திரித்துவம்—இது பைபிளில் போதிக்கப்படுகிறதா?
“இதுதான் கத்தோலிக்க நம்பிக்கை. திரித்துவத்தில் ஒரு கடவுளையும், ஒன்றில் திரித்துவத்தையும் நாங்கள் வணங்குகிறோம். . . . எனவே பிதா கடவுள், குமாரன் கடவுள், பரிசுத்த ஆவி கடவுள். எனினும் அவர்கள் மூன்று கடவுள்கள் அல்ல, ஆனால் ஒரே கடவுள்.”
இந்த வார்த்தைகளில், கிறிஸ்தவ மண்டலத்தின் மையக் கோட்பாடாகிய—திரித்துவத்தை—அதனேசியன் விசுவாசப்பிரமாணம் விளக்குகிறது.a நீங்கள் ஒரு கத்தோலிக்க அல்லது புராட்டஸ்டன்ட் சர்ச் அங்கத்தினராக இருந்தால், நீங்கள் நம்பவேண்டிய மிக முக்கியமான போதகம் இது என்று நீங்கள் சொல்லப்படக்கூடும். ஆனால் அந்தக் கோட்பாட்டை நீங்கள் விளக்கமுடியுமா? கிறிஸ்தவ மண்டலத்தில் அதிக புத்திக்கூர்மையுள்ள சிலர், திரித்துவத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை ஒத்துக்கொண்டிருக்கின்றனர்.
பிறகு, ஏன் அவர்கள் நம்புகின்றனர்? பைபிள் அந்தக் கோட்பாட்டை போதிப்பதாலா? காலஞ்சென்ற ஆங்கிலிகன் பிஷப் ஜான் ராபின்ஸன் இந்தக் கேள்விக்கு சிந்தனையைத் தூண்டும் பதிலை, அவருடைய அதிக விற்பனையான புத்தகமாகிய கடவுளுக்கு நேர்மை (Honest to God) என்பதில் கொடுத்திருக்கிறார். அவர் எழுதினார்:
“நடைமுறையில் பிரபலமான பிரசங்கமும் போதகமும் கிறிஸ்துவை தெய்வமாக அளிக்கும் காட்சிக்கு புதிய ஏற்பாட்டிலிருந்து சான்றளிக்கப்பட முடியாது. ‘கிறிஸ்து,’ மற்றும் ‘கடவுள்’ என்ற பதங்கள் ஒன்றுக்கொன்று பரிமாற்றம் செய்யப்படத்தக்கவை என்ற வகையில்தானே அது வெறுமனே இயேசு கடவுளாக இருந்தார் என்று சொல்கிறது. ஆனால் பைபிளின் பயன்படுத்துதலில் எங்கும் அப்படி இல்லை. புதிய ஏற்பாடு இயேசுவை கடவுளின் வார்த்தை என்று கூறுகிறது. கடவுள் கிறிஸ்துவில் இருந்தார் என்று இது சொல்கிறது. இயேசு கடவுளுடைய குமாரன் என்று இது சொல்கிறது. ஆனால் இயேசு கடவுளாக இருந்தார் என்று வெறுமனே சொல்வதில்லை.”
ஜான் ராபின்ஸன் ஆங்கிலிகன் சர்ச்சில் ஒரு வித்தியாசமான நபராக இருந்தார். ஆனால் “புதிய ஏற்பாடு” எந்த இடத்திலும், “இயேசு கடவுளாக இருந்தார் என்று வெறுமனே சொல்வதில்லை,” என அவர் சொன்னது சரியா?
பைபிள் என்னதான் சொல்கிறது
யோவானுடைய சுவிசேஷத்தின் ஆரம்ப வார்த்தைகளை மேற்கோள் காட்டி சிலர் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கலாம்: “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனோடு இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.” (யோவான் 1:1, கிங் ஜேம்ஸ் வெர்ஷன்) ஆங்கிலிகன் பிஷப் சொன்னதற்கு அது முரண்படுகிறதல்லவா? உண்மையில் அவ்வாறு இல்லை. அந்த வசனத்தை கிங் ஜேம்ஸ் வெர்ஷன் மொழிபெயர்க்கும் விதத்தை சில நவீன மொழிபெயர்ப்பாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை என்பது ஜான் ராபின்ஸனுக்கு நிச்சயமாகவே தெரியும். ஏன்? ஏனென்றால் மூல பாஷையாகிய கிரேக்கில் “அந்த வார்த்தை தேவனாயிருந்தது” என்ற சொற்றொடரில் “தேவன்” என்ற சொல் திட்டமான சுட்டிடைச் சொல் இல்லாமல் இருக்கிறது. “அந்த வார்த்தை தேவனோடு இருந்தது” என்ற முன் வாக்கியத்தில் “தேவன்” என்ற சொல் திட்டமாய் சுட்டிக்காட்டுவதாய் இருக்கிறது, அதாவது, அது ஒரு திட்டமான சுட்டிடைச் சொல்லை உடையதாய் இருக்கிறது. இது அந்த இரண்டு சொற்களும் ஒரே உட்கருத்தை உடையதாய் இருக்கின்றன என்பதை சாத்தியமற்றதாக்குகிறது.
எனவே, சில மொழிபெயர்ப்புகள், பண்படிப்படையிலான அம்சத்தைத் தங்களுடைய மொழிபெயர்ப்புகளில் சுட்டிக்காட்டுகின்றன. உதாரணமாக, சில “அந்த வார்த்தை தெய்வீகமாய் இருந்தது,” என்று மொழிபெயர்க்கின்றன. (அன் அமெரிக்கன் டிரான்ஸ்லேஷன், ஸ்கான்ஃபீல்ட்) மொஃபட் இதை, “அந்த லோகாஸ் தெய்வீகமாயிருந்தார்,” என்று மொழிபெயர்க்கிறது. எனினும், “தெய்வீகமான” என்பது மிகப்பொருத்தமான மொழிபெயர்ப்பல்ல என்று சுட்டிக்காண்பித்து, ஜான் ராபின்ஸனும் பிரிட்டனைச் சேர்ந்த வசனவாதி சர் ஃபிரட்ரிக் கென்யனும் ஆகிய இருவரும், யோவான் அழுத்திக்கூற விரும்பியது அதுதான் என்றால், யோவான் “தெய்வீகமான” என்பதற்குரிய கிரேக்க வார்த்தையாகிய தியாஸ்-ஐ (theiʹos) பயன்படுத்தியிருப்பார் என்று குறிப்பிட்டனர். புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation) “தேவன்” என்ற சொல்லை பொதுச் சுட்டுச் சொல்லாகச் சரியாகவே கருதி, கிரேக்க வாக்கிய அமைப்பினால் குறிப்பிடப்படும் பண்படிப்படை அம்சத்தைக் காண்பிக்கவும் பொதுச் சுட்டிடைச் சொல்லை ஆங்கிலத்தில் இவ்வாறு பயன்படுத்துகிறது: “அந்த வார்த்தை ஒரு தேவனாய் இருந்தது.”
பேராசிரியர் C. H. டாட், புதிய ஆங்கில பைபிள் (New English Bible) தயாரிப்புத் திட்டத்தின் இயக்குநர் இந்த அணுகுமுறையைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “சாத்தியமான மொழிபெயர்ப்பு . . . ‘அந்த வார்த்தை ஒரு தேவனாயிருந்தது’ என்பதே. சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பில் இது தவறல்ல.” ஆனாலும், புதிய ஆங்கில பைபிள் அந்த வசனத்தை அவ்வாறு மொழிபெயர்ப்பதில்லை. மாறாக, அந்த மொழிபெயர்ப்பில் யோவான் 1:1 இவ்வாறு வாசிக்கிறது: “எல்லாம் ஆரம்பிக்கப்பட்டபோதே அந்த வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை கடவுளோடு சஞ்சரித்து வந்தது, கடவுள் என்னவாக இருந்தாரோ அப்படியே வார்த்தையும் இருந்தது.” மொழிபெயர்ப்புக் குழு ஏன் எளிதான மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்கவில்லை? பேராசிரியர் டாட் பதிலளிக்கிறார்: “அது ஏன் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்பதற்கு காரணம், அது அப்போஸ்தலன் யோவானின் கருத்துப்போக்கிற்கு முரணாகவும், முழுக் கிறிஸ்தவக் கருத்திற்கும் உண்மையில் முரணாகவும் இருக்கிறது.”—டெக்னிக்கல் பேப்பர்ஸ் ஃபார் தி பைபிள் டிரான்ஸ்லேட்டர், தொகுதி 28, ஜனவரி 1977.
வேதாகமத்தின் தெளிவான கருத்து
இயேசு ஒரு கடவுளாக இருந்தார், அவரே சிருஷ்டிகராகிய கடவுள் அல்ல என்ற கருத்து, ஜொஹனைன் (அதாவது, அப்போஸ்தலன் யோவானின்) கருத்துக்கும் முழுக் கிறிஸ்தவக் கருத்துக்கும் முரணானது என்று நாம் சொல்ல முடியுமா? இயேசுவையும் கடவுளையும் பற்றி சொல்லும் சில பைபிள் வசனங்களை நாம் ஆராய்ந்துபார்க்கலாம். அந்த வசனங்களைப் பற்றி அதனேசியன் விசுவாசப்பிரமாணம் வகுக்கப்படுவதற்கு முன் வாழ்ந்த சில உரையாசிரியர்கள் என்ன நினைத்தார்கள் என்று நாம் பார்க்கலாம்.
“நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் [ஒன்று, NW].”—யோவான் 10:30.
நவேஷன் (சுமார் பொ.ச. 200-258) சொன்னார்: “அவர் ‘ஒன்றாய்’[b] இருப்பதாய் சொல்லப்பட்டிருப்பது, அவர் ‘ஒரு நபரைப்’ பற்றி பேசவில்லை என்பதை முரணான கருத்துடையவர்கள் அறிந்துகொள்வார்களாக. ஒன்று என்பது பலவின்பாலில் பயன்படுத்தப்பட்டிருப்பதானது, நபர்கள் ஒன்றாய் இருப்பதை அல்ல, ஒன்றுபட்டிருப்பதைக் குறிக்கிறது. . . . மேலும் ஒன்று என்று சொல்கிறவர் ஒன்றுபட்டிருப்பதைக் குறிக்கிறார், தந்தையும் மகனும் ஒன்றுபட்டிருப்பதில், அன்பில், நேசத்தில் ஒன்றாய் இருப்பதைப் போல, ஒன்றுபட்டிருப்பதில், தீர்மானத்தில் ஒன்றாய் இருப்பதில், அன்பான கூட்டுறவில்தானேயும்கூட ஒன்றாய் இருப்பதைக் குறிக்கிறது.”—திரித்துவத்தைப் பற்றிய கட்டுரை, (Treatise Concerning the Trinity) அதிகாரம் 27.
“என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.” —யோவான் 14:28.
ஐரினியஸ் (சுமார் பொ.ச. 130-200): “அவர் [கிறிஸ்து] மூலமாக பிதா அனைத்திற்கும் மேலானவர் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். ஏனென்றால் அவர் சொல்கிறார், ‘பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.’ எனவே, அறிவைப் பொருத்தமட்டில் பிதா நிகரற்று இருக்கிறார் என்று நம்முடைய கர்த்தர் அறிவித்திருக்கிறார்.”—பொய்க்கு எதிராக (Against Heresies), புத்தகம் II, அதிகாரம் 28.8.
“ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.”—யோவான் 17:3.
கிளமென்ட் ஆஃப் அலெக்சான்டிரியா (சுமார் பொ.ச. 150-215): “நித்தியமாக இருக்கிறதைத் தருகிற நித்திய கடவுளை அறிந்துகொள்ளவும், முதன்மையானவராகவும் உன்னதமானவராகவும் ஒருவராகவும் நல்லவராகவும் இருக்கிற கடவுளை அறிவிலும் புரிந்துகொள்ளுதலிலும் கொண்டிருப்பதற்கும். . . . மேலும் உண்மையான வாழ்க்கையை வாழும் அவர் கடவுளை அறியும்படி முதலில் கட்டளையிடப்பட்டிருந்தார். ‘குமாரன் எவனுக்கு (அவரை) வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறரோ அவன் தவிர வேறொருவனும் கடவுளை அறியான்.’ (மத். 11:27) அவருக்குப் பின், ரட்சகரின் மகத்துவத் தன்மை கற்றுக்கொள்ளப்படவேண்டும்.”—பாதுகாக்கப்படப்போகிற பணக்காரன் யார்? (Who Is the Rich Man That Shall Be Saved?) VII, VIII.
“எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.”—எபேசியர் 4:6.
ஐரினியஸ்: “எனவேதான் ஒரே கடவுளாக பிதா சொல்லப்படுகிறார்; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், எல்லாருக்குள்ளும் இருக்கிறார். பிதா உண்மையில் எல்லாருக்கும் மேலாக இருக்கிறார்; அவரே கிறிஸ்துவுக்குத் தலையாக இருக்கிறார்.”—பொய்க்கு எதிராக புத்தகம் V, அதிகாரம் 18.2.
இந்தப் பூர்வீக எழுத்தாளர்கள், பிதாவை உன்னதமானவர் என்றும், அனைத்திற்கும், இயேசு கிறிஸ்து உட்பட அனைவருக்கும் மேலானவர் என்றும் இந்த வசனங்கள் விளக்குவதாக தெளிவாகப் புரிந்துகொண்டனர். அவர்களின் குறிப்புகள், அவர்கள் திரித்துவத்தை நம்பினர் என்பதற்கு மறைமுகமாகவும்கூட சான்றுகொடுப்பதில்லை.
பரிசுத்த ஆவி சகல சத்தியத்தையும் வெளிப்படுத்துகிறது
இயேசு தம்முடைய மரணத்திற்கும் உயிர்த்தெழுதலுக்கும் பின்பு, ஒரு தேற்றரவாளனைப்போல் பரிசுத்த ஆவி அவர்களுக்குக் கொடுக்கப்படும் என்று தம் சீஷர்களிடம் வாக்குக்கொடுத்தார். அவர் இவ்வாறு வாக்குக்கொடுத்தார்: “சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; . . . வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.”—யோவான் 14:16, 17; 15:26; 16:13.
இயேசுவின் மரணத்திற்குப் பின், அந்த வாக்குறுதி நிறைவேற்றமடைந்தது. பரிசுத்த ஆவியின் உதவியால், கிறிஸ்தவச் சபைக்குப் புதிய கோட்பாடுகள் எப்படி வெளிப்படுத்தப்பட்டது அல்லது தெளிவாக்கப்பட்டது என்பதை பைபிள் பதிவுசெய்கிறது. இந்தப் புதிய போதகங்கள் புத்தகங்களாக எழுதப்பட்டன; அது பிற்காலத்தில் கிரேக்க வேதாகமம் அல்லது “புதிய ஏற்பாடு” என்ற பைபிளின் இரண்டாம் பாகமாக ஆனது. இவ்வாறு ஒளியூட்டப்பட்டதில், திரித்துவம் இருந்தது என்பதற்கு ஏதாவது சான்று இருக்கிறதா? இல்லை. கடவுள் மற்றும் இயேசுவைப் பற்றி, திரித்துவத்தை விட வித்தியாசமான ஒன்றை பரிசுத்த ஆவி வெளிப்படுத்துகிறது.
உதாரணமாக, பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்று, எருசலேமில் கூடியிருந்த சீஷர்கள்மீது பரிசுத்த ஆவி வந்தபின்பு, வெளியிலிருந்த மக்கள் கூட்டத்தினரிடம் அப்போஸ்தலன் பேதுரு சாட்சிகொடுத்தார். அவர் திரித்துவத்தைப் பற்றி பேசினாரா? அவருடைய சில வாக்கியங்களைக் கவனித்து, நீங்களே தீர்மானியுங்கள்: “இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.” (NW) “இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.” “நீங்கள் கழுமரத்தில் அறைந்த இந்த இயேசுவையே கடவுள் கர்த்தரும் கிறிஸ்துவுமாக்கினார்.” (அப்போஸ்தலர் 2:22, 32, 36, NW) திரித்துவத்தைப் போதிப்பதற்குப் பதிலாக, ஆவியால் நிரப்பப்பட்ட பேதுருவின் இந்த வார்த்தைகள் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு இயேசு ஒரு கருவியாக இருந்து, அவருடைய பிதாவுக்குக் கீழ்ப்படிந்து இருப்பதை அழுத்திக்காண்பிக்கின்றன.
உடனே, மற்றொரு உண்மையுள்ள கிறிஸ்தவனும் இயேசுவைப் பற்றி பேசினார். ஸ்தேவான், எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதில் கொடுப்பதற்காக ஆலோசனை சங்கத்தாருக்கு முன்பாக கொண்டுவரப்பட்டார். ஸ்தேவானோ, அங்கிருந்த சூழ்நிலையையே தலைகீழாக மாற்றிவிட்டார்; அவர்மேல் குற்றஞ்சாட்டியவர்கள் தங்களுடைய கீழ்ப்படியாத முற்பிதாக்களைப் போல இருந்தார்கள் என்று அவர்கள்மீது குற்றஞ்சாட்டினார். இறுதியில், பதிவு இவ்வாறு சொல்கிறது: “அவன் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு: அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.” (அப்போஸ்தலர் 7:55, 56) பரிசுத்த ஆவி ஏன் இயேசுவை, அவருடைய பிதாவுக்குச் சமமான கடவுள் தன்மையின் பாகமாக வெளிப்படுத்தாமல், வெறுமனே வலதுபாரிசத்தில் நிற்கிற ‘மனுஷகுமாரனாக’ வெளிப்படுத்தியது? தெளிவாகவே, ஸ்தேவான் திரித்துவத்தை மனதில் வைத்திருக்கவில்லை.
பேதுரு கொர்நேலியுவுக்கு இயேசுவைப் பற்றிய நற்செய்தியை எடுத்துச்சென்றபோது, திரித்துவக் கோட்பாட்டை வெளிப்படுத்துவதற்கு இன்னும் அதிகமான வாய்ப்பு இருந்தது. நடந்தது என்ன? பேதுரு இயேசுவை, ‘எல்லாருக்கும் கர்த்தராக’ இருக்கிறவர் என்று விளக்கினார். ஆனால் இந்தக் கர்த்தத்துவம் உன்னதமான ஓர் ஊற்றுமூலத்திலிருந்து வந்தது என்று தொடர்ந்து அவர் சொன்னார். இயேசுவே, “உயிரோடிருப்பவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதி.” இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு, அவருடைய பிதா, இயேசு தம்மைப் பின்பற்றினவர்களுக்கு “பிரத்தியட்சமாகும்படி [அவருக்கு அனுமதிகொடுத்தார்] செய்தார்.” பரிசுத்த ஆவி? இந்த உரையாடலில் காணப்படுகிறது, ஆனால் திரித்துவத்தின் மூன்றாம் ஆளாக அல்ல. மாறாக, “தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் [இயேசுவை] அபிஷேகம்பண்ணினார்.” எனவே, பரிசுத்த ஆவி, ஓர் ஆளாக இருப்பதைவிட ஓர் ஆளைக் குறிக்காததாக, அந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘சக்தியை’ போலவும் சொல்லப்பட்டிருக்கிறது. (அப்போஸ்தலர் 10:36, 38, 40, 42) பைபிளை கவனமாக சோதித்துப் பாருங்கள்; பரிசுத்த ஆவி ஓர் ஆள் அல்ல, ஆனால் மக்களை நிரப்பும், அவர்களைத் தூண்டும், அவர்களை உற்சாகத்தின் உச்சக்கட்டத்தில் வைக்கும், அவர்கள்மீது பொழியப்படும் அது, செயல் நடப்பிக்கும் ஒரு சக்தி என்பதற்கு இன்னும் அதிகமான சான்றுகளை நீங்கள் காண்பீர்கள்.
இறுதியில் அப்போஸ்தலனாகிய பவுல் அத்தேனே பட்டணத்தாருக்குப் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது—திரித்துவம் ஓர் உண்மையான கோட்பாடாய் இருந்திருந்தால்—அதைப் பற்றி விளக்க ஓர் அருமையான வாய்ப்பைப் பெற்றவராக இருந்தார். அவர் தன் பேச்சில், அவர்களுடைய “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதப்பட்டிருந்த பலிபீடத்தைக் குறிப்பிட்டு சொன்னார்: “நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.” அவர் ஒரு திரித்துவத்தை விளம்பரப்படுத்தினாரா? இல்லை. ‘உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராய் இருக்கிறார்,’ என்று அவர் விளக்கினார். ஆனால் இயேசுவைப் பற்றி? “[தேவன்] ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.” (அப்போஸ்தலர் 17:23, 24, 31) திரித்துவத்தைப் பற்றிய குறிப்பு மறைமுகமாகக்கூட இல்லையே!
உண்மையில் பவுல் கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி ஒரு காரியத்தை விளக்கினார்; இது இயேசுவும் அவருடைய பிதாவும் திரித்துவத்தின் சரிசமமான பாகங்களாக இருப்பதை முடியாத காரியமாக ஆக்குகிறது. அவர் எழுதினார்: “[கடவுள்] சகலத்தையும் அவருடைய [இயேசுவினுடைய] பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.” (1 கொரிந்தியர் 15:27, 28) எனவே, இயேசுவும் உட்பட கடவுள் சகலத்திற்கும் மேலானவராக இருப்பார்.
அப்படியென்றால், திரித்துவம் பைபிளில் போதிக்கப்படுகிறதா? இல்லை. ஜான் ராபின்ஸன் சொன்னது சரி. அது பைபிளிலும் இல்லை, அது “கிறிஸ்தவக் கருத்தின்” பாகமும் அல்ல. நீங்கள் இதை உங்களுடைய வணக்கத்திற்கும் முக்கியமானது என்று கருதுகிறீர்களா? நிச்சயமாக நீங்கள் அவ்வாறு கருதவேண்டும். இயேசு சொன்னார்: “ஒரே உண்மையான கடவுளாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றிய திருத்தமான அறிவை அவர்கள் உட்கிரகித்து வருவதே நித்திய ஜீவனைக் குறிக்கிறது.” (யோவான் 17:3, NW) நாம் கடவுளுக்கு வணக்கம்செலுத்துவதை முக்கியமானதாகக் கருதினால், அவர் எப்படி இருக்கிறாரோ, எப்படி நமக்கு அவரை வெளிப்படுத்தி இருக்கிறாரோ அப்படியே அவரை அறிந்திருப்பது அவசியம் ஆகும். அப்போதுதான் நாம், ‘பிதாவை ஆவியோடும் உண்மையோடும் வணங்கும்’ ‘உண்மை வணக்கத்தார்’ மத்தியில் இருக்கிறோம் என்று உண்மையில் சொல்லமுடியும்.—யோவான் 4:23.
[அடிக்குறிப்புகள்]
a 1907-பதிப்பு, தொகுதி 2, பக்கம் 33-ல் தி கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியாவின்படி.
b நவேஷன் இந்த வசனத்தில் உள்ள “ஒன்று” என்ற வார்த்தை பலவின்பாலில் இருக்கிறது என்ற உண்மையை மேற்கோள்காட்டிக் கொண்டிருக்கிறார். எனவே, அதனுடைய பொதுவான அர்த்தம் “ஒன்றாய்” என்பதாகும். யோவான் 17:21-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள், அங்கு “ஒன்று” என்பதற்குரிய கிரேக்கச் சொல், அதே இணையான அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் “பரிசுத்த ஆவி ஒரு தெய்வீக நபராக கருதப்படவில்லை” என்றாலும், அக்கறையைத் தூண்டும்படி, நவேஷனின் டி டிரினிடாட்டே (Novatian’s De Trinitate) என்ற புத்தகத்தை நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா (1967 பதிப்பு) பொதுவாக ஒப்புக்கொள்கிறது.
[பக்கம் 28-ன் சிறு குறிப்பு]
வேதாகமத்தின் தெளிவான கருத்து இயேசுவும் அவருடைய பிதாவும் ஒரே ஆள் அல்ல என்பதைத் தெளிவாக காண்பிக்கிறது
[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]
இயேசு பொ.ச. 33 பெந்தெகொஸ்தேவுக்குப் பின் கடவுளாக இருந்தார் என்று ஏன் பரிசுத்த ஆவி வெளிப்படுத்தவில்லை?