விளங்கமுடியா பிராணி
வெறுக்கப்படுவதும் விரும்பப்படுவதும் கனடாவிலுள்ள விழித்தெழு! நிருபர்
கேனிஸ் லூப்பஸ். பாறைமலைப்பகுதியின் உச்சியிலுள்ள பாறைப்பக்கப்படி விளிம்பில் நிலவொளியின் இருட்டுப் பகுதியில் தலையை நிமிர்த்தி வைத்துக்கொண்டும், அதன் கால்களுக்கிடையே நீட்டமான, கற்றையான வாலும் சாய்ந்த காதுகளும் வாயை ஆவென்று வைத்துக்கொண்டும் அதோ அங்கே காணப்படுகிறது. இரவு காற்றினூடே அதன் பயங்கரமான ஊளையானது துளைத்துக்கொண்டு செல்கிறது. ஏன், அது ஊளையிடுவதைப் பற்றி நினைத்துப் பார்ப்பதுதானே பயமும் கிளர்ச்சியும் கலந்த நடுக்கங்களை ஏற்படுத்துகிறது!
அழகாயிருந்தாலும் விளங்கமுடியாத இந்தப் பிராணியை காட்டில் பார்க்கும் வாய்ப்பு ஒருசில ஆட்களுக்கே கிடைத்திருக்கிறது. இது சாதாரணமாக சாம்பல்நிற ஓநாய் என்றறியப்பட்டிருக்கிறது. எனினும், இந்த வசீகரமான பிராணி வெவ்வேறு வித்தியாசப்பட்ட உருவங்களை மனதிற்கு கொண்டு வருகிறது.
வெறுக்கப்படுவதும் விரும்பப்படுவதும்
யூகம் என்னவாயிருந்தாலும், “ஓநாய்” என்ற வார்த்தையை கேட்டவுடன் எழும்பும் உணர்ச்சிகள் எப்போதும் மிகுதியாயிருந்திருக்கின்றன. தப்பெண்ணத்துக்கும் ஒருசார்புக்கும் பயத்துக்கும் இதுவே கவனத்தை ஈர்ப்பதாயிருந்திருக்கிறது. கொன்று தின்னும் பிராணியாக இருப்பதால் சிலர் ஓநாயை வெறுக்கின்றனர். ஆடுமாடுகளையும் மற்ற கால்நடைகளையும் இரையாகக்கொள்வதால் ஓநாய்கள் விவசாயிகளுக்கும் கால்நடை பண்ணை வைத்து நடத்துபவர்களுக்கும் தொடர்ந்து பெரிய தொல்லையாக இருந்திருக்கின்றன. பழங்கதைகள் இதன் கெட்ட பெயருக்கு காரணமாக இருந்திருக்கின்றன. ‘ஆட்டுத்தோலைப் போர்த்திய ஓநாய்’ என்ற ஆங்கில சொற்றொடரை யார்தான் கேட்டில்லை? கட்டுக்கதைகள் அதை “பெரிய பொல்லாத ஓநாய்” என்று சித்தரிக்கின்றன. ஓநாய் ஒரு சிறுமியைத் தின்ன பயங்காட்டுவதைப் பற்றி அப்படிப்பட்ட கதையொன்று எடுத்துரைக்கிறது. இதனால் ஓநாய்கள் மக்களைத் தாக்கும் என்ற எண்ணம் மக்களிடையே நிலவுகிறது.
என்றபோதிலும், விஞ்ஞானிகளும் உயிரியலாளர்களும் இன்னொரு விதமாக ஓநாய்களை நோக்குகின்றனர். கூடியமட்டும் மக்களைத் தவிர்க்கப் பார்க்கும் மிகவும் பயந்த சுபாவமுள்ள பிராணிகளாக கருதுகின்றனர். நிச்சயமாகவே, GEO பத்திரிகையில் வெளிவந்துள்ள சமீப கட்டுரையின்படி ஓநாய்கள் மனிதனுக்கு உண்மையிலேயே பயப்படுகின்றன. ஓநாய்கள் பயங்கரமான தோற்றமுடையவையாக இருந்தாலுங்கூட, வட அமெரிக்காவிலுள்ள ஆரோக்கியமான, காட்டு ஓநாய்கள் மனிதனுக்கு அச்சுறுத்தலாயிருக்கின்றன என்ற நம்பிக்கைக்கு ஆதாரமே இல்லாததாக தெரிகிறது.
ஓநாய் பற்றி ஆழமான ஆராய்ச்சி செய்திருக்கிற பால் பாக்கெட் என்ற உயிரியலாளர், இந்தக் காட்டுப் பிராணிகளை சிறு வயதுமுதல் விரும்பியதாக ஒத்துக்கொள்கிறார். கவனித்த சில காரியங்களையும் பதிவு செய்திருக்கிறார். சந்தோஷத்தையும் தனிமையையும் நகைச்சுவையையும் ஓநாய்கள் காட்டுவதை தான் அடிக்கடி பார்த்திருப்பதாக வலியுறுத்தினார். ஒரு தடவை, வேட்டையாடவே முடியாத வயதான, நொண்டியான ஓநாய்க்குத் தொகுதியிலுள்ள மற்ற ஓநாய்கள் சாப்பாடு கொண்டுவந்து தந்துகொண்டிருப்பதை கவனித்தார். இனியும் அந்த ஓநாயினால் ஒன்றும் செய்ய முடியாதென்றாலும், அந்தத் தொகுதியானது அதன் உயிரை மதித்து அதைக் காப்பாற்றி வந்தது. தொகுதி வேட்டையாடும் இந்த இயல்பு அந்த இனம் உயிர்வாழ்வதையே ஆபத்துக்குள்ளாக்கியிருக்கிறது.
தொகுதி வேட்டை
தொகுதிகளாக வேட்டையாடித்தானே ஓநாய்கள் தங்களுடைய பசியை ஆற்றி, அவற்றின் குட்டிகளையும் போஷிக்கின்றன. ஆனாலும் ஓநாய்கள், ஆடுமாடுகளைக் கொன்று தின்னுவது விவசாயிகளுக்கு படாத உபத்திரவமாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். கூர்மையான பார்வை, முகரும் நுண்மை, கூர்ந்து கேட்டல், விநோதம்வாய்ந்த பலமான கடி மேலும் ஓட்டத்திற்கும் தவ்வுநடைக்கும் ஏற்ற கொன்று தின்னும் பிராணியாக ஓநாய், வேட்டைக்கு முழுமையாக தயாராயிருக்கிறது. அது சந்தர்ப்பவாத பிராணியாகவும் இருக்கிறது. தந்திரமுள்ள இந்தப் பிராணி, தன்னால் பிடிக்க அல்லது பற்றமுடிந்த இரை, விசேஷமாக பெரிய, கொழுத்த ஆடோ மாடோ எளிதில் அகப்படுமானால், வாய்ப்பை நழுவவிடும் என்று நினைப்பது மடமை. ஓநாய்கள் காட்டில் தங்களுக்கே அறியாமல் தங்களுடைய இரைகளுக்கு “பயனளிக்கின்றன” என்று சொல்லலாம். எப்படியென்றால், நோய்வாய்ப்பட்டு, மெலிந்திருப்பவையாயிருக்கும் சுலபமாக கொல்லக்கூடியவற்றை பொறுக்கியெடுத்து தின்னுவதன் மூலம் புஷ்டியானவற்றிற்கு நிறைய உணவை விட்டுவைக்கின்றன.
ஓநாயின் பேச்சுத்தொடர்பு
மைல்கணக்கான தூரத்தில் கேட்டு, கேட்கிற ஆளுக்குப் பீதியைக் கிளப்பக்கூடிய அதன் பயங்கரமான ஊளையை பற்றி என்ன சொல்லலாம்? ஓநாய்க்கு இது, அதன் தொகுதியின் சமூக நடவடிக்கையாகவே அமைகிறது, ஒருவிதமான பேச்சுத்தொடர்பாகவே இருக்கிறது. வேட்டையில் பிரிந்துபோன ஓநாயானது முகட்டின் மேல் ஏறி அதன் தொகுதியிலுள்ள மற்ற ஓநாய்களின் கவனத்தை ஈர்க்க ஊளையிடலாம். அல்லது அதன் வட்டாரத்தை குறிக்க ஊளையிடலாம். சில வேளைகளில் ஓநாய்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஊளையிடுவதாக தெரிகின்றன. தொகுதியாகக்கூடி ஊளையிடுகையில் அவை பாட்டுக் கச்சேரியை அனுபவிப்பதாக நீங்கள் பெரும்பாலும் யோசிப்பீர்கள். அவை ஒரே ராகத்தில் பாடினால் நன்றாக இருக்கும்போல நமக்கு தோன்றும், அவற்றிற்கோ வித்தியாசப்பட்ட ராகங்களே பிடிக்கும். பேச்சுத்தொடர்பு கொள்வதற்கு வேறு முறைகளும் இருக்கின்றன என்பது உண்மைதான். முனகல், உறுமல், குரைத்தல், தொகுதியாக சேர்ந்து கீச்சிடுவது, குகையிலிருக்கும் குட்டிகளின் இரைச்சல் போன்ற முறைகளும் இருப்பதாக விவரிக்கப்படுகின்றன. அதன் தொகுதியின் மத்தியில் சமூக நிலையையும் உறவையும் நிர்ணயிக்க தோரணை மூலம் தொடர்புகொள்வதும் பயன்படுத்தப்படுகிறது.
அழகான பிராணி
இந்தக் கட்டழகான பிராணியை உற்றுப் பாருங்கள். வெண்மை, கறுப்பு, பழுப்புநிற முடிகலந்து பெருமளவு சாம்பல் நிறத்திலுள்ள (சில கன்னங்கரேலாக இருக்கின்றன) அடர்த்தியான ரோமத்தை கவனியுங்கள். ஊடுருவக்கூடிய தெளிவான மஞ்சள்நிற கண்களின் பார்வையை கூர்ந்து பாருங்கள். அதன் முக அடையாளங்களைப் பரிசோதனை செய்து பாருங்கள். இவை எல்லாவற்றாலும் ஓநாய் பார்ப்பதற்கு ஜம்மென்று இருக்கிறது. என்றாலும், அதன் எதிர்காலத்தைப் பற்றி கவலைகள் தெரிவிக்கப்படுகின்றன. கவலைப்படுவதற்கு காரணம் இருக்கிறதா?
ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா போன்ற நாடுகளின் பெரும்பகுதிகள் முழுவதிலும், ஒரு காலத்தில் ஓநாய்கள் சர்வசாதாரணமாக காணப்பட்டன. இப்போதோ கனடா, அலாஸ்கா, ஐக்கிய மாகாணங்களில் குறைந்த எண்ணிக்கையான மக்கள் வாழும் இடங்கள், ஐரோப்பா ரஷ்யா போன்ற நாடுகளில் அபூர்வமாக காணப்படுகின்றன. தெரிந்தெடுக்கப்பட்ட காடுகளில் சில ஓநாய்களுக்காக இடம் ஒதுக்க வேண்டும் என்று ஆட்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். கழுகுகள், கரடிகள், மலைவாழ் சிங்கங்கள் போன்ற கொன்று தின்னும் பிராணிகளோடு வாழ மனிதர் அறிந்திருப்பதால் “அதேபோல ஓநாய்களோடும் ஏன் வாழக்கூடாது?” என்று கேட்கிறவர்களும் இருக்கிறார்கள்.
இயற்கை நிலைக்குத் திரும்புவது
ஒழிப்பு அல்லது கட்டுப்பாடு வழக்குச் சொல்லாக இல்லாமல் பாதுகாப்பு வழக்குச் சொல்லாக இருக்கிறது. பூங்காவனங்கள் இப்போது பிராணிகளுக்கான புகலிடங்களாக கருதப்படுகிறதே ஒழிய, மக்களுக்கான விளையாட்டு வனங்களாக கருதப்படுவது கிடையாது. கெனடியன் ஜியோகிராஃபிக் பத்திரிகையின்படி பூங்கா வைத்து நடத்துபவர்கள் இயற்கையாகவே சீர்ப்படுத்தப்பட்ட சூழ்நிலை மண்டலத்தை பார்க்க ஆசைப்படுகின்றனர். கனடாவிலிருக்கும் பாம்ஃப் தேசிய பூங்காவிலிருந்து, 40-வருட மறைவிற்கு பிறகு பிரதான கொன்று தின்னும் பிராணியாகவிருந்த ஓநாய்கள் 1980-களில் தெற்கத்திய மலைத்தொடருக்குத் தாங்களாகவே திரும்பின. வெறும் 65 எண்ணிக்கையானவையே திரும்பியபோதிலும் அநேகருடைய மனங்களில் அது நேர்மறையான நிகழ்ச்சியாகவே இருந்திருக்கிறது. பிரான்ஸானது 50-வருட மறைவிற்குப் பிறகு ஓநாய் இனம் திரும்புவதாக அறிக்கை செய்கிறது.a இத்தாலியிலுங்கூட ஓநாய் இனமானது மீண்டிருப்பதால், ரோமிற்கு அருகிலுள்ள டிவலியில் மறுபடியும் ஊளையிடும் சத்தமானது கேட்கிறது.
ஐக்கிய மாகாணங்களிலுள்ள எல்லஸ்டோன் தேசிய பூங்காவில் அழியும் ஆபத்திலிருக்கும் இனமாக ஓநாய்களை மறுபடியும் அறிமுகப்படுத்துவது பரிசீலனையில் உள்ளது. துடைத்தழிப்பதற்கு முன்பாக 40 வருடங்களுக்கும் மேலாக, ஓநாய்கள் பிரதேசத்தின் இயற்கை மண்டலத்தின் பாகமாக இருந்தன. இப்போது அநேகர், குறிப்பாக பூங்கா விஜயதாரர்கள், அவற்றைத் திரும்பவும் விருப்பப்படுகிறார்கள். என்றபோதிலும், கால்நடை துறையானது தங்களுடைய மேய்ச்சல் நிலத்தில் ஓநாய்களைத் திரும்பவும் அறிமுகப்படுத்துவதைக் குறித்து மிகவும் கவலைப்படுகிறது. “எல்லஸ்டோனுக்கு ஓநாய்கள் திரும்பவும் கொண்டுவரப்பட்டால் பூங்காவனத்திற்கு புறம்பாக ஓநாய்களை வைத்து நடத்துவது சகஜமாகிவிடும்,” என்று ஓநாய் உயிரியலாளர் L. டேவிட் மெக் கூறுகிறார்.
மனிதர்கள் பகுதியாகவே பார்த்திருக்கிற உலகில் வாழும் இந்தப் பிராணிக்கு எதிர்காலம் எதைக் கொண்டுவரும்?
ஓநாயின் எதிர்காலம்
இவ்வளவு காலமாக வாழ மனிதனால் சற்றே அனுமதிக்கப்பட்ட பிராணியை திரும்பவும் மீட்டதற்கு ஆதரவு அளிக்கும் ஆட்களின் எண்ணிக்கையை பார்க்கையில், மனப்பான்மையில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருப்பதை எடுத்துக்காட்டுகிறது. ஓநாய்—அழியும் ஆபத்திலிருக்கும் இனத்தின் சூழலும் நடத்தையும் (The Wolf—The Ecology and Behavior of an Endangered Species) என்ற புத்தகம் சொல்கிறது: “அதன் நெருக்கடிநிலையிலிருந்து இந்த இனத்தைக் காப்பாற்ற இன்னும் காலம் இருக்கிறது. இது செய்யப்படுகிறதா இல்லையா என்பது, ஓநாயின் சூழலையும் நடத்தையையும் மனிதன் அறிவதன் பேரிலும் ஓநாயின் வாழும் விதங்களினூடே அவனுடைய விடா ஆய்வின்பேரிலும் ஓநாயை போட்டிபோடும் பிராணியாகக் கருதாமல் பூமியைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய சக பிராணியாக யோசிக்க கற்றுக்கொள்வதன்மீதும் சார்ந்திருக்கிறது.”
சமாதானமாக வாழ்வது
மக்களுக்கும் ஓநாய்களுக்கும் இடையே நட்பமைதியுடன்கூடிய கூட்டு வாழ்வு, கடந்த சில வருடங்களில் அபிவிருத்தி அடைந்திருக்கக்கூடும். ஆனால் போட்டி மனப்பான்மை இருந்தால், மெய்யான சமாதானத்தை அடைய முடியாது. இதற்கு, அடுத்துள்ள எதிர்காலத்தில் வரும் சமயத்திற்காக காத்திருக்கவேண்டும். அப்போது படைப்பாளரின் ராஜ்ய அரசாங்கத்தில், பலமுள்ள ஆனால் உணர்ச்சிமிகுந்த, பயந்த சுபாவமுள்ள இந்தப் பிராணிக்காக, எல்லா பகைமையும் பயமும், நம்பகமான பகிர்ந்தளிக்கக்கூடிய மனப்பான்மையால் மாற்றப்பட்டிருக்கும்.
அக்கறைக்குரிய விதமாக, பைபிள் ஓநாயை வெவ்வேறான தீர்க்கதரிசன சூழல்களில் விவரித்துக் காட்டுகிறது; இப்படியாக நாம் அதை நேரெதிரான நோக்குநிலைகளில் காணும்படி செய்கிறது. அப்போஸ்தலர் 20:29, 30-ல் செம்மறியாட்டைப் போன்ற கிறிஸ்தவ சபையைத் தாக்கி, மந்தையிலிருந்து தனிநபர்களில் சிலரை விலக்கிப்போடும் “கொடிதான ஓநாய்க”ளாக விசுவாசதுரோக மனிதர்கள் உருவகப்படுத்திக் காட்டப்பட்டிருக்கின்றனர்.
இன்று ஒன்றோடொன்று எதிராளிகளாயிருப்பதாக நாம் அறிந்திருக்கிற பிராணிகள், சமாதானமாக ஒன்றுகூடி வாழ்வதைப் பற்றி பைபிள் புத்தகமாகிய ஏசாயாவிலுள்ள தீர்க்கதரிசனங்கள் வருணித்துக் காட்டுகின்றன. இந்தத் தீர்க்கதரிசனங்கள் இன்னும் இறுதி நிறைவேற்றத்தை அடையவிருக்கின்றன. ஏசாயா 65:25-ல், கொன்றுதின்னக்கூடிய-இரையாகக்கூடிய உறவு மறைந்துபோவதை கவனியுங்கள்: “ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப் போல வைக்கோலைத் தின்னும்; . . . என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.”
ஓநாயை போனால் போகட்டும் என்று வாழவிட முயற்சிசெய்வதாக மனித பிரயாசைகள் காட்டுகையில், இப்போது மேற்கோள் காட்டப்பட்ட வசனமானது, கடவுள் தம்முடைய புதிய காரிய ஒழுங்குமுறையில் அதற்கென்று ஒரு இடத்தை ஒதுக்கிவைப்பாரென்று உறுதியளிக்கிறது. அப்போது, கேனிஸ் லூப்பஸ் உட்பட பூமி கோளமானது எல்லா வகையான ஜீவராசிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட வீடாக இருக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a ஜனவரி 22, 1994 ஆங்கில விழித்தெழு!-வில் “உலகத்தைக் கவனித்தல்” என்ற பகுதியைப் பாருங்கள்.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
Thomas Kitchin/Victoria Hurst
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
Thomas Kitchin