லூயி பாஸ்டர்—அவரது ஆராய்ச்சி எதை வெளிப்படுத்தியது
பிரான்ஸிலிருந்து விழித்தெழு! நிருபர்
உயிர் தானாகவே தோன்றுமா? 19-வது நூற்றாண்டில், அவ்வாறுதான் சில விஞ்ஞானிகள் நினைத்தார்கள். படைப்பாளர் ஒருவர் படைக்காமலேயே, உயிரில்லா பொருட்களிலிருந்து உயிர் திடீரென தானாகவே தோன்றும் என அவர்கள் நம்பினார்கள்.
ஆனால் ஏப்ரல் 1864-ம் வருட இளவேனிற்காலத்தில் ஒருநாள் சாயங்காலம், பாரிஸிலுள்ள சார்போன் பல்கலைக்கழகத்தின் மன்றத்தில் கூட்டத்திற்காக கூடிவந்திருந்தோர், வித்தியாசமான ஒன்றைக் கேட்டனர். விஞ்ஞானிகளின் ஒரு குழுவிடம் திறமையாக உரையாற்றியபோது, லூயி பாஸ்டர் ஒவ்வொரு குறிப்பையும் எடுத்துச்சொல்லி, தானாகவே உயிர் தோன்றுமென்ற கோட்பாட்டை தவறென வெற்றிகரமாக நிரூபித்தார்.
இந்தப் பேச்சும் அவரது பிந்தைய கண்டுபிடிப்புகளும் “உலகத்திலேயே மிகப் பெரிய விஞ்ஞானிகளில் ஒருவராக” அவரை ஆக்கின என்பதாக தி உவர்ல்ட் புக் ஆஃப் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. ஆனால் இந்த மனிதன் ஏன் அவரது காலத்திலிருந்த மக்களிடையே அப்படிப்பட்ட ஒரு முத்திரையைப் பதித்தார், அவர் எவ்வாறு உலகப் புகழ் பெற்றார்? அவரது சில கண்டுபிடிப்புகளிலிருந்து இப்போது நாம் எவ்வாறு பயனடைகிறோம்?
ஆரம்ப ஆராய்ச்சி
கிழக்கு பிரான்ஸிலுள்ள சிறிய பட்டணமாகிய டோலில் 1822-ம் ஆண்டு லூயி பாஸ்டர் பிறந்தார். தோல் பதனிடும் தொழிலாளியான அவரது அப்பா, தனது மகனைக் குறித்து இலட்சியங்களை வைத்திருந்தார். கலையின் பேரில் ஆர்வம் உடையவராகவும் கலைத் திறனைப் பெற்றவராகவும் இருந்தாலும்கூட, லூயி அறிவியலைத் தனக்கென தேர்ந்தெடுத்தார். 25-வது வயதில் அவர் அறிவியல் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றார்.
ஒயின் ஜாடிகளின் அடியிலுள்ள வண்டலில் இருக்கும் புளியகக் காடியைப் (tartaric acid) பற்றி அவர் ஆரம்பத்தில் ஆராய்ச்சி செய்தார். அந்த ஆராய்ச்சியின் விளைவுகளை சில வருடங்களுக்குப் பிறகு மற்ற ஆராய்ச்சியாளர்கள் நவீன கரிம வேதியலுக்கு அடித்தளமாக பயன்படுத்தினர். அதன் பின் புளிக்கவைக்கும் பொருட்களின்பேரில் (fermenting agents) பாஸ்டர் ஆராய்ச்சி செய்ய துவங்கினார்.
பாஸ்டரின் ஆராய்ச்சிக்கு முன்பு, ஈஸ்ட் போன்ற புளிக்கவைக்கும் பொருட்கள் இருப்பது அறியப்பட்டிருந்தது. ஆனால் அவை புளித்தலின் காரணமாக உண்டாவதாக எண்ணப்பட்டது. எனினும், புளிக்கவைக்கும் இந்தப் பொருட்கள் புளித்தலின் காரணமாக உண்டாவதில்லை ஆனால் அதற்கு மாறாக புளித்தலுக்குக் காரணமாக இருக்கின்றன என பாஸ்டர் நிரூபித்தார். புளிக்கவைக்கும் பொருட்களின் ஒவ்வொரு வகையும் வித்தியாசமான புளித்தலை உண்டாக்குவதை அவர் காண்பித்தார். 1857-ல் இதன் பேரில் அவர் வெளியிட்ட அறிக்கை, இன்று “நுண்ணுயிரியலின் பிறப்புச் சான்றிதழ்” என்பதாக கருதப்படுகிறது.
அப்போது முதற்கொண்டு, அவரது ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் வேகமாக வளர்ந்தன. அவர் பெற்ற நற்பெயரின் காரணமாக, ஆர்லியன்ஸிலிருந்த வினிகர் தயாரிப்பாளர்கள் தங்களுக்கிருந்த அநேக தொழில்நுட்ப பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும்படி கேட்டு பாஸ்டரை அழைத்தனர். வினிகராக ஒயின் மாறுவதற்கு காரணமாக இருக்கும் பொருள், திரவத்தின் மேற்புறத்தில் காணப்படும் பொருளான நுண்ணுயிர் என இப்போது அழைக்கப்படும் ஒன்று என்பதாக பாஸ்டர் நிரூபித்தார். ஆராய்ச்சியின் முடிவில், அந்தப் பட்டணத்தின் வினிகர் தயாரிப்பாளர்களுக்கு முன்பும் உயர்ந்த பதவியிலிருப்போர் முன்பும் புகழ்பெற்ற “ஒயின் வினிகரின் பேரிலான பாடம்” என்ற பேச்சைக் கொடுத்தார்.
பாஸ்டுரைசேஷன்
புளித்தலின்பேரில் பாஸ்டர் செய்த ஆராய்ச்சி, உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகையில் கெட்டுப்போவதற்கு அதிக காரணமாயிருப்பது நுண்ணுயிர்களே என்பதாக முடிவுசெய்ய அவருக்கு உதவியது. நுண்ணுயிர்கள் காற்றிலோ சரியாக கழுவப்படாத பாத்திரங்களிலோ இருந்தன. சுகாதாரத்திற்கு அதிக கவனம் செலுத்துவதன் மூலம் உணவுப் பொருட்கள் பாக்டீரியாக்களால் கெட்டுப்போவதைத் தவிர்க்கலாம் என்பதாகவும் திரவம் கெட்டுப்போகாமல் இருக்க சில நிமிடங்களுக்கு 50-லிருந்து 60 டிகிரி செல்சியஸுக்குள் அதை வைத்திருக்க வேண்டும் என்பதாகவும் பாஸ்டர் கூறினார். இயல்புக்கு மாறான புளித்தலைத் தவிர்க்க இந்த முறை முதன்முதலில் ஒயின் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்டது. சுவையையோ வாசனையையோ அதிகம் மாற்றாமல் முக்கிய நுண்ணுயிர்கள் கொல்லப்பட்டன.
பாஸ்டரால் காப்புரிமை பெறப்பட்ட பாஸ்டுரைசேஷன் என்ற இந்தச் செயல்முறை உணவு உற்பத்தித்துறையின் சரித்திரத்தையே மாற்றிவிட்டது. இப்போதெல்லாம் இந்த முறை ஒயினுக்கு பயன்படுத்தப்படுவதில்லை ஆனால் பால் அல்லது பழ ஜூஸ் போன்ற எண்ணற்ற பொருட்களுக்கு இன்னும் ஏற்றதாக இருக்கிறது. எனினும், இன்னுமதிக வெப்பத்தில் கிருமிகளை அழிப்பது (sterilization) போன்ற மற்ற முறைகளும்கூட பயன்படுத்தப்படலாம்.
பாஸ்டரின் ஆராய்ச்சியிலிருந்து நன்மைபெற்ற மற்றொரு தொழிற்சாலை மது உற்பத்திச்சாலையாகும். அந்தச் சமயத்தில், உற்பத்தி சம்பந்தமான அநேக பிரச்சினைகளையும் பலமான ஜெர்மானிய போட்டியையும் பிரெஞ்சு மக்கள் எதிர்ப்பட்டனர். பாஸ்டர் இதற்கு கவனம் செலுத்தி மது உற்பத்தியாளர்களுக்கு அநேக ஆலோசனைகளை அளித்தார். காய்ச்சப்படும் மதுவை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அதைச் சுற்றியிருக்கும் இடத்தையும்கூட சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அவர்களுக்கு சொன்னார். உடனடியாக பலன் கிடைத்தது, அதன் பிறகு அநேக காப்புரிமைகளை அவர் பெற்றார்.
உயிர் உயிரிலிருந்து வருகிறது
பூர்வ காலம் முதற்கொண்டே, அழுகிய பொருட்களில் பூச்சிகளும் புழுக்களும் மற்ற ஜீவன்களும் காணப்படுவதை விளக்குவதற்கு மிகுந்த கற்பனை கலந்த கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. உதாரணத்திற்கு, 17-வது நூற்றாண்டில், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியல் நிபுணர், கோதுமை ஜாடி ஒன்றில் அழுக்கு ஜாக்கெட் ஒன்றை திணித்துவைத்ததன் மூலம் ஒரு எலியை தோன்றச்செய்ததாக பெருமையடித்துக்கொண்டார்!
பாஸ்டரின் காலத்தில் அறிவியல் சமுதாயத்தில் நடந்த விவாதம் சூடேறியது. உயிர் தானாக தோன்றும் என்ற கோட்பாட்டின் ஆதரவாளர்களை எதிர்படுவது உண்மையிலேயே ஒரு சவாலாக இருந்தது. ஆனால் புளித்தலின் பேரில் தான் செய்த ஆராய்ச்சியிலிருந்து கற்றுக்கொண்டவையின் காரணமாக பாஸ்டர் நம்பிக்கையோடு இருந்தார். ஆகவே உயிர் தானாக தோன்றும் என்ற கோட்பாட்டை ஒரேயடியாக ஒரு முடிவிற்குக் கொண்டுவர அவர் சில பரிசோதனைகளைச் செய்தார்.
மிகப் பிரபலமான அவரது பரிசோதனைகளில் ஒன்று, அன்னம்-கழுத்துள்ள ஃப்ளாஸ்க்கைப் பயன்படுத்தி அவர் செய்த பரிசோதனையாகும். ஊட்ட திரவத்தை மூடப்படாத ஃப்ளாஸ்க் ஒன்றில் வெட்டவெளியில் வைக்கும்போது சீக்கிரத்தில் கிருமிகளால் கெட்டுப்போகிறது. எனினும், அன்னத்தின் கழுத்தைப் போன்ற வடிவில் மேல்பாகத்தைக் கொண்டிருக்கும் ஃப்ளாஸ்கில் அதே ஊட்ட திரவத்தை வைத்தால் அது கெட்டுப்போகாமல் இருக்கிறது. ஏன் அப்படி?
பாஸ்டர் தந்த விளக்கம் எளிமையானது: அன்னம்-கழுத்தின் வழியாக செல்லும்போது, காற்றிலுள்ள பாக்டீரியா கண்ணாடியின்மீது படிந்துவிடுகிறது, ஆகவே திரவத்தை எட்டுவதற்குள் காற்று நுண்ணுயிரின்றி சுத்தமாகிவிடுகிறது. மூடப்படாத ஃப்ளாஸ்கில் விருத்தியடையும் கிருமிகள் ஊட்டத் திரவத்தால் தானாகவே உற்பத்தி செய்யப்படுவதில்லை ஆனால் காற்றினால் கொண்டுவரப்படுகின்றன.
நுண்ணுயிரிகளை பரப்புவதில் காற்றிற்கு இருக்கும் முக்கிய பங்கை எடுத்துக் காண்பிக்க, பிரெஞ்சு ஆல்ப்ஸிலுள்ள ஒரு பனிக்கட்டி பாளமான மெர் ட க்ளாஸிற்கு பாஸ்டர் சென்றார். 1800 மீட்டர் உயரத்தில் ஃப்ளாஸ்குகளின் சீல்களை உடைத்து காற்றுக்கு வெளிப்படுத்தினார். 20 ஃப்ளாஸ்குகளில் ஒன்றே ஒன்றுதான் கிருமிகளால் தாக்கப்பட்டது. பின் அவர் ஜூரா மலைகளின் அடிவாரத்திற்கு சென்று அதே பரிசோதனையை மறுபடியும் செய்தார். இங்கே, குறைவான உயரத்தில் எட்டு ஃப்ளாஸ்குகள் கிருமிகளால் தாக்கப்பட்டன. இவ்வாறு, அதிக உயரத்தில் சுத்தமான காற்று இருந்ததால் கிருமிகளால் பாதிக்கப்படுவதன் அபாயம் குறைவாயிருந்தது என்பதை அவர் நிரூபித்தார்.
இப்படிப்பட்ட பரிசோதனைகளின் மூலம், ஏற்கெனவே தோன்றியுள்ள உயிரிலிருந்து மட்டும்தான் உயிர் வருகிறதென்பதை நம்பவைக்கும் விதத்தில் பாஸ்டர் காட்டினார். அது ஒருபோதும் தானாகவே உண்டாவதில்லை.
தொற்று நோய்களுக்கெதிரான போராட்டம்
புளித்தல் நிகழ்வதற்கு நுண்ணுயிர்கள் அவசியமாயிருப்பதன் காரணமாக, தொற்று நோய்கள் விஷயத்திலும் இதுவேதான் உண்மையாயிருக்கும் என பாஸ்டர் நியாயப்படுத்தினார். தென் பிரான்ஸிலுள்ள பட்டு உற்பத்தியாளர்களின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த ஒரு பிரச்சினையான பட்டுப்பூச்சி வியாதியின்பேரிலான அவரது ஆராய்ச்சி அவர் சொன்னதை சரியென நிரூபித்தது. சில வருடங்களுக்குள்ளாக, இரண்டு வியாதிகளுக்கான காரணங்களையும் அவர் கண்டுபிடித்தார். கொள்ளை நோய்களை தடுப்பதற்கான வழியாக ஆரோக்கியமான பட்டுப்பூச்சிகளை தேர்ந்தெடுக்கும் முறைகளை அவர் தெரிவித்தார்.
சிக்கன் காலராவைப் பற்றி ஆராய்ச்சி செய்கையில், ஒருசில மாதங்களுக்கு முன்புதானே உண்டுபண்ணப்பட்ட கிருமிகள் கோழிகளுக்கு வியாதியை உண்டாக்கவில்லை ஆனால் அதற்குமாறாக வியாதி வராதபடி அவற்றை பாதுகாத்தன என்பதை பாஸ்டர் கவனித்தார். மொத்தத்தில், அந்தக் கிருமியின் வலிமையை குறைத்து அல்லது ஆற்றலை குறைத்து, பின் அதை தடுப்புமருந்தாக கோழிகளுக்கு செலுத்தலாம் என்பதை அவர் கண்டுபிடித்திருந்தார்.
முதன்முதலில் தடுப்புமருந்தைப் பயன்படுத்தியது பாஸ்டர் அல்ல. ஆங்கிலேயரான எட்வர்ட் ஜென்னர் அவருக்கு முன்பாக அதைப் பயன்படுத்தியிருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட நுண்ணுயிரைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக உண்மையில் நோயை உண்டாக்கிய கிருமியையே பலவீனப்படுத்தி தடுப்புமருந்தாக முதன்முதலில் பயன்படுத்தியது பாஸ்டர்தான். ஆடு மாடு போன்ற வெப்ப-இரத்த மிருகங்களுக்கு வந்த தொற்றுநோயான ஆன்த்ராக்ஸுக்கு தடுப்புமருந்து தயாரிப்பதிலும் அவர் வெற்றி பெற்றார்.
இதற்குப் பின், ரேபீஸுக்கு (வெறிநாய்க் கடி) எதிரான அவரது கடைசி போராட்டத்தை ஆரம்பித்தார்; இது மிகவும் புகழ்பெற்ற ஒன்று. ரேபீஸை அவர் கையாண்டபோது பாக்டீரியா உலகத்திலிருந்து முழுவதும் வித்தியாசப்பட்ட ஒன்றை உண்மையில் கையாண்டுகொண்டிருந்தார், இதை அவரே அப்போது உணரவில்லை. மைக்ரோஸ்கோப்புகளில் பார்க்க முடியாத வைரஸ் கிருமிகளை இப்போது கையாண்டுகொண்டிருந்தார்.
ஜூலை 6, 1885-ல், பாஸ்டரின் ஆய்வுக்கூடத்திற்கு ஒரு பெண் தன் ஒன்பது வயது மகனைக் கொண்டுசென்றிருந்தாள். அந்தப் பிள்ளையை அப்போதுதானே ரேபீஸ் நோயுள்ள ஒரு நாய் கடித்திருந்தது. அந்தப் பெண் கெஞ்சியும், அப்பையனுக்கு உதவ பாஸ்டர் தயங்கினார். அவர் ஒரு டாக்டர் அல்லாததன் காரணமாக மருந்தை சட்டத்திற்குமீறி பயன்படுத்துவதன் குற்றத்தை சுமக்கும் அபாயம் இருந்தது. அதுமாத்திரமா, அவர் தனது மருந்துகளை மனிதர்களுக்குக் கொடுத்து பரிசோதனை செய்திருக்கவில்லை. இருந்தபோதிலும், தன் உடன் ஆராய்ச்சியாளரான டாக்டர் க்ரான்ச்சேயை அந்தச் சின்ன பையனுக்கு தடுப்புமருந்து அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். மருந்தும் அளிக்கப்பட்டது, நல்ல பலனும் கிடைத்தது. ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில் சிகிச்சை பெற்றுக்கொண்ட 350 பேரில் ஒரே ஒருவர் மாத்திரம்தான்—முத்திப்போன கட்டத்தில் கொண்டுவரப்பட்டவர்—உயிர் பிழைக்கவில்லை.
இதற்கிடையில், மருத்துவமனை சுகாதாரத்திற்கு பாஸ்டர் சிந்தனை செலுத்தினார். பாரிஸின் மகப்பேறு மருத்துவமனையில் ஒவ்வொரு வருடமும் பேறுகாலக் காய்ச்சலால் அதிக எண்ணிக்கையான பெண்கள் இறந்தனர். செப்டிக் உண்டாக்காத முறைகளையும் கடுமையான சுகாதாரத்தையும், முக்கியமாக கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதையும் பாஸ்டர் அறிவுறுத்தினார். ஆங்கிலேய அறுவை மருத்துவரான ஜோசஃப் லிஸ்டரும் மற்றவர்களும் பிற்பாடு செய்த ஆராய்ச்சிகள், பாஸ்டர் முடிவாக சொன்னவற்றின் திருத்தமான தன்மையை நிரூபித்தன.
பயனுள்ள பணி
1895-ல் பாஸ்டர் இறந்தார். ஆனால் அவர் ஆற்றிய பணி பயனுள்ளதாய் இருந்தது, அதன் அம்சங்களால் இன்றும்கூட நாம் பயனடைகிறோம். ஆகவேதான் அவர் “மனிதவர்க்கத்திற்கு நலம்புரிந்தவர்” என அழைக்கப்படுகிறார். இன்னும் அவரது பெயர் தடுப்பூசிகளிலும் அவர் கண்டுபிடித்தவையாய் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் செயல்முறைகளிலும் காணப்படுகிறது.
ரேபீஸுக்கு சிகிச்சையளிப்பதற்காக பாஸ்டரின் வாழ்நாளில் பாரிஸில் நிறுவப்பட்ட இன்ஸ்டிட்யூடான லான்ஸ்டிட்யூ பாஸ்டர், இன்று தொற்றுநோய்களுக்கான மிகவும் பேர்பெற்ற ஆராய்ச்சி நிறுவனமாக திகழ்கிறது. தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் சம்பந்தமாக அது செய்துவரும் ஆராய்ச்சியினால் அது குறிப்பாக பேர்பெற்றிருக்கிறது—1983 முதற்கொண்டு எப்போதுமிராத அளவில் பேர்பெற்றிருக்கிறது; ஏனெனில் அவ்வருடத்தில் லூக் மான்டான்யே என்ற பேராசிரியரின் தலைமையில் அந்நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஒரு குழு முதன்முதலில் எய்ட்ஸ் வைரஸை கண்டுபிடித்தனர்.
பாஸ்டர் ஈடுபட்டு வெற்றி பெற்ற, உயிர் தானாகவே தோன்றுமென்ற கோட்பாட்டின் பேரிலான விவாதம் வெறுமனே ஒரு அறிவியல் வீண்வாதமாக இருக்கவில்லை. சில விஞ்ஞானிகளும் அறிவாளிகளும் தங்களுக்குள்ளேயே கலந்தாலோசிப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும் ஒரு குறிப்பாக மாத்திரமும் அது இருக்கவில்லை. அது இன்னும் அதிக முக்கியத்துவமுள்ளதாய் இருந்தது—கடவுள் இருக்கிறார் என்பதற்கான அத்தாட்சியை அது உள்ளடக்கியது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அறிவியல் தத்துவ நிபுணரான ஃப்ரான்ஸ்வா டாகான்யே இவ்வாறு சொல்கிறார்: பாஸ்டரின் “எதிரிகளான இயற்பொருள்வாதிகள், நாஸ்திகர்கள் ஆகிய இரு வகுப்பினரும், அழுகிவரும் அணுக்கூறுகளிலிருந்து ஒற்றைச்செல் உயிரி உண்டாகும் என்பதை தங்களால் நிரூபிக்க முடியுமென நம்பினர். இது படைப்பாளர் ஒருவர் இருப்பதை அவர்கள் நிராகரிக்கும்படி செய்தது. எனினும், பாஸ்டரைப் பொருத்தவரையில், உயிரற்ற நிலையிலிருந்து உயிரடைவதற்கு எந்த வழியும் இல்லை.”
இந்நாள் வரைக்கும், பரிசோதனை, சரித்திரம், உயிரியல், தொல்பொருள் ஆராய்ச்சி, மனிதயியல் ஆகியவற்றிலிருந்து கிடைத்திருக்கும் அனைத்து அத்தாட்சிகளும் பாஸ்டர் காட்டியதையே தொடர்ந்து காட்டுகின்றன—அதாவது, ஏற்கெனவே தோன்றியிருக்கும் உயிரிலிருந்துதான் உயிர் உண்டாக முடியும், உயிரற்ற பொருட்களிலிருந்து உண்டாக முடியாது. ஆதியாகமம் புத்தகத்தில் பைபிள் பதிவு குறிப்பிடும் விதமாக உயிர் ‘அதனதன் ஜாதிப்படியே’ பிறப்பிக்கிறது என்றும்கூட அந்த அத்தாட்சி தெளிவாக காட்டுகிறது. பிறப்பிக்கப்படும் உயிர் எப்போதுமே பிறப்பிக்கும் உயிரைப் போன்றே, அதே ‘ஜாதியின்படி’ அல்லது வகையின்படி இருக்கிறது.—ஆதியாகமம் 1:11, 12, 20-25.
இவ்வாறு, தெரிந்தோ தெரியாமலோ, தனது ஆராய்ச்சியின் மூலம், பரிணாம கோட்பாட்டிற்கு எதிராகவும் பூமியில் உயிர் தோன்றியிருப்பதற்கு படைப்பாளர் ஒருவர் நிச்சயமாகவே இருந்திருக்க வேண்டுமென்பதற்கும் பலமான அத்தாட்சியையும் சான்றையும் லூயி பாஸ்டர் அளித்தார். அவரது ஆராய்ச்சி, மனத்தாழ்மையுள்ள சங்கீதக்காரன் ஒப்புக்கொண்டதை பிரதிபலிக்கிறது: “கர்த்தரே [“யெகோவாவே,” NW] தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்.”—சங்கீதம் 100:3.
[பக்கம் 25-ன் படங்கள்]
மேற்காணும் சாதனம், தேவையற்ற நுண்ணுயிரிகளை கொன்று இவ்வாறு ஒயினை பாஸ்டுரைஸ் செய்ய பயன்படுத்தப்பட்டது; கீழேயுள்ள வரைபடத்தில் அது சிறப்பித்துக் காண்பிக்கப்பட்டிருக்கிறது
[பக்கம் 26-ன் படம்]
பாஸ்டர் செய்த பரிசோதனைகள், உயிர் தானாகவே தோன்றுமென்ற கோட்பாட்டை தவறென நிரூபித்தன
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
All photos pages 24-6: © Institut Pasteur