நான் தற்பெருமையை ஒழித்து மகிழ்ச்சியைக் கண்டடைந்தேன்
அப்போது 1970-ல் நான் 23 வயது நிரம்பியவளாகவும் ஊக்கமுடையவளாகவும் இருந்தேன். இத்தாலியிலுள்ள ஐவிராவில் மோட்டார்வண்டி கழகத்தில் நான் வேலைபார்க்கும் இடத்தில், நான் தலைமை எழுத்தராக ஆக்கப்பட்டேன். நான் முக்கியத்துவமுள்ள ஒரு நபராக ஆவதற்கு தீர்மானமாயிருந்தேன். இருந்தபோதிலும், நான் மிகவும் சோர்வாகவும் சிடுசிடுப்பாகவுமே இருந்தேன். ஏன்?
என்னுடைய கணவர் பெரும்பாலான நேரத்தை தன்னுடைய நண்பர்களோடு மதுகூடங்களில் சீட்டாடுவதில் கழித்து, பெரும்பாலான குடும்ப பொறுப்புகளை நானே ஏற்கும்படி செய்தார். எங்களுடைய உறவு படிப்படியாக மோசமாக ஆரம்பித்தது. மிகச் சிறிய காரியங்களைக் குறித்தும் நாங்கள் சண்டைபோட்டுக்கொண்டோம். இதன் விளைவாக, என்னுடைய மனம் எதிர்மறையான எண்ணங்களால் நிரம்பியது.
‘யாருக்கும் உன்மேல் அக்கறை கிடையாது,’ என்று நான் சொல்லிக்கொள்வேன். ‘அவர்கள் உன் பதவியை அனுகூலப்படுத்திக்கொள்ள மாத்திரமே விரும்புகிறார்கள்.’ எனக்கு நானே இவ்வாறு சொல்லிக்கொள்வேன்: ‘கடவுள் ஒருவர் இருக்கமுடியாது, ஏனென்றால் அவர் இருந்தால், அவர் இத்தனை துயரத்தையும் அக்கிரமத்தையும் அனுமதிக்கமாட்டார். வாழ்க்கை என்பது மரணத்தை நோக்கிய ஓர் ஓட்டமேயன்றி வேறொன்றுமில்லை.’ இது ஏன் இப்படி இருந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு மாற்றத்தின் ஆரம்பம்
யெகோவாவின் சாட்சிகளில் இருவர், ஒரு நாள் 1977-ல் எங்கள் கதவைத் தட்டினார்கள். என்னுடைய கணவர் கியான்கேரியோ அவர்களை உள்ளே அழைத்தார், அவர்கள் பேசுவதற்கு பகல்நேர அறைக்குள் சென்றார்கள். தன்னைப் போல அவர்களையும் பரிணாமவாதிகளாக மாற்றிவிட வேண்டும் என்பதே அவருடைய எண்ணமாக இருந்தது, ஆனால் அவர்கள்தானே இவருடைய சிந்தனையை மாற்றிவிட்டார்கள்!
விரைவில் கியான்கேரியோவும்கூட தன் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்தார். அவர் அதிக பொறுமையுள்ளவராகி, என்னிடமும் எங்கள் மகளிடமும் அதிகமான நேரத்தையும் கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். அவர் கற்றுக்கொண்ட காரியங்களைப் பற்றி என்னிடம் பேச அவர் முயற்சி செய்தார், ஆனால் நான் எப்போதும் கடுமையாக எதையாவது சொல்லி சம்பாஷணைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவேன்.
பின்னர் ஒரு நாள் சாட்சிகள் வந்தபோது, நான் உட்கார்ந்து உண்மையில் செவிகொடுத்து கேட்டேன். அவர்கள் இந்தக் காரிய ஒழுங்கு முறையின் முடிவு பற்றியும், கடவுளுடைய ராஜ்யம், பரதீஸிய பூமி, மரித்தோரின் உயிர்த்தெழுதல் பற்றியும் பேசினார்கள். நான் அதிர்ச்சியடைந்தேன்! அடுத்த மூன்று இரவுகள் நான் உறங்கவில்லை! நான் அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினேன், ஆனால் என்னுடைய கணவரிடம் கேள்விகள் கேட்பதை தற்பெருமை தடுத்தது. பின்னர் ஒரு நாள் அவர் கண்டிப்புடன் இவ்வாறு என்னிடம் சொன்னார்: “இன்று நீ செவிகொடுத்துக் கேட்கப் போகிறாய். உன்னுடைய எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் பதில்கள் இருக்கின்றன.” பின்னர் பைபிள் சத்தியங்களை அப்படியே என்னிடம் கொட்டினார்.
யெகோவா என்பதே சிருஷ்டிகருடைய பெயர், அவருடைய பிரதான குணம் அன்பு, நாம் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கும் பொருட்டு தம்முடைய குமாரனை ஒரு மீட்கும்பொருளாக அவர் அனுப்பினார், அர்மகெதோனில் அக்கிரமக்காரரை அழித்தப்பிற்பாடு, இயேசு கிறிஸ்து அவருடைய ஆயிர வருட ஆட்சியின் போது மரித்தோரை உயிர்த்தெழுப்புவார் என்றெல்லாம் கியான்கேரியோ என்னிடம் கூறினார். உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் மனதிலும் சரீரத்திலும் பரிபூரணத்துக்கு வளர்ச்சியடைந்து அவர்கள் பரதீஸில் பூமியின் மீது என்றுமாக வாழும் வாய்ப்பைக் கொண்டிருப்பர் என்பதாக அவர் என்னிடம் சொன்னார்.
அடுத்த நாள், முதல் முறையாக நான் ராஜ்ய மன்றத்துக்கு என்னுடைய கணவருடன் சென்றேன். அதற்கு பிற்பாடு நான் அவரிடம் இவ்வாறு சொன்னேன்: “இந்த ஆட்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள். அவர்கள் உண்மையில் சந்தோஷமுள்ளவர்களாக இருப்பதால் நான் தொடர்ந்து இங்கு வர விரும்புகிறேன்.” நான் ஒழுங்காக கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன், என்னுடன் ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. நான் கற்றுக்கொண்டிருந்த காரியங்களைப் பற்றி அதிகம் சிந்தித்தேன், விரைவில் கடவுளுடைய உண்மையான ஜனத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று நான் உறுதியாக நம்பினேன். 1979-ல் முழுக்காட்டப்படுவதன் மூலம் என்னுடைய கணவரும் நானும் யெகோவாவுக்கு எங்களுடைய ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தினோம்.
முழு-நேர ஊழியம்
அந்த வருடத்தின் பிற்பகுதியில் ஒரு வட்டார அசெம்பிளியின் போது முழு-நேர பிரசங்க வேலையை உற்சாகப்படுத்தி பேச்சு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த ஊழியத்தை எடுத்துக்கொள்ள நான் உந்துவிக்கப்பட்டேன், அதை யெகோவாவிடம் ஜெபத்தில் கொண்டுசென்றேன். ஆனால் நான் கர்ப்பமாகிவிட்டதால், என்னுடைய திட்டங்கள் தடைப்பட்டு போயின. அடுத்த நான்கு ஆண்டுகளில் எங்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தன. இவர்களில் இரண்டு பேருக்கு, வித்தியாசமான சமயங்களில் உயிருக்கு ஆபத்தான ஊனம் ஏற்பட்டது. ஒவ்வொருவருடைய விஷயத்திலும் அவர்கள் முழுமையாக குணமடைந்துவிட்டதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
இப்பொழுது முழு-நேர ஊழியத்துக்கான என்னுடைய திட்டங்களை இனிமேலும் தள்ளிப்போட முடியாது என்பதாக நான் உணர்ந்தேன். மனைவியாகவும், தாயாகவும் என்னுடைய பொறுப்புகளில் கவனத்தை நல்லவிதமாக ஊன்றவைப்பதற்காக என்னுடைய உலகப்பிரகாரமான வேலையை நான் விட்டுவிட்டேன். என்னுடைய கணவரும் நானும் ஒரே வருமானத்தில் வாழ திட்டமிட்டோம், இது இன்றியமையாதவையாக இல்லாதவற்றை விட்டுக்கொடுப்பதை அர்த்தப்படுத்தியது. என்றபோதிலும், யெகோவா எங்களை வெகுவாக ஆசீர்வதித்தார், வறுமையோ பற்றாக்குறையோ ஏற்படும்படி ஒருபோதும் அவர் எங்களை கைவிடவில்லை.
ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்து நாலில், 15 வயதினளாகவும் அண்மையில் முழுக்காட்டப்பட்டவளாகவும் இருந்த என்னுடைய மகள் ஒரு பயனியராக முழு-நேர ஊழியத்தை ஆரம்பித்தாள். அதே சமயத்தில், என்னுடைய கணவர் ஒரு மூப்பராக நியமிக்கப்பட்டார். நான்? நான் இன்னும் பயனியர் செய்ய முடியாது என்று நினைத்து, பிரசங்க வேலையில் மாதத்துக்கு 30 மணிநேரங்களை என்னுடைய இலக்காக வைத்தேன். நான் அதை அடைந்தபோது, ‘நன்றாகச் செய்தாய்! நீ அதிகம் செய்கிறாய்,’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
ஆனால், மறுபடியுமாக, தற்பெருமை என்னுடைய பிரச்னையாக இருந்தது. (நீதிமொழிகள் 16:18) நான் எவ்வளவு நன்றாகச் செய்துகொண்டிருக்கிறேன் என்றும் மேலுமான எந்த ஆவிக்குரிய முன்னேற்றத்தையும் நான் செய்ய வேண்டிய அவசியம் இல்லையென்றும் நான் யோசித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய ஆவிக்குரியத்தன்மை மறைய ஆரம்பித்தது, நான் முயன்று பெற்ற நல்ல குணங்களையும்கூட இழக்க ஆரம்பித்தேன். பின்னர் எனக்கு தேவையாயிருந்த சிட்சையை நான் பெற்றுக்கொண்டேன்.
ஒழுங்கான இடைவெளிகளில் எங்களுடைய சபைக்கு வந்த இரண்டு வட்டார கண்காணிகளும் அவர்களுடைய மனைவிமார்களும் எங்களுடைய வீட்டில் 1985-ல் விருந்தினர்களாக இருந்தனர். இந்த மனத்தாழ்மையுள்ள, தங்களையே தியாகம் செய்யும் கிறிஸ்தவர்களை கவனித்தபோது அது உண்மையில் காரியங்களின் பேரில் தியானம் செய்ய என்னை செய்வித்தது. காவற்கோபுர சங்க பிரசுரங்களை உபயோகித்து மனத்தாழ்மை என்ற பொருளின் பேரில் நான் ஆராய்ச்சி செய்தேன். பாவமுள்ள மனிதர்களாகிய நம்மோடு செயல்தொடர்பு கொள்ளும் போது யெகோவா காண்பிக்கும் மிகுந்த மனத்தாழ்மையைப் பற்றி நான் சிந்தித்துப் பார்த்தேன். (சங்கீதம் 18:35) நான் என்னுடைய சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்தேன்.
அவர் விரும்புகிற வழியில் அவரை சேவிக்கும்பொருட்டும், எனக்கிருந்த வரங்களை அவருடைய மகிமைக்காக பயன்படுத்துவதில் என்னை வழிநடத்தும் பொருட்டும் மனத்தாழ்மையை நான் வளர்த்துக்கொள்ள எனக்கு உதவுமாறு யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். பயனியர் ஊழியத்துக்கான விண்ணப்பத்தாள் ஒன்றை நான் பூர்த்திசெய்து, 1989 மார்ச்-ல் முழு-நேர ஊழியத்தில் அவரை சேவிக்க ஆரம்பித்தேன்.
இப்பொழுது உண்மையாகவே மகிழ்ச்சியுள்ளவளாக இருக்கிறேன் என்றும் தற்பெருமையை ஒழித்துவிட்டதே என்னுடைய மகிழ்ச்சிக்கு உதவியது என்றும் என்னால் சொல்லமுடியும். வாழ்வதற்கு உண்மையான ஒரு காரணத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்—மெய்க் கடவுளாகிய யெகோவா அவரைத் தேடுகிறவர்களுக்கு தூரமானவர் இல்லை என்பதை அறிந்துகொள்ள தேவையிலிருப்பவர்களுக்கு உதவி செய்யவே.—வெர்ரா ப்ரான்டோலனி சொன்னபடி.