“சுத்தமான பாஷை” மாவட்ட மாநாட்டைத் தவற விடாதீர்கள்!
பைபிள் போதகம் நிறைந்த பலன்தரும் நான்கு நாட்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன. வியாழனன்று மதியம் 1:30 மணிக்கு நிகழ்ச்சிநிரல் ஆரம்பிக்கையில் ஆஜராயிருங்கள். “உங்கள் நண்பர்கள் யெகோவாவின் நண்பர்களாயிருக்கிறார்களா?” என்ற சிந்தனையைத் தூண்டும் பேச்சையும் “எல்லாத் தேசங்களுக்கும் ஒரு சுத்தமான பாஷை” என்ற முக்கியப் பேச்சையும் அனுபவியுங்கள். “உங்கள் உயிரை இரத்தத்தினால் காத்துக்கொள்ளுதல்—எப்படி?” என்ற பிற்பகலின் முடிவான பேச்சு, உயிரைப் பாதுகாக்க உண்மையிலேயே இரத்தம் தேவைப்படுகிறதா? என்ற கேள்விக்குப் பதிலளிக்கும்.
வெள்ளிக்கிழமை காலைக் கூட்டம் 9:30-க்குத் துவங்கும். “கிறிஸ்து ‘அக்கிரமத்தை வெறுத்தார்’—நீங்கள் வெறுக்கிறீர்களா?” என்ற ஆராய்ந்து அறிய உதவும் பேச்சிலிருந்தும் “உலகப்பிரகாரமான பகற்கனவுகளை ஒதுக்கித்தள்ளுங்கள். ராஜ்ய மெய்மைகளை நாடித்தொடருங்கள்” என்ற செயல்படும்படித் தூண்டும் விரிவுரைகளிலிருந்தும் பயனடைய அங்கிருங்கள். பிற்பகலின்போது, உங்கள் பண வருமானத்திற்குள் வாழத் தேவையான நடைமுறை ஆலோசனைகள் அளிக்கப்படும். பெற்றோருக்குத் தங்கள் கடமைகளை மேலும் அதிக சிறப்பான விதத்தில் எப்படி நிறைவேற்றலாம் என்பது காட்டப்படும், மேலும் பாடம் சம்பந்தமில்லாத பள்ளியின் மற்ற நடவடிக்கைகளில் பங்கு பெறுவது பற்றிய மிகச் சிறந்த வழிநடத்துதலை ஒரு நவீன கால நாடகம் இளைஞர்களுக்கு அளிக்கும்.
சனிக்கிழமை காலை நிகழ்ச்சிநிரல் ஒப்புக்கொடுத்தல், முழுக்காட்டுதல் பற்றிய விரிவுரையைக் கொண்டிருக்கும். அதோடுகூட தனிப்பட்ட பைபிள் படிப்பை செய்வதற்குத் தியாகங்கள் செய்ய வேண்டியதன் அவசியம் சிந்திக்கப்படும். “யெகோவாவின் மகிமைபொருந்திய பரலோக ரதம் முன் செல்கிறது” என்பது பிற்பகல் நிகழ்ச்சி நிரலின் தூண்டுவிக்கும் ஒரு பேச்சு ஆகும். மேலும் பொய் மதத்தால் குருடாக்கப்பட்டிருக்கிறவர்களுக்கு உதவவேண்டிய நமது கிறிஸ்தவ உத்தரவாதம் சம்பந்தமாக வல்லமைவாய்ந்த நினைப்பூட்டுதல்களும் இருக்கும். இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கான நடைமுறையான உதவியும் அளிக்கப்படும்.
கிறிஸ்தவ மண்டலத்திற்கும், அதன் குருவர்க்கத்திற்கும் எதிராக அறிவிக்கப்படும் வல்லமைவாய்ந்த செய்தியைக் கேட்பதற்கு, ஞாயிற்றுக் கிழமை காலை ஆஜராயிருக்க நீங்கள் விரும்புவீர்கள். இதைத் தொடர்ந்து, யெகூ, யோனதாப் ஆகியோரின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட அக்காலத்திற்கு ஒப்பனையான ஆடை, அணிகலன்களோடு ஒரு நாடக அளிப்பு இருக்கும். பின்பு, பிற்பகலில் “சுத்தமான பாஷையின் மூலம் ஐக்கியப்பட்டவர்களாகுங்கள்” என்ற பொதுப்பேச்சைக் கேட்க நிச்சயமாயிருங்கள்.
செப்டம்பர் 1990 முதல் ஜனவரி 1991 வரை உள்ள காலப்பகுதியில் இந்தியா முழுவதிலும் 26 மாநாடுகள் திட்டமிடப்பட்டிருக்கின்றன. ஆகையால் உங்கள் வீட்டிலிருந்து வெகு தொலைவாயில்லாத ஓர் இடம் இருக்கும். உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து உங்களுக்கு மிக அருகிலிருக்கும் இடத்தையும் நேரத்தையும் சரியாகத் தெரிந்துகொள்ளுங்கள் அல்லது இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களுக்கு எழுதுங்கள்.