உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 5/15 பக். 29-31
  • டெர்ட்டுல்லியன் என்ற விந்தை மனிதர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • டெர்ட்டுல்லியன் என்ற விந்தை மனிதர்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “சுவாரஸ்யமற்றவராக இருக்க இயலாதவர்”
  • கிறிஸ்தவத்தை ஆதரிக்க
  • சத்தியத்தை ஆதரித்தே கறைப்படுத்தியவர்
  • உலக தத்துவத்தைக் குறித்து எச்சரிக்கை
  • பகுதி 3—அப்போலஜிஸ்ட்டுகள் திரித்துவ கோட்பாட்டைக் கற்பித்தனரா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • பூர்வ கிறிஸ்தவர்களும் உலகமும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • இது தெளிவாகவே பைபிள் போதகமா?
    நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?
  • அவர்கள் தொடர்ந்து சத்தியத்திலே நடக்கிறார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 5/15 பக். 29-31

டெர்ட்டுல்லியன் என்ற விந்தை மனிதர்

‘கிறிஸ்தவனுக்கும் தத்துவ ஞானிக்கும் சம்பந்தம் ஏது? சத்தியத்தை கெடுக்கிறவனுக்கும் அதை சுத்தப்படுத்தி போதிக்கிறவனுக்கும் ஒற்றுமை ஏது? பிளேட்டோவின் கல்விச் சாலைக்கும் சர்ச்சுக்கும் இசைவேது?’ இத்தகைய சவாலான கேள்விகளை எழுப்பியவர் பொ.ச. இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த எழுத்தாளர் டெர்ட்டுல்லியனே. “சர்ச் சரித்திரம் பற்றியும் அவர் காலத்தில் கற்பிக்கப்பட்ட போதனைகள் பற்றியும் ஏராளமான தகவலளிக்கும் ஊற்றுமூலமாய் திகழ்ந்தவர்களில் ஒருவர்” என அவர் அறியப்பட்டார். மத வாழ்க்கையின் எந்த அம்சமுமே அவர் பார்வையிலிருந்து தப்பவில்லை.

எதிரும் புதிருமானவை போல் தோன்றும் கூற்றுகளை கூறியதில் டெர்ட்டுல்லியன் பெயர் பெற்றவர். பின்வருபவை அவற்றில் சில: “கடவுள் சிறியவராக இருக்கையிலேயே விசேஷித்த விதத்தில் பெரியவராக இருக்கிறார்.” “[கடவுளுடைய குமாரனின் மரணத்தை] நிச்சயம் நம்ப வேண்டும், ஏனெனில் அது பகுத்தறிவிற்கு எட்டாதது.” “[இயேசு] மரித்து மீண்டும் உயிரடைந்தார்; இது உண்மை, ஏனெனில் அது நிகழ முடியாதது.”

ஆனால், முன்னுக்குப் பின் முரணாக இருந்தவை டெர்ட்டுல்லியனின் கூற்றுகள் மட்டுமே அல்ல. அவர் தனது படைப்புகள் மூலம் சத்தியத்தை ஆதரித்து, சர்ச் மற்றும் அதன் கோட்பாடுகளின் உண்மைத்தன்மையை நிலைநாட்ட முயன்ற போதிலும் உண்மையில் சத்திய போதனைகளை கறைப்படுத்தினார். அவருடைய ஒரு கொள்கை, கிறிஸ்தவமண்டலத்தின்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பிற்கால எழுத்தாளர்கள் திரித்துவ கோட்பாட்டை ஸ்தாபிக்க அஸ்திவாரமாக அமைந்தது. இது நிகழ்ந்த விதத்தை புரிந்துகொள்ள முதலில் டெர்ட்டுல்லியனைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

“சுவாரஸ்யமற்றவராக இருக்க இயலாதவர்”

டெர்ட்டுல்லியனின் வாழ்க்கை வரலாறு பற்றி சொற்பமே அறியப்பட்டிருக்கிறது. அவர் சுமார் பொ.ச. 160-⁠ல் வட ஆப்பிரிக்காவிலுள்ள கார்தேஜில் பிறந்தார் என்பதே பெரும்பாலான வல்லுனர்களின் கருத்து. அவர் சிறந்த கல்விமானாகவும் தன் நாளைய முக்கிய தத்துவ கோட்பாடுகளை கரைத்துக் குடித்தவராகவும் இருந்தார் என்றே தோன்றுகிறது. கிறிஸ்தவர்கள் என கூறிக்கொண்டோர் தங்கள் விசுவாசத்திற்காக உயிர் துறக்கவும் தயாராயிருந்ததே அவரை கிறிஸ்தவத்திடம் கவர்ந்திழுத்ததாக தெரிகிறது. கிறிஸ்தவ உயிர் தியாகத்தைப் பற்றி அவர் இவ்வாறு கேட்டார்: “அதைப் பற்றி சிந்திப்பவர் அதற்கான அடிப்படை காரணத்தை ஆராய தூண்டப்பட மாட்டாரோ? ஆராய்ந்த பிறகு எங்களுடைய கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பாரோ?”

டெர்ட்டுல்லியன், பெயரளவில் கிறிஸ்தவராக மாறிய பிறகு ரத்தின சுருக்கமான, வேடிக்கையான கூற்றுகளைக் கூறும் படைப்புத்திறன் மிக்க எழுத்தாளரானார். “இறையியல் வல்லுனர்களிடம் இல்லாத அபார திறமை [அவரிடம்] இருந்தது. அவர் சுவாரஸ்யமற்றவராக இருக்க இயலாதவர்” என சர்ச்சின் பிதாக்கள் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. “டெர்ட்டுல்லியன் வாக்கியங்களைவிட வார்த்தைகளைப் படைப்பதில் அதிக புலமை பெற்றிருந்தார். அவருடைய விவாதத்தை புரிந்துகொள்வதைவிட வேடிக்கையான கூற்றுகளை புரிந்துகொள்வது எளிது. இவருடைய சிறு கூற்றுகள் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டு, ஆனால் பெரும்பாலும் நீண்ட பகுதிகள் மேற்கோள் காட்டப்படாததற்கு ஒருவேளை இதுவே காரணமாக இருக்கலாம்” என ஒரு வல்லுனர் கூறினார்.

கிறிஸ்தவத்தை ஆதரிக்க

மன்னிப்பு (ஆங்கிலம்) என்ற டெர்ட்டுல்லியனின் மிகவும் பிரசித்தி பெற்ற படைப்பே, பெயர் கிறிஸ்தவத்தை ஆதரித்து வாதிட்ட வெகு திறம்பட்ட புத்தகமாக கருதப்படுகிறது. மூடநம்பிக்கையில் ஊறிப்போன கும்பல்கள் அடிக்கடி கிறிஸ்தவர்களை தாக்கிய சமயத்தில் அது எழுதப்பட்டது. டெர்ட்டுல்லியன், இந்தக் கிறிஸ்தவர்களை ஆதரித்து அவர்கள் அநியாயமாக நடத்தப்படுவதை கண்டித்தார். அவர் கூறியதாவது: “பொது மக்களுக்கு நேரிடும் எந்த விபத்திற்கும் அசம்பாவிதத்திற்கும் கிறிஸ்தவர்களே காரணம் என [எதிர்ப்பவர்கள்] நினைக்கின்றனர். . . . நைல் நதியின் நீர் வயல்களுக்கு சரிவர பாயவில்லையா, வானிலையில் மாற்றமில்லையா, பூமியதிர்ச்சி, பஞ்சம், கொள்ளைநோய் ஏற்பட்டதா, உடனே, ‘கிறிஸ்தவர்களை சிங்கத்திடம் தூக்கி எறியுங்கள்’ என்ற கூக்குரலே எழும்பும்.”

கிறிஸ்தவர்கள், அரசாங்கத்திற்கு உண்மையற்றவர்கள் என்று அநேக சமயம் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் இருப்பவர்களிலேயே அவர்கள்தான் மிகவும் நம்பகமான குடிமக்கள் என்பதை டெர்ட்டுல்லியன் நிரூபிக்க முயன்றார். அரசாங்கத்தை கவிழ்க்க செய்யப்பட்ட பல சதித்திட்டங்களைக் குறிப்பிட்ட பிறகு, அந்தச் சதிக்கு துணைபோன அனைவருமே உண்மையில் புறமதத்தார்தான் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை எதிரிகளுக்கு நினைப்பூட்டினார். கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகையில் அந்நாட்டிற்கே உண்மையில் பெரும் இழப்பு ஏற்படுவதாக டெர்ட்டுல்லியன் குறிப்பிட்டார்.

டெர்ட்டுல்லியனின் மற்ற படைப்புகள் கிறிஸ்தவ வாழ்க்கை பற்றியவை. காட்சி அரங்குகளில் என்ற அவருடைய ஆங்கில விளக்கவுரையில் சில பொழுதுபோக்கு இடங்கள், புறமத விளையாட்டு மைதானங்கள், நாடக அரங்குகள் போன்றவற்றிற்கு செல்லாமலிருக்க டெர்ட்டுல்லியன் அறிவுரை கூறினார். கிறிஸ்தவத்திற்கு புதிதாக மாறிய சிலர், பைபிள் போதனைக்காக கூடிவந்த பிறகு புறமத விளையாட்டுகளைக் காணச் செல்வதில் தவறேதும் இல்லை என நினைத்ததாக தெரிகிறது. அவர்களுடைய சிந்தனா சக்தியை தூண்டியெழுப்பும் முயற்சியில், “கடவுளுடைய சர்ச்சிலிருந்து பிசாசின் சர்ச்சுக்கு, அதாவது பரலோகத்திலிருந்து பன்றி கூண்டிற்கு செல்வது எவ்வளவு மூர்க்கத்தனம்” என்று டெர்ட்டுல்லியன் எழுதினார். “செயலில் வெறுப்பவற்றை வார்த்தைகளில் வரவேற்பது சரியாகாது” என்று கூறினார்.

சத்தியத்தை ஆதரித்தே கறைப்படுத்தியவர்

“பிசாசு பல வழிகளில் சத்தியத்தை எதிர்த்திருக்கிறான். சத்தியத்தை ஆதரித்து அதை அழிப்பதே சில சமயங்களில் அவனுடைய குறிக்கோள்” என்று கூறியே பிராக்ஸியஸை எதிர்த்து என்ற தனது ஆங்கில கட்டுரையை டெர்ட்டுல்லியன் ஆரம்பித்தார். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படும் பிராக்ஸியஸ் யார் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், கடவுளையும் இயேசுவையும் பற்றிய அவருடைய போதனைகளை டெர்ட்டுல்லியன் கடுமையாக எதிர்த்தார். பிராக்ஸியஸ், கிறிஸ்தவத்தை மறைமுகமாக கறைப்படுத்த முயன்ற சாத்தானின் கைப்பாவையே என்று அவர் கருதினார்.

அன்று கிறிஸ்தவர்கள் என தங்களை அழைத்துக் கொண்டவர்கள் மத்தியில், கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் இடையிலான உறவே அதிமுக்கிய பிரச்சினையாக இருந்தது. கடவுள் ஒருவரே என்ற நம்பிக்கையையும் இயேசு இரட்சகராகவும் மீட்பராகவும் இருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்வது அவர்களில் சிலருக்கு, அதிலும் முக்கியமாய் கிரேக்க பின்னணியிலிருந்து மதம் மாறியவர்களுக்கு கடினமாயிருந்தது. இயேசு, பிதாவின் மற்றொரு வெளிப்பாடே என்றும், பிதாவுக்கும் குமாரனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் கூறுவதன் மூலம் பிராக்ஸியஸ் அந்தப் பிரச்சினையை தீர்க்க முயன்றார். மோடலிஸம் (modalism) என அழைக்கப்படும் இந்த கொள்கை, கடவுளே “சிருஷ்டிப்பின்போதும் நியாயப்பிரமாணத்தை கொடுத்தபோதும் பிதாவாக வெளிப்பட்டார், பிறகு இயேசு கிறிஸ்துவில் குமாரனாக வெளிப்பட்டார், கிறிஸ்து பரலோகத்திற்கு சென்ற பிறகு பரிசுத்த ஆவியாக வெளிப்பட்டார்” என வாதிடுகிறது.

பிதாவுக்கும் குமாரனுக்கும் உள்ள வித்தியாசம் வேதாகமத்தில் தெளிவாக இருப்பதை டெர்ட்டுல்லியன் காண்பித்தார். 1 கொரிந்தியர் 15:27, 28-ஐ மேற்கோள் காட்டிய பிறகு, “[சகலத்தையும்] கீழ்ப்படுத்தினவரும் சகலமும் அவருக்கு கீழ்ப்பட்டிருப்பவரும் இரண்டு வித்தியாசமான ஆட்களாகவே இருக்க வேண்டும்” என்று விவாதித்தார். “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு டெர்ட்டுல்லியன் கவனத்தை ஈர்த்தார். (யோவான் 14:28) சங்கீதம் 8:5 போன்ற எபிரெய வேதாகமத்தின் பகுதிகளை உபயோகித்து, குமாரன் “தாழ்ந்தவர்” என பைபிள் விவரிப்பதை சுட்டிக்காண்பித்தார். “ஆகவே, பிதா குமாரனிலிருந்து வேறுபட்டவர், குமாரனைவிட உயர்ந்தவர். தோற்றுவிப்பவர் ஒருவர், தோன்றியவர் வேறொருவர்; அனுப்புகிறவர் ஒருவர், அனுப்பப்பட்டவர் மற்றொருவர்; செய்கிறவர் ஒருவர், யார் மூலமாய் செய்யப்பட்டதோ அவர் இன்னொருவர்” என்ற முடிவுக்கு டெர்ட்டுல்லியன் வந்தார்.

குமாரன் பிதாவுக்கு கீழ்ப்பட்டவர் என டெர்ட்டுல்லியன் கருதினார். என்றாலும், மோடலிஸம் கொள்கையை எதிர்க்கும் முயற்சியில், அவர் “எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்”ணிவிட்டார். (1 கொரிந்தியர் 4:6) டெர்ட்டுல்லியன், மற்றொரு கொள்கையின் வாயிலாக இயேசுவின் தெய்வத்தன்மையை நிரூபிக்க தவறாக முயன்றபோது, “ஒரே பரம்பொருளில் மூன்று நபர்கள்” என்ற கொள்கை உருவாக வழிவகுத்தது. இந்தக் கொள்கையை பயன்படுத்தி, கடவுள், அவருடைய குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளில் இணைந்த தனித்தனி நபர்கள் என்று விளக்க முயன்றார். இவ்வாறு, பிதா, குமாரன், பரிசுத்த ஆவிக்கு “திரித்துவம்” என்ற வார்த்தையின் லத்தீன் வடிவத்தை பயன்படுத்திய முதல் நபரானார் டெர்ட்டுல்லியன்.

உலக தத்துவத்தைக் குறித்து எச்சரிக்கை

“ஒரே பரம்பொருளில் மூன்று நபர்கள்” என்ற கோட்பாட்டை டெர்ட்டுல்லியன் எவ்வாறு உருவாக்கினார்? இந்தக் கேள்விக்கான பதில், அவரைப் பற்றிய மற்றொரு முரண்பாட்டில் அடங்கியுள்ளது; அதுவே, தத்துவ ஞானத்தை அவர் கருதிய விதம். தத்துவ ஞானத்தை, “மனிதனின் மற்றும் ‘பேய்களின் கோட்பாடுகள்’” என டெர்ட்டுல்லியன் அழைத்தார். தத்துவ ஞானத்தின் மூலம் கிறிஸ்தவ சத்தியங்களை ஆதரிக்கும் பழக்கத்தை வெளிப்படையாக கண்டனம் செய்தார். “ஸ்தோயிக்கிய, பிளேட்டோனிய, விவாதமுறை ஆய்வு ஆகியவை சேர்ந்த கலப்பட கிறிஸ்தவத்தை உருவாக்கும் எல்லா முயற்சியையும் விட்டுவிடுங்கள்” என்று அவர் கூறினார். ஆனால், தன்னுடைய கருத்துகளுக்கு இசைவாக இருக்கையிலோ உலகியல் தத்துவ ஞானத்தை டெர்ட்டுல்லியன் தாராளமாக உபயோகித்தார்.​—⁠கொலோசெயர் 2:8.

“திரித்துவ இறையியல் வளர்ந்து வேரூன்ற கிரேக்க கோட்பாடு மற்றும் தத்துவத்தின் உதவி தேவையாக இருந்தது” என ஒரு புத்தகம் கூறுகிறது. டெர்ட்டுல்லியனின் இறையியல் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “[அது] சட்டப்பூர்வ மற்றும் தத்துவஞான கருத்துக்களும் வார்த்தைகளும் அடங்கிய வேடிக்கையான கலவை. அவருடைய திரித்துவ கோட்பாட்டில் குற்றங்குறைகள் இருந்தபோதிலும், பின்னர் நைசியா குழுவில் சமர்ப்பித்த கோட்பாட்டிற்கு அடிப்படையாக அமையும் அளவிற்கு அதை முன் வைக்க டெர்ட்டுல்லியனுக்கு இதுவே உதவியது.” ஆக, கிறிஸ்தவமண்டலம் முழுவதும் மத சம்பந்தமான பொய் பரவுவதற்கு, ஒரே பரம்பொருளில் மூன்று நபர்கள் என்ற டெர்ட்டுல்லியனின் கொள்கை முக்கிய காரணமாக இருந்தது.

சத்தியத்தை ஆதரிப்பதாக நினைத்துக்கொண்டு அதை அழித்ததாக டெர்ட்டுல்லியன் மற்றவர்களை குற்றஞ்சாட்டினார். ஆனால், கடவுளால் ஏவப்பட்ட பைபிள் சத்தியங்களை மனித தத்துவங்களோடு இணைத்து அவரும் அதே தவறை செய்ததுதான் வேடிக்கை. ஆகவே, “வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடு”ப்பதற்கு எதிராக பைபிள் எச்சரிப்பதை இருதயத்தில் ஏற்று நடப்போமாக.​—⁠1 தீமோத்தேயு 4:1.

[பக்கம் 29, 30-ன் படங்கள்]

தத்துவத்தை குறைகூறிய டெர்ட்டுல்லியன் தனது கருத்துக்களை முன்னேற்றுவிக்க அதையே உபயோகித்தார்

[படத்திற்கான நன்றி]

பக்கங்கள் 29, 30: © Cliché Bibliothèque nationale de France, Paris

[பக்கம் 31-ன் படம்]

பைபிள் சத்தியத்தை மனித தத்துவங்களோடு கலப்படம் செய்வதை உண்மை கிறிஸ்தவர்கள் தவிர்க்கின்றனர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்