலையில் பொன்னில் குரானிய மேற்கோள்கள் இருந்தன.
சவூதி அரேபியாவில் நவீன வாழ்க்கை
மேலும் சுற்றுலாவில், கைவினைஞர்கள் பாய் பின்னுவதையும், மற்றவர்கள் இரும்பினை வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்களாக அடிப்பதையும் காட்டும் அசல் தெரு காட்சிகளின் மறு-படைப்புகள் இடம் பெற்றிருந்தன. மற்ற கைவினைஞர்கள் அசல் அரேபிய செருப்புகளை உண்டுபண்ண பதனிட்ட தோலை வைத்து வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். மற்றொருவர் ஓர் எளிய மரத்தாலான பறவை கூண்டுகளைச் செய்துகொண்டிருந்தார். இன்னும் ஒருவர் காலால் இயக்கப்படும் குயவனின் திகிரியில் மண்பாண்டங்களுக்கு வடிவங் கொடுத்துக்கொண்டிருந்தார்.
கடைசியாக நான் நவீன சவூதி அரேபியாவின் சாதனைகளை உயர்த்திக் காண்பித்த பகுதிக்கு வந்தேன். எண்ணெய் கண்டுபிடிப்பு சவூதியின் பொருளாதாரத்தையும் தேசத்தின் வாழ்க்கைத் தரத்தையும் மாற்றியிருப்பது தெளிவாக இருக்கிறது. அரேபிய அமெரிக்க எண்ணெய் கம்பெனி (ARAMCO) 1938-ல் மிகப் பெரிய அளவில் எண்ணெய் வண்டல் கண்டுபிடித்தது. கறுப்பு எண்ணெயின் மாதிரிப் புட்டிகள் காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. ஒரு கம்பெனி சிற்றேடு இவ்விதமாகச் சொல்கிறது: “ARAMCO இப்பொழுது 43,000-க்கும் மேற்பட்ட வேலையாட்களையும், 550 உற்பத்தி கிணறுகளையும் 20,500 கிலோமீட்டர் (12,733 மைல்கள்) எண்ணெய் குழாய்வழிகளையும் 60-க்கும் மேலான வாயு-எண்ணெயை பிரித்து வேறாக்கும் தொழிற்சாலைகளையும் கொண்டிருக்கிறது.”
இத்தகைய உறுதியான பொருளாதார அஸ்திபாரத்தைக் கொண்டதாய், சவூதி அரேபியா 25 லட்சம் மாணவர்கள் படிக்கின்ற சுமார் 15,000 பள்ளிகளுக்கும் கல்வி மையங்களுக்கும் நிதியுதவி அளிப்பதாக தகவல் சிற்றேடுகள் சொல்ல முடிவதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. பல்கலைக்கழக படிப்பு முடிய கல்வி அனைவருக்கும் இலவசமாக கிடைக்கிறது. ஏழு பல்கலைக்கழகங்கள் அங்குள்ளன.
நிச்சயமாகவே சவூதி அரேபியாவில் எண்ணெய் மட்டுமே எல்லாமாக இல்லை. மிகப் பெரிய நீர்ப்பாசன திட்டங்கள் பூர்த்தியாக்கப்பட்டு, தேசம் மீன், கோழி, கோதுமை, பேரீச்சம் பழம், காய்கறிகள், பாற்பண்ணைப் பொருட்கள் மற்றும் பண்ணைப் பொருட்களை ஏற்றுமதி செய்யுமளவுக்கு வேளாண்மை தழைத்தோங்கியிருக்கிறது.
ஒவ்வொரு நாணயத்துக்கும் இரண்டு பக்கங்கள்
நான் “சவூதி அரேபியா”வுக்கு என்னுடைய மூன்று மணி நேர சுற்றுப்பயணத்தை முடித்து, ஒப்பிடுகையில் சிறிய தேசமாக இருக்கும் இதன் சாதனைகளால் மிகவும் கவரப்பட்டேன். உலக முழுவதிலும் கிராக்கியாக இருக்கும் பெட்ரோலியம் அல்லது மற்ற விலைமதிப்புள்ள வள ஆதாரங்களால் ஒவ்வொரு தேசமும் அதேவிதமாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், காரியங்கள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன்.
விஜயம் அதிக செய்தி தெரிவிப்பதாக இருப்பதை நான் கண்ட போதிலும், மதத் துறையின் விடுபாடுகளை கவனியாமல் இருக்க முடியவில்லை. மெக்காவுக்குச் செல்லும் முகமதியரால் போற்றப்படும் ஒரு கறுப்பு நிற விண்வீழ்கல்லான, உண்மையான கஅபா கல்லைப் பற்றி எதையும் கற்றுக்கொள்ளவில்லை. இஸ்லாம் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னால், கல் “உயிரற்ற போலி வழிபாட்டுப் பொருளாக இருந்தது,” என்று ஃபிலிப் K. ஹிட்டி எழுதிய அரேபியர்களின் சரித்திரம் குறிப்பிடுகிறது. இஸ்மவேல், கஅபாவை மறுபடியும் கட்டிகொண்டிருந்த போது கறுப்புக்கல்லை காபிரியேல் தூதனிடம் பெற்றுக்கொண்டார் என்பது பாரம்பரியமாகும்.
கண்காட்சியில் மற்றொரு விடுபாடு, இஸ்லாமின் இரண்டு முக்கிய பிரிவுகளான சுன்னி மற்றும் ஷியாவைப் பற்றி எந்தக் குறிப்புகளையும் என்னால் பார்க்க முடியாததாகும். இந்தப் பிரிவு முகமதுவுக்குப் பின்வந்தவர்களின் காலத்தில் தோன்றினதாகும். சட்டப்படி உரிமையுள்ள ஆவிக்குரிய சுதந்தரவாளிகள் யார் என்ற பொருள்விளக்கத்தில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையே இதற்கு காரணமாயிருந்தது—ஷியாப் பிரிவைப் சேர்ந்த முஸ்லீம்கள் உரிமைப்பாராட்டுவது போல வம்சாவழி முகமதுவின் மரபுவழியில் வருகிறதா அல்லது பெரும்பாலான சுன்னி முஸ்லீம்கள் உரிமைப்பாராட்டுவது போல இது தேர்ந்தெடுப்புக்குரிய செயல்முறையைச் சார்ந்ததாக இருக்கிறதா? சவூதிகள், சுன்னி முஸ்லீம்களின் நான்கு பள்ளிகளில் அதிக கண்டிப்பான ஹம்பலி பள்ளியின் வஹாபி பிரிவைச் சேர்ந்தவர்கள்.
குறிப்பிடத்தக்க வகையில் கண்காட்சியில் விடுபட்டிருந்தது, அரேபிய பெண்களைப் பற்றியதாகும். பொது வாழ்க்கையில் பெண்களின் பங்கைப் பற்றிய இஸ்லாமிய சட்டங்களின் கண்டிப்பான சவூதி பொருள்விளக்கம் இதற்கு காரணமாயிருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
கண்காட்சியை விட்டு புறப்பட்டு வருகையில் ஒவ்வொரு நாணயத்துக்கும் இரண்டு பக்கங்கள் இருப்பதை உணர்த்தும் பழமொழியே எனக்கு நினைவுக்கு வந்தது. வெளியே தெருவில் சவூதி அரேபியாவில் நடைபெறும் கொடுமையையும் அநீதியையும் அந்தத் தேசத்தில் ஜனநாயக செயல்முறை இல்லாதிருப்பதை (மதச்சார்பற்ற அரசமைப்பு சட்டமோ அல்லது நாடாளுமன்றமோ இல்லை) கண்டித்தும் அரேபிய கிளர்ச்சியாளர்கள் கைப்பிரதிகளை விநியோகித்துக் கொண்டிருந்தனர். சில ஆட்களுக்கு மணலும், எண்ணெயும், மதமுமே முழு கதையாக இல்லை என்பதை இது என்னை உணரச்செய்தது. ஆனால் குறைந்தபட்சம் சவூதி அரேபியாவின் வாழ்க்கைப் பற்றியும் அதன் மக்களின் மீது இஸ்லாமின் செல்வாக்குப் பற்றியும் தெளிவான ஒரு நோக்குநிலையை நான் பெற்றுக்கொண்டிருந்தேன்.—அளிக்கப்பட்டது. (g91 1/8)
[அடிக்குறிப்புகள்]
a இஸ்லாமைப் பற்றிய விளக்கமான கலந்தாலோசிப்புக்கு, 1990-ல் காவற்கோபுரம் சங்கம் பிரசுரித்திருக்கும் கடவுளுக்காக மனிதனின் தேடுதல் என்ற ஆங்கிலப் புத்தகத்தில் அதிகாரம் 12-ஐ, “இஸ்லாம்—கீழ்ப்படிதலின் மூலமாக கடவுளிடம் செல்லும் வழி,” பார்க்கவும்.
b இந்தச் சம்பவத்தைப் பற்றியோ அல்லது ஆபிரகாம் பூர்வ மெக்காவில் இருந்தது பற்றியோ குறிப்பு பைபிளில் இல்லை.—ஆதியாகமம் 12:8-13:18.
[பக்கம் 28-ன் வரைப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஈராக்
ஈரான்
சூடான்
மெக்கா
சவூதி அரேபியா
செங்கடல்
அரபிக் கடல்
[பக்கம் 29-ன் படங்கள்]
(இடது பக்கமிருந்து) கஅபாவின் கதவுகள், அரேபிய கைவினைஞர், அரேபிய எழுத்துக்களின் பூ வேலை