“குணப்படுத்தப்படக்கூடிய” நோய்களின் மறுவருகை ஏன்?
ஒரு வீடு இப்பொழுதுதான் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், நாட்கள், வாரங்கள், மற்றும் மாதங்கள் போகப் போக, தூசியும் அழுக்கும் சிறிதுசிறிதாக மீண்டும் தோன்றுகின்றன. ஆகவே, ஒருமுறை முழுவதும் சுத்தம் செய்வதுமட்டுமே போதுமானதல்ல. தொடர்ந்து பராமரிக்கவேண்டியது அவசியம்.
சிறிதுகாலத்திற்கு நவீன மருத்துவம் மலேரியா, TB (காசநோய்) மேகநோய் போன்றவற்றை அறவே ஒழித்துவிட்டதாக தோன்றிற்று. ஆனால் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையின் மூலம் செய்யப்படும் தேவையான பேணிக்காத்தல் அடிக்கடி அசட்டை செய்யப்பட்டது. இப்போது அந்தத் “தூசியும் அழுக்கும்” மீண்டும் தோன்றிவிட்டன. “உலகமுழுவதும், மலேரியா நிலைமை மிக மோசமாக இருக்கிறது; அது இன்னும் படுமோசமாகிக்கொண்டிருக்கிறது,” என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தை (WHO) சேர்ந்த டாக்டர் ஹிரோஷி நாகாஜிமா. “TB திரும்ப வந்துவிட்டது—பேரளவில் திரும்ப வந்துவிட்டது என்பதை மக்கள் உணரவேண்டும்,” என்று காசநோய் நிபுணர் டாக்டர் லீ ரைக்மன் எச்சரிக்கிறார். “1949-லிருந்து புதிதாக மேகநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் உச்ச நிலையில் இருக்கிறது,” என்று இந்தப் பத்தாண்டுகளின் தொடக்கத்தில் தி நியூ யார்க் டைம்ஸ் அறிவித்தது.
மலேரியா—அநேகமாக பாதி உலகத்தை அச்சுறுத்துகிறது
மலேரியா கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து சுமார் 40 வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் இப்போது, அது ஆப்கானிஸ்தானம், இந்தியா, இந்தோனீஷியா, இலங்கை, கம்போடியா, சீனா, தாய்லாந்து, பிரேஸில், வியட்நாம் போன்ற நாடுகளிலும், ஆப்பிரிக்காவின் பல்வேறு பாகங்களிலும் பெரும் அச்சுறுத்தலைக் கொடுக்கிறது. “ஒவ்வொரு நிமிடமும் இரண்டு குழந்தைகள் அந்தத் தொற்றினால் மரிக்கின்றனர்,” என்று அறிவிக்கிறது பிரெஞ்சு செய்தித்தாள் லா ஃபிகாரோ. வருடாந்தர மரண எண்ணிக்கை 20 லட்சம்—எய்ட்ஸினால் கொல்லப்படுபவர்களைவிட மிக அதிகம்.
கிட்டத்தட்ட 27 கோடி ஆட்கள் மலேரியா ஒட்டுண்ணியால் தொற்றப்படுகின்றனர். ஆனால் 220 கோடி ஆட்கள் அபாயத்திலிருப்பதாகக் கருதப்படுகின்றனர். “ஒருகாலத்தில் ஒழிக்கப்பட்ட அல்லது உலக மக்கள்தொகையின் 90 சதவீதத்தினருக்குப் பேரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்த மலேரியா, தற்போது நம்மில் 40 சதவீதத்தினருக்கும் அதிகமானோரை அச்சுறுத்துவது எப்படி?” என்று நியூ ஸயன்டிஸ்ட் பத்திரிகையில் கேட்கிறார் ஃபிலிடா ப்ரெளன். காரணங்கள் அநேகம்.
காடுகளை அழித்தலும் குடியேற்றமும் (colonization). கொசுக்கள் நிறைந்திருக்கும் மழைக்காடுகள் பகுதிகளில் மக்கள் குடியேறியது, பிரேஸிலில் மலேரியாவின் திடீர் அதிகரித்தலைத் தூண்டிவிட்டிருக்கிறது. “நாங்கள் வசித்துக்கொண்டிருந்தது எங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கொசுவின் வீடாகும்,” என்று தடுப்பாற்றலியல் நிபுணர் க்ளாவ்டியோ ரிபேரோ சொல்கிறார். குடியேறிவந்த மக்கள் “மலேரியாவை அனுபவித்ததுமில்லை, அவர்களுக்கு அந்த நோய்க்கெதிரான தடுப்பாற்றலும் இல்லை,” என்கிறார் அவர்.
குடிபெயர்ந்து செல்லுதல் (Immigration). மயன்மாரிலிருந்து வேலைதேடி வரும் அகதிகள் தாய்லாந்தின் ஒரு சிறிய பட்டணமாகிய போரையின் ரத்தினச் சுரங்கங்களுக்குத் திரண்டுவருகின்றனர். “அவர்களுடைய இடைவிடா போக்கும் வரவும் மலேரியா தடுப்பைக் கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறது,” என்று நியூஸ்வீக் அறிக்கைசெய்கிறது. சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் மட்டும், மாதந்தோறும் சுமார் 10,000 மலேரியா நோயாளிகள் பதிவுசெய்யப்படுகின்றனர்!
சுற்றுலா. மலேரியா அதிகமாக பரவியிருக்கும் பாகங்களுக்குச் செல்லும் அநேகர் நோய்த் தொற்றப்பெற்று வீடுதிரும்புகின்றனர். இவ்வாறு, 1991-ல் ஐக்கிய மாகாணங்களில் சுமார் 1,000 நோயாளிகளும் ஐரோப்பாவில் 10,000 நோயாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டனர். ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டில் வேலைசெய்பவர்களும் தொற்றப்பெற்று கனடாவுக்குத் திரும்புகின்றனர். துயரகரமான ஒரு சம்பவத்தில், அந்தக் குடும்பம் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய உடனே இரண்டு பிள்ளைகளுக்கு காய்ச்சல் வந்தது. மலேரியாவாக இருக்குமோ என்று மருத்துவர் சந்தேகப்படவில்லை. “பெற்றோர் அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது, அது மிகவும் தாமதமாகிவிட்டது,” என்று டொரன்டோவின் குளோப் அன்ட் மெயில் அறிக்கை செய்கிறது. “அவர்கள் சிலமணிநேர இடைவெளிக்குள் இறந்துவிட்டனர்.”
மருந்தை எதிர்க்கும் மலேரியா வகைகள். மருந்தை எதிர்க்கும் மலேரியா வகைகள் வெப்பமண்டல ஆப்பிரிக்கா முழுவதும் பரவியிருக்கின்றன என்று WHO அறிக்கைசெய்கிறது. தென்கிழக்கு ஆசியாவில், “விரைவில் சில வகைகளுக்கு சிகிச்சையே அளிக்கமுடியாது போகுமளவுக்கு மருந்தை எதிர்க்கும் திறன் வேகமாக அதிகரித்துக்கொண்டு வருகிறது,” என்று நியூஸ்வீக் சொல்கிறது.
வசதிகளின்மை. சில இடங்களில் மருத்துவமனைகள் பிளட் ஸ்மியர் (blood smear) என்று அறியப்படும் ஓர் எளிய சோதனையை நடத்தத் தேவையான சாதனங்கள்கூட இல்லாமல் இருக்கின்றன. மற்ற இடங்களில், சுகாதாரத்திற்கான செலவின் பெரும்பகுதி மற்ற அவசர சூழ்நிலைமைகளுக்குத் தேவைப்படுகிறது. இது பூச்சிக்கொல்லிகள் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டில் விளைவடைகிறது. சிலசமயங்களில் இது லாபத்தின் ஒரு பிரச்னையாகிறது. “வெப்பமண்டல நோய்களில் லாபமொன்றுமில்லை,” என்று ஒப்புக்கொள்கிறது நியூ சயன்டிஸ்ட், “ஏனென்றால் பொதுவாக, தொற்றப்பெற்றவர்களுக்கு மருந்துகள் வாங்க வசதியில்லை.”
காசநோய்—புதிய தந்திரங்களோடு ஒரு பழைய கொலையாளி
காசநோயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான நம்பிக்கையூட்டிய மருந்தாகிய ஸ்ட்ரெப்டோமைஸின், 1947-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. காசநோய் நிரந்தரமாக அழிக்கப்படுமென அப்போது கருதப்பட்டது. ஆனால் சில நாடுகளில் கடும் எழுச்சி வந்திருக்கிறது: சமீப ஆண்டுகளில் TB வீதங்கள் கவனிக்கத்தக்க வகையில் அதிகரித்திருக்கின்றன. “அமெரிக்காவில் ஏழ்மைநிலை நிலவியிருக்கும் பகுதிகளில் TB வீதங்கள், சஹாராவின் தெற்கிலுள்ள ஆப்பிரிக்கப் பகுதியில் மிக மோசமான ஏழ்மைநிலையிலுள்ள நாடுகளின் வீதங்களைவிட மிக அதிகமாக இருக்கின்றன,” என்று அறிக்கை செய்கிறது தி உவாஷிங்டன் போஸ்ட். கோட் டிவாரில்தான், ஒரு பத்திரிகை அழைக்கிறபடி, “காசநோயின் ஒரு கொடூரமான மறு எழுச்சி” இருக்கிறது.
டாக்டர் மைக்கேல் ஐஸ்மன் புலம்புகிறார்: “அதை எப்படி குணப்படுத்துவது என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது. அது எங்கள் கையில்தான் இருந்தது. ஆனால் அதை நாங்கள் கைவிட்டோம்.” காசநோய்க்கெதிரான போராட்டத்தைத் தடைசெய்தது எது?
எய்ட்ஸ். அது ஒரு நபரில் தொற்றுக்கெதிரான தடுப்பாற்றலை இழக்கச் செய்வதால், TB புத்தெழுச்சி பெறுவதற்கான ஒரு முக்கிய காரணமாக எய்ட்ஸ் கருதப்படுகிறது. “முதலில் அவர்கள் வேறு ஏதோவொன்றால் மரிக்கவில்லையானால், TB பாக்டீரியாவைக் கொண்டிருக்கும் எய்ட்ஸ் நோயாளிகளில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தினருக்கும் அந்த நோய் வரும்,” என்று டாக்டர் ஐஸ்மன் சொல்கிறார்.
சுற்றுச்சூழல். சிறைச்சாலைகள், தனியார் மருத்துவமனைகள், வீடற்றவர்களுக்கான பாதுகாப்பு இல்லங்கள், மருத்துவமனைகள், மற்ற நிலையங்கள் போன்றவை காசநோயின் உற்பத்தி ஸ்தலங்களாக ஆகக்கூடும். ஒரு மருத்துவமனை தெளிப்பானைப் பயன்படுத்தியது நுரையீரல் அழற்சி நோயாளிகளின் இருமலை அதிகரித்து, அதன்மூலம் அந்த மருத்துவமனை பணியாளர்கள் மத்தியில் ஒரு TB கொள்ளைநோயையே உருவாக்கிவிட்டது என்று டாக்டர் மார்வன் பாமராண்ட்ஸ் கூறுகிறார்.
வசதிகளின்மை. காசநோய் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக தோன்றியதும், நிதிவசதி வற்றிப்போனது; பொதுமக்களின் கவனமும் வேறெங்கோ திரும்பிற்று. “காசநோயை ஒழிப்பதற்குப் பதிலாக, காசநோய்த் திட்டங்களை நாம் ஒழித்துக்கட்டிவிட்டோம்,” என்கிறார் டாக்டர் லீ ரைக்மன். உயிர் வேதியியல் நிபுணர் பேட்ரிக் ப்ரென்னன் சொல்கிறார்: “1960-களின் துவக்கத்தில் TB மருந்து எதிர்ப்பின்பேரில் நான் தீவிரமாக ஆராய்ச்சி செய்தேன். ஆனால் TB குணப்படுத்தப்பட்டது என்று நினைத்ததால் நான் அதை கைவிட தீர்மானித்தேன்.” இவ்வாறு, காசநோயின் மறுவருகை அநேக மருத்துவர்களை எதிர்பாராமல் எதிர்கொண்டது. “நான் இனி ஒருக்காலும் பார்க்கமாட்டேன் என்று என்னுடைய மருத்துவக் கல்லூரி ஆசிரியை சொன்ன நோயால் புதிதாக பாதிக்கப்பட்ட நான்கு பேரை, [1989-ன் இறுதியில்] ஒரு வாரத்தின்போது பார்த்தேன்,” என்று ஒரு மருத்துவர் சொன்னார்.
மேகநோய்—மரணத்துக்கேதுவான மறுவருகை
பெனிசிலின் பலன்தரத்தக்கதாய் இருந்தபோதிலும், மேகநோய் ஆப்பிரிக்காவில் இன்னும் பரவலாகக் காணப்படுகிறது. ஐக்கிய மாகாணங்களில், அது 40 வருடங்களில் அதன் மகா வல்லமையுடன் திரும்பி வந்துகொண்டிருக்கிறது. தி நியூ யார்க் டைம்ஸ் சொல்கிறபடி, மேகநோய் இப்போது, “இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைக்கூட பார்த்திராத, அப்படியே பார்த்திருந்தாலும் அபூர்வமாகவே பார்த்திருக்கும் மருத்துவர்களின் ஒரு தலைமுறையை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.” இது புத்தெழுச்சி பெறுவதேன்?
க்ராக். “கொக்கெயின் உபயோகம், பாலுறவு போன்றவற்றின் மாரத்தான் குடிவெறியாட்டம்” என்று ஒரு மருத்துவர் அழைப்பதை க்ராக் அடிமைத்தனம் முன்னேற்றுவித்திருக்கிறது. ஆண்கள் தங்களுடைய அடிமைத்தனத்தை ஆதரிக்க அடிக்கடி திருடுகின்றனர். பெண்களோ போதைப் பொருட்களுக்காக பெரும்பாலும் தங்களுடைய உடலை விற்கின்றனர். “க்ராக் விநியோக மையங்களில், பாலுறவும் பல்வேறு பாலுறவுக் கூட்டாளிகளும் இருக்கின்றனர். அந்தச் சுற்றுச்சூழல்களில் என்ன தொற்றுநோய் இருக்க நேரிடுகிறதோ அதுதான் கடத்தப்படும்,” என்று ஐ.மா. நோய்க் கட்டுப்பாட்டு மையங்களைச் சேர்ந்த டாக்டர் உவில்லார்டு கேட்ஸ், இளநிலையர், சொல்கிறார்.
பாதுகாப்பின்மை. “‘அபாயமற்ற பாலுறவை’ பற்றிய பிரச்சாரம் இருந்தபோதிலும், பருவவயதினர் தங்களைத்தாங்களே நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கருத்தடை உறைகளை அணிந்துகொள்வதைப்பற்றி இன்னும் அக்கறையற்றவர்களாக இருக்கின்றனர்” என்று டிஸ்கவர் அறிக்கை செய்கிறது. ஆபத்தான உடலுறவு கூட்டாளிகளைக் கொண்டிருந்தவர்களில் 12.6 சதவீதத்தினர் மட்டுமே கருத்தடை உறைகளை தவறாது உபயோகித்தனர் என்று ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்திற்று.
வசதிகள் குறைவு. தி நியூ யார்க் டைம்ஸ் இவ்வாறு சொல்கிறது: “செலவுக் குறைப்புகள் மேகநோய்கள் மற்றும் பாலுறவால் கடத்தப்படும் நோய்களில் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடிக்கும் பொது மருத்துவமனைகளைக் கட்டிப்போட்ட நிலையில் வைத்திருக்கின்றன.” மேலும், பரிசோதனை முறைகள் எப்போதுமே துல்லியமாக இருப்பது கிடையாது. ஒரு மருத்துவமனையில் அநேக தாய்மார்கள் நோய்தொற்றப்பெற்ற குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். எனினும், அந்தத் தாய்மார்களின் முந்திய இரத்தப் பரிசோதனைகள் மேகநோயைப் பற்றிய எந்த அத்தாட்சியையுமே கொடுத்ததில்லை.
முடிவு புலப்படுகிறதா?
நோய்க்கெதிரான மனிதனின் போராட்டம் நீடித்த ஒன்றாயும் ஏமாற்றமடையச் செய்வதாயும் இருந்து வந்திருக்கிறது. அடிக்கடி சில வியாதிகளுக்கெதிரான போராட்டத்தின் வெற்றி மற்றவற்றுக்கெதிரான போராட்டத்தின் தோல்வியால் ஈடுசெய்யப்படுகிறது. மனிதன் தான் ஒருபோதும் வெல்லமுடியாத ஒரு நிரந்தர போரைப் போராடும்படி விதிக்கப்பட்டிருக்கிறானா? நோயற்ற உலகம் எப்பொழுதாவது இருக்குமா? (g93 12/8)
[பக்கம் 7-ன் படம்]
மேகநோயின் நாசவிளைவுகள்
மேகநோய், டிரெப்போனிமா பேல்லிடம் என்ற தக்கைத் திருகாணி வடிவிலுள்ள ஒரு ஸ்பைரோக்கீட்டால் உண்டாக்கப்படுகிறது. வழக்கமாகவே இது பாலின உறுப்புகள் வழியாக தொற்றுகிறது. அந்த ஸ்பைரோக்கீட் பின்னர் இரத்த ஓட்டத்தில் நுழைந்து உடல் முழுவதும் பரவுகிறது.
நோய் தொற்றிய பல வாரங்கள் கழித்து, கிரந்திப்புண் என்று அழைக்கப்படும் ஒரு புண் தோன்றுகிறது. அது வழக்கமாக பாலின உறுப்புக்களின் மீது தோன்றுகிறது. ஆனால் அதற்குப் பதிலாக உதடுகள், அடிநாச்சதைகள், அல்லது விரல்களிலும் தோன்றலாம். இந்தக் கிரந்திப்புண் இறுதியில் தழும்பு ஏதும் ஏற்படுத்தாமல் குணமாகிறது. ஆனால் அந்தக் கிருமிகள் இரண்டாம்தரம் அறிகுறிகள்—தோல் சினப்பு, தொண்டைப் புண், மூட்டு வலிகள், முடி உதிர்தல், தோல் நைவுப் புண்கள், கண்களின் அழற்சி—தோன்றும்வரை தொடர்ந்து உடல்முழுவதும் பரவிக்கொண்டிருக்கின்றன.
சிகிச்சை அளிக்காவிடில், மேகநோய் வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய அளவுக்கு செயலற்ற நிலையில் தங்கிவிடுகிறது. இந்தக் காலக்கட்டத்தின்போது ஒரு பெண் கருத்தரித்தால், அவளுடைய குழந்தை குருடாகவோ முடமாகவோ அல்லது இறந்தோ பிறக்கலாம்.
பல பத்தாண்டுகளுக்குப் பின்னர், சிலர் மேகநோயின் அடுத்தக் கட்டத்திற்குக் கடக்கின்றனர். இக்கட்டத்தில், அந்த ஸ்பைரோக்கீட் இருதயம், மூளை, தண்டுவடம், அல்லது உடலின் மற்ற பாகங்களில் தங்கிவிடுகிறது. அந்த ஸ்பைரோக்கீட் மூளையில் தங்கிவிட்டால், வலிப்புகள், பொதுவான முடக்குவாதம் போன்றவை ஏற்பட்டு பைத்தியமும்கூட விளைவடையலாம். இறுதியில் அந்த நோய் மரணத்தில் முடிவடையலாம்.
[பக்கம் 7-ன் படம்]
“பெரும் பாசாங்கு”
காசநோயை டாக்டர் லீ ரைக்மன் அவ்வாறுதான் அழைக்கிறார். “அது சளி, மார்புச்சளி, ஃப்ளூ போன்றவற்றைப்போல தோன்றலாம். ஆகவே, ஒரு மருத்துவர் TB-யைப்பற்றி நினைக்காதவரை, அவனோ அவளோ கண்டுபிடிக்கத் தவறிவிடலாம்,” என்கிறார் அவர். இந்தத் தொற்றை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள ஒரு மார்பு எக்ஸ்ரே தேவையாக இருக்கிறது.
காசநோய் ஓர் ஆளிடமிருந்து மற்ற ஆளுக்குக் காற்றின் வழியாக கடத்தப்படுகிறது. ஓர் இருமல் நுரையீரல்களுக்குள் புகுமளவு சிறிய துகள்களை உருவாக்க முடியும். எனினும், உடலின் பாதுகாப்புத் திறன்கள் பொதுவாக இந்தத் தொற்றை எதிர்க்கும் அளவுக்கு பலம்வாய்ந்தவையாய் இருக்கின்றன. டாக்டர் ரைக்மன் இவ்வாறு விவரிக்கிறார்: “தங்களுடைய மார்புக் குழிகளில் போதுமான பேசிலஸ் கிருமிகளை—10,000-க்கும் குறைவான கிருமிகளைக்கொண்ட கடத்தா நோய்த்தாங்கிகளைவிட (inactive carriers) 10 கோடி கிருமிகளை—கொண்டவர்களே இந்த நோயைப் பரப்ப வல்லவர்களாக இருக்கின்றனர்.”
[பக்கம் 7-ன் படம்]
பூமி உஷ்ணமடைதலும் மலேரியாவும்
தொற்று ஏற்படுத்தும் அனோபிலிஸ் கேம்பியே என்ற கொசு இல்லாமல் மலேரியா தொடங்குவதில்லை. “நோய்ப்பரப்பும் அந்தப் [பூச்சியின்] தொகையை மாற்றுங்கள், பிறகு நோய் ஏற்படுவதையும் மாற்றுவீர்கள்,” என்று குறிப்பிடுகிறது தி இகானமிஸ்ட்.
சிறிதளவு உஷ்ண அதிகரிப்புகள் இப்பூச்சிகளின் தொகையைப் பெரிதும் பாதிக்கக்கூடும் என்று சோதனைக்கூட பரிசோதனைகள் காட்டியிருக்கின்றன. இதன் காரணமாக, பூமி உஷ்ணமடைதல் மலேரியா ஏற்படுவதில் ஒரு துயரமான விளைவைக் கொண்டிருக்கலாம் என்று சில நிபுணர்கள் முடிவுக்கு வருகின்றனர். “பூமியின் மொத்த வெப்பநிலையில் ஒன்று அல்லது இரண்டு டிகிரி செல்ஷியஸ் அதிகரித்தாலும்கூட, அது கொசுக்களின் இனப்பெருக்க இடங்களை அதிகரிக்கச் செய்யக்கூடும். அதன்காரணமாக மலேரியா இப்போது இருப்பதைவிட இன்னும் அதிக பரவலாக பரப்பப்படலாம்,” என்று டாக்டர் உவாலஸ் பீட்டர்ஸ் கூறுகிறார்.
[படத்திற்கான நன்றி]
Dr. Tony Brain/SPL/Photo Researchers
[பக்கம் 6-ன் படம்]
வீடற்றவர்களுக்கான பாதுகாப்பு இல்லங்கள், காசநோயின் உற்பத்தி ஸ்தலங்களாக ஆகக்கூடும்
[படத்திற்கான நன்றி]
Melchior DiGiacomo