பைபிளின் கருத்து
கார்னிவல் கொண்டாட்டங்கள்—சரியா, தவறா?
“உங்களால் அதைத் தாக்குப்பிடிக்க முடியாது” என்று மைக்கல் கூறுகிறார். “அந்த இசை உங்களை நாற்காலியைவிட்டு எழுந்திருக்கும்படி செய்கிறது, உங்கள் கால்களை ஆடவைக்கிறது, கட்டுப்படுத்த முடியாதவாறு தலையை ஆடவைக்கிறது—உங்களுக்கு கார்னிவல் ‘காய்ச்சல்’ உள்ளது என்று அர்த்தம்!” உண்மையில், ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கானோரை கார்னிவல் பரவசமடையச் செய்கிறது, ஆனால் அக் “காய்ச்சல்,” மைக்கல் வாழும் நாடான பிரேஸிலைப் போல அவ்வளவு பரவசமடையச் செய்வதாய் வேறெங்கும் இல்லை. சாம்பற்புதனுக்கு முந்தின வாரத்தின்போது, பிரேஸிலைச் சேர்ந்தவர்கள் கண்ணைக்கவரும் உடைகளை அணிகின்றனர், தங்கள் கடமைகளையும் அட்டவணைகளையும் மறந்துவிடுகின்றனர், அமேசான் காடுகளிலிருந்து ரியோடி ஜனீரோ வரையில் நாட்டை அசைவிக்கும் ஒரு காட்சிக்குள் மூழ்கிவிடுகின்றனர். அது பாடுவதற்கும், ஆடுவதற்கும், மறப்பதற்குமான ஒரு சமயமாய் உள்ளது.
“அது பிரபலமாய் இருப்பதற்கு அது ஒரு காரணம்,” என்று பல ஆண்டுகளாக ஆர்வத்துடன் கார்னிவலைக் கொண்டாடினவராய் இருந்த மைக்கல் விவரிக்கிறார். “மக்கள் தங்கள் துக்கத்தை மறப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை கார்னிவல் அளிக்கிறது.” மேலும் விசேஷமாக கோடிக்கணக்கான ஏழைகளுக்கு—போதிய தண்ணீரின்றி, மின்சாரமின்றி, வேலையின்றி, நம்பிக்கையுமின்றி வாழ்பவர்களுக்கு—மறப்பதற்கு ஏராளமிருக்கிறது. அவர்களுக்கு கார்னிவல் என்பது தலைவலி மாத்திரை போன்றது: அது பிரச்சினைகளைத் தீர்க்காவிட்டாலும், வலியை மரத்துப்போகும்படியாவது செய்யும். அதோடு, ரோமன் கத்தோலிக்க மதகுருமார்களில் சிலர் கொண்டிருக்கும் நோக்குநிலையைச் சிந்தித்துப் பாருங்கள்—“மக்களின் உளவியல் சார்ந்த சமநிலைக்கு கார்னிவல் மிகவும் பயனுள்ளது” என்று ஒரு பிஷப் கூறினார். ஆகவே பலர் கார்னிவலை பயனுள்ள ஒன்றாகவும், அங்கீகரிக்கப்பட்ட கவனமாற்றமாகவும் உணருவது ஏன் என்பதைக் காண்பது எளிது. என்றபோதிலும், கார்னிவல் கொண்டாட்டங்களைப் பற்றி பைபிளின் நோக்குநிலை என்ன?
மகிழ்ச்சிக்கொண்டாட்டமா, களியாட்டமா?
“நகைக்க ஒரு காலமுண்டு . . . நடனம்பண்ண ஒரு காலமுண்டு” என்று கடவுளுடைய வார்த்தை கூறுகிறது. (பிரசங்கி 3:4) “நகைக்க” என்பதற்கான எபிரெய வார்த்தை “கொண்டாட” என்றும் மொழியாக்கம் செய்யப்படலாம் என்பதால், நம் சிருஷ்டிகரைப் பொறுத்தவரை, ஓர் ஆரோக்கியகரமான, மகிழ்ச்சியான சமயத்தைக் கொண்டிருப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பது தெளிவாய் உள்ளது. (1 சாமுவேல் 18:6, 7-ஐக் காண்க.) உண்மையில், நாம் மகிழ்ச்சியாயும் சந்தோஷமாயும் இருக்கும்படியே கடவுளுடைய வார்த்தை கூறுகிறது. (பிரசங்கி 3:22; 9:7) ஆகவே பைபிள் பொருத்தமான மகிழ்ச்சிக்கொண்டாட்டத்தை அங்கீகரிக்கிறது.
என்றபோதிலும், பைபிள் எல்லா வகையான மகிழ்ச்சிக்கொண்டாட்டத்தையும் அங்கீகரிப்பதில்லை. களியாட்டம், அல்லது கும்மாளத்துடன்கூடிய மகிழ்ச்சிக்கொண்டாட்டம் “மாம்சத்தின் கிரியைகளோடு” தொடர்புடையதாகவும், அவ்வாறான களியாட்டக்காரர்கள் “கடவுளுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என்பதாகவும் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார். (கலாத்தியர் 5:19-21) ஆகவே, ‘களியாட்டக்காரர்களாய் இராமல், சீராய் நடக்கும்படி’ கிறிஸ்தவர்களைப் பவுல் கடிந்துரைத்தார். (ரோமர் 13:13) ஆகவே கேள்வியானது, கார்னிவல் எந்தப் பிரிவைச் சேர்ந்தது—தீங்கில்லாத மகிழ்ச்சிக்கொண்டாட்டமா, அல்லது வரம்பு மீறிய களியாட்டமா? பதிலளிக்க, முதலில் களியாட்டத்தை பைபிள் எவ்வாறு நோக்குகிறது என்பதை சற்று கூடுதலாக விளக்குவோமாக.
“களியாட்டம்” என்ற வார்த்தை, அல்லது கிரேக்கில் கோம்மாஸ் (ko’mos) என்பது, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மூன்று தடவை, எப்பொழுதும் சாதகமற்ற அர்த்தத்தில் வருகிறது. (ரோமர் 13:13; கலாத்தியர் 5:21; 1 பேதுரு 4:3) மேலும் கோம்மாஸ் கிரேக்க மொழி பேசும் ஆரம்பக் கிறிஸ்தவர்கள் நன்கு அறிந்திருந்த இழிவான கொண்டாட்டங்களிலிருந்து தோன்றுவதால் ஆச்சரியமாய் இல்லை. எவை?
வரலாற்று வல்லுநர் வில் டூரன்ட் விவரிக்கிறார்: “மக்களின் ஒரு தொகுதி, புனித ஞாபகக்குறியை [ஆண் இன உறுப்பின் அடையாளச் சின்னம்] தூக்கிக்கொண்டு டயோனிசஸுக்குப் பாடல்கள் பாடிக்கொண்டிருப்பதே கிரேக்க வார்த்தையின்படி, ஒரு கோம்மாஸ் அல்லது களியாட்டம் என்பதைக் குறிப்பிட்டுக்காட்டியது.” கிரேக்கப் புராணக்கதையில் வரும் திராட்சரசத்தின் கடவுளான டயோனிசஸ், பின்பு ரோமர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டான், அவர்கள் அவனுக்கு பேக்கஸ் என்று மறுபெயர் சூட்டினர். ஆனாலும், பெயர் மாற்றப்பட்டபோதிலும், இந்த கோம்மாஸ் என்பதன் பொருள் மாறவில்லை. பைபிள் கல்விமான் டாக்டர் ஜேம்ஸ் மக்நைட் எழுதுகிறார்: ‘கோம்மாய்ஸ் (ko’mois [கோம்மாஸ் என்பதன் பன்மை]) என்ற வார்த்தை விருந்து மற்றும் களியாட்டத்தின் கடவுளாகிய கோமஸ் (Comus) என்பதிலிருந்து வருகிறது. இக் களியாட்டங்கள், அதன் காரணமாகவே கோமஸ்டஸ் (Comastes) என்று பெயரிடப்பட்டிருந்த பேக்கஸைக் கௌரவிக்கும்படியாக செய்யப்பட்டன.’ ஆம், டயோனிசஸ் மற்றும் பேக்கஸுக்கான கொண்டாட்டங்கள் களியாட்டைப் பற்றி நன்கு புரிந்துகொள்ளும்படி இருந்தன. இவ் விருந்துகளின் அம்சங்கள் என்னவாயிருந்தன?
களியாட்ட வருணனை
டயோனிசஸைக் கௌரவிக்கும் கிரேக்க விழாக்களின்போது, கொண்டாடுபவர்கள் “தடையின்றி குடித்ததோடு, . . . தடை செய்யும் ஒருவனை முட்டாளாகக் கருதினர். அவர்கள் காட்டுத்தனமாக ஊர்வலம் சென்றனர், . . . மேலும் குடித்து ஆடுகையில் தலைகால் தெரியாமல் ஆவேசப்படுவதால் எல்லாக் கட்டுப்பாட்டையும் இழந்துவிட்டனர்” என்று டூரன்ட் கூறுகிறார். அதே கோணத்தில், பேக்கஸைக் கௌரவிக்கும் ரோம விழாக்கள் (பேக்கனேலியா என்று அழைக்கப்பட்டது) குடிப்பதை முக்கியப்படுத்திக் காட்டியதுடன், காம உணர்வைத் தூண்டும் பாடல்களும் இசையும் “காண சகிக்காத செய்கைகளின்” காட்சிகளாய் இருந்தனவென்பதாக மேக்நைட் எழுதுகிறார். அவ்விதத்தில் ஆவேசமடைந்த கூட்டத்தினரும், மிதமிஞ்சிக் குடிப்பதும், காம உணர்வைத் தூண்டும் நடனமும் இசையும், ஒழுக்கக்கேடான பாலுறவும் கிரேக்க-ரோம களியாட்டங்களின் அடிப்படைக் கூறுகளாக இருந்தன.
இன்றைய கார்னிவல்கள் களியாட்டத்தின் இவ்வடிப்படைக் கூறுகளை உடையனவாய் இருக்கின்றனவா? கார்னிவல் கொண்டாட்டங்களைப்பற்றிய செய்தி அறிக்கைகளிலிருந்து எடுக்கப்பட்ட சில மேற்கோள்களை எண்ணிப்பாருங்கள்: “மிதமிஞ்சிய கரகரப்பொலியெழுப்பும் கூட்டங்கள்.” “குடித்து இரா-முழுவதும் விருந்தளிக்கும் ஒரு நான்கு-நாள் ஆழ்நிலை.” “சில களியாட்டக்காரர்களுக்கு கார்னிவல் மயக்கம் பல நாட்கள்வரை நீடிக்கலாம்.” “அருகருகே வீடிருக்கும் இடங்களில் செவிடாக்கும் அளவான ஓசைகளை ‘ஹெவி மெட்டல்’ இசைக் கலைஞர்களின் கைவண்ணத்தோடு ஒப்பிடுகையில் . . . அவை மிகவும் அமைதியாய் இருந்தன.” “இன்று, ஒத்தப் பாலின புணர்ச்சி பழக்கமுள்ளவர்கள் இல்லாத கார்னிவல் கொண்டாட்டங்கள் ஏதேனும் இருந்தால், அது, மிளகு சேர்க்கப்படாத கறி வறுவல் போன்றது.” “கார்னிவல் முற்றிலுமான நிர்வாண நிலையின் இணைப்பதமாகிவிட்டது.” கார்னிவல் நடனங்கள் “தற்புணர்ச்சிக் காட்சிகளையும் . . . பல்வேறு வகையான பால்[சம்பந்தமான] உறவையும்” முக்கியப்படுத்திக் காட்டின.
உண்மையில், இன்றைய கார்னிவல்களுக்கும் பண்டைய விருந்துகளுக்கும் இடையேயான ஒற்றுமைகள் அவ்வளவு எடுப்பாய் உள்ளதால் ஒரு பேக்கஸ் களியாட்டக்காரர் ஒரு நவீன நாளைய கார்னிவல் கொண்டாட்டத்தின் மத்தியில் உயிருடன் இருந்தால் தாளம் தப்பாது இசைந்து செல்வார். அது நம்மை ஆச்சரியப்படுத்த வேண்டியதில்லை என்று பிரேஸிலைச் சேர்ந்த தொலைக்காட்சி தயாரிப்பாளர் கிளாவுதியூ பேட்ராலியா கூறுகிறார், ஏனெனில், இன்றைய கார்னிவல் “டயோனிசஸ் மற்றும் பேக்கஸ் ஆகியோரின் விழாக்களிலிருந்து தோன்றுகிறது, அதுவே கார்னிவலின் தன்மையாய் உள்ளது” என்று அவர் கூறுகிறார். இக் கார்னிவல் பண்டைய ரோமின் புறமத சாட்டர்நேல்யா பண்டிகையோடு இணைத்துக் கூறப்படலாம் என்று தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. ஆகவே இக் கார்னிவல், வேறொரு யுகத்துக்குரியதாய் இருந்தாலும், அதன் மூதாதையரைப்போலவே அதே குடும்பத்தைச் சேர்ந்தது. அக் குடும்பத்தின் பெயர்? களியாட்டம்.
இந்த அறிவு இன்றைய கிறிஸ்தவர்களின்மீது என்ன விளைவை ஏற்படுத்த வேண்டும்? கிரேக்க செல்வாக்கு மிகுந்திருந்த ஆசியா மைனரிலிருந்த நாடுகளில் வாழ்ந்துவந்த பூர்வக் கிறிஸ்தவர்களில் ஏற்படுத்தியிருந்த அதே விளைவை ஏற்படுத்த வேண்டும். கிறிஸ்தவர்களாக ஆவதற்கு முன்பு அவர்கள் “காமவிகாரத்தையும் துர் இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம் பண்ணி, களியாட்டுச்செய்து [ko’mois], வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனை” ஆகியவற்றில் மூழ்கியிருந்தார்கள். (1 பேதுரு 1:1; 4:3, 4) என்றபோதிலும், களியாட்டங்களை கடவுள், ‘அந்தகாரத்தின் கிரியைகளாக’ நோக்குகிறார் என்று கற்றறிந்த பிறகு, அவர்கள் கார்னிவல் போன்ற கொண்டாட்டங்களில் பங்கேற்பதை நிறுத்திவிட்டார்கள்.—ரோமர் 13:12-14.
முன்பு குறிப்பிடப்பட்டிருந்த மைக்கல் அதைத்தான் செய்தார். ஏன் என்று அவர் விளக்கிக் கூறுகிறார்: “நான் பைபிள் அறிவை அதிகம் அடைகையில், கார்னிவல் கொண்டாட்டங்களும் பைபிள் நியமங்களும், ஒன்றோடொன்று கலவாததாய்—நீரும் எண்ணெயும் போன்றதாய்—இருப்பதைக் கண்டேன்.” 1979-ல், மைக்கல் தன்னை மாற்றிக் கொண்டார். கார்னிவல் கொண்டாட்டங்களை அவர் நிரந்தரமாக விட்டுவிட்டார். நீங்கள் என்ன தெரிவை செய்வீர்கள்?
[பக்கம் 14-ன் படம்]
டயோனிசஸை சித்தரிக்கும் கிறிஸ்தவத்துக்கு முன்பிருந்த இரு கைப்பிடிகளுள்ள கிரேக்கக் கலம் (இடது படம்)
[படத்திற்கான நன்றி]
Courtesy of The British Museum