உலகை கவனித்தல்
மனிதக் குறுக்கீட்டுக்கு இது பரவாயில்லை
இங்கிலாந்தில் 1987-ல் கடும்புயல் வீசி, ஒன்றரை கோடி மரங்கள் சாய்ந்ததிலிருந்து பத்து வருடங்களுக்குப் பின்பு, மனிதர் குறுக்கிடாமல் இருந்த காட்டுப்பகுதிகளில், எதிர்பார்த்ததைவிட மிக அதிகமாய் மரங்கள் மறுபடியும் தழைத்ததாக த டெய்லி டெலிகிராஃப் அறிக்கை செய்கிறது. எங்கெல்லாம் மரங்கள் விழுந்திருந்தனவோ, அங்கெல்லாம் சூரிய ஒளி தரையில் அதிகமாய் பட்டது. ஆகவே, மரக் கன்றுகளும் புதர்ச்செடிகளும் ஆறு மீட்டர் உயரம் வளர்ந்ததோடு, அங்கிருந்த பூச்சிகள், பறவைகள், தாவரங்கள் அனைத்தும் பெருகின. விழுந்துபோன ஓக் மரங்களும் ஊசியிலை மரங்களும் எதிர்பார்த்ததைப் போல் மக்கிப்போகாமல், அவற்றின் கட்டைகள் நன்கு பதப்படுத்தப்பட்டவையாய் ஆகி, அவற்றின் மதிப்பு மூன்று மடங்காகி உள்ளது. “[மனிதர்] நல்லெண்ணத்துடன் சுத்திகரித்தபோதோ, புயலைவிட அதிக கேடு இழைக்கப்பட்டது. அந்த இலையுதிர் காலத்தில் அநேக மரங்கள் அவசர அவசரமாகவும், தாறுமாறாகவும் நடப்பட்டதால், அவை பட்டுப்போயின” என வனக்காப்பு அலுவலர் பீட்டர் ரேன் கூறுகிறார்.
வேலை, டென்ஷன், மாரடைப்புகள்
வேலையில் மனரீதியில் ஏற்படும் டென்ஷன் இருக்கிறதே, அதுதான் புகைப்பதற்கு அடுத்தபடியாக, இருதயம் மற்றும் இரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் இரண்டாவது முக்கிய காரணி என பிராங்க்ஃபர்ட்டர் ருன்ட்ஸ்ஷௌ என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ஃபெடரல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஆக்குப்பேஷனல் ஸேஃப்டி அண்ட் ஹெல்த் ஸ்டாண்டர்ட்ஸ் அட் உவொர்க் எனப்படும் ஜெர்மனியிலுள்ள பெர்லின் நகரைச் சேர்ந்த கூட்டமைப்பால் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின் முடிவைத் தொகுத்துரைக்கையில் அந்த அறிக்கை குறிப்பிடுவதாவது: “தங்களுடைய அலுவலகத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் தலையிட முடியாத நிலையில் இருப்பவர்களும், ஒரேமாதிரியான வேலையையே இயந்திரத்தனமாக செய்யும் நிலையில் இருப்பவர்களுமே அதிகமாய் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளவர்கள். அவர்களுக்குக் கிடைக்கும் ஓய்வுநேர இடைவேளையிலும் ஏதாவது வேலைசெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டாலோ, உதாரணமாக தங்களுக்கென ஒரு வீட்டைக் கட்டுவது, நோய்ப்பட்ட உறவினரைப் பராமரிப்பது போன்ற ஏதாவது டென்ஷன் ஏற்பட்டால், மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் கிட்டத்தட்ட ஒன்பது மடங்காக அதிகரிக்கிறது.” தீர்மானம் செய்வதில் குரலெழுப்ப பணியாளர்களுக்கு ஓரளவு சுதந்திரம் வேண்டும் என ஒரு நிபுணர் வலியுறுத்துகிறார். “ஒரு துறையைச் சேர்ந்த பணியாளர்கள் அனைவருடனும் மாதத்துக்கு ஒரு முறை கலந்தாலோசிப்பு நடத்த ஏற்பாடு செய்வதால் காரியங்கள் முன்னேறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.”
‘உலகிலேயே பயன்மிகுந்த போக்குவரத்து சாதனம்’
நகர்ப்புறத்தில் எட்டு கிலோமீட்டருக்கும் குறைவான தூரம் நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால், சைக்கிளில் பயணம் செய்வதன் மூலம் காரைவிட வேகமாக சென்றுவரலாம் என இலங்கையில் கொழும்பு நகரைச் சேர்ந்த தி ஐலேண்ட் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ஃபிரெண்ட்ஸ் ஆஃப் தி எர்த் எனப்படும் சர்வதேச சுற்றுச்சூழல் தொகுதியினர், சைக்கிளை, “பூமியிலேயே பயன்மிகுந்த போக்குவரத்து சாதனம்” என அழைக்கின்றனர். சுமார் 4.5 லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு எரிபொருள் ஆற்றல் கிடைக்குமோ, அதே அளவு ஆற்றல் தரும் உணவை உட்கொள்வதன் மூலம், தூய்மைக்கேட்டை ஏற்படுத்தாமலேயே, கிட்டத்தட்ட 2,400 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும் என அவர்கள் கூறுகின்றனர் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. சைக்கிளைப் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது எனவும் அந்த அறிக்கை கூடுதலாக தெரிவிக்கிறது.
அதிகமாகிவரும் அடாவடிகள்
இழிவான பேச்சுகள், வாயளவிலும் உடல்ரீதியிலும் ஒழுக்கக்கேடான செயல்களை வற்புறுத்துதல், சிறுசிறு திருட்டுகள், வம்புச்சண்டைக்கு இழுத்தல், பயமுறுத்துதல்கள் போன்ற பலதரப்பட்ட அடாவடிச் செயல்களை அநேக மாணவர்கள் எதிர்ப்படுகின்றனர் என ரோமைச் சேர்ந்த லா ஸாப்யென்ஸா பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சுற்றாய்வு காட்டுகிறது. குறிப்பாக இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ரோம் நகரில் காணப்பட்டன; இங்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான பையன்களும் பெண்பிள்ளைகளும் என இரு சாராருக்குமே மூன்று மாத காலத்துக்குள் அடாவடிச் செயலுக்கு ஆளான அனுபவம் இருக்கிறது. “துருவும் உரையாடல்களின்போது,” என ஆய்வாளர் ஆனா கோஸ்டான்ட்ஸா பால்டிரீ விளக்குபவராய், “புகார் செய்யாமல் விட்டுவிட்ட, மிகவும் வன்மையான ஒழுக்கக்கேடான செயல்களைக்கூட அநேக பெண்பிள்ளைகள் நினைத்துப் பார்த்தனர். அவர்கள் புகார் செய்யாமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள்; ஒன்று பயம், மற்றொன்று, . . . சிலவகை ஒழுக்கக்கேடான செயல்கள் சாதாரணமானவை என அவர்கள் நினைத்துக்கொண்டனர்” என இத்தாலிய செய்தித்தாளான லா ரேப்பூப்ளிக்கா கூறினது.
அடாவடிச் செயல்கள் சிறுவர்களின் மத்தியில் மட்டும் நடப்பதில்லை. பெரியவர்களில் அநேகர் தாங்கள் வேலை செய்யும் இடங்களில், பெரும்பாலும் தங்களது மேலதிகாரிகளின் அடாவடித்தனத்தால் பாதிக்கப்படுகின்றனர் என தி ஐரிஷ் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. “வாய்த் தகராறு செய்வது, ஆட்களின் வேலையைப் பற்றி குறைகூறுவது, அவர்களைப் பற்றி பொய் வதந்திகளைப் பரப்புவது ஆகியவை வேலை செய்யுமிடத்தில் நடைபெறும் அடாவடித்தனத்தின் உத்திகள்” என அது கூறியது. “கேவலமாக நடத்துவதும், வேலையில் எட்ட முடியாத இலக்குகளை அவர்களுக்கு முன் வைப்பதும்கூட பொதுவாய் இருந்தன.” அடாவடித்தனத்தால் பாதிக்கப்படுவது, “கவலை, எரிச்சல், மனச்சோர்வு, கருத்துத்திரிபு நோய், மன உளைச்சல், நம்பிக்கை இழப்பு, சுயமரியாதை இழப்பு, எதிலும் விரக்தி மனப்பான்மை ஆகிய மனவியல் பாதிப்புகளை உள்ளடக்குகிறது” என டைம்ஸ் கூறுகிறது. அடாவடித்தனம் மிதமிஞ்சிப் போகும்போது, “உடைந்து போவதற்கு அல்லது தற்கொலைக்கும்கூட” இது வழிநடத்தலாம்.
சுகப்பிரசவமா, சிசரியனா?
பிரேஸிலைச் சேர்ந்த மருத்துவர்களும் தாய்மார்களும் சுகப்பிரசவத்தைக் காட்டிலும் சிசரியன் மூலம் பிரசவிப்பதையே மேலாக எண்ணுகின்றனர். “தான் நிறைய பிரசவங்களை அட்டெண்ட் பண்ணலாம் என்றும், தன் தொழிலில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்றும் வார இறுதி நாட்களை இழக்க வேண்டிய தேவை இருக்காது என்றும்” அந்த மருத்துவருக்குத் தோன்றுவதாக வேஸா பத்திரிகை அறிக்கை செய்கிறது. தாய்மாரோ, “நோகாமல் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம் (என்றாலும், சிசரியன் செய்தபின்பு குணமடைவதற்கு இன்னும் அதிக வேதனையை சகிக்க நேரிடுகிறது) என்று நினைக்கின்றனர்; மேலுமாக இந்த முறையில் பிள்ளை பெற்றுக்கொண்டால் உடல் அழகு சம்பந்தப்பட்டதில் நன்மை பயக்கும் (ஆனால் அது உண்மை இல்லை) என்றும் அவர்கள் நினைக்கின்றனர்.” பொது மருத்துவமனைகளில், மூன்றுக்கு ஒரு பிரசவம் சிசரியனே; சில தனியார் மருத்துவமனைகளிலோ, அந்த விகிதம் கிட்டத்தட்ட 80 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. “பிரசவம் என்பது ஒரு வியாபாரமாகிவிட்டது” என காம்ப்பினஸ் பல்கலைக்கழகத்தில் மகப்பேறியல் துறையில் தலைவராகப் பணியாற்றும் டாக்டர் ஸ்வௌ லூயிஷ் கார்வால்யூ பின்ட்டூ ய ஸில்வா கூறுகிறார். “சுகப்பிரசவத்தைப் போல் அல்லாமல், சிசரியன் ஓர் அறுவை சிகிச்சை என்பதை மக்கள் அடியோடு மறந்துவிடுகின்றனர். சிசரியன் செய்கையில், இரத்தம் அதிகமாக இழக்கப்படுகிறது; நெடுநேரம் உணர்வு திரும்புவதில்லை; புண் ஏற்படும் சாத்தியமும் அதிகமிருக்கிறது.” அந்த டாக்டரின்படி, “தாய் அல்லது சேயின் உயிர் ஆபத்தில் இருக்கையில், பிரசவ வலியுடன் தொடர்புடைய உடல் மாறுபாடுகளின் அறிகுறி இல்லாவிடில், அல்லது திடீரென சிக்கல்கள் ஏற்பட்டுவிடுகையில் ஆகிய இம்மூன்று காரணங்களுக்காக மட்டுமே சிசரியன் செய்யப்பட வேண்டும்” என்று வேஸா பத்திரிகை சொல்கிறது.
கிரீஸில் மதப்பற்று குறைகிறது
கிரீஸிலுள்ள மதத்தின்பேரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட ஒரு பதிவை ஆதென்ஸ் நகரின் செய்தித்தாளான டா நியா சமீபத்தில் பிரசுரித்தது; இது, 1963-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பைப் போன்றது. அந்நாட்டினரின் மதப்பற்றில் குறைவு ஏற்பட்டிருப்பதை அந்த எண்ணிக்கைகள் காட்டுகின்றன. இதற்கு முந்தின சந்ததியில், மாதத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு, மூன்று தடவை தாங்கள் சர்ச்சுக்குச் செல்வதாக 66 சதவீதத்தினர் கூறினர்; சமீபத்திய கணக்கெடுப்பிலோ 30 சதவீதத்துக்கும் குறைவானோரே அவ்வாறு செல்கின்றனர் என காட்டுகிறது. ஆதென்ஸ் மாநகர்ப் பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, அங்குள்ள 965 பெரியவர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்டவர்கள், சமுதாயத்துக்கென்று சர்ச் செய்யும் சேவை “மிகக் கொஞ்சமே,” அல்லது “கொஞ்சம்கூட இல்லை” என்று கூறினர். “கிரேக்க சமுதாயம் படிப்படியாக மதச்சார்பற்றதாகி வருவது” பற்றி டா நியா செய்தித்தாளுக்கு எழுதிய கடிதத்தில் மதிப்புக்குரிய கிரேக்க கணக்குப் பதிவாளர் இலியாஸ் நிக்கொலாகொப்பூலாஸ் குறிப்பிடும்போது, கிரீஸிலுள்ள சர்ச்சினிடம் இப்போது, “எச்சரிக்கையுடனும் கோபதாபத்துடனும்” நடந்துகொள்வதாக குறிப்பிட்டார்.
ஒரினாகோ அலிகேட்டர் மறைதல்
வெனிசுவேலாவின் ஒரினாகோ நதியில் வசிக்கும் அலிகேட்டர்கள் ஆபத்தில் உள்ளன என்பதாக காரகாஸின் எஸ்டாம்ப்பாஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. இப்பிராணிகள் 1930 முதல் அவற்றின் தோலுக்காக வேட்டையாடப்பட்டு வந்திருக்கின்றன. அந்தச் சமயத்தில், “வெனிசுவேலாவில் இருந்த அலிகேட்டர்களின் எண்ணிக்கை மனிதரின் எண்ணிக்கையைவிட அதிகமாய் இருந்தது” என்று அந்தப் பத்திரிகை குறிப்பிடுகிறது. ஆனால் 1931-க்கும் 1934-க்கும் இடையில், குறைந்தபட்சம் 45 லட்சம் அலிகேட்டர்கள் என்ற கணக்கில், கிட்டத்தட்ட 15 லட்சம் கிலோகிராம் எடையுள்ள அலிகேட்டர் தோல் ஏற்றுமதி செய்யப்பட்டது. 1950 வாக்கில், “வருடக்கணக்கில் விடாமல் வேட்டையாடின பிறகு,” அலிகேட்டர்களின் எண்ணிக்கை அவ்வளவாய் குறைந்துவிட்டிருந்ததால், 30,000 கிலோகிராம் “மட்டுமே” ஏற்றுமதி செய்யப்பட முடிந்தது. இன்று, 3,000 ஒரினாகோ அலிகேட்டர்கள் மட்டுமே மீந்துள்ளன; மேலும், அலிகேட்டர்களும் அவற்றுடன், வெனிசுவேலாவில் வசிக்கும் மற்ற 312 வகை விலங்குகளும் மனிதரால் மறைந்துவிடும் அபாயத்தில் உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெட்டித் தபாலே தக்காளிக்கு உணவு
ஒரு மாதம் முழுவதும் பட்டுவாடா செய்யப்படாதவையும் பட்டியல்களையும் விளம்பரங்களையும் உள்ளிட்டவையுமான 500 டன் வெட்டித் தபால்களை வைத்து ஒரு தபால் நிலையம் என்ன செய்யக்கூடும்? டெக்ஸஸைச் சேர்ந்த டல்லஸ் ஃபோர்ட் உவொர்த் தபால் நிலையம், அவற்றுள் பெரும்பாலானவற்றை கம்போஸ்ட் உரம் தயாரிக்கும் கம்பெனிக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளது. அந்த உரம், தக்காளிச்செடி, மேரிகோல்ட் பூச்செடி ஆகியவற்றை வளர்ப்பதில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதாக த நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது; அதனால் நல்ல பலன் ஏற்பட்டிருக்கிறது. கிழிக்கப்பட்ட தபாலை கம்போஸ்ட்டாக மாற்றும் பாக்டீரியாவுக்கு, பானங்கள் தயாரிப்பு நிலையத்திலிருந்து கழிக்கப்பட்ட சாரமற்ற பீரும், சோடா கலந்த பானங்களும் உணவாக ஊற்றப்படுகின்றன. அந்தப் பீரிலும் சோடாவிலும் சர்க்கரை அடங்கியுள்ளது; அந்தச் சர்க்கரைச் சத்து அந்தப் பாக்டீரியாவை மதாளிக்கச் செய்கிறது. இந்தப் பரிசோதனையை நடத்தும் கம்போஸ்ட் உர தயாரிப்பு கம்பெனியின் துணைத் தலைவரான ஜோயல் சிம்ஸன் கூறினதாவது: “நமது உடலைப் பூரிக்க வைக்கும் பொருட்களே, அந்தப் பாக்டீரியாவையும், பூரிக்கவும் பூரிப்பாக்கவும் செய்கிறது.”
தோல் அழற்சிக்கான சிகிச்சை
“தோல் அழற்சிகளால் அவதியுறும் அநேகர், சங்கடப்பட்டுக்கொண்டு, சிகிச்சை பெறுவதில்லை; அவர்கள் வருடக்கணக்கில் ‘யாரிடமும் சொல்லாமல் கடும் வேதனையால்’ துன்புறலாம் என்பதாக தி ஐரிஷ் டைம்ஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. அவர்களது நிலைமையைப் படம்பிடித்துக் காட்டும் வகையில், டாக்டர் கில்யன் மர்பி சொன்னதாவது: “செதிலரிப்பு நோய் (psoriasis) உள்ள நோயாளிகள் என்னிடத்தில் சிகிச்சை பெற வருகிறார்கள்; ஆடையைக் களையும்போது, அவர்களது தோல் நிஜமாகவே உரிந்து விழுகிறது; அவர்கள் அந்தளவுக்கு தாங்கள் சுத்தமற்றவர்கள் என்று உணருவதால் ஓட்டலில் தங்கியிருக்கவோ, முடிதிருத்தகத்திற்கு செல்லவோ மாட்டார்கள்.” லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் தோலியல் பேராசிரியராக பணிபுரியும் பில் கன்லிஃப் மேலும் கூறுவதாவது: “முகப்பரு மக்களை உடல்ரீதியிலும் மனரீதியிலும் பாதிக்கிறது. அது அசிங்கமானது எனவும் தொற்றும் தன்மையுடையது எனவும் பரவலான கருத்து உள்ளது. வேலைக்குச் செல்வதற்கென ஒரே திறமையுடைய இரண்டு பேர் நேர்முகத்தேர்வுக்குப் போய் [இருந்தாலும்], முகப்பரு இல்லாதவரே வேலை பெறுவார்.” தன்னிடம் சிகிச்சை பெற வந்த நோயாளிகளில் சிலர் அவ்வளவு குழப்பமடைந்து இருந்ததால், தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர் என கன்லிஃப் சொல்கிறார். அயர்லாந்திலுள்ள டப்ளின் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய தோலியல் மற்றும் பால்வினை நோய் இயல் கல்வி சம்பந்தப்பட்ட ஒரு சமீபத்திய கூட்டத்தில் கலந்துகொண்ட டாக்டர்கள், ஆரம்ப நிலையில் சிகிச்சை பெறும் தேவையை வலியுறுத்தினர். “சிலருக்கு இது ஒரு பயங்கரமான பிரச்சினைதான்; ஆனாலும், பலன் தரும் சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது முக்கியம்” என ஒரு டாக்டர் கூறினார்.
உணவை சூடாக்குவது நச்சுக்களை அழிப்பதில்லை
சமைத்த மாமிசம் இரண்டு மணிநேரத்துக்கு மேலாக குளிர்பதனப் பெட்டிக்குள் வைக்காமல் அதைச் சாப்பிடக்கூடாது என டஃப்ட்ஸ் யுனிவர்சிட்டி ஹெல்த் அண்ட் நியூட்ரிஷன் லெட்டர் என்ற நியூஸ்லெட்டர் குறிப்பிடுகிறது. மறுபடியும் சூடாக்குவது தீங்குசெய்யும் பாக்டீரியாவைக் கொன்றுவிடாதா? “வெளியில் வைக்கப்பட்ட மாமிசத்தை மறுபடியும் சூடாக்குவது, அதன் மேற்பரப்பில் பரவியிருக்கும் பாக்டீரியாவைக் கொன்றுவிடலாம்; ஆனால் விடப்பட்ட பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்பட்ட, நோய்க்குக் காரணமான நச்சுக்களை அது அழிக்காது” என நியூட்ரிஷன் லெட்டர் குறிப்பிடுகிறது. ஸ்டாபிலோகாக்கஸ் என்ற பொதுவான பாக்டீரியத்தால் உற்பத்தி செய்யப்படும் ஒரு நச்சால், வயிற்று வலி, பேதி, குமட்டல், குளிர், காய்ச்சல், தலைவலி ஆகியவை ஏற்படலாம். “உணவுப்பொருட்களை மிக அதிக வெப்பநிலையில் சூடாக்குவதும்கூட அந்த நச்சை அழிக்காது.”
பெற்றோரது பேச்சு—கொஞ்சும் மொழி மட்டுமா?
தங்கள் குழந்தைகளிடம் விளையாட்டாக மழலைப்பேச்சில் கொஞ்சிப் பேசும் பெற்றோர், கனிவான பாசத்தை மட்டுமே பொழிவதில்லை என சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பட்ரிஷா கூல் என்ற பெண்மணியும் அவரது கூட்டாளிகளும் வெவ்வேறான மூன்று மொழிகளில்—ரஷ்யன், ஸ்வீடிஷ், ஆங்கிலம் ஆகியவற்றில்—குழந்தைகளிடம் பேசுவதற்குப் பயன்படுத்தப்படும் பேச்சை ஆய்வு செய்தனர். மிகைப்பட்ட விதத்தில் ஒலித்த பெற்றோரது பேச்சு முறைகள், குழந்தையின் கவனத்தைப் பெறுவது மட்டுமில்லாமல் அந்த மொழியை குழந்தை கற்றுக்கொள்ளவும் உதவுகின்றன எனத் தோன்றுகிறது. குழந்தைகள் “ஆறு மாதத்திற்குள், உயிரெழுத்துக்களின் ஒலியைப் பகுத்து உணரக் கற்றுக்கொள்கின்றன; அவை தங்கள் தாய் மொழியில், ‘ஈ’ மற்றும் ‘ஆ’ போன்ற எழுத்துக்களுக்கு இடையிலுள்ள அர்த்தமுள்ள வேறுபாடுகளுக்குக் கவனம் செலுத்துகின்றன; அதே சமயத்தில் அர்த்தமற்ற வேறுபாடுகளைப் பொருட்படுத்துவதில்லை” என சயன்ஸ் பத்திரிகை கூறுகிறது.
ஓட்டுவது, போன் பேசுவது—இரண்டும் சேர்ந்தால் ஆபத்து
ஓட்டிக்கொண்டிருக்கையில் போனில் பேசும் கார் டிரைவர்கள் தங்களுக்குத் தெரியாமலே படுமோசமான தவறுகளைச் செய்துவிடலாம். இதுவே ஜெர்மனியைச் சேர்ந்த ஜெனரல் ஆட்டோமொபைல் கிளப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஓர் ஆய்விலிருந்து எடுக்கப்பட்ட முடிவு. ஓர் ஆய்வு ஓட்டத்தில், மூன்று தடவை ஓட்டிக் காட்டும்படியாக டிரைவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது: போன் பேசாமல் ஓட்டுவது ஒரு தடவை; போன் பேசிக்கொண்டு ஓட்டுவது இரண்டு தடவை; அவ்வாறு போன் பேசிக்கொண்டு ஓட்டும்போது, ஹேண்ட்செட்டைக் கையில் பிடித்துக்கொள்ளத் தேவையற்ற போனில் பேசுவது ஒரு தடவை; ஹேண்ட்செட்டைக் கையில் பிடித்துக்கொண்டு போனில் பேசுவது மற்றொரு தடவை. ஆய்வில் உட்பட்டிருந்த டிரைவர்கள் எவ்வளவு நன்றாக ஓட்டினார்கள்? சராசரியாக, போன் பேசிக்கொண்டு ஓட்டாத டிரைவர்கள் பிரேக் பிடிப்பதிலும் தங்களுக்குக் குறிக்கப்பட்ட கோட்டிலேயே ஓட்டிச்செல்வதிலும் 0.5 தவறுகளை மட்டுமே செய்தார்கள்; ஹேண்ட்செட்டைக் கையில் பிடிக்கத் தேவையற்ற போனில் பேசிய டிரைவர்கள் 5.9 தவறுகளைச் செய்தார்கள்; ஹேண்ட்செட்டைக் கையில் பிடித்துக்கொண்டு போன் பேசிய டிரைவர்களோ 14.6 தவறுகளைச் செய்தார்கள். எனவே, ஓட்டுகையில் ஹேண்ட்செட்டைக் கையில் பிடித்துக்கொண்டு போன் பேசுவது “மிகப் பெரிய ஆபத்து” என்பதாக அந்த ஆய்வு இறுதியில் கூறியது என சூயட்டாய்ச்ச ட்சைட்டுங் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது.