மனிதஇனம் ஒரு புதிய உலகத்திற்காக ஏங்குகிறது
ஒரு புதிய உலகத்திற்கான ஏக்கம் இன்று இருப்பதைவிட அதிகம் என்றுமிருந்ததில்லை. யுத்தங்கள், கலகங்கள், பஞ்சங்கள், கொள்ளைநோய்கள், குற்றச்செயல்கள், தூய்மைக்கேடு போன்றவற்றால் நிறைந்திருந்த கடந்த எண்பதாண்டுகள் ஒரு கொடுங்கனவாயிருந்திருக்கின்றன. மனிதகுலம் சமாதானம் நிறைந்த ஒரு புதிய உலகத்திற்கு விழித்தெழ விரும்புகிறது. இந்த விருப்பத்திற்குப் பிரதிபலிக்கும் வண்ணம், உலகத் தலைவர்கள் அப்படிப்பட்ட ஓர் உலகத்தைப் படைப்பதுபற்றி பேசத் தொடங்கியிருக்கின்றனர்.
ஒரு புதிய உலகம் அண்மையிலுள்ளதென பிரமுகர்களால் அறிவிக்கப்படும் பேச்சுகளைக் கேட்டோ படித்தோ இருப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஐ. மா.வின் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் செப்டம்பர் 1991-ல் ஒரு பேச்சில் சொன்னார்: “இன்றிரவு, குடியரசு நாடகம் உலகமுழுவதிலும் அரங்கேற்றப்படுவதை நான் காண்கிறதனால், அநேகமாக—அநேகமாக அந்தப் புதிய உலகத்திற்கு நாம் இதற்குமுன் எப்பொழுதிருந்ததைப் பார்க்கிலும் அண்மையிலிருக்கிறோம்.”
ஒரு புதிய உலகம் அண்மையிலுள்ளது என்பதற்குச் சான்றாக, கிழக்குக் கூட்டணி மற்றும் மேற்குக் கூட்டணி நாடுகளுக்கிடையேயான பனிப்போர் நிறுத்தத்தை உலகத் தலைவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆயுதக்குறைப்புத் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதனால், உண்மையில், இந்த உலகம் சிறிது அச்சம் தணிந்த உணர்வைப் பெறுகிறது. அணுஆயுதங்கள் குறைக்கப்படுவது சமாதானமும் பாதுகாப்பும் நிறைந்த ஒரு புதிய உலகத்திற்கான பல ஆட்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம், ஐ.மா.வின் முன்னாள் ஜனாதிபதி ஜான் F. கென்னடியின் நிர்வாகத்தின்போது, அரசின் சார் செயலாளர் ஜார்ஜ் மகீ இவ்வாறு அறிவித்தார்: “புதிய பாதுகாப்புக் கொள்கைகளின் அடிப்படையிலான ஒரு புதிய உலக ஒழுங்குமுறை ஒரு திட்ட வரைபடத்தைத் தயார்செய்ய நமக்கு இப்போது வாய்ப்பு—உண்மையில், அவசியம்—இருக்கிறது.” அவர் மேலும் கூறினார்: “ஒரு வெற்றிகரமான புதிய உலக ஒழுங்குமுறைக்கான உறுதியான நம்பிக்கை, சர்வதேச சமுதாயத்தின் கட்டுகளை உறுதிப்படுத்துவதில்தானே இருக்கிறது என நம்புகிறேன்.”
பிரான்ஸ் 1992-ன் கடைசி பகுதியினூடே அணுசக்தி சோதனைகளை நிறுத்தியது, “மற்ற அணுசக்தி வல்லரசுகளும் அவ்வாறே செய்வதற்குத் தூண்டுவிப்பதற்கான ஒரு முயற்சி” என்று மகீ கூறினார். “அணுஆயுதங்களைக் குறைக்கவும், அணுசக்திகளைப் போரில் உபயோகிப்பதற்காக தயார்நிலையில் நிற்கும் ஆபத்திலிருந்து பின்வாங்குவதற்குமான ரஷ்யாவின் முயற்சியை” அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 1991, ஜூலை மாதம் லண்டனில் நடந்த உலகத் தலைவர்களின் கூட்டத்தில், அவர்களில் ஏழுபேர், பெர்சிய வளைகுடாப் போர் கூட்டமைப்பு “‘சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைத் திரும்ப நிலைநாட்டவும், சண்டை சச்சரவுகளைத் தீர்த்துக்கொள்ளவும்’ சேர்ந்து செயல்படுவதற்கான சர்வதேச சமுதாயத்தின் திறமையை உறுதிசெய்துள்ளது” என்று அறிக்கையிட்டனர்.
எப்படிப்பட்ட புதிய உலகம்?
இவையெல்லாம் உற்சாகமூட்டுவதாகத் தோன்றுகின்றன. ஆனால் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள், எவ்வகையான புதிய உலகைப் படைப்பதற்குத் தேசங்கள் எதிர்பார்க்கின்றன? அது ஆயுதங்களும் யுத்தங்களும் இல்லாத ஓர் உலகமா?
மகீ பதிலளிக்கிறார்: “எதிர்காலத்தில் ஏதேனும் ஒருங்கிணைந்த இராணுவ முயற்சி ஏற்படுமானால் தன்னுடைய பங்கைச் செய்யவோ அல்லது யுத்தம் தவிர்க்க முடியாததானால் வெற்றி பெறவோ அமெரிக்கா போதுமான ஆயுதபலத்தைத் தன்வசம் வைத்திருக்க வேண்டும்.” எனவே உலகத் தலைவர்கள் முழு ஆயுதக்குறைப்பை ஆதரிப்பதில்லை. மகீ சொன்னதுபோல, “யுத்தம் தவிர்க்கமுடியாததானால்” இராணுவ முயற்சியை அவர்கள் கைவிடுவதுமில்லை. அரசாங்கங்கள் வெறுமனே யுத்தமில்லாத ஒரு புதிய உலகத்தை வாக்களிக்க முடியாது. எதார்த்தத்தில், அவர்கள் அவ்வகையான ஓர் உலகத்தைப் படைக்க முடியாதென அறிந்திருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, ஏற்கெனவே என்ன சம்பவித்திருக்கிறதென்று பாருங்கள். மே 17, 1992, நியூ யார்க் டைம்ஸில் “புதிய உலக ஒழுங்குமுறை” என்ற தலைப்பின்கீழ் பத்திரிகை நிருபர் அந்தோணி லூயிஸ் எழுதினார்: “[சாரயெவா, பாஸ்னியா, ஹெர்ஸகாவினா,] மீது வெடிகுண்டுகள் விழுவதையும் பொதுமக்கள் கலக்கமடைந்து பயந்தோடுவதையும் தொலைக்காட்சி படங்களில் காணும்போது, ராட்டர்டாமின்மீது நாசிகளின் வெடிகுண்டுகள் விழுந்ததிலிருந்து நாகரிகம் முன்னேறிவிடவில்லையென்று நான் நினைத்தேன். என்னமோ புதிய உலக ஒழுங்குமுறை.”
எனினும், ஒரு திருப்திப்படுத்தும் புதிய உலகத்தைப் படைக்கவேண்டுமானால், யுத்தங்களை ஒழிப்பதோடுகூட, தீர்த்துவைக்கப்படவேண்டிய பிரச்னைகள் அநேகமிருக்கின்றன. நம்முடைய காற்று, நிலம், கடல்கள் ஆகியவற்றை மெதுவாக அழித்துக்கொண்டிருக்கும் அதிகரித்துவரும் தூய்மைக்கேடு; குற்றச் செயல்களை நடத்தும் பலம் மிகுந்த கூட்டங்கள்; லட்சக்கணக்கானோரின் உடைமைகளையும் ஆரோக்கியத்தையும் அழித்துப்போடுகிற சட்டவிரோதமான போதைப்பொருள் வணிக ஸ்தாபனங்கள்; கனத்தமழைக் காடுகளைக் கட்டுப்பாடின்றி அழிப்பதனால் மண்ணரிப்பை ஏற்படுத்தி இறுதியில் பயிர்களை நாசப்படுத்துகிற பெருவெள்ளத்திற்கு வழிநடத்துவது போன்றவற்றைப்பற்றி எண்ணிப்பாருங்கள்.
மேலும், இருதயநோய், புற்றுநோய், எய்ட்ஸ், வெள்ளணுப்புற்று, நீரிழிவுநோய் போன்ற நோய்கள் உட்பட பயங்கர சரீர நோய்கள் இன்னும் குணமாக்கப்பட காத்திருக்கின்றன. வறுமை, வீடில்லாமை, உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, ஊட்டச்சத்துக்குறைவு, எழுத்தறிவின்மை, ஓசோன் படலத்தின் தேய்மானம் போன்ற பிரச்னைகளைப்பற்றி என்ன? உண்மையில் பட்டியல் தொடர்கிறது. இந்தச் சிக்கலான பிரச்னைகள் வெடிப்பதற்குத் தயாராக இருக்கும் ஒரு குறித்தநேர வெடிகுண்டு குவியலைப்போலிருக்கின்றன. அவை வெடித்து ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படும் நாசத்தில் விளைவடைந்து மனிதனின் அழிவிற்கு வழிநடத்துமுன் மனிதன் அதை இப்பொழுதே அணைக்கவேண்டும். இதைச் செய்வதற்கான புதிய உலகத்தைத் தகுந்த நேரத்தில் அவன் உருவாக்க முடியுமா?
பூமியின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு நிறுவனங்களும் மாநாடுகளும் பல வருடங்களாக கடினமாக முயற்சி செய்துகொண்டிருக்கின்றன. இருப்பினும் பிரச்னைகள் அதிகரித்தது மட்டுமல்லாமல், அதிக சிக்கலான புதிய பிரச்னைகள் உருவாகியிருக்கின்றன. மனிதன் இவற்றைத் தீர்க்கமுடியாதிருப்பதுதானே, அமைதியும் பாதுகாப்பும் நிறைந்த ஒரு புதிய உலகிற்கான மனிதஇனத்தின் ஏக்கம் வீணானதாயிருக்கிறது என்று அர்த்தப்படுத்துகிறதா? உறுதியோடு இல்லை என்பதாக நாம் பதிலளிக்கலாம்! ஏன் இதைச் சொல்கிறோம் என்று தயவுசெய்து கவனியுங்கள். (g92 10/22)