உத்தமம் செம்மையானவர்களை நடத்தும்
“பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு வாழ்நாளோ குறைவு; வருத்தமோ மிகுதி” என பைபிள் சொல்கிறது. (யோபு 14:1, பொ.மொ.) வேதனையும் வருத்தமுமே மனிதன் படும்பாடாக தோன்றுகின்றன; ஏன், கவலைகளோடும் கஷ்டங்களோடுமே ஒவ்வொரு நாளையும் கழிக்க வேண்டியிருக்கலாம்! சோதனை காலங்களிலும் நம்மை சீரும் சிறப்புமாக வழிநடத்தி, கடவுளோடு நீதியான நிலைநிற்கையை காத்துக்கொள்ள எது உதவும்?
செல்வந்தராகிய யோபு என்பவரின் உதாரணத்தை கவனியுங்கள். அவர் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்; இன்றைய அரேபியாவில் அன்று அவர் வசித்துவந்தார். தேவபயமுள்ள இந்த மனிதருக்கு சாத்தான் எப்படிப்பட்ட துன்பங்களை வருவித்தான்! யோபு தனது மந்தைகள் அனைத்தையும் இழந்தார், தன் உயிருக்கு உயிரான பிள்ளைகளையும் மரணத்தில் பறிகொடுத்தார். போதாக்குறைக்கு கொஞ்ச காலத்தில், உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கொடிய பருக்களால் யோபுவை சாத்தான் வாதித்தான். (யோபு, அதிகாரங்கள் 1, 2) தனக்கு ஏன் துன்பத்துக்கு மேல் துன்பம் வந்தது என யோபுவுக்கு கொஞ்சமும் தெரியவில்லை. இருந்தாலும் “யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.” (யோபு 2:10) “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்” என்றும் சொன்னார். (யோபு 27:5) ஆம், யோபுவின் உத்தமம் சோதனைகளில் அவரை வழிநடத்தியது.
உத்தமம் என்பது நிறைவான அல்லது முழுமையான ஒழுக்கத்தைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது; கடவுளுடைய பார்வையில் குற்றங்குறை இல்லாதவர்களாக இருப்பதை குறிக்கிறது. என்றாலும் அபூரணர் சொல்லிலும் செயலிலும் பரிபூரணத்தை வெளிக்காட்ட வேண்டுமென்று இது அர்த்தப்படுத்துவதில்லை. ஏனெனில் அபூரணர் கடவுளுடைய தராதரங்களை முழுமையாக எட்ட முடியாது. ஆகவே மனிதனின் உத்தமத்தன்மை, யெகோவாவிற்கும் அவரது சித்தத்திற்கும் நோக்கத்திற்கும் காட்டும் இருதயப்பூர்வ பக்தியின் முழுமையை அல்லது நிறைவை குறிக்கிறது. அப்படிப்பட்ட தெய்வ பக்தி எல்லா சூழ்நிலைகளிலும் எல்லா நேரத்திலும் உத்தமர்களை நடத்துகிறது அல்லது வழிகாட்டுகிறது. நம் உத்தமம் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் எவ்வாறு நம்மை வழிநடத்தி ஆசீர்வாதங்களைப் பெற வழிசெய்யும் என்பதை நீதிமொழிகள் என்ற பைபிள் புத்தகத்தின் 11-ஆம் அதிகாரத்தின் முதல் பாகம் காட்டுகிறது. ஆகவே அங்கே பதிவு செய்யப்பட்டிருப்பதை மிகுந்த ஆர்வத்துடன் படித்து தெரிந்துகொள்வோமாக.
வியாபார விஷயத்தில் நேர்மைக்கு வழிநடத்துகிற உத்தமம்
பூர்வ இஸ்ரவேலின் அரசராகிய சாலொமோன், சட்டப்பூர்வ பதங்களில் அல்லாமல் கவிதை நடையில் நேர்மை என்ற நெறியை இவ்வாறு வலியுறுத்துகிறார்: “கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.” (நீதிமொழிகள் 11:1) யெகோவா தமது வணக்கத்தார் வியாபார விஷயங்களில் நேர்மையாக இருக்க வேண்டுமென விரும்புவதை சுட்டிக்காட்டுவதற்காக நீதிமொழிகள் புத்தகத்தில் தராசுகளையும் எடைக்கற்களையும் பற்றி குறிப்பிடும் நான்கு வசனங்களில் இது முதலாவதாகும்.—நீதிமொழிகள் 16:11; 20:10, 23.
கள்ளத்தராசுகளை—அல்லது நாணயமற்ற முறைகளை—கையாளுபவர்களின் செழிப்பு நம்மை கவர்ந்திழுக்கலாம். ஆனால் முறையற்ற வியாபார பழக்கங்களில் ஈடுபடுவதன் மூலம் சரி தவறுக்கான கடவுளுடைய தராதரங்களை விட்டுக்கொடுத்துவிட நாம் உண்மையிலேயே விரும்புகிறோமா? உத்தமம் நம்மை வழிநடத்தினால் விரும்ப மாட்டோம். நேர்மையற்ற நடத்தையை நாம் அறவே வெறுத்து ஒதுக்குகிறோம்; ஏனெனில் நேர்மையைக் குறிக்கும் சுமுத்திரையான நிறைகல் யெகோவாவை மகிழ்விக்கிறது.
‘அடக்கமுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு’
சாலொமோன் ராஜா இவ்வாறு தொடர்ந்து சொல்கிறார்: “அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் [“அடக்கமுள்ளவர்களிடத்தில்,” NW] ஞானம் உண்டு.” (நீதிமொழிகள் 11:2) அகந்தையால்—அது கர்வம், கீழ்ப்படியாமை, பொறாமை என எப்படி வெளிப்பட்டாலும்—அவமானம்தான் மிஞ்சும். மறுபட்சத்தில் நம் வரம்புகளை மனத்தாழ்மையோடு ஒப்புக்கொள்வது ஞானமான செயலாகும். இந்த நீதிமொழியில் பொதிந்துள்ள உண்மையை வேதப்பூர்வ உதாரணங்கள் எவ்வளவு அழகாக எடுத்துக்காட்டுகின்றன!
பொறாமை பிடித்த லேவியனாகிய கோராகு, யெகோவா நியமித்திருந்த ஊழியர்களாகிய மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக ஒரு கலகக்கார கும்பலை தூண்டிவிட்டார். அந்த துணிகர செயலின் விளைவு என்ன? “பூமி தன் வாயைத் திறந்து” கலகக்காரர்கள் சிலரை “விழுங்கிப்போட்டது”; கோராகு உட்பட மற்றவர்களை அக்கினி பட்சித்தது. (எண்ணாகமம் 16:1-3, 16-35; 26:10; உபாகமம் 11:6) எப்பேர்ப்பட்ட அவமானம்! அடுத்து, ஊசாவை எடுத்துக்கொள்ளுங்கள். உடன்படிக்கைப் பெட்டி கீழே விழாதபடி அதை துணிகரமாக எட்டிப் பிடித்தான். அதே இடத்தில் அவனை கடவுள் கொன்று போட்டார். (2 சாமுவேல் 6:3-8) துணிகர செயல்களை நாம் தவிர்ப்பது எவ்வளவு முக்கியம்!
மனத்தாழ்மையும் அடக்கமும் உள்ளவர் தவறு செய்கையில்கூட அவமானத்தை சந்திக்க மாட்டார். யோபு அநேக விதங்களில் உதாரண புருஷராக திகழ்ந்தாலும் அபூரணராகவே இருந்தார். அவரது சிந்தனை சிலவற்றில் பெரும் தவறு இருந்ததை அவர் எதிர்ப்பட்ட சோதனைகள் வெளிப்படுத்தின. குற்றப்படுத்தியவர்களிடம் தன்னை நியாயப்படுத்தி பேசுகையில் யோபு சமநிலையை சற்று இழந்துவிட்டார். கடவுளைவிட தன்னை நீதிமானாக காட்ட முற்படுவதுபோலவும் பேசினார். (யோபு 35:2, 3) யெகோவா எவ்வாறு யோபுவின் சிந்தனையைத் திருத்தினார்?
பூமி, சமுத்திரம், நட்சத்திரம் நிறைந்த வானங்கள், சில மிருகங்கள், மற்ற வியத்தகு படைப்புகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி யோபுவுக்கு யெகோவா பாடம் புகட்டினார்; கடவுளுடைய மகத்துவத்தோடு ஒப்பிட மனிதன் எவ்வளவு அற்பமானவன் என்பதை உணர்த்தினார். (யோபு, அதிகாரங்கள் 38-41) யோபு துன்பப்படுவதற்கான காரணத்தை யெகோவா குறிப்பிடவே இல்லை. அவருக்கு அதைக் குறிப்பிட வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. யோபு அடக்கமானவர். தனக்கும் கடவுளுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருப்பதை தாழ்மையோடு அவர் உணர்ந்துகொண்டார்; தன் அபூரணமும் பலவீனமும் எங்கே, யெகோவாவின் நீதியும் வல்லமையும் எங்கே என்பதை புரிந்துகொண்டார். “என்னையே நொந்துகொள்ளுகின்றேன்; புழுதியிலும் சாம்பலிலும் இருந்து மனம் வருந்துகின்றேன்” என அவர் சொன்னார். (யோபு 42:6, பொ.மொ.) யோபுவின் உத்தமம், சிட்சையை உடனடியாக ஏற்றுக்கொள்ள வைத்தது. நாம் எப்படி? உத்தமத்தால் நடத்தப்பட்டு, தேவைப்படுகையில் சிட்சையை அல்லது திருத்தத்தை உடனடியாக ஏற்றுக்கொள்வோமா?
மோசேயும் அடக்கத்தோடும் மனத்தாழ்மையோடும் வாழ்ந்தார். மற்றவர்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் அவர் களைத்துப்போயிருந்தபோது, அவரது மாமனார் எத்திரோ நடைமுறையான பரிகாரத்தை அளித்தார்; தகுதியுள்ள மற்ற ஆண்களுக்கு பொறுப்பை பகிர்ந்து கொடுக்குமாறு ஆலோசனை அளித்தார். மோசே தனது வரம்புகளை உணர்ந்து அந்த ஆலோசனையை ஏற்று ஞானமாக நடந்துகொண்டார். (யாத்திராகமம் 18:17-26; எண்ணாகமம் 12:3) அடக்கமுள்ள நபர் தன் அதிகாரத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்க மாட்டார்; தகுதியுள்ள மற்ற ஆண்களுடன் பொறுப்புகளை பகிர்ந்து கொண்டால் எங்கே தன் அதிகாரம் பறிபோய்விடுமோ என பயப்படவும் மாட்டார். (எண்ணாகமம் 11:16, 17, 26-29) மாறாக, ஆவிக்குரிய விதத்தில் முன்னேற அவர்களுக்கு ஆவலோடு உதவுவார். (1 தீமோத்தேயு 4:15) நாமும் அப்படித்தானே இருக்க வேண்டும்?
‘குற்றமில்லாதவர்களின் வழி நேரானது’
உத்தமம் செம்மையானவர்களை எப்போதுமே ஆபத்திலிருந்து அல்லது துன்பத்திலிருந்து பாதுகாக்காது என்பதை உணர்ந்த சாலொமோன் இவ்வாறு குறிப்பிட்டார்: “செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.” (நீதிமொழிகள் 11:3) கடினமான காலங்களிலும் கடவுளுடைய பார்வையில் சரியானதை செய்ய செம்மையானவர்களை உத்தமம் நிச்சயம் வழிநடத்தும், இறுதியில் நன்மைகளையும் அள்ளித் தரும். யோபு தன் உத்தமத்தை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டதால் யெகோவா அவருடைய “முன்னிலைமையைப் பார்க்கிலும் . . . பின்னிலைமையை ஆசீர்வதித்தார்.” (யோபு 42:12) வஞ்சகர்கள், அடுத்தவர்களைக் கெடுத்து தாங்கள் ஓகோவென்று வாழ்வதாக நினைத்துக்கொள்ளலாம்; சிறிது காலம் அவர்கள் சகல சௌபாக்கியத்துடன் வாழ்வதாகக்கூட தோன்றலாம். ஆனால் இன்று இல்லையேல் நாளை அவர்கள் வஞ்சனையே அவர்களை அழித்துவிடும்.
“கோபாக்கினை நாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்” என ஞானமுள்ள அரசர் சொல்கிறார். (நீதிமொழிகள் 11:4) பொருளாதார லாபத்துக்காக படாத பாடுபட்டு, தனிப்பட்ட படிப்பு, ஜெபம், கூட்டங்கள், வெளி ஊழியம் ஆகியவற்றை புறக்கணிப்பது எவ்வளவு அறிவீனம்! இவையல்லவோ கடவுள்மீதுள்ள அன்பை ஆழமாக்கி பக்தியை பெருகச் செய்யும் செயல்கள்! வரவிருக்கும் மிகுந்த உபத்திரவத்தில் எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் அது நம்மை காப்பாற்றாது. (மத்தேயு 24:21) செம்மையானவர்களின் நீதி மட்டுமே உயிரைக் காக்கும். (வெளிப்படுத்துதல் 7:9, 14) ஆகவே செப்பனியாவின் இந்த வேண்டுகோளுக்கு நாம் இணங்குவது ஞானமானது: “கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும், . . . தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்.” (செப்பனியா 2:1, 3) இதற்கிடையில், ‘நம் மதிப்பு வாய்ந்த பொருட்களால் யெகோவாவை மகிமைப்படுத்தும்’ குறிக்கோளோடு செயல்படுவோமாக.—நீதிமொழிகள் 3:9, NW.
குற்றமற்றவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும் என்ன நடக்கும் என்பதை வேறுபடுத்திக் காட்டி, நீதியைத் தேடும் மதிப்பை இவ்வாறு மேலும் வலியுறுத்துகிறார் சாலொமோன்: “குற்றமிலான் நீதி அவன் வழியை நேராக்கும், தெய்வபயமிலான் தன் துன்மார்க்கத்தால் விழுவான். நேர்மையாளரின் நீதி அவர்களைத் தப்புவிக்கும், துரோகிகளோ தங்கள் துராசையிலே அகப்படுவார்கள். தெய்வபயமிலான் நம்பிக்கை மரணத்தில் அற்றுப்போம், அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்தேபோம். நீதிமான் இடுக்கத்தினின்று விடுவிக்கப்படுவான், அவனிருந்த இடத்திற்குத் தெய்வபயமிலான் வருவான்.” (நீதிமொழிகள் 11:5-8, தி.மொ.) குற்றமற்ற நபர் தன் பாதையில் தடுக்கி விழுவதும் இல்லை, தன் சொந்த செயல்களில் பிடிபடுவதும் இல்லை. அவரது வழி நேர்வழி. இறுதியில் செம்மையானவர்கள் வேதனையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். பொல்லாதவர்கள் பலம் படைத்தவர்களாக தோன்றினாலும் அப்படிப்பட்ட எந்த விடுதலையையும் பெற மாட்டார்கள்.
“பட்டணம் குதூகலமடையும்”
நேர்மையானவர்களின் உத்தமமும் பொல்லாதவர்களின் பொல்லாப்பும் மற்றவர்கள்மீதும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. “மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்” என இஸ்ரவேலின் ராஜா சொல்கிறார். (நீதிமொழிகள் 11:9) அவதூறு, தீங்கிழைக்கும் கிசுகிசுப்பு, ஆபாச பேச்சு, வெட்டிப் பேச்சு போன்றவை மற்றவர்களுக்கு கெடுதல் செய்யும் என்பதை யார்தான் மறுப்பார்கள்? நீதிமானோ சுத்தமான பேச்சை பேசுகிறார், நன்கு சிந்தித்து பேசுகிறார், பரிவோடு பேசுகிறார். அறிவினால் அவர் தப்புகிறார்; ஏனென்றால், குற்றப்படுத்துகிறவர்கள் பொய் பேசுகிறார்கள் என்பதை நிரூபிப்பதற்குத் தேவைப்படும் அத்தாட்சியை அவரது உத்தமம் அளிக்கிறது.
“நீதிமான்களுடைய நற்குணத்தினால் பட்டணம் குதூகலமடையும், ஆனால் துன்மார்க்கர் அழிகையிலோ சந்தோஷ ஆர்ப்பரிப்பு உண்டாகும்” என ராஜா தொடர்ந்து சொல்கிறார். (நீதிமொழிகள் 11:10, NW) நீதிமான்களைப் பொதுவாக மற்றவர்கள் நேசிக்கிறார்கள், அவர்கள் தங்கள் அயலகத்தாரை குதூகலமடைய—சந்தோஷமும் மகிழ்ச்சியுமடைய—செய்கிறார்கள். ‘துன்மார்க்கரை’ ஒருவரும் உண்மையில் நேசிப்பதில்லை. துன்மார்க்கர் இறக்கும்போது பொதுவாக மக்கள் துக்கப்படுவதில்லை. யெகோவா, ‘துன்மார்க்கரை பூமியிலிருந்து அறுப்புண்டுபோகச் செய்து, துரோகிகளை அதில் இராதபடிக்கு நிர்மூலமாக்கும்போது’ நிச்சயமாகவே எவ்வித வருத்தமும் இருக்காது. (நீதிமொழிகள் 2:21, 22) மாறாக, அவர்கள் பூண்டோடு ஒழிக்கப்பட்டதைக் குறித்து சந்தோஷமே உண்டாகும். நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? நாம் நடந்துகொள்ளும் விதம் மற்றவர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறதா என சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
“பட்டணம் நிலைபெற்றோங்கும்”
செம்மையானவர்களாலும் பொல்லாதவர்களாலும் சமுதாயத்திற்கு ஏற்படும் பாதிப்பை சாலொமோன் இவ்வாறு மேலும் வேறுபடுத்திக் காட்டுகிறார்: “செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்துவிழும்.”—நீதிமொழிகள் 11:11.
நேர்மையான பட்டணவாசிகள் சமாதானத்தையும் சமூக நலனையும் முன்னேற்றுவித்து சமுதாயத்திலுள்ள மற்றவர்களை கட்டியெழுப்புகின்றனர். இவ்வாறு பட்டணம் நிலைபெற்றோங்குகிறது—செழித்தோங்குகிறது. அவதூறான, புண்படுத்தும், தவறான விஷயங்களை பேசுபவர்கள் சந்தோஷத்தையும் ஐக்கியத்தையும் குலைத்து கலக்கத்தையும் பிரச்சினையையும் ஏற்படுத்தலாம். அதுவும் இவர்கள் பெரும் புள்ளிகளாக இருந்தால் கேட்கவே வேண்டாம். அப்படிப்பட்ட பட்டணம் ஒழுங்கற்று, சீர்கெட்டு, ஒழுக்க ரீதியிலும் ஒருவேளை பொருளாதார ரீதியிலும்கூட மோசமடைகிறது.
நீதிமொழிகள் 11:11-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் நியமம், பட்டணம் போன்று விளங்கும் சபைகளில் கூட்டுறவு கொள்ளும் யெகோவாவின் மக்களுக்கும் அவ்விதமாகவே பொருந்துகிறது. ஆவிக்குரிய மக்களின்—உத்தமத்தால் நடத்தப்படும் நேர்மையானவர்களின்—செல்வாக்குள்ள ஒரு சபை, கடவுளுக்கு மகிமை சேர்க்கும் சந்தோஷமான, சுறுசுறுப்பான, உதவியளிக்கிற மக்களின் ஒரு தொகுதியாக இருக்கிறது. யெகோவா அந்த சபையை ஆசீர்வதிக்கிறார், அது ஆவிக்குரிய விதத்தில் செழித்தோங்குகிறது. காரியங்கள் செய்யப்படும் விதத்தைக் குறித்து இழித்தும் பழித்தும் பேசும் திருப்தியற்ற சிலர், “விஷ வேர்” போன்று இருக்கிறார்கள்; இந்த விஷ வேர் படர்ந்து சென்று ஆரம்பத்தில் பாதிக்கப்படாமல் ஒதுங்கி இருந்தவர்களிலும் நஞ்சேற்றும். (எபிரெயர் 12:15, NW) அப்படிப்பட்டவர்கள் பெரும் அதிகாரத்தையும் உயர்ந்த அந்தஸ்தையும் கைப்பற்ற துடிக்கிறார்கள். சபையிலோ மூப்பர்களின் மத்தியிலோ அநீதி, இன தப்பெண்ணம், அல்லது அது போன்றவை இருப்பதாக புரளியைக் கிளப்பிவிடுகிறார்கள். அவர்களது வாய் நிச்சயமாகவே சபையில் பிரிவினைகளை ஏற்படுத்தலாம். நாம் அவர்கள் பேச்சிற்கு செவிசாய்க்காமல், சபையின் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் முன்னேற்றுவிக்கும் ஆவிக்குரிய நபர்களாக இருக்க கடினமாய் முயல வேண்டாமா?
சாலொமோன் தொடர்ந்து சொல்வதாவது: “மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.”—நீதிமொழிகள் 11:12, 13.
விவேகம் இல்லாதவன் அல்லது “மதிகெட்டவன்” எப்பேர்ப்பட்ட தீங்கை ஏற்படுத்துகிறான்! புறங்கூறும் அல்லது அவதூறு பேசும் அளவுக்கு அவன் வம்புப் பேச்சை வளர்க்கலாம். நியமிக்கப்பட்ட மூப்பர்கள் இப்படிப்பட்ட தகாத செல்வாக்கிற்கு உடனடியாக முடிவுகட்ட வேண்டும். விவேகியோ, ‘மதிகெட்டவனுக்கு’ நேர்மாறாக, எப்போது மௌனமாயிருப்பது என்பதை அறிந்திருக்கிறார். நம்பி சொல்லப்பட்ட இரகசியத்தை வெளியில் சொல்லாமல் மனதில் வைத்துக்கொள்கிறார். விவேகமுள்ள நபர், நாவை அடக்காவிட்டால் மிகுந்த தீங்கு விளையும் என்பதை அறிந்து ‘ஆவியில் உண்மையுள்ளவராக’ இருக்கிறார். தன் சக விசுவாசிகளிடம் உண்மையுடன் நடந்துகொள்கிறார்; அவர்களுக்கே ஆபத்தாய் முடியும் இரகசியங்களை வெளிப்படுத்த மாட்டார். உத்தமத்தைக் காக்கும் இப்படிப்பட்டவர்கள் சபைக்கு எப்பேர்ப்பட்ட ஓர் ஆசீர்வாதம்!
குற்றமற்றவர்களின் வழியில் நடக்க நமக்கு உதவுவதற்காக யெகோவா அபரிமிதமான ஆவிக்குரிய உணவை அளிக்கிறார்; ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரனின்’ வழிநடத்துதலில் இது தயாரிக்கப்படுகிறது. (மத்தேயு 24:45) பட்டணம் போன்று விளங்கும் நம் சபைகளில் இருக்கும் கிறிஸ்தவ மூப்பர்களிடமிருந்தும் நமக்கு தனிப்பட்ட உதவி பெருமளவு கிடைக்கிறது. (எபேசியர் 4:11-13) நாம் இவற்றிற்காக நிச்சயமாகவே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்; ஏனெனில் “திறமையான வழிநடத்துதல் இல்லையென்றால், மக்கள் வீழ்ச்சியடைவார்கள்; ஆனால் ஆலோசகர்கள் மிகுந்திருக்கும்போது இரட்சிப்பு உண்டாகும்.” (நீதிமொழிகள் 11:14, NW) என்ன நடந்தாலும்சரி, ‘உத்தமத்திலே நடக்க’ நாம் உறுதிபூண்டிருப்போமாக.—சங்கீதம் 26:1.
[பக்கம் 26-ன் சிறு குறிப்பு]
பொருளாதார லாபத்துக்காக பாடாத பாடுபட்டு, தேவராஜ்ய நடவடிக்கைகளை புறக்கணிப்பது எவ்வளவு அறிவீனம்!
[பக்கம் 24-ன் படங்கள்]
யோபு தனது உத்தமத்தால் வழிநடத்தப்பட்டார், யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற்றார்
[பக்கம் 25-ன் படங்கள்]
ஊசா தனது துணிகர செயலால் உயிரிழந்தான்