கடவுள் ஒரு திரித்துவம் என்று பூர்வ சர்ச் கற்பித்ததா?
பகுதி 2—அப்போஸ்தல தந்தைமார்கள் திரித்துவக் கோட்பாட்டைக் கற்பித்தனரா?
இந்தத் தொடரின் பகுதி 1, 1992, ஏப்ரல் 15, காவற்கோபுரம், இயேசுவும் அவருடைய சீஷர்களும் திரித்துவக் கோட்பாட்டை—பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் சரிசமமானவர்கள், ஆனால் ஒரே கடவுளே என்ற கருத்தை—கற்பித்தனரா என்பதைக் கலந்தாலோசித்தது. பைபிளிலிருந்தும், வரலாற்றாசிரியர்களிடமிருந்தும், இறையியலரிடமிருந்தும்கூட வரும் தெளிவான அத்தாட்சி அவர்கள் அவ்விதமாக கற்பிக்கவில்லை என்பதே. அதற்கு பின் வந்த சர்ச் தலைவர்களைப் பற்றி என்ன?—அவர்கள் திரித்துவத்தைக் கற்பித்தனரா?
“அப்போஸ்தல தந்தைமார்கள்” என்பது நமது பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இரண்டாவது நூற்றாண்டின் முற்பகுதியிலும் கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதிய சர்ச் மனிதர்களுக்குப் பயன்படுத்தப்பட்ட சிறப்புப் பெயராகும். ரோமாபுரியின் க்ளமென்ட், க்நேஷியஸ், பாலிகார்ப், ஹெர்மஸ் மற்றும் பேப்பியஸ் இவர்களில் சிலராவர்.
இவர்கள் அப்போஸ்தலர்களில் சிலர் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்தவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் அப்போஸ்தல போதனைகளை நன்கு தெரிந்தவர்களாக இருந்திருக்க வேண்டும். இந்த மனிதர்கள் எழுதிய காரியங்களைக் குறித்து தி நியு என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது:
“முழுமையாக எடுத்துக் கொள்ளப்படுகையில், அப்போஸ்தல தந்தைமார்களின் எழுத்துக்கள், புதிய ஏற்பாட்டுக்கு வெளியே வேறு எந்த கிறிஸ்தவ பிரசுரத்தையும்விட சரித்திரப்பூர்வமாக அதிக மதிப்புள்ளவையாக இருக்கின்றன.”
அப்போஸ்தலர்கள் திரித்துவக் கோட்பாட்டை கற்பித்திருந்தார்களேயானால், அப்பொழுது அந்த அப்போஸ்தல தந்தைமார்களும்கூட அதை கற்பித்திருக்க வேண்டும். அவர்களுடைய போதனையில் இது முக்கியமானதாக இருக்க வேண்டும், ஏனென்றால் கடவுள் யார் என்பதை மக்களுக்குச் சொல்வதைக் காட்டிலும் வேறு எதுவும் அதிக முக்கியத்துவமுள்ளதாக இருக்கமுடியாது. ஆகவே அவர்கள் திரித்துவ கோட்பாட்டை கற்பித்தனரா?
தொடக்கக் காலத்துக்குரிய விசுவாச அறிக்கை
கிறிஸ்தவ விசுவாசத்தின் பைபிள் சாராத அறிக்கைகளில் மிகப்பழமையான ஒன்று, டிடாகே அல்லது பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் போதனை என்று அறியப்பட்ட 16 சிறிய அதிகாரங்களடங்கிய ஒரு புத்தகத்தில் காணப்படுகிறது. ஒரு சில சரித்திராசிரியர்கள் இது சுமார் பொ.ச. 100-ம் ஆண்டுக்கு அல்லது அதற்கும் முற்பட்ட காலத்துக்குரியது என்று குறிப்பிடுகிறார்கள். அதன் ஆசிரியர் யார் என்று அறியப்படவில்லை.
டிடாகே, கிறிஸ்தவர்களாவதற்கு மக்கள் அறிந்திருக்க வேண்டிய காரியங்களைப் பற்றி பேசுகிறது. அதனுடைய 7-வது அதிகாரத்தில் அது மத்தேயு 28:19-ல் இயேசு பயன்படுத்திய அதே வார்த்தைகளில், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே” முழுக்காட்டுதலை வற்புறுத்துகிறது. ஆனால் அது மூவரும் நித்தியத்திலும், வல்லமையிலும் ஸ்தானத்திலும் ஞானத்திலும் சரிசமமாக இருப்பது குறித்து எதையும் சொல்லவில்லை. அதனுடைய 10-வது அதிகாரத்தில், டிடாகே ஒரு ஜெபத்தின் வடிவில் பின்வரும் விசுவாச அறிக்கையை கொண்டிருக்கிறது:
“பரிசுத்த பிதாவே, எங்களுடைய இருதயங்களில் வாசஞ்செய்யும்படியாக நீவிர் செய்வித்திருக்கும் உம்முடைய பரிசுத்த நாமத்துக்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; உம்முடைய ஊழியராகிய இயேசுவின் மூலம் நீவிர் எமக்கு தெரிவித்திருக்கும் அறிவுக்காகவும் விசுவாசத்துக்காகவும் சாவாமைக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். என்றென்றும் மகிமை உமக்கே! சர்வ வல்லமையுள்ள எஜமானராகிய நீரே, உம்முடைய நாமத்தினிமித்தமாக அனைத்தையும் சிருஷ்டித்திருக்கிறீர் . . . எங்களுக்கோ, உம்முடைய ஊழியராகிய இயேசுவின் மூலமாக கருணையுடன் ஆவிக்குரிய உணவையும் பானத்தையும் நித்திய வாழ்க்கையையும் கொடுத்திருக்கிறீர்.”
இதில் திரித்துவம் இல்லை. கிறிஸ்தவத்தின் மீது கிரேக்க கருத்துகளின் செல்வாக்கு என்ற புத்தகத்தில் எட்வின் ஹேக் முன்சொல்லப்பட்ட பகுதியை மேற்கோள் காட்டி பின்னர் இவ்வாறு சொல்கிறார்:
“கிறிஸ்தவத்தினுடைய ஆரம்ப செல்வாக்கெல்லையில், இந்த எளிய கருத்துகளில் எந்தப் பெரிய அபிவிருத்தியும் இருந்ததாகத் தெரியவில்லை. கடவுள் இருக்கிறார், அவர் ஒருவராக இருக்கிறார், அவர் சர்வ வல்லமையுள்ளவரும் நித்தியருமாக இருக்கிறார். அவர் உலகத்தைப் படைத்தார், அவருடைய இரக்கம் அவருடைய எல்லா கிரியைகள் மீதும் இருக்கிறது என்ற கோட்பாட்டுக்கே அழுத்தம் கொடுக்கப்பட்டது. அவை தெளிவற்ற தத்துவம் சார்ந்த விவாதத்திடமாக சாய்ந்திருக்கவில்லை.”
ரோமின் க்ளமென்ட்
ரோம் நகரில் “பிஷப்”பாக இருந்தவராக கருதப்படும் க்ளமென்ட், கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதியது பூர்வ எழுத்துக்களின் மற்றொரு ஊற்றுமூலமாக இருக்கிறது. அவர் பொ.ச. 100-ல் மரித்ததாக நம்பப்படுகிறது. அவரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் செய்திக் குறிப்புகளில் அவர் திரித்துவத்தைப் பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறிப்பிடவில்லை. கொரிந்தியருக்கு எழுதிய க்ளமென்டின் முதல் நிருபத்தில் அவர் எழுதுகிறார்:
“சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து கிறிஸ்துவின் மூலம் கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகுவதாக.”
“அப்போஸ்தலர்கள் சுவிசேஷத்தை எங்களுக்குக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்திலிருந்து பிரசங்கித்தார்கள்; இயேசு கிறிஸ்து தேவனிடமிருந்து அவ்விதமாகச் செய்தார். ஆகவே கிறிஸ்து தேவனால் அனுப்பப்பட்டிருக்கிறார், அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவினால் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.”
“எல்லாவற்றையும் பார்க்கிறவரும், எல்லா ஆவிகளின் அரசரும், எல்லா மாம்சத்தின் ஆண்டவருமாகிய தேவன்—நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அவர் மூலமாக விசேஷமான ஒரு ஜனமாக இருக்கும் பொருட்டு நம்மையும் தெரிந்து கொண்ட அந்தத் தேவன்—அவருடைய மகிமையும் பரிசுத்தமும் பொருந்திய பெயரை நோக்கிக் கூப்பிடுகிற ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் விசுவாசத்தையும், பயத்தையும், சமாதானத்தையும், பொறுமையையும் நீடிய பொறுமையையும் அருளிச் செய்வாராக.”
இயேசுவோ அல்லது பரிசுத்த ஆவியோ கடவுளுக்குச் சமமாக இருப்பதாக க்ளமென்ட் சொல்லவில்லை. அவர் சர்வ வல்லமையுள்ள கடவுளை (வெறுமென “பிதா” என்று அல்ல) குமாரனிலிருந்து வேறுபட்டவராக காண்பிக்கிறார். கிறிஸ்து “தேவனால் அனுப்பப்பட்டிருப்பதன்” காரணமாகவும், தேவன் கிறிஸ்துவை “தெரிந்து” கொண்டதாலும் தேவன் உயர்ந்த நிலையிலுள்ளவராகப் பேசப்படுகிறார். தேவனும் கிறிஸ்துவும் இரண்டு வெவ்வேறான சரிசமமில்லாத தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பதைக் காண்பிப்பவராய் க்ளமென்ட் இவ்வாறு சொன்னார்:
“பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் அவருடைய நேசகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக முழு உலகத்திலும் அவர் தெரிந்து கொண்டிருக்கும் அந்த துல்லியமான எண்ணிக்கையை முழுமையாக வைக்க வேண்டும் என்று அவரிடம் ஊக்கமான ஜெபத்தோடும் வேண்டுதலோடும் நாம் அவரிடம் மன்றாடுவோம். . . . நீவிர் [கடவுள்] மட்டுமே மிக உன்னதரிலும் உன்னதர் என்பதை நாங்கள் உணருகிறோம் . . . நீவிர் மாத்திரமே ஆவிகளின் காவலனும் எல்லா மாம்சத்தின் தேவனுமாயிருக்கிறீர்.”
“நீவிர் மாத்திரமே ஒரே கடவுள் என்பதையும் இயேசு கிறிஸ்து உம்முடைய பிள்ளை என்பதையும் எல்லா ஜாதிகளும் உணர்ந்து கொள்ளட்டும்.”
க்ளமென்ட் தேவனை (வெறுமென “பிதா” என்றில்லாமல்) “மிக உன்னதமானவர்” என்று அழைத்து இயேசுவை தேவனுடைய “பிள்ளை” என்றும் குறிப்பிடுகிறார். அவர் இயேசுவைக் குறித்து இவ்வாறு கூட குறிப்பிடுகிறார்: “அவர் கடவுளுடைய பிரகாசத்தைப் பிரதிபலிப்பதன் காரணமாக தேவதூதர்களின் பதவியை விட அவருடையது அதிய கெளரவமானதாக இருப்பதன் காரணமாக அவர்களை விட அவர் உயர்ந்தவராக இருக்கிறார்.” இயேசு கடவுளுடைய பிரகாசத்தைப் பிரதிபலிக்கிறார். ஆனால் அவருக்கு நிகராக இல்லை. சந்திரன் சூரிய வெளிச்சத்தை பிரதிபலித்தும் வெளிச்சத்தின் ஊற்றுமூலமாகிய சூரியனுக்கு சமமாக இல்லாதது போலவே இது இருக்கிறது.
கடவுளுடைய குமாரன், பரலோகத் தகப்பனாக இருக்கும் கடவுளுக்கு சமமாக இருப்பாரேயானால், இயேசு தூதர்களைவிட மேலானவர் என்று க்ளமென்ட் சொல்ல அவசியம் இருந்திருக்காது, ஏனென்றால் அது தெளிவாக இருந்திருக்கும். குமாரன் தேவதூதர்களைவிட உயர்ந்தவராக இருக்கையில், அவர் [குமாரன்] சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கு தாழ்ந்தவராகவே இருக்கிறார் என்பதை அவர் ஏற்றுக்கொள்வதை அவருடைய வார்த்தைகள் காண்பிக்கின்றன.
க்ளமென்டின் நோக்குநிலை வெகு தெளிவாக உள்ளது: குமாரன் தகப்பனைவிட தாழ்ந்தவராக அவருக்கு இரண்டாந்தரமானவராக இருக்கிறார். இயேசு தகப்பனோடு கடவுள்தன்மையை பகிர்ந்து கொள்வதாக க்ளமென்ட் ஒரு போதும் கருதவில்லை. தகப்பன் அதாவது கடவுளை குமாரன் சார்ந்திருக்கிறார் என்று அவர் காண்பித்து, தகப்பன் தன்னுடைய ஸ்தானத்தை எவருடனும் பகிர்ந்துக்கொள்ளாமல் அவர் மாத்திரமே “கடவுளாக” இருக்கிறார் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார். க்ளமென்ட் எந்த இடத்திலுமே பரிசுத்த ஆவிக்கு கடவுளோடு ஒரு சரிசமநிலையை கொடுக்கவில்லை. இவ்விதமாக க்ளமென்டின் எழுத்துக்களில் திரித்தும் இல்லவே இல்லை.
இக்நேஷியஸ்
அந்தியோகியாவின் மேற்றிராணியார், இக்நேஷியஸ், பொ.ச. முதல் நூற்றாண்டின் இடை காலத்திலிருந்து இரண்டாவது நூற்றாண்டின் முற்பகுதி வரையாக வாழ்ந்து வந்தார். அவருடைய எழுத்துக்கள் நம்பத்தக்கது என்று ஊகித்துக் கொள்ளும் பட்சத்தில், அவைகளில் எதிலுமே பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி சரிசமமாக இருப்பதாக சொல்லப்பட்டில்லை.
குமாரன் நித்தியத்திலும் வல்லமையிலும் ஸ்தானத்திலும் ஞானத்திலும் பிதாவுக்கு சமமானவராக இருப்பதாக இக்நேஷியஸ் சொல்லியிருந்தாலும்கூட அது இன்னும் திரித்துவமாக இராது, ஏனென்றால் பரிசுத்த ஆவி, அந்த விதங்களில் கடவுளுக்குச் சமமாக இருப்பதாக எவ்விடத்திலுமே அவர் சொல்லவில்லை. ஆனால் இந்த விதங்களிலோ அல்லது வேறு எந்த விதத்திலுமோ குமாரன் பிதாவாகிய தேவனுக்கு சமமாக இருப்பதாக இக்நேஷியஸ் சொல்லவில்லை. மாறாக, உன்னதமானவராக இருக்கும் சர்வ வல்லமையுள்ள கடவுளுக்கு குமாரன் கீழ்ப்பட்டிருப்பதாக அவர் காண்பித்தார்.
இக்நேஷியஸ் தேவனுக்கும் அவருடைய குமாரனுக்குமிடையே வேறுபாட்டை காண்பிப்பவராய், சர்வ வல்லமையுள்ள தேவனை, “ஒரே மெய்த்தேவன், பெற்றெடுக்கப்படாதவர் மற்றும் அணுகப்படமுடியாதவர், ஒரே பேறான குமாரனுடைய பிதாவும் தந்தையுமானவர்” என்றழைக்கிறார். “அவர் பிதாவாகிய தேவனையும் கர்த்தாரகிய இயேசு கிறிஸ்துவையும்” பற்றி பேசுகிறார். பின்னர் இவ்விதமாகச் சொல்கிறார்: “தம்மைதாமே தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக வெளிப்படுத்தின ஒரே தேவன், சர்வ வல்லமையுள்ளவர் இருக்கிறார்.”
ஒரு நபராக குமாரன் நித்தியரல்லவென்றும் ஆனால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்றும் இக்நேஷியஸ் காண்பிக்கிறார். இக்நேஷியஸின் பிரகாரம் குமாரன் இவ்விதமாகச் சொன்னார்: “கர்த்தர் [சர்வ வல்லமையுள்ள தேவன்] அவருடைய வழிகளின் ஆதியாக என்னைச் சிருஷ்டித்தார்.” அதேவிதமாக இக்நேஷியஸ் சொன்னார்: “எல்லா காரியங்களையும் உண்டாக்கியவராகிய கிறிஸ்துவினுடைய பிதாவாகிய சர்வலோகத்தின் கடவுள் ஒருவர் இருக்கிறார். நம்முடைய கர்த்தராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒருவர் இருக்கிறார்; எல்லா காரியங்களும் அவர் மூலமாகவே உண்டாக்கப்பட்டன.” அவர் மேலுமாக எழுதுகிறார்:
“பரிசுத்த ஆவி அவருடைய சொந்தக் காரியங்களைப் பேசாமல் கிறிஸ்துவினுடையதையே பேசுகிறது, . . . கர்த்தர் பிதாவினிடமிருந்து அவர் பெற்றுக்கொண்ட காரியங்களை நமக்கும்கூட அறிவித்தது போலவே. ஏனென்றால் [குமாரன்] சொல்வதாவது, ‘நீங்கள் கேட்கும் வார்த்தை என்னுடையதல்ல, ஆனால் என்னை அனுப்பின பிதாவினுடையது.”
“தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக தம்மை விளங்கப் பண்ணின தேவன் ஒருவரே. இவரே நிசப்தத்திலிருந்து வெளிப்பட்டு வந்த அவருடைய வார்த்தையாகவும் தம்மை அனுப்பினவரை [கடவுளை] எல்லா வகையிலும் பிரியப்படுத்தினவருமாக இருந்தார். . . . இயேசு கிறிஸ்து பிதாவுக்கு கீழ்ப்பட்டவராக இருந்தார்.”
உண்மைதான், இக்நேஷியஸ் குமாரனை “வார்த்தையாகிய தேவன்” என்றழைக்கிறார். ஆனால் குமாரனுக்கு “தேவன்” என்ற வார்தையை பயன்படுத்துவது சர்வ வல்லமையுள்ள தேவனோடு சமத்துவத்தை அவசியமாகவே அர்த்தப்படுத்துவதில்லை. ஏசாயா 9:6-ல் பைபிள் குமாரனையும்கூட, “தேவன்” என்றழைக்கிறது. யோவான் 1:18, குமாரனை “ஒரே பேறான தேவன்” என்றழைக்கிறது. “தேவன்” என்பதன் அடிப்படைப் பொருள் “வல்லமையுள்ளவர்” என்பதாக இருப்பதால், பிதாவாகிய யெகோவா தேவனிடமிருந்து வல்லமையும் அதிகாரமும் அளிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, குமாரன் அவ்விதமாக குறிப்பிடப்படுவது சரியே.—மத்தேயு 28:18; 1 கொரிந்தியர் 8:6; எபிரெயர் 1:2.
என்றபோதிலும், இக்நேஷியஸ் எழுதியதாக கூறப்படும் 15 கடிதங்களும் நம்பத்தகுந்தவையாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றனவா? நைசீனுக்கு முற்பட்ட கால தந்தைமார்கள், புத்தகம் 1-ல் பதிப்பாசிரியர்கள் அலெக்ஸாண்டர் ராபர்ட்ஸும் ஜேம்ஸ் டோனால்ட்ஸனும் எழுதுகிறார்கள்:
“இக்நேஷியஸால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் முதல் எட்டு கடிதங்கள் போலியானவை என்பது விமர்சகர்களின் ஒட்டுமொத்தமான கருத்தாகும். அவை பிற்பட்ட சகாப்தத்தின் படைப்பாக இருப்பதற்கு சந்தேகத்திற்கிடமில்லாத அத்தாட்சிகளை அவை தன்னில் கொண்டிருக்கின்றன . . . இப்பொழுது அவை ஒருமித்த கருத்துபடி போலிப் பத்திரங்கள் என்று ஒதுக்கி வைக்கப்படுகின்றன.”
“யுஸிபியஸினால் ஒப்புக்கொள்ளப்படும் ஏழு நிருபங்களில் . . . , சுருக்கமான ஒன்றும் நீளமான ஒன்றுமாக இரண்டு திருத்தப்பட்ட கிரேக்க மூல பாடங்கள் நம்மிடம் இருக்கின்றன. நீளமானதைவிட சுருக்கமான வடிவம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதுவும்கூட இடைச்சேர்க்கையிலிருந்து முற்றிலும் விடுபட்டதாகவோ அல்லது சந்தேகமின்றி நம்பத்தகுந்ததாகவோ கருதப்பட முடியாது என்பது கல்விமான்கள் மத்தியில் பரவலாக உள்ள கருத்தாக இன்னும் இருந்தது.”
அவருடைய எழுத்துக்களில் சுருக்கமான பதிப்பை நாம் உண்மையானது என்று ஏற்றுக்கொண்டால், (நீண்ட பதிப்பில்) அது கிறிஸ்துவை கடவுளுக்குக் கீழ்ப்பட்டவராக காண்பிக்கும் ஒரு சில சொற்றொடர்களை விட்டுவிடுகிறது. ஆனால் சுருக்கமான பதிப்பில் மீதமிருப்பது இன்னும் ஒரு திரித்துவத்தைக் காண்பிப்பதில்லை. அவருடைய எழுத்துக்களில் எவை உண்மையானவையாக இருப்பினும், மிகச் சாதகமான சூழ்நிலையிலும் இக்நேஷியஸ் கடவுளும் அவருடைய குமாரனும் இருவராய் இருப்பதை நம்பியதையே காண்பிக்கின்றன. இது நிச்சயமாகவே சமமாயிருக்கும் இருவரல்ல, ஏனென்றால் குமாரன் எப்பொழுதுமே தேவனைவிட தாழ்ந்தவராகவும் அவருக்குக் கீழ்ப்பட்டவராகவுமே காண்பிக்கப்படுகிறார். இவ்விதமாக, ஒருவர் இக்நேஷியஸின் எழுத்துக்களை எப்படிக் கருதினாலும், திரித்துவ கோட்பாடு அவைகளில் காணப்படுவதில்லை.
பாலிகார்ப்
சிமிர்னாவின் பாலிகார்ப், முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்து இரண்டாவது நூற்றாண்டின் இடைப்பகுதியில் மரித்தார். அவர் அப்போஸ்தலனாகிய யோவானோடு தொடர்பு கொண்டிருந்தவராக சொல்லப்படுகிறார், அவர் பிலிப்பியருக்கு பாலிகார்ப்பின் நிருபத்தை எழுதியதாகச் சொல்லப்படுகிறார்.
திரித்துவத்தைச் சுட்டிக்காட்டும் ஏதாவது பாலிகார்ப்பின் எழுத்துக்களில் இருந்தனவா? இல்லை. அதைப் பற்றி குறிப்பு இல்லை. ஆம், அவர் சொல்வது இயேசுவும் அவருடைய சீஷர்களும் அப்போஸ்தலர்களும் கற்பித்த காரியத்தோடு ஒத்திருக்கிறது. உதாரணமாக, தன்னுடைய கடிதத்தில் பாலிகார்ப் இவ்விதமாகச் சொன்னார்:
“தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவுமானவரும், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் தானே . . . விசுவாசத்திலும் சத்தியத்திலும் உங்களைக் கட்டியெழுப்புவார்களாக.”
க்ளமென்டைப் போலவே, பாலிகார்ப்பும் ஒரு கடவுள்தன்மையில் திரித்துவ “பிதாவும்” “குமாரனும்” சரிசமமான உறவில் இருப்பதாக பேசுவதில்லை. மாறாக வெறுமென, ‘இயேசுவின் பிதா’ என்பதாக இல்லாமல், இயேசுவின் “தேவனும் தகப்பனுமானவரைப்” பற்றி பேசுகிறார். பைபிள் எழுத்தாளர்கள் திரும்ப திரும்ப செய்கிற வண்ணமாகவே, அவர் கடவுளை இயேசுவிடமிருந்து பிரித்து பேசுகிறார். 2 கொரிந்தியர் 1:3-ல் பவுல் சொல்வதாவது: “நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்.” அவர் வெறுமென ‘இயேசுவின் பிதாவுக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லாமல், “பிதாவாகிய தேவன்” என்று சொல்கிறார்.
மேலுமாக பாலிகார்ப் சொல்வதாவது: “சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்தும் நம்முடைய இரட்சகர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் சமாதானம்.” மறுபடியுமாக இங்கு இயேசு சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து வேறுபட்டவராக இருக்கிறார், சரிசமமான திரித்துவ கடவுள் தன்மையில் ஒரு நபராக இல்லை.
ஹெர்மஸ் மற்றும் பேப்பியஸ்
மற்றொரு அப்போஸ்தல தந்தை, இரண்டாவது நூற்றாண்டின் முதல் பகுதியில் எழுதிய ஹெர்மஸ் ஆவார். மேய்ப்பன் அல்லது போதகர் என்ற தன் நூலில் தேவனை அவர் திரித்துவமாக புரிந்து கொண்டிருந்தார் என்றும் நம்பும்படியாக ஒருவரை வழிநடத்தக்கூடிய எதையாவது அவர் சொல்கிறாரா? அவர் சொன்னவற்றில் ஒரு சில உதாரணங்களை கவனியுங்கள்:
“ஆவி பேச வேண்டும் என்று மனிதர் விரும்புகிற சமயத்தில் பரிசுத்த ஆவி பேசுவதில்லை. ஆனால் அது பேசும்படியாக கடவுள் விரும்புகிற போது மாத்திரமே அது பேசுகிறது. . . . தேவன் திராட்சத் தோட்டத்தை நாட்டினார், அதாவது, மக்களை அவர் படைத்தார், அவைகளை தம்முடைய குமாரனுக்குக் கொடுத்தார்; குமாரன் அவர்களைக் காப்பதற்காக தம்முடைய தூதர்களை அவர்கள் மீது நியமித்தார்.”
“தேவனுடைய குமாரன் அவருடைய எல்லா சிருஷ்டிகளிலும் மூத்தவர்.”
இங்கே ஆவி பேச வேண்டும் என்று தேவன் (வெறும் பிதா அல்ல) விரும்புகையில் அது பேசுகிறது, ஆவிக்கும் மேலாக கடவுள் உயர்ந்தவராக இருப்பதைக் காண்பிக்கிறது என்று ஹெர்மஸ் சொல்கிறார். கடவுள் அவருடைய குமாரனுக்கும் மேல் உயர்ந்தவராக இருப்பதைக் காண்பிப்பவராய் அவர் திராட்சத்தோட்டத்தை குமாரனுக்கு கொடுத்தார் என்று சொல்கிறார். தேவனுடைய குமாரன், அவருடைய குமாரனின் சிருஷ்டிகளைவிட, அதாவது தேவனுடைய கைத்தேர்ந்த வேலையாளனாக கடவுளுடைய குமாரனின் சிருஷ்டிகளைவிட வயதில் மூத்தவர் என்றும்கூட அவர் சொல்கிறார். ஏனென்றால், “பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளும் அவரைக்கொண்டு சிருஷ்டிக்கப்பட்டது.” (கொலோசெயர் 1:15, 16) குமாரன் நித்தியரல்ல என்பது உண்மையாகும். மேலுமாக அவர் மூலமாய் சிருஷ்டிக்கப்பட்ட தேவதூதர்கள் போன்ற மற்ற ஆவி சிருஷ்டிகளுக்கு முன்பாக உயர் பதவிலுள்ள ஓர் ஆவி சிருஷ்டியாக அவர் சிருஷ்டிக்கப்பட்டார்.
J. N. D. கெல்லி, கடவுளுடைய குமாரனைப் பற்றிய ஹெர்மஸின் கருத்து பற்றி ஆரம்பகால கிறிஸ்தவ கோட்பாடுகள் என்ற தன் நூலில் இவ்விதமாக எழுதுகிறார்:
“அநேக பல பகுதிகளில், கடவுளுடைய உட்குழுவை உண்டுபண்ணும் ஆறு தேவதூதர்களுக்கும் உயர்ந்தவரும் வழக்கமாக ‘மிகவும் போற்றப்படத்தக்கவர்’ ‘பரிசுத்தர்’ மற்றும் ‘மகிமைப் பொருந்தினவர்’ என்பதாக விவரிக்கப்படும் ஒரு தேவதூதனைப் பற்றி நாம் வாசிக்கிறோம். இந்த தூதனுக்கு மிகாவேல் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஹெர்மஸ் அவரில் கடவுளுடைய குமாரனை கண்டு, அவரை பிரதான தூதனாகிய மிகாவேலுக்கு சமமானவராக கருதினர் என்ற முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாததாகும்.”
“கிறிஸ்துவை ஒரு வகையான உன்னதமான தேவதூதர் என்று குறிப்பிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கும்கூட அத்தாட்சி இருக்கிறது. . . . கண்டிப்பான கருத்தில் திரித்துவ கோட்பாட்டைக் குறித்து எந்த அறிகுறியும் இல்லை.”
பேப்பியஸும்கூட அப்போஸ்தலனாகிய யோவானுக்கு அறிமுகமானவர் என்று சொல்லப்படுகிறது. அவர் இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதியிருக்க வேண்டும், ஆனால் அவருடைய எழுத்துக்களில் ஒரு சில பகுதிகள் மாத்திரமே இன்று இருக்கின்றன. இவைகளில் அவர் திரித்துவ கோட்பாட்டைப் பற்றி எதையும் சொல்வதில்லை.
நிலையான போதனை
கடவுளுடைய தலைமை அதிகாரத்தையும் இயேசுவோடு அவருடைய உறவையும் பற்றிய விஷயத்தில், அப்போஸ்தல தந்தைமார்களின் போதனை, பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசு, அவருடைய சீஷர்கள் மற்றும் அப்போஸ்தலர்களின் போதனைக்கு பேரளவில் ஒத்திருக்கிறது. அவர்களில் அனைவருமே கடவுளைப் பற்றி ஒரு திரித்துவமாக அல்ல, ஆனால் தனிப்பட்டவராக, நித்தியராக, சர்வ வல்லவராக அனைத்தையும் அறிந்தவராகவே பேசுகிறார்கள். கடவுளுடைய குமாரனைப் பற்றி, தனிப்பட்டவராக, கீழ்ப்பட்டவராக, கடவுள் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதில் தனக்கு சேவை செய்ய அவர் படைத்த தாழ்ந்த பதவியிலுள்ள சிருஷ்டியாகவே பேசுகிறார்கள். பரிசுத்த ஆவி எங்குமே கடவுளுக்கு சமமாக சேர்க்கப்பட்டில்லை.
இவ்விதமாக முதல் நூற்றாண்டின் பிற்பகுதியையும் இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்ப பகுதியையும் சேர்ந்த அப்போஸ்தல தந்தைமார்களின் எழுத்துக்களில், கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவத்துக்கு ஆதரவு இல்லை. பைபிள் செய்வது போலவே அவர்கள் கடவுளைப் பற்றியும், இயேசுவைப் பற்றியும் பரிசுத்த ஆவியைப் பற்றியும் பேசினார்கள். உதாரணத்துக்கு அப்போஸ்தலர் 7:55, 56-ஐ பாருங்கள்.
“ஸ்தேவான் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய் வானத்தை அண்ணாந்து பார்த்து, தேவனுடைய மகிமையையும் தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டான். ‘இதோ வானங்கள் திறந்திருக்கிறதை நான் காண்கிறேன்’ என்று அவன் சொன்னான், ‘மனுஷகுமாரன் தேவனுடைய வலது பாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன்.”—கத்தோலிக்க எருசலேம் பைபிள்.
ஸ்தேவான் ஒரு தரிசனத்தில் பரலோகத்தில் தேவனையும் அவருடைய பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டார். குமாரன், “பிதா” என்று மட்டுமல்லாமல், இயேசுவிலிருந்து முற்றிலும் தனிப்பட்டவரான “கடவுள்” என்று குறிப்பிடப்பட்டவருக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். ஸ்தேவான் கண்டதில் மூன்றாவது நபர் உட்பட்டில்லை. பரிசுத்த ஆவி பரலோகத்தில் இயேசுவோடும் அவருடைய பிதாவோடும் காணப்படவில்லை.
“தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்த வெளிப்படுத்தின விசேஷம்” என்று சொல்லுகின்ற வெளிப்படுத்துதல் 1:1 இதைப் போன்றே இருக்கிறது. (தி எருசலேம் பைபிள்) மறுபடியுமாக, பரலோகத்தில் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, கடவுளிலிருந்து முற்றிலும் தனிப்பட்டவராக காண்பிக்கப்படுகிறார், பரிசுத்த ஆவி குறிப்பிடப்பட்டில்லை. இயேசு அனைத்தையும் அறிந்தவராக, திரித்துவத்தின் இரண்டாவது நபராக இருந்தால், அவருக்கு எவ்விதமாக ஒரு வெளிப்படுத்துதல் “ஒப்புவிக்கப்பட” முடியும்?
இதுபோன்ற வசனங்கள் திரித்துவம் இல்லை என்பதை தெளிவாக காண்பிக்கின்றன. மேலும் முழு பைபிளிலுமே எந்த வசனமும் கடவுளை ஒரு திரித்துவமாக பேசுவதில்லை. அப்போஸ்தல தந்தைமார்களின் எழுத்துக்கள் இதை பிரதிபலித்தன. அவை நிச்சயமாகவே கிறிஸ்தவமண்டல திரித்துவத்தை போதிக்கவில்லை.
கிறிஸ்தவத்தின் பேரில் வந்த அடுத்த முக்கியமான எழுத்துக்களின் தொகுதி பின்னால் இரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருந்தன. இவை அப்பாலஜிஸ்ட் என்றழைக்கப்பட்ட சர்ச் மனிதர்களின் படைப்பாகும். இத்தொடரின் 3-ம் பகுதி அவர்களுடைய போதனைகளைப் பற்றி விளக்கமளிக்கும். (w92 2/1)