கொலையாளிகள்—கட்டுப்பாடின்றி
மார்கரட் தனது மகன் டிட்டோவுக்கு மலேரியா வந்தபோது குணமாக்குவதற்கு இறுதிவரை விடாப்பிடியாக வகைதேடினாள். மிகவும் போற்றிப் புகழப்பட்ட க்ளோரோக்வினைனும் உட்பட மூன்று மருந்துகள் கொடுக்கப்பட்டன. இருந்தபோதிலும், ஒன்பதே மாதங்கள் நிறைந்த டிட்டோ மரித்துப்போனான்.
மார்கரட்டின் தாய்நாடாகிய கென்யாவில், அத்தகைய துயர சம்பவம் சர்வ சாதாரணம். “நியூஸ்வீக்” தெரிவிக்கிறது: “மலேரியாவைத் தாங்கிவரும் கொசுக்களின் ராணி, ‘அனோபிலிஸ் கேம்பியே,’ உலகத்தின் இப்பாகத்தில் செழிப்புடன் வாழ்கிறது. பிள்ளைகள் செழித்து வாழ்வதில்லை. அவர்களில் ஐந்து சதவீதத்தினர், பள்ளிப்பருவத்தை அடையுமுன்பே மலேரியாவினால் இறந்துவிடுகின்றனர்.”
அ.ஐ.மா.-வின் நியூ யார்க் மாகாணத்தில், 1991-ல் காசநோய் 12 சிறை கைதிகளையும் ஒரு காவலரையும் கொன்றுபோட்டது. “நாங்கள் சிறைகளில் அதைக் கட்டுப்படுத்தப்போகிறோம்,” என்று சொல்கிறார் டாக்டர் ஜார்ஜ் டிஃபெர்னாண்டோ, இளநிலையர், “ஆனால் உண்மையான கேள்வி என்னவென்றால், அது சமுதாயத்தில் நன்கு நிலைபெற்றிருப்பதால், அதை நீங்கள் இப்போது எவ்வாறு கட்டுப்படுத்தப்போகிறீர்கள் என்பதே.”
170 கோடி ஆட்கள்—உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றிலொரு பகுதியினர்—காசநோய் பாக்டீரியாவைக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும், இவர்களில் 80 லட்சம்பேர் இந்தத் தீவிர நோயால் தாக்கப்பட்டு, 30 லட்சம்பேர் மரிக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கை செய்கிறது.
நியூ யார்க் மருத்துவமனை ஒன்றில், ஒரு பெண்குழந்தை 11 வாரங்களுக்கு முன்பே ஒரு குறைமாதக் குழந்தையாக பிறந்தாள். ஆனால் இது அவளுடைய பிரச்னையில் ஒரு பகுதிதான். அவளுடைய கைகளின் உரிந்துவரும் தோல், அவளுடைய கால்களில் உள்ள புண்கள், வீங்கிய கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்ற இவையெல்லாம் தன் தாயின் கருப்பையில் இருக்கும்போதே அவளுக்கு மேகநோய் வந்துவிட்டது என்பதற்குத் தெளிவான சான்றளித்தன.
“சில குழந்தைகள் செத்துப் பிறக்குமளவுக்குத் தங்கள் தாயின் கருப்பையில் இருக்கும்போதே இந்நோயினால் கடுமையாக தாக்கப்படுகின்றனர்” என்று அறிவிக்கிறது “தி நியூ யார்க் டைம்ஸ்.” “மற்ற ஒருசிலர் பிறந்தவுடன் இறக்கின்றனர்; இன்னும் சிலர் கடுமையான தோல் நைவுப் புண்களோடு (lesions) பிறக்கின்றனர், பிரசவத்தின்போது அவை உடைகின்றன.”
மலேரியா, காசநோய், மேகநோய்—இம்மூன்றும் கட்டுப்படுத்தப்பட்டு, அடியோடு ஒழிக்கப்படும் தருவாயில் இருந்ததாக சில பத்தாண்டுகளுக்குமுன் கருதப்பட்டது. அவை ஏன் இப்போது அழிவுக்குரிய வகையில் திரும்பவருகின்றன? (g93 12/8)