பலமே பலவீனமானால்?
டைட்டானிக், தண்ணீர் புகாத 16 கம்பார்ட்மெண்டுகள் கொண்ட மெகா சைஸ் சொகுசுக் கப்பல். அது யாராலும் கவிழ்க்க முடியாத ‘மகா பலசாலி’யாக கருதப்பட்டது. 1912-ல் அது முதன்முதலாக நீந்தியபோது, பாதி லைஃப் போட்டுகளையே சுமந்து அசால்டாக சென்றது. ஆனால் அந்த முதல் பயணத்திலேயே பெரிய பனிக்கட்டி மீது மோதி கடலில் மூழ்கியதோடு, 1,500 அப்பாவி உயிர்களையும் மூழ்கடித்தது.
பூர்வ எருசலேமில் புத்திக்கூர்மையுள்ள படைத்தலைவராய் திகழ்ந்தவர் உசியா. தேவபயத்தோடு வாழ்ந்த இவர் யெகோவாவின் உதவியோடு தன் எதிரிகளையெல்லாம் வீழ்த்தி வெற்றிமேல் வெற்றிகளை குவித்தார். ‘வியத்தகு முறையில் கடவுளிடமிருந்து உதவி பெற்று வலிமை அடைந்ததால் [உசியாவின்] புகழ் வெகு தூரம் பரவியது.’ (பொ.மொ.) அதன்பிறகோ அவர் ‘மனம் மேட்டிமையானது . . . தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்தார்.’ ஆணவம் தலைக்கேறிய உசியாவுக்கு தக்க தண்டனையாக குஷ்டரோகம் வந்தது.—2 நாளாகமம் 26:15-21; நீதிமொழிகள் 16:18.
இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரு நல்ல படிப்பினை உண்டு. அதாவது ஞானம், அடக்கம், பணிவு ஆகிய பண்புகள் நம்மிடம் இல்லையென்றால் நம் பலமே பலவீனமாகிவிடும். வேறுவிதமாக சொன்னால் நம் நிறையே நம் குறையாகிவிடும். இது சிந்தனைக்குரிய விஷயம். ஏனெனில் நம் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் பலங்கள் அல்லது வரங்கள் உண்டு. இவை நமக்கும் மற்றவர்களுக்கும், முக்கியமாய் நம்மைப் படைத்தவருக்கும் சந்தோஷத்தை தரும் ஆஸ்திகளாய் இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம். உண்மையில் கடவுள் கொடுத்திருக்கும் எந்த வரத்தையும் முழுமையாய் பயன்படுத்த வேண்டும். அதேசமயத்தில் அதை மதிப்புமிக்க சொத்தாக கருதி, எப்போதும் கண்ணுங்கருத்துமாக காக்க வேண்டும்.
உதாரணத்திற்கு, தன் வேலையை நேசிக்கும் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக அதில் மூழ்கி பின்பு வேலைப் பித்தனாகிவிடலாம். இவ்வாறு இவரது நிறையை குறையாக ஆக்கிக்கொள்வார். முன்ஜாக்கிரதையான ஒரு நபர் எளிதில் ஏமாற மாட்டார். ஆனால் அளவுக்கு மீறி ஜாக்கிரதையாக இருக்கும் நினைப்பில், அது செய்தால் இப்படியாகிவிடும் இது செய்தால் அப்படியாகிவிடும் என எந்த தீர்மானத்தையும் எடுக்காமலேயே இருந்துவிடுவார். திறமையாக செயலாற்றும் நபரை கண்டால், கண்டிப்பாக சபாஷ் போட வைக்கும். அதற்காக, மனிதாபிமானத்தையே மறந்துவிட்டு வெறித்தனமாக செயலாற்றினால், கண்டிப்பான இரக்கமற்ற ஒரு சூழலே உருவாகும். இதனால் விரக்தியே மிஞ்சும். ஆகவே உங்கள் பலங்களை சற்று யோசித்துப் பாருங்கள். அவற்றை சரியாக உபயோகிக்கிறீர்களா? அவை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாய் அமைந்துள்ளனவா? எல்லாவற்றிற்கும் மேலாக, ‘நல்ல ஈவுகள் [வரங்கள்] அனைத்திற்கும்’ தந்தையான யெகோவாவை கனப்படுத்த அவற்றை பயன்படுத்துகிறீர்களா? (யாக்கோபு 1:17) இதையெல்லாம் சாதிக்க, பலம் எவ்வாறு பலவீனமாகலாம், இம்சையுமாகலாம் என்பதற்கு இன்னும் சில உதாரணங்களை கூர்ந்து கவனிக்கலாம்.
அறிவாற்றலை அறிவோடு பயன்படுத்துங்கள்
அறிவாளியாய் இருப்பது நிச்சயமாய் ஒரு வரம் அல்லது ஆசீர்வாதம். ஆனால் அதுவே ஒரு சாபமும் ஆகலாம். எப்போது? மட்டுக்குமீறிய தன்னம்பிக்கை அல்லது ‘தான்’ என்ற கர்வம் தலைக்கேறும்போது ஆசீர்வாதம் சாபமாக மாறும். முக்கியமாய், மற்றவர்கள் நம்மை ஒரேடியாக புகழ்ந்துதள்ளும்போது இது நடக்க வாய்ப்புண்டு. பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் படித்து அறிவு பெறவேண்டும் என்ற நோக்கத்தை கைவிட்டு, அவற்றில் அறிவு ஜீவிகளாய் திகழவேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கும்போதும், நம் அறிவுப்பசியே சாபமாக ஆகிவிடும்.
அநேக விதங்களில் மட்டுக்குமீறிய தன்னம்பிக்கை தலைதூக்கலாம். உதாரணத்திற்கு, நல்ல அறிவுள்ள ஒரு நபருக்கு கிறிஸ்தவ சபையில் பேச்சு கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என வைத்துக்கொள்வோம். அது மக்கள் பலர் கூடியிருக்கும்போது கொடுக்கப்படும் ஒரு பொதுப் பேச்சாய் இருக்கலாம் அல்லது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கொடுக்கப்படும் ஒரு பேச்சாய் இருக்கலாம். இதற்காக அவர் மிக அலட்சியமாக கடைசி நிமிடத்தில் தயார் செய்யலாம். யெகோவாவின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிக்காமல்கூட இருக்கலாம். மேடையேறிவிட்டாலே போதும் தன் அறிவுப் பெட்டகத்திலிருந்து பேச்சு ஊற்றெடுத்து வரும் என்ற அசாத்திய நம்பிக்கையோடு இருக்கலாம். கொஞ்ச காலத்திற்கு அவரது இயல்பான திறமை அவரது அலட்சியத்திற்கு கைகொடுக்கலாம். ஆனால் கொஞ்ச நாளில் யெகோவாவின் ஆசீர்வாதம் குறைய குறைய அவரது ஆவிக்குரிய வளர்ச்சி குறைவுபடும், ஏன் ஒரு நாள் நின்றும்போகும். அருமையான வரம் எப்படி வீணாகிப்போகிறது!—நீதிமொழிகள் 3:5, 6; யாக்கோபு 3:1.
புத்திக்கூர்மையுள்ளவரும் பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் புலமை பெறும் நோக்கத்தோடு படிக்க ஆரம்பிக்கலாம். ஆயினும் அப்படிப்பட்ட அறிவு ‘இறுமாப்பையே உண்டாக்கும்,’ அதாவது “நான்” என்ற தற்பெருமையை பலூனைப் போல் ஊதிப் பெருக்கும். அன்பான கிறிஸ்தவ உறவுகளை ‘விருத்தி’ செய்யாது. (1 கொரிந்தியர் 8:1; கலாத்தியர் 5:26) மறுபட்சத்தில் ஆவிக்குரிய நபர், அறிவுத் திறமைகள் எவ்வளவுதான் இருந்தாலும் எப்போதும் கடவுளுடைய ஆவியையே சார்ந்திருந்து அதற்காக ஜெபிக்கிறார். அன்பிலும் மனத்தாழ்மையிலும் அறிவிலும் ஞானத்திலும்—இவை அனைத்திலும் சரிசமமாய்—வளரும்போது அவரது புத்திக்கூர்மை என்ற பலம் இன்னும் சிறந்த வரமாக அமைகிறது.—கொலோசெயர் 1:9, 10.
திறமையும்கூட குறைபாடு ஆகலாம், பணிவு இல்லாமல் கர்வத்தோடு நடந்துகொண்டால். எவ்வளவுதான் திறமைசாலிகளானாலும் “தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் [யெகோவா] மதிக்கமாட்டார்” என்பதை வரம்பெற்ற நபரும்—அவரை இதயதெய்வமாய் பூஜிப்போரும்—மறுந்துவிடலாம். (யோபு 37:24) “தாழ்ந்த [பணிவான] சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 11:2) மிகுந்த புத்திகூர்மையும் கல்வியறிவும் பெற்றிருந்த அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியர்களிடம் இவ்வாறு சொன்னார்: ‘சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, . . . சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது வரவில்லை. . . . நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன் உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.’—1 கொரிந்தியர் 2:1-5.
உண்மையிலேயே ஞானமுள்ள நபர், அறிவுத்திறனையோ வெற்றியையோ குறித்த உலகின் கருத்தால் மோசம்போகாதிருப்பார். ஆகவே மற்றவர்களது விருப்பத்தை சம்பாதித்துக்கொள்ள அல்லது செல்வங்களை சேகரிக்க தன் திறமைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தனக்கு உயிரையும் சாமர்த்தியங்களையும் அளித்த கடவுளுக்கு அவற்றை அர்ப்பணிக்கிறார். (1 யோவான் 2:15-17) தன் வாழ்க்கையில் கடவுளுடைய ராஜ்ய அக்கறைகளுக்கே முதலிடம் தருகிறார். இவ்வாறு ‘நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு’ கனிகளைத் தரும் ‘மரம்’போல் ஆகிறார். சொந்தத் திறமைகளால் அல்ல, யெகோவாவின் ஆசீர்வாதத்தால் “அவர் செய்வதெல்லாம் வாய்க்கும்.”—சங்கீதம் 1:1-3; மத்தேயு 6:33.
கிறிஸ்தவம் உங்கள் பலத்திற்கு பலம் சேர்க்கட்டும்
கிறிஸ்தவத்தில் இயல்பாகவே அத்தனை அநேக பலங்கள் உண்டு. அதோடு ஒப்பிடுகையில் உலக தத்துவங்கள் ஒன்றுமில்லை. உதாரணத்திற்கு, நேர்மை, மரியாதை, சமாதானம், ஊக்கம் போன்ற பொன்னான குணங்களோடு திகழும் சிறந்த கணவர்களையும் மனைவிகளையும் அயலகத்தாரையும் தொழிலாளிகளையும் உருவாக்கும் பெருமை கிறிஸ்தவ வாழ்க்கை முறையையே சாரும். (கொலோசெயர் 3:18-22, 24) அதோடு, பேசவும் போதிக்கவும் அளிக்கப்படும் கிறிஸ்தவ பயிற்சி நல்ல பேச்சுப்பரிமாற்ற திறமைகளை வளர்க்கிறது. (1 தீமோத்தேயு 4:13-15) ஆகவே முதலாளிகள் கூடுதலான பொறுப்புகளையும் பதவி உயர்வுகளையும் கிறிஸ்தவர்களுக்கே அளிக்க விரும்புவது ஆச்சரியமல்ல. அதேசமயம் கவனமாய் இல்லாவிட்டால், இப்படிப்பட்ட பலங்களும் பலவீனங்கள் ஆகலாம். பதவி உயர்வு அல்லது நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்றால், கம்பெனிக்கே தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என அர்த்தம். இதற்காக கிறிஸ்தவ கூட்டங்களை வழக்கமாக தவறவிட நேரிடலாம் அல்லது குடும்பத்தோடு செலவிடும் பொன்னான நேரத்தை இழக்க வேண்டிவரலாம்.
ஆஸ்திரேலியாவில் ஒரு கிறிஸ்தவ மூப்பர் பிரபல வியாபார புள்ளியாய் இருந்தார். இவர் ஒரு குடும்பஸ்தரும்கூட. “உலகையே விலைக்கு வாங்கும்” வாய்ப்பு அவருக்கு இருந்தது. ஆனாலும் பேரும் புகழும் பெறும் ஆசைக்கு அவர் இடமளிக்கவில்லை. அவர் சொன்னார்: “என் மனைவி மக்களோடும் கிறிஸ்தவ ஊழியத்திலும் அதிக நேரம் செலவிட விரும்பினேன். ஆகவே என் வேலை நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டுமென நானும் என் மனைவியும் தீர்மானித்தோம். நான் ஏன் அவசியமில்லாமல் வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை செய்ய வேண்டும்?” நன்கு யோசித்துவிட்டு சில மாற்றங்களை செய்தார். பிறகுதான் உணர்ந்தார், மூன்று அல்லது நான்கு நாட்கள் வேலை செய்வதே குடும்பத்தைக் காப்பாற்ற போதுமானது என. காலப்போக்கில் அவருக்கு மற்ற ஊழிய சிலாக்கியங்கள் கிடைத்தன. உள்ளூர் மாநாட்டு மன்ற குழுவிலும் மாவட்ட மாநாட்டு நிர்வாகத்திலும் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஞானமாய் கையாண்டதால் அவரது வரங்கள் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் சந்தோஷத்தையும் மனதிருப்தியையும் அளித்தன.
சிலாக்கியங்களைக் குறித்து சமநிலை
சபையில் ஊழிய சிலாக்கியங்களைப் பெற முயலும்படி கிறிஸ்தவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். “கண்காணிப்பை [மூப்பராக அல்லது உதவிஊழியராக] விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான்.” (1 தீமோத்தேயு 3:1) முன்னர் கூறப்பட்ட வரங்களின் விஷயத்தைப் போலவே, பொறுப்புகளை மனமுவந்து ஏற்கும் பண்போடும் விவேகம் தேவை. ஒருவர் யெகோவாவின் சேவையில் சந்தோஷத்தை இழக்கும் அளவுக்கு ஏராளமான நியமிப்புகளை ஏற்கக்கூடாது. எதையும் மனமுவந்து செய்வது போற்றத்தக்கதே. அது தேவையும்கூட. ஏனெனில் பொறுப்புகளை ஏற்க மனமில்லாமல் அதைத் தவிர்க்கும் குணத்தை யெகோவா விரும்புவதில்லை. அதேசமயம் மனமுவந்து செயல்படும் குணத்தோடு பணிவும் “தெளிந்தபுத்தியும்” தேவை.—தீத்து 2:12; வெளிப்படுத்துதல் 3:15, 16.
இயேசு நுண்ணறிவோடு மற்றவர்களது தேவைகளை உடனடியாக புரிந்துகொண்டு மென்மையாக நடந்துகொண்டதால் அடிமட்டத்து ஆட்கள்கூட தயக்கமின்றி அவரை அணுகினர். அதேவிதமாய் இன்றும், பிறரது துன்பத்தை தன் துன்பமாய் கருதி, கரிசனையோடும் பழகும் வரம்பெற்றவர்கள் மத்தியில் இருக்கவே மக்கள் விரும்புகின்றனர். கிறிஸ்தவ சபையில், அப்படிப்பட்ட அன்பான, அணுகுவதற்கு இனிய மூப்பர்கள் உண்மையிலேயே ‘மனிதரில் வரங்களாய்’ மதிக்கப்படுகிறார்கள். அவர்கள் “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” இருக்கிறார்கள்.—எபேசியர் 4:8; ஏசாயா 32:2.
ஆனால் மூப்பர்கள் மற்றவர்களுக்காக நேரம் செலவழித்தாலும் தங்கள் சொந்த படிப்புக்கும் தியானத்திற்கும் ஜெபத்திற்கும் ஊழியத்திற்கும் போதிய நேரம் கிடைக்கும்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள் திருமணமானவர்கள் என்றால், தங்கள் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும். குடும்பத்தாருக்கே முக்கியமாய் இவர்கள் அணுகத்தக்கவர்களாய் இருக்க வேண்டும்.
திறமையான பெண்கள்—அருமையான ஆசீர்வாதம்
திறமையான மூப்பர்களைப் போலவே, ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள பெண்களும் யெகோவாவின் அமைப்பிற்கு விலைமதிக்க முடியாத சொத்து. பொதுவாக, மற்றவர்கள் நலனில் அக்கறை காட்டுவது பெண்களுக்கே உரிய வரம் எனலாம். இந்தக் குணத்தைக் காட்டும்படியே யெகோவா ஊக்குவிக்கிறார், அவரது கண்களில் இக்குணம் விலையேறப்பெற்றது. “உங்கள் சொந்த விஷயங்களில் மட்டும் அக்கறை காட்டாமல் மற்றவர்களது விஷயங்களிலும் அக்கறை காட்டுங்கள்” என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (பிலிப்பியர் 2:4, NW) இருந்தாலும் இவ்வாறு ‘அக்கறைகாட்டுவதற்கும்’ வரம்புகள் உண்டு. ஏனெனில் எந்தக் கிறிஸ்தவரும் அநாவசியமாக ‘பிறர் காரியங்களில் தலையிட’ விரும்புவதில்லை; அவர் வம்பளக்கிறவராகவும் இருக்கலாகாது.—1 பேதுரு 4:15; 1 தீமோத்தேயு 5:13; பொ.மொ.
பெண்கள் இன்னும் அநேக திறமைகளை வரங்களாக பெற்றிருப்பார்கள். உதாரணத்திற்கு, ஒரு கிறிஸ்தவ மனைவி தன் கணவனைக் காட்டிலும் அறிவாளியாய் இருக்கலாம். இருந்தாலும் ‘திறமையான மனைவியாய்’ அவள் யெகோவாவிற்குப் பயப்பட்டு தன் கணவருக்கு மரியாதை காட்ட வேண்டும். அவரது குறைகளை நிறைவுசெய்யும் விதத்தில் தன் திறமைகளை பயன்படுத்த வேண்டும், அவரை விஞ்சும் நோக்கத்தில் அல்ல. அதேவிதமாய் கணவனும் பொறாமைப்படாமல் அல்லது கோபப்படாமல், அவளது திறமைகளை உயர்வாய் கருத வேண்டும். அவற்றைக் குறித்து சந்தோஷப்படவும் வேண்டும். இதுவே ஞானமும் பணிவுமுள்ள கணவனுக்கு அழகு. குடும்பத்தைக் கட்டியெழுப்பவும் அவளைப்போலவே பிள்ளைகளும் யெகோவாவிற்குப் பயப்பட கற்றுக்கொடுக்கவும் அவளது திறமைகளைப் பயன்படுத்தும்படி கணவன் மனைவியை உற்சாகப்படுத்த வேண்டும். (நீதிமொழிகள் 31:10, 28-30, NW; ஆதியாகமம் 2:18) பணிவும் அடக்கமும் காட்டும் இப்படிப்பட்ட கணவன் மனைவிமார்கள் உண்மையில் யெகோவாவிற்கு மகிமை சேர்க்கும் திருமண வாழ்வை மகிழ்ந்தனுபவிக்கிறார்கள்.
ஆணவமற்ற செயல் வீரம்
நீதிக்காக பாடுபடும், யெகோவாவின் சித்தத்தை உள்ளப்பூர்வமாக செய்யும் செயல் வீரரா நீங்கள்? உங்களது செயல் வீரத்தோடு பணிவும், தாழ்மையும் சேர்ந்துகொண்டால், உங்கள் பலம் ஆசீர்வாதமாக மாறும். இருந்தாலும் மற்றவர்களை அடக்கியொடுக்க அல்லது மிரட்ட அதைப் பயன்படுத்தினால் அது சாபமாகலாம். விசேஷமாய் கிறிஸ்தவ சபையில் இது அதிகமாய் பொருந்தும். கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் இருக்கையிலும், சபை மூப்பர்களோடு இருக்கையிலும் எவ்வித பயமோ தயக்கமோ இருக்கக்கூடாது.—மத்தேயு 20:25-27.
மூப்பர்களும் மற்ற மூப்பர்களோடு இருக்கையில் ரிலாக்ஸாக அதாவது சகஜமாக இருக்க வேண்டும். அவர்கள் ஒன்றுகூடுகையில், அவர்களது செயல் வீரம் அல்ல, ஆனால் பரிசுத்த ஆவியே தீர்மானங்கள் எடுக்க வழிநடத்த வேண்டும். சொல்லப்போனால் மூப்பர் குழுவிலுள்ள எவரையும், வயதில் மிகச் சிறியவரையோ மிகவும் தயக்கமுள்ளவரையோகூட பரிசுத்த ஆவி வழிநடத்தலாம். ஆகவே எதையும் சாதிக்கும் திறமைபடைத்தவர்கள், தங்கள் கருத்தே சரியென நினைத்தாலும், தங்கள் பலத்தை சரியாக கையாளவேண்டும். அதாவது இணங்கிப்போகும் கலையை வளர்த்து, மற்ற மூப்பர்களை ‘கனம்பண்ண’ முந்திக்கொள்ள வேண்டும். (ரோமர் 12:10) “மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே. உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்?” என பிரசங்கி 7:16 அன்பாக எச்சரிக்கிறது.
‘நன்மையான எந்த ஈவுக்கும்’ தந்தையான யெகோவா தமது பிரமிக்கத்தக்க பலங்களை கன கச்சிதமாக கையாளுகிறார். (யாக்கோபு 1:17; உபாகமம் 32:4) அவர் நமது போதகரும்கூட! ஆகவே அவரிடமிருந்து கற்றுக்கொள்வோமாக. நம் இயல்பான வரங்களை அல்லது பலங்களை வளர்க்கவும் அவற்றை ஞானத்தோடும் பணிவோடும் அன்போடும் கையாளவும் கடினமாய் உழைப்போமாக. அப்போது மற்றவர்களுக்கு எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாய் திகழ்வோம்!
[பக்கம் 27-ன் படம்]
ஜெபசிந்தனையோடு படித்து, யெகோவாவை சார்ந்திருந்தால் ஆவிக்குரிய முன்னேற்றம் அடையலாம்
[பக்கம் 29-ன் படம்]
பரிவோடு பணிவும் கைசேர்ந்தால் அது ஆசீர்வாதம்
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of The Mariners’ Museum, Newport News, VA