உலக சமாதானம் அதைப்பற்றிய கனவு—பழுதடைந்த ஒரு காட்சி
உலக சமாதானத்துக்கான எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. டோரன்டோ ஸ்டார் என்ற பத்திரிகையில் கேரல் கோர் என்பவர் இவ்வாறு எழுதினார்: “சமாதான ஒப்பந்தங்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து அங்கோலா வரை விரைந்து பெருகிக்கொண்டே செல்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு தீர்க்க முடியாததாக தோன்றிய பிராந்திய சிக்கல்கள் இப்போது தீர்ந்து விடுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. ஐக்கிய நாட்டு சங்கம் கிளர்ச்சியூட்டும் மறுபிறப்பு அடைந்து கொண்டிருக்கிறது.” இது “உலகளாவிய நம்பிக்கையை” தூண்டியிருக்கிறது என்று கோர் சொல்கிறார். யூ.எஸ்.ஏ. டுடே என்ற பத்திரிகையின் தலையங்கம் இதே போன்று அறிவித்தது: “சமாதானம் உலகம் முழுவதும் வெடித்துப் பரவி வருகிறது.”
“சோவியத் யூனியனுக்கும் ஐக்கிய மாகாணங்களுக்கும் இடையே மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நல்லிணக்க நிலை” என்று யு.என். கிரானிக்கல் என்ற பத்திரிகை விவரித்த குறிப்பு முக்கியமாக குறிப்பிடத்தக்கதாயிருக்கிறது. படைப்பிரிவுகளை பின்வாங்கல், கிழக்கத்திய ஐரோப்பாவில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள், படைப்பிரிவுகளையும் போராயுதங்களையும் குறைப்பதைப் பற்றிய பேச்சுக்கள்—இப்படிப்பட்ட நடவடிக்கைகள் வல்லரசு நாடுகள் போராயுதப் போட்டியை ஒருவேளை இறுதியில் நிறுத்திவிடும் என்று நம்பிக்கைகளை எழுப்பியிருக்கின்றன. ஒரு வருடத்துக்கு 850 ஆயிரம் மில்லியன் டாலர்களை இராணுவத்துக்காக செலவழிக்கும் உலகில் இது மிகவும் வரவேற்கத்தகுந்த நம்பிக்கையாகும்.
அப்படியிருந்தாலும், உலக சமாதானத்தைப் பற்றிய மனிதனின் கனவு எவ்வாறு நிறைவேறும்? போராயுதக் குறைப்புக்கும் போராயுத நீக்கத்துக்கும் ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது என்று நல்நம்பிக்கையுடையவர்களே ஒப்புக்கொள்கின்றனர். அணுஆயுத நீக்கம், எப்போதுமே இருந்திராத அளவுக்கு பரஸ்பர நம்பிக்கையை தேவைப்படுத்தும். விசனகரமாக, வல்லரசு நாடுகள் பரஸ்பர அவநம்பிக்கையுடைய நீண்ட சரித்திரத்தை கொண்டிருக்கின்றன. பைபிளில் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டபடி, இந்தச் சகாப்தம் “இணங்காத” மனிதர்களைக் கொண்டிருக்கும் சகாப்தமாக நிரூபித்திருக்கிறது [“உடன்பாட்டை முறிப்பவர்கள்,” கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு].—2 தீமோத்தேயு 3:3.
அது மட்டுமின்றி, அணுஆயுதக் கருவிகளை நீக்குவது சமாதானத்தை கொண்டு வரும் என்று எல்லாருமே நம்புவதில்லை. தேசங்கள் தங்கள் அணுஆயுத சேமிப்புகளை ஒழிப்பதற்கு தூண்டப்பட்டாலும்கூட அணுகுண்டில்லாத மற்ற ஆயுதங்கள் திறம்பட்ட விதத்தில் உயிர்களை கொல்லமுடியும். முதல் மற்றும் இரண்டாம் உலக யுத்தங்கள் இந்த உண்மைக்கு கொடிய சாட்சி பகருகின்றன. மேலும், அணுஆயுதங்களை மறுபடியும் உண்டுபண்ணுவதற்கு தேவையான தொழில் நுட்பம் இன்னும் இருக்கும்—அரசியல் பிரச்னைகளின் முதல் அடையாளத்துக்கு தயாராகவும், காத்துக் கொண்டும் இருக்கும். ரிச்சர்டு நெட் லெபோ என்ற அரசியல் விஞ்ஞானி வாதாடியது போல சிலர் வாதாடுகிறார்கள்: “ஒரு சில அணுஆயுத கருவிகளை வைத்திருப்பது ஜனங்களை விழிப்புள்ளவர்களாக வைக்கும்.”
ஆனால் அணுஆயுதக் கருவிகள் இருக்கும்வரை அணுஆயுத அழிவின் கோரக் காட்சி, சமாதானத்தை அடைந்துவிட்டோம் என்ற உரிமைபாராட்டலை ஏளனம் செய்வது போல் இருக்கும். தங்கள் அன்றாடக வாழ்க்கையிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடும் ராணுவம் சம்பந்தப்படாத மற்ற பிரச்னைகள் தொடர்ந்து இருப்பதும் அப்படியே இருக்கும். ஐக்கியநாட்டு தலைமை காரியதரிசி பெரஸ் டி கொய்யா இவ்வாறு சொன்னார்: “வீடுகளின்றி அல்லது போதிய இட வசதி இல்லாத ஆயிரக்கணக்கான குடிமக்களின் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது.” குறைவான பொருளாதார வளர்ச்சி “மனிதவர்க்கத்தின் மூன்றில் இரண்டு பங்கை பாதிக்கிறது. சில சமயங்களில் வறுமை மற்றும் அனாதைகளின் நிலைமை யுத்த காலத்தில் ஏற்படும் நிலைமையிலுள்ளதைப் போன்றே இருக்கிறது” என்று யு.என். கிரானிக்கல் அறிக்கையிடுகிறது. உலகத்தில் இருக்கும் 12 மில்லியன் அகதிகளின் நிலைமையைப் பற்றியென்ன? போராயுதக் குறைப்போ அல்லது முழுவதுமாக போராயுதங்களை நீக்கி விடுவதோ அவர்களுடைய வாழ்க்கையில் சமாதானத்தை கொண்டு வருமா?
தெளிவாகவே, உலக சமாதானத்தைப் பற்றிய மனிதனின் கனவு பழுதடைந்த ஒரு காட்சியாக இருக்கிறது—மங்கலான, குறுகிய மட்டுப்பட்ட காட்சியாக இருக்கிறது. சமாதானத்துக்கு ஒரு மேலான எதிர்பார்ப்பு இருக்கிறதா? உண்மையிலேயே இருக்கிறது. பைபிள் சமாதானத்துக்கான ஒரு நிச்சய நம்பிக்கையை கொடுக்கிறது என்று இந்தப் பத்திரிகையின் ஆகஸ்ட் 1, 1991 இதழில் நாம் பார்த்தோம்.a எந்த மானிட எதிர்பார்ப்புகளுக்கும் மேலான சமாதானத்தை விரைவில் இயேசு கிறிஸ்து கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக கொண்டு வருவார். ஆனால் இந்தச் சமாதானம் மனிதவர்க்கத்துக்கு உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்தும்? அடுத்த கட்டுரை இதை கலந்தாலோசிக்கும். (w90 4/15)
[அடிக்குறிப்புகள்]
a ஆகஸ்ட் 1, 1991, இதழில் “யார் மனிதவர்க்கத்தைச் சமாதானத்துக்கு வழிநடத்துவார்?” கட்டுரையை பார்க்கவும்.