ஏன் மதத்தைவிட்டு விலகுகின்றனர்?
பிரஷியாவில் (தற்போதைய வட ஜெர்மனி), 19-ஆம் நூற்றாண்டின் மத்திபத்தில், ஒருவர் தான் எந்தவொரு மதத்திலும் இல்லை என சொல்வது கற்பனைக்கும்கூட அப்பாற்பட்ட விஷயமாய் இருந்தது. சொல்லப்போனால், நன்கு பிரபலமான ஒரு மதத்திலிருந்து சற்று அறியப்படாத ஒரு மதத்திற்கு மாறினாலே, போலீஸின் கடும் கண்காணிப்புக்கு ஆளாகவேண்டியிருந்தது. காலங்கள் எப்படி மாறிவிட்டன!
இன்று ஜெர்மனியில் எக்கச்சக்கமான ஆட்கள் சர்ச்சை விட்டு விலகுகின்றனர். ஓர் அறிக்கையின்படி, நான்கில் ஒருவர், தனக்கு எம்மதமும் இல்லை எனச் சொல்கிறார். இதே நிலவரம்தான் ஆஸ்திரியாவிலும் ஸ்விட்ஸர்லாந்திலும் உள்ளது. ஒரு மதத்திற்கு அதன் அங்கத்தினர்களே உயிர்நாடி என்பது உண்மையென்றால், ஜெர்மானிய எழுத்தாளரான ரைமர் க்ரோனிமையர் சொல்லிய விதமாய், “ஐரோப்பிய சர்ச்சுகளின் நாடித்துடிப்பு நிற்கப்போகிறது.”
ஏன் மதத்தை உதறித்தள்ளுகின்றனர்
அநேகர் மதத்தை ஏன் வேண்டாமென ஒதுக்குகின்றனர்? பெரும்பாலும் பொருளாதார காரணங்களுக்கே; அதுவும் முக்கியமாய், சர்ச்சுக்கு வரி செலுத்தவேண்டிய கட்டாயமுள்ள நாடுகளில் இதுவே காரணமாயிருக்கிறது. ‘நான் படாத பாடுபட்டு சம்பாதித்த பணம் ஏன் சர்ச்சுக்கு போகணும்?’ என அநேகர் கேட்கின்றனர். சர்ச்சிடம் குவிந்திருக்கும் செல்வத்தையும் அதன் பெருமளவு ஆதிக்கத்தையும் பார்த்து சிலர் வெறுப்படைகின்றனர். அவர்கள், ஜெர்மனியிலுள்ள கொலோனின் கார்டினலான யோயாகிம் மைஸ்னர் சொன்னதை ஒப்புக்கொள்வார்கள்; அவர் சொன்னார், சர்ச்சின் செல்வமே, பொருளாதார காரியங்களுக்கு அளவுக்கதிகமாய் கவனம் செலுத்துவதற்கும், “கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைப்பதை உதாசீனப்படுத்துவதற்கும்” காரணமாயிருந்திருக்கலாம்.
சர்ச்சுக்கு சென்றாலே படுபோர், சுவாரசியமாய் எதுவுமில்லை, ஆன்மீகப் பசியும் தீருவதில்லை எனச் சொல்லி அநேகர் சர்ச்சைவிட்டு விலகுகிறார்கள். அவர்கள் ஒருவித பஞ்சத்தில் அடிபட்டிருக்கிறார்கள். அந்தப் பஞ்சத்தைப் பற்றி தீர்க்கதரிசியாகிய ஆமோஸ் இவ்வாறு முன்னுரைத்தார்: ‘ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சமாகும்.’ (ஆமோஸ் 8:11) தங்கள் மதத்திலிருந்து எவ்வித ஊட்டமும் கிடைக்காததால் அவர்கள் அதை உதறித்தள்ளுகிறார்கள்.
இவையெல்லாம் நியாயமான பிரச்சினைகள்தான், ஆனால் அதற்காக எந்த ஒரு மதமுமே வேண்டாமென ஒதுங்கிவிடுவது சரிதானா? பசியால் தவிக்கும் ஒருவரை கற்பனை செய்து பாருங்கள். அவர், ஒரு மாம்பழத்தைப் பார்க்கிறார். அதைச் சாப்பிடப்போகும்போதுதான் தெரியவருகிறது அது மெழுகினால் செய்யப்பட்டிருக்கிறது என்று. இனி மாம்பழமும் வேண்டாம் எதுவும் வேண்டாமென அப்படியே பட்டினி கிடந்துவிடுவாரா? இல்லை, அதற்கு மாறாக உண்மையான ஆகாரத்தைத் தேடுவார். அதேவிதமாய், ஒரு மதம் அதன் அங்கத்தினர்களது ஆவிக்குரிய பசியைத் தீர்க்கவில்லை என்பதற்காக, மதம் என்ற சமாச்சாரமே வேண்டாம் என அவர்கள் ஒட்டுமொத்தமாய் விலகிவிடலாமா? அல்லது தங்களது ஆன்மீகப் பசியைத் தீர்ப்பதற்கான வழியைத் தேடுவது ஞானமானதாய் இருக்குமா? அநேகர் அதற்கான வழியைத்தான் தேடியிருக்கிறார்கள்; பின்வரும் கட்டுரையில் படித்துப் பாருங்களேன்.