நமக்கு தெரிந்திராத கடவுளை நம்புதல்
ஜெர்மனியில் மூன்றில் இரண்டு பேர் கடவுளை நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் நம்புகிற கடவுளைப் பற்றி வர்ணிக்கும்படி ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் கேட்கப்பட்டபோது கிட்டத்தட்ட எல்லாரிடமிருந்தும் பலவிதமான பதில்கள் வந்தன. “ஜெர்மானிய மக்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுவது போல, கடவுளைப் பற்றிய அவர்களுடைய கருத்துக்களும் வித்தியாசப்படுகின்றன” என அறிவிக்கிறது ஃபோக்கஸ் என்ற செய்திப் பத்திரிகை. கடவுள் நம்பிக்கை மெச்சத்தக்கது என்றாலும் கடவுள் எப்படிப்பட்டவர் என்று சரியாக தெரியாமலேயே அவரை நம்புவது வருந்தத்தக்கது அல்லவா?
கடவுளின் இயல்பைப் பற்றிய குழப்பம் ஜெர்மனியில் மட்டுமல்ல, ஐரோப்பாவிலுள்ள மற்ற இடங்களிலும் நிலவுகிறது. ஆஸ்திரியா, பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஒரு சுற்றாய்வு நடத்தப்பட்டது; கடவுள் என்பவர் “மேலான ஒரு சக்தி அல்லது விவரிக்க முடியாத ஓர் இரகசியம்” என்பதே பரவலான கருத்து என்று அந்தச் சுற்றாய்வு வெளிப்படுத்தியது. முக்கியமாக இளைஞர் வட்டாரத்தில், கடவுளை நம்புகிறவர்கள் மத்தியிலும்கூட, அவர் ஒரு புரியாப் புதிராகவே இருக்கிறார்.
கடவுளை தனிப்பட்ட வகையில் அறிந்திருக்கிறீர்களா?
ஒருவரை வெறுமனே அறிந்திருப்பதற்கும் அவரை தனிப்பட்ட வகையில் அறிந்திருப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஒருவரை வெறுமனே அறிந்திருப்பது என்பது அப்படிப்பட்ட ஒருவர் இருக்கிறார் என்று மட்டுமே ஒத்துக்கொள்வதாகும். இதற்கு உதாரணமாக, சுலபமாக சந்திக்க முடியாத அரசனையோ சிறந்த விளையாட்டு வீரரையோ அல்லது சினிமா நட்சத்திரத்தையோ குறிப்பிடலாம். ஆனால் ஒருவரை தனிப்பட்ட வகையில் அறிந்திருப்பது என்பது அதைவிட அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. அவருடைய சுபாவம், நடத்தை, உணர்ச்சி, விருப்பு வெறுப்புகள், வருங்கால திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றி நன்கு தெரிந்திருப்பதைக் குறிக்கிறது. ஒருவரை தனிப்பட்ட வகையில் அறிந்திருக்கும்போது அவருடன் நெருக்கமான உறவும் வைத்துக்கொள்ள முடியும்.
கடவுளைப் பற்றி ஏதோ கொஞ்சம் அறிந்திருப்பது—அல்லது கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்று மட்டுமே அறிந்திருப்பது—போதுமானதல்ல. இதை லட்சக்கணக்கானோர் ஒத்துக்கொண்டுள்ளனர். அவர்கள் கடவுளைப் பற்றி அன்னியோன்யமாக அறிந்துகொள்வதன் மூலம் முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். அப்படி அறிந்திருப்பதை அவர்கள் பலனுள்ளதாக கருதுகிறார்களா? பால் என்பவர் வட ஜெர்மனியில் வாழ்கிறார், ஒருகாலத்தில் இவரும் கடவுளைப் பற்றி மேலோட்டமாகத்தான் அறிந்திருந்தார். பிற்பாடு கடவுளை தனிப்பட்ட வகையில் அறிந்துகொள்ள தீர்மானித்தார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “கடவுளை மிக நெருக்கமாக அறிந்துகொள்ள வேண்டுமென்றால் நேரமும் முயற்சியும் தேவை, ஆனால் அதனால் வரும் பலன்கள் உண்மையிலேயே அதிக மதிப்புள்ளவை. நம்மை படைத்தவரோடு நெருங்கிய உறவு வைத்திருப்பது ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை இனிமையாக்குகிறது.”
கடவுளை தனிப்பட்ட வகையில் அறிந்துகொள்ள நேரமும் முயற்சியும் செலவழிப்பது பலனுள்ளதா? தயவுசெய்து அடுத்த கட்டுரையை வாசிக்கவும்.
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
ஒருவரை வெறுமனே அறிந்திருப்பதற்கும் அவரை தனிப்பட்ட வகையில் அறிந்திருப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்