கடவுள் ஒரு திரித்துவம் என்று பூர்வ சர்ச் கற்பித்ததா?
பகுதி 3—அப்போலஜிஸ்ட்டுகள் திரித்துவ கோட்பாட்டைக் கற்பித்தனரா?
திரித்துவ கோட்பாட்டை இயேசுவோ, அவருடைய சீஷர்களோ, பொ.ச. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருந்த அப்போஸ்தல பிரமுகர்களோ கற்பிக்கவில்லை என்று காவற்கோபுரம் அதன் ஏப்ரல் 15, 1992, மற்றும் மே 1, 1992 வெளியீடுகளில் காட்டினது. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்த சர்ச் ஆட்கள் அதைக் கற்பித்தார்களா?
நம்முடைய பொது சகாப்தத்தின் இரண்டாம் நூற்றாண்டின் ஏறக்குறைய மத்திபத்திலிருந்து அதன் முடிவு வரையாக, இன்று அப்போலஜிஸ்ட் என அழைக்கப்படுகிற சர்ச் ஆட்கள் தோன்றினர். அவர்கள், அந்தக் காலத்தின் ரோம உலகத்தில் பரவியிருந்த பகைமைகொண்ட தத்துவ ஞானங்களின் குற்றச்சாட்டுக்கு எதிராக விளக்கமளித்து தாங்கள் அறிந்த கிறிஸ்தவத்தைப் பாதுகாப்பு செய்வதற்கு எழுதினர். இவர்களுடைய வேலை அப்போஸ்தல பிரமுகர்களின் காலத்துக்கு முடிவிலும், அவர்களுடைய எழுத்துக்களுக்குப் பின்னும் வந்தது.
கிரேக்கில் எழுதின இந்த அப்போலஜிஸ்ட்டுகளில் சிலர் ஜஸ்டின் மார்ட்டிர், டாட்டியன், அத்தெனகெரஸ், தியாஃபிலஸ், மற்றும் அலெக்ஸாந்திரியா நகரத்து க்ளெமென்ட் ஆகியோராவர். டெர்ட்டுல்லியன் லத்தீனில் எழுதின ஓர் அப்போலஜிஸ்ட். இவர்கள் தற்கால கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவத்தை—மூவரும் (பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவி) சமத்துவர் ஒரே கடவுளில் அடங்கியவர், ஒவ்வொருவரும் உண்மையான கடவுளே, எனினும் மூன்று கடவுட்கள் அல்ல ஒரே கடவுளே என்பதைக்—கற்பித்தனரா?
“குமாரன் கீழ்ப்பட்டவர்”
டாக்டர் H. R. போயர், பூர்வ சர்ச்சின் சுருக்கமான சரித்திரம் என்ற தன் ஆங்கில புத்தகத்தில், அப்போலஜிஸ்ட்டுகளின் போதகத்தின் தாக்குதல் உரைகளின்பேரில் பின்வருமாறு குறிப்புகள் கொடுக்கிறார்:
“ஜஸ்டின் [மார்ட்டிர்] கற்பித்ததாவது, உலகத்தைப் படைப்பதற்கு முன்னால் கடவுள் தனிமையாக இருந்தார் அப்போது குமாரன் இல்லை. . . . கடவுள் உலகத்தைப் படைக்க விரும்பினபோது, . . . உலகத்தைத் தமக்காகப் படைக்கும்படி அவர் மற்றொரு தெய்வீகரைப் பிறப்பித்தார். இந்தத் தெய்வீகர் குமாரன் என அழைக்கப்பட்டார் . . . ஏனெனில் அவர் பிறந்தார்; அவர் லோகாஸ் என அழைக்கப்பட்டார் ஏனெனில் அவர் கடவுளுடைய விவேகத்திலிருந்து அல்லது மனதிலிருந்து எடுக்கப்பட்டார். . . .
“ஆகையால் ஜஸ்டினும் மற்ற அப்போலஜிஸ்ட்டுகளும் குமாரன் ஒரு சிருஷ்டி எனக் கற்பித்தனர். அவர் உயர்ந்த சிருஷ்டி, இந்த உலகத்தைப் படைப்பதற்குப் போதிய வல்லமைவாய்ந்த ஒரு சிருஷ்டி, எனினும் ஒரு சிருஷ்டியே. பிதாவினிடம் குமாரனுக்கிருந்த இந்த உறவு இறைமைநூலில் கீழ்ப்பட்டிருத்தல் கோட்பாடு என அழைக்கப்படுகிறது. குமாரன் கீழ்ப்பட்டவர், அதாவது, பிதாவுக்கு இரண்டாவதானவர், அவர்பேரில் சார்ந்திருப்பவர், மற்றும் அவரால் உண்டாக்கப்பட்டவர். அப்போலஜிஸ்ட்டுகள் கீழ்ப்பட்டிருத்தல் கோட்பாட்டாளர்கள்.”1
கடவுளிடமாகக் குமாரனின் உறவைப்பற்றிப் பூர்வத்தில் புரிந்துகொண்டிருந்ததைக் குறித்து டாக்டர் மார்ட்டின் உவெர்னர், கிறிஸ்தவ உறுதிக்கோட்பாடு உருவாதல் என்ற ஆங்கில புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்:
“அந்த உறவு ‘கீழ்ப்பட்டிருத்தல்’ எனவே, அதாவது, கடவுளுக்குக் கிறிஸ்து கீழ்ப்பட்டிருப்பதன் கருத்தில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் விளங்கிக்கொள்ளப்பட்டது. புதிய ஏற்பாட்டில் பிதாவாகிய, கடவுளுக்கு இயேசு கீழ்ப்பட்டிருப்பது கவனிப்புக்குக் கொண்டுவரப்படுகிற இடங்களிலெல்லாம், . . . அது கீழ்ப்பட்டிருப்பதென்பதாகவே புரிந்துகொள்ளப்பட்டது மற்றும் உறுதியாகக் குறித்துக் காட்டப்பட்டது. மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் எழுதிய விவரப் பதிவின்படி புதிய ஏற்பாட்டுடன் மிக அதிக உறுதித்தீர்வான கீழ்ப்பட்டிருத்தல் கோட்பாட்டாளர் இயேசுதாமே யாவார் . . . இந்த முதல் நிலை, உறுதியாயும் வெளிப்படையாயும் இருந்து, வெகு காலத்துக்குத் தன்னைக் காத்துக்கொள்ள முடிந்தது. ‘நைஸீனுக்கு முற்பட்ட தலைசிறந்த இறைமையியல் வல்லுநர்கள் கடவுளுக்கு லோகாஸ் கீழ்ப்பட்டிருப்பதையே குறித்துக் காட்டினர்.’”2
இதற்கு ஒத்திசைய R. P. C. ஹான்ஸன், கடவுளைப்பற்றிய கிறிஸ்தவ கோட்பாட்டுக்கான ஆராய்ச்சி என்ற ஆங்கில புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்:
“ஏரியனைப் பின்பற்றினோரின் [நான்காம் நூற்றாண்டில்] கருத்து-மாறுபாட்டு திடீர் எழுச்சிக்கு முன்னால், ஏதோ ஒரு கருத்திலாவது குமாரனைப் பிதாவுக்குக் கீழ்ப்பட்டவராகக் கருதாத இறைமையியல் வல்லுநர் கிழக்கத்திய சர்ச்சிலோ மேற்கத்திய சர்ச்சிலோ இல்லை.”3
முதல் மூன்று நூற்றாண்டுகளின் சர்ச் என்ற புத்தகத்தில், டாக்டர் ஆல்வன் லாம்ஸன், (பொ.ச. 325-ல் நடந்த) நைஸீயா ஆலோசனை சபைக்கு முன்னால் சர்ச் அதிகாரிகளின் போதகத்தைக் குறித்து பின்வரும் இந்தச் சாட்சியத்தைக் கூட்டுகிறார்:
“குமாரனின் கீழ்ப்பட்டநிலை, எதிர்-நைஸீன் பிரமுகர்களால், ஒருமுகமாக இல்லாவிடினும், பொதுவாய் வலியுறுத்தப்பட்டது . . . குமாரனை பிதாவிலிருந்து தனிவேறுபட்டவராக அவர்கள் கருதினார்கள் என்பது அவருடைய கீழ்ப்பட்டநிலையை அவர்கள் தெளிவாய் வலியுறுத்தும் சந்தர்ப்பநிலைமையிலிருந்து தெரிகிறது. . . . அவர்கள் அவரை தனிவேறுபட்டவராகவும் கீழ்ப்பட்டவராகவும் கருதினர்.”4
அவ்வாறே, கடவுட்களும் அந்த ஒரே கடவுளும் என்ற புத்தகத்தில், ராபர்ட் M. க்ரான்ட் அப்போலஜிஸ்ட்டுகளைப்பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
“கிறிஸ்துவின் பண்பைப்பற்றிக் கூறும் விளக்கங்கள் புதிய ஏற்பாட்டில் இருப்பதைப்போல் முக்கியமாய்க் கீழ்ப்பட்டவரென்ற கோட்பாடேயாகும். குமாரன், பழைய ஏற்பாட்டின் அந்த ஒரே கடவுளாயிருக்கிற, பிதாவுக்கு, எப்பொழுதும் கீழ்ப்பட்டவர். . . . அப்படியானால், இந்தப் பூர்வ நூலாசிரியர்களில் நாம் காண்பது, திரித்துவ கோட்பாடல்ல . . . நைஸீயாவுக்கு முன்னால், கிறிஸ்தவ இறைமையியல் பெரும்பாலும் கீழ்ப்பட்டவரென்ற கோட்பாடே அமைந்தது.”5
குமாரன் நித்தியத்துவத்திலும், வல்லமையிலும், ஸ்தானத்திலும், ஞானத்திலும் பிதாவாகிய கடவுளுக்குச் சமமானவரென்று கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவம் கற்பிக்கிறது. ஆனால் அப்போலஜிஸ்ட்டுகள், குமாரன் பிதாவாகிய கடவுளுக்குச் சமமானவரல்லவெனக் கூறினர். குமாரனை அவர்கள் கீழ்ப்பட்டவராகக் கருதினர். அது திரித்துவ போதகமல்ல.
முதற்நூற்றாண்டு போதகத்தைச் சிந்தித்தல்
இந்த அப்போலஜிஸ்ட்டுகளும் மற்ற பூர்வ சர்ச் பிரமுகர்களும் பிதாவுக்கும் குமாரனுக்குமுள்ள உறவைப்பற்றி முதற்நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கற்பித்தவற்றிற்குப் பேரளவாய்ச் சிந்தனை செலுத்தினர். கிறிஸ்தவ உறுதிக்கோட்பாடு உருவாதல் என்ற மேற்குறிப்பிட்ட இந்தப் புத்தகத்தில் இது எவ்வாறு வெளிப்படுத்திக் கூறப்பட்டிருக்கிறதென்பதைக் கவனியுங்கள்:
“பூர்வ கிறிஸ்தவ சகாப்தத்தில், பின்னால் சர்ச்சில் உண்டுபண்ணின கடுமையான சச்சரவுகளைப் போன்ற, எந்த வகையான திரித்துவ பிரச்னையோ கருத்து மாறுபாடோ இருந்ததென்ற எந்த அறிகுறியும் இல்லை. அதற்கு சந்தேகமில்லாமல் காரணம் என்னவெனில், பூர்வ கிறிஸ்தவத்துக்கு, கிறிஸ்து . . . உயர்ந்த பரலோக தூதர்-உலகத்தின் ஆளாகவும், சிருஷ்டிக்கப்பட்டவராகவும், யுகங்களின் முடிவில், . . . கடவுளின் ராஜ்யத்தைக் கொண்டுவருவதற்கான வேலைக்குக் கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவருமாக இருந்த இந்த உண்மையில் இருந்தது.”6
மேலும் முற்பகுதியிலிருந்த சர்ச் பிரமுகர்களின் போதகத்தைக் குறித்து தி இன்டர்நாஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது:
“சர்ச்சின் மிகப் பூர்வ சிந்தனையில் பிதாவாகிய கடவுளைப்பற்றிப் பேசுகையில் மனப்போக்கானது அவரைப்பற்றி முதலாவதாக, இயேசு கிறிஸ்துவின் பிதாவென அல்ல, ஆனால் எல்லா உயிரின் மூலகாரணராக விளங்கிக்கொள்வதேயாகும். ஆகவே பிதாவாகிய கடவுள் எல்லாவற்றிற்கும் மேம்பட்டவர் என்பதாகும். தொடக்கமில்லாதவர், அழியாமையுடையவர், மாறாதவர், வருணிக்கமுடியாதவர், காணக்கூடாதவர், மற்றும் சிருஷ்டிக்கப்படாதவர் என்ற விவரிப்புகள் அவருக்கே உரியவை. அவரே ஒன்றுமில்லாமையிலிருந்து, சிருஷ்டிப்புக்குரிய மூலப்பொருள்தானே உட்பட, எல்லாவற்றையும் உண்டாக்கினவர். . . .
“இது பிதா மாத்திரமே சரியானபடி கடவுள், குமாரனும் ஆவியும் அடுத்துக்கீழுள்ள நிலையிலேயே அவ்வாறிருக்கின்றனர் என குறிப்பிடுவதாகத் தோன்றலாம். பல பூர்வ கூற்றுகள் இதை ஆதரிப்பவையாகத் தோன்றுகின்றன.”7
இந்தச் சத்தியங்களின் அழுத்தத்தைக் குறைத்து திரித்துவ கோட்பாடே அந்தப் பூர்வ காலப்பகுதியில் ஏற்கப்பட்டதென இந்த என்ஸைக்ளோபீடியா வலியுறுத்துகிறபோதிலும், உண்மை நிகழ்ச்சிகள் அந்த வலியுறுத்தலைத் தவறெனத் தெரிவிக்கின்றன. பிரசித்திப்பெற்ற கத்தோலிக்க இறைமையியல் வல்லுநர் ஜாண் ஹென்ரி கார்டினல் நியுமன் என்பவரின் பின்வரும் வார்த்தைகளைக் கவனியுங்கள்:
“நம்முடைய கர்த்தர் கருதப்படும் பொருளாக உள்ள கோட்பாடுகளின் முழு தொகுதியும், பூர்வ சர்ச்சால் மாறாமலும் வேறுபாடில்லாமலும் ஒப்புக்கொள்ளப்பட்டதென நாம் ஏற்றுக்கொள்ளலாம் . . . ஆனால் அது நிச்சயமாக கத்தோலிக்கத் திரித்துவக் கோட்பாட்டுக்கு மாறானதாயுள்ளது. அதன் ஆதரவாகப் பூர்வத்தினரின் [சர்ச் அதிகாரிகளின்] ஒத்திசைவு இருக்கிறதென்று எந்தக் கருத்தில் சொல்லக்கூடுமென நான் காண்கிறதில்லை . . .
“அந்த முற்கால விசுவாசப்பிரமாணங்கள் [திரித்துவத்தைப்பற்றி] . . . ஒன்றுமே குறிப்பிடுகிறதில்லை. நிச்சயமாகவே மூவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றன; ஆனால் அந்தக் கோட்பாட்டில் ஏதாவது மர்மம் இருக்கிறதென்றோ, அந்த மூவரும் ஒருவரே என்றோ, அவர்கள் சமமானவர்கள், சமநித்தியர், எல்லாரும் சிருஷ்டிக்கப்படாதவர்கள், எல்லாரும் சர்வ வல்லவர், எல்லாரும் புரிந்துகொள்ளமுடியாதவர்கள் என்றோ சொல்லப்படுகிறதில்லை, அவற்றிலிருந்து ஒருபோதும் உய்த்தறியவும் முடியாது.”8
ஜஸ்டின் மார்ட்டிர் கற்பித்தது
ஜஸ்டின் மார்ட்டிர் பூர்வ அப்போலஜிஸ்ட்டுகளில் ஒருவர், இவர் ஏறக்குறைய பொ.ச. 110-லிருந்து 165 வரையாக வாழ்ந்தார். இப்போது இருப்பிலுள்ள அவருடைய எழுத்துக்கள் ஒன்றும் ஒரே கடவுளில் மூன்று சமமான ஆட்களைக் குறிப்பிடுகிறதில்லை.
உதாரணமாக, கத்தோலிக் ஜெருசலெம் பைபிளில் இருக்கிறபடி, நீதிமொழிகள் 8:22-30, இயேசுவின் மனிதவாழ்க்கைக்கு முற்பட்ட வாழ்க்கையைக் குறித்து பின்வருமாறு கூறுகிறது: “யாவே தம்முடைய நோக்கம் முதல் வெளிப்பட செய்கையில், தம்முடைய செயல்களின் மிகப் பழமையானதற்கு முன்னால் என்னைப் படைத்தார், . . . ஆழங்கள் இல்லை, நான் பிறந்தபோது . . . குன்றுகளுக்கு முன்னால், நான் பிறக்கலானேன் . . . நான் அவருடைய [கடவுளுடைய] பக்கத்தில், கைதேர்ந்த தொழிலாளனாக இருந்தேன்.” இந்த வசனங்களைக் கலந்தாராய்ந்து, ஜஸ்டின் மார்ட்டிர் ட்ரைஃபோவுடன் உரையாடல் என்ற தன் புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்:
“படைக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் முன்னால் இந்தக் குமாரன் பிதாவால் பிறப்பிக்கப்பட்டாரென வேதவார்த்தை அறிவித்திருக்கிறது; மேலும் பிறப்பிக்கப்பட்ட அது பிறப்பிக்கும் அதிலிருந்து எண்ணிக்கைப்படி தனிவேறுபட்டிருப்பதை, எவரும் ஒப்புக்கொள்வர்.”9
குமாரன் கடவுளிலிருந்து பிறந்ததால், குமாரன் சம்பந்தமாக ஜஸ்டின் “கடவுள்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அவர் தன் முதல் அப்போலஜி என்பதில் பின்வருமாறு கூறுகிறார்: “சர்வலோகத்தின் பிதாவுக்கு ஒரு குமாரன் இருக்கிறார்; அவருங்கூட, கடவுளுடைய முதற்பேறான வார்த்தையாக இருப்பதால், கடவுளே.”10 பைபிளும் கடவுளுடைய குமாரனை “கடவுள்” என்ற பட்டப்பெயரால் குறிப்பிடுகிறது. ஏசாயா 9:6-ல் (தி.மொ.) அவர் “வல்லமையுள்ள கடவுள்,” என்றழைக்கப்படுகிறார். ஆனால் பைபிளில், தேவதூதர்கள், மனிதர்கள், பொய்க் கடவுட்கள், மற்றும் சாத்தான் “கடவுட்கள்” (அல்லது “தேவர்கள்”) என அழைக்கப்படுகின்றனர். (தேவதூதர்கள்: சங்கீதம் 8:5; எபிரெயர் 2:6, 7-ஐ ஒத்துப்பாருங்கள். மனிதர்கள்: சங்கீதம் 82:6. பொய்க் கடவுட்கள்: யாத்திராகமம் 12:12; 1 கொரிந்தியர் 8:5. சாத்தான்: 2 கொரிந்தியர் 4:4.) எபிரெய வேத எழுத்துக்களில், “கடவுள்” என்பதற்கான சொல் எல் என்பதாகும், இது வெறுமென “வல்லமையுள்ளவர்” அல்லது “பலத்தவர்” என பொருள்படுகிறது. கிரேக்க வேத எழுத்துக்களில் இதற்குச் சமமானது தியாஸ் ஆகும்.
மேலும், ஏசாயா 9:6-ல் பயன்படுத்தியுள்ள எபிரெய பதம் குமாரனுக்கும் கடவுளுக்கும் இடையே திட்டவட்டமான வேறுபாட்டைக் காட்டுகிறது. அங்கே குமாரன் “வல்லமையுள்ள கடவுள்,” எல் கிபோர் என்றழைக்கப்படுகிறார், “சர்வவல்லமையுள்ள கடவுள்” என்றல்ல. எபிரெயுவில் அந்தப் பதம் எல் ஷடாய் என்பதாகும் மற்றும் ஈடிணையற்று யெகோவாவுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது.
எனினும், குமாரனை ஜஸ்டின் “கடவுள்” என்றழைக்கையில், அந்தக் குமாரன் மூன்று சமமான ஆட்களில் ஒருவரெனவும், அவர்கள் ஒவ்வொருவரும் கடவுட்கள் ஆனால் அந்த மூவரும் ஒரே கடவுளே ஆகின்றனரெனவும் அவர் ஒருபோதும் சொல்லுகிறதில்லை. மாறாக, ட்ரைஃபோவுடன் உரையாடல் என்ற தன் புத்தகத்தில் அவர் பின்வருமாறு கூறுகிறார்:
“எல்லாவற்றையும் உண்டாக்கினவருக்கு [சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு] கீழ்ப்பட்டிருக்கும் மற்றொரு கடவுளும் கர்த்தரும் [மனிதவாழ்க்கைக்கு முந்தின வாழ்க்கையில் இயேசு] . . . இருக்கிறார்; இவர் [குமாரன்] தேவதூதர் எனவும் அழைக்கப்படுகிறார், ஏனெனில் எல்லாவற்றையும் உண்டாக்கினவர்—அவருக்குமேல் எவரும் இல்லை—மனிதருக்கு அறிவிக்க விரும்புகிற என்னவாயினும் அதை அவர் [குமாரன்] அவர்களுக்கு அறிவிக்கிறார். . . .
“எல்லாவற்றையும் உண்டாக்கினவரிலிருந்து [குமாரன்] தனிவேறுபட்டவர்—எண்ணின்படி, நான் கருதுவது, சித்தத்தில் [வேறுபடுவது] அல்ல.”11
ஜஸ்டினின் முதல் அப்போலஜி 6-ம் அதிகாரத்தில் அக்கறையூட்டும் ஒரு பகுதியுள்ளது, அதில் கிறிஸ்தவர்கள் நாத்திகர்கள் என்ற புறமத குற்றச்சாட்டுக்கு எதிராக விவாதித்து விளக்குகிறார். அவர் எழுதுவதாவது:
“அவரையும் [கடவுளையும்], குமாரனையும் (இவர் அவரிலிருந்து வந்தவர் இந்தக் காரியங்களை எங்களுக்குக் கற்பித்தவர், மேலும் பின்தொடருகிற மற்ற திரளான நல்ல தூதர்களும் அவருக்கு அவ்வாறே உண்டாக்கப்பட்டனர்), அந்தத் தீர்க்கதரிசன ஆவியையும், நாங்கள் வணங்கி பக்திசெலுத்துகிறோம்.”12
இந்தப் பகுதியின் ஒரு மொழிபெயர்ப்பாளர், பெர்னார்ட் லோஸ், பின்வருமாறு விளக்குகிறார்: “தேவதூதர்கள் கிறிஸ்தவர்களால் கனப்படுத்தி வணங்கப்படுகிற ஆட்களென இந்த விவரக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பது போதாதென்பதுபோல், ஜஸ்டின், பரிசுத்த ஆவியைக் குறிப்பிடுவதற்கு முன்னால் தூதர்களைக் குறிப்பிடுவதற்குத் தயங்குகிறதில்லை.”13—கிறிஸ்தவ கோட்பாடு உருவாதலின்பேரில் ஒரு கட்டுரை என்ற ஆங்கில புத்தகத்தையும் பாருங்கள்.14
இவ்வாறு, ஒரு கிறிஸ்தவன் யாரை வணங்கவேண்டும் என்ற காரியத்தில் ஜஸ்டின் மார்ட்டிர் தூய்மையான பைபிள் கோட்பாட்டிலிருந்து விலகிச்சென்றிருப்பதாகத் தோன்றுகையில், தேவதூதர்கள் கடவுளுக்குச் சமமானவர்களென எவ்வகையிலும் கருதப்படாததைப்போலவே, குமாரனைப் பிதாவுக்குச் சமமானவராக அவர் கருதவில்லை என்பது தெளிவாயிருக்கிறது. ஜஸ்டினைக் குறித்து, லம்ஸனின் முதல் மூன்று நூற்றாண்டுகளின் சர்ச் என்பதிலிருந்து நாங்கள் மறுபடியும் மேற்கோள் எடுத்துக் குறிப்பிடுகிறோம்:
“ஜஸ்டின் குமாரனைக் கடவுளிலிருந்து தனிவேறுபட்டவராகவும், அவரைவிடத் தாழ்ந்தவராகவும் கருதினார்: தனிவேறுபட்டவர், தற்கால கருத்தில் இருப்பதுபோல், மூன்று உறுப்பினரில், அல்லது ஆட்களில் ஒருவராக அமைவதாக அல்ல, . . . ஆனால் உள்ளியல்பிலும் இயற்பண்பிலும் வேறுபட்டவர்; உண்மையான, மெய்ப்படியான, தனியாளாக வாழ்பவராய், கடவுளிலிருந்து தனிவேறுபட்டவர், அவரிடமிருந்து [கடவுளிடமிருந்து] தன்னுடைய எல்லா அதிகாரங்களையும் பட்டங்களையும் பெற்றார்; அவருக்கடியில் அமைகிறார், எல்லா காரியங்களிலும் அவருடைய சித்தத்துக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார். பிதா ஈடற்ற உன்னதர்; குமாரன் கீழ்நிலைப்பட்டவர்: பிதா வல்லமையின் மூலகாரணர்; குமாரன் பெற்றுக்கொள்பவர்: பிதா தொடங்கி வைக்கிறார்; குமாரன், அவருடைய ஊழியராக அல்லது கருவியாக, திட்டத்தை நிறைவேற்றுகிறார். அவர்கள் எண்ணிக்கையில் இருவர், ஆனால் ஒத்திருக்கின்றனர், அல்லது சித்தத்தில் ஒன்றாயிருக்கின்றனர்; பிதாவின் சித்தம் குமாரனில் எப்பொழுதும் நீங்காதிருக்கிறது.”15
மேலும், பரிசுத்த ஆவி பிதாவுக்கும் குமாரனுக்கும் சமமான ஓர் ஆள் என்று ஜஸ்டின் ஓரிடத்திலும் சொல்லுகிறதில்லை. ஆகையால் ஜஸ்டின் தற்கால கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவத்தைக் கற்பித்தாரென எந்தக் கருத்திலும் நேர்மையுடன் சொல்ல முடியாது.
க்ளெமென்ட் கற்பித்தது
அலெக்ஸாந்திரியாவின் க்ளெமென்ட்டும் (c. பொ.ச. 150-215) குமாரனைக் “கடவுள்” என்றழைக்கிறார். அவரை “சிருஷ்டிகர்,” என்றுங்கூட அழைக்கிறார், இது பைபிளில் இயேசுவின் சம்பந்தமாக ஒருபோதும் பயன்படுத்தப்படாத ஒரு பதம். எல்லா வழிகளிலும் குமாரன் சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகருக்குச் சமமானவராயிருந்தாரென அவர் பொருள்கொள்கிறாரா? இல்லை. க்ளெமென்ட் யோவான் 1:3-ஐக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது, அங்கே குமாரனைக் குறித்துப் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று.”16 கடவுள் குமாரனைத் தம்முடைய சிருஷ்டிப்பு வேலைகளில் ஒரு செயல்-முதல்வராகப் பயன்படுத்தினார்.—கொலோசெயர் 1:15-17.
ஈடற்ற உன்னதக் கடவுளை, க்ளெமென்ட், “நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் கடவுளும் பிதாவுமானவர்”17 என அழைத்து, “கர்த்தர் சிருஷ்டிகரின் குமாரன்,”18 என்று கூறுகிறார். மேலும் அவர் சொல்வதாவது: “எல்லாருக்கும் கடவுளானவரே ஒரே ஒரு நல்ல நீதியான சிருஷ்டிகர், குமாரன் பிதாவில் [இருக்கிறார்].”19 ஆகவே குமாரன் தமக்குமேல் ஒரு கடவுளை உடையவரென அவர் எழுதினார்.
கடவுளை க்ளெமென்ட் “நித்திய ஜீவனை அருளிய முதல்வரும் ஒரே ஒருவரும்,” எனக் கூறி, “இதை, அவரிடமிருந்து [கடவுளிடமிருந்து] பெற்ற குமாரன், நமக்குக் கொடுக்கிறார்.”20 என்று சொல்கிறார். நித்திய ஜீவனை முதன்முதல் கொடுத்தவர், அதைக் கடத்துபவர் என்றிருப்பவருக்கு தெளிவாகவே மேம்பட்டவர். இவ்வாறு, கடவுள் “முதல்வரும், மிக உயர்ந்தவருமானவர்,”21 என்று க்ளெமென்ட் சொல்லுகிறார். மேலும், “தாம் ஒருவரே சர்வவல்லமையுள்ளவராக இருப்பவருக்கு” குமாரன் “மிக நெருங்கியவர்” என்றும், குமாரன் “பிதாவின் சித்தத்துக்குப் பொருந்துமாறு எல்லா காரியங்களையும் கட்டளையிடுகிறார்.”22 என்றும் அவர் சொல்லுகிறார். குமாரன்மீது சர்வவல்லமையுள்ள கடவுளின் உயர்வதிகாரத்தை மறுபடியும் மறுபடியுமாகக் க்ளெமென்ட் காட்டுகிறார்.
முதல் மூன்று நூற்றாண்டுகளின் சர்ச் என்பதில் அலெக்ஸாந்திரியாவின் க்ளெமென்ட்டைப்பற்றி நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்:
“குமாரனின் தாழ்ந்த நிலையைத் தெளிவாக வலியுறுத்தியுள்ள பல பகுதிகளை நாங்கள் க்ளெமென்ட் எழுதியவற்றிலிருந்து எடுத்துக் குறிப்பிடக்கூடும். . . .
“க்ளெமென்ட் எழுதியதை எவராவது சாதாரண கவனத்துடன் வாசித்து, குமாரனை எண்ணிக்கையில் பிதாவோடு முழுதும் ஒத்தவர்—ஒருவரே—என்றவர் கருதினாரென ஒரு விநாடியாவது கற்பனை செய்யக்கூடுமென்பது எங்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. அவருடைய சார்ந்துள்ள மற்றும் தாழ்ந்த இயல்பு, எங்களுக்குத் தோன்றுகிறபடி, எல்லா இடத்திலும் ஒப்புக்கொள்ளப்படுகிறது. கடவுளும் குமாரனும் எண்ணிக்கைப்படி வெவ்வேறு ஆட்களென க்ளெமென்ட் நம்பினார்; வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், இரண்டு ஆட்கள்,—ஒருவர் ஈடற்ற உன்னதர், மற்றவர் கீழ்ப்பட்டவர்.”23
மேலும், பின்வருமாறு மறுபடியும் சொல்லலாம்: க்ளெமென்ட், இயேசுவைப்பற்றி பைபிள் சொல்வதை மீறி செல்வதாகச் சிலசமயங்களில் தோன்றினாலும், ஒரே கடவுளில் மூன்று சமமான ஒன்றுபட்டு உருவான ஒரு திரித்துவத்தைப்பற்றி அவர் எங்கேயும் பேசுகிறதில்லை. ஜஸ்டின் காலத்துக்கும் க்ளெமென்ட் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த டாட்டியன், தியாஃபிலஸ், மற்றும் அத்தெனகெரஸ் போன்ற அப்போலஜிஸ்ட்டுகள், இதைப்போன்ற கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அவர்களும் “ஜஸ்டினைப்போலவே திரித்துவக்கோட்பாட்டாளர்கள் அல்லர்; அதாவது, அவர்கள் பிரிந்திராத, சமமாயுள்ள மூவரில் நம்பிக்கை வைக்கவில்லை, மாறாக இந்த நம்பிக்கைக்கு முற்றிலும் எதிரான கோட்பாட்டைக் கற்பித்தனர்,”24 என லாம்ஸன் கூறுகிறார்.
டெர்ட்டுல்லியனின் இறைமையியல்
டெர்ட்டுல்லியனே (c. பொ.ச. 160-230) ட்ரினிட்டாஸ் என்ற லத்தீன் சொல்லை முதலாவது பயன்படுத்தினவர். ஹென்ரி சாட்விக் என்பவர் குறிப்பிட்டபடி, டெர்ட்டுல்லியன், கடவுள் ‘மூன்று ஆட்களில் அடங்கிய ஒரே மூலப்பொருள்’ என்றதை முன்கொண்டுவந்தார்.’ 25 எனினும் இது மூன்று சமமான மற்றும் சமநித்தியரான ஆட்களை அவர் மனதில் கொண்டிருந்தாரென பொருள்படுகிறதில்லை. எனினும், திரித்துவக் கோட்பாட்டை உருவாக்குவதில் முனைந்திருந்த பிற்பட்ட எழுத்தாளர்கள் இவருடைய எண்ணங்களின்மீது மற்றவற்றைச் சேர்த்துக் கட்டினர்.
பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியைப்பற்றிய டெர்ட்டுல்லியனின் கருத்து கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவத்திலிருந்து வெகுவாய் வேறுபட்டது, ஏனெனில் அவர் கீழ்ப்பட்டநிலை கோட்பாட்டாளர். குமாரனைப் பிதாவுக்குக் கீழ்ப்பட்டவராக அவர் கருதினார். ஹெர்மாஜீனஸுக்கு எதிராக என்பதில் அவர் பின்வருமாறு எழுதினார்:
“பிறப்பிக்கப்படாதவரும் படைக்கப்படாதவருமான கடவுள் ஒருவரைத் தவிர வேறு எவராவது இருக்கிறாரென நாம் எண்ணக்கூடாது. . . . ஒரேபேறானவரும் முதற்பேறானவருமான வார்த்தையாகிய கடவுளுடைய இந்தக் குமாரனைப் பார்க்கிலும், முதியவரும், இதனிமித்தம் நிச்சயமாகவே அதிக பெருந்தன்மையுடையவருமாக இருப்பவர் பிதாவைத் தவிர வேறு எவராக எவ்வாறு இருக்க முடியும்? . . . அதற்கு உயிர்வாழ்வைக் கொடுப்பதற்கு உண்டாக்குபவர் தேவைப்படாதது [கடவுள்], உயிருருவாகும்படி கொண்டுவருவதற்கு ஒரு படைப்பவரைத் தனக்குக் கொண்டிருந்ததைப் [குமாரனைப்] பார்க்கிலும் படிநிலையில் மிக அதிகமாய் உயர்ந்திருக்கும்.”26
மேலும், ப்ராக்ஸீயஸுக்கு எதிராக என்பதில், குமாரன் சர்வவல்லமையுள்ள கடவுளிலிருந்து வேறுபட்டவர் மற்றும் அவருக்குக் கீழ்ப்பட்டநிலையில் இருப்பவர் என பின்வருமாறு கூறுவதன்மூலம் காட்டுகிறார்:
“பிதா முழுமையான மூலப்பொருள், குமாரனோ அந்த முழுமையிலிருந்து வருவிக்கப்பட்டவரும் ஒரு பகுதியானவருமாக இருக்கிறார், அவர்தாமே ஒப்புக்கொள்கிறபடி: ‘என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.’ . . . இவ்வாறு பிதா குமாரனிலிருந்து தனிவேறுபட்டவர், குமாரனைவிட பெரியவர், பிறப்பிக்கிறவர் ஒருவர், பிறப்பிக்கப்பட்டவர் மற்றொருவர் என்ற காரணத்தினாலும்; மேலும், அனுப்புகிறவர் ஒருவர், அனுப்பப்பட்டவர் மற்றொருவர்; மறுபடியும், உண்டாக்குகிறவர் ஒருவர், அந்தப் பொருள் எவர் மூலமாக உண்டாக்கப்படுகிறதோ அவர் மற்றொருவர்.”27
ஹெர்மாஜீனஸுக்கு எதிராக என்பதில் டெர்ட்டுல்லியன், குமாரன் ஓர் ஆளாக உண்டாகியிராத ஒரு காலம் இருந்தது என்று மேலுமாகக் கூறி, கடவுள் இருந்த அதே பாங்கில் நித்தியராகக் குமாரனைத் தான் கருதவில்லையெனக் காட்டுகிறார்.28 கார்டினல் நியுமன் சொன்னதாவது: “நம்முடைய கர்த்தரின் நித்திய பிறப்பிப்பு கோட்பாட்டின்பேரில் டெர்ட்டுல்லியனைப் புறக்கோட்பாட்டாளனாகக் கருதவேண்டும்.”29 டெர்ட்டுல்லியனைக் குறித்து லாம்ஸன் பின்வருமாறு கூறுகிறார்:
“இந்த விவேகம், அல்லது கிரேக்கரால் அழைக்கப்பட்டபடி, லோகாஸ், டெர்ட்டுல்லியன் நம்பினபடி, பின்னால் வார்த்தையாக, அல்லது குமாரனாக, அதாவது, உண்மையான ஆளாக மாற்றப்பட்டது, நித்தியத்திலிருந்து பிதாவின் ஓர் இயற்பண்பாக மாத்திரமே இருந்துவந்ததாகும். எனினும், டெர்ட்டுல்லியன் அவருக்கு, பிதாவுக்குக் கீழ்ப்பட்ட ஒரு படிநிலையைக் கொடுத்தார் . . .
“தற்காலத்தில் பொதுவாய் ஏற்கப்படும் திரித்துவ விளக்கம் எதன்படியும் தீர்மானித்தால், டெர்ட்டுல்லியனை [மத எதிர்கொள்கைக்காரனென] கண்டனம் செய்வதிலிருந்து காப்பாற்ற முயற்சி செய்வது பயனற்றதாயிருக்கும். அவர் அந்தச் சோதனையில் ஒரு விநாடியும் நிலைத்திருக்க முடியாது.”30
திரித்துவம் இல்லை
அப்போலஜிஸ்ட்டுகளின் எல்லா வார்த்தைகளையும் நீங்கள் வாசித்தால், சில காரியங்களில் அவர்கள் பைபிளின் போதகங்களிலிருந்து பிழைபட்டபோதிலும், பிதாவும், குமாரனும், பரிசுத்த ஆவியும், நித்தியத்தில், வல்லமையில், ஸ்தானத்தில், மற்றும் ஞானத்தில் சரிசமமானவர்களென அவர்களில் ஒருவரும் கற்பிக்கவில்லை.
இது, ஐரீனியஸ், ஹிப்பாலிட்டஸ், ஆரிஜன், ஸைப்ரியன், நோவேஷன் போன்ற, இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளின் மற்ற எழுத்தாளர்களைக் குறித்ததிலும் அவ்வாறே உள்ளது. சிலர் பிதாவையும் குமாரனையும் சில அம்சங்களில் சமமாக்கியபோதிலும், மற்ற முறைகளில் குமாரனை பிதாவாகிய கடவுளுக்குக் கீழ்ப்பட்டவராகவே கருதினர். மேலும் பரிசுத்த ஆவி பிதாவுக்கும் குமாரனுக்கும் சமமானதென அவர்களில் ஒருவரும் ஊகிக்கவுங்கூட இல்லை. உதாரணமாக, ஆரிஜன் (c. பொ.ச. 185-254) கடவுளுடைய குமாரன் “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறு,” எனவும் வேத எழுத்துக்கள் “அவரை சிருஷ்டிப்பின் எல்லா செயல்களுக்கும் மிக அதிகப் பூர்வமாயிருப்பதாக அறிகின்றன” எனவும் கூறுகிறார்.33
இந்தப் பூர்வ சர்ச் அதிகாரிகளின் எழுத்துக்களைத் திறந்த மனதுடன் வாசிப்பது, கிறிஸ்தவ மண்டலத்தின் திரித்துவம் அவர்களுடைய காலத்தில் இருக்கவில்லையெனக் காட்டும். முதல் மூன்று நூற்றாண்டுகளின் சர்ச் என்ற புத்தகம் கூறுகிறபடி:
“பலர் அறிந்த தற்கால திரித்துவ கோட்பாடு . . . ஜஸ்டினுடைய எழுத்துக்களில் எந்த ஆதரவையும் பெறுகிறதில்லை: மேலும், இதையே எதிர்-நைஸீன் பிரமுகர்கள் எல்லாருடையதிலும், அதாவது, கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின்னான மூன்று நூற்றாண்டுகளிலிருந்த எல்லா கிறிஸ்தவ எழுத்தாளர்களிலும் கவனிக்கலாம். அவர்கள் பிதாவையும், குமாரனையும், தீர்க்கதரிசன அல்லது பரிசுத்த ஆவியையும் பற்றி பேசுவது உண்மையே, ஆனால் சரிசமமானவர்களாக அல்ல, எண்ணிக்கை உள்ளியல்பில் ஒருவரேயென அல்ல, ஒருவரில் மூவர் என்றல்ல, இப்பொழுது திரித்துவக் கோட்பாட்டாளர்களால் ஒப்புக்கொள்கிற எந்தக் கருத்திலும் அல்ல. இதற்கு நேர்மாறானதே உண்மையாயிருக்கிறது. இந்தப் பிரமுகர்களால் விளக்கப்பட்ட, திரித்துவ கோட்பாடு, தற்கால கோட்பாட்டிலிருந்து முக்கியமாய் வேறுபட்டிருந்தது. இதை நாங்கள் உண்மையெனவும் நிரூபிக்கக்கூடியதெனவும் மனித எண்ணங்களின் சரித்திரத்திலுள்ள எந்த உண்மையைப்போலவும் கூறுகிறோம்.”32
உண்மையில், டெர்ட்டுல்லியன் காலத்துக்கு முன்னால் திரித்துவம் குறிப்பிடப்படவுங்கூட இல்லை. மேலும் டெர்ட்டுல்லியனின் “புறக்கோட்பாடு” திரித்துவம் இன்று நம்பப்படுவதிலிருந்து வெகுவாய் வேறுபட்டது. அவ்வாறெனில், இன்று புரிந்துகொள்ளப்படுகிறபடியான, இந்தத் திரித்துவ கோட்பாடு எவ்வாறு உண்டாயிற்று? பொ.ச. 325-ல் நைஸீயாவின் ஆலோசனை சபையிலா? இந்தக் கேள்விகளை எதிர்கால காவற்கோபுர வெளியீடு ஒன்றில் இந்தத் தொடர் கட்டுரைகளின் பகுதி 4-ல் நாம் ஆராய்வோம்.
[பக்கம் 27-ன் படம்]
க்ளெமென்ட்
[பக்கம் 28-ன் படம்]
டெர்ட்டுல்லியன்
[படத்திற்கான நன்றி]
Historical Pictures Service