உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 12/8 பக். 20-23
  • கானாவில் “சம்பிரதாயத் திருமணம்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கானாவில் “சம்பிரதாயத் திருமணம்”
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பெற்றோருக்குரிய பொறுப்பு
  • கதவைத் தட்டும் சடங்கு
  • திருமணச் சடங்கு
  • ஆட்டுக்குட்டியானவரின் திருமணம்—மனமகிழுங்கள்!
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • உங்களுக்குத் தெரியுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • ஆப்பிரிக்க கலாச்சாரத்தில்—மணமகள் விலை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • கடவுளாலும் மனிதராலும் மதிக்கப்படுகிற திருமணங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 12/8 பக். 20-23

கனாவில் “சம்பிரதாயத் திருமணம்”

கானாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

திருமணம்—உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் ஒவ்வொரு வருடமும் இந்த பந்தத்தில் நுழைகின்றனர். பொதுவாக, அவர்கள் வாழும் இடத்திலுள்ள சம்பிரதாயப்படி அவர்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.

கானாவில் மிகவும் பொதுவாக காணப்படும் திருமண முறை, சம்பிரதாயத் திருமணம் என அழைக்கப்படுவதாகும். மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு மணப்பெண்-விலையை கொடுப்பது இதில் உட்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும், ஹாங்காங், பாபுவா நியூ கினீ, சாலமன் தீவுகள் போன்ற இடங்களிலும், வடகிழக்கு கொலம்பியாவிலும் வடமேற்கு வெனிசுவேலாவிலும் வாழும் கோச்சிரோ இந்தியர்களுக்கிடையேயும் சம்பிரதாயத் திருமணம் பழக்கமாக செய்யப்படுகிறது. இவை வெறுமனே சில இடங்கள்தான்.

பைபிள் காலங்களில், மணப்பெண்-விலை கொடுப்பது பழக்கமாக இருந்தது. (ஆதியாகமம் 34:11, 12; 1 சாமுவேல் 18:25) பெண்ணின் பணிவிடைகள் மற்றும் திருமணத்திற்கு முன்பு அவளது கல்விக்காகவும் பராமரிப்பிற்காகவும் செலவிடப்பட்ட நேரம், சக்தி மற்றும் வளங்களின் இழப்புக்கு பெற்றோருக்கு ஈடுசெய்ய இந்த மணப்பெண்-விலை கொடுக்கப்படுகிறது என்பதே பூர்வ காலங்களிலும் இன்றும் உள்ள புரிந்துகொள்ளுதல் ஆகும்.

பெற்றோருக்குரிய பொறுப்பு

கானாவில், பழைய காலத்தில், இளைஞர்களுக்கிடையே காதல் சந்திப்புகளோ விவாக நோக்குடன் பழகுதலோ இருந்ததில்லை. அந்தச் சமுதாயத்திலிருந்த வயசுப் பையன்களையும் பெண்களையும் பற்றி அதிக சிரமமெடுத்து விசாரித்த பின்னர், பெற்றோர் தங்கள் வயதுவந்த பிள்ளைகளுக்கு திருமணத்தை ஏற்பாடு செய்தனர். கானாவிலுள்ள சில பெற்றோர் இன்னும் இதைச் செய்கிறார்கள்.

பையனின் பெற்றோர் இப்படிப்பட்ட சில விஷயங்களை பார்ப்பார்கள்: பெண்ணின் அழகு; அவளும் அவளது குடும்பமும் எடுத்திருக்கும் பெயர்; குடும்பத்திலுள்ள பரம்பரை வியாதி; யெகோவாவின் சாட்சிகளின் விஷயத்தில் அவளது ஆவிக்குரிய தன்மை. திருப்தியாயிருந்தால், பெற்றோர் அந்தப் பெண்ணின் பெற்றோரை முறைப்படி அணுகி விவாகப் பேச்சை நடத்துகின்றனர்.

இப்போது, பெண்ணின் பெற்றோர் பையனின் பின்னணியையும் அவனது குடும்ப பின்னணியையும் விசாரிக்கின்றனர். மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரியங்களோடுகூட, மனைவியை ஆதரிக்க எந்தளவுக்கு பையனுக்கு திறமை இருக்கிறது—அவன் வேலை செய்துகொண்டிருக்கிறானா அல்லது வேலையில்லாமல் இருக்கிறானா என்பதையும் அவர்கள் பார்ப்பார்கள். பெண்ணின் பெற்றோருக்கு திருப்தியாயிருந்தால், அவர்கள் பையனின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கிறார்கள், பின் பையனும் பெண்ணும் சம்மதித்த பிறகு இருவரது பெற்றோரும் ஒன்றுசேர்ந்து திருமணத்தைப் பற்றி திட்டமிடுகின்றனர்.

வயதுவந்த தங்கள் பிள்ளைகளுக்கு துணையைத் தேடும் பொறுப்பை ஏன் சில பெற்றோர் தாங்களே எடுத்துக்கொள்கின்றனர்? பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டபடி திருமணம் செய்துகொண்ட ஒரு இந்தியப் பெண் இவ்வாறு கூறினாள்: “அந்தளவுக்கு முக்கியமான ஒரு தீர்மானத்தைச் செய்ய ஒரு இளம் நபருக்கு என்ன தகுதி இருக்கிறது? வயதின் காரணமாகவும் அனுபவத்தின் காரணமாகவும் மிக ஞானமாக முடிவெடுப்போரின் கைகளில் விட்டுவிடுவது எவ்வளவோ மேலானது.” அவளது வார்த்தைகள் அநேக ஆப்பிரிக்கரின் கருத்துக்கு ஒத்ததாக இருக்கின்றன.

எனினும், கானாவில் காலங்கள் மாறிவருகின்றன. காதல் சந்திப்பும் விவாக நோக்குடன் பழகுதலும் பிரபலமாகிவருகின்றன. விவாக நோக்குடன் பழகுகையில், ஏற்ற சமயம் வரும்போது, இருவரும் தங்களது ஆசையை பெற்றோரிடம் தெரியப்படுத்துகின்றனர். பெற்றோர் பேச்சு நடத்திய பிறகு, இது ஒரு நல்ல சம்பந்தம் என திருப்தியடைந்த பிறகு, இரு குடும்பங்களும் முறைப்படியான சடங்குகளை ஆரம்பிக்கின்றனர். இது, அநேக கானானிய மொழிகளில், கதவைத் தட்டுதல், அதாவது திருமணக் கதவைத் தட்டுதல் என்பதாக பொதுவாக அறியப்பட்டிருக்கிறது.

கதவைத் தட்டும் சடங்கு

இருவரது பெற்றோரும், சந்திப்பின் தேதியையும் காரணத்தையும் உறவினர்களுக்கு தெரிவிக்கின்றனர். “குடும்ப அங்கத்தினர்கள்” என்ற பதம், பெற்றோரின் உடன்பிறப்புகள், அவர்களது பிள்ளைகள், தாத்தா பாட்டிமார் ஆகியோரை உள்ளடக்கும் பெரிய ஆப்பிரிக்க குடும்பத்தை குறிப்பிடுகிறது. குறிக்கப்பட்ட நாளில், இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சடங்கிற்காக ஒன்றுகூடுகின்றனர். மாப்பிள்ளை அங்கிருப்பது அவருடைய விருப்பத்தைப் பொருத்தது. பின்வருவது, அப்படிப்பட்ட கதவைத் தட்டும் சடங்கு ஒன்றின்போது நடந்த பேச்சின் ஒரு சுருக்கமான மொழியாக்கம்.

பெண் சார்பாளர் (பெ.சா.): [மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசுபவராய்] நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும், அப்படியிருந்தாலும் சடங்கிற்காக நாங்கள் கேட்கிறோம், நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்?

மாப்பிள்ளை சார்பாளர் (மா.சா.): உங்கள் வீட்டின் பக்கமாக எங்கள் பையன் க்வெசி சென்றபோது அழகான மலர் ஒன்றைப் பார்த்தான். அதனைப் பறித்திட உங்களது அனுமதியை நாடுகிறான்.

பெ.சா.: [ஒன்றும் தெரியாததுபோல்] இந்த வீட்டில் மலரா, அப்படியேதும் இல்லையே! நீங்களே வந்து பார்த்துக்கொள்ளுங்கள்.

மா.சா.: எங்கள் பையன் தப்பாக சொல்லவில்லை. மீண்டும் சொல்கிறோம் இந்த வீட்டில் அழகான மலர் ஒன்று இருக்கிறது. அந்த மலரின் பெயர்தான் ஆஃபி.

பெ.சா.: ஓ, அப்படியென்றால் நீங்கள் பெண் மலரைப் பற்றி பேசுகிறீர்கள். ஆம், இந்த வீட்டில்தான் ஆஃபி இருக்கிறாள்.

மா.சா.: நாங்கள் கதவைத் தட்டி, திருமணத்தில் எங்கள் பையன் க்வெசி ஆஃபியின் கரம் பற்றவேண்டும் என வேண்டுகிறோம்.

இப்போது பையன் வீட்டார், வெவ்வேறு பானங்கள், கொஞ்சம் பணம் போன்றவற்றை அளிக்கின்றனர். அந்தந்த குலத்தைப் பொருத்து, கொடுக்கப்படும் பொருட்களும் அவற்றின் அளவும் வித்தியாசப்படும். இந்தச் சடங்கு கிட்டத்தட்ட மேற்கத்திய பாணியில் நடக்கும் நிச்சயதார்த்தத்தைப் போன்று இருக்கிறது, சில சமயங்களில் நிச்சயதார்த்த மோதிரம் போடப்படுகிறது.

இப்போது பெண் வீட்டாரின் பிரதிநிதி, கொண்டுவரப்பட்டிருக்கும் பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டுமா என அனைவர் முன்பாகவும் பெண்ணைக் கேட்கிறார். ஆம் என்ற அவளது உறுதியான பதிலின்மூலம் திருமணம் செய்துகொள்ள அவளுக்கிருக்கும் விருப்பத்திற்கு அங்குள்ள அனைவரும் சாட்சிகளாகின்றனர். திருமண விழாவிற்கு இரண்டு குடும்பங்களும் சௌகரியமான ஒரு தேதியை குறிக்கின்றனர். சிற்றுண்டிகளோடு அந்தச் சடங்கு முடிவடைகிறது.

திருமணச் சடங்கு

திருமணத்தின் ஒரு பாகமான மணப்பெண்-விலை கொடுப்பதற்கு, பெண் வீட்டிலோ தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற வீட்டிலோ கூடிவரும் ஜனக்கூட்டமானது, பொதுவாக கதவு-தட்டும் சடங்கிற்கு வருவோரைக் காட்டிலும் அதிகமானதாக இருக்கிறது. இது ஏனென்றால், அநேக நண்பர்கள் இதற்கு வருகின்றனர்.

எங்கும் மகிழ்ச்சி நிலவுகிறது. பெண்ணிற்கு என்னவெல்லாம் கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்க வயசுப் பையன்களும் பெண்களும் ஆவலாயிருக்கின்றனர். ஆனால் மணப்பெண்-விலை போதாது என பெண் வீட்டார் புகார் செய்யும்போது அந்த மகிழ்ச்சியான சூழ்நிலையில் கலக்கம் ஏற்படுகிறது. பெண் வீட்டார் வளைந்துகொடுக்காத சமயத்தில் பார்வையாளர்களில் சிலர் என்ன நடக்கப்போகிறதோ என எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர். மாப்பிள்ளை சார்பாளர், அனுதாபத்தைக் காண்பிக்கும்படி பெண் வீட்டாரிடம் சாதுர்யமாக தூண்டுகிறார். பெண் வீட்டார் பச்சாதாபப்படுகையில் பதற்றம் குறைகிறது. சூழ்நிலை மறுபடியும் மாறுகிறது. இப்போது கொண்டாட்டம் ஆரம்பமாகிறது, வெவ்வேறு சிற்றுண்டிகள் பரிமாறப்படுகின்றன.

திருமணச் சடங்கை ஆரம்பிப்பவராய், பெண் சார்பாளர் கூட்டத்தாரை அமைதியாகும்படி சொல்லி, அனைவரையும் வரவேற்கிறார். அவர் மாப்பிள்ளை வீட்டாரை அவர்களது குறிக்கோளைப் பற்றி கேட்கிறார். கதவு ஏற்கனவே தட்டியிருப்பதையும் உள்ளே நுழைவதற்கு ஏற்கனவே அனுமதி பெற்றிருப்பதையும் நினைப்பூட்டிவிட்டு, மாப்பிள்ளை சார்பாளர் அவர்கள் அங்கு வந்திருப்பதற்கான காரணத்தைக் கூறுகிறார்.

பின், ஒவ்வொரு குடும்ப சார்பாளரும் நெருங்கிய உறவினர்களை கூட்டத்தாருக்கு அறிமுகப்படுத்துகின்றனர், பெண்ணை திருமணத்தில் கொடுப்பவரையும் பையனுக்கு திருமணத்தில் ஆதரவளிப்பவரையும்கூட அறிமுகப்படுத்துகின்றனர். சடங்கு தொடர்கிறது.

பெ.சா.; [மாப்பிள்ளை வீட்டாரிடம் பேசுபவராய்] நாங்கள் கேட்ட சீதனத்தை தயவுசெய்து கொடுங்கள்.

பெண் பேச்சாளர் மணப்பெண்-விலைக்கான பொருட்களை ஒவ்வொன்றாக குறிப்பிடுகிறார், அங்குள்ள அனைவரும் அந்தப் பொருட்கள் அங்கிருக்கின்றனவா என்பதை பார்த்துக்கொள்ளலாம். பெண் வீட்டார் அவர்களது கோரிக்கைகளை அதிகப்படுத்தியிருப்பதாக மாப்பிள்ளை வீட்டார் உணர்ந்தால், திருமண நாளுக்கு முன்பு அவர்கள் தனிப்பட்ட விதமாக பிரச்சினையைத் தீர்த்துக்கொள்கின்றனர். எனினும், மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் ஒருவேளை கெடுபிடியாக நடந்துகொண்டால், அதிகப்படியானவற்றை குறைக்கச்சொல்லி பேரம்பேசுவதற்கு தயாரான நிலையில் சடங்கிற்கு வருகின்றனர். ஒருவர் எங்கே வாழ்ந்தாலும், மணப்பெண்-விலையை—அது அதிகமாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி—முழுமையாக கொடுக்க வேண்டும்.

சில குடும்பங்கள், பானங்கள், துணிமணிகள், நெக்லஸுகள், தோடுகள், பெண்களுக்கான மற்ற பொருட்கள் போன்றவற்றைக் கேட்கின்றனர். வட கானாவில், மணப்பெண்-விலையானது உப்பு, கோலா பருப்புகள், கினி கோழி, ஆடு மற்றும் கால்நடைகளைக்கூட உள்ளடக்கும். மணப்பெண்-விலையின் மாறாத ஒரு அம்சம் ரொக்கப் பணமாகும்.

இந்தப் பேரம்பேசுதல் நடந்துகொண்டிருக்கும்போது, மணப்பெண் அங்கு இருக்க மாட்டாள் ஆனால் அருகிலிருந்து அதைக் கவனித்துக்கொண்டிருப்பாள். மாப்பிள்ளை அங்கிருப்பது அவரது இஷ்டம். இவ்வாறு, தொலைதூரத்தில் வாழும் ஒரு நபர், தன் சார்பில் தன் பெற்றோர் திருமணத்தை ஏற்பாடு செய்யும்படி அதிகாரமளிக்கலாம். எனினும், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின்போது மாப்பிள்ளை இருக்கிறார். இப்போது கோரிக்கை விடுவிப்பதற்கு அவரது குடும்பத்தாரின் வேளையாக இருக்கிறது.

மா.சா.: எங்களிடம் கேட்ட எல்லாவற்றையும் நாங்கள் கொடுத்துவிட்டோம், ஆனால் எங்கள் மருமகளை இன்னும் நாங்கள் பார்க்கவில்லையே.

திருமணச் சடங்கு வெறுமனே ஒரு சீரியஸான நிகழ்ச்சியல்ல; கொஞ்சம் தமாஷாக இருப்பதற்கும் இது ஒரு சமயமாக இருக்கிறது. இப்போது மணப்பெண்ணை பார்க்க வேண்டும் என்ற பையன் வீட்டாரின் கோரிக்கைக்கு பெண் வீட்டார் பிரதிபலிக்கின்றனர்.

பெ.சா.: மணப்பெண் இங்கு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கெட்ட நேரம், அவள் வெளிநாடு சென்றிருக்கிறாள், அவளை இங்கு வரவழைப்பதற்கு எங்களிடம் பாஸ்போர்ட்டுகளோ விசாக்களோக்கூட இல்லையே.

அதற்கு என்ன அர்த்தமென்று எல்லாருக்கும் தெரியும். உடனடியாக, எவ்வளவு பணத்தை மாப்பிள்ளையால் கொடுக்கமுடியுமோ அவ்வளவை ரொக்கப் பணமாக மாப்பிள்ளை வீட்டார் அளிக்கின்றனர்—இதோ! மாயம்போல், கற்பனை பாஸ்போர்ட்டுகளும் விசாக்களும் தயார். மணப்பெண்ணும் அவளது பிரயாணத்திலிருந்து திரும்பிவிடுகிறாள்!

இன்னும் வேடிக்கையாக்குவதாய், சில ஜாதிகளில், மணப்பெண்போல் நடிக்க அவளது சில சிநேகிதிகளை ஏற்பாடு செய்கின்றனர். அவ்வாறு நடிக்கும் ஒவ்வொரு பெண்ணையும் கூட்டத்தார் நேரடியாகவே நிராகரித்துவிடுகின்றனர், பின் பலத்த கைதட்டுதல் மத்தியில் உண்மையான மணப்பெண் வருகிறாள். பின் அவளது மணப்பெண்-விலையின் வெவ்வேறு பொருட்களை பார்க்கும்படி அவளது சார்பாளர் அவளை அழைக்கிறார். மாப்பிள்ளை கொண்டுவந்திருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டுமா என அவளிடம் கேட்கப்படுகிறது. பதிலுக்காக எல்லாரும் ஆவலோடு காத்திருக்கும் அந்தச் சமயத்தில் அமைதி நிலவுகிறது. சில பெண்கள் வெட்கப்படுகின்றனர், சிலர் தைரியமாக சொல்கின்றனர், ஆனால் பதில் எப்போதுமே ஆம் என்பதாய் உள்ளது, அதைப் பின்தொடர்ந்து கூட்டத்தினர் ஆரவாரத்தோடு முழங்குகிறார்கள்.

மாப்பிள்ளை அங்கிருந்தால், பெண் வீட்டார் அவரைப் பார்க்க வேண்டுமென கோரிக்கை விடுவிப்பர். மாப்பிள்ளையின் நண்பர்கள் அவரைப்போல் நடிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் கேளிக்கூத்து தணியாமல் தொடர்கிறது. முக்கியத்துவம் அளிக்கப்பட்ட தோற்றத்தில், அவரது நண்பர் எழுந்து நிற்கிறார், ஆனால் உடனடியாக அனைவரும் கூச்சலிட்டு நிராகரித்துவிடுகின்றனர்.

பெண்ணின் பெற்றோர் தங்களது மருமகனை பார்க்க வேண்டுமென கேட்கின்றனர். சந்தோஷப் புன்முறுவலுடன் உண்மையான மாப்பிள்ளை இப்போது எழுந்து நிற்கிறார். பெண் மாப்பிள்ளையோடு ஒன்றுசேருவதற்கு பெண் வீட்டார் அனுமதிக்கின்றனர்; மணப்பெண்-விலையின் ஒரு அம்சமாக மோதிரம் கேட்கப்பட்டிருந்தால் மாப்பிள்ளை அந்த மோதிரத்தை பெண்ணின் விரலில் அணிவிக்கிறார். இது மேற்கிலிருந்து வந்த பழக்கம். அவள், தன் பங்கில் அவனது விரலில் மோதிரம் அணிவிக்கிறாள். வாழ்த்துக்களும் சந்தோஷமும் நிரம்பி வழிகிறது. சௌகரியத்திற்காகவும் பணத்தை மிச்சப்படுத்தவும், இப்போது சிலர் கதவைத் தட்டும் சடங்கையும் திருமணத்தையும் ஒரே நாளில் வைத்துக்கொள்கின்றனர்.

இரு குடும்பங்களைச் சேர்ந்த அனுபவம் நிறைந்த நபர்களும் மற்றவர்களும் புதிதாய் திருமணமானவர்களுக்கு, சாவு அவர்களைப் பிரிக்கும்வரை எவ்வாறு தங்களது திருமண வாழ்க்கையை நல்ல விதத்தில் நடத்துவது என்பதன்பேரில் ஆலோசனை அளிக்கின்றனர். அந்நாளை சுமூகமாக முடிக்க, குளிர்பானங்கள் பரிமாறப்படுகின்றன.

திருமணச் சடங்கு முடிந்தாயிற்று! கானாவில், அந்நாள் முதற்கொண்டு, அந்தத் தம்பதி சட்டப்படி திருமணமானவர்களாக அச்சமுதாயத்தால் கருதப்படுகின்றனர். ஏதோவொரு காரணத்திற்காக பெண்ணின் முக்கிய உறவினர்களில் எவராவது சடங்கிற்கு வர இயலாமல் போனால், திருமணச் சடங்கு முடிவுற்றதை தெரியப்படுத்துவதற்கு, பரிமாறப்படும் சில பானங்கள் அவர்களுக்கும் அனுப்பப்படுகின்றன. பெண்ணும் மாப்பிள்ளையும் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தால், அதன்பின் ஒரு பைபிள் பேச்சு அளிக்கப்படும்படி சிலசமயங்களில் சாட்சிகள் ஏற்பாடு செய்கின்றனர், பின் சிற்றுண்டிகள் பரிமாறப்படுகின்றன.

கானாவில், சிலர் மேற்கத்திய பாணியில் திருமணச் சடங்கு நடத்துகின்றனர், இது சிவில் திருமணம் அல்லது அரசாங்க சட்டப்படி நடத்தப்பட்ட திருமணம் என அழைக்கப்படுகிறது. திருமணம் செய்துகொள்ளப்போகிறவர்கள் சட்டம் எதிர்பார்க்கும் வயதுடையவர்களாக இருக்கும் சந்தர்ப்பத்தில் இது பெற்றோரின் சம்மதத்துடனோ சம்மதமில்லாமலோ நடத்தப்படலாம். சம்பிரதாயத் திருமணத்தில் பெற்றோரின் சம்மதம் அத்தியாவசியமானது.

சிவில் திருமணத்தில் மணமக்கள் திருமண வாக்குறுதியை செய்கின்றனர். ஆனால் சம்பிரதாயத் திருமணத்தில் வாக்குறுதிகள் எடுக்கப்படுவதில்லை. எல்லா சம்பிரதாயத் திருமணங்களும் பதிவு செய்யப்பட வேண்டுமென அரசு எதிர்ப்பார்க்கிறது, யெகோவாவின் சாட்சிகளும் அதற்கு ஒத்துப்போகிறார்கள். (ரோமர் 13:1) ஒரு பதிவுச் சீட்டு அதன் பிறகு அளிக்கப்படுகிறது.

பழைய காலங்களிலிருந்து அப்போதைய கோல்ட் கோஸ்ட்டான கானா பிரிட்டிஷ் காலனியாக ஆகும்வரை, சம்பிரதாயத் திருமணம்தான் அந்நாட்டிலேயே ஒரே வகையான திருமணமாக இருந்தது, அதன்பின் இங்கே வாழ்ந்த குடிமக்களுக்கிடையே பிரிட்டிஷ்காரர்கள் மேற்கத்திய திருமணப் பாணியை அறிமுகப்படுத்தினர். உள்ளூர்வாசிகளும் இந்த வகையான திருமணத்தை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்; இப்போது பல வருடங்களாக மேற்கத்திய திருமணம், சம்பிரதாயத் திருமணம் ஆகிய இரண்டுமே கடைபிடிக்கப்பட்டு வந்திருக்கின்றன. கானாவில் இரண்டுமே சட்டப்பூர்வமானதாக கருதப்படுகிறது, ஆகவே யெகோவாவின் சாட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. எந்த வகையான திருமணத்தை தேர்ந்தெடுக்கின்றனர் என்பது தனிப்பட்ட நபர்களின் விருப்பத்தைப் பொருத்தது.

சில ஆப்பிரிக்க நாடுகளில், மணமக்கள் சட்டப்படி திருமணமானவர்களாக கருதப்பட வேண்டுமென்றால் சம்பிரதாய திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். எனினும், கானாவில், மேலே விவரிக்கப்பட்ட சம்பிரதாயத் திருமணம் பதிவு செய்யப்படாமலேயே சட்டப்பூர்வமானதாக கருதப்படுகிறது, அத்திருமணம் முடிவடையும்போது மணமக்கள் சட்டப்படி திருமணமானவர்களாக கருதப்படுகின்றனர். அதன்பின், சம்பிரதாயத் திருமணங்கள் கோப்பில் வைக்கப்படுவதற்காக மாத்திரமே பதிவு செய்யப்படுகின்றன.

உண்மையில் திருமணம் கடவுள் மனிதர்களுக்கு அளித்திருக்கும் அன்பான பரிசு, தேவதூதர்களுக்குக்கூட கொடுக்கப்படாத தனித்தன்மைவாய்ந்த ஒரு பரிசு. (லூக்கா 20:34-36) அது விலைமதிப்புள்ள ஒரு உறவு, அதை ஆரம்பித்து வைத்தவராகிய யெகோவா தேவனுக்கு மகிமை அளிக்கும்விதத்தில் பாதுகாக்கப்பட தகுதிவாய்ந்தது.

[பக்கம் 23-ன் படம்]

மோதிரங்கள் மாற்றப்படுகின்றன

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்