உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 7/1 பக். 4-6
  • சிலர் மதம் மாறுவதேன்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சிலர் மதம் மாறுவதேன்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சிக்கலான கேள்விகளுக்குப் பதில்கள்
  • வாழ்க்கையின் நோக்கமென்ன?
  • வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமாளித்தல்
  • கடவுளோடு நெருங்கிய உறவு
  • உண்மை மதம் பிரயோஜனமுள்ளது!
  • தலைமைத் தூதராகிய மிகாவேல் யார்?
    பைபிள் தரும் பதில்கள்
  • பிரதான தூதனாகிய மிகாவேல் யார்?
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • இயேசுதான் பிரதான தூதரான மிகாவேலா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • நீங்கள் சரியான மதத்தைக் கண்டடைந்தீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 7/1 பக். 4-6

சிலர் மதம் மாறுவதேன்

அநேகருக்கு மதம் வெறுமனே ஒரு லேபிள்தான். அது, ஒருவர் ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கே போகிறார், எங்கே கல்யாணம் செய்துகொள்கிறார், எங்கே புதைக்கப்படுவார் என்பதையெல்லாம் காட்டும். ஆனால் அவர் எப்படிப்பட்டவர், அவருக்கு என்ன தெரியும், அவர் எதை நம்புகிறார் போன்ற விஷயங்களையெல்லாம் அது சொல்லாது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, மலைப் பிரசங்கத்தைக் கொடுத்தது யார் என்றே தெரியவில்லை என ஒரு சுற்றாய்வு காட்டியது. இந்துவாயிருந்த புகழ்பெற்ற இந்தியத் தலைவர் மோஹன்தாஸ் காந்திக்கே அது தெரிந்திருந்ததென்றால் பாருங்களேன்!

அநேகருக்கு தங்கள் மதத்தைப் பற்றி மேலோட்டமாய் மாத்திரம்தான் தெரியும், அப்படியிருக்கும்போது அவர்கள் அதைவிட்டு விலகுவது ஆச்சரியமளிக்கிறதா? இல்லை, ஆச்சரியமளிப்பதில்லை. அதேசமயம் அது தடுக்க முடியாததும் அல்ல. பைபிளைக் கற்றுக்கொள்வதற்கு உதவியை ஏற்றிருப்போர், அது தங்களுக்கு எந்தளவு நன்மை தருகிறது என்பதைக் கண்டு வியப்படைகின்றனர். பைபிள்தானே சொல்கிறது: ‘பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே.’—ஏசாயா 48:17.

ஆன்மீகப் பசி தீராதவர்கள் என்ன செய்யவேண்டும்? கடவுளை வணங்குவதை அவர்கள் விட்டுவிடக்கூடாது. அதற்குப் பதிலாக, பைபிளைப் படித்து, கடவுள் தங்களுக்கு எதைக் கொடுக்கிறார் என்பதைக் கண்டறிய வேண்டும்.

சிக்கலான கேள்விகளுக்குப் பதில்கள்

ஏழு வயதில் பெர்னட் தன் அம்மாவை இழந்தான்.a அதன்பின் தன் பிள்ளைப் பிராயம் முழுக்க, ‘அம்மா எங்கே? எனக்கு மாத்திரம் ஏன் அம்மா இல்லை?’ என்ற கேள்விகள் அவன் மனதில் அலைமோதிக்கொண்டே இருந்தன. பருவ வயதில், பெர்னட் சர்ச்சில் மிகுந்த ஈடுபாடு கொண்ட உறுப்பினன் ஆனான். மனிதர் படும் துன்பத்தைக் குறித்து அக்கறைகொண்டதால், வளர்முக நாடு ஒன்றிற்கு சென்று சமூக சேவை செய்ய விரும்பினான். ஆனால் அந்தக் கேள்விகள் அவனை சதா வாட்டியெடுத்தன; சர்ச்சோ திருப்தியான பதிலைத் தரவில்லை.

அதன்பின் பெர்னட் தன்னோடு பள்ளியில் படித்த ஒரு மாணவனிடம் பேசினான்; அவன் ஒரு யெகோவாவின் சாட்சி. அந்த இளைஞன், பெர்னடின் அம்மா எந்த உணர்வுமில்லாமல் மரணத்தில் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை பைபிளிலிருந்து காட்டினான். இதை விளக்கும் அநேக பைபிள் வசனங்களை பெர்னட் கற்றுக்கொண்டான்; உதாரணத்திற்கு “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என சொல்லும் பிரசங்கி 9:5. ஆகவே பெர்னட், தன் அம்மா ஏதோவொரு உத்தரிக்கும் ஸ்தலத்திலோ அதைவிட மோசமான இடத்திலோ அவதிப்படுகிறாரோ என நினைத்துக் கவலைப்பட அவசியமில்லாமல் போயிற்று. அழியா ஆத்துமா பற்றி பெரும்பாலான மதங்கள் கற்பித்தாலும், ஒரு நபர் இறக்கும்போது அவர் உடலிலிருந்து ஏதோவொன்று பிரிந்துபோய் தொடர்ந்து வாழ்வதில்லை என்பதை பைபிளிலிருந்து பெர்னட் கற்றுக்கொண்டான்.

இறந்தோருக்கு இருக்கும் அற்புதமான நம்பிக்கையைப் பற்றியும் பெர்னட் கற்றுக்கொண்டான். அப்போஸ்தலர் என்ற பைபிள் புத்தகத்தில் அவனே இதை வாசித்தான்: ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு.’ (அப்போஸ்தலர் 24:15) இதே பூமியில் உயிர்த்தெழுதல் நடைபெறும், அதாவது இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு எழுந்துவருவார்கள் என்பதையும் கடவுள் பூமியைப் பூங்காவனமாக (பரதீஸ்) மாற்றுவார் என்பதையும் தெரிந்துகொண்டபோது பெர்னடின் உள்ளம் சிலிர்த்தது!—சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3, 4.

விரைவில் பெர்னடின் ஆன்மீக பசி, உண்மையான பைபிள் அறிவின் மூலம் தீர்க்கப்பட்டது. பெர்னட் தனது ஆன்மீகப் பசியைத் தீர்த்து வைக்காத சர்ச்சைத்தான் கைவிட்டான், ஆனால் பைபிளின்மீது உறுதியாக வேரூன்றியிருக்கும் ஒரு மதத்தை ஏற்றுக்கொண்டான். இப்போது அவன் சொல்வதாவது: “நான் சர்ச்சை விட்டு விலகி 14 வருடங்கள் ஆகின்றன. ஆனால் ஒருமுறைகூட அதற்காக மனம் வருந்தியது இல்லை. கடவுள் கஷ்டத்தைத் தருவதில்லை என்று இப்போது தெரியும். சாத்தான்தான் இந்த உலகின் தேவன், நம்மைச் சுற்றியுள்ள நிலைமைகளுக்குக் காரணம் அவன்தான். ஆனால் சாத்தானது உலகினால் உண்டாயிருக்கும் எல்லா தீங்கையும் கடவுள் விரைவில் சரிசெய்வார். அம்மா மறுபடியும் உயிரோடு வருவார்கள். ஆகா, நினைத்தாலே சந்தோஷம் பொங்குகிறது!”

பெர்னட், வெளிநாட்டிற்கு சென்று மற்றவர்களுக்கு உதவும் தன் லட்சியத்தை அடைந்திருக்கிறார். அயல்நாடு ஒன்றில், துயரத்திற்கு ஒரே உண்மையான தீர்வாகிய கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவிவருகிறார். பெர்னடைப்போலவே லட்சக்கணக்கானோர், கடவுள் சீக்கிரத்தில் மனித துன்பத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவருவார் என கற்றுக்கொண்டிருக்கின்றனர். தங்களது ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் ஒரு மதம் உண்மையில் இருக்கிறது என கண்டு அவர்கள் ஆனந்தப் பரவசமடைகின்றனர்.—மத்தேயு 5:3.

வாழ்க்கையின் நோக்கமென்ன?

மேற்கத்திய நாடுகள் அதிகமதிகமாய் மதச்சார்பற்றவையாய் ஆகிவருவதால், ‘வாழ்க்கையின் நோக்கம் என்ன?’ என அநேகர் கேட்கின்றனர். பைபிள் அதற்கான பதிலைத் தருகிறது; அதை மைக்கேல் கண்டுபிடித்தார். 1970-ன் மத்திபத்தில், மைக்கேல் ஒரு தீவிரவாதக் கும்பலில் சேர விரும்பினார். அவருக்கு இருந்த ஒரே குறிக்கோள், முதலாளித்துவத்தில் நடந்த அநீதிகளுக்குக் காரணமானவர்கள் என தான் நினைத்தவர்களுக்கு வேட்டு வைப்பதே. “துப்பாக்கியை எடுக்காமல் வெளியே புறப்பட்டுப்போனதே கிடையாது. உயர்ந்த பதவிகளிலிருந்த அரசியல்வாதிகளையும் முதலாளிகளையும் முடிந்தளவு கொன்று குவிக்கவேண்டும் என்று திட்டம் போட்டேன். அதற்காக என் உயிரையும் கொடுக்கத் தயாராயிருந்தேன்” என அவர் சொல்கிறார்.

மைக்கேல் தவறாமல் சர்ச்சுக்கு சென்றார், ஆனால் அங்கிருந்த எவராலும் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை விளக்க முடியவில்லை. ஆகவே யெகோவாவின் சாட்சிகள் மைக்கேலை வீட்டில் சந்தித்து அவரது கேள்விகளுக்கு பைபிளிலிருந்து பதில்களை எடுத்துச் சொன்னபோது, அவர் கவனமாக கேட்டார். யெகோவாவின் சாட்சிகளது உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் நடைபெற்ற கூட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தார்.

மைக்கேல் பைபிளில் புதிதாய் காட்டிய ஆர்வத்தைப் பார்த்து அவரது நண்பர்களுக்கு ஆவல் எழுந்தது. “இந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்கு வாங்க. கொஞ்ச நேரம் இருங்க. அங்க சொல்றது பிடிக்கலைன்னா அப்புறம் வேணா போயிடுங்க” என்று மைக்கேல் அவர்களுக்கு ஊக்கமளித்தார். எதிர்பார்த்தபடியே, 45-நிமிட பைபிள் பேச்சுக்குப் பிறகு கிட்டத்தட்ட எல்லா நண்பர்களும் எழுந்து போய்விட்டார்கள். ஆனால் சூசன் என்ற சிநேகிதி மட்டும் போகவில்லை. இந்த இளம் பெண்ணுக்கு, அங்கு சொல்லப்பட்டவை மிகவும் பிடித்துவிட்டது. மைக்கேலும் சூசனும் பிறகு மணம் செய்துகொண்டார்கள், யெகோவாவின் சாட்சிகளாகவும் முழுக்காட்டப்பட்டார்கள். மைக்கேல் சொல்கிறார், “நாம் ஏன் பூமியில் வாழ்கிறோம் என இப்போது எனக்கு தெரியும். யெகோவா நம்மைப் படைத்தார். அவரைத் தெரிந்துகொண்டு அவரது சித்தத்தை செய்வதே நம் வாழ்க்கையின் உண்மையான நோக்கம். அதுதான் ஆத்ம திருப்தியைத் தருகிறது!”

மைக்கேலுக்கு இருக்கும் அதே நம்பிக்கைதான் இன்னும் லட்சக்கணக்கானோருக்கு இருக்கிறது. பின்வரும் பைபிள் வார்த்தைகளை அவர்கள் மனதார ஏற்றுக்கொள்கிறார்கள்: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.”—பிரசங்கி 12:13.

வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சமாளித்தல்

‘கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வரும்’ என சொல்லும் 2 தீமோத்தேயு 3:1-ன் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தை நாம் அனைவரும் அனுபவிக்கிறோம். இந்தக் ‘கொடியகாலங்களின்’ பிரச்சினைகளிலிருந்து எவருமே தப்ப முடியாது. ஆனால் அவற்றை சமாளிக்க பைபிள் நமக்கு உதவுகிறது.

ஸ்டீவன், ஆலிவ் என்ற தம்பதியினரை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, மற்ற அநேகரைப் போலவே குடும்ப பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருந்தனர். “நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் பிரிந்துகொண்டிருந்தோம். எங்கள் லட்சியங்களும் விருப்பங்களும் மிகவும் முரண்பட்டன.” ஒன்றாக சேர்ந்து வாழ அவர்களுக்கு உதவியது எது? ஸ்டீவன் சொல்கிறார்: “எவ்வாறு எங்கள் வாழ்க்கையில் பைபிள் நியமங்களைப் பொருத்தலாம் என்பதை யெகோவாவின் சாட்சிகள் காட்டினார்கள். முதன்முறையாக, சுயநலமற்றவர்களாகவும் கரிசனையுள்ளவர்களாகவும் இருப்பதன் அர்த்தமென்ன என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம். பைபிள் நியமங்கள் பசைபோல் எங்களை ஒன்றிணைத்தது. இப்போது நாங்கள் சந்தோஷமான, நிலையான மண வாழ்க்கையை அனுபவிக்கிறோம்.”

கடவுளோடு நெருங்கிய உறவு

சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி, 96 சதவீத அமெரிக்கர்கள் கடவுள்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர், அவர்களில் பெரும்பான்மையினர் கடவுளிடம் ஜெபிக்கின்றனர். இருந்தபோதிலும், வேறொரு சுற்றாய்வின்படி, அரை நூற்றாண்டிற்குள், சர்ச்சுக்கும் யூத ஆலயங்களுக்கும் செல்வோரது எண்ணிக்கை அடிமட்டத்திற்குக் குறைந்துள்ளது. சுமார் 58 சதவீத அமெரிக்கர்கள், மாதத்திற்கு ஒருமுறையோ பல மாதங்களுக்கு ஒருமுறையோ சர்ச்சுக்குச் செல்வதாக சொல்கின்றனர். மதம் அவர்களை கடவுளிடம் நெருங்கச்செய்யவில்லை என்பது தெளிவாய் தெரிகிறது. இது ஐக்கிய மாகாணங்களில் மட்டும் உள்ள பிரச்சினை அல்ல.

லிண்டா என்பவள் பவரியா மாநிலத்தில் வளர்ந்தவள். அவள் கத்தோலிக்க மதத்தை கடைப்பிடித்து வந்தாள்; தவறாமல் கடவுளிடம் ஜெபித்துவந்தாள். அதேசமயத்தில் எதிர்காலத்தைப் பற்றி பயந்தாள். மனிதனுக்கான கடவுளுடைய நோக்கத்தைப் பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை. 14 வயதிலேயே அவள் யெகோவாவின் சாட்சிகளை சந்தித்தாள்; அவள் சொல்கிறாள்: “அவர்கள் சொன்னது சுவாரசியமாய் இருந்தது. அதனால் பைபிளைப் படிக்க உதவும் இரண்டு புத்தகங்களை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு அவற்றை உடனடியாக படித்தேன்.” இரண்டு வருடங்களுக்குப் பிற்பாடு, லிண்டா யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப் படிக்க துவங்கினாள். “கடவுளைப் பற்றி பைபிளிலிருந்து படித்த எல்லாமே அர்த்தமுள்ளவையாய் இருந்தன” என அவள் சொல்கிறாள். லிண்டா சர்ச்சிலிருந்து விலகினாள், 18 வயதில் யெகோவாவின் சாட்சியாய் முழுக்காட்டப்பட்டாள்.

மதம் மாறும்படி லிண்டாவைத் தூண்டியது எது? அவள் சொல்கிறாள்: “கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள என் சர்ச் உதவியது, அவர்மீது நம்பிக்கை வைக்கவும் நான் கற்றுக்கொண்டேன். ஆனால் எட்டாத தூரத்திலிருந்த வெறும் ஒரு சக்தியாகவே அவரை கருதினேன். பைபிளைப் படித்த பிற்பாடு, கடவுள்மீதிருந்த என் நம்பிக்கை உறுதியடைந்தது மட்டுமல்லாமல் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அவரை நேசிக்கவும் கற்றுக்கொண்டேன். இப்போது கடவுளோடு மதிப்புமிக்க உறவைப் பெற்றிருக்கிறேன்; இதன் மதிப்பு ஈடிணையற்றது.”

உண்மை மதம் பிரயோஜனமுள்ளது!

உங்கள் மதம் உங்களுக்கு ஆவிக்குரிய வழிகாட்டியாய் இருக்கிறதா? வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க பைபிள் எவ்வாறு உதவும் என்பதை அது உங்களுக்குக் காட்டுகிறதா? பைபிள் அளிக்கும் எதிர்கால நம்பிக்கையை உங்களுக்குக் கற்பிக்கிறதா? திருத்தமான பைபிள் அறிவின் அடிப்படையில், சிருஷ்டிகரோடு ஒரு நெருங்கிய உறவைப் பெற்றிருக்க உங்களுக்கு உதவுகிறதா? இல்லையென்றால், நம்பிக்கை இழக்காதீர்கள். மதத்தையே கைவிட்டுவிடுவதற்கு பதிலாக, பைபிள்மீது உறுதியாய் வேரூன்றியிருக்கும் வணக்க முறையைத் தேடுங்கள். அப்போது, பைபிள் புத்தகமாகிய ஏசாயாவில் முன்னுரைக்கப்பட்டவர்களைப் போல் நீங்கள் இருப்பீர்கள்: “இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், . . . என் ஊழியக்காரர் குடிப்பார்கள், . . . என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், . . . என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்.”—ஏசாயா 65:13, 14.

[அடிக்குறிப்புகள்]

a இக்கட்டுரையிலுள்ள சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

[பக்கம் 4, 5-ன் படங்கள்]

கடவுளைத் தெரிந்துகொள்வதற்கும் அவரை நேசிப்பதற்கும் பைபிள் நமக்கு உதவுகிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்