சமாதானம்—அதன் மெய்மை
சமாதானத்தை உறுதியாகப் பெற ஐக்கிய நாடுகள் சங்கத்தின் முயற்சிகளுக்கு பின்னாலிருக்கும் குறிக்கோள்களை வெகு சிலரே குற்றங் கண்டுபிடிப்பர். “நாம் ‘பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்போமாக’ என்பது ஐக்கிய நாடுகள் சங்கத்தின் உலக அமைதிக்கான இலக்கு” என்று தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா சொல்கிறது. கூடுதலாக, “ஐக்கிய நாடுகள் சங்கத்திற்கு இரண்டு முக்கிய இலக்குகள் இருக்கின்றன: சமாதானம், மானிட கண்ணியம்.”
மேலே காணப்படும் சிலையின் கீழ் உள்ள எழுத்துப் பொறிப்பு ஏசாயா அதிகாரம் 2, வசனம் 4-ல் உள்ள பைபிள் தீர்க்கதரிசன வார்த்தைகளை பொழிப்புரைக்கிறது. ஒரு நவீன மொழிபெயர்ப்பின்படி அது வாசிப்பதாவது:
“அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிக்க வேண்டும்.”
இந்தக் கம்பீரமான வார்த்தைகள் நீடித்த சமாதானத்தையும் போராயுதக் குறைப்பையும் உறுதியாகப் பெற ஐ.நா. அங்கத்தின நாடுகளை நிச்சயமாக ஏவியிருக்க வேண்டும். ஆனால், விசனகரமாக ஐ.நா. 1945-ல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் துவக்கப்பட்டதிலிருந்து, அதன் சரித்திரம் வேறுவிதமாகவே இருப்பதைக் காண்பித்திருக்கிறது. ஏன்? ஏனென்றால் அடிப்படையாக ஏசாயாவிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கும் மேலே உள்ள வார்த்தைகளை மனித அரசாங்கங்கள் செய்திருப்பது போன்று தனித்து எடுக்க முடியாது. வார்த்தைகளின் சூழ்நிலைப் பொருத்தம் அதிமுக்கியம். ஏன் என்று கவனியுங்கள்.
ஏசாயாவின் செய்தி
ஏசாயா ஒரு தீர்க்கதரிசி. எல்லா இனத்தைச் சேர்ந்த ஜனங்களுக்கும் சமாதானமும் ஒத்திசைவுமான ஒரு மகிமையான காட்சியைப் பற்றி அவர் பேசுகிறார். இக்காட்சி மெய்மையாவதற்கு ஜனங்கள் ஏதோவொன்றைச் செய்ய வேண்டும். எதை? வசனம் 4-க்கு சம்பந்தப்பட்டிருக்கும் வசனங்கள் 2, 3-ன் உட்கருத்தை சிந்தித்துப் பாருங்கள்.
“[2] கடைசி நாட்களில் கர்த்தருடைய (யெகோவாவுடைய, NW) ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். [3] திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் (யெகோவாவின், NW) பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். [4] அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”
முதலாவது, நாம் நம் சிருஷ்டிகராகிய யெகோவாவுக்கு “அவருடைய வழிகளைப்” பற்றி நமக்கு போதிக்க அதிகாரம் இருக்கிறது என்பதை அங்கீகரிக்க வேண்டும். ஏசாயா பின்னால் பதிவு செய்தபடி ‘அவருடைய வழிகள் நம் வழிகளைப் பார்க்கிலும் உயர்ந்தவை.’ (ஏசாயா 55:9) அநேக ஜனங்கள், விசேஷமாக சுய-முக்கியத்துவம் வாய்ந்த உலக தலைவர்கள், இதை ஏற்றுக்கொள்வதற்கு ஒரு கடினமான காரியமாகக் காண்கின்றனர். அவர்களுடைய சொந்த வழிகள் மட்டும் அவர்களுடைய கண்களுக்கு சரியானதாகத் தோன்றுகின்றன. இருந்தாலும், அவர்களுடைய வழிகள் உலக சமாதானத்துக்கும், போராயுதக் குறைப்பிற்கும் வழிநடத்தவில்லையென்ற உண்மை, அப்பேர்ப்பட்ட போக்கை தொடர்ந்து நாடுவது வீணானது என்பதை நிச்சயமாய் காட்டுகிறது.
இரண்டாவதாக, கடவுளுடைய சட்டங்களுக்கு இணங்க வேண்டும் என்ற தனிப்பட்ட நபர்களின் ஊக்கமான விருப்பம் தேவைப்படுவதை கவனியுங்கள்: “நாம் அவர் பாதைகளில் நடப்போம்.” அந்த அடிப்படையில் மட்டுமே பூகோள ரீதியில் பட்டயங்கள் மண்வெட்டிகளாகவும், ஈட்டிகள் அரிவாள்களாகவும் அடிக்கப்படும். அப்பேர்ப்பட்ட வாஞ்சிக்கப்பட்ட இலக்கை எவ்வாறு அடைய முடியும்?
தெய்வீக போதனை
அநேக ஜனங்களிடம் பைபிளின் ஒரு பிரதி இருக்கிறது, அது யெகோவா தேவனின் போதனைகள் அடங்கிய புத்தகம், அதை வெறுமென வைத்திருப்பதைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது. யெகோவாவின் சட்டமும் வார்த்தைகளும் “எருசலேமிலிருந்து” வெளிப்படுகின்றன என்று ஏசாயா சொல்கிறார். அதனுடைய அர்த்தம் என்ன? ஏசாயாவின் நாட்களில், அந்தச் சொல்லர்த்தமான நகரம் எல்லா விசுவாசமுள்ள இஸ்ரவேலர்களும் நோக்கியிருந்த ராஜரீக அதிகாரத்தின் ஊற்றுமூலமாய் இருந்தது. (ஏசாயா 60:14) பின்னர், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களின் நாட்களில், இன்னும் எருசலேம் அந்நகரத்திலிருந்த கிறிஸ்தவ ஆளும் குழுவினிடமிருந்து வந்த போதனைகளுக்கு மையமாக இருந்தது.—அப்போஸ்தலர் 15:2; 16:4.
இன்றைய நாட்களைப் பற்றியது என்ன? ஏசாயா தன் செய்தியின் முன்னுரையில் என்ன சொல்கிறார் என்பதை கவனியுங்கள்: “நாட்களின் கடைசி பாகத்தில் இது கட்டாயம் நடக்க வேண்டும்.” மற்ற மொழிபெயர்ப்புகள் சொல்கின்றன: “கடைசி நாட்களில்.” (நியூ இன்டர்நேஷனல் வெர்ஷன்) 1914 முதற்கொண்டு நாம் தற்போதைய ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக இப்பத்திரிகையின் பக்கங்களில் அத்தாட்சிகள் ஒழுங்காக அளிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், வசனங்கள் 3 மற்றும் 4-ன்படி நாம் எதைக் காண எதிர்பார்க்க வேண்டும்?
இனிமேலும் யுத்தத்தைக் கற்காமலும், ஏற்கெனவே “பட்டயங்களை மண்வெட்டிகளாக” அடித்த ஒரு திரள் கூட்டமான ஜனங்கள். நாம் அவர்களைப் பார்க்கிறோம்! 200-க்கும் மேற்பட்ட தேசங்களில் எல்லா இனத்தையும் சேர்ந்த 40 லட்சம் ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகள் ஒருமனப்பட்டு ஒத்திசைவாக ஒருவரோடொருவர் சமாதானமாகவும் பைபிளின் சமாதான செய்தியை தங்கள் அயலகத்தாருக்கு பிரசங்கித்தும் வருகின்றனர். உலக முழுவதிலும் அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்று அறியப்படுகின்றனர்.
கடவுளுடைய ஜனங்களின் உலகளாவிய வேலைக்கு தேவையான கண்காணிப்பு கொடுக்கும் பூமியின் பல பாகங்களிலுமிருந்து வந்த வயதான கிறிஸ்தவ ஆண்கள் அடங்கிய ஒரு நவீன ஆளும் குழு அவர்களுக்கு இருக்கிறது. இந்த ஆண்கள், முதல் நூற்றாண்டில் எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்களையும், மூப்பர்களையும் போல உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாரின் அபிஷேகம்பண்ணப்பட்ட அங்கத்தினர்களாக இருக்கின்றனர். பூமியின் மீது அவருடைய எல்லா ராஜ்ய அக்கறைகளையும் கவனித்துக்கொள்ளும்படி இயேசுவால் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைப் பின்பற்றுகின்றனர் என்றும், மெய்ச் சமாதானத்தின் வழிகளை கடவுளுடைய மந்தைக்கு கற்பிப்பதில் அவர்கள் மனித ஞானத்தின் பேரில் சார்ந்திருப்பதில்லை என்றும், அவர்களை நம்பலாம் என்று சரித்திரம் நிரூபித்திருக்கிறது.—மத்தேயு 24:45-47; 1 பேதுரு 5:1-4.
மெய் வணக்கம்
சமாதானமாக வாழ்வதில் வெறும் அறிவைவிட அல்லது தெய்வீக போதனைகளுக்கேற்ப வாழ்வதற்கான ஒரு விருப்பத்தைவிட அதிகம் உட்பட்டிருக்கிறது. ஏசாயாவும் தெளிவாக சொல்கிறபடி, இருதய பக்தியும், நம் சிருஷ்டிகராகிய யெகோவாவை வணங்குவதும் இன்றியமையாதது.
“கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்” என்று தீர்க்கதரிசி சொல்கிறார். பூர்வ காலங்களில் சில மலைகளும், குன்றுகளும் விக்கிரக வணக்கத்திற்கு இடங்களாகவும், பொய் கடவுட்களின் புகலிடங்களாகவும் இருந்தன. கடல் மட்டத்திற்கு சுமார் 2,500 அடிகளுக்கு மேல் உயரமான சீயோன் மலையின் (எருசலேம்) மேல் தாவீது ராஜா தான் நிறுவின கூடாரத்திற்கு பரிசுத்த பெட்டியைக் கொண்டு வந்தபோது, தெய்வீக வழிநடத்துதலின் பேரில் அவர் செயல்பட்டார் என்பது தெளிவாயிருந்தது. பின்பு, மோரியா மலையின் மேல் யெகோவாவின் பெரிய ஆலயம் கட்டப்பட்டபோது, “சீயோன்” என்ற பதம் ஆலய இடத்தையும் சேர்த்துக்கொண்டது, ஆகையால் ஆலயம், சுற்றுப்புறத்தில் இருந்த புறமத இடங்களின் உயரத்தைவிட ஓர் உயர்நிலையை அனுபவித்தது. எருசலேமே அவருடைய “பரிசுத்த பர்வதம்” என்றும் அழைக்கப்பட்டது; ஆக, யெகோவாவின் வணக்கம் ஓர் உயர்வான நிலையில் வைக்கப்பட்டது.—ஏசாயா 8:18; 66:20.
ஆகையால் இன்று, யெகோவா தேவனின் வணக்கம் ஓர் அடையாளப்பூர்வமான மலையைப் போல் மிகவும் மேலாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனுடைய முக்கியத்துவத்தை எல்லாரும் காண்பதற்காக. ஏனென்றால் எந்த ஒரு மதமும் செய்யமுடியாத ஏதோவொன்றை அது செய்திருக்கிறது. அது என்ன? அது யெகோவாவை வணங்கும் எல்லாரையும் ஒற்றுமைப்படுத்தியிருக்கிறது, அவர்கள் சந்தோஷமாக தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக அடித்திருக்கின்றனர், இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. தேசீய மற்றும் இன பிரிவினைகள் அவர்களை இனிமேலும் பிரித்து வைப்பதில்லை. உலகின் தேசங்கள் முழுவதிலும் சிதறி இருந்தாலும், அவர்கள் ஓர் ஐக்கியப்பட்ட ஜனமாக, ஒரு சகோதரத்துவமாக வாழ்கின்றனர்.—சங்கீதம் 33:12.
தீர்மானிக்க வேண்டிய காலம்
இவைகள் எல்லாம் உங்களை எவ்வாறு பாதிக்கிறது? மற்றொரு எபிரெய தீர்க்கதரிசியின் வார்த்தைகள் மிகவும் பொருத்தமாய் இருக்கின்றன: “நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள் திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது.” (யோவேல் 3:14) கடவுளின் கைகளில் மெய்ச் சமாதானத்தின் வழிகளை கற்பதா அல்லது சீக்கிரத்தில் முடிவடையப் போகும் ஆயுத-ரீதியான வாழ்க்கைக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பதா என்று எல்லா மனிதவர்க்கமும் தீர்மானம் செய்வதற்கு இது ஓர் அவசரமான காலமாக இருக்கிறது.
ஒரு மிகப் பெரிய பிரசங்கிக்கும் வேலை நம் நாளில் சாதிக்கப்படும் என்று இயேசு முன்னறிவித்தார். அந்தப் பிரசங்கிப்பு, போரால் அலைக்கழிக்கப்பட்ட இப்பூமிக்கு கடவுளுடைய ராஜ்யம் சமாதானத்தைக் கொண்டுவரும் என்ற “நற்செய்தியைப்” பற்றியது. (மத்தேயு 24:14) சென்ற வருடம் உலக முழுவதிலும் யெகோவாவின் சாட்சிகளால் முப்பத்தியாறு லட்சத்துக்கு மேலான ஒழுங்கான வீட்டு பைபிள் படிப்புகள் நடத்தப்பட்டன. இந்த வாராந்தர படிப்புகளில் சில படிப்புகள் தனிப்பட்ட நபர்களோடு நடத்தப்பட்டன, ஆனால் அநேகம் குடும்பத் தொகுதிகளோடு நடத்தப்பட்டன. இப்படியாக, லட்சக்கணக்கான பிள்ளைகள் தங்களுடைய எதிர்காலத்திற்கான ஒரு நிச்சயமான நம்பிக்கை கொடுக்கப்படுகின்றனர், அவர்களுடைய பெற்றோர்களும் தாங்கள் நேரில் கண்ட அல்லது ஒருவேளை பங்குப்பெற்ற போர்கள், யெகோவா தேவன் உருவாக்கப்போகும் புதிய உலகின் பாகமாக இருக்காது என்ற நம்பிக்கை பெறுகின்றனர்.
அது என்னே பரஸ்பர நம்பிக்கையும் சமாதானமுமான ஓர் உலகமாக இருக்கும்! போராயுதங்கள் கடந்தகால காரியங்களாக இருக்கப் போவதினால், போராயுதக் குறைப்பைப் பற்றி கவலைப்படுவதற்கு எந்த தேவையும் இருக்காது. தம்முடைய நீதியான ராஜ்யத்தின் கீழ் முழுமையான வாழ்க்கை வாழ நம்மை தயாரிக்க, இப்பொழுதே அன்பாக போதிக்கும் “சமாதானத்தின் தேவனாகிய” யெகோவாவுக்கு நன்றி.—ரோமர் 15:33. (w89 12⁄15)