இளைஞர் கேட்கின்றனர்
அப்பா செத்த நினைப்பிலிருந்து எவ்வாறு நான் மீள முடியும்?
“அப்பா கட்டிலில் செத்துப்போனார். அவர் செத்துக் கிடந்ததை நான் பார்த்தேன். அவருக்கு மாரடைப்பு உண்டானது. செல்லமாகப் பழகியதால் ரொம்ப பயமாயிருந்தது. . . . அம்மா இன்னுங்கூட இராத்திரியில் நினைத்து அழுகிறார்கள். எதைச் செய்தாலும் அப்பாவில்லாமல் ஒருமாதிரி இருக்கிறது.—எமிலி.
“வளரிளமை பருவத்தினருக்கு பெற்றோர் சாவதோ நெருங்கிய குடும்ப நபர் சாவதோ பெரிய அதிர்ச்சியை தருகிறது. அப்போதைக்கு சோகம், குற்றவுணர்ச்சி, பயம், ஆத்திரம் ஆகியவற்றால் அவனோ அவளோ அலைக்கழிக்கப்பட்டவராக உணரலாம்,” என்று எழுத்தாளராகிய கேத்லீன் மக்காய் சொல்கிறார்கள். நீங்கள் பெற்றோரை இழந்திருந்தால், அது எவ்வளவு வேதனையாயிருக்கும் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
என்றாலும், நாம் நேசித்த ஒருவர் சாகும்போது அவர் நினைப்பாகவே இருப்பது சர்வசாதாரணந்தான். முற்பிதாவாகிய யாக்கோபிடம் தன்னுடைய குமாரனாகிய யோசேப்பு செத்துப்போனான் என்று சொன்னபோது சோகத்தைக் காட்டும் பொருட்டு அவர், “தன் வஸ்திரங்களைக் கிழித்”தார் என்று பைபிள் சொல்கிறது. ‘அவருடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவருக்கு ஆறுதல் சொன்னாலும் அவர் ஆறுதலுக்கு இடங்கொடுக்கவில்லை.’ (ஆதியாகமம் 37:34, 35) அது தாங்கமுடியாத வேதனையாக இருப்பதால் போகவே போகாது என்று நீங்களுங்கூட நினைக்கலாம்.
நாளாக ஆக அது போய்விடும். ஆனால் முக்கியமானது என்னவென்றால் வேதனையை கண்டுகொள்ளாமல் இருக்க முயலுவதற்கு பதிலாக சமாளிப்பதே ஆகும். உதாரணமாக, ஜான் என்ற சிறுவன் குடும்பத்திலுள்ள நபர் செத்ததைப் பற்றி சோகமாயிருப்பதை வெளியில் காட்டிக்கொள்ளவே இல்லை. ஆனால் பள்ளியில் சண்டை போடத் தொடங்கினான். ஜான் விளக்கினான்: “உள்ளுக்குள் பெரிய, உறுத்துகிற கட்டியோடு நான் அலைந்து கொண்டிருந்தேன். சண்டை போட்டு களையலாம் என்றால் முடியவேயில்லை.”
வேறு இளைஞர் மனக் குத்தலை அடக்குவதற்கு அரக்கப்பரக்க வேலைசெய்கிறார்கள். மற்றவர்கள் சுகக்ஷேமத்தைக் குறித்து விசாரிக்கும்போது சிலர் சந்தோஷமாயிருப்பதுபோல வெளிக்காட்டிக்கொண்டு, அப்படி விசாரிக்கப்படுவதைத் தவிர்க்கப் பார்க்கிறார்கள். அப்படிச் செய்வது, கொஞ்ச காலத்திற்கு வேதனையான உணர்ச்சிகளை அடக்கிவைத்தாலும் நீண்ட காலத்திற்கு தாங்காது. “நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு,” என்று நீதிமொழிகள் 14:13 சொல்கிறது.
அக்கறைக்குரிய விதமாக, இளைஞர் சம்பந்தப்பட்ட பத்திரிகையில் வெளிவந்த கட்டுரை இவ்வாறு சொல்கிறது: “ஆராய்ச்சி ஒன்றில், சொந்தக்காரர் செத்தப் பிறகு வரும் சோகம், ஆத்திரம் அல்லது குற்றவுணர்ச்சி போன்ற இயல்பான உணர்ச்சிகளை அடக்கி வைத்த பருவ வயதினர்கள், . . . போதைப்பொருள் மேலும் மதுபான துர்ப்பிரயோகம், ஆபத்துக்குள்ளாக்கும் நடத்தை (வாகனங்களில் வெகு வேகமாக ஓட்டிக்கொண்டு போவது போன்ற) மற்றும் குற்றவியல்பான நடத்தை ஆகிய நாசப்படுத்தும் செயல்களில் அடிக்கடி ஈடுபடுவதாக காட்டப்பட்டார்கள்.” சந்தோஷகரமாக, சோகத்தை சமாளிக்க சிறந்த வழிகள் இருக்கின்றன.
‘அழுவதற்கான காலம்’
பிரசங்கி 7:2 சொல்கிறது: “விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான்.” சாவு பயத்தைக் கிளப்பலாம். மேலும் நண்பரோ நேசித்த ஒருவரோ செத்த பிறகு சிலர் “விருந்துவீட்டுக்குப்” போய் களியாட்டத்தில் மூழ்கிவிடுவதன் மூலம் சாவின் வேதனையான உண்மை நிலையிலிருந்து நழுவ முயற்சி செய்வார்கள். என்றாலும், சாலொமோன் “துக்கவீட்டுக்குப்” போய் சாவை நேரில் எதிர்ப்படுவதை ஊக்குவிக்கிறார். “நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும்” என்று சாலொமோன் மேலுமாக சொல்கிறார்.—பிரசங்கி 7:3, கிங் ஜேம்ஸ் வர்ஷன்.
சாவில் இழந்தவருடைய நண்பர்களுக்கும் குடும்பத்துக்கும் இந்தப் புத்திமதியானது முக்கியமாக எழுதப்பட்டாலும், இழப்பினால் வரும் வேதனையை எதிர்ப்படுவதும் இழந்தவருக்கு பிரயோஜனமாயிருக்கும். “அழ ஒரு காலமுண்டு.” (பிரசங்கி 3:4) இதன்படியே, பைபிள் காலங்களிலிருந்த கடவுள்-பயமுள்ள ஆண்களும் பெண்களும் தங்களுடைய சோகமான உணர்ச்சிகளை அடக்குவதற்கு பதிலாக வெளிப்படுத்த அனுமதித்தார்கள்.—ஒத்துப்பாருங்கள்: ஆதியாகமம் 23:2; 2 சாமுவேல் 1:11, 12.
ஒருவர் தன்னையே துக்கிக்க அனுமதிப்பது அநேக பயன்களைக் கொண்டிருக்கிறது. துக்கம் விசாரிக்கும் கலை (The Art of Condolence) என்ற புத்தகம் சொல்கிறது: “இழந்தவர்கள் வேதனையையும் தங்கள் துயரத்தின் அவதியையும் அனுமதிக்க வேண்டும். இதைச் செய்யத் தவிர்ப்பதன் மூலம் ஆறுவது தடைப்படுகிறது.” என்றபோதிலும், ஆண்மையுள்ள மனிதர்கள் அழமாட்டார்கள் என்ற கட்டுக்கதையின் அழுத்தத்தால் பீடிக்கப்பட்டு, சில பையன்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த விசேஷமாக கஷ்டப்படுவார்கள். ஆனால் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் தம்முடைய நண்பனாகிய லாசரு செத்தபோது எல்லாருக்கும் முன்பாக “கண்ணீர் விட்டார்.” (யோவான் 11:35) நிச்சயமாகவே, ஒருவர் பெற்றோரை இழந்திருந்தால் அழுவது சரியானது. ஆகவே, துக்கிக்கவும் அழவும் தயங்காதேயுங்கள். (யாக்கோபு 4:9-ஐ ஒத்துப்பாருங்கள்.) குடும்பத்தில் சாவும் சோகமும் (Death and Grief in the Family) என்ற புத்தகம் சொல்கிறது: “வருத்தத்தை வெளிப்படுத்த அழுவது மிகவும் முக்கியமான வழியாகும்.”
உங்கள் வருத்தத்தை மேற்கொள்ள செயல்படுவது
பைபிள் காலங்களில், தாவீது ராஜா அழுவதோடு மாத்திரமில்லாமல் தன்னுடைய உணர்ச்சிகளை எழுத்தில் போடுவதன் மூலமும் தன்னுடைய மிகச் சிறந்த நண்பனாகிய யோனத்தானுக்கான சோகத்தை எடுத்துக் காட்டினார். “என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்,” என்று தாவீது “வில்வித்தை” என்றழைத்த தன்னுடைய அருமையான புலம்பலில் எழுதினார்.—2 சாமுவேல் 1:18, 26.
உணர்ச்சிகளை எழுத்தில் போடுவது உங்களுக்குங்கூட உதவியாயிருக்கலாம். சோகமான வார்த்தைகள் சொல்வது (Giving Sorrow Words) என்ற புத்தகம் கூறுகிறது: “பூட்டிவைக்கப்பட்டுள்ள உணர்ச்சிகளை வெளியே வரவைக்க உங்கள் உணர்ச்சிகளை எழுதிவிடுவது உதவலாம். . . . ஆத்திரப்பட்டால், வருத்தமாக உணர்ந்தால் எழுதிவிடுங்கள்.” ஷேன்னன் என்ற பருவவயது பெண் சொல்கிறாள்: “நான் டையரி வைத்திருந்தேன். எல்லா உணர்ச்சிகளையும் எழுதிவைத்தேன். உணர்ந்ததையெல்லாம் பேப்பரில் அப்பட்டமாக எழுதினேன். எப்படியெல்லாம் உணர்ந்தேனோ அதெல்லாம் பேப்பரில் இருந்தது, எல்லாவற்றையும் எழுதிவிடுவது . . . மிகவும் உதவினது.”
இன்னொரு உதவி உடற்பயிற்சியாகும். ‘சரீரமுயற்சி பிரயோஜனமுள்ளது,’ என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 4:8) சோகத்தைப் பற்றி ஒரு புத்தகம் குறிப்பிடுவதாவது: “ஆற்றலை வெளிவிட பயிற்சி நல்ல வழியாகும்.” உற்சாகமான ஓட்டம், சுறுசுறுப்பான நடை, அல்லது புத்துயிரூட்டும் சைக்கிள் ஓட்டம் ஆகியவை, வருத்தப்பட்டு சோகமாயிருக்கையில் குமுறும் மன இறுக்கங்களை வெளிப்படுத்த பெரிதும் உதவக்கூடும்.
யாரிடமாவது பேசுங்கள்
என்றாலும், மற்றவர்களிடமிருந்து உங்களை நீங்களே தனித்து வைத்துக்கொள்ளாதவாறு ஜாக்கிரதையாயிருங்கள். (நீதிமொழிகள் 18:1) நீதிமொழிகள் 12:25 சொல்வதாவது: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.” துயரமடைந்த ஆள் எவ்வாறு அந்த உற்சாகமாகிய “நல்வார்த்தை”யைப் பெறுவான்? யாரிடமாவது பேசி, தன்னுடைய “கவலை”யைத் தெரிவித்தால் மாத்திரமே பெறுவான். அவ்வாறு நீங்களும் ஏன் செய்யக்கூடாது? நம்பிக்கையான ஒருவரிடம் மனந்திறந்து பேசுங்கள்.
சாதாரணமாக, கடவுள்-பயமுள்ள பெற்றோரை அணுகுவது நியாயமானதாயிருக்கும். ஆனால் உதவ முடியாமல், அப்பாவோ அம்மாவோ தங்களுடைய வேதனையில் மூழ்கிவிட்டிருந்தால் அப்போது என்ன? அந்த நிலையில், உதவி செய்வதற்கு கிறிஸ்தவ சபையில் முதிர்ச்சியுள்ள ஆட்கள் இருக்கிறார்கள். நீதிமொழிகள் 17:17 சொல்கிறது: “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.” அம்மா செத்ததும், இளம் பெண்ணாகிய மார்வெத் யெகோவாவின் சாட்சிகளடங்கிய உள்ளூர் சபையை அதிகம் சார்ந்திருந்தாள். “மூப்பர்கள் எல்லாரும் பக்கபலமாக இருந்தார்கள், அவர்களில் விசேஷமாக ஒருவர் நான் சொல்வதைக் கேட்க எப்போதுமே மனமுள்ளவராயிருந்தார்,” என்று அவள் ஞாபகப்படுத்திச் சொல்கிறாள்.
அத்தகைய உதவியையும் ஆதரவையும் ஏன் நாடக்கூடாது? நீங்கள் பேச வேண்டும் என்று ஒருவருக்குத் தெரிந்திருக்கட்டும். ஒருவேளை ஆத்திரமோ பயமோ குற்றவுணர்வோ அடையலாம். அல்லது வெறுமனே தனிமையாக உணருகையில் பெற்றோர் ஞாபகம் வரலாம். பரிவோடு கேட்கக்கூடிய நபரிடம் உள்ளுக்குள் உணருவதைப் பேசிவிடுவது பெரிதும் உதவக்கூடும்.
உங்கள் பெற்றோருக்கு ஆதரவு தருவது
என்றபோதிலும், சில இளைஞர் தங்களால் சுமக்கக்கூடாத பாரங்களை வலிய ஏற்றுக்கொள்வதன் மூலம் தங்கள் துயரை அதிகரிக்கிறார்கள். வீட்டில் நிலைமை இப்போது ஒரே குழப்படியாகவும் தாறுமாறாகவும் தோன்றலாம். உயிரோடிருக்கிற பெற்றோர் மன இறுக்கமாகவும் எரிச்சலடைந்தவராகவும் அதே சமயத்தில் வருத்தத்தோடும் இருப்பார் என்பது தெரிந்த விஷயந்தான். அப்பாவோ அம்மாவோ கஷ்டப்படுவதைப் பார்த்ததும், உங்களை அறியாமல் உதவி செய்யவேண்டும்போல உணருவீர்கள். “வளரிளம் பருவத்தைச் சேர்ந்தவர்கள் . . . பெற்றோருக்கு உதவியாயிருக்கவேண்டி தவறாக வழிநடத்தப்பட்டு, தங்கள் துக்கத்தை அடக்கலாம்,” என்று சோகத்தைப் பற்றி ஆலோசிக்கும் நிபுணர் குறிப்பிடுகிறார். அவர்கள் “முன்முதிர்ச்சியோடு ‘வயதுவந்தவர்களாக’ செயல்படலாம், ஒருவேளை மேலுமான உத்தரவாதங்களையும் இழுத்துப்போட்டுக்கொள்ளலாம்.”
நிச்சயமாகவே, பெற்றோர் செத்ததன் காரணமாக மேலுமான சில உத்தரவாதங்களை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியே இல்லாமலிருக்கலாம். ஆனால் இது உங்களை வீட்டுத் தலைவனாகவோ தலைவியாகவோ செய்யாது. இன்னுங்கூட உயிரோடிருக்கிற பெற்றோர் பொறுப்பை ஏற்கிறவராக இருக்கிறார், காரியங்களை எடுத்து நடத்துவதற்கு மாறாக ஒத்துழைத்து, கீழ்ப்படிவதன் மூலம் நீங்கள் நன்றாக அவர்களுக்கு ஆதரவு தரலாம். (எபேசியர் 6:1) “அடக்கமுள்ளவர்களிடம் ஞானமுண்டு” என்பதை ஞாபகத்தில் வையுங்கள். (நீதிமொழிகள் 11:2, NW) அடக்கம், வரையறைகளைத் தெரிந்திருப்பதை உட்படுத்துகிறது.
உயிரோடிருக்கிற பெற்றோர் புத்திமதிக்காக உங்கள் மீது சாய்ந்தால் அல்லது வயதுவந்தவர்களுக்குரிய விஷயங்களைச் சொல்லி பாரமடையச் செய்ய தொடங்கினால் இதை விசேஷமாய் மனதில் வைப்பது முக்கியமாயிருக்கிறது. நீங்கள் தயவாகவும் ஆதரவுள்ளவராகவும் இருக்க ஆசைப்படுகிறீர்கள், ஆனால் வாழ்க்கையில் அனுபவம் மிகவும் குறைவாக இருக்கிறது என்பதை உணர அடக்கம் உதவி செய்யும். (எபிரெயர் 5:14-ஐ ஒத்துப்பாருங்கள்.) எனவே ஓரளவு அதிகத்தை கேட்கிறார்கள் என்று நினைத்தால், ஒளிவுமறைவில்லாமல் இருந்தாலும், மரியாதையான முறையில் உங்கள் பெற்றோரிடம் எடுத்து பேசுங்கள். (நீதிமொழிகள் 15:22) ஒருவேளை சபையில், வயதுவந்தவர்கள் யாராவது ஒருவருடைய ஆதரவை நாடும்படி அப்பாவிடமோ அம்மாவிடமோ சொல்லிப் பார்க்கலாம்.
பெற்றோருடைய சாவை சமாளிப்பது நிச்சயமாகவே எளிதானது கிடையாது. ஆனால் போகப்போக, வருத்த உணர்ச்சிகள் உங்களை ஒருக்காலும் ஆட்கொள்ளாது என்பதன்பேரில் நிச்சயமாயிருங்கள். (ஆதியாகமம் 24:67-ஐ ஒத்துப்பாருங்கள்.) இன்னுங்கூட அவ்வப்போது, பிரிந்த பெற்றோரைக் குறித்து வருத்த நினைப்புகள் மனதில் வரலாம். அதே சமயத்தில் அநேக அனலான, ஆறுதலான நினைப்புகளின் பேரிலும் மனதை செலுத்தலாம். யெகோவா அக்கறையுடையவராக, உங்கள் வருத்தத்தை விளங்கிக்கொள்கிறார் என்பதை ஒருக்காலும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் தனிமையாக கைவிடப்பட்டவராக உணர்ந்தால் சங்கீதக்காரனின் வார்த்தைகளை நினைத்துக்கொள்ளுங்கள்: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.”—சங்கீதம் 27:10.
உயிர்த்தெழுதல் பற்றிய பைபிள் சார்ந்த நம்பிக்கையின் பேரிலும் பரதீஸ்மயமான பூமியில் திரும்பவும் உங்களுடைய பெற்றோரை பார்க்கும் எதிர்பார்ப்பை குறித்தும் விடாது ஆழமாக சிந்தியுங்கள். (லூக்கா 23:43; அப்போஸ்தலர் 24:15) அப்பாவை பிரிந்த இளம் கிம் என்பவள் சொல்கிறாள்: “அப்பாவை நினைக்காத நாளே கிடையாது. ஆனால் யெகோவாவுக்கான எங்களுடைய சேவையை விட்டுக்கொடுக்கவோ, அதைச் செய்வதிலிருந்து எதையாவது தடுத்தநிறுத்த அனுமதிக்கவோ அவர் விரும்பமாட்டார் என்று எனக்குத் தெரியும். உயிர்த்தெழுதலில் வரும்போது அவரை வரவேற்க நான் அங்கு இருக்க ஆசைப்படுகிறேன்.”—யோவான் 5:28, 29.
[பக்கம் 23-ன் படம்]
ஒருவர் தன்னையே அழ அனுமதிப்பது துக்கத்திலிருந்து ஆற உதவும்