பயன்படுத்தப்பட்ட கார்—ஒன்றை வாங்குவது எப்படி
ஒரு காரை அதன் அசலுக்குப் பாதியை அல்லது அதிலும் குறைவான விலையைக் கொடுத்து வாங்குவதை யார்தான் விரும்பமாட்டார்கள்? ‘அது நிஜமாகவே சாத்தியமா’ என்று கேட்கிறீர்களா? ஆம்—ஏற்கெனவே ஒருவருக்குச் சொந்தமாக இருந்த வாகனத்தை, நன்கு அறியப்பட்டவிதத்தில் சொன்னால், பயன்படுத்தப்பட்ட ஒரு காரைப் பொறுத்ததில் அது சாத்தியமே. பிரச்சினை என்னவென்றால், பயன்படுத்தப்பட்ட ஒரு காரை வாங்குவது ஆதாயமற்றது என அநேகர் பயப்படுகின்றனர். மற்ற இயந்திரங்களைப்போலவே, கார்களும் மீண்டும் பயன்படுத்த முடியாதளவுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, ஒரு காரின் வயது, அது ஓடியிருக்கும் தொலைவு, அதன் பயன்பாடு ஆகியவற்றுடன் அதன் மதிப்பு குறைகிறது.
என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்தட்டுமா? 15 வருடங்களுக்கும் மேலாக நான் ஒரு ஆட்டோ டெக்னிஷனாக இருந்திருக்கிறேன். ஆகவே நான் கற்றுக்கொண்ட காரியங்களில் சிலவற்றை உங்களுக்கும் சொல்லுகிறேன். பயன்படுத்தப்பட்ட ஒரு காரை வாங்குவதற்குமுன் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளவேண்டிய ஒருசில கேள்விகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
என்னால் எவ்வளவு செலவுசெய்ய முடியும்?
முதலாவதாக, ஒரு காருக்காக உங்களால் எவ்வளவு செலவுசெய்ய முடியும் என்பதைக் கணக்கிடுங்கள். பின்னர், நீங்கள் உத்தேசிக்கிற விலை வரையறைக்குள் இருக்கும் கார்கள் எந்த வருடத்தில் உற்பத்தி செய்யப்பட்டன மற்றும் அவற்றின் மாடல் பற்றிய ஒரு கருத்தை செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம். சில நாடுகளில், வங்கிகள், கடன் நிறுவனங்கள், மற்றும் சில நூலகங்கள், பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகளைப் பட்டியலிடுகிற மாதாந்தர வழிகாட்டு பிரசுரங்களை வைத்திருக்கின்றன. காரின் விலையை மட்டுமல்ல, ஆனால் வரிகள், பதிவுசெய்தல், காப்பீடு ஆகியவற்றிற்கான செலவுகளையும் கணக்கிட நிச்சயமாயிருங்கள். மேலும், நீங்கள் அந்தக் காரை வாங்கிய பிறகு தேவைப்படக்கூடிய எதிர்பாராத பழுதுபார்ப்பு வேலைகளுக்காகவும் கொஞ்சம் பணத்தை வைத்துக்கொள்ள திட்டமிடுங்கள்.
எந்த வகையான கார் எனக்குத் தேவை?
உங்களுக்கு என்ன தேவை என்று தீர்மானிக்க முயலுகையில், உங்களுக்கு எது முக்கியம் என்பதைத் தீர்மானியுங்கள். உங்கள் குடும்பத்தின் அளவையும், வேலைக்கு காரில் செல்வது, பிள்ளைகளை பள்ளிக்குக் கொண்டுபோய்விடுவது, கிறிஸ்தவ ஊழியத்திற்குப் போவது என்பதுபோன்ற எந்தெந்த நடவடிக்கைகளுக்காக அந்தக் கார் பயன்படுத்தப்படும் என்பதையும் யோசித்துக் கொள்ளுங்கள். அந்தக் கார் உள்ளூர் பயணங்களுக்கு பயன்படுத்தப்படுமா அல்லது நீண்டதூரப் பயணங்களுக்கா? குறிப்பிட்ட பிராண்ட் அல்லது மாடலுக்கு உங்களை வரையறைப்படுத்தாதீர்கள்; மாறாக, நன்கு பழுதுபார்க்கப்பட்டதும் நல்ல நிலையிலும் உள்ள ஒரு காரைத் தேடுங்கள். பழுதுபார்ப்பதற்கு (service) சுலபமாக இருக்கும் ஒரு காரை வாங்குங்கள். எல்லா கார்களுக்கும் காலப்போக்கில் மாற்றீடு செய்யவேண்டிய பாகங்கள் தேவைப்படும். நீங்கள் வாழும் பகுதியில், பொருத்தமான பாகங்களை தரவு செய்பவர் இருக்கிறாரா? பத்து வருடங்களுக்கும் மேலான பழமை வாய்ந்த கார்களுடைய பாகங்களைப் பெறுவது கடினம். உங்களால் செலவுசெய்ய முடிந்த பணத்தின் அளவு வரையறுக்கப்பட்டதாய் இருந்தால், சொகுசான அல்லது இறக்குமதி செய்யப்பட்ட விசேஷித்த கார்களை தவிர்த்துவிடுங்கள்; ஏனென்றால், அதற்குரிய பாகங்களும், பழுதுபார்ப்பும், சந்தேகமின்றி அதிக செலவுள்ளவையாகும். அப்பேர்ப்பட்ட கார்கள் மிகவும் நம்பகரமானவையாய் இருக்குமென்றாலும், அவற்றை சொந்தமாக வைத்திருப்பது அதிக செலவையும் உட்படுத்தலாம்.
அது ஒரு நல்ல காரா?
ஒரு நல்ல கார் என்பது நன்கு பழுதுபார்க்கப்பட்ட ஒன்றாகும். பொதுவாக, மிகவும் அதிகமான மைல்—முக்கியமாக நெடுஞ்சாலைகளில் அல்லாமல் நகரத்தில் ஓட்டியதன் விளைவாக அதிகம்—ஓடியிருக்கும் கார்களைத் தவிர்ப்பது மிகச் சிறந்தது. அதிக மைல் ஓடியிருத்தலில் என்ன உட்பட்டிருக்கிறது என்பது இடத்திற்கு இடம் வேறுபடக்கூடும். பயன்படுத்தப்பட்ட எந்தக் காரும் குறைபாடற்றது அல்ல. என்றபோதிலும், காருக்குத் தேவைப்படுகிற பழுதுபார்ப்பு வேலைகளுக்காக உங்களால் செலவுசெய்ய முடியுமா? வழக்கமாக, பழுதுபார்ப்பு வேலைகள் காரின் மதிப்பைக் கூட்டாது. உதாரணமாக, நீங்கள் $3,000-க்கு ஒரு காரை வாங்கி, பின்னர் அவசியமான பழுதுபார்ப்பு வேலைகளுக்காக $1,000 செலவிட்டால், அந்தக் கார் $4,000 மதிப்புள்ளதாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. சாதாரணமாக, மோசமான நிலையில் ஒரு காரை வாங்கி அதை சரிசெய்வதைக் காட்டிலும் நல்ல நிலையில் ஒரு காரை வாங்குவது குறைவான செலவுள்ளதாய் இருக்கும்.
ஒரு நல்ல காரைத் தெரிந்தெடுப்பதன்பேரில் இதோ சில குறிப்புகள்:
• ஒரு காரை வாங்குவதற்கு முன் அதை முழுமையாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். அந்தக் காரின் உண்மையான மதிப்பைக் கண்டுபிடிக்க வேண்டுமானால், இரவிலோ மழை பெய்கையிலோ அதைப் பார்ப்பதைத் தவிருங்கள். காரைச் சுற்றி வேகமான ஒரு நடை நடந்து பாருங்கள். அதைப் பற்றி உங்களுக்கு என்ன அபிப்பிராயம் கிடைக்கிறது? அதை உள்ளும் புறம்புமாக நோக்குகையில், முன்பு அதை வைத்திருந்தவர் அதை வைத்திருந்ததற்காக பெருமிதமாக உணர்ந்திருப்பார் என்பதைக் காட்டுகிறதா? அவை நன்றாகப் பழுதுபார்க்கப்பட்டிருக்கின்றனவா? அந்த வாகனத்தை விற்பவர் அதற்குச் செய்யப்பட்டுள்ள பழுதுபார்ப்பு பதிவைத் தர முடியுமா? முடியாதென்றால், பெரும்பாலும் அந்தக் கார் கவனிக்கப்படாமல் விடப்பட்டதாய் இருந்திருக்கும். நீங்கள் மேலுமாக அந்தக் காரை பார்க்க விரும்பாமலிருக்கக்கூடும்.
• அந்தக் காருக்கு சோதனை ஓட்டம் நடத்துங்கள். ஒரு சோதனை ஓட்டத்தில் அந்தக் காரை நெடுஞ்சாலை வேகம் வரையாக விசையேற்றுங்கள் (ஆக்ஸிலரேட் செய்யுங்கள்). மேலும் மலைப்பாங்கான பகுதியிலும் மட்டநிலையிலுள்ள தெருக்களிலும் நிறுத்தி-பின்னர்-செல்லும்போது எப்படியிருக்கிறது என்றும் கொஞ்சம் ஓட்டிப் பாருங்கள்.
என்ஜின்:
அந்த என்ஜின் நன்றாக ஸ்டார்ட் செய்கிறதா?
புகை வெளியேற்றும் குழாயிலிருந்து அதிகமான புகை வராமல் இருக்கிறதா?
என்ஜின் நன்றாக இயங்குகிறதா?
அது மெதுவாக இயங்கும்போது சீராக இருக்கிறதா?
என்ஜின் தேவையற்ற சத்தமின்றி இருக்கிறதா?
நல்ல இயக்கவிசைக்குப் போதுமான சக்தியை அந்த என்ஜின் கொண்டிருக்கிறதா?
மேற்சொல்லப்பட்ட எந்தவொரு கேள்விக்காவது இல்லை என்பது பதிலாக இருந்தால், அந்த என்ஜின் திறம்பட செயல்படும்படி பொதுவான சரிப்படுத்தல்களோ (tune-up) அல்லது அதிக சிக்கலான பழுதுபார்ப்பு வேலைகளோ அதற்குத் தேவைப்படக்கூடும். இந்த நிலைமைகள், தேய்ந்துபோன ஒரு என்ஜினுக்கு அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதற்கு வெறும் பொதுவான சரிப்படுத்தல்களே தேவைப்படுகின்றன என்று விற்பவர் சொன்னால் ஜாக்கிரதையாய் இருங்கள். பொதுவான சரிப்படுத்தல்கள் காரின் ஒழுங்கான பராமரிப்பின் பாகமாக இருந்திருக்க வேண்டும்.
ட்ரான்ஸ்மிஷன்:
தானியங்கும் ட்ரான்ஸ்மிஷனில் கியரைப் பொருத்தும்போது, நழுவுகிறதா அல்லது பொருந்தாமல் இருக்கிறதா?
கியர் மாற்றும்போது அது தடங்கலின்றி செயல்படத் தவறுகிறதா?
எந்த கியரிலாவது இரைச்சல் சத்தங்கள் ஏற்படுகின்றனவா?
இந்தக் கேள்விகளில் எவற்றிற்காவது ஆம் என்பது பதிலாக இருந்தால், அந்த ட்ரான்ஸ்மிஷனுக்கு பழுதுபார்ப்பு தேவைப்படக்கூடும்.
ப்ரேக்குகள் மற்றும் ஸஸ்பென்ஷன்:
நீங்கள் காரை ஓட்டும்போது அல்லது ப்ரேக்கை அழுத்தும்போது, கார் ஒரு பக்கமாக இழுத்துக்கொள்கிறதா?
குறிப்பிட்ட வேகங்களில் செல்லும்போது அல்லது ப்ரேக்கை அழுத்தும்போது கார் அதிர்வுறுகிறதா?
நீங்கள் ப்ரேக்கை அழுத்தும்போது அல்லது திருப்பும்போது அல்லது வேகத்தடைகள்மேல் ஓட்டும்போது தேவையற்ற சத்தங்கள் கேட்கின்றனவா?
இந்தக் கேள்விகளில் எவற்றிற்காவது ஆம் என்பது பதிலாக இருந்தால், காருக்கு ப்ரேக் அல்லது ஸஸ்பென்ஷன் அமைப்பில் பழுதுபார்ப்பு வேலை தேவைப்படக்கூடும்.
• பழுதுபார்ப்பு மற்ற பாகங்களுக்குத் தேவைப்படுகின்றனவா என்றும் பாருங்கள். காருக்கு உள்ளேயும் வெளியேயும் அடியிலேயும் பார்ப்பதற்கு ஏற்ற ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள்.
• கார்பாடியில் துருப்பிடித்திருக்கிறதா என்று பாருங்கள். துரு இருக்கும் கார்களைத் தவிருங்கள். பெரும்பாலான புதிய கார்கள் “யூனிபாடி” (unibody) கட்டமைப்புடையவை. பல பகுதிகளில் கட்டமைப்பு முறை சார்ந்த பலத்திற்காக கார்பாடி பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பாகங்கள் துருப்பிடிக்கும்போது, அவற்றை முழுமையாகப் பழுதுபார்ப்பதற்கு பொதுவாக மிகவும் செலவாகும். மட்கார்ட்டில் துருப்பிடித்திருப்பது மேலோட்டமானதாக இருக்கலாம், ஆனால் பொதுவாக, இது மற்ற கட்டுமான பகுதிகளும் துருவைக் கொண்டிருப்பதற்கு அறிகுறியாக இருக்கிறது. துருப்பிடித்திருக்கிறதா என்று காருக்கு அடியில் பாருங்கள். புதிதாகப் பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தால் ஜாக்கிரதையாய் இருங்கள்; அந்தக் கார் ஒரு வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையாக இருக்கலாம்.
• விபத்தால் ஏற்பட்ட சேதம் இருக்கிறதா என்று பாருங்கள். போனட்டுக்கு அடியிலும் டிக்கியிலும் விபத்து சேதங்கள் மறைந்திருக்கின்றனவா என்று பாருங்கள். கதவுகளும், போனட்டும், டிக்கியும் பொருந்துகின்றனவா? தேவையற்ற பகுதிகளில், டோர்ஜாம் போன்ற பகுதிகளில் பெயின்ட் தெளிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா? டிக்கியிலோ விரிப்புகள் விரிக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலோ ஒழுக்குகள் இருக்கின்றனவா? இந்த ஒழுக்குகள் துருவை ஏற்படுத்தலாம்.
• என்ஜின் ஆயிலை பரிசோதியுங்கள். ஆயில் அளவுகோலைப் பாருங்கள். ஆயில் அளவு குறைவாக இருக்கிறதா? அதிகமான ஆயில் உட்கொள்ளப்படுதல் அல்லது ஒழுக்குகளின் விளைவாக இது ஏற்படலாம். ஆயில் அதிக அழுக்காகவோ கறுப்பாகவோ இருக்கிறதா? அது இறுகிய பசை போன்று இருக்கிறதா? வால்வ் அடைப்புகளைச் சுற்றிலும் ஈரமான ஆயிலுக்கான அறிகுறிகள் இருக்கின்றனவாவென பாருங்கள். காருக்குள் செல்லுங்கள், இக்னிஷன் ஸ்விட்சை இயக்குங்கள், ஆனால் காரை ஸ்டார்ட் செய்யாதீர்கள். குறைந்தளவு-ஆயில்-அழுத்தம் என்பதற்குரிய எச்சரிக்கை விளக்கு எரிகிறதா? காரில் ஆயில் அழுத்த மானி இருக்கிறது என்றால் அது பூஜ்யம் என்று காண்பிக்க வேண்டும். இப்போது என்ஜினை ஸ்டார்ட் செய்து, மிகவும் மெதுவாக இயங்கும்நிலையில் என்ஜினை வைத்துக்கொண்டு, ஆயில் அழுத்தத்திற்குரிய விளக்கு அணைவதற்கு அல்லது வழக்கமான என்ஜின் ஆயில் அழுத்தத்தை அந்த மானி காண்பிப்பதற்கு எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று கவனியுங்கள். அந்த விளக்கு அணைவதற்கு அல்லது அந்த மானி வழக்கமான அழுத்தத்தைக் குறித்துக் காட்டுவதற்கு இரண்டு வினாடிகளைவிட அதிக நேரத்தை எடுத்ததென்றால் அதிகப்படியாக என்ஜின் தேய்ந்திருப்பதை அது குறிப்பிடுவதாக இருக்கலாம். ஐக்கிய மாகாணங்களிலுள்ள சில புதிய கார்களில், இக்னிஷன் ஸ்விட்சை இயக்கியதும், ஆனால் என்ஜின் ஓடாமல் இருக்கையில், “என்ஜினை சரி பாருங்கள்” அல்லது “சீக்கிரத்தில் என்ஜினை சர்விஸ் செய்யுங்கள்” என்று உணர்த்தக்கூடிய விளக்கு வர வேண்டும். என்ஜின் ஓடும்போது அந்த விளக்கு அணைய வேண்டும். என்ஜின் ஓடும்போது அந்த விளக்கு இருந்தால், இது வழக்கமாக ஒரு என்ஜின் பிரச்சினையை, ஒருவேளை புகை வெளியேற்ற கட்டுப்பாட்டு அமைப்பில் அல்லது எரிபொருள் வழங்குதல் அமைப்பில் பிரச்சினையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
• தானியங்கும் ட்ரான்ஸ்மிஷன் திரவத்தைப் பரிசோதியுங்கள். அது குறைந்த அளவானதாக அல்லது கருகியதாக இருக்கிறதா? தானியங்கி ட்ரான்ஸ்மிஷனுக்கு அடியில் ஒழுக்குகள் இருக்கின்றனவா என்று பாருங்கள். ட்ரான்ஸ்மிஷனில் பெரிய வேலை செய்யப்படுவதற்கான தேவையை இந்த நிலைமைகள் குறிப்பிட்டுக் காட்டுபவையாய் இருக்கலாம். முன் சக்கர இயக்க வண்டியாக அந்தக் கார் இருந்தால், நிலையான வேக இணைப்பு ரப்பர்கள் கிழிந்திருக்கின்றனவா என்று அடியில் குனிந்து பாருங்கள். அப்படியானால், க்ரீஸ் வெளியே கசிந்தொழுகலாம்; இது அந்த இணைப்புகளுக்கு விரைவாக சேதத்தை ஏற்படுத்தலாம்; அவற்றை மாற்றீடு செய்வதற்கு அதிக செலவாகும்.
• நான்கு டயர்களையும் பரிசோதியுங்கள். அவை மிகவும் தேய்ந்திருந்தால், அவற்றை மாற்றீடு செய்யவேண்டியதிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். டயர் ட்ரெட்டுகள் வழக்கத்திற்கு மாறானவிதத்தில் தேய்ந்திருந்தால், ஸ்டியரிங் பாகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு அல்லது மாற்றீடு செய்வதற்கான தேவை இருக்கக்கூடும்.
• பவர் ஸ்டியரிங் அமைப்பைப் பரிசோதியுங்கள். அதன் திரவம் கருகியதாக அல்லது குறைந்த அளவுள்ளதாக இருக்கிறதா? காரை ஸ்டார்ட் செய்து, ஸ்டியரிங்கை ஒரு பக்கத்திலிருந்து மற்ற பக்கத்திற்கு பலமுறை திருப்புங்கள். வலது பக்கமோ இடது பக்கமோ திருப்புவதற்கு சமமான அழுத்தம் அவசியப்பட வேண்டும். ஸ்டியரிங்கைத் திருப்புகையில், பிடிப்பதுபோன்ற உணர்வு ஏதாவது ஏற்படுகிறதா? பவர் ஸ்டியரிங் இயக்கம் ஓரளவுக்கு சத்தமின்றியே நடைபெற வேண்டும். இயக்கத்தில் ஏதாவது பிரச்சினை இருந்தால், செலவுள்ள பழுதுபார்ப்பு வேலைகள் தேவைப்படலாம்.
• மற்ற பரிசோதனைகள்.
பெல்ட்டுகள் மற்றும் ஹோஸ்களின் நிலைமையைப் பரிசோதியுங்கள்.
ஒரு மலையில், ஹேன்ட் பிரேக் எப்படி இயங்குகிறது என்று பரிசோதியுங்கள்.
பிரேக் பெடலில் வழக்கத்திற்கு மாறான அளவு தேய்வு இருக்கிறதா என்று பாருங்கள்.
புகை வெளியேற்றும் அமைப்பின் நிலைமை எப்படி இருக்கிறது என்று பாருங்கள். தேவையற்ற சத்தம் வருகிறதா? தளர்வானதாக இருக்கிறதா?
ஷாக் அப்ஸார்பர்களும் ஸ்பிரிங்குகளும் எப்படி இருக்கின்றனவென்று பாருங்கள். கார் தாழ்வானதாக இருக்கிறதா, அல்லது ஒவ்வொரு மூலையிலும் நீங்கள் அழுத்திப்பார்க்கும்போது, மூன்று தடவைகளுக்கும் மேலாக துள்ளி எழும்புகிறதா?
ஏர் கண்டிஷனர் இருந்தால், ப்ளோயர் வேகங்கள் அனைத்திலும் அது இயங்குகிறதா?
விளக்குகள், வைப்பர்கள், ஹார்ன், ஸீட் பெல்ட்டுகள், ஜன்னல்கள் ஆகியவை இயங்குகின்றனவா?
வாகனத்துடைய பின்பக்கத்தின் அடிபாகத்தில் பார்த்து, ஒரு ட்ரெய்லர் இணைக்கப்பட்டிருந்ததை வெளிப்படுத்தும் அறிகுறிகள் ஏதாவது இருக்கின்றனவா என்று பாருங்கள். அப்படியானால், எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று சிபாரிசு செய்யப்படுகிறது, ஏனென்றால் கட்டியிழுத்துச் செல்லுதல் வாகனத்தின் ட்ரான்ஸ்மிஷன்மீது அளவுக்கதிகமான பளுவை ஏற்படுத்தியிருக்கக்கூடும்.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிசோதனைகள் எவற்றையாவது குறித்து நீங்கள் நிச்சயமற்றவர்களாய் இருந்தால், அந்தக் காரை வாங்குமுன், தொழில்முறை மெக்கானிக் ஒருவரை வைத்து அதை மதிப்பிட்டுக்கொள்வது ஞானமான காரியமாக இருக்கக்கூடும். அந்தக் காரை மீண்டும் பார்த்து, பின்வருபவற்றைக் குறித்து ஒரு பட்டியலிடும்படி கேட்டுக்கொள்ளுங்கள்:
1. காருக்கு உடனடியாகத் தேவைப்படுகிற பழுதுபார்ப்பு வேலைகள், அதன் பாகங்கள் மற்றும் வேலையின் செலவைக் குறித்த ஒரு மதிப்பீடு.
2. அடுத்த வருடம் அந்தக் காருக்குத் தேவைப்படக்கூடிய பழுதுபார்ப்பு வேலைகள், அதன் பாகங்கள் மற்றும் வேலையின் செலவைக் குறித்த ஒரு மதிப்பீடு.
தொழில்முறை மெக்கானிக் ஒருவரால் செய்யப்பட்ட இந்த ஆய்வு ஒரு மணிநேரத்திற்கும் குறைவாகவே எடுக்கும். ஒரு மணிநேர வேலைக்குரிய சம்பளத்தை நீங்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்றாலும், தேவையான பழுதுபார்ப்புகளுக்காகும் அறியப்படாத தொகையுடன் ஒப்பிடுகையில் இந்தச் செலவு குறைவானதே. சமீபத்தில் அந்தக் காரில் என்ன வேலை செய்யப்பட்டிருக்கிறது என்று விற்பவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். சர்விஸ் செய்யப்பட்ட பதிவுகளைக் கேட்டு வாங்கிப் பாருங்கள். ஆயிலும் ஆயில் ஃபில்டரும் ஒழுங்காக மாற்றப்பட்டிருந்தனவா? தானியங்கும் ட்ரான்ஸ்மிஷன் எப்போதாவது சர்விஸ் பண்ணப்பட்டிருந்ததா? கடைசியாக காரில் எப்போது பொதுவான சரிப்படுத்தல்கள் செய்யப்பட்டன? நன்கு பராமரிக்கப்பட்டதும் அதிக வேலை தேவைப்படாததுமாக இருக்கிற ஒரு கார்தான் நல்ல கார் என்பதை நினைவில் வையுங்கள்.
காரைப் பற்றி கிடைத்த எல்லா விவரங்களையும் வைத்து முதலில் உட்கார்ந்து, செலவைக் கணக்கிடுங்கள். பின்னர் அந்தக் கார் அந்த மதிப்பிற்கு ஏற்றதாக இருக்கிறதாவென்றும், வாங்குகிற விலை மட்டுமல்லாமல் மற்ற செலவுகளையும் செய்ய நீங்கள் போதியளவு பணத்தைத் திட்டமிட்டிருக்கிறீர்களா என்றும் தீர்மானியுங்கள்.—ஒரு ஆட்டோ டெக்னிஷனால் அளிக்கப்பட்டது.
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
நீங்கள் வாங்குகிற கார் நல்லதென்று எப்படி நிச்சயமாய் இருக்கலாம்? நீங்கள் கவனிக்கவேண்டிய அநேக காரியங்களில் சில இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளன
நீங்கள் காரை வாங்குவதற்கு முன் ஒரு ஆட்டோ டெக்னிஷனை வைத்து அதை ஆய்வு செய்யுங்கள்
ஆயிலும் ஆயில் ஃபில்டரும் ஒழுங்காக மாற்றப்பட்டிருக்கிறதா?
விபத்து சேதம் ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள். கதவுகளும், போனட்டும், டிக்கியும் சரியாக பொருந்து கின்றனவா?
வழக்கத்திற்கு மாறான விதத்தில் டயர் தேய்வானது, மோசமான ஒழுங்குப்படுத்தல் அல்லது ஸ்டியரிங் பிரச்சினைகளுக்கு அறிகுறியாக இருக்கக்கூடும்