சமாதானம்—அது போராயுதக் குறைப்பின் மூலம் வருமா?
தேசங்கள் இரண்டாம் உலக யுத்தத்திற்குள் மூழ்குவதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னார், “போராயுதக் குறைப்போடு சமாதானத்தை கலப்பது மிகப் பெரிய தவறு. சமாதானம் இருக்கும்போது போராயுதக் குறைப்பும் இருக்கும்.”
என்னே ஒரு முரணுரை! சமாதானம் உறுதிப்படுத்தப்படும் வரை யார் போராயுதக் குறைப்பில் உள்ள ஆபத்தை ஏற்றுக்கொள்வார்? ஆனால் ஆயுதங்கள் போருக்காக குவிக்கப்படுகையில், மெய்ச் சமாதானம் எப்படி இருக்கும்? இந்த ஒரு நிலையிலிருந்து வெளியேற ஒரு வழியையும் அரசியல்வாதிகள் இதுவரை கண்டுபிடிக்கவே இல்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்பு சர்வதேச சங்கத்தால் கூட்டப்பட்ட போராயுதக் குறைப்பு கலந்தாய்வுக் கூட்டம் முடிவுற்றதை தொடர்ந்து 1934-ல் வின்ஸ்டன் சர்ச்சில் மேற்குறிப்பிட்ட கூற்றை சொன்னார். தயாரிப்பதற்கு 12 வருடங்கள் எடுத்த இக்கூட்டத்தின் நோக்கம் ஐரோப்பா மறுபடியும் போராயுதங்களை ஏந்துவிப்பதை தவிர்ப்பதாகும். முதல் உலக யுத்தத்தின்போது அநேக லட்சக்கணக்கானோர் காயமுற்றதும், மேலும் பெரும் எண்ணிக்கையான பொது மக்கள் இறந்ததும், தொண்ணூறு லட்சம் போர் சேவகர்கள் பயங்கரமாய் படுகொலை செய்யப்பட்டதும் பூமி முழுவதிலும் இருந்த ஜனங்களுக்கு இன்னும் தெளிவாக ஞாபகத்தில் இருந்தது. என்றபோதிலும் போராயுதக் குறைப்பு ஒருபோதும் உருவெடுக்கவில்லை. ஏன்?
போராயுதங்களைக் குறைக்க முயற்சிகள்
போராயுதக் குறைப்பிற்கான கொள்கை கட்டாயப்படுத்தி செயற்படுத்தப்படலாம், ஆனால் அம்முறையில் ஒருபோதும் திறம்பட்டதாய் இருக்காது. உதாரணமாக, 1919 வெர்சேல்ஸ் ஒப்பந்தத்தின் கீழ், “உள்நாட்டு பாதுகாப்புக்கு மட்டும் தேவையான அளவுக்கு தேசீய போராயுதங்களை மிகக் குறைவான நிலைக்கு குறைக்க போதுமான பொறுப்புறுதிகள் கொடுக்கப்பட்டு” ஜெர்மனியின் “படை வலிமை குறைக்கப்பட்டது.” ஐக்கிய மாகாணங்களின் ஜனாதிபதியான உட்ரோ வில்சனின் ஓர் ஆலோசனைக்கு இசைவாக இது இருந்தது. பின்பு சர்வதேச சங்கத்தின் உடன்படிக்கையின் அம்சம் 8-ல் கூட்டிணைக்கப்பட்டது. ஆனால் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தபோது, சீக்கிரத்தில் அந்த ஒப்பந்தத்தைப் புறக்கணித்தான்.
இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சங்கம் போராயுதக் குறைப்பிற்கு ஒரு திடமான அஸ்திபாரத்தை ஏற்படுத்துவதில் அதிக வெற்றிகரமானதாக இருந்திருக்கிறதா? இல்லை, ஆனால் அதன் வெற்றியின்மைக்கு காரணம் தீர்மானமான முயற்சி எடுக்கப்படாததால் இல்லை. ஒட்டு மொத்தமாக அழிக்கும் அணு ஆயுதக் கருவிகள் இப்பொழுது கிடைக்கக்கூடியதாயிருக்கையில், போராயுதக் குறைப்பு பெரிய அவசரத் தன்மை வாய்ந்த ஒரு விவாதமாயிருந்தது. புதிய என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது, “போராயுதப் போட்டிகள் பொருளாதார ரீதியில் பொருந்தாததாக இருந்து தவிர்க்க முடியா வண்ணம் போருக்கு வழிநடத்தியது என்ற கருத்து, அணு ஆயுத கருவிகள் பெரும் அளவில் எதிர்காலத்தில் உபயோகிக்கப்படுவது நாகரீகத்தையே பயமுறுத்துவதாக இருக்கிறது என்ற விவாதத்தால் மாற்றீடு செய்யப்பட்டது.”
கிழக்கு/மேற்கு போராயுதப் போட்டி வளருவதை குலைப்பதற்கு 12-தேச போராயுதக் குறைப்பு பொறுப்பாண்மை குழு ஒன்று 1952-ல் ஏற்படுத்தப்பட்டது. அது முன்னேற்றமடைய தவறியது, இறுதியில் இரண்டு பெரிய வல்லரசுகளும் தங்களை எதிர்க்கும் கட்சிகளை இரு துருவங்களாக பிரித்தனர். மற்ற பல்வேறு ஒப்பந்தங்களும், உடன்படிக்கைகளும் தற்போதைய காலம் வரையாக செய்யப்பட்டுள்ளன. என்றபோதிலும், பரஸ்பரமான அவநம்பிக்கையான சூழ்நிலை எல்லாப் போராயுதங்களையும் முழுமையாக நீக்க அனுமதிக்கவில்லை. “அது நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனையாளர்களால் ஆதரித்து வாதாடப்பட்ட ஏதோவொன்று” என்று புதிய என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது.
செலவை கணக்கிடுதல்
போராயுதக் குறைப்பை செய்வது அல்லது போராயுதக் குறைப்பை செய்யாமலிருப்பது—இதில் என்ன செலவுகள் உட்பட்டிருக்கின்றன? செலவுகள் எப்போதுமே பணத்தால் மதிப்பிடப்படுவதில்லை. ஆயுதங்கள்-சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளில் வேலைகளும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது. அநேக தேசங்களில் வரி பணங்கள் போராயுதங்களை வாங்குவதற்கு உபயோகிக்கப்படுகின்றன, அவைகளை தயாரிப்பது வேலை வாய்ப்புகளை தூண்டிவிடுகிறது. ஆகையால், போராயுத குறைப்பு ஒருவேளை வேலையின்மைக்கு வழிநடத்தும். அதன் காரணமாகத்தான் பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு அதிக பணத்தை ஒதுக்கியுள்ள தேசங்கள் முழு போராயுத நீக்கத்தை யோசிக்கவே நடுங்குகின்றன. அப்பேர்ப்பட்ட சிந்தனை அவர்களுக்கு நடைமுறைக்கு ஒவ்வாத கற்பனையைவிட கொடுங் கனவாக இருக்கிறது.
என்றபோதிலும், போர் இயந்திரங்களை இயக்குவதற்கு பெருந்தொகையான பணம் உட்பட்டிருப்பதை நாம் கவனியாமல் விட்டுவிட முடியாது. உலகின் மொத்த உற்பத்தியின் மதிப்பில் 10 சதவிகிதம் போராயுதங்கள் பேரில் செலவழிக்கப்படுகிறது என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அது எவ்வளவு? உண்மையான எண்ணிக்கை பணவீக்கத்தோடு வித்தியாசப்படுகிறது, ஆனால் இந்த விதத்தில் நாளின் ஒவ்வொரு நிமிடமும் 15.4 லட்சம் டாலர்கள் செலவுசெய்யப்படுகிறதை சிந்தித்துப் பாருங்கள்! அந்தத் தொகையை செலவழிக்கும் உரிமை உங்களுக்கிருந்தால் எந்தத் தேவையை தேர்ந்தெடுப்பீர்கள்? பஞ்ச நிவாரணம்? ஆரோக்கிய பராமரிப்பு? குழந்தை நலம்? உயிரின வாழ்க்கைச் சூழலை முன்னிலைக்கு மீட்பது? செய்வதற்கு மிக அதிகம் இருக்கிறது!
சோவியத் யூனியனில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட “பீரங்கி வண்டியிலிருந்து இயந்திரக் கலப்பைகள்” திட்டத்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இங்கு சில “விவசாய தொழிற்சாலை துறையில்” 200 விதமான “உயர்தர கருவிகள் உற்பத்தி செய்வதற்கு” போராயுத தொழிற்சாலைகள் மாற்றப்பட்டுள்ளன. அந்த விவசாயக் கருவிகள் ஏன் அவ்வளவு அவசரமாக தேவைப்படுகின்றன? ஏனென்றால் பிரிட்டனின் பண்ணை செய்தி-யின்படி, “மாநில பண்ணைகளில் வளரும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் மூன்றிலொரு பங்கு மட்டும் தான் நுகர்வோரை எட்டுகிறது, மீதம் நிலங்களிலேயே அழுகிப் போகும்படியாக விடப்படுகின்றன அல்லது இடைநிலைகளிலும், களஞ்சியங்களிலும் அழிந்து போகின்றன.”
பீரங்கி வண்டிகள் உற்பத்தி செய்வதைவிட டிராக்டர்கள் செய்வது போற்றத் தகுந்ததாயிருந்தாலும், இது அதிக அசாதாரணமாக இருப்பதனால் தலையங்கத்தில் வருகிறது. மேலுமாக, மொத்த போராயுத உற்பத்தியில் அதன் பாதிப்பு மிகச் சிறியதாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து முன்னறிவித்தபடி, “பூமியின் மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்து போன” உலகில் எண்ணற்ற லட்சக்கணக்கான பவுண்டுகள், ரூபிள்கள் மற்றும் டாலர்கள் போராயுதங்களுக்காக தொடர்ந்து செலவழிக்கப்படுகின்றன. அப்பேர்ப்பட்ட பயம் எவ்வாறு கலைக்கப்படும்? முழுமையான போராயுதக் குறைப்பு வெறும் ஒரு கனவாக மட்டுமே நிலைத்திருக்கப் போகிறதா? இல்லையென்றால், அதை நிறைவேற்ற என்ன தேவைப்படுகிறது?—லூக்கா 21:26. (w89 12⁄15)