உலகை கவனித்தல்
மீண்டும் காலரா
100 வருடங்களுக்கு மேல் இல்லாமல் போன காலரா, இப்போது திடீரென்று, எல்லாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி, மீண்டும் தென் அமெரிக்காவில் தலைதூக்கியுள்ளது. “அங்கு 1991 முதல் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சம் பேர் என்று அறிக்கை செய்யப்பட்டதாகவும், 10,000 பேர் உயிரிழந்ததாகவும்” குறிப்பிடுகிறது லண்டனின் த டைம்ஸ். 1992 முதல் இந்தக் காலரா பாக்டீரியா புதிய அவதாரம் எடுத்து, இந்தியா, வங்காள தேசம், அவற்றின் அண்டை நாடுகள் என்று வலம்வருவதால் சுகாதார அதிகாரிகளின் கவலை இன்னும் அதிகரித்துள்ளது. இதுவரை, 2,00,000 மக்களை பாதித்துள்ளது. காலரா என்பது தீராத வயிற்றுப்போக்கை உண்டாக்கும் நோய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதுமான சிகிச்சை கிடைக்கவில்லையென்றால், அவர்களில் 70 சதவிகித மக்கள் உயிரிழக்க நேரும். ஆனால் வரும் முன் காப்பதே சிறந்த வழி. குடிநீரையும் பாலையும் நன்றாக கொதிக்க வைப்பது, ஈக்கள் வராமல் தடுப்பது, குளோரின் போடப்பட்ட தண்ணீரால் உணவுப் பதார்த்தங்களைக் கழுவுவது போன்ற நடவடிக்கைகள் அடிப்படை பாதுகாப்பு அம்சங்களாகும்.
உலக சமாதான பேச்சு
ஸ்டாக்ஹோமில் உள்ள சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிலையத்தின் 1997 இயர்புக் சொல்வதைப் பார்த்தால், ஒருகாலத்தில் பனிப் போரில் முக்கிய பங்கெடுத்த உள்நாட்டு போர்கள் முடிந்துவிட்டதாக தெரிகிறது. பனிப் போரின் கடைசி ஆண்டாக திகழ்ந்த 1989-ல், 36 ‘பெரும் ஆயுத போர்கள்’ நடந்தன. இந்த எண்ணிக்கை 1996-ல் 27-ஆக குறைந்தது. இவற்றில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த ஒரு போரை தவிர, மற்ற எல்லா போர்களும் உள்நாட்டில் நடந்த, சாதாரண போர்களாகும். மேலும், இத்தகைய போர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை வைத்து, கணக்கிட்டு பார்க்கையில், ஒன்று, போரின் தீவிரம் குறைந்திருக்க வேண்டும் அல்லது மிதமான அளவில் நீடித்திருக்க வேண்டும் என்ற விஷயம் தெரியவந்தது. “இதுவரை எந்தவொரு தலைமுறையும் உலக சமாதானத்திற்கு இவ்வளவு பக்கத்தில் நெருங்கவில்லை” என்று சொல்லி முடிக்கிறது த ஸ்டார் என்ற தென் ஆப்பிரிக்க செய்தித்தாள். ‘அமெரிக்க ஆதிக்கம் . . . அமெரிக்க கடைக்கண் பார்வையில் உதயமாகும் சமாதானத்தை இந்த உலகிற்கு தந்துள்ளது; இது சர்வதேச அளவில் சமாதானமும் அமைதியும் தவழும் ஒரு சகாப்தம். இந்த நூற்றாண்டு இதை கண்டதில்லை, மனித வரலாறும் கண்டிருக்குமா என்பதும் சந்தேகமே’ என்று டைம் பத்திரிகை சொல்கிறது.
இன்னும்கூட நெ. 1
“வேறு எந்தவொரு புத்தகத்தைக் காட்டிலும் பைபிளே அதிக எண்ணிக்கையில் இன்னும்கூட அச்சிடப்படுகிறது” என்று அறிக்கை செய்கிறது ஈஎன்ஐ புல்லட்டீன். அதிகளவில் பைபிள் விநியோகிக்கப்படும் நாடுகள் சீனா, அமெரிக்கா மற்றும் பிரேஸில். யுனைடெட் பைபிள் சொஸையிட்டிஸ் (UBS), அறிக்கையின்படி, 1.94 கோடி முழு-பைபிள்கள் 1996-ல் விநியோகிக்கப்பட்டன. இது 1995-ல் விநியோகிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட 9.1 சதவிகித அதிகரிப்பு, ஒரு புதிய சாதனையும்கூட. “உலகின் ஒருசில இடங்களில் விநியோகிக்கப்பட்ட எண்ணிக்கையைக் கேட்டால், ஆச்சரியத்தால் மயக்கமே வந்துவிடும், [ஆனாலும்கூட] எல்லாருக்கும் பைபிள் எளிதில் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்றால், நமக்கு இன்னும் ஏகப்பட்ட வேலையிருக்கிறது” என்று கூறுபவர் ஜான் பால். இவர் UBS-ன் பிரசுரிப்பு நிர்வாக ஒருங்கிணைப்பு அதிகாரி.
“மரண தூதுவர்கள்”
வளர்ந்து வரும் நாடுகளில் வியாதியை, “பெருக்கி, சுமையை” கூட்டுவது பணக்கார மேற்கத்திய நாடுகளே என்று உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) 1997-ம் வருட அறிக்கை சொல்கிறது. புகைபிடிப்பது, அதிக கலோரியும், கொழுப்பும் உள்ள உணவை சாப்பிடுவது, உடம்பை அலட்டிக்கொள்ளாமல் இருப்பது போன்ற மேலைநாட்டு பாணிக்கு ஏற்ப வளர்ந்துவரும் நாடுகள் மாறிவருவதால், இதய நோய், பக்கவாதம், சர்க்கரை வியாதி, சிலவகை புற்றுநோய்கள் பெருமளவு அதிகரித்துள்ளன என்று அறிக்கை செய்கிறது லண்டனின் த டெய்லி டெலிகிராஃப். உலகளவில் மக்களின் ஆயுள் அதிகரித்தாலும், அத்தகைய ஆயுள் ‘தரம் இல்லாத வாழ்க்கையாக, வெறும் காலி பெருங்காய டப்பாவாக இருக்கிறது’ என்று கூறுகிறார் WHO-வின் இயக்குநர் டாக்டர் பால் கிளையூஸ். “அவர்கள் நம்மை உண்மையான மரண தூதுவர்கள் என்று சொல்லிக்கொள்வது ரொம்ப ரொம்ப சரியே” என்று அவர் மேலும் கூறினார். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்க உலகளவில் தீவிரமாக பிரச்சாரம் செய்யவேண்டும் என்று WHO குரலெழுப்பி வருகிறது. இல்லையென்றால், “படுமோசமான நிலைமை உலகளவில் ஏற்பட்டு, துன்பம் வாட்டி எடுத்துவிடும்” என்று கூறுகிறது.
சத்தியத்தை தேட பௌத்த தலைவர் அறிவுரை
மதத்தை பொருத்தவரை, “பிடிவாதம் நல்லதல்ல” என்று கூறுகிறார் எஷின் வாட்டனாபே. இவர் ஜப்பானிலுள்ள பண்டைய பௌத்த மதப்பிரிவுகளில் ஒரு பிரிவின் தலைமை பிச்சுவாகவும் தலைவராகவும் இருக்கிறார். நம்பிக்கைகளில் உண்மையோடு இருப்பது நல்லது என்றும், ஆனால் விடாப்பிடியான நம்பிக்கைகள் கெட்டவை என்றும் அவர் குறிப்பிட்டாரா என கேட்டபோது, அவர் தந்த விளக்கத்தை மைனிச்சி டெய்லி நியூஸ் மேற்கோள் காட்டியது: “உங்களது நம்பிக்கைகள் சரியானவையா தவறானவையா என்று நீங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். மற்ற நம்பிக்கைகளோடு அவற்றிற்கு இருக்கும் தொடர்பை மறு ஆய்வு செய்வது மிக முக்கியம். அவை சத்தியத்தை எடுத்துரைக்கின்றனவா இல்லையா என்பதையும் நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இவ்விஷயங்களை நாம் மறுபடியும் ஆய்வு செய்து பார்க்கவேண்டும்.” 1,200 வருடங்களுக்கு முன் சீனா, ஜப்பானுக்கு அறிமுகம் செய்துவைத்த டென்டை என்ற பௌத்த மதப்பிரிவின் தலைவராக வாட்டனாபே இருக்கிறார்.
இயற்கையான அண்டிசெப்டிக் மருந்து
சில விலங்கினங்கள் செய்வதைப்போல் மக்கள் ஒருசிலர் தங்களுக்கு காயங்கள் ஏற்படும்போது, இயல் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு அவற்றை நக்குகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த உமிழ்நீர் உண்மையில் ஓர் இயற்கையான அண்டிசெப்டிக் மருந்து என்பதை லண்டனிலுள்ள செயின்ட் பர்த்தலாமியு மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தி இன்டிபென்டெண்ட் செய்தித்தாள் கொடுத்த அறிக்கையின்படி, தன்னார்வம் உள்ள 14 பேரை, தங்களுடைய கைகளை இருபுறமும் நக்கும்படி சொல்லி, அவர்களுடைய தோலில் நைட்ரிக் ஆக்ஸைடின் அளவு கிடுகிடுவென்று அதிகரித்ததை மருந்தியல் வல்லுநர்கள் கண்டுபிடித்தனர். நைட்ரிக் ஆக்ஸைடு ஒரு சக்திவாய்ந்த இரசாயனம். கிருமிகளை கொன்றுவிடும். உமிழ்நீரில் உள்ள நைட்ரிக், மேற்புற தோலின் அமிலத்தில் படும்போது நைட்ரிக் ஆக்ஸைடு உருவாகிறது. அஸ்கார்பேட் என்னும் மற்றொரு இரசாயனமும் இந்த வேதிவினைக்கு துணைபுரிகிறது. இதுவும் உமிழ்நீரில் உள்ளது.
கஞ்சா—தீய போதை மருந்தா?
கஞ்சா அடிப்பவர்கள், அது ஒன்றும் ரொம்ப தீங்கான போதை மருந்து அல்ல என்று ரொம்ப காலமாகவே வக்காலத்து வாங்கி வருகிறார்கள். ஆனால், கஞ்சாவினால் “மூளையில் ஏற்படும் பாதிப்புகள், ஹெராயின் போன்ற ‘தீய’ போதை மருந்துகளின் பாதிப்புகளை ஒத்திக்கின்றன என்று புதிய நிரூபணம் காட்டுகிறது” என்று அறிக்கை செய்கிறது சயன்ஸ் ஜெர்னல். இந்த ஆய்வை அமெரிக்கா, ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்தினார்கள். அவர்கள் கண்டறிந்த உண்மைகளில் ஒன்று: “கஞ்சாவில் உள்ள வீரியம் மிக்க பொருள், THC எனப்படும் ஒருவகை இரசாயனத்தன்மை உள்ள பிசின் ஆகும். [இது] நிகோடின் முதல் ஹெராயின் வரை மற்ற போதைப் பொருட்களை நாடும்படி தூண்டுவதாக கருதப்படும் அதே உயிர்வேதியியல் செயலை ஏற்படுத்துகிறது: மூளையில் தூண்டுதல் நிகழும் பகுதியில் கசியும் டோபாமைன் என்ற மூலக்கூறு” உபயோகிப்போரை மீண்டும் மீண்டும் போதைப் பொருட்களை நாடும்படி செய்கிறது. நீண்டகாலமாக கஞ்சாவை பயன்படுத்தியபின், அதை நிறுத்தினால் மூளையில் மற்றொரு இரசாயனத்தின் அளவு அதிகரிக்கிறது, அதாவது CRF எனப்படும் பெப்டைடு சுரக்கும் (corticotropin-releasing factor) அளவு அதிகரிக்கிறது. ஓப்பியம், மதுபானம், கொக்கெய்ன் போன்றவற்றை நிறுத்தினால் ஏற்படும் உணர்ச்சி ரீதியிலான சோர்வு, கவலை ஆகியவற்றுடன் இந்த CRF தொடர்புடையது. இதனால்தான் ஓர் ஆய்வாளர் இவ்வாறு கூறுகிறார்: “இந்தச் சான்றுகளை எல்லாம் ஆராய்ந்து பார்த்தப்பிறகு, THC ‘தீங்கிழைக்காத’ போதை மருந்து என்று இனிமேல் மக்கள் நினைக்காமல் இருந்தால் எனக்கு அதுவே போதும்.” அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 1,00,000 பேர் கஞ்சாவிலிருந்து விடுபட சிகிச்சையை நாடுகிறார்கள்.
அந்தக் கால எகிப்தில் ஐஸ்
“செயற்கை முறையில் ஐஸ் தயாரிக்கும் வசதி அந்தக் காலத்து எகிப்தில் இல்லாதபோதிலும், வறட்சியான, மிதமான வெப்பநிலையில் உருவாகும் இயற்கை சூழலை பயன்படுத்தி அவர்களால் ஐஸ் தயாரிக்க முடிந்தது” என்று குறிப்பிடுகிறது ஒஹாயோவிலுள்ள பிரைனிலிருந்து வெளிவரும் த கவுண்டிலைன் என்ற செய்தித்தாள். அவர்கள் எப்படி தயாரித்தார்கள்? “பொழுதுசாயும் நேரத்தில், எகிப்திய பெண்கள் அகலமான களிமண் தட்டுகளில் தண்ணீரை ஊற்றி, வைக்கோல் பரப்பின்மீது வைத்துவிடுவார்கள். தண்ணீரின் மேற்பரப்பிலிருந்தும், களிமண் தட்டுகளின் ஈர பக்கங்களிலிருந்தும் விரைவில் நீர் ஆவியாகிவிடுகிறது. அப்போது, அந்திசாயும் நேரத்தில் வெப்பமும் கிடுகிடுவென்று தணிந்துவிடுவதால் தண்ணீர் உறைந்து விடுகிறது. இவ்வாறு உறைவதற்கு வானிலை உறைநிலையை அடையவில்லை என்றாலும்கூட தண்ணீர் உறைந்துவிடும்.”
வெயிலில் தலைகாட்டினால்
“கொள்ளைநோய் ஏற்படும் அதே அளவில் தோல் புற்றுநோயும் தலைதூக்கியுள்ளது வட அமெரிக்காவில்” என்ற செய்தியை அளிக்கிறது த வான்கூவர் சன் என்ற செய்தித்தாள். கனடா நாட்டவர்களில் “ஏழுபேரில் ஒருவர் என்ற கணக்கில் எப்படியும் அவர்களது ஆயுள் காலத்திற்குள் [தோல்புற்று நோய்] வரும் அபாயம்” இருக்கிறது. “வெயிலில் தலைகாட்டியதால் 90 சதவிகித நோயாளிகளுக்கு புற்றுநோய் கட்டிகள் வந்ததாக கருதப்படுகிறது” என்று மேலும் அந்தச் செய்தித்தாள் கூறுகிறது. தோலை வெயிலில் கறுக்க வைத்ததால் (tan) அது பாதிக்கப்பட்டு, இளம் வயதிலேயே தோல் சுருங்கி, நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்துவிடும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 4,000-க்கும் மேற்பட்ட கனடா நாட்டு மக்களை கொண்டு ஒரு தேசிய ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், வெயில் தங்கள் சருமத்துக்கு ஏற்படுத்தும் பயங்கரமான விளைவுகளைப்பற்றி 80 சதவிகித மக்கள் அறிந்திருந்தனர் என்றும், அப்படி இருந்தும், அவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிய வந்தது. ஆய்வில் முக்கிய ஆராய்ச்சியாளராக இருப்பவர் டாக்டர் கிறிஸ் லாவாடோ. அவர் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் துணைப்பேராசிரியர். அவர் இவ்வாறு எச்சரிக்கை கொடுக்கிறார்: “வெயிலில் இருந்து நம்மை பாதுகாப்பதை ஒரு பழக்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். வெயிலை அனுபவித்து மகிழ புத்திசாலித்தனமான, பாதுகாப்பான வழிகள்” இருக்கவே இருக்கின்றன.
செலவுபிடித்த பழக்கம்
புகைபிடிப்பதால் காசு கரியாகிறது. எவ்வளவு தெரியுமா? ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் அல்லது இரண்டு பாக்கெட் சிகரெட் பிடிப்பதை பொருத்து, ஒரு காலக்கட்டத்தில் கணக்கிட்டால் அவருக்கு ஆகும் செலவு 2,30,000 அல்லது 4,00,000 அமெரிக்க டாலர் என்ற விவரத்தை தருகிறது யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா பர்கெல்லி வெல்நஸ் லெட்டர். “நீங்கள் இளம் வயதுக்காரர் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். இன்றையிலிருந்து நீங்கள் புகைபிடிக்க ஆரம்பித்து, தொடர்ந்து 50 வருடங்களுக்கு பிடிக்கிறீர்கள், இதற்கிடையில் அது உங்கள் உயிரை பறிக்கவில்லை என்றும் வைத்துக்கொள்ளலாம். ஒரு பாக்கெட்டின் விலை $2.50 என்றால் (கணக்கை எளிதாக்க, விலையேற்றத்தை சேர்க்காதிருப்போமாக), அது ஒரு வருடத்திற்கு 900 டாலர், அல்லது 50 வருடங்களுக்கு 45,000 டாலர் ஆகிறது. அந்தப் பணத்தை வங்கியில் போட்டால், வருடத்திற்கு 5% வட்டி வீதம், ரொக்கப்பணம் நான்கு மடங்காக பெருகிவிடும்” என்று வெல்நஸ் லெட்டர் கூறுகிறது. லைஃப் இன்சூரன்ஸுக்கு ஆகும் அதிகப்படியான பிரிமியத்தையும், (வீட்டையும், துணிமணிகளையும், பற்களையும்) சுத்தம் செய்ய ஆகும் எக்ஸ்ட்ரா செலவுகளையும் கூட்டினால், அது மேற்குறிப்பிட்ட தொகையை எட்டுகிறது. அந்த லெட்டர் மேலும் கூறுவதாவது: “மேற்குறிப்பிட்ட தொகையில், ஒருவேளை உங்களுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் ஈடுசெய்யாத, புகைபிடிப்பதால் உண்டாகும் நோய்களின் மருத்துவ செலவு சேர்க்கப்படவில்லை.”