யெகோவாவின் சாட்சிகளும் மருத்துவத் துறையினரும் ஒத்துழைக்கின்றனர்
இரத்தமேற்றுதல் இரத்தத்தின் ஒரு வேதப்பூர்வமற்ற உபயோகமாக இருந்தது என்பதை யெகோவாவின் சாட்சிகள் 1945-ல் பகுத்துணர்ந்தனர். மோசேயின் நியாயப்பிரமாணத்தில் அடங்கியிருந்த இந்தத் தடை, கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களுக்குள்ளும் கொண்டு செல்லப்பட்டது. அப்போஸ்தலர் 15:28, 29 சொல்லுகிறது: “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும்.” (லேவியராகமம் 17:10-12-ஐப் பார்க்கவும்.) இரத்தமேற்பதற்கான சாட்சிகளின் மறுப்பு மருத்துவத் துறையினர் சிலரோடு அநேக முரண்பாடுகளுக்கு வழிநடத்திற்று.
மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழுக்கள்
இரத்தம் பெறுவதற்கான அவர்களுடைய மறுத்தலில் சாட்சிகளை ஆதரிக்கவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பாகத்தில் உள்ள தவறான புரிந்துகொள்ளுதலை அகற்றவும், மருத்துவ நிலையங்களுக்கும் சாட்சி நோயாளிகளுக்கும் இடையே அதிக ஒத்துழைப்பு ஆவி ஒன்றை உருவாக்கவும், யெகோவாவின் சாட்சிகளுடைய நிர்வாகக்குழுவால் மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த ஆலோசனைக்குழுக்கள் மருத்துவர்களோடும் மருத்துவமனைகளோடும் புரிந்துகொள்ளுதலோடு தொடர்புகொள்ள பயிற்றுவிக்கப்பட்ட முதிர்ச்சியடைந்த சாட்சிகளால் ஆனவை. இவை முரண்பாடுகளை அகற்றி அதிக ஒத்துழைப்பு ஆவி ஒன்றை நிலவச்செய்திருக்கின்றன. 1979-ல் இந்தக் குழுக்களின் எண்ணிக்கை வெகு குறைவாக இருந்தன. ஆனால் இன்றோ அவற்றின் எண்ணிக்கை 65 நாடுகளில் 850-ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களுடைய உதவிநிறைந்த சேவைகள் சுமார் 35 லட்சம் யெகோவாவின் சாட்சிகளுக்கு இப்பொழுது கிடைக்கின்றன என்பதை அது அர்த்தப்படுத்துகிறது.
யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் 4,500-க்கும் அதிகமான மூப்பர்கள், இரத்தமேற்றுதலையே நாடாமல் செய்யப்படமுடியும் எல்லா காரியங்களையும் மருத்துவர்கள் மருத்துவ பிரசுரங்களிலிருந்தே பார்க்கும்படி அவர்களுக்கு உதவ அவர்களோடு பேசுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கின்றனர். விசேஷித்த தேவையுள்ள ஒருசில நோயாளிகளின் விஷயங்களில், பொருத்தமான கட்டுரைகள் நேரடியாக அந்த மருத்துவமனைக்கு ஃபாக்ஸ் மூலம் அனுப்பப்படுகின்றன. இது சாட்சிகளுக்கு இரத்தம் பயன்படுத்தாது சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு உதவுகிறது. அல்லது ஒத்துழைக்கும் மற்ற மருத்துவர்களோடு, இரத்தமில்லா சிகிச்சை அல்லது அறுவைக்கான வழிமுறைகளைக் கண்டுபிடிக்க, ஆலோசனை நடத்த இக்குழுக்கள் ஏற்பாடு செய்கின்றன.
உதாரணமாக, இரத்த இழப்பினால் கடுமையான இரத்தசோகையில் விளைவடைந்து, சிகப்பணு எண்ணிக்கையை அதிகரிக்க இரத்தமேற்றுதல் அவசியம் என்று மருத்துவர்கள் அநேக நோயாளிகளுக்கு சொன்னார்கள். இத்தகைய சந்தர்ப்பங்களில் அதைச் செய்வதற்கான மீண்டிணையும் எரித்ரோபொய்டினின் (EPO) திறமையைக் காட்டும் கட்டுரைகளை, மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழு அங்கத்தினர்கள், மருத்துவ பிரசுரங்களிலிருந்து பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். இந்தச் செயற்கை ஹார்மோன் நம்முடைய சிறுநீரகத்தில் காணப்படும் இயற்கை எரித்ரோபொய்டினைப் போல செயல்புரிந்து, அவ்வப்போது உண்டாக்கப்பட்ட, புதிய சிகப்பணுக்களை இரத்த ஓட்டத்திற்குள் அனுப்பும்படி எலும்பு மஜ்ஜையைத் தூண்டிவிடுகிறது.
தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானளவுக்கு EPO வேகமாக செயல்புரியாது என்று சில மருத்துவர்கள் உணர்ந்திருக்கின்றனர். ஆனால் அது எவ்வளவு விரைவில் பலன்களைக் கொண்டுவருகிறது என யெகோவாவின் சாட்சி நோயாளிகளை உட்படுத்திய அநேக சிகிச்சைகள் நிரூபித்திருக்கின்றன. ஒரு நோயாளிக்கு, EPO கொடுக்கப்பட்ட அதே நாளில், புதிய சிகப்பணுக்களின் எண்ணிக்கை ஏற்கெனவே சாதாரண அளவைவிட நான்கு மடங்கு அதிகரித்திருந்தது! மற்றொரு நாளில் நோயாளியின் உடல்நிலை நிலையடைந்து, நான்காம் நாள் சிகப்பணு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிற்று. இன்னும் ஒருசில நாட்களில், அது விரைவில் அதிகரித்துக்கொண்டிருந்தது. நோயாளி உயிர்ப்பிழைத்தார். இவ்வகையில் மருத்துவர்களும் நோயாளியும் இந்த மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழுக்களின் நடவடிக்கைகளால் பயனடைந்தனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவர்கள் அபூர்வமான ஒரு வெப்பமண்டல நோய்க்கு சிகிச்சையளிக்கையில், ஒரு சாட்சியின் உயிரை இரத்தமின்றி காப்பாற்ற முடியவில்லை என்று சொன்னார்கள். ஆகவே அவர்கள் இரத்தமில்லா மருத்துவ சிகிச்சையின்பேரில் தகவல்களைக் கண்டுபிடிக்க தங்களால் இயன்ற எந்த உதவியையும் நல்கும்படி உள்ளூர் மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழுவைக் கேட்டுக்கொண்டனர். யெகோவாவின் சாட்சிகளுடைய ஆஸ்திரேலிய கிளை அலுவலகத்திற்கு அந்தத் தேவையைப்பற்றி தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நியூ யார்க்கின் புரூக்லினில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேசிய தலைமையக அலுவலகங்களில் உள்ள மருத்துவமனை தகவல் சேவைகள் துறையோடு தொடர்பு கொண்டனர். அது மருத்துவ தகவல் தொகுப்பை (data base) ஆராய்ந்தது. உதவக்கூடிய கட்டுரைகள் ஆஸ்திரேலியாவுக்கு ஃபாக்ஸ் மூலம் அனுப்பப்பட்டன. மருத்துவரின் அலுவலகத்திலிருந்து போனபிறகு பதினொரே மணி நேரத்தில் ஆஸ்திரேலிய மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழு அங்கத்தினர் தேவையான கட்டுரைகளோடு மருத்துவரின் அலுவலகத்திற்குத் திரும்பி வந்தார். இவை பயனளிக்கக்கூடியவையாக நிரூபித்தன; நோயாளி சுகமடைந்தார். ஃபாக்ஸ் செய்யப்பட்ட மருத்துவக் கட்டுரை நியூ யார்க்கிலிருந்து நேப்பாள் போன்ற தொலைதூரத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
தரமான ஆராய்ச்சியும் உதவியும்
மருத்துவ பிரசுரங்களில் யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் ஆராய்ச்சியின் தரம் முழுநிறைவானதும் மிகப் புதிய தகவல்களின் பேரிலானதுமாக இருக்கிறது. அ.ஐ.மா.-வின் ஆரிகானில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவைமருத்துவ சேவையின் கூட்டு இயக்குநராக (codirector) இருக்கும் ஒரு பதிவுபெற்ற நர்ஸ், அறுவைசிகிச்சை அறை மேலாளர்களுக்கான மருத்துவ பிரசுரத்தில் உள்ள ஒரு கட்டுரையில் இவ்வாறு சொன்னார்: “யெகோவாவின் சாட்சி[கள்] . . . எங்களைவிட மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்[களாக இருக்கின்றனர்]. இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்களின்பேரில் மிகச் சிறந்த அறிவுடையவர்கள். அதைச்சார்ந்த பிரசுரங்களைப்பற்றி நாங்கள் கேள்விப்படுமுன்பே அவர்கள் அடிக்கடி அவற்றை எங்களுக்குத் தருகின்றனர்.”—OR மேனேஜர், ஜனவரி 1993, பக்கம் 12.
ஒத்தவகை இரத்தத்தைப் பயன்படுத்தாமலே சிகிச்சையளிக்கும் சில பிரசித்திபெற்ற மருத்துவர்களும் மருத்துவ நிலையங்களும், அவர்களின் அணுகுமுறைகள் மற்றும் செயல்முறைகள் பேரிலான ஆலோசனைகளில் கலந்துகொண்டிருக்கின்றனர். இந்தத் தேவைக்கு அவர்கள் தாராளமாக பிரதிபலித்தது, இரத்தசோகைக்காக வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகள் விஷயத்திலும் பல்வேறு வகைகள் அறுவை சிகிச்சைகளிலும் காணப்பட்டதுபோல, உயிர்களைக் காப்பாற்றுவதில் உதவி செய்திருக்கிறது. இந்த மருத்துவ ஆலோசனைகள் பெரும்பாலும் சர்வதேசிய தொலைபேசி தொடர்பின் மூலம் நடத்தப்பட்டவையாகும்.
ஒரு நோயாளியை ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொன்றுக்கும், நாட்டின் ஒரு பாகத்திலிருந்து மற்றொன்றுக்கும், ஒரு நாட்டிலிருந்து மற்றொன்றுக்கும்கூட மாற்றப்படுவதற்கான ஏற்பாடு இருந்திருக்கிறது. இது விசுவாசத்திற்கு சவால்விடும் ஒரு மருத்துவ சூழ்நிலையை எதிர்ப்படும்போது தேவையில் உள்ளவர்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் எவ்வளவு தூரம் போயிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுக் காட்டுகிறது. சில உதாரணங்கள்: வயதுவந்த ஒரு நோயாளி சூரினாமிலிருந்து பியூர்டோ ரிகோவிற்கு விமானத்தில் எடுத்துச் செல்லப்பட்டார்; மற்றொருவர் சமோவாவிலிருந்து ஹவாய்க்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார்; குழந்தை ஒன்று ஆஸ்திரியாவிலிருந்து அ.ஐ.மா.-வின் ஃப்ளாரிடாவிற்குக் கொண்டு செல்லப்பட்டது.
அதிக மருத்துவர்கள் ஒத்துழைக்கின்றனர்
யெகோவாவின் சாட்சிகளோடு இந்த விஷயத்தில் ஒத்துழைக்க மனமுள்ள மருத்துவர்களின் அதிகரித்துவரும் எண்ணிக்கையிலிருந்தும் அவர்களுக்கான நிலைமையில் முன்னேற்றத்தை காணமுடியும். அந்த எண்ணிக்கை ஐந்து வருடங்களுக்கு முன் சுமார் 5,000-த்தில் இருந்து இன்று 65 நாடுகளில் 30,000-க்கும் மேல் உயர்ந்துள்ளது. திறமையுள்ள மருத்துவர்களின் அந்த எண்ணிக்கை மற்றொரு சாதகமான வளர்ச்சியையும் சாத்தியமாக்கியிருக்கிறது—இரத்தமற்ற மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை மையங்கள் பல்வேறு நாடுகளிலும் 30-க்கும் அதிகம் ஏற்படுத்தப்பட்டன.
இதன் காரணமாக, இந்நாட்களில், வட அமெரிக்காவிலாவது, வயதுவந்தவருக்கு இரத்தமேற்றுதலை வற்புறுத்துவதற்கான முயற்சிகளைப்பற்றி ஒருவர் அபூர்வமாகவே கேள்விப்படுகிறார். மற்றநேக நாடுகளும் அதே நிலைமைக்கு முன்னேறிக்கொண்டிருக்கின்றன. இப்பொழுது பெரும்பாலான பிரச்னைகள் புதிதாகப் பிறந்த குழந்தைகளைப்பற்றி, முக்கியமாக பருவமுதிரா பிறப்புகளைப்பற்றி (premature births) ஆகும். பருவமுதிராது பிறந்த இந்தக் குழந்தைகள் அநேக பிரச்னைகளோடு பிறக்கின்றன. இப்பிரச்னைகள், முழு வளர்ச்சி அடையாததால் இயல்பாக செயல்படாத நுரையீரல்கள், சிறுநீரகங்கள் ஆகிய உறுப்புக்களோடு தொடர்புள்ளவையாய் இருக்கின்றன. ஆனால் மருத்துவர்கள் இரத்தமேற்றுதல்கள் இல்லாமலேயே இந்த நிலைகளுக்குச் சிகிச்சையளிக்க வழிமுறைகளைக் காண்கின்றனர். உதாரணமாக, மூச்சுத்திணறல் நோய் அறிகுறிகளிலிருந்து விடுதலை பெற ஒரு செயற்கை சர்ஃபக்டண்ட் கிடைக்கிறது. பருவமுதிராது பிறந்த குழந்தைகளின் இரத்தசோகையைக் கையாளுவதற்கு EPO-வின் உபயோகம் பரவலாக ஏற்கப்பட்டு வருகிறது.
மருத்துவப் பணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உதவி
யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளுக்கு இரத்தமேற்றுதல்கள் இன்றி சிகிச்சையளிப்பதில் பிள்ளை மருத்துவர்களுக்கும் (pediatricians) சிசு மருத்துவர்களுக்கும் (neonatologists) உதவ, மருத்துவமனை தகவல் சேவைகள் துறை மூன்று பொருளடக்க அகரவரிசை அட்டவணை அடங்கிய (triple-indexed) ஒரு புத்தகத்தை தயாரித்திருக்கிறது. மருத்துவ பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட 55 கட்டுரைகளை உள்ளடக்கிய இது புதிதாகப் பிறந்த குழந்தைகளின் அநேகப் பிரச்னைகளுக்கு இரத்தம் இன்றி என்ன செய்யப்படலாம் என்பதை விளக்கிக் காட்டுகிறது.
கிடைக்கக்கூடிய இரத்தமில்லா மாற்று மருந்துகளைப்பற்றிய தகவல்கள் நீதிபதிகள், சமூக சேவகர்கள், குழந்தை மருத்துவமனைகள், சிசு மருத்துவர்கள், பிள்ளை மருத்துவர்கள் ஆகியோரைச் சென்றெட்ட, யெகோவாவின் சாட்சிகள் குறிப்பாக இந்த மருத்துவப் பணியாளர்களுக்காகவும் அதிகாரிகளுக்காகவும் 260-பக்க புத்தகம் ஒன்றைத் தயாரித்துள்ளனர். இது யெகோவாவின் சாட்சிகளுக்கான குடும்பப் பராமரிப்பும் மருத்துவ சிகிச்சையும் (Family Care and Medical Management for Jehovah’s Witnesses) என்றழைக்கப்படுகிறது.a நவீன மாற்றங்களை அதில் கூட்டுவதற்கு வசதியாக அது தனித்தனித் தாள்கள் அடங்கிய ஒரு கையேடாக இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் உள்ள குடும்ப வாழ்க்கையைப்பற்றி சில தவறான புரிந்துகொள்ளுதல்கள் இருந்து வந்திருக்கின்றன. ஆகவே இது பைபிள் போதனையால் கட்டியமைக்கப்பட்ட வாழ்க்கைப்பாணியால் உருவாக்கப்பட்ட தீர்மானமான நன்மையளிக்கிற, அக்கறைகாட்டும் சூழ்நிலையில், பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளிடம் வைத்திருக்கும் அன்பைத் தெளிவாக்குகிறது.
அந்தப் பிரசுரம் எவ்வாறு வரவேற்கப்படுகிறது? அதன் பொருளடக்கத்தை ஆராய்ந்த பிறகு, அ.ஐ.மா.-வின் பென்ஸில்வேனியாவில் உள்ள ஒரு குழந்தைகள் மருத்துவமனையின் உதவித்தலைவர், தன்னுடைய பணியாளர்கள் அதை உட்கிரகித்துப் பயன்படுத்தவேண்டும் என்று தான் விரும்புவதாக சொன்னார். அவர் மேலும் கூறினார்: “அது எல்லாருக்கும் சுற்றியனுப்பப்பட்டு எல்லாரும் படித்தனர் என்ற அடையாளத்துடன் திரும்பி வரவில்லையானால் ஏன் என்று நான் கேட்க விரும்புவேன்!” இரத்தத்தை உபயோகிக்குமுன் மருத்துவர்கள் இரத்தமில்லா மாற்று மருந்துகளை எல்லாம் முயற்சி செய்வதை அவசியப்படுத்தும்படி ஏற்கெனவே சில நீதிபதிகள் தங்கள் நீதிமன்ற ஆணைகளில் திருத்தம் ஏற்படுத்தியிருக்கின்றனர். குழந்தைகள் இரத்தமின்றி சிகிச்சையளிக்கப்பட்டு சுகம்பெற்று வீடு திரும்பியிருக்கின்றனர்.
அ.ஐ.மா.-வில் ஒஹாயோவின் குழந்தைகள் விவகார நீதிபதி ஒருவரின் பிரதிபலிப்பு எடுத்துக்காட்டாக இருந்தது. அவர் தன் உடன் வேலையாட்களுக்காக கூடுதலாக ஏழு பிரதிகள் தருவிக்குமளவுக்கு குடும்பப் பராமரிப்பு (Family Care) புத்தகத்தால் கவர்ந்திழுக்கப்பட்டார். இப்போது மருத்துவர்களின் அக்கறைகளை பெற்றோரின் உரிமைகளோடு சமநிலைப்படுத்துவதற்கு தன்னுடைய நீதிமன்ற ஆணைகளில் திருத்தம் ஏற்படுத்துகிறார். இதை அவர் இரு வழிகளில் செய்து முடிக்கிறார். அவர் தன்னுடைய ஆணையில் குறிப்பிடுவதாவது (1) இரத்தத்தை உபயோகிக்குமுன் மருத்துவர்கள் இரத்தமில்லா மாற்று சிகிச்சைகள் எல்லாவற்றையும் முதலில் முயற்சி செய்யவேண்டும்; மற்றும் (2) தாங்கள் பயன்படுத்தும் இரத்தம் எய்ட்ஸ் மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நோய்க் கிருமிகளுக்காக பரிசோதனை செய்யப்பட்டது எனவும் அதில் இக்கிருமிகள் இல்லை எனவும் மருத்துவர்கள் நோயாளிக்கு உறுதியளிக்கவும் வேண்டும். அவர் திருத்தம் ஏற்படுத்த தொடங்கியதிலிருந்து பிறப்பித்த மூன்று ஆணைகளிலும், எல்லா மூன்று குழந்தைகளுமே இரத்தமேற்றுதல்கள் இல்லாமல் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டனர்.
கடந்த வருடம் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் நடந்த கல்வி அறிஞர்களின் ஒரு கூட்டத்தில் பாஸ்டன் கல்லூரி சட்டக் கல்லூரியில் சட்டப் பேராசிரியராக இருக்கும் டாக்டர் சார்ல்ஸ் H. பாரோன் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை அளித்தார். “இரத்தம், பாவம், மற்றும் மரணம்: யெகோவாவின் சாட்சிகளும் அமெரிக்க பிணியாளர் உரிமைகள் இயக்கமும்,” என்பதே அவருடைய தலைப்புப்பொருளாக இருந்தது. அந்தக் கட்டுரையில்தானே, சாட்சிகளுடைய மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழுக்களின் வேலையைப்பற்றி கீழ்க்கண்ட பாரா இவ்வாறு கூறியது:
“அவர்கள் அமெரிக்க மருத்துவத் துறையையே, கூடுதலான சான்றுகளின் ஆதாரத்தால் அதன் நம்பிக்கைகள் சிலவற்றை மறுபரிசீலனை செய்யும்படி வைத்திருக்கின்றனர். இந்தச் செய்கையால், அமெரிக்க சமுதாயம் முழுவதுமே பயனடைந்துள்ளது. சாட்சிகளுடைய மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழுக்களின் வேலையின் காரணமாக யெகோவாவின் சாட்சிகள் மட்டுமல்ல, ஆனால் நோயாளிகள் பொதுவாகவே தேவையில்லாமல் இரத்தமேற்றுதல்கள் கொடுக்கப்பட குறைந்த வாய்ப்புக்களே உள்ளன. அனைத்து வகை நோயாளிகளையும் உள்ளடக்கும் பிணியாளர் உரிமைகள் இயக்கத்தின் ஒரு பாகமாக சாட்சிகளால் செய்யப்பட்ட வேலையின் காரணத்தால், நோயாளிகள் பொதுவாகவே உடல்நிலை பராமரிப்பு தீர்மானங்கள் முழுவதிலும் அதிகளவு தன்னுரிமையை அனுபவிக்கின்றனர். பொதுவான சுதந்திரத்தின், குறிப்பாக மத சுதந்திரத்தின் காரணங்கள் அவர்களுடைய மத நம்பிக்கைகளுக்கு முரணான நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவதற்கான முயற்சிகளை சாட்சிகள் அர்ப்பணத்தோடு எதிர்த்ததால் முன்னேற்றுவிக்கப்பட்டு இருக்கின்றன.”
மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழுக்களால் செய்யப்படும் இந்த எல்லா காரியமும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை நேரடியாகப் பிரசங்கிப்பதாக இல்லாமல் இருக்கலாம். இருப்பினும் அது நிச்சயமாக நம்முடைய வணக்கத்திற்கு விடப்படும் ஒரு நேரடி சவாலுக்குப் பதில் அளிப்பதாக இருக்கிறது. இது நம்முடைய பரிசுத்த சேவையின் ‘அவசியமான இவைகளில்’ ஒன்று என்று முதல் நூற்றாண்டு நிர்வாகக்குழு அழைத்த ஒன்றாக இருக்கிறது. (அப்போஸ்தலர் 15:28, 29) எனினும், ஆர்வத்தைத் தூண்டும் வகையில், தொடர்புகொள்வதற்கான நம்முடைய தைரியமான ஆனாலும் மதிப்புடன்கூடிய கடுமுயற்சி, ராஜ்ய செய்திக்குப் பிரதிபலிக்கும்படி சில மருத்துவத் துறையினருக்கு வழிவகுத்திருக்கிறது. மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழுக்களின் அநேக அங்கத்தினர்கள் ஆலோசனைக்குழு நடவடிக்கை மூலம் தாங்கள் சந்தித்த மருத்துவர்களோடு பைபிள் படிப்பைத் தொடங்கியிருக்கின்றனர். அத்தகைய மருத்துவர்களில் இருவர் சமீபத்தில் முழுக்காட்டவும்பட்டனர்.
ஆகவே மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக்குழு ஏற்பாட்டின் உதவியால் தங்களுடைய உண்மைத்தன்மையை விட்டுக்கொடுக்காமல், அதேசமயம் தேவையான மருத்துவ கவனத்தைப் பெற்றுக்கொண்டு, இரத்தத்திலிருந்து விலகியிருக்கும்படியான யெகோவாவின் பரிபூரண சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில் யெகோவாவின் சாட்சிகள் உதவப்படுகின்றனர். (சங்கீதம் 19:7) ஒரு காலத்தில் நிலவியிருந்த இடைவெளியை இணைப்பதில் உண்மையில் தொடர்ந்து நல்ல வெற்றி இருந்து வந்திருக்கிறது. இரத்தமின்றி மருத்துவ சிகிச்சை அளிப்பது எவ்வாறு என்பதைப்பற்றி மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இப்போது நன்கு அறிந்தவர்களாக இருக்கின்றனர். நோயாளிகளுக்கும், உறவினர்களுக்கும், மத கூட்டாளிகளுக்கும், மருத்துவமனை பணியாளர்களுக்கும், அது எல்லாரும் விரும்புவதைக் கொடுக்கிறது—நோயாளியின் ஆரோக்கியமான குணமடைதல்.—உவாட்ச் டவர் சொஸையிட்டியின் உலக தலைமை அலுவலகங்களில் உள்ள மருத்துவமனை தகவல் சேவைகள் துறையால் அளிக்கப்பட்டது. (g93 11/22)
[அடிக்குறிப்புகள்]
a ஆங்கிலத்தில் மட்டும் கிடைக்கும்.
[பக்கம் 25-ன் படம்]
தொடர்பு ஆலோசனைக்குழு ஒரு மருத்துவரோடு கலந்துரையாடுகிறது
[பக்கம் 26-ன் படம்]
“குடும்பப் பராமரிப்பு”